Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts

Monday, May 2, 2016

கலைச்சொற்கள் உருவாக்குவோம்

கலைச்சொற்கள் உருவாக்குவோம்


கலைச்சொல் துறையில் ஆங்கிலம் எவ்வளவு பெரிய மொழி அதனுடன் தமிழ் போட்டி போட முடியுமா? இது நடக்கும் காரியமா? என்று நம்மவர்கள் யாரேனும் மலைத்துவிடுவதாகச் சொன்னால்....

இப்படி யாரும் மலைத்துப் போவது என்பது எனக்கு வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
இவர்கள் யாவரும்  ஆங்கிலமும் சரி, அல்லதும் தமிழும் சரி எந்த ஒரு மொழியையும்  ஒரு குறிப்பிட்ட தினசரி நடவடிக்கைத் தேவைக்கு மேல் அறிந்தவர்கள் கிடையாது என்பதும் தெளிவாகிறது.

அதாவது அந்தந்த மொழிகளில் உள்ள நாளிதழ்களை எடுத்துப் படிப்பதில் ஒரு 95% வரை படித்துப்  புரிந்து கொள்ளும் மொழி அறிவு கொண்டவர்கள். அவ்வளவுதான்.

பொதுவாகவே எந்த ஒரு புதிய மொழியை கற்றுக் கொள்பவர்களுக்குத் தினசரி புழக்கத்தில் பயன்படும் ஒரு சில ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை.
இவற்றை வைத்துக் கொண்டு.....
1. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை எப்படிக் குறிக்க வேண்டும்,
2. தன்னிலை, முன்னிலை, படர்க்கையில் அம்மொழியைச்சொற்கள்  மாறும் தன்மை
3. ஒருமை மற்றும் பன்மையில் சொற்கள் பயன்படுத்தப்படும் விதம்
4.ஆண், பெண், பலவின்பால்  ... பொதுமை ... ஆகியவற்றில் குறிப்பிட்ட அந்த ஒரு மொழி அமைந்துள்ள இலக்கணம் மற்றும்
5. மொழியின் கலாச்சாரத்தில் (ஒழுகலாறு) பின்னணியில் கொண்ட சொற்கள் இவை மட்டுமே ஒரு புது மொழி அறிய கற்றுக் கொடுக்கப்படும்.

இந்த அறிவை வைத்துக் கொண்டு மொழிகளைப் பற்றிக் கருத்துரைப்பவர்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

சாதாரணமாக  உயர்நிலைப்பள்ளி அளவில் உயிரியல், விலங்கியல், தாவரவியல், வேதியியல் படித்தவர்களுக்கோ
அல்லது உயர்கல்வி அளவிற்குச்  சட்டம் வரை பயின்றவர்களுக்கோ
தெளிவாகவே தெரியும் .... ஆங்கிலத்தில் இருக்கும் சொற்கள் பெரும்பான்மையும் பிற மொழிகளிடம் இருந்து கடனாக வாங்கப்பட்டவை என்று.

அது புழக்கத்தில் இருக்கும் பொதுவான சொல்லாக இருந்தாலுமே;
அல்லது மிகவும் நுட்பம் நிறைந்த எந்தத்துறை சார்ந்த கலைச்சொற்களாக இருந்தாலுமே; 
ஆங்கிலம் சொற்களைத் தயக்கமின்றிப் பிறமொழிச் சொற்களை எடுத்தாண்டு  தனது பயன்பாட்டை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. அதன் பரவலுக்கு "அதுவும்" ஒரு காரணம்.

சில சொற்கள் மொழியின் பயன்பாட்டில் ஓர் அடிப்படையைக் குறிக்க வந்துவிட்டால் பிறகு அது மொழியில் ஆழ வேர் ஊன்றிவிடும். 
அதனை மாற்ற இயலாதும் போய் விடும். அதற்குத் துவக்கம் சரியாக இருக்கத்தேவை.

ஆனால் அந்தத் துவக்கமோ சொல் பயன்பாட்டிற்கு வந்த காலத்தின் தாக்கத்தில் இருப்பது.

எடுத்துக்காட்டாக  "மின்" என்ற சொல்லின் அடிப்படை.  அது எதைத்தான் குறிக்கிறது என்பது புரிந்து கொள்ள உதவினால் அதனை எடுத்தாள்வதில் தவறில்லை.

இப்பொழுது 'புகைவண்டி' என்பதற்குப் பதில் 'தொடர்வண்டி' என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது.

மேலும் தமிழில் யானையைக் குறிக்கவே பற்பலச் சொற்கள் என்று எடுத்துக்காட்டு கொடுக்கும்பொழுது அவை எந்தெந்த கோணத்தில் உருவாகி இருக்கக்கூடும் என்றும், அதற்கு எவ்வளவு காலம் பிடித்திருக்கக்கூடும் என்றும், அதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம் என்றும்  திரும்பிப் பார்த்தோமானால் ....

காலத்திற்கேற்பப் பயன்பாட்டில் வந்த "புகைவண்டி" என்பதையோ, "புகைப்படம்" என்பதையோ நாம் குறை சொல்ல வழியுமில்லை.

ஒரு பொருட் பன்மொழி என்ற தகுதியை அவற்றிற்கு அளித்துவிடலாம்.

சைக்கிளை ... மிதிவண்டி என்றோ இருசக்கர வண்டி என்றோ சொல்வதால் என்னதான்  குறைந்துவிடும்?

அது ஒரு பொருட் பன்மொழி என்று புரிந்து கொள்ளலாம். 

அறிவியலில் மட்டுமே கலைச்சொல் மாறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

பொன் என்பதற்கு, வெள்ளி என்பதற்குப் பற்பல சொற்கள்  தெரிந்தாலும், தங்கம் வெள்ளி என்பவற்றைத் தவிரப் பிற சொற்களைத் தவிர்க்க வேண்டும்.  அது அறிவியலின் விதி.

இலக்கியம் எழுதுவோர் ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் எடுத்தாள்வதைத் தவிர்க்க, 'தெசாரஸ்' உதவியுடன் மாற்றுச் சொற்களைத் தேடித் தேடி இடத்திற்குத் தக்கப் பொருள் கொடுக்கும் சரியான சொற்களைப் பயன்படுத்துவது இலக்கிய நடையை உயர்த்தும் செயல், மொழியின் அழகை வெளிப்படுத்தும் செயல் என்ற நோக்கில் செய்வதும் வழக்கமே.

நம் தேவை என்னவென்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒரு மொழியில் ஒன்றைச் சுட்ட பல சொற்கள் உருவானால் அங்கு அதன் பயன்பாடு, துல்லியமாகக் குறிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பது தெளிவு.

சில எஸ்கிமோ பழங்குடியில் snow என்பதைக் குறிக்கப் பற்பல சொற்கள் உள்ளன எனக் கேள்விப்பட்டுள்ளேன். 

புவிநடுக்கோட்டிற்கு அருகே வசிக்கும் தமிழருக்கு அந்தத் தேவை இல்லை. அவ்வாறே, எஸ்கிமோக்களுக்கு யானையைப் பலவாறு குறிக்கும் சொற்களுக்குத் தேவையும் கிடையாது.

ஒரு மொழியின் தேவை, அடுத்தவர் அறிய வேண்டிய செய்தியை அவருக்குக்  கடத்துவது  என்றால், பயன்படுத்தும்  சொற்களில் தெளிவும் தேவை.

இன்றுவரை ஏன் நாம் மேஜை, சாவி, ஜன்னல், கலாச்சாரம், சமூகம், கிருமி, விஷம், விஷயம்  போன்று தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச் சொற்களை விட்டுவிடமுடியாமல் பயன்பாட்டில் வைத்திருக்கிறோம்.

எத்தனைப்பேருக்கு இவற்றைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களைத் தேடிப்  பயன்படுத்தும் ஆர்வமும், பொறுமையும் உள்ளது?

அல்லது இவற்றிற்கேற்ற ... நம்மிடம் இருக்கும்...தக்கத் தமிழ்ச் சொற்களை நாம்  பயன்படுத்தாத நிலைக்குக் காரணம்தான் என்ன?

போர்த்துக்கீசிய,  சமஸ்கிருதச் சொற்கள் கலந்து பயன்படுத்துவது சரி ...ஆனால் ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் வந்தால் ஏன் நமக்கு எதிர்க்கும் மனப்பான்மை?

ஆங்கிலத்திலேயே இன்றைய தொழில்நுட்பப் பிரிவினர் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் சொற்கள் எவ்வாறு உள்ளன ?

windows... mouse.... monitor ..... இவையாவற்றிற்கும்  வெவ்வேறு பொருளும் உள்ளதல்லவா?

கலைச்சொற்கள் உருவாக்குபவர்கள், ஒருபொருட்பன்மொழி  நோக்கில் இது போன்ற சொற்களைத் தேர்வு செய்யும் முறை பிறமொழிகளின் பயன்பாட்டில் இருப்பதையும் கருத்தில் கொள்ளலாம்.


நன்றி : மின்தமிழ்
மே 2,  2016



#கருத்து, #மின்தமிழ், #Themozhi