Saturday, July 12, 2014

உறை பனிக்கட்டிகள் உடைவதேன்?

உறை பனிக்கட்டிகள் உடைவதேன்?

குடிக்கும் பழச்சாறுகள், நீர் போன்றவற்றைக் குளிரூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் உறை பனிக்கட்டிகள், அவற்றில் இட்டவுடன் உடைந்து விண்டுவிடும். இதன் காரணம் என்ன? இதற்குக் காரணமான அறிவியல் கோட்பாடு என்ன? ஏன் பனிக்கட்டி விண்டுவிடுகிறது?

இது போன்றே பனிப்பாறைகள் உடைவதேன்? வெப்பம் அதிகமானால் பனிக்கட்டி உருகலாம்? ஆனால் உடையக் காரணம் என்ன?

பனிக்கட்டியில் ஏற்படும் “மாறுபட்ட விரிவு” (differential expansion) இவ்வாறு பனிக்கட்டியை உடையச் செய்கிறது. பனிக்கட்டி, பனிப்பாறை அல்லது பனிப்பாளம் ஆகியவற்றைச் சூழ்ந்துள்ள வெப்பம் அதிகரிக்கும் பொழுதோ அல்லது வெப்பம் குறையும் பொழுதோ அதற்கேற்றவாறு அவை சுருங்கவோ அல்லது விரியவோ முற்படுகிறது. அப்பொழுது அவற்றின் ஒருபகுதி மற்றொரு பகுதியைவிட விரைவில் விரிவடையவோ அல்லது சுருங்கவோ நேர்ந்தால் அவை உடையும் நிலை ஏற்படுகிறது. 
 
குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட உறை பனிக்கட்டியை அறையின் வெப்ப நிலையில் இருக்கும் திரவத்தில் இடும்பொழுது, சூழ்ந்திருக்கும் திரவத்தின் வெப்பத்தைப் பெற்று பனிக்கட்டி வெப்பத்தில் விரிவடையத் தொடங்குகிறது. பனிக்கட்டியின் வெளிப்புறம் விரிவடையும் அதே வேகத்தில் அதன் உட்புறம் விரிவடைவதில்லை. பனிக்கட்டியின் உட்பகுதி வெளிப்பகுதியைவிட வெப்பம் குறைவாகவும், மெதுவாகவும் வெப்ப விரிவடைகிறது. இந்த மாறுபட்ட வெப்ப விரிவினால் பனிக்கட்டி உடைந்து விடுகிறது.  இப்பண்பானது ஒரு குளிர்ந்த கண்ணாடிக் குவளையில் வெந்நீரை ஊற்றும் பொழுதோ, அல்லது சூடான கண்ணாடிக் குவளையைக் குளிர் நீரில் கழுவும் பொழுதோ அது விரிசல் அடைந்து உடைவதை ஒத்தது. இதற்கு அடிப்படைக் காரணம் வெப்ப விரிவில் ஏற்படும் மாறுபாடு. 
 
மாறாக, குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட பனிக்கட்டிகளை அறையின் வெப்பநிலையில் சிறிதுநேரம் வைத்தபின்னர், அது உருகும் வெப்பநிலையை அடைந்தபிறகு திரவத்தில் சேர்த்தால் பனிக்கட்டியின் வெப்ப அளவு எப்பக்கமும் சீராக இருப்பதால், அது உடையாமல் உருகத் தொடங்கும். இதுபோன்ற நிலையில்தான், பருவகால மாறுபாடுகளின் காரணமாகச் சுற்றுப்புறச் சூழ்நிலையில் வெப்பம் அதிகரிக்கத் துவங்கும்பொழுது பனிப்பாளங்களின் அல்லது பனிப்பாறைகளின் உட்புறம் மெதுவாகவும், வெளிப்புறம் வேகமாகவும் மாறுபட்ட வகையில் விரிவடையும் பொழுது அவை உடையத் துவங்குகின்றன. 
 
இவ்வாறான வெப்ப விரிவடைதல் போலவே, குளிர்விக்கும் பொழுதும் வேறுபட்ட வேகத்தில் சுருங்கும் பனிக்கட்டிகளும் உடையும். திரவ நிலையில் உள்ள நைட்ரஜன் (liquid nitrogen) னில் பனிக்கட்டிகளை இட்டால் அவை உடைந்துவிடும். பனிக்கட்டியைச் சூழ்ந்துள்ள திரவ நைட்ரஜன் வெப்பநிலை -196 C. ஆனால் உறை பனிக்கட்டியின் வெப்ப நிலை -20C. திரவ நைட்ரஜனில் பனிக்கட்டியை இட்டால் வெளிப்புறம் வேகமாகக் குளிர்வடைந்து சுருங்கத் தொடங்குகிறது. உட்புறம் வெளிப்புறத்தைவிட அதிக வெப்பநிலையில் இருப்பதால் மெதுவாகவே சுருங்கத் தொடங்குகிறது. இந்த மாறுபட்ட சுருங்குதலும் பனிக்கட்டியைத் திரவ நைட்ரஜனில் போடும்பொழுது உடைந்துவிடச் செய்கிறது. சூடான கண்ணாடிக் குவளையைக் குளிர் நீரில் கழுவத் தொடங்கினால் விரிசல் ஏற்படுவதும் இதனால்தான்.


நன்றி:  சிறகு
ஜூலை 12, 2014

#அறிவியல், #சிறகு, #Themozhi 


Wednesday, July 2, 2014

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ?

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ?



கவிதை மூலம் – மாயா ஆஞ்சலூ (1928 –  2014)
மொழிபெயர்ப்பு – தேமொழி


சுதந்திர பறவை வேகமெடுத்து
காற்றில் பாய்ந்தது,
காற்றோட்டத்தின் எல்லை வரை
காற்றில் மிதந்தது,
செங்கதிரின் வண்ணத்தில் தன்
சிறகைத் தோய்த்து
வானம் எனக்கே  சொந்தம்
என எண்ணத் துணிந்தது

கூண்டுப் பறவையோ குறுகிய
கூண்டில் கொதிப்புடன் உலவியது,
பொங்கி வரும் ஆத்திரம்
அதன் கண்ணை மறைத்தது,
சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
குரலெடுத்துப்  பாட முனைந்தது

கூண்டுப்பறவை பாடுகிறது
அச்சத்துடன் நடுங்கும் குரலில்
அனுபவிக்காதவற்றை  எண்ணி
மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
அந்தப் பாடல் எதிரொலித்தது
தொலை தூரத்து  மலையில்
கூண்டுப்பறவையின்  வேட்கை
தொனிக்கும் விடுதலைப் பாடல்

சுதந்திர பறவை மற்றொரு
இளந் தென்றலை நினைந்தது
அசையும் மரங்களின் பெருமூச்சாய்
மெல்லத் தவழ்ந்து   செல்லும்
பருவக் காற்றை நினைந்தது
காலைக்கதிரொளியில்
ஒளிர்ந்திடும் புல்வெளியில்
ஊர்ந்திடும் கொழுத்தபுழு
உணவை மனதினில்  நினைந்தது
இந்த வானமே எனதென மகிழ்ந்தது

கூண்டுப்பறவையோ கனவுகளின்
கல்லறை மேடையில் நின்றது
பயங்கரக் கனவின் அலறலாக
அதன் நிழல்  ஓலமிட்டது
சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
குரலெடுத்துப்  பாட முனைந்தது

கூண்டுப்பறவை பாடுகிறது
அச்சத்துடன் நடுங்கும் குரலில்
அனுபவிக்காதவற்றை  எண்ணி
மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
அந்தப் பாடல் எதிரொலித்தது
தொலை தூரத்து  மலையில்
கூண்டுப்பறவையின்  வேட்கை
தொனிக்கும் விடுதலைப் பாடல்


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


‘Caged Bird’
 – Maya Angelou  (1928 –  2014)


The free bird leaps
on the back of the wind
and floats downstream
till the current ends
and dips his wings
in the orange sun rays
and dares to claim the sky.

But a bird that stalks
down his narrow cage
can seldom see through
his bars of rage
his wings are clipped and
his feet are tied
so he opens his throat to sing.

The caged bird sings
with fearful trill
of the things unknown
but longed for still
and his tune is heard
on the distant hill
for the caged bird
sings of freedom

The free bird thinks of another breeze
and the trade winds soft through the sighing trees
and the fat worms waiting on a dawn-bright lawn
and he names the sky his own.

But a caged bird stands on the grave of dreams
his shadow shouts on a nightmare scream
his wings are clipped and his feet are tied
so he opens his throat to sing

The caged bird sings
with a fearful trill
of things unknown
but longed for still
and his tune is heard
on the distant hill
for the caged bird
sings of freedom.


நன்றி: வல்லமை 
ஜூலை 2, 2014 



#கவிதை,  #மொழிபெயர்ப்பு, #வல்லமை, #Themozhi 

 

Saturday, June 28, 2014

ஸ்டெப்ஃபெனி கோலக் – உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கியவர்

ஸ்டெப்ஃபெனி கோலக் – உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கியவர்
 

நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம் என்பது நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும் ஒப்பிட இயலாது.
- ஸ்டெப்ஃபெனி கோலக்

ஸ்டெப்ஃபெனி கோலக் (Stephanie Louise Kwolek, ஜூலை 31, 1923 – ஜூன் 18, 2014) தனது கண்டுபிடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காத்திருக்கிறார்.

உலகப்புகழ் பெற்ற நிறுவனமான ‘டூபாண்ட்’ (DuPont) நிறுவனம் வெறும் 500 மில்லியன் டாலர்களை ஒரு செயற்கை இழை ஆராய்ச்சியில் முதலீடு செய்து, பின்னர் அதன் மூலம் பில்லியன் பில்லியன்களாக டாலர்களில் பொருள் ஈட்டியது. அதற்கு அடிப்படைக் காரணம் ஸ்டெப்ஃபெனி கோலக் கண்டுபிடித்த ஒரு செயற்கை இழை. இன்று உலகெங்கிலும் குண்டு துளைக்காத கவச ஆடை அணிந்ததால் உயிர் பிழைத்தோரின் உயிர்களைக் கவசமாக இருந்து காப்பாற்றியது இந்த ஆடைகளில் இருக்கும் குண்டு துளைக்காத இழை (bulletproof fiber)தான். உயிர் காக்கும் இந்தச் செயற்கை இழையின் பெயர் கெவ்லர் (Kevlar®).

குறைந்த எரிபொருள் பயன்படுத்தி ஓடும் கார்களைத் தயாரிக்க 1970 களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்குக் காரணம் அக்காலத்தில் இருந்த பெட்ரோல் பற்றாக்குறையாகும். அதனால் இரும்புக் கம்பிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த கார் சக்கரங்களில் (car tires) அவற்றிற்கு மாற்றாக எடை குறைந்த, ஆனால் உறுதியான செயற்கை இழைகளைப் பயன்படுத்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

நைலான் போன்ற செயற்கை இழைகளைத் தயாரிப்பதில் முன்னணியில் இருந்த டூபாண்ட் நிறுவனமும் இந்த முயற்சியில் ஈடுபட்டது. டூபாண்ட் நிறுவனத்தின் வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் ஸ்டெப்ஃபெனி கோலக்கும் அங்கு ஓர் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். பலபடி சேர்ம ஆராய்ச்சி ( polymer research) முறையில் நீளமான கரிமச் சங்கிலியால் ஆன இழைகளைத் தயாரிக்க விரும்பிய ஆய்வாளர்கள் பல வேதிப்பொருட்களை ஒன்றுடன் ஒன்றாகக் கலந்தனர். பின்னர் அக்கலவையை ஒரு திரவத்தில் கரைத்து, அந்தத் திரவக் கரைசலைச் செயற்கை இழை செய்யும் சுழலும் கருவியில் ஊற்றி (பஞ்சு மிட்டாய் செய்வது போலவே), கருவியைச் சுழற்றி இழைகளாக உருவாக்கினர். உருவாக்கிய இழைகளின் பண்புகளையும், உறுதியையும் அறிய அவற்றை அடுத்த படியாகப் பலவகைச் சோதனைகளுக்கு உட்படுத்தி ஆராய்ந்தனர்.



ஸ்டெப்ஃபெனி கோலக்கும் இதே முறையில் திட நிலையில் இருந்த வேதிப் பொருள்களின் கலவையை, திரவக் கரைசலாக மாற்றினார். பொதுவாக இவ்வாறு கிடைக்கும் கரைசல் அடர்த்தி நிறைந்த பாகு போலவும், தெளிந்தும் இருந்தால் (அதாவது பார்ப்பதற்குத் தேன் அல்லது சர்க்கரைப் பாகு போன்ற தோற்றத்தை ஒத்திருந்தால்) செயற்கை இழைகளை உருவாக்கச் சிறந்த கரைசலாக ஆய்வாளர்களால் ஒப்புக் கொள்ளப்படும். ஆனால் ஸ்டெப்ஃபெனி கோலக் உருவாக்கிய கரைசல் துகள்கள் நிறைந்து, கலங்கலாக மிகவும் நீர்த்துப் போன தோற்றம் (மோர் போன்ற தோற்றம்) கொண்டதாக இருந்தது.

அவருடன் பணிபுரியும் ஆய்வாளர்கள் அக்கரைசலைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஆராய்ச்சியைத் துவக்க ஆலோசனை சொன்னார்கள். கரைசலில் உள்ள திரவத்தை மட்டும் உறிஞ்சிவிட்டு இழைகளை விட்டுவிடும் இழை தயாரிக்கும் கருவியை (laboratory spinneret machine) இயக்கும் ஆராய்ச்சியாளரும் அந்தக் கரைசலை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். ஸ்டெப்ஃபெனி கோலக் அந்தக் கரைசலை வடிகட்டி துகள்களை நீக்கிய பிறகு, மீண்டும் மிகவும் விடாப்பிடியாக அவரை வற்புறுத்தி செயற்கை இழை தயாரிக்கச் செய்தார்.

இந்த இழையை அழுத்தம் கொடுத்துச் சிதைக்கும் சோதனைக்குட்படுத்திய பொழுது, பெரும்பாலான இழைகள் நொறுங்கிவிடும். ஆனால் இந்த இழை அழுத்த நிலையையும் தாண்டி மிகவும் விரைப்பாகவும் நொறுங்காமலும் சிதையாமலும் இருந்தது. இந்தப் பண்பை நன்கு உறுதி செய்து கொண்ட பின்னர், ஸ்டெப்ஃபெனி கோலக் நிர்வாகத்தினரிடம் இந்தத் தகவலை அளித்தார். டூபாண்ட் நிர்வாகத்தினர் உடனே ஓர் ஆராய்ச்சிக் குழுவையே இதற்காக உருவாக்கி இழையின் பல்வேறு பண்புகளைத் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தினர்.

பாலி – பாரஃபைனைலீன் டெட்ரிஃப்தாலமைட் (poly-paraphenylene terephthalamide) என்ற இந்த இழைக்கு ஆய்வகத்தில் “ஃபைபர் பி” (“Fiber B”) எனப் பெயரிட்டு ஆய்வுகள் நடத்தப் பட்டன. அச்சோதனைகளின் மூலம் இந்தச் செயற்கை இழை எஃகை விட ஐந்து மடங்கு மிகவும் உறுதியானதாகவும், அதேசமயம் எடை குறைவானதாகவும் இருப்பதும், தீயெதிர்ப்பு திறன் கொண்டிருப்பதும் அறியப்பட்டது. சந்தையில் ‘கெவ்லர் ‘ என்ற பெயரில் இந்த இழை அறிமுகப்படுத்தப்பட்டது. இழை கண்டுபிடிக்கப்பட்ட 1965 ஆம் ஆண்டிற்குப் பிறகு கார் சக்கரங்களில் மட்டுமின்றி, அதன் உறுதியான மற்றும் எடை குறைவான பண்புகளின் காரணமாக உயிர்காக்கும் கவச ஆடைகளிலும், தலைக்கவசங்களிலும் 1975 ஆம் ஆண்டு முதல் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

குண்டு துளைக்காத கவச ஆடை தயாரிப்பில் பெரும்பங்கு இடம் பெற்று அதனால் உலகப் புகழ் பெற்று பலரால் அறியப்பட்டாலும், கெவ்லர் செயற்கை இழை மேலும் பல வகைகளில் நம் அன்றாட வாழ்வில் இடம் பெற்றுள்ளது. சில எடுத்துக் காட்டுகள்: எடைக்குறைவான உறுதியான கருவிகள், கார் டயர்கள், தீயணைப்பு வீரர்களின் காலணிகள், ஹாக்கி மட்டைகள், கிழியாத கையுறைகள், கண்ணாடி கம்பிவடம் (fiber-optic cables), தீப்பற்றாப் படுக்கைகள், ஓடங்கள், விமானங்கள், கவச ஊர்திகள், தீப்பற்றாக் கட்டிடப் பொருட்கள், சூறாவளியாலும், குண்டுகளாலும் சிதைவுறா பாதுகாப்பு அறைகள், தேய்வுற்ற பாலங்களின் சீரமைப்பு, கைபேசிகள் எனப் பல வழிகளிலும் பல பொருட்களிலும் பற்பல வகைகளில் கெவ்லர் இழை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பின்னாளில் இந்த இழையைப் பற்றிக் குறிப்பிட்ட ஸ்டெப்ஃபெனி கோலக் , கெவ்லர் உருவானது ஒரு தற்காலிக விளைவுதான், ‘யுரேகா’ கண்டுபிடித்துவிட்டேன் என்பது போன்ற பிரிவில் இந்த நிகழ்வு அடங்காது. அவசரப்பட்டு உடனே அறிவித்து, பிழையானால் நகைப்புக்குள்ளாக நேரும் என்பதால், நானும் பொறுமையாக இழையின் பண்புகளை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே நிர்வாகத்தினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், உழைப்பை முதன்மையாகக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்டெப்ஃபெனி கோலக். இவர் பெற்றோர்கள் போலந்திலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியவர்கள். ஸ்டெப்ஃபெனி கோலக் ஆடைகளை வடிவமைப்பது உட்பட, சிறு வயதில் பல துறைகளிலும் ஆர்வமுடையவராக விளங்கினார். ஆசிரியராக, மருத்துவராகப் பணிபுரிய வேண்டும் என்ற கனவுகளும் கொண்டிருந்தார். இவரது கலைப் பின்னணியையும், ஆடைகளுக்கு வடிவமைக்கும் திறனையும் இவர் அன்னை ஊக்கப்படுத்தினார். இயற்கையை விரும்பும் இவரது தந்தை இவரை வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காக்களுக்கும், காடுகளுக்கும், நீர்நிலைகளுக்கும் அழைத்துச் சென்று மரம் செடி கொடிகள், விலங்குகள் இவற்றைக்காட்டியும் அறிவியல் கணிதம் போன்றவற்றில் இவருக்கு ஆர்வமூட்டினார்.

இவரது தந்தை இவரது பத்தாவது வயதில் மரணமடைந்துவிட தாயார் பராமரிப்பில் வளர்ந்தார். அமெரிக்காவின் பஞ்ச காலமான 1930 களில் இவரது அன்னை மிகவும் சிரமப்பட்டு இவரை வளர்த்தார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, கார்னகி மிலான் (Carnegie-Mellon Univeristy)பல்கலைக் கழகத்தில் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். மேற்கொண்டு மருத்துவம் படிக்க பணம் சேர்ப்பதற்காகத் தற்காலிகமாக ஒரு பணியில் சேர விரும்பி கல்ஃப் ஆயில் (Gulf Oil), டூபாண்ட் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தார். பொதுவாகப் பெண்கள் அதிகம் பணிபுரியாத காலம் அது. அத்துடன் நிறுவனங்களும் பெண்களைப் பணியமர்த்துவதில் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரின் காரணமாக, ஆண்கள் பலர் போருக்குச் சென்றுவிட்ட காரணத்தினால், வேறு வழியற்ற நிலையில் பெண்களுக்குப் பணிபுரியும் வாய்ப்புகள் அமைந்தன. அதனால் ஸ்டெப்ஃபெனி கோலக்கிற்கும் டூபாண்ட் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

கெவ்லர் இழை கண்டுபிடிப்பிற்குப் பிறகு, ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் ஏற்பட்டதன் விளைவாக மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்டெப்ஃபெனி கோலக் கைவிட்டார். இளங்கலைப் பட்டத்தைத் தவிர்த்து மேற்படிப்பிற்கான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இழை கண்டுபிடிப்பின் காப்புரிமையை டூபாண்ட் நிறுவனத்திற்கு ஒப்படைத்துவிட்டார். இழை கண்டுபிடிப்பு மட்டுமே தனக்கு உரிமை, ஆனால் அதைப் பலவிதப் பயன்பாட்டிற்கும் பதப்படுத்தி சந்தைக்கு ஏற்றவாறு வெளியிட்டதில் அவர் பங்கு கொள்வது முறையல்ல என்ற எண்ணம் கொண்டிருந்தார். கெவ்லர் இழையை மேன்மைப்படுத்தத் தொடர்ந்து உழைத்தார். நிறுவனம் இவருக்கு என ஒரு தனி ஆய்வுக் கூடத்தை வழங்கியது, பலபடி சேர்ம ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். கல்விக்குப் பணம் சேர்க்க ஒரு தற்காலிகப் பணி என்று ஏற்றுக் கொண்ட பணியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து 1986 ல் பணி ஓய்வு பெற்றார்.

“பெண்களில் ஓர் அறிவியல் முன்னோடி” என்றும் “கண்டுபிடித்தலின் தாய் ” என்றும் பாராட்டப்பட்டார் ஸ்டெப்ஃபெனி கோலக். அறிவியலில் இவர் ஆற்றிய பங்கிற்காகப் பற்பல விருதுகளும் பரிசுகளும் பெற்றார். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்கினைப் பாராட்டி, ” நேஷனல் மெடல் ஆஃப் டெக்னாலஜி (National Medal of Technology) விருது 1996 ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப் பட்டது. பின்னாளில் ஓய்வு பெற்ற பிறகும் பள்ளிகளில் இளம்பெண்களைச் சந்தித்து பெண்களை அறிவியல் துறையில் பங்காற்றும்படி ஆலோசனை கூறும் தன்னார்வப் பணியினைத் தொடர்ந்து செய்து வந்தார்.

இதுவரை ஒரு மில்லியன் குண்டு துளைக்காத கவச ஆடைகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன என டூபாண்ட் நிறுவனம் ஜூன் 2014 இல் அறிவித்தது. அறிவிப்பு நிகழ்ந்த பின்னர் அதற்கு மறுவாரத்தில், உடல் நலமற்று இருந்த 90 வயதான ஸ்டெப்ஃபெனி கோலக் உயிர்நீத்தார்.

அமெரிக்க இராணுவம் “கெவ்லரைக் கண்டுபிடித்ததற்கு மிக்க நன்றி ஸ்டெப்ஃபெனி கோலக், உங்கள் கண்டுபிடிப்பின் மூலம் பல வீரர்களின் உயிர் காப்பாற்றப் பட்டுள்ளது, உங்கள் ஆன்மா அமைதி பெறட்டுமாக” என்று அவரது மறைவிற்கு ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் மூலம் இராணுவத்தின்  இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது. துப்பாக்கிச் சூட்டில் கவச உடை அணிந்திருந்ததன் காரணமாக உயிர்பிழைத்தோர் ஒரு கழகம் துவக்கியுள்ளனர். அக்கழகத்தில் இதுவரை உயிர்பிழைத்த மூவாயிரத்திற்கும் அதிகமானவர் உறுப்பினர்களாக உள்ளனர். தனது உயிர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து கவச உடையால் காப்பாற்றப்பட்ட பின்னர் உயிர்பிழைத்தோர், அம்மையாரைத் தொடர்பு கொண்டு நன்றி கூறும் பொழுதெல்லாம் அதைக் கேட்டு மனம் மிக மகிழ்வாராம் ஸ்டெப்ஃபெனி கோலக். “நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம் என்பது நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும் ஒப்பிட இயலாது”, என்று அவர் கூறியது அவர் அந்தச் செய்திகள் மூலம் கிடைத்த மனநிறைவினால்தான்.


நன்றி:   சிறகு
ஜூன் 28, 2014

#அறிவியல், #சிறகு, #பெண்கள், #Themozhi


Wednesday, June 25, 2014

"ஈஸி... வசந்த்"

"ஈஸி... வசந்த்"


நாசமாப் போறவன், உருப்படவே மாட்டான்... என்று திட்டியபடி செல்போனை  சோபாவில் வீசியெறிந்தான் வசந்த்.  அது அவன் எதிர்பார்த்தது போல சோபாவில் விழாமல் தரையில் மோதி விழுந்தது.

"ஈஸி... வசந்த்" என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த பெண்ணும், அவளுடன் வந்த கணேஷும் சோபாவில் சாய்ந்தார்கள்.

அந்தப் பெண் தரையில் இருந்த செல்போனை எடுத்து டீடேபிளில் வைத்தாள்.  தலையில்  கிரீடமாகக்   கறுப்புக் கண்ணாடி...காற்சட்டையில் துழாவி தனது  செல்போனை எடுத்துக் குடைய ஆரம்பித்தாள். 

கையில் நகப்பூச்சு இல்லை என்பதை வசந்த் கவனித்தான்.  ஏனோ அவளைப்பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது. 

முதன் முறையாக ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடாமல் ஏன் எரிச்சலடைகிறான் என்று அவனுக்கே புரியவில்லை. 

"ஹலோ" என்றான் அவளை நோக்கி, இவள் யார்  எனக்கு அட்வைஸ் கொடுக்க என்ற எரிச்சல் தென்பட்டது வசந்த்தின் குரலில்.  

"ஹலோ" என்றாள் அவளும், தனது போனில்.

"நான் உன்னிடம்தான் பேசுகிறேன்"

"நன்றி, ஆனால் நான் போனில் பேசிக்கொண்டிருக்கிறேன், தெரியவில்லை"

எழுந்து போய் ஜன்னலோரம் நின்று மொணமொணவென்று மெதுவாகப் பேசினாள்.

"பாஸ், எங்க புடிச்சீங்க இந்த ராங்கிக்காரியை, கொஞ்சம் நஞ்சம் வரும் காற்றையும் ஜன்னலை அடைத்துக் கொண்டு மறைக்கிறாள்"

"டோன்ட் பீ சில்லி வசந்த், ஏன் கரண்ட்டுக்கு என்னாச்சு? சென்னையில் கூடவா எலெக்ட்ரிசிட்டி பிராப்ளம்?"

"ஏதோ ட்ரான்ஸ்ஃபார்மர் புட்டுகிச்சாம், தம்புச்செட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லைன்னு சொல்லிட்டான் இ.பி. ஆபிஸ்ல, நீங்க இன்னமும் அதைச் சொல்லல"

"நானும் சொல்லணுமா? சரி, தம்புசெட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லை"

விளையாடாதீங்க பாஸ், நானே வெறுப்பில் இருக்கேன், கண்டவனெல்லாம் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான், கண்டவளெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றாங்கோ, நீங்களுமா கலாய்க்கணும்? யாரிந்த அரை லூசு? எங்க புடிச்சீங்க இதை, என்னையே டபாய்க்குது"

"நான் கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கியிருக்கேன்" என்றவாறு அந்தப் பெண் போனில் பேசி முடித்து விட்டு வந்தாள்.

"உன்னை உதைப்பேன் என்கிறாள்"

"நீங்க வேற அதை  எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா பாஸ், என்ன திமிர்?" வசந்த் அவளை முறைதான்.

"ஹை வசந்த், என் பேர் தேனு, பேராசிரியர் கணேஷின் ஸ்டுடெண்ட்,  வீட்டுக்கு போற வழியில ப்ரபொசர் கார் ப்ரேக்  டவுன் ஆகி திண்டாடிகிட்டு இருந்தார், நான்தான் வாங்க உங்க ஆபிசில கொண்டு போய் விடறேன்னு சொல்லி ரைட் கொடுத்தேன்.  வெளியில் உங்க காரைப் பார்த்ததும், வசந்த் ஆபீஸ்லதான் இருக்கான், உள்ள வா, வசந்தை இன்ட்ரோடியுஸ்  பண்றேன்னு சொன்னார்". 

கணேஷ் இந்த அகாடெமிக் இயரில், யூனிவெர்சிடி சட்ட வகுப்பில் கௌரவ ஆசிரியராக சில வகுப்புகள் எடுக்க ஒப்புக் கொண்டுள்ளான். 

"நான் உன்ன ஹனின்னு கூப்பிடலாமா?"

"நான் துப்பாக்கி சுடுவதில் எக்ஸ்பெர்ட், ப்ரைசெல்லாம் வாங்கியிருக்கேன்"

"அட சட்... பாஸ், இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாதவங்க கார்ல எல்லாம் ஏறாதீங்க பாஸ், இன்னக்கி இரக்கப்பட்டு  ரைட் தரேன்னு கொண்டு வந்து விடுவாங்க, இன்னொருநாள் பாவம் ரொம்ப டயர்டா இருக்கீங்க வாங்க காபி சாப்பிடலாம்னு அழைச்சிப் போய் சிரிக்கச் சிரிக்க பேசி காஃபி வாங்கித் தருவாங்க, பிறகு நீங்க இழக்கக் கூடாததெல்லாம் இழக்க வேண்டி வரலாம்". 

"தேவுடா..தேவுடா, ரோஜுலு மாரயி ...தேவுடா..." என்று பாடி உதட்டைச் சுழித்து அழகு காட்டிய  தேனு மீண்டும் செல்போனைக் குடைந்தாள்.  

"அது சரி, நாங்க வந்த  போது கோபமாய் யாரைத் திட்டிக் கொண்டிருந்தே?"

"ஒரு மனோ வியாதி வைத்தியரிடம் ...." 

"ஓ ....அந்த அளவுக்கு முத்திப் போச்சா"

"பாஸ், கண்டவங்களையும் குறுக்கே பேச வேணான்னு சொல்லுங்க"

"நீ சொல்லு, உனக்கு என்ன ஆச்சு?"

"எனக்கு ஒண்ணுமில்ல, ஒரு கேஸ்...  தேனு,  தேனுண்ணு ஒரு பொண்ணு"

"அதும் பேரும் தேனு தனா?"

"ஆமாம் பாஸ், அந்த பேரு வச்சாலே சொர்ணாக்கா போல இருப்பாங்க போல, மேல கேளுங்க, வயசாகியும் கல்யாணம் வேணாமின்னு அம்புட்டு அடமாம்.  அவளோட அம்மா ஒரு மனோ வியாதி டாக்டர்கிட்ட அவளக் கொண்டு போனாங்களாம். அவரு ஊசி போட்டு சரி பண்ணிடறேன்னு சொல்லி ஊசி போட்டிருக்காரு.  இந்தப் பொண்ணும் நோய் தெளிந்து போன பின்னர்  டாக்டரையே கட்டுவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம்.  கொஞ்ச நாளில் டாக்டரிட்ட இருந்த ஊசியையும், சிரிஞ்சு பாட்டில் மருந்துகளையும் அவருக்குத் தெரியாமல் சுருட்டிக் கொண்டு  அடுத்தாத்து அண்ணாசாமியுடன் சென்னைக்கு ஓடி வந்திடுச்சாம் ."

"பிறகு சென்னையில் அந்த  செக்ஸ் ஊசியை ஏலம் விடும் முயற்சியில் அது தொலைந்துவிட, அதை விசாரிக்க தேனுவிடம் போன மருத்துவக் கவுன்சில் தலைவர் நாகபூஷணத்திற்கு  தொலைந்து போனது போலி ஊசி என்று தெரிந்தது விட்டது. அந்த மனுஷன்  விடுவானா? ஒரிஜினல் ஊசியையும் தேனுவையும்  சுருட்டிக் கொண்டோடிவிட்டான்.   போதாக்குறைக்கு  ஜானு அப்படின்னு இன்னொரு செட்டப் வேறே வச்சுகிட்டான்.  ஜானுவுக்கும்  தேனுக்கும் நாளும் குடுமிப் புடி சண்டை.  பொறுக்க முடியாமல்,  இதோ ஊசியையை ஒழிச்சுக் கட்டுறேன்னு பாவ்லா காட்டி, ஏமாத்தி பொய் ஊசி ஒண்ணை அழிச்சி ரெண்டு  பொண்ணுகளையும் கழட்டி விட்டுட்டான்.  அத்தோடு விட்டானா, புதுசா வசந்தான்னு இன்னொரு பொண்ண கூட்டிக்கிட்டு வந்தான்.  உடனே தேனுவும் ஜானுவும் மோப்பம்  புடிச்சி, இவன் நம்மை ஏமாத்தி தொரத்த நாடகம் போட்டான்னு புரிஞ்சி நேரே வந்துட்டாங்க.  அப்பாலே மூணு பொண்ணுங்களுக்கும் சண்டை.  தெருவில் உருண்டு புரண்டு உன்னை உயிரோடு விட்டேனா பார் என்று ஆளாளுக்கும் சவால் விட்டாங்க.  தெருவே வேடிக்கப் பாத்துது.  அவனவன் செல்போன்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான். "

"இதுக்கும்  நீ திட்டுனதுக்கும் என்ன தொடர்புன்னு சுருக்கமா சொல்லு, வள வளவளக்காத. கதை சகிக்கல, காது கொண்டு கேக்க முடியல்ல, காதிலேயே நாத்தமடிக்குது". 

"இருங்க பாஸ்.  பிறகு இங்கதான் ஒரு ட்விஸ்ட்.  அந்த மூணாவது பொண்ணு நேத்து  ஆளு அவுட்டு, மதியம் தூங்கும் போது முகத்தில் தலையணையை அழுத்திக் கொலை. உடனே மருத்துவக் கவுன்சில் தலைவன் நாகபூஷணத்தை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்தது.  அவன் என்னடான்னா தேனுவும் ஜானுவும்தான்  வசந்தாவைப் போட்டுத்தள்ளியிருப்பாங்க, எனக்கு அவங்க மேலேதான் சந்தேகமுன்னு சொல்லியிருக்கான்.  போலீஸ் சந்தேகக் கேசுல தேனுவையும் ஜானுவையும் இப்ப உள்ள போட்டுட்டாங்க. எல்லோருமே ஜெயில்ல இப்போ கம்பி எண்ணுறாங்க. தேனுவோட அம்மா வந்து எம்பொண்ண வெளிய கொண்டுவாங்க அப்படின்னு அழுதாங்க. நானும் சாயுங்காலம் வாங்க எங்க பாஸ்கிட்ட சொல்லுங்க, அவரு கேஸ எடுத்துப்பாரான்னு தெரிஞ்சுக்கலாமுன்னு சொல்லி அனுப்பி வச்சேன். நீங்க வரதுக்குள்ள கொஞ்சம் தகவல் சேகரிக்க எண்ணி, நம்பரைத்தேடி, அந்த மனோ வியாதி டாக்டர போன்ல கூப்பிட்டு விசாரிச்சேன்.  அவனிடம்  என்னை அறிமுகப் படுத்தி  வசந்த் பேசுறேன்னு சொன்னவுடன்  ரொம்பவே  உற்சாகமானான்."

"அந்த மாதிரி உற்சாகமானவனை  நீங்க   திட்ட  காரணம் என்ன? நான் சொல்லவா? உங்களுக்கும் ஒரு செக்ஸ்  ஊசி வேணுமின்னு கேட்டுருப்பீங்க , அவன் முடியாதுன்னு சொல்லிட்டான்"

"தேனுன்னு இருக்கிற உன் பேரை தேனீ அல்லது தேளு அப்படின்னு மாத்தி வச்சுக்கோ, சும்மா வாயால கொட்டிகிட்டே இருக்க"

"கட் இட் அவுட், வாட் ஹி சட் வசந்த், தேனு சொன்ன மாதிரிதான் கேட்டியா?"

"அப்படி ஒரு  ஊசி இருக்கிறது உண்மையா? எவ்ளோ விலை அப்படின்னு கேட்டேன் பாஸ். அதுக்கு அந்தப் பாழாப் போறவன், "யோவ், நான்  உன்ன புத்திசாலின்னு நெனச்சிருந்தேனே, ஏன்யா இந்த மாதிரி கேக்கிற, உண்மையா இருந்தா நான் எவ்வளவோ சம்பாதிச்சிருப்பேனே.  மனோ வியாதி டாக்டருங்கிறதாலே மனோதத்துவ முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்தேன்.  சிரிஞ்சில டிஸ்டில்ட் வாட்டர போட்டு இன்ஜெக்ட் செய்து, இது ஒரு அதி அற்புதமா வேலை செய்யுற மருந்துன்னு சொல்லுவேன்.  பேஷண்டும் நான் பேசுறதக் கேட்டு உண்மையின்னு நம்பி கொஞ்சம் கொஞ்சமா பலனடைவாங்க.  ப்ளாசீபோ எஃபக்ட்டு, பிளசிபோ விளைவு, மருந்துப்போலி விளைவு, வெற்று மாத்திரை விளைவுன்னெல்லாம் நீங்க கேள்விப் பட்டதே இல்லையா?  மூளைக்கு நான் அந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுப்பேன்.  தேனுவும், அண்ணாசாமியும் அந்த மருந்தெல்லாம் சுருட்டிகிட்டு போனவுடன்,  தேனுவின் தொல்லை ஒழிஞ்சுது மருந்து புட்டிகளில்  இருக்கிற தண்ணியெல்லாம்  முடிஞ்சவுடன் ஆட்டம் போடுறத நிறுத்திடுவாங்கனு கண்டுக்காம விட்டுட்டேன்.  நீங்களும் இதெல்லாம் உண்மையான்னு கேக்க வந்திட்டீங்களே" அப்படின்னு கத்தி போனைக் கட் பண்ணிட்டான்.

"நீ நெனச்சது சரிதான்"

"தேன்க் யூ  ப்ரபொசர்"

பாஸ்...என்று கோபத்துடன் வசந்த் தொடங்கியபொழுது, கணேஷின் செல்போன் இடைமறித்து ஒலித்தது. போனில் எண்ணைப் பார்த்து "இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்..." என்று கூறிவிட்டு கணேஷ் இடையூறு இல்லாமல் பேசுவதற்காக ஜன்னலோரம் போனான்.

"வசந்த், எனக்கு கைரேகை பார்ப்பீர்களா? நான்  ப்ரபொசர் மாதிரி புகழ் பெற்ற  லாயரா வருவேனா?" என்றாள் தேனு.

அவள் குரலில் இருந்தது கிண்டலா அல்லது உண்மையான ஆர்வமா  என வசந்த்திற்குப் புரியவில்லை.

"நான்கூட புகழ் பெற்றவன்தான். இப்பவெல்லாம் முகத்தைப் பார்த்தே ஜோசியம் சொல்லப் படித்திருக்கிறேன்.  உன் சப்பை மூக்கைப் பார்த்தால் நீ எதிலேயும் முன்னேறவே மாட்டாய் எனத் தெரிகிறது".

"ஃபை..ஃபை..சொதப்பி   ஃபை, நாட்டாமை உன் தீர்ப்ப கொஞ்சம் நீ மாத்தி ஃபை" என்ற தேனு  எழுந்து ஆடினாள்.

"என்ன இங்க கொண்டாட்டம்?  ராஜேந்திரனைப் பார்க்கப் போகணும், என்னிடம் கார் கிடையாது"

"வாங்க  ப்ரபொசர், வீடு போற வழியில உங்கள டிராப் பண்றேன்"

"நீ உருப்படியா வீடு போற வழியைப் பாரு, திருப்பி வர  பாஸ் என்ன பண்ணுவாராம், வாங்க பாஸ் நான் இருக்கேன் உங்களுக்கு"

"பை, பை சீரியோ..."

தனது கார் கதவைத் திறந்து உட்க்காரப்போன தேனு போன் அடிக்கவே கதவை மீண்டும் மூடி அதில் சாய்ந்து பேசி , சிரிக்கத் தொடங்கினாள்.

வசந்தின் காரில் கிளம்பினார்கள் கணேஷும் வசந்தும்.  ரியர் வியூ கண்ணாடியில் பின்னால் பார்த்த வசந்த் கடுப்புடன்.  "பாருங்க, நடுதெருவில என்ன சிரிப்பும்  கொம்மாளமும், எப்பப் பாரு போனைக் குடைய வேண்டியது, இதெல்லாம் தேருங்கறீங்க பாஸ், நோ சான்ஸ்?"

"ஹார்ஷ் வார்ட்ஸ் வசந்த், அந்தப் பொண்ண ஏன் வாரிக்கிட்டே இருக்க, பின்னால பாக்காத முன்னால பாரு"

"என்ன பாஸ் திடீர்னு தத்துவம்"?

"தத்துவமில்ல, காருக்கு எப்ப பெட்ரோல் போட்ட? எம்ப்டின்னு காட்டுது? போக வேண்டிய இடத்திற்கு போகும் வரை பெட்ரோல் இருக்குமா?"

"இருக்கும்".... தெருமுனைக்கு வந்த கார் நின்றுவிட்டது "ஆனால் இருக்காது பாஸ்."

"ஹல்லோ, எனி ஒன் நீட் சம் ரைட்?" பக்கத்தில் வந்து நின்ற காரில் இருந்து தேனு தலையை நீட்டிக் கேட்டாள்.

"வாடா, அப்புறம் பெட்ரோல் போட்டுக்கலாம்"  

"வாங்க ப்ரபொசர், நான் இருக்கேன் உங்களுக்கு" என்றாள் தேனு.






[தன்னிலை விளக்கம்: எழுத்தாளர் சுஜாதாவைப் போல நானும் "கணேஷ்-வசந்த்" கதையொன்றை எழுத வேண்டும் என்ற ஆர்வக்கோளாற்றின் அடிப்படையில் எழுந்த கற்பனைக் கதையிது, சுஜாதா மன்னிப்பாராக]

நன்றி: வல்லமைக் குழுமம்
https://groups.google.com/d/msg/vallamai/_DG_fpwcNgY/DcSH1SWhMucJ

ஜூன் 25, 2014

#சிறுகதை, #Themozhi 

Saturday, June 14, 2014

தேன்கூட்டின் கட்டமைப்பு: ஒரு வடிவமைப்பின் சிறப்பு

தேன்கூட்டின் கட்டமைப்பு: ஒரு வடிவமைப்பின் சிறப்பு

தேனீக்களிடம் நம்மைக் கவரும் பல வியப்பான பண்புகள் உண்டு. தேனீக்களின் கடின உழைப்பு, தேனை அதே பண்புகளுடன் தேனீயைத் தவிர வேறு யாராலும் உருவாக்க முடியாத தனித்திறனைக் கொண்டிருப்பது, மெழுகை உருவாக்கும் திறமையைக் கொண்டிருப்பது, தங்களுக்குள் இன்னாருக்கு இன்னின்ன வேலைகள் என்று பகிர்ந்து கொண்டு கடமையாற்றுவது, தேன்கூடு கட்டி கூட்டாகச் சமூக அமைப்பின் அடிப்படையில் வாழ்க்கை நடத்துவது என்று தனது பற்பல திறமைகளால் தேனீக்கள் நம்மைக் கவர்கின்றன.

தேன்கூடு என்பது தேனீக்கள் வசிக்குமிடம் மட்டுமல்ல. அவை தங்கள் உணவைச் சேகரித்து வைக்கும் இடமுமாகும். தேன்கூடு இவ்வாறு உணவைச் சேமிக்கவும், வாழும் இடமாகவும் அமைந்துவிடுவதால் அதைச் சிறந்தமுறையில் வடிவமைப்பது தேனீக்களுக்கும் மிக இன்றியமையாத தேவையாகிறது. வடிவமைக்கப்படும் தேன்கூடு, குறைந்த செயல்திறனில், அதிகப் பலனைக் கொடுக்கும் வகையில் ஆற்றல் நிறைந்த வகையில் அமைக்கப்படவேண்டும். தேன்கூட்டின் கட்டமைப்பு தேனீக்களின் கட்டிடத் திறமைக்கு, அவற்றின் கணிதத் திறமைக்கு ஒரு சான்று.

தேன்கூட்டின் அமைப்பு அமைந்திருக்கும் விதத்தால் தேனீக்களால் துல்லியமாகக் கோணங்களை அளக்க இயலும் என்பது நமக்குத் தெரிய வருகிறது. தேன்கூட்டின் அறுங்கோண அறைகளின் ஒவ்வொரு கோணத்தையும் சரியாக 120 பாகைகள் இருக்குமாறு தேனீக்கள் கட்டுகின்றன. தேன்கூட்டின் அமைப்பு மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட அறுங்கோண அறைகளைக் கொண்டது. ஒவ்வொரு அறையும் ஒரு தேனீ நுழையும் அளவிற்கும் அமைக்கப்பட்டதாகும். அத்துடன் அவை குறைந்த பரப்பளவில், இடமும் விரயமாகாமல் அதிகக் கொள்ளளவு இருக்கும் வகையில் அமைக்கப்படவேண்டும். இதற்காகவே அறுங்கோண அறை அமைப்புகளைத் தேனீக்கள் தேர்வு செய்துள்ளன. இது பரிணாம வளர்ச்சியின்படி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தேனீக்கள் தங்கள் தொழில் நுட்பத்திறன் மூலம் வளர்த்துக்கொண்ட அறிவு. இதன் காரணமாக ஒரு குறையற்ற பண்பு கொண்ட வடிவத்தில், சிறந்த ஆற்றலுடன் தேன்கூடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேன்கூட்டின் கட்டமைப்பின் சிறப்பினை உணர அதன் கட்டமைப்பின் வடிவத்தை அறிவியல் ஆய்வு நோக்கில் பார்க்க வேண்டும். வடிவியல் அடிப்படையில் முக்கோணம், செவ்வகம், ஐங்கோணம், அறுங்கோணம், வட்டம் எனப் பல வடிவங்கள் இருக்க தேனீக்கள் அறுங்கோணத்தைத் தங்கள் கூட்டின் அறைகளைக் கட்டத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன? இதுவே ஆராய்ச்சிக்குரிய கேள்வி.

[1] தேனீக்கள் எதிர்கொள்ளும் தேவைகள், அவற்றின் மொத்தச் சமூகமும் பாதுகாப்பாக வாழத் தகுதி நிறைந்த கூடு ஒன்று.
[2] மலர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மலர்ச்சாறு, தேனாக முதிர்ச்சிபெறும் காலம் வரை சேமிக்க உதவும் கிடங்கு ஒன்று.
[3] இத்தேவைகளை நிறைவு செய்யும் வகையில் செயல்திறன் அடிப்படையில் அமைக்கப்பட்ட இருப்பிடம் ஒன்று.

ஒரு நல்ல இருப்பிடம் தேனை உருவாக்கச் சேமிக்கும் சிறுசிறு அறைகள் இருப்பதுடன், தேனீ நுழையப் போதுமான அளவிலும் இருத்தல் அவசியம். அவற்றைக் குறைந்த அளவு மெழுகைப் பயன்படுத்தியும் செய்யவேண்டும். எட்டு கிலோ கிராம் தேனை உண்டால்தான் தேனீயால் ஒரு கிலோ கிராம் நிறையுள்ள மெழுகை உற்பத்தி செய்ய முடியும். ‘தேன் உணவு’ என்ற மூலதனம் தேனீக்களைப் பொறுத்தமட்டில் அதிக மதிப்புள்ளது. எனவே குறைந்த அளவு மெழுகைப் பயன்படுத்தி அதிக அளவு தேனைச் சேமிக்கும் வகையில் கூடு வடிவமைக்கப்பட வேண்டும். இதுவே தேனீக்களின் குறிக்கோளாக, இயற்கையின் நியதியாகவும் இருக்கும்.


இந்தக் குறிக்கோளை அடைய, குறைந்த அளவு மெழுகு கொண்டு அதிகம் தேன் சேமிக்க எந்த வடிவ அறைகள் சிறந்ததாக இருக்கும்? வடிவியல் அடிப்படையில் வட்ட வடிவமே இந்தக் குறிக்கோளை அடைய உதவும். ஆனால் வட்டவடிவில் நெருக்கமாக அமைக்கப்பட்ட அறைகளின் இடையில் சிறு இடைவெளிகள் விட நேரும். இந்த இடைவெளிகளும் தேனீக்கள் நுழையமுடியாத அளவில் மிகச் சிறியவையாக அமைந்து விடுவதால் தேனீக்களாலும் பயன்படுத்த வழியின்றிப் போகும். இட விரயமாக அறைகளுக்கு இடையே இடத்தை அடைக்கும் வடிவங்களாக அந்த இடைவெளிகள் அமைந்துவிடும். எனவே அதிகச் சேமிப்பு குறிக்கோள் என்ற அடிப்படையில் வட்டவடிவம் சிறந்ததாக இருந்தாலும், அறைகளை நெருக்கமான வகையில் அமைக்கச் சரியான வடிவத் தேர்வாக இல்லாது போய் விடுகிறது. இட விரையத்தை ஏற்படுத்துகிறது. ஐங்கோண அறைகள் வடிவமைப்பிலும் தேவையற்ற இடைவெளிகள் அமையும்.

முக்கோண வடிவமும், செவ்வக வடிவமும் இடைவெளியற்ற நெருக்கமான முறையில் அறைகளைக் கட்ட உதவினாலும், கொள்ளளவு அடிப்படையில் அதிக ஆதாயம் கொடுக்க வழியற்ற வடிவங்களாக அமையும். எனவே வடிவியல் கணித முறையில் கணக்கிடும்பொழுது, குறைந்த பரப்பளவில், அதிகக் கொள்ளளவு கொண்ட அறைகளை, குறைந்த அளவு மெழுகு கொண்டு அமைக்க உதவும் வடிவம் அறுங்கோணம் என்ற முடிவு தெரிய வரும். தேன்கூட்டின் சிறந்த கட்டமைப்பு அமையக் காரணம் பரிணாம வளர்ச்சியின் மூலம் தேனீக்கள் அறிந்துகொண்ட அறிவாகும்.

சான்று:
Weisstein, Eric W. “Honeycomb Conjecture.” From MathWorld–A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/HoneycombConjecture.html


நன்றி: சிறகு - ஜூன் 14, 2014 

#அறிவியல்,  #சிறகு, #Themozhi 


Wednesday, June 4, 2014

நான் எழுவேன் !!!

நான் எழுவேன் !!!


கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
மொழிபெயர்ப்பு – தேமொழி


நீ வரலாற்றில் என்னைப் பற்றி எழுதலாம்
உனது கசப்பான சரடுகளை
நீ என்னை மண்ணோடு மண்ணாகப் புதைக்கலாம்
எனினும், நான் தூசு போல மேலெழுவேன்

எனது துடுக்குத்தனம் எரிச்சலூட்டுகிறதா?
எதனால் நீ சோர்வில் மூழ்கினாய்?
வீட்டிலேயே எண்ணைக் கிணறுள்ள  செல்வச்
சீமாட்டிபோல நான் வலம் வருவதாலா?

நிலவினைப்போல கதிரவனைப் போல
நிரந்தரமான அலைகளைப்போல
மேலெழும் நம்பிக்கை போல
நானும் மேலெழுவேன்

என்னை மனமுடைந்தவளாகக் காண விருப்பமா?
கவிழ்ந்த தலையுடன்  தாழ்ந்த கண்களுடன்
தொங்கிய தோள்களையும் உறுதியிழந்து  உயிரை
உருக்கும் அழுகையையும்  என்னிடம்  எதிர்பார்த்தாயா?

எனது செருக்கு உன்னைப் பாதிக்கிறதோ?
அதனைக் கண்டு நீ சோர்வு கொள்ளாதே
ஏனெனில் நான் நகைப்பேன் என் வீட்டுத்
தோட்டத்தில் தங்கச்சுரங்கம் வைத்திருப்பவள் போல

நீ என்னைத் தாக்கலாம் உன் சொற்களால்
நீ என்னைக் கண்டிக்கலாம் உன் பார்வையால்
நீ என்னைக் கொல்லவும் செய்யலாம் உன் வெறுப்பால்
எனினும், உயரும் காற்றாக நான் மேலெழுவேன்

எனது கவர்ச்சி உன்னை வருத்துகிறதா?
எனது துள்ளாட்டம் வியப்பளிக்கிறதா?
மடியிலேயே வைரச் சுரங்கம் கொண்டவள் போல
நானாடும் நடனம் வியப்பளிக்கிறதா?

வரலாற்றின் அவமானக் குடில்களில் இருந்து
நான் எழுவேன்

வேரூன்றிப் போன கடந்த காலத்தின் வலிகளில் இருந்து
நான் எழுவேன்

கொந்தளித்து எழும்பும் அலைகளுடன்
நானொரு பரந்து விரிந்த கருங்கடலாக
இரவுகளின் திகிலையும் அச்சத்தையும் பின்தள்ளி
நான் எழுவேன்

புலரும் வேளையில் தெளிவான பொழுதில்
நான் எழுவேன்

என் முன்னோர் வழங்கிய பரிசுகளுடன்
ஒரு அடிமை காணும்  கனவாக,  நம்பிக்கையுமாகவும்
நான் எழுவேன்
நான் எழுவேன்
நான் எழுவேன்


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
















‘Still I Rise’ 
– Maya Angelou (1928 –  2014)


You may write me down in history
With your bitter, twisted lies,
You may trod me in the very dirt
But still, like dust, I'll rise.

Does my sassiness upset you?
Why are you beset with gloom?
’Cause I walk like I've got oil wells
Pumping in my living room.

Just like moons and like suns,
With the certainty of tides,
Just like hopes springing high,
Still I'll rise.

Did you want to see me broken?
Bowed head and lowered eyes?
Shoulders falling down like teardrops,
Weakened by my soulful cries?

Does my haughtiness offend you?
Don't you take it awful hard
’Cause I laugh like I've got gold mines
Diggin’ in my own backyard.

You may shoot me with your words,
You may cut me with your eyes,
You may kill me with your hatefulness,
But still, like air, I’ll rise.

Does my sexiness upset you?
Does it come as a surprise
That I dance like I've got diamonds
At the meeting of my thighs?

Out of the huts of history’s shame
I rise
Up from a past that’s rooted in pain
I rise
I'm a black ocean, leaping and wide,
Welling and swelling I bear in the tide.

Leaving behind nights of terror and fear
I rise
Into a daybreak that’s wondrously clear
I rise
Bringing the gifts that my ancestors gave,
I am the dream and the hope of the slave.
I rise
I rise
I rise.



நன்றி: வல்லமை 
ஜூன் 4, 2014 


#கவிதை,  #மொழிபெயர்ப்பு, #வல்லமை, #Themozhi 


Saturday, May 31, 2014

பிரமிப்பூட்டும் பெண்மணி

பிரமிப்பூட்டும் பெண்மணி


கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
மொழிபெயர்ப்பு – தேமொழி


அழகிய பெண்கள் வியக்கிறார்கள்
என் இரகசியம் என்னவென்று
நான் ஓர் அழகியுமல்ல
பேரழகிக்குரிய தோற்றமும் எனக்கில்லை
நானிதைச் சொன்னாலோ
நான் பொய்யுரைப்பதாக
அவர்கள் எண்ணுகிறார்கள்
நான் சொல்கிறேன்
எனது கைக்கெட்டும் வகையில்
எனது இடையின் அளவில்
எனது நடையின் துடிப்பில்
எனது கடைவாயிதழ் சுழிப்பில்
நானொரு பெண்
நான் பிரமிப்பூட்டுபவள்
பிரமிப்பூட்டும் பெண் என்பவள் நானே

நான் அறையில் நுழைந்தால்
பிறர் மனம் குளிரும்
மனம் மகிழும்
ஓர் ஆணிடம்
அருகே தோழர்கள் நிற்பார்கள்
அல்லது மண்டியிடுவார்கள்
பிற்பாடு தேன்கூட்டினை
மொய்க்கும் தேனீக்களாக
என்னை அவர்கள் மொய்ப்பர்
நான் சொல்கிறேன்
எனது விழிச் சுடரொளியில்
எனது புன்னகையின் மின்னலில்
எனது இடையின் அசைவில்
எனது நடையின் துள்ளலில்
நானொரு பெண்
நான் பிரமிப்பூட்டுபவள்
பிரமிப்பூட்டும் பெண் என்பவள் நானே

ஆண்களும் வியக்கிறார்கள்
என் ஈர்க்கும் சக்தியின்
காரணம் என்னவென்று
அவர்கள் என்னதான் முயன்றாலும்
என்னுள் மறைந்திருக்கும் மாயம்
அவர்களுக்குப் புரியாது
நான் விளக்கினாலும்
அவர்களுக்கு விளங்குவதில்லை
நான் சொல்கிறேன்
எனது கவர்ச்சி இருப்பது
எனது முதுகின் நிமிர்வில்
எனது புன்னகையின் ஒளிர்வில்
எனது மார்புகளின் அசைவில்
எனது இயல்பின் நளினத்தில்
நானொரு பெண்
நான் பிரமிப்பூட்டுபவள்
பிரமிப்பூட்டும் பெண் என்பவள் நானே

இப்பொழுது புரிகிறதா
என் தலைவணங்க மறுப்பதன் காரணம்
நான் கத்துவதுமில்லை குதிப்பதுமில்லை
கவனத்தைக்கவர உரத்துப் பேசத் தேவையுமில்லை
நான் கடந்து செல்வதைக் காணும் பொழுதே
உங்களைப் பெருமை கொள்ள வைக்கும்
நான் சொல்கிறேன்
எனது கால்களிடும் தாளத்தில்
எனது கூந்தலின் துவளலில்
எனது கையில் எதிர்பார்ப்பது
ஓர் அன்பின் அரவணைப்பு
ஏனெனில்
நானொரு பெண்
நான் பிரமிப்பூட்டுபவள்
பிரமிப்பூட்டும் பெண் என்பவள் நானே.


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


‘Phenomenal Woman’ 
– Maya Angelou (1928 –  2014)


Pretty women wonder where my secret lies.
I’m not cute or built to suit a fashion model’s size  
But when I start to tell them,
They think I’m telling lies.
I say,
It’s in the reach of my arms,
The span of my hips,  
The stride of my step,  
The curl of my lips.  
I’m a woman
Phenomenally.
Phenomenal woman,  
That’s me.

I walk into a room
Just as cool as you please,  
And to a man,
The fellows stand or
Fall down on their knees.  
Then they swarm around me,
A hive of honey bees.  
I say,
It’s the fire in my eyes,  
And the flash of my teeth,  
The swing in my waist,  
And the joy in my feet.  
I’m a woman
Phenomenally.

Phenomenal woman,
That’s me.

Men themselves have wondered  
What they see in me.
They try so much
But they can’t touch
My inner mystery.
When I try to show them,  
They say they still can’t see.  
I say,
It’s in the arch of my back,  
The sun of my smile,
The ride of my breasts,
The grace of my style.
I’m a woman
Phenomenally.
Phenomenal woman,
That’s me.

Now you understand
Just why my head’s not bowed.  
I don’t shout or jump about
Or have to talk real loud.  
When you see me passing,
It ought to make you proud.
I say,
It’s in the click of my heels,  
The bend of my hair,  
the palm of my hand,  
The need for my care.  
’Cause I’m a woman
Phenomenally.
Phenomenal woman,
That’s me.


நன்றி: சிறகு 
மே 31, 2014 

#கவிதை,  #மொழிபெயர்ப்பு, #சிறகு, #Themozhi 



Saturday, May 17, 2014

செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் கதிரியக்கத் தாக்கத்திற்குள்ளான பறவை இனங்களின் தகவமைப்பு

செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் கதிரியக்கத் தாக்கத்திற்குள்ளான பறவை இனங்களின் தகவமைப்பு


உலகை உலுக்கிய ஒரு நிகழ்வான உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணுமின் நிலைய விபத்து நிகழ்ந்து சென்ற மாதத்துடன் (ஏப்ரல் 2014) இருபத்தெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏப்ரல் 26, 1986 அன்று யூனிட் 4 அணு உலை (Unit 4 reactor) வெடிப்பின் விளைவாக, கடுமையான, அளவுக்கு மீறிய கதிரியக்கத் தாக்கத்தை எதிர்கொண்ட அணுமின்நிலைய ஊழியர்களும், விபத்தின் விளைவுகளைக் கட்டுப்படுத்தப் போராடிய தீயணைப்பு படையினர் பலரும் சில வினாடிகளுக்குள் இறந்தனர். அல்லது உடல் உறுப்புக்களும் திசுக்களும் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டுச் செயலிழந்துவிடச் சில வாரங்களுக்குள் இறந்தனர்.

செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு அருகில் இருந்த பல இடங்களை வாழத் தகுதியற்ற இடங்கள் எனக் கைவிட்டு மக்கள் வெளியேறினர். அப்பகுதியில் இருந்த பிற உயிரினங்களும், தாவரங்களும் மிகவும் பாதிக்கப்பட்டன. உடல் ஊனமும், குறைகளும் தோன்றி விலங்குகளின் வாழ்வு பாதிக்கப்பட்டது. அப்பகுதியைச் சூழ்ந்திருந்த பைன் மரக்காடுகளில் மரங்கள் பட்டுப் போய் அதன் ஊசியிலைகள் செங்கல் நிறத்தை ஒத்த செவ்வண்ணம் பெற்று மரங்களும் சில நாட்களில் உயிரிழந்தன. அப்பகுதியே இதனால் சிவப்பாகிவிட, அக்காட்டுப்பகுதி “செந்நிறக்காடு” (The Red Forest) என்றழைக்கப்பட்டது.

கதிர்வீச்சின் அளவு ‘மணிக்கு இத்தனை மில்லெர்ரங்கென்ஸ்’ (milliroentgens per hour – mR/h) என அளவிடப்படுகிறது. [குறிப்பு: இயற்கையிலேயே கதிர்வீச்சுகள் உள்ளது, அத்துடன் அனைத்துக் கதிரியக்கமும் உடலுக்கு ஊறு விளைவிப்பதில்லை. அவ்வாறு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் கதிர்வீச்சு 'மைக்ரோசீவர்ட்ஸ்' (microSieverts per hour) என்ற அலகால் அளக்கப் பெறும். அது மேலே குறிப்பிட்ட மில்லெர்ரங்கென்ஸ் என்ற அலகில் இருந்து மாறுபட்டது]. அணுவுலை கதிர்வீச்சின் அளவு, மேலும் அதன் தாக்கத்தின் விளைவுகள் இவற்றின் அடிப்படையில் செர்னோபில் பகுதி அறிவியல் அறிஞர்களால் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.

முதல் பகுதி (The first zone ) – கதிர்வீச்சின் அளவு 500 mR/h அல்லது அதற்கு அதிகமான அளவு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதி. இப்பகுதியில் உயிரினங்கள் பேரழிவிற்கு உள்ளாகும்.

இரண்டாம் பகுதி (The second zone) – கதிர்வீச்சின் அளவு 200–250 mR/h உள்ள பகுதியில் உள்ள மரங்கள் 25–40% வரை அழிந்துவிடும்.

மூன்றாம் பகுதி (The third zone) – கதிர்வீச்சின் அளவு 50–200 mR/h உள்ள பகுதியில் வளர்ந்த மரங்கள் பாதிக்கப் பட்டாலும் உயிர் பிழைக்கும். ஆனால் இளம் மரங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்துவிடும்.

நான்காம் பகுதி (The fourth zone) – கதிர்வீச்சின் அளவு 20 mR/h உள்ள பகுதியில் உயிர்ச் சேதம் இருப்பதில்லை, ஆனால் வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இந்த மூன்று மற்றும் நான்காம் பகுதியில், கதிர்வீச்சின் அளவு குறைவாக இருக்கும் இடங்களில் உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளன என்பதைக் கடந்த கால் நூற்றாண்டாகச் சில உயிரியல் அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள். அவர்களில் ஒருவர் அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழக உயிரியல் அறிஞர் திம்மோத்தி மூசவ் (University of South Carolina, Biologist Timothy A. Mousseau, http://cricket.biol.sc.edu/Mousseau/Mousseau.html).

கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் பலமுறை தொடர்ந்து செர்னோபில் பகுதிக்குச் சென்று குறைந்த அளவு கதிர்வீச்சை எதிர்கொள்ளும் உயிரினங்களில் என்ன மாறுதல்கள் நிகழ்கிறது என்று ஆராய்ந்து வருகிறார். தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மீது கதிர்வீச்சு ஏற்படுத்தும் நீடித்த விளைவுகள் பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புகுஷிமா, ஜப்பான், அணு உலைகளின் விபத்திற்குப் பிறகு அங்கும் ஆய்வுகள் நிகழ்த்தி வருகிறார். இவ்விரு இடங்களில் அணுவுலை விபத்தின் காரணமும், ஏற்பட்ட விதமும் வேறாக இருந்தாலும், அதிகப் பரப்பளவுள்ள இடங்கள் அணுவுலைக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது என்ற முடிவு ஒன்றே.

இவரது ஆய்வுக்குப் பல உயிரினங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன. பல பறவை இனங்கள், பூச்சி இனங்கள், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், வௌவால், எலிகள், சிலந்திகள் என்ற பலவகை உயிரினங்கள் இவரால் ஆராயப்பட்டு வருகின்றன. சிலந்தி வலைகளைப் படம் பிடித்து, கதிர்வீச்சின் தாக்கத்தால் அவற்றின் வலை பின்னும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதா எனவும், பாதிக்கப்பட்ட எலிகளின் இனங்களில் மரபணுக்களில் வேறுபாடுகள் உள்ளனவா என்றும் இவரால் ஆய்வுகள் நிகழ்த்தப் படுகின்றன.

குறைந்த அளவுள்ள தொடர் கதிர்வீச்சு உடனே மரணத்தைத் தருவதில்லை. ஆனால் அது உயிரினம் எவ்வளவு நாட்கள் வாழும் என்பதை நிர்ணயிக்கும், புற்றுநோய்களால் பாதிக்கப்படுதலையும் விளைவிக்கும். பாதிக்கப்பட்ட உயிரினங்களில் மரபணு மாறுபாடுகளும், கண்புரைகளும் காணப்படுவதுண்டு. பாதிக்கப்பட்ட உயிரினங்களின் மரபணுக்களில் டிஎன்ஏ இழைகள் கதிர்வீச்சால் சிதைவுறுகிறது. மரபணு மாற்றங்களின் விளைவு காரணமாகக் கதிர்வீச்சுப் பகுதிகளில் வாழும் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் குறைவாகக் காணப்படும்.

மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது, கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பறவைகளில் பெரும்பான்மையானவை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதும், அவற்றின் அலகுகளில் குறைபாடுகள் தோன்றுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

சென்ற ஏப்ரல், 2014 வெளியீடான ‘ஜர்னல் ஆஃப் பங்க்க்ஷனல் இகாலாஜி’ (Journal Functional Ecology;  http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1365-2435.12283/pdf)


ஆய்விதழில்  திம்மோத்தி மூசவ் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கை, கதிர்வீச்சின் விளைவைப் பற்றிய எதிர்பாராத தகவல் ஒன்றினைத் தருகிறது. அந்த அறிக்கையின்படி சிலபறவை இனங்கள் கதிர்வீச்சிற்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும் செய்கின்றன என்பது தெரிய வருகிறது.

இப்பறவைகளில் குறைந்த அளவிலான தொடர் கதிரியக்கத்தின் தாக்கம், அதிக அளவு பாதுகாப்பை அளிக்கும் ‘ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்களை’ (antioxidants) உற்பத்தி செய்வதையும், அதனால் ‘ஃபிரீராடிக்கல்’ குறைவதையும், அதன் தொடர் விளைவாக மரபணுக்களில் சேதம் ஏற்படுவதைக் குறைத்துள்ளது. இது பரிணாம வளர்ச்சி விதியின்படி, இயற்கைத் தேர்வு முறையில் உயிரினங்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டு வாழும் முறையினை ஒத்திருக்கிறது. இதிலிருந்து சிலபறவை இனங்கள் குறைந்தளவு தொடர் கதிர்வீச்சிற்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது. இவ்வாறு தகவமைத்துக் கொள்ளும் திறன் பறவைகளின் பல்வேறு இனங்களில் வெவ்வேறு விதத்தில் வேறுபடுகிறது.


சான்றுகள்:
[1] Chronic exposure to low-dose radiation at Chernobyl favors adaptation to oxidative stress in birds. Ismael Galván, Timothy A. Mousseau and Anders P. Møller et al.,
Functional Ecology, Wiley Online Library, 16-Apr-2014 [You have free access to this content]http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1365-2435.12283/pdf

[2] At Chernobyl, Hints of Nature’s Adaptation, By HENRY FOUNTAIN, The New York Times, MAY 5, 2014
http://www.nytimes.com/2014/05/06/science/nature-adapts-to-chernobyl.html

[3] Chernobyl: Capping a Catastrophe, By HENRY FOUNTAIN, The New York Times, April 27, 2014
http://www.nytimes.com/interactive/2014/04/27/science/chernobyl-capping-a-catastrophe.html

[4] 28 Years Later, The Animals Of Chernobyl Have Reclaimed Their Homeland… At A Price, by Nick Visser, The Huffington Post, 05/06/2014
http://www.huffingtonpost.com/2014/05/06/chernobyl-animals_n_5275596.html

[5] Some Birds in Chernobyl Site have adapted to Radioactive Environment, by BUSTA SEBETSEBA, NewsTonight, 05/07/2014
http://newstonight.co.za/content/some-birds-chernobyl-site-have-adapted-radioactive-environment#ixzz31BwyG2A9

[6] The Red Forest – http://www.nuclearflower.com/zone/zone08.html

[7] Radiation: How much is harmful? – http://knowledge.allianz.com/environment/energy/?1458/radiation-how-much-is-harmful


நன்றி:  சிறகு
மே 17, 2014

#அறிவியல்,  #சிறகு,  #Themozhi 


Saturday, April 26, 2014

சோழர் காலத்தின் சித்திரைத் திருவிழாக்கள்

சோழர் காலத்தின் சித்திரைத் திருவிழாக்கள்

சோழர் காலத்தில் சித்திரைத் திருவிழாக்கள் எவ்வாறு கொண்டாடப்பட்டன என்பதனை கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நமக்கு அறியத் தருகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அரசாட்சி செய்த உத்தமசோழரின் (கி.பி. 970-985) செப்பேடுகளும்[1] முதலாம் குலோத்துங்கரின் (கி.பி. 1070-1120) கல்வெட்டுகளும்[2] சோழநாட்டின் கோயில்களில் சித்திரைத் திருவிழா எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதையும், அதற்கான செலவினங்கள் பற்றிய தகவல்களையும் அளிக்கின்றன.

கல்வெட்டுகள் வழங்கும் தகவல்களின்படி, சித்திரைத் திருவிழா, சித்திரை மாதத்தின் சித்திரைத் திருநாளுக்கு (சித்திரை நட்சத்திரம் வரும் நாள்) ஏழு நாட்களுக்கு முன்னரும், சித்திரைத் திருநாளுக்குப் பிறகு ஏழு நாட்களும் என ஆக மொத்தம் 15 நாட்கள் விழா நடத்தப்பட்டிருக்கிறது. இச்சித்திரைத் திருவிழாக்கள் சிவன், திருமால் கோயில்களில் நடை பெற்றிருப்பதும், விழாச் செலவுகளுக்காகத் தானமாகப் பொதுமக்கள் அளித்த செல்வங்கள், இறையிலி (அரசாங்க வரியற்ற) நிலங்கள், பொன் கழஞ்சுகள் ஆகியவை ஒழுங்காகக் கணக்கிடப்பட்டு சாட்சிக் கையெழுத்துகளுடன் வருமானமாக வரவு வைக்கப்பட்டதையும் குறிக்கிறது. மேலும் பொன் கழஞ்சுகள் நெல்லாக மாற்றப்பட்டு, அவை முதலீடாகப் பாவித்துக் கடனாக வழங்கப்பட்டதும், அக்கடனுக்கு வட்டியாக நெல் பெற்று, அந்த நெல் செலவுக்குப் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகக் கோயில்கள் என்றாலே இயல், இசை, கூத்து இன்றி வழிபாடுகள் அமைவதில்லை. திருவிழாக்களும் அவ்வாறே. இசையும் கூத்தும் திருவிழாக்களின் முக்கிய நிகழ்ச்சிகள். அன்னதானங்களும் திருவிழாக் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதி. இவற்றைத் தவிரப் பூசைக்குத் தேவையான மலர், சந்தனம் போன்றவற்றிற்குச் செலவிட்ட தகவல்களும் நமக்குக் கல்வெட்டுகள் வழியும் செப்பேடுகள் வழியும் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே கோயிலுக்கான இசைக்கருவிகள் வாசிக்கும் ‘உவச்சர்கள்’ என்னும் இசைக் கலைஞர்கள் இருந்தபோதும் சித்திரைத் திருவிழாவிற்காகச் சிறப்புக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்குச் சன்மானமும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பில் உள்ள உத்தமசோழரின் செப்பேடுகள், கச்சிப்பேடு(கச்சிப்பேட்டை) நகரின் ஊரகப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா நடந்த பொழுது ஏற்பட்ட வரவு செலவுகளை ஆவணப்படுத்தியுள்ளது. இச்செலவினம் எண்ணெய், நறுமணம் கொண்ட மலர்கள், மணம் ஊட்டப் பெற்ற சந்தனம், கொட்டி செய்யும் தேவர் அடியார்க்குக் கொற்றுக்கும் பூசைக்கும், பிராமணர் உணவுக்கு, இறைவனுடைய பள்ளியறைச் சிவிகையைச் சுமப்பார்க்கு, விழாவுக்கென்று சிறப்பாக அழைக்கப் பெற்ற இசைக் கலைஞர்களுக்கு, கண்டழிவு செலவுகள் (பல்வேறு வகைச் செலவுகள்/miscellaneous) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கம்புழான்பாடியார், அதிமானப்பாடியார், கஞ்சகப்பாடியார், எற்றுவழிச்சேரியார் என்ற ஊர் மக்கள் நால்வர் வழங்கிய பொற்கழஞ்சுகள் 200 க்கான வட்டித் தொகையான முப்பது பொன்கழஞ்சு விழாச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டதும், விழாவிற்கான செலவு செய்த பின்னர் கணக்கு வரவுக்கும் செலவுக்கும் சரியாக நேர் செய்யப்பட்டுள்ளதைச் செப்பேட்டு ஆவணம் அறியத் தருகிறது.

கோயில்கள் கடைப்பிடிக்கும் வழிபாட்டு முறைகள் 16 பிரிவுகளைக் கொண்டது, இதனை ‘ஷோடசோபசாரம்’ என்றழைப்பர். இப்பதினாறு பிரிவுகளில் வாத்திய இசை பதினைந்தாகவும், நாட்டியம் பதினாறாவதாகவும் அமைகிறது. இவையிரண்டும் திருவிழாக் காலத்து வழிபாட்டிலும் இடம் பெறுகின்றன. தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கூத்துகள் பொதுவாக ‘சாந்திக்கூத்து’, ‘விநோதக்கூத்து’ என இருவகைகளாகப் பகுக்கப்பட்டது தெரிகிறது. இவ்விரு பிரிவுகளுக்குள்ளும் மேலும் சில உட்பிரிவு வகைகளும் உண்டு. சொக்கம், மெய், அவிநயம், நாடகம் என நால்வகையாகப்பட்டது சாந்திக்கூத்து எனவும்; குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என விநோதக்கூத்து ஆறு வகைகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றிற்கும் மேலாகச் சாக்கைக் கூத்து, ஆரியக்கூத்து, தமிழ்க்கூத்து போன்ற கூத்துக்களும் சோழர் காலத்தில் கோயில் விழாக்களில் இடம்பெற்றன.

கும்பகோணம் அருகில், மானம்பாடி எனும் சிறு கிராமத்தில் உள்ள ‘நாகநாத சுவாமி கோயில்’ என்ற பெயரில் அழைக்கப்படும் சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டு, இக்கோயிலில் சித்திரை மாதத் திருவிழாவில் தமிழ்க்கூத்து நடைபெற்றதைத் தெரிவிக்கிறது. முதலாம் இராஜேந்திர சோழர் காலத்தில் கையிலாயநாதர் கோயில் என்று அழைக்கப்பட்ட இக்கோயிலில் ஒன்பது கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன (Annual Report of Epigraphy 1931-32). நகரத்தார் என அழைக்கப்படும் வணிகர்கள் குலம் இக்கோயில் நிர்வாகத்தில் பங்கேற்றிருந்ததையும் கல்வெட்டுகள் குறிக்கிறது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவில், இறைவன் ‘திருவோலக்கம்’ என அழைக்கப்படும் கோயில் திருமண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்போது ‘விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றனான விருதராஜ பயங்கர ஆச்சாரியன்’ என்பவர் ‘தமிழ்க்கூத்து’ நடத்தினார் என்றும் இக்கூத்து இவ்விழாவில் 5 முறை நிகழ்த்தப்பெற்றதாகவும் கல்வெட்டு குறிக்கிறது. கோயில்களில் பலவகைக் கூத்துக்கள் நடைபெற்ற தகவல்கள் கிடைத்தாலும், தமிழ்க்கூத்து நடந்ததற்கான சான்றைத் தருவது முதலாம் குலோத்துங்க சோழரின் 18ம் ஆட்சியாண்டைக் குறிக்கும் இக்கல்வெட்டு (கல்வெட்டு எண். 3: ARE 90/1931-32, முதலாம் குலோத்துங்கசோழனின் 18ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகாலம்: கி.பி. 1088) மட்டுமே என்பது இக்கல்வெட்டின் தனிச் சிறப்புமாகும். கூத்தாடும் கூத்தருக்கு நிலம் (கூத்தாட்டு காணி) வழங்கப்படுவதும், அந்நிலம் மூலம் பயனுறும் கூத்து கட்டுபவர் கோயிலுக்காகக் கூத்து நடத்த வேண்டும் என்பதும் அக்கால வழக்கம். கூத்தாடுபவரின் சந்ததியினரும் தொடர்ந்து கூத்துக்கட்டி இறைச்சேவையைப் புரிவாரானால், அவர்களும் நிலத்தின் மூலம் பெறும் பயனைத் தொடர்ந்து அனுபவிக்க உரிமை கொடுக்கப்பெற்றார்கள்.

இக்கோயிலின் மற்றொரு கல்வெட்டு (கல்வெட்டு எண். 5 : ARE 93/1931-32 – முதலாம் குலோத்துங்கசோழனின் 36ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, காலம்: கி.பி.1106), பல ஊர்களைச் சேர்ந்த வணிகர்கள் (நகரத்தார்) குழுவினர், அரசாங்க வரி நீக்கப்பட்ட இறையிலி நிலத்தைத் தானமாக அளித்தனர் என்றும், அது சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் தொடங்கிய பின்னேழு நாட்களில் நடத்தப்பட்ட விழாவில் இறைவன் திருக்கயிலாயமுடையாருக்கு அமுது படைப்பதற்கான செலவுக்காகக் கொடுக்கப்பட்டது என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இவ்வூருக்கு வடக்கில் உள்ள நம்பி நங்கை என்றழைக்கப்பட்ட குளத்திலிருந்து நாளொன்றுக்கு 2000 செங்கழுநீர்ப் பூக்கள் வீதம் ஏழு நாட்களுக்கு (இச்சேவை முன் ஏழு நாட்களா அல்லது பின்னேழு நாட்களா என அறியக்கூடவில்லை) 14000 பூக்கள் பறித்து, கருவறையில் உள்ள மூலவருக்கும், நகருலா நாயகரான உற்சவ மூர்த்திக்கும் மலர் அலங்காரத்திற்கு (கோயிலின் பூந்தோட்டப் பூக்களை மலர்மாலைகளாகவும் சரங்களாகவும் தொடுத்து இறைவனுக்குச் சார்த்தும் பணி அல்லது ‘திருப்பள்ளி தாமம்’ செய்வதற்கு) வீரநாராயணபுரத்து நகரத்தார் தானமளித்தனர் என்பதையும் மற்றொரு கல்வெட்டு (கல்வெட்டு எண் 6: ARE 95/1931-32 – முதலாம் குலோத்துங்கசோழனின் 36ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, காலம்: கி.பி.1106) குறிப்பிடுகிறது.

மேலும் ஒரு கல்வெட்டு (கல்வெட்டு எண் 7 : ARE 91 / 1931-32 – முதலாம் குலோத்துங்கசோழனின் 38ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, காலம்: கி.பி.1108) சித்திரைத் திருவிழாவிற்கான அனைத்து நாட்களிலும் நடைபெறவுள்ள சிறப்புப் பூஜைகளுக்கும், இறைவன் திருவீதியுலா வரும் பொழுது பணி செய்யும் சிவனடியார்களுக்கும் இறைவனுக்கும் அமுது செய்விக்க நிலம் ஒன்று தானமாக வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இத்தானத்தை வழங்கியவர்கள் அணுக்க நம்பி, வாடிமங்கலமுடையான் வெண்காடு தேவர் திருச்சிற்றம்பலமுடையான், வெண்காடு தேவன் பொன்னம்பலக்கூத்தன், நம்மன் பும்மாண்டான், வெண்காடு சோழன், மற்றும் காறாயில் கயிலாயம் என்னும் ஆறு பேர் அடங்கிய வியாபாரிகள் குழு ஒன்றாகும்.

இன்னமும் ஒரு கல்வெட்டு (கல்வெட்டு எண் 8 : ARE 95 / 1931-32) சித்திரைத் திருவிழா செலவினங்களுக்காக வணிகர் நம்பன் சூரியதேவன் என்பவர் பொற்கழஞ்சுகளும் அளித்துள்ளார் என்பதைக் குறிப்பிடுகிறது. அது போல நெல் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலும் கல்வெட்டு வழி தெரிய வருகிறது. அதன்படி விழா வேலைகளில் பங்களித்த பணியாளர்களுக்கு அவர்களது உழைப்பிற்கு ஊதியமாக நெல் வழங்கப்பட்டதும் தெரிகிறது.

இவ்வாறாகச் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளுக்காகப் பொன்னையும், பொருளையும், நிலங்களையும் தானமாகப் பெற்று வரவு வைத்தும், அவற்றை முதலீடாகாக் கொண்டு அவற்றிலிருந்து கிடைக்கும் வட்டியில் திருவிழாவின் பற்பல செலவினங்களுக்கும் அளிக்கப்பட்டதையும் சோழர் காலக் கல்வெட்டுகளில் ஆவணப்படுத்தப் பட்டதால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ வளநாட்டில் எவ்வாறு சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டது என்றும் அத்திருவிழாவின் நிகழ்ச்சிகளைப்பற்றியும், அதற்கான செலவினங்கள் மூலமாகவும் அக்காலச் சித்திரைத் திருவிழா பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

சான்றுகள்:
[1] சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் – 4, மு. நளினி, http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1047

[2] தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து – 1 & 2, தொடர்: சிதையும் சிங்காரக் கோயில்கள், பால.பத்மநாபன்,
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1193
&
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1204 


நன்றி:  சிறகு
ஏப்ரல் 26, 2014

#சிறகு, #வரலாறு, #கல்வெட்டு, #செப்பேடு, #தொல்லியல், #Themozhi 


Saturday, April 12, 2014

தவிராத சுங்கத் தவிர்த்தோன்

தவிராத சுங்கத் தவிர்த்தோன்

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தருக்கு இலக்கியத்தில் ஒரு தனிச் சிறப்புண்டு. இவர் மூன்று சோழ அரசர்களின் (விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன்) அரசவைகளில்  அரசவைக்கவிஞராக இருக்கும் பேறு பெற்றவர். அப்பொழுது இவர் அம்மூவர் மீதும் ‘விக்கிரம சோழனுலா’, ‘குலோத்துங்க சோழனுலா’, ‘இராச ராச சோழனுலா’ என்று இயற்றிய உலாக்கள் “மூவருலா” என்று அழைக்கப்படுகிறது. இவர் இவ்வரசர்களைப் புகழ்ந்து பாடிய இம்மூவருலாப் பாடல்கள் கண்ணி வகையைச்சார்ந்தது. அதாவது இரண்டு கண்களைப் போன்று, இருவரிகள் கொண்டு அமைவதால் “கண்ணி” என்ற வகையில் அடங்குகிறது.

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் மூவருலாவில் இம்மூன்று மன்னர்களின் புகழையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அவ்வாறு பாடுகையில் அவர்களது முன்னோர்களான பிற சோழ மன்னர்களையும் போற்றிப்பாடி, இத்தகைய முன்னோர்களின் வழி வந்தவனே என்றும் பாடுகிறார். இவ்வாறு பாடும் பொழுது ஒவ்வொரு மன்னனின் உலாவிலும் 24 முதல் 27 வரை உள்ள கண்ணிகளை முதற்குலோத்துங்கனின் சிறப்பிற்காக ஒதுக்கியுள்ளார். அதிலும் அனைத்து உலாக்களிலும் அவற்றின் 26 ஆவது கண்ணிகள் முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்த செய்கையைப் பாராட்டும் வகையில் அமைந்துள்ளன.

விக்கிரம சோழனுலா:
… உடலை
இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை
மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி … (26)

குலோத்துங்க சோழனுலா:
…எங்கோன்
புவிராசராசர் மனுமுதலோர் நாளில்
தவிராத சுங்கத் தவிர்த்தோன் … (26)

இராச ராச சோழனுலா:
… நாடும்
கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி
உலகை முன்காத்த வுரவோன் … (26)

முதலாம் குலோத்துங்கன் “சுங்கம் தவிர்த்த சோழன்” என்ற சிறப்புப் பெயருடையவன் ஆவான். “சுங்கம் தவிர்த்து இருள் நீக்கி உலகாண்ட குலோத்துங்க சோழ தேவன்” எனக் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. கி.பி. 1194 கல்வெட்டு ஒன்று “சோழ நாட்டில் சுங்கம் வசூலிப்பதில்லை” (288 – 1907) என்று சுட்டுகிறது. சோழநாட்டில் நிலவரிகள் மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது. தஞ்சாவூரைச் சேர்ந்த கருந்திட்டைக்குடி (‘கரந்தட்டாங்குடி’ என்றும் சுருக்கமாக ‘கரந்தை’ என்றும் அழைக்கப்படுகிறது) ‘சுங்கம் தவிர்த்த சோழநல்லூர்’ எனப் பெயர் பெற்றது (374 – 1908).

நாட்டு மக்களின் வரிப்பளுவை உணர்ந்து, சோழர்களின் ஆதிகாலத்து மனுநீதிச் சோழன் காலம் முதல் பண்டு தொட்டு வசூலிக்கப்பட்டு வந்த சுங்கவரியை நீக்கியவன் குலோத்துங்கன் என்கிறார் ஒட்டக்கூத்தர். அதனால் சுங்க வரி நீக்கியதன் சிறப்பும் தெளிவாக விளக்கப்படுகிறது.

இந்த முதலாம் குலோத்துங்கனே சாளுக்கியச் சோழர்களில் முதன்மையானவன். ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழனுக்குத் தந்தை, இரண்டாம் குலோத்துங்கனுக்கு பாட்டன், இரண்டாம் இராசராச சோழனுக்கு கொள்ளுப்பாட்டன். இவர்கள் சோழ நாட்டை ஆண்ட காலங்கள் கீழ்க்காணுமாறு அமைகிறது.

குலோத்துங்க சோழன் I – கி.பி. 1070-1120
விக்கிரம சோழன் – கி.பி. 1118-1135
குலோத்துங்க சோழன் II – கி.பி. 1133-1150
இராசராச சோழன் II – கி.பி. 1146-1163

ஒட்டக்கூத்தர், விக்கிரமசோழன் காலத்தில் அவைப்புலவராக இருந்துள்ளார். தொடர்ந்து அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும், பிறகு அவனது  மகன் இராசராசன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். இம்மூவர் காலத்தைக் கி.பி. 1118-1163 வரை என்று வரலாறு குறிக்கிறது.

இவ்வாறு முதற் குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்ததற்குக் காரணம் என்ன? அவ்வாறு சுங்கம் தவிர்த்ததால் அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு எவ்வாறு ஈடுகட்டப்பட்டது என்பது வரலாற்றுச் சான்றுகளான, இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. சோழர் வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர்களான இராசமாணிக்கனார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆகியோரும் இப்பிரச்சினை குறித்துத் தெளிவுபடுத்தவில்லை. ஆதலால், இது பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினைத் தங்கள் ஆய்வின்படி முன் வைத்து வருகிறார்கள். இங்கு அவ்வாறு கூறப்பட்ட கருத்துக்களைப் பார்ப்போம். ஆராய்ச்சி முடிவுகள் அரசன் சோழ நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்ற காரணத்தையும் கருத்தில் கொள்வதால், இங்குக் குலோத்துங்கன் சோழ மன்னனான வரலாற்றையும் சுருக்கமாக விளக்க வேண்டிய அவசியம் நேரிடுகிறது.

குலோத்துங்கன் வேங்கி நாட்டுச் சாளுக்கிய அரசின் ஆண் வழித்தோன்றல். இவனது தந்தை இராசஇராச நரேந்திரன் என்பான், முதலாம் இராசஇராச சோழனின் மகள் குந்தவைக்கும், வேங்கி நாட்டை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும் பிறந்த மகன். இராசஇராச நரேந்திரன் தனது மாமன் முதலாம் இராசேந்திரனின் மகளான அம்மங்காதேவியை மணந்து கொண்டான். சோழ குலத்தோன்றல் அம்மங்கா தேவிக்கும், சாளுக்கிய இராசஇராச நரேந்திரந்திரனுக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். குலோத்துங்கன் என்ற பெயர் அவனது அரசாட்சிக்காகச் சூட்டப்பட்ட பெயர். பிறந்த பொழுது தாய்வழிப் பாட்டன் பெயரான இராசேந்திரன் என்னும் பெயரும், தந்தைவழி சாளுக்கிய அரச பெயராக விஷ்ணுவர்த்தன் என்ற பெயரும் பெற்றிருந்தான். இவனும் தனது தந்தையைப் போலவே, சோழகுலத் தோன்றலான தனது மாமன் இரண்டாம் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகியை மணந்து கொண்டான்.

முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பிறகு அவனுடைய மகன்கள் மூவர் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஆட்சி புரிந்தனர். அவ்வரிசையில் இறுதியாக வீர இராசேந்திரன் சோழன் அரசனானான். தந்தை வீர இராசேந்திர சோழன் மறைவுக்குப் பிறகு அரியணை ஏறிய அதிராசேந்திர சோழன் ஆட்சிக் காலம் மிகவும் குறுகியது. பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் மரணமடைந்தான். இவ்வாறு குறுகிய காலத்தில் அவன் மரணம் அடைய நேர்ந்ததன் காரணமாக இந்த மரணத்தில் சதி ஏதும் இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடு அக்காலத்திலும், இக்கால ஆராய்ச்சியாளர்களிடமும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

அதிராசேந்திர சோழன் இறப்பு பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும், அதிராசேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. குலோத்துங்கனின் எதிரியான மேலைச்சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தனின் அவைப்புலவர் ‘பில்கனர்’ என்பார் குலோத்துங்கன் அதிராசேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியைப் பிடித்தான் என்று கூறுகிறார். மற்றொரு கருத்தின்படி அக்காலத்தில் இருந்த சைவ வைணவக் கலவரம் தீவிரமடைந்ததால், அக்கலகத்திற்கும் அதிராசேந்திர சோழன் உயிரிழப்பிற்கும் ஏதோ தொடர்பிருக்கக்கூடும் என்ற ஐயமும் ஆராய்ச்சியாளர்களிடையே இருந்து வருகிறது. அத்துடன் அக்காலகட்டத்தில் துவங்கிய வலங்கை, இடங்கை படைத்தளங்களுக்குள்ளான சச்சரவுகளும் மன்னனின் மறைவிற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்ற ஐயமும் சிலவரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் இருக்கிறது.

காரணம் எவ்வாறாயிருப்பினும், முதலாம் இராசேந்திர சோழனின் அரசுரிமை கொண்ட மகன்களும், அவனது மகன் வழிப் பேரன்களும் ஒருவர் பின் ஒருவராய் இறந்துவிட, சோழ அரசுரிமை இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான முதலாம் குலோத்துங்கனிடம் சென்று சேர்ந்தது. அதன் பிறகு சாளுக்கிய வழி வந்த சோழனின் குலம் தொடர்ந்து ‘சாளுக்கியச் சோழர்கள்’ என்ற பெயருடன் சோழ நாட்டினை ஆண்டார்கள்.

இவ்வாறாகச் சோழ அரசுரிமையை மரபுக்கு முரணாக, தந்தை வழியில் வேங்கி நாட்டின் சாளுக்கிய மரபினையும், தாய் வழியில் சோழ மரபினையும் கொண்ட குலோத்துங்கன் பெற்றதற்கும், அவன் சுங்கம் தவிர்த்ததற்கும் ஏதேனும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து சொல்லி வருகிறார்கள். குலோத்துங்கன், தனது பதவியைக் காத்துக் கொள்வதற்குப் பற்பல உத்திகளைக் கையாண்டான் என்பது இவ்வாராய்ச்சிகளின் அடிப்படைக் கோணமாகும்.

குலோத்துங்கன், சோழ மக்கள் அரசுக்கு ஆண்டுதோறும் செலுத்திவந்த சுங்கம் நீக்கினான். இச்சுங்கம் ஏற்றுமதிப் பொருட்களுக்கு இடப்படும் தீர்வையாகும் என்று இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். சுங்கவரி இல்லாத நாட்டில் வாணிபம் பெருகும்; பொருள்கள் வந்து குவியும்; விலைகள் குறையும். இதனாலேயே அவன் இவ்வாறு செய்தான். சுங்கவரி நீக்கியதால் மக்கள் அவனை வாழ்த்திச் சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைத்தனர் என்பதும் ஒரு கருத்து.

குலோத்துங்கன் தனது அரசாட்சியை உறுதிப்படுத்த விரும்பி, கி.பி. 1085-86ஆம் ஆண்டில் உள்நாட்டில் வணிக நடவடிக்கைகளுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் விதமாகச் சுங்கவரியை நீக்கி ஆணையிட்டான். இதன் காரணமாக வணிகர் – வேளாளர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்கு அரண்களாக மாறினர் என்று என். சேதுராமன் கூறுகிறார்.

சோழநாட்டின் வலங்கை மகா சேனை மற்றும் இடங்கை மகா சேனை என இருந்து வந்த இரு படைக்குழுவினருக்குள்ளும், அவர்கள் சார்ந்திருந்த சாதிப்பிரிவுக்கும் இடையில் கலகம் ஏற்படுத்தி, அந்தக் கலகத்தின் காரணமாக, அதிராசேந்திர சோழன் மரணத்தைத் தழுவச் செய்து குலோத்துங்கனுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் வணிகர்கள். அந்த வணிகர்களுக்குப் பிரதிபலனாக உதவும் வகையில் சுங்கவரி நீக்கி சலுகை அளித்தான் என்று ஆய்வாளர் திரு. தி. நா. சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

மரபுக்கு முரணாகச் சோழ அரச பட்டத்தைக் கைப்பற்றிய முதற் குலோத்துங்கன், தனது பதவியைக் காத்துக் கொள்வதற்குப் பலவித உத்திகளைக் கையாண்டான். அரசகுலப் படைகளல்லாத, குடி படைகள் எனத்தக்க சமூகத்தவர் பலரின் நிலையையும் அதிகாரத்தையும் உயர்த்தியது அத்தகைய உத்திகளுள் ஒன்று. இது தென்னிந்தியச் சமூக அமைப்பில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திற்று என்று ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் குறிப்பிடுகிறார்.

சோழ குடும்பத்திற்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள் வலங்கை மகா சேனை படைவீரர்கள். இந்த அரசகுலப் படையின் அதிகாரத்தைக் குறைக்கும் வழியாகவும், அதே சமயம் வணிகர்களுக்குச் சலுகை தரும் விதமாகவும் எடுக்கப்பட்ட முடிவு சுங்க வரி நீக்குதல் என்கிறார் எஸ். இராமச்சந்திரன். இவ்வாறு குலோத்துங்கன் எடுத்த முடிவு, குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெற்ற வலங்கை இடங்கைப் பூசல்களுக்கும் இதுவே காரணமாகி இருக்கலாம் என்பதும் இவர் முடிவு.

வணிகர்களுக்குப் பாதுகாப்புப் படையாகச் செயல்பட்டுவந்த அரச குலப்படைகளைக் கலைத்துவிட்டோ, அவ்வீரர்களை வணிகர்களிடமிருந்து ஊதியம் பெறுகின்ற படைகளாக மாற்றி ஆணையிட்டோ, அரச குலப் படைகளின் மானிய நிலங்களை அரசர்களிடமிருந்து கையகப்படுத்தியோ, ஏதோ ஒரு வகையில் வணிகர்களின் பாதுகாப்புப் பொறுப்புக்காக அரசு ஏற்றிருந்த செலவினங்களைக் குலோத்துங்க சோழன் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கக்கூடும் என்கிறார் இவர்.

சோழர்காலத்தில் வணிகர்களிடம் வரி வசூலித்து, அந்த வருவாயில் படை அமைத்து, கடல் கடந்து வணிகம் செய்யும் வணிகர்களுக்கு சோழப்படை பாதுகாப்பு அளித்து வந்தது. முதலாம் இராசேந்திரனின் கடல் கடந்த படையெடுப்புகளின் நோக்கமும் அதுவே. கடற் கொள்ளையர்களிடம் இருந்து வணிகர்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்கும், பலநாடுகளுடன் வணிக உறவை மேம்படுத்தச் சோழ படைகள் உதவின. இவ்வாறு வணிகத்தை மேம்படுத்தும் பொருட்டு வணிகர்களிடம் வரி வசூலித்து, அதைப் பயன்படுத்தி அதன் வழியாகப் படைவீரர்கள் கொண்டு பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக, வணிகர்களின் வரியை நீக்கிவிட்டால் அந்தத் தொகையில் அவர்களே பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும், அத்துடன் அரச படைகளின் அதிகாரத்தையும் குறைக்கும் வழியாகவும் குலோத்துங்கனின் சுங்கம் தவிர்த்த நடவடிக்கை இருந்திருக்கும் என்பது எஸ். இராமச்சந்திரன் அவர்களது கருத்து. இவ்வாறு சுங்க வரி வசூல் செய்வதன் மூலம் ஈடுசெய்யப்பட்டு வந்த ஒரு செலவினம் இப்போது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டதால் சுங்க வரி வசூல் செய்வது தேவையற்ற ஒன்றாக ஆகிவிட்டது என்கிறார் இந்த ஆய்வாளர்.


சான்றுகள்:
[1] “முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்தது ஏன்?”, எஸ். இராமச்சந்திரன், (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்) ‘கல்வெட்டு’ – காலாண்டிதழ் – இதழ் 75 – அக்டோபர் 2008. பக்கங்கள் 28-31. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 600 008. (http://m.sishri.org/msungam.html & http://www.subaonline.net/thfebooks/THFkalvettu42008oct.pdf)

[2] “வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்,” எஸ். இராமச்சந்திரன், (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்). பதிப்பு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113, 2004.

[3] The Cholas, N.Sethuraman; பக்கம் 107, “முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்தது ஏன்?”, எஸ். இராமச்சந்திரன், ‘கல்வெட்டு’ – காலாண்டிதழ் -இதழ் 75 – அக். 2008. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 8. (பார்க்க: http://www.sishri.org/sungam.html)

[4] திரு. தி. நா. சுப்பிரமணியம் தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள், மூன்று பாகங்கள் II சரித்திரக்குறிப்புகள், பக்கங்கள் 87-101 G O M L 1957

[5] சோழர் வரலாறு, டாக்டர் மா. இராசமாணிக்கனார், பக்கம் 273

[6] இராமானுசர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் – வரலாறா? கற்பனையா?, எஸ். இராமச்சந்திரன், http://www.sishri.org/ramanuja.html

[7] 5.5 முதலாம் குலோத்துங்கன் பரம்பரை, http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312555.htm

[8] முதலாம் குலோத்துங்க சோழன், https://ta.wikipedia.org/s/23o 

நன்றி:  சிறகு
ஏப்ரல் 12, 2014

#சிறகு, #வரலாறு, #இலக்கியம், #Themozhi


Saturday, March 22, 2014

நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தாலப்பருவம்

நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தாலப்பருவம்


குழந்தையைத் தாலாட்டித் தூங்கவைக்கும் பாடல்கள் தமிழகத்திற்குப் புதிதல்ல. தொல்காப்பியத்திலும் கடவுளைக் குழந்தையாகக் கருதிப் பாடிய பாடல்களை 'தொல்காப்பியம் புறத்திணையியல்' பகுதி குறிப்பிடுகிறது.

தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கியப் பிரிவில் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று பிள்ளைத்தமிழ். அதில் புலவர்கள் தங்கள் புரவலர்களை, அரசர்களை, கடவுளைப் பிள்ளையாகக் கற்பனை செய்து பாடுவார்கள். குழந்தையின் வளர்ச்சியில் மூன்றாம் மாதம் முதல் இருபத்தியொன்றாம் மாதம் வரையில் உள்ள வளர்ச்சியின் காலகட்டத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் மரபு. அப்பாடல்களில் பாட்டுடைத்தலைவனின் சிறப்புகளைப் பாடல் வழியே உரைப்பதும் பிள்ளைத்தமிழின் இன்றியமையாத இலக்கணம் ஆகும். ஆண், பெண் என இரு பாலருக்கும் பத்துப் பருவங்களுக்கும் பாடல்கள் புனையப்படும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் இறுதி மூன்று பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேர் பருவங்களுக்குப் பதிலாகப் பெரும்பாலும் நீராடல் அல்லது கழங்கு, அம்மானை, ஊசல் எனும் பருவங்கள் பாடப்பெறும்.

மூன்றாம் பருவமாக வரும் தாலப்பருவம் என்னும் தாலாட்டுப் பருவம் குழந்தையின் ஏழாம் மாதம் பாடப்படும். பிள்ளைத்தமிழ் இலக்கியம் போன்று குழந்தையைத் தாலாட்டுப்பாடித் தூங்கவைக்கும் தாலாட்டுப்பாடல்கள் தனிச் சிற்றிலக்கியமாகவும், நாட்டுப்புறப் பாடல்களாகவும், ஏன் இன்றுவரை திரையிசைப் பாடல்கள் வரை தொடர்ந்து எங்கும் பரவியிருக்கிறது.

குழந்தையைத் தூங்க வைக்கும் பொருட்டு பாடப்படும் தாலாட்டுப் பாடல்களின் மூலமாகப் பல கதைகளும் செய்திகளும், குழந்தைக்குக் கூறுவது போலப் பகிர்ந்து கொள்ளப்படும். குழந்தைக்குப் பாடலின் பொருள் ஒன்றும் புரியாவிட்டாலும், தாயின் அன்பு நிறைந்த குரலில் வரும் பாடலின் இசையில் மூழ்கி அமைதியாகத் தூங்கிவிடும். குழந்தைக்குத் தேவையில்லாத செய்திகளைப் பாடல் வழியாகச் சொல்வதில் என்ன பயன்? பெரும்பாலும் ஒரு தாய் தனது குழந்தைக்குக் கூற விரும்பும் செய்திகளைத் தாலாட்டுப் பாடல் வழி சொல்கிறாள். அதில் தனது சொந்தக் கதை, தான் பிறந்து வளர்ந்த கதை, தனது சகோதரன் அல்லது அக்குழந்தையின் தாய்மாமனின் அன்பு, தனது கணவன் அல்லது அக்குழந்தையின் தகப்பனின் பெருமை, உற்றார் உறவினரின் பரிவு எனப் பல செய்திகளை மட்டும் நாட்டுப்புறப் பாடல்களில் வரும் தாலாட்டுப் பாடல்கள் வழி நாம் அறிந்து கொள்வதில்லை. இவற்றிற்கும் மேலாகவும், பற்பல செய்திகளைத் தன்னகத்தே கொண்டு இலக்கியக் காலக் கண்ணாடியாக நாட்டார் இலக்கியத் தாலாட்டுப் பாடல்கள் வழங்கும் பிற தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்நாளில் நமக்கு மீண்டும் நாட்டுப்புறப் பாடல்களில் வரும் இனிமை மிகு தாலாட்டுப் பாடலை எதிர்பாராவிதமாகச் சந்திக்க வைத்தது விளம்பரதாரர் வழங்கிய விளம்பரம் ஒன்று. புதுக்கோட்டைத் துணை இயக்குநர் அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரியும் கவிஞர் ஜீவி (https://www.facebook.com/geevee.kavi) என்கிற ஜி.வெங்கட்ராமன் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் தாலாட்டுப் பாடலை எழுதியவர். அப்பாடல் கேட்கும் அனைவருக்கும் இனிய நினைவலைகளைக் கிளப்பிவிடும் பாடல்….

     ஏ….ஆராரோ ஆரிரரோ……
     எங்கண்ணே ஆராரோ ஆரிரரோ……
     குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே…..
     சரிந்து படுத்திருக்கும் செண்பகமே கண் உறங்கு. (ஆஆ….)

     நிலவே தூங்கும் வேள…நீயேன் தூங்கவில்லை
     நிலவே தூங்கும் வேள…நீயேன் தூங்கவில்லை
     ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு….. (ஆஆ…..)
     ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு
            காணொளி: http://www.youtube.com/watch?v=AmjQoYvGzBQ

உறவுகளின் பெருமை:
இதே சாயலில் நாம் பல நாட்டுப்புறப்பாடல்களை அறிவோம். தமிழக மக்கள் அனைவரும் அறிந்திருக்கும் பாடலில் ஒன்று “யார் அடித்தார் கண்ணே உன்னை” என்ற பொருளில் வரும்.

     ஆராரோ ஆராரோ – கண்ணேநீ
     ஆரிரரோ ஆராரோ
     ஆரடித்தார் நீஅழுக கண்ணே உன்னை
     அடித்தவரைச் சொல்லிஅழு
     மாமன் உன்னை அடித்தாரோ – கண்ணே உன்னை
     மல்லிகைப்பூச் செண்டாலே?

என்ற பாடலை அறியாதவர் இருக்க முடியாது. அப்பாடலில் குழந்தையின் அன்பு நிறை உறவுகள் யாவரையும் ஒவ்வொருவராகச் சொல்லி அவர்களா உன்னை அடித்தார்கள், ஏன் அழுகிறாய் கண்ணே காரணம் சொல்லி அழு என்று, பாடல் வரிகளில் ஒவ்வொரு உறவாக அறிமுகப்படுத்தப்படும். அவர்கள் குழந்தை மேல் கொண்டிருக்கும் அன்பும் அதன் ஊடே ஊடாடிச் செல்லம் வகையில் உரைக்கப்படும். பாட்டி உன்னை அடித்தாளோ தனது பால் ஊற்றும் கையாலே? தனது நெய் ஊற்றும் கையாலே? என்பதில் பாட்டியின் பாசம் காண்பிக்கப்படுகிறது. அது போலவே அக்காள் அடித்தாளோ, மச்சான் அடித்தானோ, அண்ணன் உன்னை அடித்தானோ, ஆத்தாள் உன்னை அடித்தாளோ என்று அனைத்து உறவுகள் பற்றியும் தொடர்ந்து வரும்.

தாயன்பு:
தாய் தனது குழந்தையின் மீது கொண்ட அன்பும், தனது குழந்தையே அழகில் சிறந்த குழந்தை என்று எண்ணும் அவளது எண்ணம் வெளிப்படும் தாலாட்டுப் பாடலும் உண்டு.

தகப்பன் மீன் பிடிக்கச் செல்ல, அயிரைமீன், ஆரல்மீன், வாளைமீன், வழலைமீன், கெண்டைமீன், கெளுத்திமீன், குரவைமீன், பரவைமீன் எனப்பலப் பலவகை மீன்களும் கிடைக்கிறதாம் தந்தைக்கு. தாய் அவற்றை அயலூர் சந்தையில் விற்று, அரைச் சவரனுக்குத் தங்க நகை செய்து போட்டாளாம் மகளுக்கு. அரைச் சவரனுக்குத்  தங்க நகை செய்து போட்டேன் கண்ணே உனக்கு, உன் அழகைக்காண அனைவரும் வியந்து கூடினர் என்று தாலாட்டுப் பாடுகிறாள்.

     அத்தைமாரும் அண்ணிமாரும் – கண்ணே உன்
     அழகைப்பார்த்து அரண்டார்களே
     அரண்மனையார் ஓடிவந்து – கண்ணே உன்னை
     அதிசயமா பார்த்தார்களே
     ஆராய்ச்சி மணியடித்து – கண்ணே உன்னை
     அயலூராரே பார்த்தார்களே.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? இப்பாடல் காட்டும் தாயன்பு அருமையானது.

தந்தையின் பெருமை:
தாலாட்டின் வழியாகக் குழந்தையின் தந்தையின் பெருமையைக் குழந்தைக்கு எடுத்துரைக்கும் பாடலும் உண்டு நாட்டார் இலக்கியத்தில்.

தந்தை ஒருவன் சரிகை சட்டை, தலைப்பாகை அணிந்து பொட்டிட்டு தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, சாரட்டு வண்டிகட்டி சலங்கை போட்ட மாடுகட்டி ஊர்ப்பயணம் போகிறான். பதுங்கித் தாக்க வந்த பகையாளியைப் பட்டாக்கத்தி வீசித் துரத்தியடித்த பெருமை சொல்லப்படுகிறது ஒரு தாலாட்டுப் பாடல் வழியாக.

     கோயம்புத்தூர் போறாரு – உங்கப்பன்
     கோழிகூப்பிடும் நேரத்திலே
     பகையாளி பதுங்கிநிற்க – உங்கப்பன்
     பார்க்காமல் போகையிலே
     பறந்துபாய்ந்தான் பகையாளி – உங்கப்பன்
     பம்மினாரு பயமில்லாமே
     பட்டாக்கத்தி வீசையிலே கண்ணே அவன்
     பஸ்பமானான் பகையாளி.

இந்த அன்னை தனது குழந்தைக்குத் தகப்பனின் பெருமையை உரைக்கிறாளா அல்லது தனது கணவனின் வீரத்தை எண்ணி அகமகிழ இப்பாடலைப் பாடினாளா என்பது பிரித்துக் காணமுடியாத கருத்தாக்கம்.


நன்றி:  சிறகு
மார்ச் 22, 2014

#நாட்டாரியல், #சிறகு
 

Saturday, March 8, 2014

டவுன் வித் அப்ஸ்கர்ட் பிக்ச்சர்ஸ்

டவுன் வித் அப்ஸ்கர்ட் பிக்ச்சர்ஸ்


மேடையில் பரதநாட்டியம் ஆடிய அந்த மாணவி மெய் மறந்து, கலையுடன் தன்னை இணைத்துக் கொண்டு பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அது அந்தப் பல்கலைக் கழகத்தின் முதுகலை மாணவ மாணவியரின் பிரிவுபச்சார விழா. அவளும் இறுதியாண்டில் பயிலும் மாணவிதான். ஆடிக்கொண்டிருக்கும் மாணவியை அதன் பிறகு அந்தக் கல்லூரி வளாகத்தில் பார்ப்பதென்பதே அரிதாகிவிடும். அவள் எங்குப் போவாளோ, மேற்கொண்டு படிப்பாளோ, பணியில் அமர்வாளோ, கலைப்பயணத்தைத் தொடர்வாளோ என்பது போன்ற கேள்விகள் அவள் ஆடிய விதத்தைக் கண்ட பொழுது மனதில் எழுந்தது. அந்த விழாவில் அந்தத்துறையைச் சார்ந்த அனைவருமே பங்கு பெற்றனர். மூத்த மாணாக்கர்கள், இளைய மாணாக்கர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் ஊழியர்கள் யாவரும் நடனத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அவள் வகுப்பில் படிக்கும் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட உடன் பயிலும் மாணவன் ஒருவன் அவர்கள் வகுப்பு நிகழ்ச்சிகளை, விழா நடனங்களை, உல்லாசப் பயணங்களை உற்சாகமாகப் படம் பிடிப்பான். படங்களை வேண்டுபவருக்கும் பிரதி எடுத்து வழங்குவான். அன்றும் வழக்கம் போலவே புகைப்படம் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தனது வகுப்புத் தோழியின் நடனத்தைப் பல கோணங்களிலும் ஓடி ஓடிப் படம் பிடித்தான். திடீரென யாரும் எதிர்பாரா வண்ணம் நடனமாடியவளின் முந்தானை இருக்க வேண்டிய இடத்தை விட்டு நெகிழ்ந்து நழுவியது, அவள் அணிந்திருந்த சோளி, அவளது மார்பு சேலையினால் சரிவர மறைக்கப்படாமல் போனது.

ஆண்களும் பெண்களும் கலந்து இருந்த அவையில் அவ்வாறு நிகழ்ந்ததும் பெண்கள் அனைவருக்கும் சங்கடமானது. கூச்ச உணர்வில் நெளிந்தனர். நடனமாடிய மாணவிக்கு இது தெரியவில்லையா அல்லது நடனத்தில் இருந்த தீவிர ஈடுபாட்டில் அதனைப் பொருட்படுத்தவில்லையா என்றும் புரியவில்லை. அவளது வகுப்புத் தோழன் அத்துடன் மேற்கொண்டு படம் பிடிப்பதை நிறுத்தினான். கேமேராவின் லென்ஸ் கவரைப் போட்டு மூடிக் கொண்டே தனது இடத்திற்குத் திரும்பிவிட்டான். அவனது அந்தச் செய்கை மனதை விட்டு அகலாமல் கால் நூற்றாண்டு ஆகியும் நினைவில் தங்கி அவன் மீது அளவு கடந்த மதிப்பைத் தந்த வண்ணம் இருக்கிறது. இது ஓர் உண்மை நிகழ்ச்சியே.

அன்று பெண்கள் மதிப்பில் மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்தான் அவன். அவன் தொடர்ந்து படம் எடுப்பது தவறா இல்லையா? அதில் என்ன தவறு? என்பது ஒவ்வொருவர் கோணத்திலும் வேறுபடலாம். ஆனால் அவன் செய்த செய்கையை அறிந்தால் அவனது தாய் மிகவும் பெருமைப் பட்டிருப்பார். சகோதரிகள் (இருந்திருந்தால்) அவர்களும் மகிழ்ந்திருப்பர். அதுவரை அவனுடன் படித்த அவனது வகுப்புத் தோழியரான மாணவிகளும், ஆசிரியைகளும் அவனை மனதிற்குள் பாராட்டியிருப்பார்கள் என்பதை அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அத்துறை மாணவியர் அவன் பண்பாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய பொழுது தெரிந்தது.

இது பண்பாட்டிற்கு, பெண்களை மதிக்கும் பண்பிற்கு நல்லதோர் சான்று. ஆனால் நாம் வாழும் உலகில் இருப்பவர் அனைவருமே இந்த மாணவனைப் போன்றவர்களாக இல்லாதிருப்பதே பெண்களுக்குத் துயரம் தரும் விதமாக அமைந்துவிடுகிறது.



இந்நாட்களில் படம்பிடிக்கும் கருவியுடன் கைப்பேசி வந்ததும், பெண்கள் அறியாவண்ணம் அவர்கள் மீது நிகழ்த்தும் அத்துமீறல்கள் அதிகமாகிவிட்டன. அனுமதியின்றி யாரையும் படம் எடுப்பது தவறு. அது தனிமனித உரிமை மீறல். பொது இடங்களில் பெண்கள் கவனிக்காத பொழுது, அவர்கள் குனிந்து நிமிரும் பொழுதும், அரக்கப் பரக்க அவசர அவசரமாக ஓடும்பொழுதும், பேருந்துகளில் அமர்ந்திருக்கும் பொழுது நின்றவண்ணம் மேலிருந்து பார்த்துத் தங்களுக்குக் கிடைக்கும் கோணத்தில் அவர்களது மார்பு, பின்புறம், இடை என  அவர்களது உடல் உறுப்புக் காட்சிகளைப் படம் பிடித்து வைத்துக் கொள்வதும், அதை இணையத்தில் பரப்புவதும் விரைவில் வெகுவாகப் பரவிவிட்டது. அது போலவே நம்பிக்கைக்குரிய தோழர்களாக இருந்த பொழுது எடுத்த படங்களை நட்பு முறிந்தவுடன் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதும், பெண்கள் தங்கள் காதல் துணையுடன் தனிமையில் இருக்கும் நிகழ்வுகளையும், குளிக்கும் அறையில் ஆடையற்று உள்ள நிலைகளையும் காணொளியாக எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்தே அவர்களை மிரட்டி அலைக்கழிப்பதும், தன்னிச்சையைத் தீர்த்துக் கொள்வதும் தொழில்நுட்பம் வந்தபிறகு அதன் மூலம் பெண்கள் மீது நிகழ்த்தும் புதிய வகை வன்முறையாக மாறியுள்ளது.

தானே வலிய விரும்பி அரைகுறை ஆடையுடன் அலையும் பெண்களையும், அது போன்ற ஆபாசக் கோணங்களில் தங்களைப் படம் எடுத்துக் கொள்ள விரும்பும் பெண்களையும் இணைத்து இங்குக் குழப்புவது நிலைமையின் தீவிரத்தை, கண்டனத்திற்குரிய செய்கையை மட்டுப்படுத்தி நீர்த்துப் போகும் என்பதால், அதனைத் தவிர்ப்போம். பெண்களே ஆபாசமாக அலையும் பொழுது அப்படித்தான் படம் எடுக்க விரும்புவார்கள் என்று கூறுவது பிரச்சனையைத் திசை திருப்ப விரும்பும் விதண்டாவாதம். கண்ணியத்தைக் கடைப்பிடிக்க விரும்புபவர்கள் இது போன்ற வாதங்களைத் தவிர்க்க வேண்டும். யாரும் எப்படியும் இருந்தாலும் நான் ஒழுக்க நெறியைப் பின்பற்றுவேன் என்பதுதான் பண்பாடாக இருக்க வேண்டுமே அல்லாமல், வீடு திறந்து இருந்தால் திருடுவதில் என்ன தவறு என்று கேட்பது ஒழுக்கத்தில் அடங்காது. கள்ளத்தனத்தில் அடங்கும். இது போன்ற நோக்கம் கொண்டு விவாதிப்பவர்களால் குற்றவாளிகளும் தப்பிப்பது எளிதாகிவிடும். பெண்களையும் சிறுமிகளையும், அவர்களது அனுமதியின்றி, அதுவும் அவர்கள் விரும்பத்தகாதவகையில் படம் பிடித்து மகிழும் கீழ்த்தர எண்ணம் கொண்டவர்களைக் கண்டிப்பது ஒன்றே இங்கு நமது நோக்கம்.

என்றோ உருவாக்கிய சட்டம் தற்காலக் குற்றத்தைத் தண்டிக்க இயலாத வகையில் அதில் ஓட்டைகளுடன் குற்றவாளிகளைத் தப்பவிட நேர்ந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியை நிலைநிறுத்த ஒத்துழைக்காவிட்டால், அதனை நாம் அன்றே மாற்றவேண்டும். இக்கருத்தை வலியுறுத்த இவ்வார நிகழ்ச்சி ஒன்றினைச் சான்றாக முன் வைக்கிறேன். இந்நிகழ்ச்சி, மேலை நாட்டினர் என்றாலே பண்பாட்டில் குறைந்தவர்கள், கலாச்சாரமற்றவர்கள், பெண்களைப் போகப்பொருளாக மதிப்பவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நம் பாரத மக்களின் அறியாமையைக் கண்களைத் திறக்கும்.

பெண்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் செயலைச் செய்து அற்ப மகிழ்ச்சி அடையும் ஆண்கள், இன்று நேற்றல்ல, பல காலமாக இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அவர்களை ‘பீப்பிங் டாம்’ (Peeping Tom) என்ற அடைமொழியிட்டு அழைப்பார்கள். அத்துடன் பொது இடங்களில் இருக்கும் பெண்களின் ஆடைக்குள் காமெராவை நுழைத்து அவர்களது உள்ளாடையை, பிறப்புறுப்பை இக்கயவர்கள் எடுக்கும் படங்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ (upskirt photos) என்று அழைப்பார்கள்.

மார்ச் 5, 2014 அன்று அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் அவ்வாறு பெண்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ பிடித்த தடியன் ஒருவனை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அம்மாநிலத்தின் சட்டப்படி முடிவெடுக்க வேண்டுமானால், அவன் செய்ததில் தவறில்லை என்ற தீர்ப்பை எழுதும் நிலைக்கு நீதிபதிகள் உள்ளானார்கள். அம்மாநிலத்தின் ‘பீப்பிங் டாம்’ சட்டப்படி ஒரு பெண் தனியிடமான ஆடைமாற்றும் அறையிலோ, குளியலறையிலோ, அவள் ஆடையற்று அல்லது அரைகுறை ஆடையுடன் இருக்கும் பொழுது படம் எடுப்பதையே சட்டப்படித் தண்டிக்க முடியும். ஆனால் நிர்வாண நிலையில் இல்லாமல், உடல் முழுவதும் மறைக்கும் ஆடை அணிந்து, பொது இடத்தில் உள்ள பெண்ணை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுப்பதைத் தண்டிக்கச் சட்டத்தில் வழியில்லை என்று கூறியது அம்மாநில உயர்நீதிமன்றம்.

இத்தீர்ப்பால் கொதித்தெழுந்த அம்மாநில மக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மறுநாளே பெண்களை அவமதித்து இவ்வாறு ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுத்து அவர்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்யும் நிலையைப் போக்க வேண்டும் என்று அறிவித்ததுடன், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டரை ஆண்டுகளிலிருந்து பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 டாலர்கள் வரை அபராதமும் கட்ட வேண்டும் என்ற சட்டமியற்றி அதனை நடைமுறைப்படுத்தவும் வழி செய்துவிட்டனர். முதல்நாள் குற்றமற்றவன் என்று கருதப்பட்டவன், மறுநாளே மாற்றி எழுதப்பட்ட சட்டத்தினால் குற்றவாளியாகித் தண்டனை அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான். அம்மாநிலப் பெண்களுக்கு இது இந்த ஆண்டிற்கான சிறந்த “உலக மகளிர் தினப்பரிசு” என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

உலகில் பல நாடுகளில் இவ்வாறு தனி மனித உரிமைக்கு ஊறு விளைவிக்கும் செயலைத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் எனச் சட்டமியற்றப் பட்டாகிவிட்டது, அதில் இந்தியாவும் அடங்கும். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66இ பிரிவுப்படி (under section 66E, of the Information Technology Act) இது போன்ற செயல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் பெண்கள் முன்னைவிட எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எதையும், யாரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து எச்சரிக்கையாக இருப்பது இன்றியமையாததாகிறது. ஸ்கைப் போன்ற காணொளி வழி அலுவலகத் தொழிலின் காரணமாகக் கலந்துரையாடல் நடக்கும் பொழுது, ஆண்கள் பெண்களுடன் உரையாடுவதைச் சாக்காக்கிக் கொண்டு அவர்களை மார்புவரை காமெரா கோணத்தை வைக்கச் சொல்லும் பொழுது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ஆண் ஒரு முதியோராக இருந்தாலும் கூட இந்த அறிவுரை பொருந்தும். பெரும்பாலும் வயோதிக ஆண் என்றால், தங்கள் தந்தை வயது உள்ளவர் என்று அன்புடனும் பாசத்துடனும் அவர்களை நினைப்பது பெண்களின் வழக்கம். ஆனால் பல முதியோர்களும் வல்லூறுகள் போலவே நடந்து கொள்வார்கள் என்பதையும், தனது ஒத்த வயது தோழர்களிடம் கூட எதிர்பார்க்க இயலாத முறையற்ற செயல்களுக்கும் அம்முதியோர்கள் துணிந்தவர்கள் என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும். யாரையும் நம்பக்கூடாது என்பதே பெண்கள் முதலில் படிக்க வேண்டிய அரிச்சுவடிப் பாடம். தாங்கள் அறிந்த பெண்களையும், தங்களுடைய மகள்களையும் இதனை நினைவுபடுத்தி நல்வழி காட்டவேண்டியது இன்றைய தாய்க்குலச் சக்திகளின் கடமை.


நன்றி: வல்லமை 
மார்ச் 8, 2014


#வல்லமை,  #பெண்ணியம், #Themozhi  


புகுமுக (புகாமுக) வகுப்புகள்

புகுமுக (புகாமுக) வகுப்புகள்


பெண்களின் உயர்கல்விக்காக, அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ‘தாலிக்குத் தங்கம்’ மற்றும் ‘திருமண நிதி உதவி’ திட்டங்கள் தற்காலத் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளன. ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்னர், இது போன்று பொருளுதவி வழங்கி ஊக்குவிக்கும் முயற்சி இல்லாமலேயே பெண்கள் உயர் கல்வி பெற்று முன்னேற ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அதனை வழங்கியது ஒரு கல்விமுறை மறுசீரமைப்பாகும். அந்த வாய்ப்பினைச் செவ்வனே பயன்படுத்தி பெரும்பான்மையான மகளிர் உயர்கல்வி முடித்து, பணிபுரிந்து, தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தங்களது சந்ததியினரையும் முன்னேற்றிக் கொள்ள வாய்ப்பு கிட்டியதை இந்த உலக மகளிர்தின நாளில் திரும்பிப் பார்க்க விரும்புகிறேன்.

இந்த நூற்றாண்டில் உயர் கல்விக்குத் தடை என்றால், ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமின்றி அது பொருளாதாரம் ஏற்படுத்திய இடையூறாக இருக்கிறது. ஆனால் சென்ற நூற்றாண்டில் இருந்த காரணங்கள் வேறு. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்கள் எதிர் கொண்ட தடைகள் வெவ்வேறு. சிலதடைகள் ஆண் பெண் இருவருக்கும் பொது. சில பெண்களுக்கே உரித்தானது. அவையாவும் பெண் கல்விக்கு அளிக்கப்படாத முக்கியத்துவம் என்ற ஒரு பொது வகையில் அடங்கிவிடும்.

ஒருவகையில், பெண்கல்விக்கு என்ன தேவை என்ற அலட்சிய மனப்பான்மை சமூகத்தில் ஊறியிருந்தது. மற்றொரு வகை மனப்பான்மையில் பெண்கள் தேர்ச்சி பெறுவதில் தோல்வியடைந்தால் அதனைக் கையாளும் முறையில் அமைந்தது. தேர்வில் தேர்ச்சி பெறுவது தடையாகத் தோன்றிய பொழுது அது வேறு வேறு விளைவுகளை ஆண் பெண் இருபாலருக்கும் வழங்கியது.

ஆண் தேர்வில் தவறினால் அது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று முயன்று ஆண்பிள்ளைகளைப் பெற்றோர் நெருக்கடி கொடுத்துப் படிப்பை முடிக்க வைத்தனர், உயர் கல்வி கற்க வைத்தனர். ஆனால் அதுவே பெண் தேர்வில் தவறினால், சரி இதற்கு மேல் உனக்குப் படிப்பு ஏறாது போலிருக்கிறது, உனக்குத் திருமணம் செய்து வைத்து என் கடமையை முடித்துக் கொள்கிறேன் என்று கையைக் கழுவிவிடும் நிலைமையில் முடிந்தது. ஆனால் இதன் விளைவென்னவோ பெண்களுக்கு அடிப்படை பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் தடைப்பட்டதில்தான் முடிந்தது.

ஒரு தொண்ணூறு ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்தால், பெண்களின் கல்வி நிலை இருந்த அவலநிலையை பாரதி போன்றோர் பாடிச் சென்றுவிட்டனர்.

     “ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
     எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
     வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
     விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”
என்று அவரால் இவ்வாறு ‘கற்பனையில்’ மட்டுமே பாடிடும் நிலை இருந்த காலமது. ஆனால் இன்று அது உண்மையாகிவிட்டது. அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களோ ஏராளம்.

ஓர் அறுபது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால், பெண்களுக்கு அன்று 1950 களின் மத்தியில் இருந்த தடைகள் சமுதாய மனப்பான்மையின் அடிப்படையிலானதும், உயர் கல்விக்கு ஆதரவான சரியான கட்டமைப்புகளும் இல்லாமல் இருந்திருப்பதும் தெரிய வரும். சில சமயங்களில், உயர் கல்வி மட்டுமல்ல, இவை பள்ளிப் படிப்பையே தடை செய்த சூழல்களாகவும் அமைந்தன.

பெண்கள் குடும்ப வாழ்க்கைக்குத் தயாரானதும், வயதுக்கு வந்துவிட்டாள், இனி குடும்பம் நடத்தத் தேவையான சமையல் கலை மற்றும் குடும்பப் பொறுப்பில்தான் கவனம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த உடல் வளர்ச்சி மாற்ற நிகழ்வுடன் படிப்பு நிறுத்தப்படும். ஆனால், அந்த வயதோ தனது விருப்பத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத, போராடி அடைய முடியாத, தனது வாழ்வுத் தேவையைப் பற்றி முடிவெடுக்க முடியாத வயது அது என்று இன்று நாம் உணர்கிறோம். ஆனால் வீட்டில் தாய் இறந்தால், அல்லது தாய்க்குப் பல பிள்ளைகள் இருந்தால், தாய்க்கு உதவப் பெண்களின் படிப்பு தடைக்குள்ளானது. ஏதோ அவ்வப்பொழுது ஒரு கடிதம் எழுதப் படிக்க இருக்கும் கல்வியின் அளவே பெண்களுக்குப் போதுமானது என்ற மனநிலையில் அக்கால மக்கள் இருந்தனர். பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் அடிமட்ட நிலையில் இருந்த பெரும்பாலான குடும்பங்களின் பெண்கள் எட்டாம் வகுப்பை எட்டிப் பார்ப்பதோ, அல்லது நடுநிலைப்பள்ளி வரை முடிப்பதோதான் உயர் கல்வி என்ற நிலையே இருந்தது.

இந்த நிலையைத்தாண்டி வெளியே வந்த பெண்கள் சமுதாயத்தில் உயர் மட்டக் குடும்பங்களாகக் கருதப்பட்டக் குடும்பப் பெண்கள். இவர்கள் உயர்நிலைப் பள்ளி வரை தடையின்றிப் படிக்க முடிந்தது. இவர்களும் பெண்கல்வி எதற்கு என்ற சமுதாயக் கட்டுப்பாட்டைத் தாண்டினாலும், உயர் கல்விக்கேற்ற வசதியான சூழ்நிலையும், அதற்கேற்ற கட்டமைப்பற்ற சமுதாயத்தால் உயர்நிலைப் பள்ளியுடன் கல்வியை நிறுத்த வேண்டிய முடிவை எதிர் கொண்டார்கள். பணம் கட்டிப் படிக்க வைக்க வேண்டிய நிலையில் சகோதரர்கள் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. பெண் புறக்கணிக்கப் பட்டாள்.

அடுத்து அக்காலம் கல்லூரிகளும் பல இல்லாத காலம் வேறு, வெளியூருக்கு அனுப்பி, விடுதியில் தங்கி பெண்கள் கல்வி கற்பதை 60 ஆண்டுகளுக்கு முன்னர் பலகுடும்பங்கள் நினைத்தும் பார்த்துச் சகித்துக் கொள்ள முடியாத மனநிலையில் இருந்தனர். அக்கால கட்டத்தில் உயர்நிலைப் பள்ளி முடித்தவர்கள் கல்லூரியில் "இண்ட்டர்மீடியட்" என்ற வகுப்பை இரண்டாண்டுகள் படித்து, பிறகு மேற்கல்வி பயில வேண்டும். இண்ட்டர்மீடியட் வகுப்புகளின் பயிற்று மொழி ஆங்கிலம்.

பெரும்பான்மையான அக்கால மாணவர்கள் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பள்ளியில் படித்து, பிறகு கல்லூரியில் உயர்படிப்பில் ஆங்கிலப் பயிற்று மொழிக்கு மாறினார்கள். அவர்கள் இந்த மாறுதலில் சற்றே தடுமாறினாலும், அவர்களைச் சமாளித்து நிலை நிறுத்திக் கொள்ள இரண்டு ஆண்டுகள் படிக்கும் இண்ட்டர்மீடியட் கல்வி முறை உதவியது. துவக்கத்தில் சற்று சறுக்கியவர்கள் மீண்டெழ வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 1950 களின் மத்தியில் இந்த இண்ட்டர்மீடியட் கல்வி முறை மாற்றி அமைக்கப் பட்டது, 1955-57 காலத்துக் கல்வியாண்டில் படித்தவர்களே கல்லூரிகளில் இறுதிப் பிரிவு இண்ட்டர்மீடியட் வகுப்பு மாணாக்கர்கள்.

இண்ட்டர்மீடியட் வகுப்புகளுக்குப் பதிலாக ஓராண்டு பயிலும் புகுமுகவகுப்புகள் (Pre University Course, popularly known as PUC) கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வியாண்டு 1956-57 புகுமுகவகுப்பில் படித்தவர்களே முதல் பிரிவினர். இந்த முறையில் பட்டப்படிப்பிற்கு முன்னர் படிக்க வேண்டிய கல்வி ஓராண்டாகக் கல்வியாண்டு குறைக்கப் பட்டாலும், அதன் பாடத் திட்ட முறை ஓராண்டு ஆங்கில வழி பயிற்று முறை என்பது பெண்கல்விக்குப் பாதகமாகவே முடிந்தது.

கல்லூரிகள் பல தோன்றினாலும், பெண்கள் விடுதிகளில் சென்று படிக்கும் அளவிற்கு அக்காலச் சமுதாயத்தின் மனநிலை பரவலாக மாறினாலும், தமிழ்ப் பயிற்று மொழியிலிருந்து ஆங்கிலப் பயிற்று வழிக்கு மாறிய பெரும்பாலான மாணவர்கள் தடுமாறினார்கள். தங்களைச் சுதாரித்துக் கொள்வதற்குள், சூழல் மாறுதலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் முன்னர் ஆண்டு இறுதித் தேர்வு வந்துவிடும். ஆண் பெண் இருபாலருக்குமே இந்த வகுப்புகள் மேற் கல்விக்குச் செல்வதில் தடங்கல் ஏற்படுத்தியது. புகுமுகவகுப்பு என்று அழைக்கப்பட்ட கல்லூரி அறிமுக வகுப்பு, மேல்படிப்பிற்குப் ‘புகாமுக’ வகுப்பாக மாறியது. ‘பாட்டில்நெக் எஃப்பெக்ட்’ (bottleneck effect) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும், சீசாவின் குறுகிய கழுத்தினால் வெளிவரும் திரவத்தின் அளவு குறுக்கப்படும் பாங்கில், மேல்நிலைக்குச் செல்லும் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் புகுமுக வகுப்பு தடை ஏற்படுத்தியது. ஆங்கில பயிற்று வழிக்கு மாறிய மாணவர்கள் தாங்கள் கற்பதிலும் சிரமம் எதிர் கொண்டு, அவ்வாறு கற்றதையும் ஆங்கிலத்தில் சரியாக எழுதத் தெரியாமல் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றார்கள், அல்லது முற்றுமாகத் தோல்வியே அடைந்தார்கள்.

இதில் ஆண் தேர்ச்சியில் தவறினால் பெற்றோர்கள் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாதே என்று அவர்களை எப்படியாவது தேர்வு பெற வைக்கப் பாடுபட்டார்கள். ஆனால் பெண்களுக்காக அவ்வாறு பாடுபட்டவர்கள் குறைவு அல்லது இல்லவே இல்லை என்றும் சொல்லலாம். அதற்குள் பெண்களுக்கும் 18 வயது வந்துவிடுவதால், படிப்பு வராவிட்டால் அடுத்து திருமணம் செய்துகொள், என்று சொல்லி சடுதியில் திருமணம் செய்து அனுப்பிவைப்பதைக் கொள்கையாக வைத்திருந்தார்கள். வாழ்வின் மிக மிக முக்கியமான திருப்புமுனையான காலத்தில், இரக்கமற்ற வகையில் பெண்கல்வியை அந்தப் புகுமுக வகுப்பு முறை பாதித்தது.

அத்துடன் அந்தப் புகுமுக வகுப்பின் பாடத்திட்டம் மூன்றே பிரிவு பாடத்திட்டம் மட்டுமே கொண்டது.

 - முதல் பிரிவில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் படிக்க வேண்டும். இப்பாடத் திட்டம் பொறியியல் தொடர்பான தொழிற்கல்விக்காகத் திட்டமிடப்பட்டது.

 - இரண்டாம் பிரிவில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படிக்க வேண்டும். இப்பாடத் திட்டம் மருத்துவம் தொடர்பான தொழிற்கல்விக்காகத் திட்டமிடப்பட்டது.

 - மூன்றாம் பிரிவில் கலைக்கல்லூரிகளில் படிக்கும் இளங்கலைப் பட்டத்திற்கான கல்வியில் அடங்கும் இலக்கியம், பொருளாதாரம், வரலாறு போன்ற பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

இவையாவுடனும் ஆங்கிலமும், ஏதோ ஒரு மொழியும் (Part I & II) அவசியம். 


முதல் இரண்டு பிரிவும் தொழிற் கல்விக்கானதாக திட்டமிடப்பட்டு இருப்பினும் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பிற்கும் அவையே அடிப்படை. இம்முறையில் இருந்த இடையூறுகள், முதல் இரண்டு பிரிவில் இருக்கும் மாணவர்கள் பொறியியலோ அல்லது மருத்துவமோ இவற்றில் ஏதேனும் ஒன்றினைத்தான் மேற்படிப்பாகக் கொள்ள முடியும். இரண்டு படிப்புகளுக்குமே விண்ணப்பிக்க இயலாத வகையில் அந்தப் பாடத்திட்டம் அமைந்திருந்தது.

ஓராண்டில் ஆங்கிலவழி முறை பயிற்று மொழிக்குத் தகவமைத்துக் கொள்ள முடியாத திறமைசாலி பள்ளி மாணவர்கள் தட்டுத் தடுமாறி இரண்டாம் வகுப்பிலோ அல்லது மூன்றாம் வகுப்பிலோ தேர்வு பெறுவார்கள். அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுபவர்களே பொறியியல் படிப்பிலோ அல்லது மருத்துவப் படிப்பிலோ சேருவார்கள். இன்றைய காலத்தில் இருப்பது போலப் பல தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பொறியியல் கல்லூரிகளும் இல்லாத காலம் அது. எனவே தொழில் கல்வி படிக்கப் போட்டி அதிகம் இருந்தது. இன்றைய நாட்களில் இத்தனை பொறியியல் இடங்கள் காலியாக நிரப்பப் படாமல் உள்ளது என்பதைச் செய்திகளாகப் படிப்பவர்களுக்கு அக்காலச் சூழ்நிலை புரியுமா என்பதே சந்தேகம்.

புகுமுக வகுப்பில் தோல்வியுற்ற ஆண்கள் மேற்கொண்டு படித்து முன்னேறக் குடும்பத்தினர் ஆதரவு உண்டு. பெண்களுக்குத் திருமணம் செய்து அடுத்த கட்டத்திற்கு நகர்வது ஒன்றே வழியாக இருந்தது. அத்துடன் சில குடும்பங்களில் தொழிற்கல்வியில் சேரும் அளவிற்கு மதிப்பெண் எடுக்காத மாணவிகளிடம், “படித்தால் டாக்டருக்குப் படி இல்லாவிட்டால், திருமணம் செய்து கொள், நான் என் கடமையை முடித்துக் கொள்கிறேன்”, என்ற முடிவுகளும் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டன. புகுமுக வகுப்பில் தோல்வியுற்ற பெண்களும், தொழிற்கல்வியில் சேரும் அளவிற்கு அதிக மதிப்பெண் பெறாதவர்களும் உயர்கல்வியிலிருந்து விலகிச் சென்றதைக் கண்கூடாகக் கண்ட என் சொந்த அனுபவமே இங்குக் காட்டப்பட்டுள்ளது.

பதினொன்றாம் வகுப்பாகப் பள்ளியிறுதி வகுப்பு படித்து, கல்லூரியில் ஓராண்டு ஆங்கிலத்தில் புகுமுக வகுப்பு படித்த முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது 1978 – 1979 கல்வியாண்டில். தொடர்ந்து வந்தது புதிய "பிளஸ் டூ" முறை. முப்பதாண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த பிளஸ் டூ முறை. பள்ளியிறுதி வகுப்பு என்பது பத்தாம் வகுப்பு என மாற்றப்பட்டது. கல்வியாண்டுகள் 1978 -1980 இல் முதல் மேல்நிலை வகுப்பு அல்லது பிளஸ் டூ வகுப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டன. உயர்நிலைப் பள்ளிகள் யாவும் மேல்நிலைப்பள்ளிகளாக மாறின. இம்முறை வழங்கிய ஆக்கப்பூர்வமான விளைவுகள், பலருக்கும் முட்டுக்கட்டையாக இருந்த உயர்கல்வி தடையை நீக்கியதுதான்.

கல்லூரி உயர்கல்விக்குத் தேவையான கல்வி பள்ளிகளிலேயே போதிக்கப்பட்டது. இதனால் வெளியூரில் கல்வி, புதிய கல்லூரி மற்றும் விடுதி வாழ்க்கை என்ற மாறுதல்கள் தவிர்க்கப்பட்டது. வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனையான காலத்தில், அனைத்து மாணவர்களுக்கும் படிக்கும் சூழலில் எந்த ஒரு மாறுதலுமே இல்லாது, இது போன்ற தேவையற்ற சூழ்நிலை மாறுதல்கள் என்ற மாற்றத்தடைகள் அறவே நீக்கப்பட்டது.

அத்துடன், தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்கள் அதே படிக்கும் முறையில் கற்கும் வாய்ப்பும் தொடர்ந்தது. இதனால் இவர்களுக்குப் பயிற்று மொழித் தடுமாற்றம் என்பது கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகுதான் துவங்கியது. ஆனால் மூன்று, நான்கு, ஐந்து ஆண்டுகள் என்று விதம் விதமான பயிற்சித் தேவை உள்ள பட்டப் படிப்புகளில் அவர்கள் துவக்கத்தில் தடுமாறிச் சறுக்கினாலும் மீண்டெழ வாய்ப்பும் கிடைத்தது. உயர்கல்வியில் நுழைந்து அதை முயன்று முடிக்கவும் முடிந்தது. மாறாக, அவர்கள் மேல்நிலைப்பள்ளியிலேயே ஆங்கிலப் பயிற்று மொழிக்கு மாற்றிக் கொண்டிருந்தாலும் கூட, 1950 களில் கல்லூரியில் இருந்த இரண்டாண்டு இண்ட்டர்மீடியட் வகுப்பு போலப் பயிற்றுமொழியினால் வரும் மாற்றத்திலிருந்து மீண்டு வர ஒரு வாய்ப்பும் கிடைத்தது. இதனால் பயிற்றுமொழியினால் வரும் தடை என்பதும் நீக்கப்பட்டது.

ஒரு முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1970 களின் இறுதியில் இந்த இரு முக்கியத் தடைகளும் நீங்கிய காலத்தில் பெண்கல்வியின் கண்ணோட்டமும் சமூகத்தில் முற்றிலும் மாறிவிட்டிருந்தது. அத்துடன் பல தனியார் கலைக்கல்லூரிகளும், பற்பல தொழிற்கல்வி வழங்கும் பல்கலைக் கழகங்களும் தோன்றியதில் பலருக்கு உள்ளூரிலேயே உயர் கல்வி கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த மாற்றங்கள் பெண்கள் உயர்கல்வியில் அதிக அளவில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ இப்பொழுது உயர்கல்வியில் தடை என்றால் இருவருக்கும் பொதுவாக அது பொருளாதார அடிப்படையினால் ஏற்படும் தடங்கல் மட்டுமே என்ற நிலைக்குத் தமிழகம் மாறியுள்ளதாகத் தெரிகிறது.

நன்றி:  சிறகு 
மார்ச் 8, 2014 

#கல்வி, #சிறகு, #Themozhi