Saturday, August 11, 2018

ஓயாது உழைத்த கலைஞர்

ஓயாது உழைத்த கலைஞர் 


உயிருடன்  தண்டவாளத்தில்  படுத்துப் 
போராடியதெல்லாம்  ஒரு போராட்டமா
உயிரிழந்தும் இறுதியாகப் படுத்தவாறே 
போராடி வென்றதற்கு  அது  ஈடாகுமா 

படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்றவரை 
மக்கள் தேர்தலில் அன்று  ஆதரிக்கவில்லை 
படுத்துக்கொண்டே போராடி வென்றவரை 
மக்கள் என்றும் மறக்கப் போவதுமில்லை 

கிழக்கே உதிக்கும் சூரியன்
மேற்கே உதிக்காது ஒருநாளும்  
சொல்லியிருக்கிறோம் நாம் 
இயற்கை மாறாது என்பதற்காக 

மேற்கே மறையும் சூரியன் 
கிழக்கே மறையும் ஒருநாளும் வந்தது 
தெரிந்து கொண்டோம் இன்று அந்த 
இயற்கையை மாற்றியவர் யாரென்று 

தமிழ்த்தாயின் தங்கமகனே !
ஓயாது உழைத்த கலைஞரே !
உறங்குமிடமாகக் கடற்கரை ஏனோ?
ஓயாத அலைகளுக்கும் சவால் விடுக்கத்தானோ? 


கலைஞருக்கு ஓர் இரங்கற்பா


நன்றி: சிறகு 
ஆகஸ்ட் 11, 2018


#கவிதை, #சிறகு, #கலைஞர், #Themozhi 



Saturday, May 12, 2018

புறநானூற்றுப் பாடல்களின் திணையும் துறையும்

 புறநானூற்றுப் பாடல்களின் திணையும் துறையும் 


சங்க இலக்கியங்களாக அறியப்படும் பாட்டும் தொகையும் ஆன பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களுள், எட்டுத்தொகையுள் எட்டாவதாகிய இலக்கியம் புறநானூறு. இந்த நூலில் முடியுடைக் காவலரும் முத்தமிழ்ப் பாவலராகத் தமிழை வளர்த்த காலத்திலும்; கற்றறிந்த புலவரும் புவியாண்ட புரவலரும்  தமிழைப் போற்றிய காலத்தில் நிகழ்ந்தவையாக 400 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆண்பாற் புலவர்களும், அரசர்களும்  யாத்த பாடல்கள் மட்டுமன்றி, அரசமகளிரான பெருங்கோப்பெண்டும், பாரியின் மகளிரும் பாடிய  பாடல்களுண்டு. அவ்வாறே, குறமகள் பாடியதாகவும் பாடலுண்டு.  குயவர்மகள் பாடியதாகவும் பாடலுண்டு.  பாடல்கள் யாவும் சங்ககாலத் தலைவர்களின் படைத்திறத்தையும் கொடைத்திறத்தையும் நமக்கு இன்று அறியத் தருகின்றன. எடுத்துக்காட்டாகக் கீழ்க்காணும் இரு சிறு பாடல்களைக் காணலாம். 

கொடைத்திறமும் ...
      "பாரி பாரி யென்றுபல வேத்தி
      ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
      பாரி யொருவனு மல்லன்
      மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே." (புறநானூறு: 107)
(பொருள்: “பாரி, பாரி” என்று பாரி ஒருவனே கொடையிற் சிறந்தவனாகவும்  உலகைக் காப்பவனாகவும்  புலவர் பலரும்  புகழ்ந்து பாடுகிறார்கள்.  பாரி மட்டுமல்ல மழையும் தன் கொடையால் உலகைக் காக்கிறது.)

படைத்திறமும் ...
      "நெல்லும் உயிர்அன்றே; நீரும் உயிர்அன்றே;
      மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
      அதனால், யான்உயிர் என்ப தறிகை
      வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே." (புறநானூறு: 186)         
(பொருள்: நெல்லும் நீரும் மட்டுமே தமது மக்கள் உயிர்வாழத் தேவை என மன்னன் கருதாமல்,  அவர்களை இடரில் இருந்து காக்கும் வேந்தனாகியத் தான் அவர்களுக்கு உயிர் போன்றவன் என்று உணர்ந்து மக்களைக் காக்கும்  சிறந்த படையைக் கொண்டிருப்பது அவனது கடமையாகும்.) 

தமிழிலக்கணம் வகுத்த வரையறையின்படி,  ஒத்த அன்புடையாரால் மட்டுமேயன்று அனைவராலும்  துய்த்து உணரப்பட்டு இது இவ்வாறிருந்ததெனப் பிறருக்குக் கூறப்படுபவை "புறம்" என்ற பகுப்பின் கீழ்  அடங்கும்.  இத்தகைய புறப்பொருள் செய்திகள் அறம், பொருள் ஆகிய இரண்டுமாகும். அறனும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுக்கத்தைப் புறமென்பது ஆகுபெயர்.  முப்பாலில் ஒன்றான அகப்பொருளான இன்பம் குறித்தவை "அகம்" என்ற பகுப்பின் கீழ்  அடங்கும்.    

புறநானூற்றுப் பாடல்களின் திணையும் துறையும் :
திணை — திணை என்ற சொல்லிற்குப் பலபொருள் இருப்பினும் தமிழிலக்கியத்தில் திணை என்ற சொல் ‘பொருள்’ என்பதைக் குறிக்கும் சொல்லாகப் பயன் கொள்ளப்படுவது மரபு. 


1. வெட்சி, 2. கரந்தை, 3. வஞ்சி, 4. காஞ்சி, 5. நொச்சி, 6. உழிஞை, 7. தும்பை, 8. வாகை, 9. பாடாண், 10. பொதுவியல், 11. கைக்கிளை, 12. பெருந்திணை என்பனவற்றைப் புறத்திணைகளாக அறிகின்றோம். கைக்கிளையையும், பெருந்திணையையும் தொல்காப்பியம் அகத்திணையில் காட்டுகிறது.  ஆனால் அவை புறநானூற்றில் சேர்க்கப்பட்டுள்ளன. 

      வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
      வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
      எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
      அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
      பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
      செரு வென்றது வாகையாம்.
என்கிறது  திணை விளக்கம் தரும் பாடல்.

1. வெட்சித்திணை:  பகைவருடைய ஆநிரைகளைக் கவர்தல் 
2. கரந்தைத்திணை:  அவ்வாறு  பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை அவற்றின் உடைமையாளர் மீட்பது 
3. வஞ்சித்திணை: பகைவரது நாட்டைக் கவரும் நோக்குடன் போர் தொடுப்பது 
4. காஞ்சித்திணை:  அவ்வாறு  படையெடுத்து வந்த பகைவரை எதிர்கொண்டு மோதுவது 
5. உழிஞைத்திணை: பகைவரது கோட்டை மதிலைச் சுற்றி வளைப்பது 
6. நொச்சித்திணை:  பகைவருக்கு எதிராகத் தம்முடைய மதிலைக் காத்து நிற்பது 
7. தும்பைத்திணை: பகைவரோடு எதிர்த்துப் போரிடுவது
8. வாகைத் திணை: போரில் வெற்றி பெறுவது 
9. பாடாண்திணை:  ஒருவனுடைய புகழ், கொடை, வலிமை, சிறப்பு ஆகியன குறித்துப் பாடுவது 
10. பொதுவியல்:  மேற்கூறிய எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவதுடன், பொதுவாக உள்ளனவாக, அவற்றுள் கூறப்படாதவற்றையும் கூறுவது
11. கைக்கிளை:  ஆணோ பெண்ணோ கொள்ளும் ஒரு பக்க நட்பு, அதன் சிறப்பு   12. பெருந்திணை: ஆணோ பெண்ணோ கொள்ளும் பொருந்தாக் காமம், நட்பு  ஒழுக்கம் 

புறத்திணையைத் தொல்காப்பியம் 7 திணைகளாகவும், புறப்பொருள் வெண்பாமாலை 12 திணைகளாகவும் பகுத்துக் காட்டுகின்றன.  புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள திணை, துறை பாகுபாடுகள் தொல்காப்பியத்துக்கும், புறப்பொருள் வெண்பாமாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றி வழக்கில் இருந்த பன்னிரு பாட்டியல் என்னும் இலக்கண நூலைப் பின்பற்றியிருப்பதாகக் கருதப்படுகின்றது. 

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி,  தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய 11 திணைகள் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன; மேலும் திணை மறைந்துபோன பாடல்கள் சிலவும் புறநானூற்றில் இடம் பெறக் காணலாம்.  உ. வே. சா. அவர்களும் புறத்திணைகளுள் ஒன்றான "உழிஞைத் திணைப் பாடல்கள்"  எவையும் திணையை அறியப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்களில் இடம் பெறவில்லை என்ற கருத்தில், "திணைகள்:- கரந்தை, காஞ்சி, கைக்கிளை, தும்பை, நொச்சி, பாடாண்டிணை, பெருந்திணை, பொதுவியல், வஞ்சி, வாகை, வெட்சி"  என 11  திணைகளை மட்டுமே  தமது நூலின்  669 ஆம் பக்கத்தில்  "திணைகளும் துறைகளும்" பகுதியின் கீழ் குறிப்பிடுகிறார்.   இவ்வரிசையில்  உழிஞைத் திணை தவிர்க்கப்பட்டுள்ளதைக் காண்க. 


பகைவர் நாட்டின் மீது படையோடு சென்று கோட்டை அரணை, மதிலை வளைத்துச் செய்யும் முற்றுகைப் போர்ச் செய்யல் உழிஞைத் திணையாகும். அங்ஙனம் மதிலை வளைத்துப் போர் செய்யும் பகை வீரர்களைத் தடுத்து  மதிலுள் புகாமல் போரிடுவது நொச்சித்திணையாகும்.  மாறோக்கத்து நப்பசலையார் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன், நல்ல அரண்களுள்ள ஊரில் பகைமன்னன் இருப்பதை அறிந்தும் அந்நகரை அஞ்சாது அழிக்கும் ஆற்றல் உடையவன் என்று அவனுடைய வலிமையையும், வீரத்தையும் பாராட்டிப்பாடும் புறப்பாடல் 37 ஆம் பாடலின்   (37. புறவும் போரும்) திணை: வாகை என்றும்; துறை: அரச வாகை; முதல் வஞ்சியும் ஆகும் என்று பல உரையாசிரியர்களால்  குறிப்பிடப்படுகிறது. 

ஆனால்,  37 ஆம் பாடலையும் அதன் விளக்கத்தையும் கொடுக்கும் பகுதியில் அப்பாடலின் திணை உழிஞை என்றொரு பாடபேதம் இருப்பதைக் கீழ் வருமாறு உ. வே. சா.  தமது நூலில் காட்டுகிறார். 
"திணை - வாகை (பி - ம். உழிஞை) ; துறை - அரசவாகை; (பி - ம். குற்றுழிஞை) ; முதல்வஞ்சியுமாம்" 
இந்தப் பாடபேதம் தவிர்த்து உழிஞைத் திணைப் பாடல் எதுவும் புறநானூற்றில்  இடம் பெறவில்லை. 

திணை கிடைக்கப்பெறாத பாடல்கள் என உ. வே. சா. அவர்களால் மொத்தம் 21 பாடல்கள் பக்கம் 669 இல் திணையிறந்துபோன பாடல்களாகக் குறிக்கப்படுகின்றன;  அவை : 244, 245, 246, 247, 248, 249, 250, 267, 268, 282, 289, 323, 324, 325, 355, 356, 357, 358, 359, 360, 361. இருப்பினும் அவர் நூலில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களில் சில திணை எதுவென்றக் குறிப்பையும் காட்டி நிற்கின்றன. 

துறை இலக்கணம்:
துறை  —  துறை என்பது திணையின் உட்பிரிவு ஆகும், இது ஏறத்தாழப் பாடலில் நிகழும் “காட்சியின்” இடமாகும். 

வெட்சியரவம், விரிச்சி, செலவு, வேய், புறத்திறை, ஊர்கொலை, ஆகோள், பூசன் மாற்று, சுரத்துய்த்தல், தலைத்தோற்றம், தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, புலனறி சிறப்பு, பிள்ளை வழக்கு, துடிநிலை, கொற்றவைநிலை, வெறியாட்டு - என 'வெட்சித் திணையின் துறைகள் பத்தொன்பது'  எனவும்;   

கரந்தை அரவம், அதரிடைச் செலவு, போர் மலைதல், புண்ணொடு வருதல், போர்க்களத்து ஒழிதல், ஆளெறி பிள்ளை, பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு, கையறு நிலை, நெடுமொழி கூறல், பிள்ளைப் பெயர்ச்சி, வேத்தியன் மலிவு, குடி நிலை என-  'கரந்தைத் திணையின்  துறைகள் பதின்மூன்று'  எனவும்; 

வஞ்சியரவம், குடைநிலை, வாள்நிலை, கொற்றவை நிலை, கொற்றவஞ்சி, கொற்றவள்ளை, பேராண்வஞ்சி, மாராய வஞ்சி, நெடுமொழிவஞ்சி, முதுமொழி வஞ்சி, உழபுலவஞ்சி, மழபுலவஞ்சி, கொடைவஞ்சி, குறுவஞ்சி, ஒருதனிநிலை, தழிஞ்சி, பாசறை வஞ்சி, பெருவஞ்சி, பெருஞ்சோற்றுநிலை, நல்லிசைவஞ்சி - என 'வஞ்சித் திணையின் துறைகள் இருபது' எனவும்; 

காஞ்சியதிர்வு, தழிஞ்சி, படைவழக்கு, பெருங்காஞ்சி, வாள் செலவு, குடைச் செலவு, வஞ்சினக் காஞ்சி, பூக்கோள் நிலை, தலைக்காஞ்சி, தலைமாராயம், தலையொடுமுடிதல், மறக் காஞ்சி, பேய்நிலை, பேய்க்காஞ்சி, தொட்டகாஞ்சி, தொடாக்காஞ்சி, மன்னைக் காஞ்சி, கட்காஞ்சி, ஆஞ்சிக்காஞ்சி, மகட்பாற்காஞ்சி, முனைகடி முன்னிருப்பு - என 'காஞ்சித் திணையின் துறைகள் இருபத்தொன்று' எனவும்; 

குடைநாட்கோள், வாள்நாட்கோள், முரசவுழிஞை, கொற்றவுழிஞை, அரசவுழிஞை, கந்தழி, முற்றுழிஞை, காந்தள், புறத்திறை, ஆரெயிலுழிஞை, தோலுழிஞை, குற்றுழிஞை, புறத்துழிஞை, பாசிநிலை, ஏணிநிலை, எயிற்பாசி, முதுவுழிஞை, அகத்துழிஞை, முற்றுமுதிர்வு, யானைகைக்கோள், வேற்றுப்படை வரவு, உழுது வித்திடுதல், வாள் மண்ணு நிலை, மண்ணுமங்கலம், மகட்பால் இகலல், திறை கொண்டு பெயர்தல், அடிப்பட விருத்தல், தொகைநிலை - என  'உழிஞைத் திணையின் துறைகள் இருபத்தெட்டு' எனவும்;  

மறனுடைப் பாசி, ஊர்ச்செரு, செருவிடை வீழ்தல், குதிரை மறன், எயிற்போர், எயில்தனை அழித்தல், அழிபடை தாங்கல், மகண் மறுத்து மொழிதல் - என 'நொச்சித் திணையின் துறைகள் எட்டு' எனவும்; 

தும்பை அரவம், தானை மறம், யானைமறம், குதிரை மறம், தார் நிலை, தேர் மறம், பாண்பாட்டு, இருவரும் தபு நிலை, எருமை மறம், ஏம எருமை, நூழில், நூழிலாட்டு, முன் தேர்க் குரவை, பின் தேர்க்குரவை, பேய்க்குரவை, களிற்றுடனிலை, ஒள்வாள் அமலை, தானை நிலை, வெருவரு நிலை, சிருங்கார நிலை, உவகைக் கலுழ்ச்சி, தன்னை வேட்டல், தொகை நிலை -  என  'தும்பைத் திணையின் துறைகள் இருபத்து மூன்று' எனவும்;  

வாகையரவம், அரச வாகை, முரச வாகை, மறக்கள வழி, களவேள்வி, முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, பார்ப்பன வாகை, வாணிக வாகை, வேளாண் வாகை, பொருந வாகை, அறிவன் வாகை, தாபதவாகை, கூதிர்ப்பாசறை, வாடைப்பாசறை,  அரசமுல்லை, பார்ப்பனமுல்லை, அவையமுல்லை, கணிவன்முல்லை, மூதின் முல்லை, ஏறாண்முல்லை, வல்லாண் முல்லை, காவன் முல்லை, பேராண்முல்லை, மறமுல்லை, குடை முல்லை, கண்படைநிலை, அவிப்பலி, சால்புமுல்லை, கிணைநிலை, பொருளொடு புகறல், அருளொடு நீங்கல்  - என  'வாகைத் திணையின் துறைகள் முப்பத்திரண்டு'  எனவும்;   

வாயில் நிலை, கடவுள் வாழ்த்து, பூவை நிலை, பரிசில்துறை, இயன்மொழி, வாழ்த்து, கண்படை நிலை, துயிலெடை நிலை, மங்கல நிலை, விளக்கு நிலை, கபிலை கண்ணிய புண்ணிய நிலை, வேள்வி நிலை, வெள்ளி நிலை,  நாடு வாழ்த்து,  கிணை நிலை,  களவழி வாழ்த்து,  வீற்றினி திருந்த பெருமங்கலம்,  குடுமி களைந்த புகழ்சாற்று நிலை,  மணமங்கலம், பொலிவு மங்கலம், நாள் மங்கலம், பரிசில் நிலை,  பரிசில் விடை, ஆள்வினை வேள்ளி, பாணாற்றுப் படை, கூத்தராற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, வாயுறை வாழ்த்து, செவியறிவுறுஉ, குடை மங்கலம், வாள் மங்கலம், மண்ணுமங்கலம், ஒம்படை புறநிலை வாழ்த்து, கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவர் ஆற்றுப்படை, புகழ்ந்தனர் பரவல், பழிச்சினர் பணிதல், கைக்கிளை, பெருந்திணை, புலவிபொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு, கடவுள்மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம், கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம், குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி, ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி -  என  'பாடாண் திணை துறைகள் நாற்பத்தேழு'  எனவும் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. 

பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய மூன்று திணைகள் தவிர்த்து;  மேற்காணும் புறத்திணைகளின் கீழ் பகுக்கப்பட்டுள்ள துறைகளின் எண்ணிக்கையாக  (வெட்சி-19, கரந்தை-13, வஞ்சி-20, காஞ்சி-21, உழிஞை-28, நொச்சி-8, தும்பை-23, வாகை-32, பாடாண்-47) 211 துறைகளை அடையாளம் காட்டுகிறது புறப்பொருள் வெண்பாமாலை. 

புறநானூற்றில்  இடம்பெறும் பதினொரு திணைகளின் கீழ், கீழ்க்காணும் 65 துறைகளில் வகைப்படுத்தப்பட்ட பாடல்கள் இடம்பெறுகின்றன என உ.வே. சா. குறிப்பிடுகிறார்: அரசவாகை, ஆனந்தப்பையுள், இயன்மொழி, உடனிலை, உண்டாட்டு, உவகைக்கலுழ்ச்சி, எருமைமறம், ஏர்க்கள வுருவகம், ஏறாண்முல்லை, கடவுள்வாழ்த்து, கடைநிலை, கடைநிலைவிடை, களிற்றுடனிலை, குடிநிலையுரைத்தல், குடைமங்கலம், குதிரைமறம், குறுங்கலி, கையறுநிலை, கொற்றவள்ளை, செருமலைதல், செருவிடை வீழ்தல், செவியறிவுறூஉ, தலைத்தோற்றம், தாபதநிலை, தாபதவாகை, தானைநிலை, தானைமறம், துணைவஞ்சி, தொகைநிலை, நல்லிசைவஞ்சி, நீண்மொழி, நூழிலாட்டு, நெடுமொழி, பரிசில்கடாநிலை, பரிசில்விடை, பரிசிற்றுறை, பழிச்சுதல், பாண்பாட்டு, பாணாற்றுப்படை, பார்ப்பன வாகை, பிள்ளைப்பெயர்ச்சி, புலவராற்றுப்படை, பூக்கோட்காஞ்சி, பூவைநிலை, பெருங்காஞ்சி, பெருஞ்சோற்றுநிலை, பேய்க்காஞ்சி, பொருண்மொழிக்காஞ்சி, மகட்பாற்காஞ்சி, மகண்மறுத்தல், மழபுலவஞ்சி, மறக்களவழி, மறக்களவேள்வி, மனையறந்துறவறம், முதல்வஞ்சி, முதுபாலை, முதுமொழிக்காஞ்சி, மூதின்முல்லை, வஞ்சினக்காஞ்சி, வல்லாண்முல்லை, வாண்மங்கலம், வாழ்த்தியல், வாழ்த்து, விறலியாற்றுப்படை, வேத்தியல்.

துறை எதுவெனக் கிடைக்கப்பெறாத பாடல்கள் என உ. வே. சா. அவர்களால் மொத்தம் 13 பாடல்கள் பக்கம் 669 இல்  துறையிறந்துபோன பாடல்களாகக் குறிக்கப்படுகின்றன; அவை :  244, 245, 267, 268, 282, 285, 323, 324, 325, 355, 356, 357, 361.  இருப்பினும் அவர் நூலில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களில் சில துறை எதுவென்றக் குறிப்பையும் காட்டி நிற்கின்றன.
 
இதே பக்கத்தில், பாடல் 289 திணை துறையில்லாத பாட்டு எனக் குறிப்பிடப்படுகிறது.  

புறநானூற்றுப் பாடல் தொகுப்பில்  266, 267 ஆகிய இருபாடல்களும் கிடைக்கப்பெறவில்லை.

புறநானூற்றுப் பாடல்களின் திணை-துறை குறித்த புள்ளிவிவரங்கள்: 
ஒரு பாடலின் பொருளின், கருத்தின் அடிப்படையில், ஒரு பாடலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திணையும், ஒன்றுக்கு மேற்பட்ட துறையும், ஒன்றுக்குமேற்பட்ட திணையும் துறையும் கூட வருவதுண்டு. அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் பாடிய புறநானூற்றின் 98 ஆம் பாடலை, ஒன்றுக்கு மேற்பட்ட திணையும் துறையும் ஒரே பாடலில் பயின்றுவருவதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் காணலாம். அதியமானுடன் போர் புரியும் மன்னர்களது நாடு என்னாகுமோ என்ற எண்ணத்தோடு, உன் பகைவர்களுடைய வளமான நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்து விடுமோ என்று அதியமானின் படைவலிமையைப் பாராட்டிப் பாடுவார் ஔவையார். இப்பாடல் திணை: வாகை. துறை: அரசவாகை எனவும்; மற்றும், திணை: வஞ்சியும், துறை:  கொற்றவள்ளையுமாம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

பாடபேதங்கள் என்று கொடுக்கப்பட்ட குறிப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு; பாடல்களின் திணை, துறை ஆகிய செய்திகளைத் திரட்டி ஆராய்ந்ததில், மொத்தம் 400 பாடல்களில், பாடல் கிடைக்கப் பெறாமையாலோ அல்லது பாடலின் சிதைந்த நிலையினாலோ அல்லது கொடுக்கப் பெறாமையாலோ,  திணை மற்றும் துறை யாதென அறியப்பெறாதவை அல்லது கிடைக்கப்பெறாதவை 6 பாடல்கள்.  திணையும் துறையும் அறியப்படும் பாடல்கள் 394.  

ஒரே திணையின் கீழ் பகுக்கப்படும் பாடல்களின் எண்ணிக்கை 388, ஒன்றுக்கு மேற்பட்ட திணைகள் கொண்ட பாடல்களின் எண்ணிக்கை  6.
ஒரே துறையின் கீழ் பகுக்கப்படும் பாடல்களின் எண்ணிக்கை 359 ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் கொண்ட பாடல்களின் எண்ணிக்கை 35.

பாடாண் திணை (140 பாடல்களில் அல்லது 35%), வாகைத் திணை (81 பாடல்களில் அல்லது 20%), பொதுவியல் திணை (74 பாடல்களில் அல்லது 19%) என அதிக அளவில் பாடல்களில் இடம்பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ள திணைகளாகும். 

இயன்மொழி (58 பாடல்களில் அல்லது 13%),  கையறுநிலை (45 பாடல்களில் அல்லது 10%), அரசவாகை (36 பாடல்களில் அல்லது 8%),  மகட்பாற் காஞ்சி (20 பாடல்களில் அல்லது 5%) என அதிக அளவில் பாடல்களில் இடம்பெற்று முதல் நான்கு  இடங்களில் உள்ள துறைகளாகும். 

புறநானூறு -புறப்பொருள் வெண்பாமாலை ஒப்பீடு:
இலக்கியங்கள் தோன்றி பின்னர் அவற்றின் அடிப்படையில் இலக்கணங்கள் வகுக்கப்படுகின்றன என்பது மொழியறிஞர்கள் கூறும் கருத்து. புறத்திணைகளும் அவற்றின் துறைகளும் என இலக்கணம் வகுக்கும்  புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலின்படி  12 திணைகளும், 200 க்கும் மேற்பட்ட துறைகளைக் கொண்டதாகவும் புறப்பொருள்  பகுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.  

ஆனால், புறநானூற்றின் 400 பாடல்களில் 11 திணைகளும் 65 துறைகளும் (உ. வே. சா.  பதிப்பித்த நூலில் காணும்  குறிப்புகள் வழி) தெரிகிறது.  உழிஞைத் திணையின் துறைகள் 28 என்று இலக்கண நூல்  காட்டும்பொழுது, புறநானூற்றில் உழிஞைத்திணையின் பாடல்களே இல்லை என (பாடபேதம் எனக் காட்டப்பட்டுத் தவிர்க்கப்பட்ட பாடல் நீங்கலாக) அறிய வரும்பொழுது வியப்பு ஏற்படுகிறது.  இதனால் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக  400 பாடல்களைக் கொண்ட புறநானூறு தொகுக்கப் படுவதற்கும்   முன்னர் எத்தனை பழந்தமிழ்ப் பாடல்கள் மறைந்து போயிருக்கக்கூடும் என்ற எண்ணமும்  மலைக்க வைக்கிறது.  




சான்றாதாரங்கள்:
புறநானூறு, மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்யகலாநிதி, டாக்டர் உ. வே. சாமிநாதையர், தமிழ் இணையக் கல்விக்கழகம். 
http://www.tamilvu.org/ta/library-l1280-html-l1280bod-127606

புறநானூறு, ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலி, தென்னிந்திய
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், தமிழ் இணையக் கல்விக்கழகம்.
http://www.tamilvu.org/library//l1281/html/l1281fir.htm

புறநானூறு-மூலமும் உரையும், புலியூர்க் கேசிகன், டிசம்பர் 2010, சாரதா பதிப்பகம் சென்னை. 
https://ta.wikisource.org/s/1k89

புறப்பொருள் வெண்பாமாலை - மூலமும் உரையும், புலியூர்க் கேசிகன், ஆகஸ்டு 2009, சாரதா பதிப்பகம் சென்னை. 
https://ta.wikisource.org/s/1vdp



நன்றி: சிறகு 
மே 12, 2018


#சிறகு, #இலக்கியம், #இலக்கிய நுட்பம், #Themozhi 




Saturday, April 28, 2018

சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை”

சி.என். அண்ணாதுரை விளக்கும்  “ஆரியமாயை”



சி.என். அண்ணாதுரை எழுதிய நூல்களுள் மிகவும் சர்ச்சைக்குரிய நூலாகவும், தடைசெய்யப்பட்ட நூலாகவும், அதையும்விட அவருக்கு ஆறு  மாதங்கள் சிறைத்தண்டனையும்,  700 ரூபாய் அபராதத்தையும் சென்னை மாநில அரசு விதிப்பதற்குக் காரணமாக இருந்த நூல் “ஆரியமாயை”.  சுமார் அறுபது பக்கங்களைக் கொண்ட மிகச் சிறிய நூல் இது. இந்நூலில் ஆரியர்களாகிய பிராமணர்களை அண்ணாதுரை மிகக் கடுமையாகச் சாடுவதாகவும், ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாகவும் விமர்சனம் வைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. நூல் முழுவதும் அவர் அக்கால (1940களில்) எதிரணியில் இருந்த ஆரியச் சார்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் பலரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மறுமொழி அளிக்கும் விதத்திலும், தமிழர்களை நோக்கி எழுதியிருப்பதையும் காணலாம். அவ்வாறே, நூலின் சில பகுதிகளில் மாணவர்களை நோக்கியும், சில பகுதிகளில் தமிழறிஞர்களை நோக்கியும் எழுதியிருப்பதையும் காணமுடிகிறது.

மக்களிடையே கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காக வழக்கு தொடரப்பட்டு அவர் பலமுறை நீதிமன்றத்திற்கு இழுத்தடிக்கப்பட்டதை, “ஆரிய மாயை வழக்குக்காகப் பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயண சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரியமாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரியமாயை, இலட்சிய வரலாறு, இராவணகாவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  அண்ணாதுரை உள்ளதைத்தான் எழுதினான் என்று அவர்களுக்கு நன்று தெரிந்ததே. சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு முக்கியமாகச் செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது” என்று அவர் வாயிலாகவே அவரது மேடைப்பேச்சு ஒன்றின் மூலம் அறியவும் முடிகிறது.

இந்த நூல், விடுதலைக்கு முற்பட்ட இந்தியாவில், 1941ல் அண்ணாதுரையால் எழுதப்பட்டு 3 பதிப்புகள் வெளியான பின் 1943ல் இந்த நூல் தடை செய்யப்பட்டது. முன்னுரையில் அவர், “இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன” என்று குறிப்பிடுகிறார். ஆபி டியூபா, சர். ஜான் மார்ஷல், ஹாவல்,  பி. டி. சீனிவாச  ஐயங்கார், பாஸ்கி, இத்தாலி ஆசிரியர் செர்ஜி, டாக்டர் ஹாடன், டி.ஏ. இராமலிங்கம் செட்டியார், எம். எஸ். இராமசாமி ஐயங்கார், அறிஞர் கால்டுவெல், டாக்டர் கில்பர்ட் ஸ்லேட்டர், பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, பி. வி. கிருஷ்ணாராவ், ஏ. கெ. சாண்டர்ஸ், பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் (இவ்வரிசைப்படுத்துதல், நூலில் இடம்பெறும் கருத்து வரிசையை ஒட்டி அமைகிறது)  என்று அண்ணாதுரை மேற்கோள் காட்டும் ஆய்வாளர்கள் பட்டியலும் மிக நீளம்; அவர்கள் கூறியதாக அண்ணாதுரை சுட்டும் கருத்துகளும் பன்முகத் தன்மை வாய்ந்தவையாக ஆரியர் குறித்தும், ஆரியமாயை குறித்தும் பலகோணங்களை நம்முன் வைக்கிறது.

ஆரிய மாயை  போற்றி பாடல்:
"ஆரியமாயை"
     பேராசைப் பெருந்தகையே போற்றி!
     பேசநா இரண்டுடையாய் போற்றி!
     தந்திர மூர்த்தி போற்றி!
     தாசர்தம் தலைவா போற்றி!
     வஞ்சக வேந்தே போற்றி!
     வன்கண நாதா போற்றி!
     கோழையே போற்றி, போற்றி!
     பயங்கொள்ளிப் பரமா போற்றி!
     படுமோசம் புரிவாய் போற்றி!
     சிண்டு முடிந்திடுவாய் போற்றி!
     சிரித்திடு நரியே போற்றி!
     ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
     உயர் அந்தி உணர்வோய் போற்றி!
     எம் இனம் கெடுத்தோய் போற்றி!
     ஈடில்லாக் கேடே போற்றி!
     இரை, இதோ போற்றி! போற்றி!
     ஏத்தினேன் போற்றி! போற்றி!

ஆரியர் இயல்பு:
கேடுபயக்கும் குணமுடையோரைப் போற்றுவது மடமையன்றோ? என்போருக்கு, “ஆரிய மாயையில்” வீழ்ந்துள்ள திராவிடர் சிலர் (சற்சூத்திரர்கள்) அவர்களைப் போற்றுவது வழக்கம்தானே. அது போல எழுதப்பட்டது இந்தப் போற்றிபாடல். அவர்கள் போற்றிடும் “‘பூசுரரின்’ திருக்கலியாண குணங்கள்” இவையென  நான் சொல்லவில்லை. “ஆபி டியூபா/ஆபே டூபே (Abbe J. A. Dubois, 1765-1848)” எனும் அறிஞர் தம் நூலில் கூறியது. நான் செய்தது ஆரிய மாயையின் பிடியில் இருப்போர் கூறிக்கொண்டிருக்கும் போற்றிபாடல் போல அதை எழுதியது மட்டுமே,  என்று கூறும்  அண்ணாதுரை,  “நான் ஆரியரைப் போற்றவுமில்லை, போற்றிடக் கூறவுமில்லை! அதுபோலவே நான் அவர்களை ஏசவுமில்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்” என்ற விளக்கத்துடன் நூலைத் தொடங்குகிறார்.

Avarice, Ambition, Cunning, Wily, Double-tongued, Servile, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression, Intrigue போன்ற சொற்களைக் கொண்டு ஆபி டியூபா தமது நூலில் (Hindu Manners Customs And Ceremonies, by Abbe J. A. Dubois*) பார்ப்பனர்களின் இயல்பை விவரிப்பதை எடுத்துக் காட்டுகிறார் அண்ணாதுரை. நூலில் “தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது முதலியன அவர்களிடம் இயற்கையாகவே இருக்கின்றன. எப்படியாவது அரசர்களை அண்டிப் பதவிபெறுவதே அவர்கள் நோக்கம் என்று ஆபி எழுதுகிறார்.” (“Naturally cunning, wily, double-tongued, and servile, they turn these most undesirable qualities to account by insinuating themselves everywhere; their main object, upon which they expend the greatest ingenuity, being to gain access to the courts of princes or other people of high rank.”)  என்று ஆபி டியூபா பார்ப்பனர்களை தம் நூலில் விவரித்துள்ளார். பிரெஞ்சுப் பாதிரியாரான ஆபி டியூபா இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து, பயணங்கள் செய்து, இந்திய மக்களின் வாழ்வு முறையை ஆய்வு செய்து தனது முடிவுகளை 1806 இல் வெளியிட்ட நூல் இது.

“இவ்வித இயல்புடைய இனத்தைத்தான், இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் சாதி என்று உரைக்கின்றனர். ‘சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர் தம் நிலை!” என்று கழிவிரக்கம் கொள்கிறார் அண்ணாதுரை. இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கிய “இந்து”  நாளிதழும், இன்றும் பாதிரியார் கண்ட நிலையில்தான் மக்கள் இங்கு உள்ளனர் என்றும் குறிப்பிடுவதால், இது குறுகிய மனப்பான்மை கொண்ட பாதிரியாரின் விவரிப்பு எனவும் கொள்ள வழியில்லை. இதையேதான் வரலாறும் நமக்குக் காட்டுகிறது, இன்றும் அரசு உயர்பதவிகளில் இருப்பவர் பார்ப்பனரே என்று சுட்டிக் காட்டுகிறார் அண்ணாதுரை. பார்ப்பனர்கள் திறமைசாலிகள் என்பதற்காக மட்டும் அரசர்கள் அவர்களுக்குப் பதவிகள் அளிக்கவில்லை, அவர்களிடம் மற்றவர் பணிந்து போகும் இயல்பைக் கொண்டிருப்பதும் அதற்குக் காரணம் என்றும்,  இந்த அமைப்பு அரசர்களுக்குத் தொல்லைகளைக் குறைத்தது என்பதை அந்நூல் குறிப்பிடுவதைக் காட்டுகிறார்.

ஆரியர் திராவிடர் கலாச்சாரங்கள் வேறு வேறு:
ஆரியக் கலாச்சாரம் வேறு; திராவிடர் கலாச்சாரம் வேறு  என்பதை ஆய்வுகள் தெளிவாகவே காட்டுகின்றன. முதலில் மாக்ஸ் முல்லர் போன்ற ஆய்வாளர்கள் இந்தியாவை ஆரிய வர்த்தமென்று கூறியும், இந்திய நாகரிகத்தையே ஆரிய நாகரிகம் என்றும்  கருதினர்.  பேராசிரியர் சர். ஜான் மார்ஷல் போன்றோர் திராவிடப் பண்புகளை ஆராய்ந்தறிந்து கூறியபோதுதான், ஆரியர் வருகைக்கு முன்னரே ஓர் இந்திய நாகரிகம் இருந்ததை ஆய்வாளர்கள் பின்னரே  உணர்ந்தனர். இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து,  வீரம் போன்ற இயல்புகளுடன், அறிவு சார்ந்தும், அறம்  சார்ந்தும் வாழ்ந்த திராவிடரின் கோட்பாடுகள், ஆரியரின் கற்பனைப் புனைவுகள் கொண்ட தொன்மங்கள் சார்ந்த கொள்கைகளால் சீர்குலைந்தது என்பதை  ஆய்வாளர்கள் உணர்ந்தனர் என்று குறிப்பிடுகிறார் அண்ணாதுரை.

ஆனால் இந்த வரலாற்று உண்மை நம் மக்களைச் சென்றடையவில்லையே,  மாறாக உண்மையை எடுத்துச் சொல்வோர்தான், மேதாவி எனத் தங்களை நினைத்துக் கொள்ளும் நம்மவர்களால்  நையாண்டி செய்யப்படுகிறார்கள் என வருந்துகிறார். புரோகிதத் தொழிலுக்கு முழு உரிமை பெற்றுக் கொண்டு மந்திரம் மாயம் என்று மன்னர்களை ஆட்டுவித்ததுடன் மக்களையும் அடிமைப்படுத்தினர், சுரண்டிப் பிழைத்தனர் பார்ப்பனர்கள் என்று “இந்தியாவில் ஆரிய ஆட்சி” என்ற நூலில் ‘ஹாவல்’ எழுதியதை எடுத்துரைக்கிறார் அண்ணாதுரை.

ஆரியர், திராவிடர் வரலாறும் போராட்டமும்:
வரலாற்று ஆசிரியர் பி. டி. சீனிவாச  ஐயங்கார் அவர்களால் எழுதப்பட்டு, 1923 இல் பதிப்பிக்கப்பட்ட “இந்திய சரித்திரம்” என்ற நூலின் முதற் பாகத்தில் கூறப்பட்டுள்ள இந்திய வரலாற்றைச் சுருக்கமாகக் கொடுத்துதவுகிறார் அண்ணாதுரை. ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் பரவியிருந்தவர் திராவிட இனமக்கள். வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்த அன்னியர் (ஆரியர்) தீயால் கடவுளை வணங்கும் வழக்கம் கொண்டவர். அதை ஏற்காத பூர்வீகக் குடிகளான திராவிடர்களை தஸ்யூக்கள் அல்லது ராட்சதர்கள் என்று அவர்கள் அழைத்தனர். வர்ணாசிரமக் கொள்கையான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பது யாகங்களின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து சமயம் என்ற கோட்பாடு வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கத் தொடங்கியது. வர்ணாசிரமக் கொள்கையின்படி சத்திரியர்கள் சந்நியாசிகள் ஆவதற்கோ, பிராமணராகப் பிறக்காமல் மோட்சமடைவதற்கோ, ஆரிய மதத்தில் இடங்கிடையாது என்பதை உணர்ந்தபொழுது, சத்திரியத் துறவு சமயங்களான சமணமும், பௌத்தமும் எழும்பின. இவர்களும், இவர்கள் பயன்படுத்திய மொழிகள் முறையே அர்த்த மகதி, பாலி ஆகிய மொழிகளும் ஆரியர்களுக்கும் அவர்களின்  சமற்கிருத மொழிக்கும் எதிரிகளாகக் கருதப்பட்ட நிலை உருவாகியது.  மௌரியர் காலத்தில் வளர்ச்சியடைந்து செல்வாக்கு பெற்று, பெரும் போட்டியாக மாறிய இப்புதுச்சமயங்களை தொடர்ந்து வந்த ஆரிய அரசர்கள் அடியோடு ஒழித்துக் கட்ட முற்பட்டனர்.

ஆனால் தமிழகம் வடவர்கள் ஆதிக்கத்திற்கு உட்படாது, அவர்கள்  ஊடுருவல் இன்றி தொடர்ந்து தனித்தே இயங்கியது. யாகங்களை விரும்பிய தமிழக அரசர்களின் வழி பார்ப்பனர் தமிழ அரசுகளிடம் செல்வாக்கு பெற்றனர். மன்னர்களும் தங்களைச் சந்திர சூரிய குலங்கள் என்றெல்லாம் ஆரியர் அடியொட்டி அடையாளப்படுத்திக் கொள்ளத் தலைப்பட்டனர். இருப்பினும் கி.பி.400 வரை தமிழர் ஆரியர் வலையில் விழவில்லை என்பதை அண்ணாதுரை தொகுத்து வழங்குகிறார்.  “சரிதமும் இலக்கியமும், சான்றோர் சொல்லும் திராவிடம் தனிநாடாக இருந்ததை மெய்ப்பிக்கின்றன. வேத காலம் முதற்கொண்டு வேற்றுநாட்டு மன்னர்கள் படையெடுப்புக் காலம்வரை, திராவிடம் தனிநாடாகவே இருந்தது!” என்றும்; ஆரியம் உச்சநிலை அடைந்திருந்த காலம் ‘பொற்காலம்’ என்று புகழ் பெற்ற நேரமும், அந்தப் பொற்காலத்திலும் திராவிடம் தனி நாடாகவே தழைத்திருந்தது என்றும்; வடக்கே இசுலாமியர் ஆட்சிக் காலத்திலும் திராவிடம் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் அடங்காது திராவிடம் தனித்து நடைபோட்டது என்றும்; திராவிடம் தனி நாடாகவே இருந்து வந்தது என்பதை வரலாறு  மற்றும் இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு அண்ணாதுரை சுட்டிக்காட்டுவதுடன்; மேற்கொண்டு ஆரிய திராவிட வரலாறுகளை அறிந்துகொள்ளப் படிக்க வேண்டிய நூல்கள் என ஒரு நூற்பட்டியலையும் தருகிறார் அண்ணாதுரை (கட்டுரையின் இறுதியில் காண்க). 

அத்துடன், ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வெற்றி பெற்று நாடெங்கும்  ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற கற்பனையைப் பகுத்தறிவு வாயிலாக ஆராய்ச்சி செய்தல் வேண்டும் என்றும்; ஆரியர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பது குறித்து மொழியியல், மானுடவியல் அடிப்படையில் பாஸ்கி, இத்தாலி ஆசிரியர் செர்ஜி, டாக்டர் ஹாடன் போன்றோர் ஆய்வுகளைக் குறிப்பிட்டும்; இந்து சமூகத்தில் உயர்ந்த சாதிகள் எனப்படுவோர் தங்களுக்குப் பெருமை தருமென்று கருதி தங்களை ஆரியர் என்று கூறிக் கொள்கிறார்களா என்றும் வியக்கிறார்.

ஆரியர் – திராவிடர்கள் வேற்றுமை என்பது உண்மையே:
ஆரியர் திராவிடர் பிரிவுகள் வெறும் கற்பனை என்போருக்குப் பதில் அளிக்கும் விதத்தில் எவ்வாறு நான்கு வருணங்களைக் கற்பிக்கும் சாஸ்திரங்களே மக்கள் வாழ்வுக்கு உரிய சட்டமாகக் கருதப்படுகிறது என்றும்;  ஸ்மிருதியில் கண்டதே சட்டமாகக் கருதும் நிலை ஏற்பட்டதால் அந்தச் சட்டம், ஸ்மிருதி அடிப்படையில் ஆளுக்கொரு நீதி வழங்கும் நிலையை உருவாக்கியுள்ளது என்றும், அதன் அடிப்படையில் பொருத்தமற்ற வகையில் நீதி வழங்கப்படுகிறது என்றும் சான்றுகள் பல தரும் டி.ஏ. இராமலிங்கம் செட்டியார் உரை ஒன்றிலிருந்தும் மேற்கோள்களுடன் காட்டுகிறார் அண்ணாதுரை.

“இனியேனும் திராவிடர்கள், உண்மையை உணருவார்களா? ஆரியர் – திராவிடர்கள் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை, புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களிலிருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும்? இவ்வளவு இருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பிவிடப் படுவது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?”  என்பது இங்கு இவரால் வைக்கப்படும் மிக முக்கியமான கேள்வி. சிந்தனைக்குரிய ஒரு கேள்வியும் கூட.

தங்கள் பெருமை மறந்த தமிழர்:
கட்டுக்கதைகள் கூறும் சமயக் கருத்துக்களை, தன்மதிப்பை அழிக்கும் வழிபாட்டுச் செயல்களை, உழைப்பின்றி அடுத்தவரைச் சுரண்ட உருவாக்கப்பட்ட  ஆரியச்சடங்குகளை ஏன் தொடர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினால் முன்னோர்கள் செய்ததைத் தொடர்வதாகக் கூறுகிறார்கள் நம் தமிழ் மக்கள். ஆனால் நம் தமிழ் மூதாதையர் இத்தகைய செயல்களைச் செய்ததில்லை. அவர்களிடம் சாதிபேதங்கள் இருந்ததில்லை, அவர்களிடம் சமத்துவமும் சகோதரத்துவமும் இருந்தது என்று கூறும் அண்ணாதுரை தனது கூற்றுக்குச் சான்றாக வரலாற்று ஆசிரியர்  எம். எஸ். இராமசாமி ஐயங்கார் எழுதியுள்ள மதுரை ஜில்லா பூவருணனை நூலில் கூறியுள்ள பின்வரும் கருத்துக்களையும் மேற்கோளாகக் காட்டுகிறார்.

“ஆதி காலத்திலே திராவிடர்கள் சாதி பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்துவந்தார்கள். பின்பு ஆரியர் திராவிட நாட்டில் வந்து குடியேறித் திராவிட மன்னர்களின் தயவைப் பெற்றார்கள். ஆரியரில் சிலர் அந்த மன்னர்களுக்குக் குருவானார்கள். அதன் பின்னர்தான் தமிழ்நாட்டில் ஆரிய “நாகரிகம்” பரவத் தொடங்கிற்று. ஆரிய மதமும் தெய்வங்களும் ஆசாரங்களும் சாதி வித்தியாசங்களும் தமிழ்நாட்டில் வேரூன்றி விட்டன” எனவும், சங்க இலக்கியங்கள் வழி இக்கருத்துகள் புலப்படுவதாகவும், அக்காலத்தில் தமிழகத்தில் பெளத்த சமண மதங்கள் தமிழரிடம் பரவியிருந்ததாகவும் கூறும் எம். எஸ். இராமசாமி ஐயங்கார், மேலும், “தற்காலத்தில் குடும்பத்திலிருக்கும் ஒருவன் ஒரு மதத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவினால், அவனைச் சாதியில் சேர்த்துக்கொள்வது வழக்கமில்லை. சங்க காலத்தில் அப்படியில்லை. ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் எந்த மதத்தை வேண்டுமானாலும் அனுசரிக்கலாம். அதனால், அவனுக்கு, யாதொரு குற்றமும் ஏற்படாது. குடும்பத்தார் அவனை நீக்குவதும் இல்லை. இது (அக்காலத்) தமிழர்களுடைய விரிந்த மனப்பான்மையையும், நாகரிக உயர்வையும் காட்டுகிறது” என்றும் கூறுகிறார்.

தமிழ்மொழியின் இலக்கண இலக்கியங்களிலும் ஆரிய ஊடுருவல்:
“இலக்கியங்களிலே பற்பல மூடநம்பிக்கைகள் புகுந்து பொய்ம்மை மலிந்து, மக்கள் கருத்தைப் பாழாக்குகிறது என்பது ஒருபுறமிருக்க, புலவர் பெருமக்கட்கே உரிய இலக்கணங்களின் நிலைதான் என்ன?” என்று வினவும் அண்ணாதுரை, இலக்கண நூல்களிலும் ஆரிய வர்ணாசிரமபேதம் நுழைந்துள்ளதைக் காட்டுகிறார். “பாட்டியலில், பன்னீருயிரும் முதலாறு மெய்யும் பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறுமெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது” என்ற குறிப்பை எடுத்துக்காட்டி, “‘ல, வ, ற, ன” என்ற நான்கும் வைசிய எழுத்துகளாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துகளாம். இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது,” என்று கூறும் அண்ணாதுரை, தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள ஆனால்  வடமொழியில் இல்லாத எழுத்துக்கள் சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொருளென்ன? என்றும் கேட்கிறார்.

பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப்பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப்பாவாலும் பாட வேண்டும் என்று (இலக்கியத்தில்  வழக்கற்று இருக்கும் ஒரு முறை இது) இலக்கணத்தில் விதியாகப் புகுத்தப்பட்டுள்ளதையும்; கலம்பகத்தில் “தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 95-உம், அரசருக்கு 90-உம், அமைச்சருக்கு70-உம், வணிகர்க்கு 50-உம், மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டுமென்பது” பாட்டியல் விதிகளாகக் கூறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டும் அண்ணாதுரை “தமிழ்ப்பா இயற்றுமிடத்திலும், ஆரியத்துக்கு முதல் தாம்பூலமா?” என்றும், “மனுநீதியைவிடப் பாட்டியல் எவ்வகையில் மாறுபட்டிருக்கின்றது?” என்றும் வினா எழுப்புகிறார்.

ஆரியர் பண்பாடும் தமிழர் பண்பாடும்:
ஆரியம் கலக்கா பழந்தமிழர் காலம் எது?  என்று அறிய விரும்பினால், சோமசுந்தர பாரதியார் மொழியாய்வின் வழி கூறும், “ஆரியர் ஆதிக்கத்தைத் தமிழரிடத்துச் சுமத்தமுடியாத காலம் கி.பி. 2, 3-ஆம் நூற்றாண்டு. அதாவது ஆரியர் வருகையால் தமிழிலுள்ள சில பதங்கள் ஆரியத்திலும், ஆரியப் பதங்கள் சில தமிழிலும் ஏறத் தொடங்கிய காலம்.  அன்று தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இல்லை. அதன் பின்னர் 3-ஆம் நூற்றாண்டில்தான், தமிழில் சில ஆரியப் பதங்கள் கலக்க நேரிட்டது.  அதாவது சிலப்பதிகாரத்திற்கு முந்திய காலம். ஏன்? சிலப்பதிகாரத்திலேயே ஆரியம் கலந்த முறை வந்துவிட்டது” என்றும் கருத்தை அண்ணாதுரை நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.

ஆரியம் கலக்கும் முன் தமிழர் வாழ்வின் சடங்குகள் எவ்வாறு ஆரியரிடம் இருந்து வேறுபட்டிருந்தன என்பதையும் பழந்தமிழர் வாழ்ந்த தற்சார்புகொண்ட, காதல், இல்லறவாழ்வு, வாழ்வியல் முறைகளையும்;   அடிப்படையில் ஆரியர் குடும்ப அமைப்பும் கொள்கைகளும் தமிழரிடம் இருந்து  வேறுபட்டிருந்ததையும் அதற்கான காரணத்தையும் குறிப்பிடும் சோமசுந்தர பாரதியார், “எவ்வழி நோக்கினும், ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றிற்கொன்று மாறுபட்டது” என்று காட்டும் கருத்துகள்  தமிழர் தம் கருத்தில் இருத்த வேண்டியவை.

உள்ளதைத்தான் எழுதினார் அண்ணாதுரை:
“கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும், ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களுமாவது, இந்தத் துறைகளிலே சற்று உழைப்பார்களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல் உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு மறைந்துபோனது போல, ஒரு காலத்திலே உலகப் புகழ் வாய்ந்த திராவிட இனமும் அழிந்தேதான் போகும்! எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறதோ அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்” என்று விழிப்புணர்வு வர அறிவுரையும் கூறி எச்சரிக்கையும் விடுக்கிறார் அண்ணாதுரை. புரட்சிக் கவி பாரதிதாசனின் ஆரிய அடிவருடியாக இருக்க மாட்டேன் என்று முழங்கும்  பாடல் வரிகளைக் கொடுத்து எழுச்சியூட்டுகிறார். “ஆரியத்தைக் குறித்து இங்குத் திரட்டித் தொகுத்துத் தரப்பட்டுள்ள விசயங்களைச் சற்றே பொறுமையுடன், அக்கறையுடன் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாருங்கள். ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிஞர்கள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின்! பிறருக்குக் கூறுமின்! அறப்போர் தொடுமின்! ” என்ற வேண்டுகோளையும் வைக்கிறார் அண்ணாதுரை.

காதலுக்குத் தகுதியற்ற ஓர் அழகியிடம் மயங்கி, நண்பனின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது காதல் வலையில் சிக்கிக் கட்டுண்டு, உடல் நலம் சீரழிந்த பின்னர் நண்பனிடம் புலம்பும் ஒருவராக ஆரியமாயையில் வீழ்ந்து அழிவுற்ற தமிழரையும், அவருக்கு நல்லுரை கூறும் நண்பராகக் கழக இயக்கத்தினரை ஒப்பிட்டு உருவகப்படுத்தி  அண்ணாதுரை எழுதியுள்ள பகுதி இலக்கியச்சுவை மிக்கதும் கூட.

நர்மதை ஆற்றுக்கு மேலேதான், வடநாட்டில் ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை போன்ற குறிப்புகள் மூலம் அண்ணாதுரை வடக்கு தெற்கு என்று திசைகள் குறிப்பதற்குப் பதிலாக,  வரைபடங்களில் காணுவதைப் போல மேல் கீழ் எனத் திசையைக் குறிப்பிடும் வழக்கமுள்ளவர் என்ற தகவல் வியப்பளிக்கிறது. தன்னுடைய கருத்துகள் சராசரி மக்களையும் சென்றடையச் செய்யும் நோக்கத்தினால் இது போன்ற சொற்பயன்பாடுகள் கொண்டதா அவரது முயற்சி எனத் தெரியவில்லை.

திராவிட நாட்டுப் பிரிவினை, இந்து – முஸ்லீம் ஒற்றுமை போன்ற அக்காலத் திராவிட இயக்கக் கொள்கைக் கருத்துகளின் தாக்கமும் நூலில் ஆங்காங்கே விரவப்பட்டுள்ளது. “மிக்க தந்திரத்தோடு, ஆரியர் காங்கிரசின் துணையை நாடியோ, இந்து மகாசபையின் துணைகொண்டோ, வெள்ளையரின்  துணை கொண்டோ, திராவிட மறுமலர்ச்சியைத் தடுக்க முயன்றால் “தாமதம்”, ஏற்படக் கூடுமே தவிர, ”தடை”  ஏற்படாது. முடிவு  பிரிவினைதான்!” என்று குறிப்பிடும் வரிகளின் மூலமும்;  “பாகிஸ்தானம் எப்படி வெறுங்கனவோ, அப்படியே திராவிட ஸ்தானமும் கனவுதான்” என்று கூறி, மனச்சாந்தி பெறுகிறார் சாஸ்திரியார்” என்று குறிப்பிடும் வரிகளின் மூலமும், இந்த நூல் எழுதப்பட்ட காலம்,  இந்தியா விடுதலைப் பெறாத காலம் என்பது தெளிவானாலும், அண்ணாதுரை நூலுக்காகத் தண்டனை பெற்றது விடுதலைப் பெற்ற இந்தியாவில் எனப் பிற குறிப்புகள் சுட்டுகின்றன.

முடிவுரை:
நூலைப் படித்த பின்னர் எஞ்சியிருப்பது, மனதில் நிழலாடுவது… தனது மக்களுக்கு விழிப்புணர்ச்சி வர, யாரையும் ஏசாத, ஆய்வாளர்கள் கண்ட உண்மைகளை மேற்கோள்களுடன்
தொகுத்துக்  கொடுத்த ஒரு சிறு நூலுக்குச் சிறைத் தண்டனையும் அபராதமும் சரியா என்ற கேள்வி மட்டுமே. இக்காலத்தில் யூடியூப் காணொளிகள் வழி, சமூக வலைத்தளங்கள் வழி தரக்குறைவான எத்தனை எத்தனையோ பொய் புரட்டுக் கருத்துகளை, காது கூசும் வசைகளைத் தினசரி எதிர்கொள்வது வாழ்க்கையாகிவிட்டது. அவ்வாறு மக்களிடையே கலகம் கிளப்புவதற்குச் சான்று காட்ட எச். ராஜா என்பவர் மட்டுமே போதும்.

அண்ணாதுரை எதிரியையும் மதித்துப் பேசும் பண்பாளர் என்பதும் கூட அவரை நன்கு அறிந்த பலர் முன்வைக்கும் தகவல். யாரையும் அவமதிக்காதவாறு பிறரின் ஆய்வு முடிவுகளைத் தொகுத்து, தமிழக மக்கள் அறிய வேண்டிய வரலாற்று “உண்மைகளை” மக்கள் முன் வைத்த ஒரு நூலுக்காகச் சிறைத் தண்டனை என்பது என்றென்றும் நீதிக்கு நெருடல் தரக்கூடிய ஒரு தீர்ப்பு என்பதில் ஐயமில்லை. அத்துடன் இந்த நூலைத் தடை செய்வதற்கான முறையில் நூலில் எதுவும் எழுதப்படவுமில்லை.  மாறாக இது பரிசு கொடுத்துப் பாராட்டப்பட்டிருக்க வேண்டிய ஒரு நூல் என்பதே சான்றோர் முடிவாக இருந்திருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படிப்பதில் முதன்மையானவராக இருந்தவராம் அண்ணாதுரை. உடல்நலம் குன்றிய நிலையில், அறுவைசிகிச்சைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்தை மாற்றினால் அதற்குள் படிக்கும் நூலை முடித்துவிடலாம் என்று கருதி மருத்துவரிடம் வேண்டுகோள் விடுத்தவர் அண்ணாதுரை என்பது தமிழகம் அறிந்த செய்தி. அத்தகைய நூலார்வலரான அண்ணாதுரை சிறைத்தண்டனையை இடையூறின்றி நூல்களைப்படிக்க, தாம் நினைத்ததை எழுதக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே மாற்றிக் கொண்டிருந்திருப்பார் என்பது திண்ணம். ஆம், சிறையில் ஆரியமாயை எதிர்க்கும் தமது வாளை அண்ணா இடையூறின்றிக் கூராகப் பட்டை தீட்டிட அவருடைய  எதிர்ப்பாளர்களே உதவி செய்துள்ளார்கள் என்பதை எவராலுமே ஊகிக்க முடியும். 


நூல் குறிப்பு:
ஆரிய மாயை
ஆசிரியர்: அறிஞர் அண்ணா 
அறிஞர் அண்ணா அறக்கட்டளை
http://annavinpadaippugal.info/katturaigal/aariyamaayai.htm


சான்றாதாரங்கள்:
* Hindu Manners Customs And Ceremonies, by Abbe J. A. Dubois, Publication date 1905, Page 289
https://archive.org/stream/in.ernet.dli.2015.280505/2015.280505.Hindu-Manners#page/n317/mode/2up/

முத்தமிழ் வித்தகர் அண்ணா…
http://keetru.com/index.php/component/content/article?id=3908

சிறுகதை வரலாற்றில் அண்ணாவின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது!  ச.தமிழ்ச்செல்வன், விகடன், 03/02/2018.
https://www.vikatan.com/news/miscellaneous/115321-literature-intelligence-of-cnannadurai.html

ஆரிய மாயை – விக்கிப்பீடியா
https://ta.wikipedia.org/s/1yui

---

ஆரிய திராவிட வரலாறுகளை அறிந்துகொள்ளப் படிக்க வேண்டிய நூல்கள் என அண்ணாதுரை குறிப்பிடும் நூல்கள்:
•   ராமேஸ் சந்திர தத் எழுதிய “புராண இந்தியா”
•   ராமேஸ் சந்திர மசும்தார், எழுதிய “பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்.”
•   சுவாமி விவேகானந்தர், “இராமாயணம்” என்னும் தலைப்பில் பேசிய பேச்சு.
•   1922 கேம்பிரிட்ஜ் பிரசுரித்த, “பழைய இந்தியாவின் சரித்திரம்.”
•   ராதா குமுத முகர்ஜி எழுதிய “இந்து நாகரிகம், ரிக்கு வேதம்.”
•   ஜேம்ஸ் மர்ரே எழுதிய “அகராதி”
•   பண்டர்கார் கட்டுரைகள்.
•   டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய “தென் இந்தியாவும் இந்தியக் கலையும்.”
•   P.T. சீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம்”
•   ஜெகதீச சந்தடட் எழுதிய “இந்தியா – அன்றும் இன்றும்”
•   A.C. தாஸ் எழுதிய “வேதகாலம்”
•   C.S. சீனிவாச்சாரியார் எழுதிய “இந்தியச் சரித்திரம்”, “இந்து இந்தியா”
•   H.G.வெல்ஸ் எழுதிய “உலக சரித்திரம்.”
•   சகலகலா பொக்கிஷம் என்னும் “நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா”
•   C.G. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு”
•   ஹென்றி பெரிஜ்  எழுதிய விரிவான இந்திய சரித்திரம்”
•   இ.பி. ஹாவெல் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி”
•   G.H. ராலின்சன் எழுதிய “இந்தியா”
•   நாகேந்திரநாத்கோஷ் எழுதிய “ஆரியரின் இலக்கியமும் கலையும்”
•   வின்சென்ட் ஏ ஸ்மித் எழுதிய “ஆக்ஸ்போர்ட் இந்திய சரித்திரம்”
•   “இம்பீரியல் இந்தியன் கெஜட்”
•   சர். வில்லியம் வில்சன் ஹண்டர் எழுதிய “இந்திய மக்களின் சரித்திரம்.”
•   ராகோசின் எழுதிய “வேதகால இந்தியா”


நன்றி: சிறகு 
ஏப்ரல் 28, 2018

#சிறகு, #அண்ணா, #நூல் மதிப்புரை, #Themozhi 



Saturday, April 14, 2018

இசையறிஞர் சுப்பராம தீட்சிதர்

இசையறிஞர் சுப்பராம தீட்சிதர்


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் எட்டயபுர அரண்மனையின் அரசவைக் கர்நாடக இசைக் கலைஞராக இருந்தவர் திரு. சுப்பராம தீட்சிதர். இவர் எழுதிய  "சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி" (Sangita Sampradaya Pradarsini/ "ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்சினீ") என்ற நூல்  மிகவும் அரிய இசை நூல் எனப் பாராட்டப்படும் ஓர் இசைக்களஞ்சியம். 


திரு. சுப்பராம தீட்சிதர் (Subbarama Dikshitar, 1839-1906)   இசை மும்மூர்த்திகள் எனப்படுபவர்களில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் அவர்களின் இசைக்குடும்பத்தைச் சார்ந்தவர். எட்டயபுரம் மன்னரின் அரசவை கர்நாடக இசைக் கலைஞராகத் தனது இறுதி நாட்களில் பணியாற்றினார் முத்துசாமி தீட்சிதர்.  அவருக்குப் பின்னர் அவரது இளைய சகோதரர் பாலுசாமி தீட்சிதர் அப்பொறுப்பில் இருந்தார். பாலுசாமி தீட்சிதரது மகள் அன்னபூரணிக்கும் திருவாரூரைச் சேர்ந்த சிவராம ஐயருக்கும் 1839 இல் பாலசுப்ரமணிய சர்மா என்ற இயற்பெயர் கொண்ட இரண்டாவது மகனாகப் பிறந்தார்  சுப்பராம தீட்சிதர்.  எட்டயபுர அரசின் 'இராஜா ஜெகதீஸ்வரராம வெங்கடேஸ்வர எட்டப்பராஜா' அவர்களும் ஒரு இசை மேதை.  

 மன்னரின் ஆலோசனையால் தாய்வழிப் பாட்டனார் பாலுசாமி தீட்சிதர் தனது பேரனை மகனாகத் தத்தெடுத்து தனது இசை வாரிசாக உருவாக்கினார். சுப்பராம தீட்சிதர் தனது 17 ஆம் வயதில் சொந்தமாக இசை  புனையத் துவங்கினார், அட தாள வர்ணத்தை தர்பார் இராகத்தில் இயற்றி அரசர் முன்னர் ஓர்  இசைநிகழ்ச்சி அளித்தார். அரசவையில் பலர் அந்த இசையை அவரது தந்தை எழுதி தனது மகன் புகழ் பெற உதவியுள்ளார் எனக் கருதினர். ஆகவே அவரது திறமையைச் சோதிக்க விரும்பிய அரசர் தாம் வெளியில் சென்று ஒரு மணிநேரத்தில்  திரும்பி வருவதற்குள் யமுனா இராகத்தில் பாடல் அமைத்து தனக்குப் பாடிக் காட்டும்படி உத்தரவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் சுப்பராம தீட்சிதர் அரசர் கூறியவாறே அவர் கொடுத்த இசைக் குறிப்புகளை உள்ளடக்கிய பாடலொன்றை இசையமைத்து மன்னருக்குப் பாடிக் காட்டினார்.  அரசர் மகிழ்ந்து அவருக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டி பத்துப் பொற்காசுகள் பரிசளித்தார்.   வளர்ப்புத் தந்தைக்குப் பிறகு  சுப்பராம தீட்சிதரும் எட்டயபுர  அரசவை கர்நாடக இசைக் கலைஞர் பொறுப்பை வகித்தார்.  இவர் இசைக்காற்றிய மிகப் பெரிய தொண்டாகக் கருதப்படுவது இவர் எழுதிய சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி என்ற இசைநூலாகும்.  

ஏ. எம். சின்னசாமி முதலியார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று அரசு தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவர். ரோமன் கத்தோலிக்கரான  முதலியார் மேற்கத்திய இசை பயின்றவர்.  இவர் கர்நாடக இசையை விரும்பியதுடன்,  மேற்கத்திய இசைபோல இசைக்குறியீட்டுடன் இந்திய இசையை ஏட்டில் பதிவு செய்ய விரும்பி தியாகராஜ கீர்த்தனைகள் உள்ளிட்ட இசை மும்மூர்த்திகளின் பாடல்களைச்  சேகரித்து இசைக்குறியீடுகளுடன் எழுதிப் பதிப்பித்து வந்தார்.  சுப்பராம தீட்சிதரின் இசைப்புலமையை அறிந்து அவரால் தான் இந்திய இசையைக் கற்றுக்கொள்ள முடியும் என்று கருதி சுப்பராம தீட்சிதரை சென்னைக்கு அனுப்பி வைக்கும்படி எட்டயபுர அரசருக்கு  வேண்டுகோள் விடுத்தார். அரசரும் ஏற்றுத் தனது அரசவை இசையறிஞரைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார். 

ஏ. எம். சின்னசாமி முதலியார், திரு. சுப்பராம தீட்சிதரைத் தமது இசையாசிரியராக ஏற்றுக் கொண்டி இசை கற்று அவருடன் இணைந்து இசைநூல் உருவாவதில் பெரும்பங்கு வகித்தார். பணி ஓய்வு பெற்ற ஏ. எம். சின்னசாமி முதலியாருக்குக் கண்பார்வை மங்கத் தொடங்கியதுடன், நிதிநிலையும் குறையத்தொடங்கியது. இந்த நிலையில் 1899 ஆம் ஆண்டு, எட்டயபுர அரசர் முடிசூட்டும் விழாவிற்கு வருமாறு  ஏ. எம். சின்னசாமி முதலியாருக்கு அழைப்பு விடுத்தார்.  இதை ஒரு  நல்ல வாய்ப்பாகக் கருதி அரசரிடம் உதவிபெற எண்ணினார் ஏ. எம். சின்னசாமி முதலியார். சுப்பராம தீட்சிதர் முதலில்  இசையை நூலாக வெளியிடுவதில் விருப்பமின்றி இருந்தார். இசையைத் தனது குலச்சொத்து என்று கருதினார்.  ஆனால் இசையார்வம் கொண்ட  ஏ. எம். சின்னசாமி முதலியார் அளித்த விளக்கங்களாலும் பரிந்துரைகளாலும், முதலியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி எட்டயபுர அரசர் கொடுத்த ஆதரவினாலும் உத்தரவினாலும் பிறகு நூலாக வெளியிட ஒப்புதல் அளித்தார். திரு. சுப்பராம தீட்சிதர்   நான்கு பாகங்களைக் கொண்ட "ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்சினீ" என்ற இசைநூலைத் தமது  அறுபதாவது வயதில் தொடங்கி நான்காண்டுகள் கடுமையாக உழைத்து  இந்நூலைத் தெலுங்கு மொழியில் எழுதினார். தனது 65 ஆம் வயதில் 1904 ஆம் ஆண்டில்  இந்நூலை வெளியிட்டார். 

சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி இசைநூல் ஒரு  மாபெரும் இசைக்களஞ்சியமாகக் கருதப்படுகிறது.  முத்துசாமி தீட்சிதரின் பாடல்கள், அக்கால இசைக் கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள், கர்நாடக இசையின் கீர்த்தனைகள், வர்ணங்கள் எனப் பல இசைக்குறிப்புகள் உள்ளடக்கிய நூலிது.  ஸ்வரங்களும், கமகங்களும் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.  இசையில் வல்லவரும்  இசையார்வம் மிக்கவருமான  எட்டயபுர மன்னர்,  சுப்பராம தீட்சிதர் அவர்களின்  'ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்சினீ'  நூல் வெளியீட்டிற்குப் பொருளுதவியும் செய்து, தனக்கு உரிமையான 'வித்தியா விலாசினி' அச்சகம் மூலம் வெளியிட்டும் உதவினார்.  இந்த இசைநூல் உருவாகி வெளியாகி கர்நாடக இசை அச்சேறியதற்கு எட்டயபுர மன்னரும் ஏ. எம். சின்னசாமி முதலியாரும் அளித்த பங்களிப்பு இன்றியமையாதது.  இருப்பினும் நூல் வெளியாவதற்கு முன்னரே ஏ. எம். சின்னசாமி முதலியார் மறைந்துவிட்டார். சுப்பராம தீட்சிதர்   மேலும் சில இசைநூல்களை எழுதியதுடன் வில்லிபாரதத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் நூல் எழுதும் திட்டங்கள் அவரிடம்  இருந்தாலும் நிறைவேற்ற வழியின்றி  1906 ஆண்டு மறைந்துவிட்டார். 

எட்டயபுர அரண்மனையுடன் தனது வாழ்நாளில் தொடர்பு கொண்டிருந்த மகாகவி பாரதியார்  இசையின் மீது பற்று மிகக் கொண்டவர். அவர் சுப்பராம தீட்சிதரின் இசைத்தொண்டை மிகவும் மதித்தவர். சுப்பராம தீட்சிதர் இறந்தபொழுது மனம் வருந்தி, 

“மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்
தங்களையும் வணங்கலாதேன் 
தன்னனைய புகழுடையாய், நினைக்கண்ட
பொழுதுதலை தாழ்ந்து  வந்தேன்; 
உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம்
எனக் கருதி வந்தேன், அந்தோ
இன்னமொரு காலிளசைக் கேகிடின், இவ் 
எளியன்மனம் என்படாதோ?"   

யாருக்கும் தலைவணங்கியிராத எனது  தலைதாழ்த்திய வணக்கம் என பாரதியார் 26 நவம்பர் 1906  அன்று திரு. சுப்பராம தீட்சிதர் அவர்களின் மறைவுக்கு வருந்தி  இரங்கற்பா வரைந்துள்ளார். 

பின்னர் தமிழிலும் ஆங்கிலத்திலும்,  72 மேளகர்த்தா இராகங்களை உள்ளடக்கிய  இந்த நூல் ஐந்து பாகங்கள் கொண்ட நூல் வரிசையாகப் பதிப்பு கண்டது.  சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதன் அவர்களும் வித்துவான் பி. ராஜம் ஐயர் அவர்களும் இந்த இசைநூலைத் தமிழ் எழுத்துப் பதிப்பு செய்து, அதைச் சென்னை மியூசிக் அகாடமி 1961 ஆம் ஆண்டு  வெளியீடு செய்தது. மறுபதிப்பு மீண்டும் 2006 ல் வெளியிடப்பட்டது.  தெலுங்கில் எழுதி சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக  இசையின் கருவூலமாகக் கருதப்படும் இந்த நூலைச் சென்னை மியூசிக் அகாடமி, ஆங்கில எழுத்துப் பதிப்பில், 2011  ஆம் ஆண்டு நோபல் பரிசு  பரிசு பெற்ற  வெங்கட்டராமன் ராமகிருஷ்ணன் தலைமையில் வெளியிட்டது.


தகவல் தந்து உதவியவை:
[1] The Music Academy, Madras -
https://musicacademymadras.in/publications/other-publications

[2] Sangita Sampradaya Pradarshini - 
http://ibiblio.org/guruguha/ssp_cakram1-4.pdf  

[3] Sangita Sampradaya Pradarsini in English
http://www.thehindu.com/news/cities/chennai/Sangita-Sampradaya-Pradarsini-in-English/article15411845.ece

[4] Subbarama Dikshitar - 
https://en.wikipedia.org/wiki/Subbarama_Dikshitar

[5] Subbarama Diksitar's Sangita Sampradaya Pradarshini, Dr. P. P. Narayanaswami - 
https://archive.org/details/AENarayanaswamiPPSubbaramaDikshitarSangitaSampradayaPradarsini0288

[6] பாரதியார் யாத்த  இரங்கற்பா - 
http://ibiblio.org/guruguha/sd_bharati.pdf


நன்றி:  சிறகு 
ஏப்ரல் 14, 2018


#சிறகு, #இசை, #Themozhi 


Sunday, March 11, 2018

மீனாம்பாள் சிவராஜ்

மீனாம்பாள் சிவராஜ்




தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று அன்றைய சென்னை மாகாண முதன்மை அமைச்சர் ராஜாஜி  21.04.1938 அன்று ஆணையைப் பிறப்பித்தபொழுது அதை எதிர்த்து முதலில் குரல் எழுப்பியவர் அன்னை மீனாம்பாள் சிவராஜ். முதல் இந்தி எதிர்ப்புப் பேரணியில் சிறப்புரையாற்றினார். “பெண்களின் விடுதலையே ஆண்களின் விடுதலை” என்று முழக்கமிட்ட முன்னணிப் பெண்ணியத் தலைவர், ஈ.வெ.ரா. அவர்களை நாம் “பெரியார்” என அழைக்கக் காரணமானவர், அண்ணல் அம்பேத்கர் இயக்கத்திலும் பங்கேற்று அகில இந்திய அரசியலிலும் முத்திரை பதித்து அம்பேத்கரால் எனது அன்புச் சகோதரியே என்று அழைக்கப்பட்டவர், தலித் மக்களுக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்ற முதல் பெண்மணி, கௌரவ நீதிபதியாகப் பணியாற்றியவர், பல்கலைக்கழக செனட் அமைப்புகளில் பங்கேற்று வழிநடத்தியவர் எனப் பல குறிப்பிடத்தக்கச் சமூகப்பணிகளை ஆற்றிய மீனாம்பாள் அவர்கள்,  புகழ்பெற்ற தாழ்த்தப்பட்டோர் இயக்கத் தலைவர் சிவராஜ் அவர்களின் துணைவியாரும் ஆவார்.

பர்மாவிற்குக் குடிபெயர்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின், முதன் முதலாகக் கப்பலோட்டிய மதுரைப் பிள்ளை என்றழைக்கப்பட்ட செல்வந்தரின் வழித்தோன்றலாக பர்மாவில் பிறந்து, வளர்ந்து தனது உயர்கல்விக்காக இந்தியா வந்தவர் இவர். நீதிக்கட்சியில் இணைந்து கணவருடன் பணியாற்றியவர், பின்னர் பெரியார் மீது பேரன்பு கொண்டவராகச் சுயமரியாதை இயக்கத்திலும் தொடர்ந்தார். சாதி எதிர்ப்பு ஆதரவாளரான இவர் சைமன் கமிஷனை ஆதரித்து உரையாற்றி 1928 ஆண்டு தனது அரசியல் வாழ்வைத் துவக்கினார்.



மீனாம்பாள் 31-1-1937 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஆதிதிராவிடர் மாநாட்டிற்கும் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். அவர் அன்று வழங்கிய உரையின் சுருக்கம் இக்கட்டுரை. இந்துமதம் கடைப்பிடித்த வர்ணாசிரமத் தர்மமே நாட்டு மக்களின் கல்வி மற்றும் ஒற்றுமை சீர்குலைவு, மகளிர் வாழ்ந்த அடிமைநிலை வாழ்வு யாவற்றுக்கும் காரணம் என இன்று நாம் அறிவோம். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் மீனாம்பாள் தனது உரையில் நாட்டின் கல்வி, ஒற்றுமை, சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மகளிர் முன்னேற்றம், நீதிக்கட்சி செய்த மனிதநேய நன்மைகள் ஆகியவற்றைக் குறித்து தமது கருத்துகளைக் கீழ்வருமாறு அந்தத் தலைமையுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஓர் சமுகமோ, ஓர் நாடோ விடுதலையடைய வேண்டுமானால் “கல்வி”, “ஒற்றுமை”, “மகளிர் முன்னேற்றம்” இம்மூன்றும் மிகவும் அவசியமானவை. இந்தியாவின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது; சாதி வேற்றுமைகளால் சமூகத்தில் ஒற்றுமையும் குறைவு; உலக அளவில் ஒப்பிடுகையில் இந்திய மகளிர் கேவலமாக நடத்தப்படுகிறார்கள், மகளிரின் பிற்போக்கான நிலை நாட்டையும் பிற்போக்கான நிலையில் வைத்திருக்கிறது.

நம் நாட்டின் ஆண்கள் அடைந்துள்ள கல்விநிலை வளர்ச்சியே பிற்போக்கான நிலையில் காணப்படுகையில் பெண்களின் கல்விநிலை குறித்து என்ன சொல்வது? அரசு மேற்கொண்ட முயற்சியால் பல கல்வி வாய்ப்புகள் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அளிக்கப்பட்டு வருகையில், இதைக் கைநழுவவிடாமல் நம் சமூகத்தார்(ஆதிதிராவிடர்), இம்மாதிரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாம் யாவரும் கல்வியில் தேர்ந்து, சமூகத்தில் உள்ள மற்றவர் நிலைக்கு நாமும் உயர வேண்டும்.

ஓர் குடும்பமோ, ஓர் சமூகமோ, ஓர் தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் மக்களிடம் ஒற்றுமை மிகவும் அவசியம். நம் நாட்டின் சாதிப்பாகுபாடுகள் மக்களின் ஒற்றுமையைக் குலைத்து நம் நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டது. நம் நாட்டில் சாதிகள் அறவே ஒழிய இன்னமும் பலகாலம் ஆகலாம். நாமும் மற்றவர்களைப் போல மனிதர்களாக நடத்தப்பட, வாழ்வில் முன்னேற, எல்லா உரிமையும் எங்களுக்கும் உண்டு என்று நிரூபிக்கும் பொருட்டு நாம் ஒற்றுமையாக இயங்க வேண்டும்.

ஒற்றுமையாக இயங்க நாம் சங்கங்கள் அமைக்க வேண்டும், சங்கங்கள் வாயிலாக அனைவரும் சேர்ந்து பழகுவதால் நமக்குள் ஒற்றுமை ஏற்படும், கூட்டாக நமக்கு வேண்டிய பள்ளிக்கூடம், கிணறு முதலிய சௌகரியங்களைச் சாதித்துக்கொள்ளவும், அதன் மூலம் கல்வி பெற்று முன்னேற்றமடையவும், ஒற்றுமையின் பலத்தால் அரசின் கவனத்தைக் கவரவும் முடியும். ஒடுக்கப்பட்ட இனத்தவர் கூட்டுறவுச் சங்கங்களால் உதவி செய்யப்படாமல் புறக்கணிக்கப் படும்பொழுது அவர்கள் தங்களுக்கான கூட்டுறவுச் சங்கங்களைத் தாமே உருவாக்கிக் கொண்டு ஒற்றுமையாகப் பயன்பெற்று மேல்நிலைக்கு வரவேண்டும்.

பெண்கல்வி என்பது குழந்தைகளை வளர்த்துப் பராமரித்து அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதன் அருமையை உணர்த்தி அக்குடும்பத்தை உயர்த்தும். பெண்களின் அரசியல் பங்களிப்புகளுக்கு வழி வகுத்து சமூக முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இது நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இதனை மனதில் கொண்டு பெண்கல்விக்கு வழிவகுப்பது இன்றியமையாதது.

நீதிக்கட்சி தோன்றிய பிறகே தீண்டப்படாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்களாகியவர்களுடைய பிரச்சனைகள் அரசியல் பிரச்சினையாக வரமுடிந்தது. நீதிக்கட்சி சட்டமியற்றி கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நில வசதி, உத்தியோக வசதி, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியன அனைவருக்கும் கிடைக்க வழி வகுத்தது. தெரு, குளம், பொதுச் சாவடி, பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் அனைவரும் நுழைய வாய்ப்பளித்தது. இதன் பிறகே ஆதிதிராவிடர்களைக் கவர காங்கிரஸ்காரர்கள் “ஹரிஜன சேவா சங்கம்” என்ற ஒன்றைத் துவக்கிக் கொண்டு பெயருக்குக் கண்துடைப்பு செயல்களைச் செய்து மேல் ஜாதிக்காரர்களே பயன் அடையும்படி செய்தார்கள். பூனா ஒப்பந்தம் என்ற நெருக்கடி கொடுத்து தேர்தல்களின் மூலம் ஆதிதிராவிடர்களுடைய பிரதிநிதிகள் வருவதைத் தடுத்தார்கள். அதுமட்டுமல்ல அந்த பூனா ஒப்பந்தத்தில் ”காந்தியின் உயிரைக் காப்பாற்ற” என்பதற்காகவே கையெழுத்திட்டவர்களுக்கே காங்கிரஸ்காரர் எதிர் வேட்பாளரையும் நிறுத்தி தொந்தரவு கொடுத்தார்கள். ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையில் நன்மை செய்பவர் யாரெனத் தெளிவாக விளங்கும்.



துணை நின்றவை:
முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தொடங்கி வைத்தது யார்…?
http://dalitshistory.blogspot.in/2016/03/blog-post_62.html

திருநெல்வேலி ஜில்லா – ஆதிதிராவிடர் மகா நாடு, ஸ்ரீமதி மீனாம்பாள் சிவராஜ், தலைமைப் பிரசங்கம், 31.1.1937
http://www.subaonline.net/TPozhil/e-books/THF-Meenambal%20Speech-1937.pdf


நன்றி:
திண்ணை
மார்ச் 11 , 2018


#திண்ணை, # வரலாறு, #பெண்ணியம், #Themozhi