Saturday, January 30, 2021

இலங்கை தெதிகம கோட்டாவேரா – யானை விளக்கு

இலங்கை தெதிகம கோட்டாவேரா – யானை விளக்கு



மின்விளக்குகள் காலத்தில் வாழும் நமக்கு ஒளி வழங்க எண்ணெய் விளக்குகள் என்பவை தேவையற்றுப் போனாலும், எண்ணெய் விளக்குகளையும் மெழுகுவர்த்திகளையும் மரபுசார் விழாக்கள் மற்றும் வழிபாடுகள் காரணமாக நாம் விடாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையும் இன்று வழக்கில் உள்ளது.  எண்ணெய் விளக்குகள் இல்லாத நாளில்லை வாழ்வுமில்லை என்று சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் நம் முன்னோர்கள் வாழ்ந்திருந்தனர்.  வகைவகையான எண்ணெய்களை எரியூட்டவும், பற்பல உருவங்களில் வடிவமைக்கப்பட்ட விளக்குகளையும் பயன்படுத்தி வந்தனர்.

பெரும்பாலும் எண்ணெய் விளக்குகள் என்பவை எண்ணெய் நிரப்பி வைக்கும் ஒரு கிண்ணமும் அதில் ஒரு திரியும் போடப்பட்ட எளிய மண் அகல் விளக்குகள் அமைப்பில் தொடங்கி, சரம் சரமாகத்தொங்கும் பல அடுக்குகள் கொண்ட உலோக விளக்குகள், சற்றே உயர்த்தி அமைக்கக் கீழே தாங்கிகள் கொண்ட குத்து விளக்குகள், காற்றில் அணையாமல் இருக்கும் வகையில் ஒரு சில தொழில்நுட்ப முன்னேற்றங்களும் இவற்றில் உண்டு.  இருப்பினும், அடிப்படை அமைப்பு என்னவோ விளக்கு என்றால் அதற்கு எண்ணெய் கொள்ளும் ஒரு கிண்ணமும் திரியும் என்பதாக மட்டுமே இருந்தது.  இவற்றிலிருந்து மாறுபட்டு தொழில் நுட்பத்தைப் பயன் கொண்டு, மனித உதவியின்றி தானே எண்ணெய் நிரப்பிக் கொண்டு நீண்ட நேரம் எரியக் கூடிய விளக்குகளும் இருந்தன.அவற்றில் ஒருவகை இலங்கையில் கோட்டாவேரா தொல்லியல் ஆய்வில் சென்ற நூற்றாண்டில் (1951இல்) கிடைத்த ‘எத்பஹானா (தெதிகம) கோட்டாவேரா’ என்ற சரவிளக்கு ஆகும். பஹானா (Pahana) என்றால் சிங்கள மொழியில் விளக்கு என்று பொருள். 


பன்னிரண்டாம் நூற்றாண்டில் இலங்கையின் தென்பகுதியை ஆட்சி செய்த அரசர் மனாபாரனா (Manabharana), அரசி இரத்னவல்லி ஆகியோரின் மகனாக இளவரசன் ‘தெதிகம’ பிறந்தார். இவர் பராக்ரமபாகு (Parakramabahu) என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டு (கி.பி 1153 – 1186) ஆட்சி செய்த புகழ் பெற்ற சிங்களப் பேரரசர் ஆவார். இப்பகுதியில் ‘தெதிகம கோட்டாவேரா’ (Dedigama Kotawehera அல்லது ‘சுத்திகர சைத்யா’ – Suthighara Chaitya) என்று அறியப்படும் கோபுரமற்ற தட்டையான ஸ்தூபியை இவர் கட்டினார். கோட்டாவேரா (புவியிடக் குறிப்பு: 7.2086, 80.2628) ஒரு தொல்லியல் சிறப்புப் பெற்ற பகுதி.இப்பகுதி பங்ககம / ஜடகம / தெதிகம / பிலகம (known as Punkhagama/Jatagama/Dathigama/Pilagama) என்ற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.


தெதிகம கோட்டாவேரா ஸ்தூபிப் பகுதியில் கிடைத்த, 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரு வெண்கல யானை விளக்குகள் அவற்றின் தொழில்நுட்பத்திற்காகவும் கலையழகிற்காகவும் புகழ் பெற்ற சரவிளக்குகள். கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் [Ancient Technology Museum and Library, New Town, Polonnaruwa; (+94 71) 528 8490] இந்த விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

எத்பஹானா (தெதிகம) கோட்டாவேரா வெண்கல யானை விளக்கு; ஓர் ஆழியின் நடுவில் உள்ள மேடையில் ஒரு கம்பீரமான யானை நிற்கும் அமைப்பைக் கொண்டது.  அந்த ஆழிதான் எண்ணெய் உள்ள கிண்ணம்.  இரு பாகர்கள் கையில் அங்குசத்துடன் இந்த யானை மேல் அமர்ந்திருக்க ஒரு மகரதோரண நுழைவாயில் வழியே யானை நுழைந்து வருவது போல உருவாக்கப்பட்டுள்ளது.தோரணவாயிலின் மேற்புறம் உள்ள வளையத்தில் வேலைப்பாடமைந்த உலோகச் சங்கிலி விளக்கைத் தொங்க விடுவதற்காக இணைக்கப்பட்டுள்ளது.இச்சங்கிலி ஆடல் பாடல் நிகழ்த்தும் கலைஞர்கள் உருவங்களையும், இறுதியில் நாகப் பாம்பின் தலையின் உருவமும் கொக்கியாகக் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.





யானை சிலையின் வயிறு உள்ளீடற்ற குடுவை போல எண்ணெய் நிரப்பும் எண்ணெய்த் தேக்கமாகப் பயன்படுகிறது.  யானையின் முன்காலில் எண்ணெய் ஊற்றும் துளை அமைக்கப்பட்டுள்ளது. விளக்கைத் தலைகீழாகக் கவிழ்த்து, முன்காலின் துளை வழியே எண்ணெய் ஊற்றி நிரப்பி, அத்துளையை அடைத்தவாறே விளக்கை நிமிர்த்தி, யானையைச் சுற்றி உள்ள குழியிலும் எண்ணெய் நிரப்பிவிட்டு, அடைப்பையும் திறந்துவிட்டு, திரியிட்டு விட்டால் விளக்கு ஏற்றுவதற்குத் தயாராகிவிடும். விளக்கு எரிய எரிய, எண்ணெய் அளவு குறையக் குறைய, யானையின் முன்காலின் கீழ் உள்ள வெற்றிடம் வழியாகக் காற்று மேலே சென்று, நிரப்பியுள்ள எண்ணெய் மேல் காற்றழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் யானையின் வயிற்றுப் பகுதியில் இனப்பெருக்க உறுப்பு போல அமைந்துள்ள ஒரு துளையின் வழியே எண்ணெய் சொட்டுச் சொட்டாகக் கீழுள்ள எண்ணெய்க் குழியில் விழுந்து எண்ணெய்யின் மட்டத்தை அதிகரிக்கும். இவ்வாறு உயரும் எண்ணெய் மட்டம் முன்காலில் உள்ள துளையை அடைத்துவிடும்.இதனால் தொடர்ந்து எண்ணெய் சொட்டாமல் நிறுத்தப்படும். எண்ணெய்யும் நிரம்பி வழியாமல் இருக்கும்.  மீண்டும் எண்ணெய் அளவு குறைந்தவுடன் காற்று உள்ளே செல்லல், காற்றழுத்தம் கொடுத்தல், எண்ணெய் சொட்டல், எண்ணெய் மட்டம் உயர்தல், காற்றின் துளை அடைபடல் எனச் சுழற்சியாக நடந்து விளக்கு தானே வேண்டும்பொழுது தேவைக்கேற்ப எண்ணெய்யை நிரப்பிக் கொண்டு நீண்ட நேரம் மனித கவனிப்பு இன்றி எரிய முடியும். இவ்வாறாக விளக்கு எரிவது ‘நீர்ம இயக்கவியல்’ (Hydraulics), ‘பாய்ம நிலையியல்’ (Hydrostatics) அடிப்படையில் செயல்படுகிறது.



References:
Ancient Micro-Scale Hydraulic Elements in Sri Lanka: Functionality and Interpretations of Dedigama Eth Pahana;  Jayawardana, C. and Peiris, K., Published on 27 Jul 2009. Engineer: Journal of the Institution of Engineers, Sri Lanka, 42(3), pp.51–56. [DOI: http://doi.org/10.4038/engineer.v42i3.7052]
https://engineer.sljol.info/articles/10.4038/engineer.v42i3.7052/galley/5547/download/

Eth Pahana, Kotavehera-Histroy With An Innovative Teacher
https://youtu.be/ApGbuPnr2Ao?t=555

Eth Pahana-The tusker lamp found in suthiyagara stupa
https://youtu.be/3j2BMF1rCBA



நன்றி: சிறகு 
ஜனவரி  30, 2021



#சிறகு, #அறிவியல், #Themozhi 




Saturday, January 16, 2021

அன்பின் ஐந்திணை – மருதம்

அன்பின் ஐந்திணை – மருதம் 



திணைமாலை நூற்றைம்பது நூலில் ஊடலும், ஊடல் நிமித்தமுமாகிய மருதத் திணை ஒழுக்கம் குறித்த பகுதி நூலின் இறுதியில் (பாடல்கள்:124 - 153)  30 பாடல்களைக் கொண்டு அமைகிறது. தலைவனின் பரத்தையர்  தொடர்பால் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஊடல் தோன்றுவது பாடல்களில் இடம் பெறும் பொருண்மை.  மகாவித்வான் ரா. ராகவையங்கார் மற்றும் திரு. அ. நடராசபிள்ளை உரை நூல்களில் 128 ஆம்  செய்யுள் முதல் அதன் பின் வரும் இருபத்தேழு செய்யுட்கட்கும் பழைய பொழிப்புரை  கிடைக்கப் பெறவில்லை. 
 
தலைவி, தலைவன், தோழி, தலைவனின் பாங்கர் கூட்டம், பாணன், விறலி, பெரியோர், செவிலித்தாய், காமக்கிழத்தியும் அவளது தோழியும், தலைவன் தலைவியின் சிறு மகன், பரத்தையர் என இந்தப் பாடல்களில் பலரும் பங்கு பெறுகிறார்கள்.  ஆனால் தலைவனின் பெற்றோர் பற்றிய குறிப்புகள் எதுவும் திணைமாலை நூற்றைம்பது நூலின் பாடல்களில் இடம் பெறவில்லை.  தலைவியின் செவிலித்தாயிடம் தோழி பேசுவதாகவும் தலைவி மருதநிலத் தலைவனின் மகள் என்ற குறிப்பும் ஒரு பாடலில் கிடைக்கிறது.  பரத்தையர் குறித்து ஒரு சில பாடல்கள் தவிர்த்து, பெரும்பாலான பாடல்கள் குறிப்பிட்டாலும், பரத்தையர் நேரடியாக இடம் பெறவில்லை, ஒரே ஒரு பாடலில் மட்டும் காமக்கிழத்தி தலைவன் எப்படி மாறிவிட்டான் என்று அவளது தோழியிடம் கூறி வியப்பதாக இடம் பெறுகின்றது. தலைவிக்குப் பின்னர்த் தலைவனாற் கொள்ளப்பட்ட காமக்கிழத்தியையும், பரத்தையரையும் தலைவி எங்கையர் (என் தங்கை போன்று பின்னர் வந்தவர்கள்) என்று குறிப்பிடுகிறாள்.  

பாலையென்னும் பண்,  விளரி என்னும் பண், செவ்வழிப்பண் எனப் பல பண்களையும் மட்டுமின்றி அவற்றைக் கலவையாகவும் யாழில் இசைக்கும் திறமை உள்ளவனாகப் பாணன் காட்டப்படுகிறான்.   தலைவிக்கும் பாணனுக்கும் இடையிலேதான் உரையாடல்கள் மிகுதியாக இடம் பெறுகின்றன.  சற்றொப்ப மூன்று பாடல்களில் ஒரு பாடல் இவர்களுக்கு இடையேயான உரையாடல்களே. தலைவி பாணனைக்  கடிவதும், விரட்டுவதும், இகழ்ந்து பேசுவதும் என்ற பொருளில் இப்பாடல்கள் அமைகின்றன.  தலைவி தோழியிடம் தனது ஆற்றாமையையும், புறத்து ஒழுக்கம் மேற்கொண்டு தலைவன் பரத்தையருடன் திரிகிறான் என்றும், ஊடலைக் கைவிட்ட பிறகு தலைவனைக் குறித்து தோழியிடம் புகழ்வதும் என சில பாடல்கள் அமைந்துள்ளன. தலைவி தனக்குள் பேசிக் கொள்வதாக இரு பாடல்களும், தோழியும் அவ்வாறு தனக்குள் பேசிக் கொள்ளும் பாடல் ஒன்றும் அமைந்துள்ளன. 

சங்க இலக்கியங்களில் மருதத்திணைப் பாடல்களில் மரபாக, புறத்து ஒழுக்கம் மேற்கொண்டு பரத்தையருடன் திரியும் தலைவனின் செயலை மருதநிலக் கருப்பொருட்களின் மீது ஏற்றி உள்ளுறை உவமமாகப் பாடல்கள் அமைக்கப்படுவது ஒரு வழக்கம்.  எடுத்துக்காட்டுகள்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் இயற்றிய அகநானூற்றுப் பாடல் (பாடல்-56); பரணர் இயற்றிய நற்றிணைப் பாடல் (பாடல்-260).  பாடலில் வரும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் உவமேயத்தைப் பொருத்திக் காட்டும்படி குறிப்பாக அமைந்தால் அது உள்ளுறை உவமம் என்று சொல்லப் படும்.   பரத்தையர் உறவில் களிக்கும் தலைவனின் செயலைக் குறிப்பிடுகையில் உள்ளுறை  உவமமாக,  அவனை  ஊர் மேயும் எருமை மாடாகவும், மருத நில எருமை குளத்தில் புகுந்து ஆம்பல்களைக் கிழித்து (அதாவது, ஆம்பல்களான தலைவியின் தோழியர்களை வருத்தி)  குவளை மலர்களை உண்டு அசைபோடுவதாகவும் (பரத்தையர் குவளை மலர்களுடன் ஒப்பிடப்படுவார்) காட்டப்படும்.   தலைவியை மெல்லிய கரும்பாகவும், தனக்குக் கிடைத்துள்ள  கரும்பின் அருமை அறியாமல், அந்தக் கரும்பை மோதி விலக்கி குளத்தில் பாய்ந்து குவளை மலர்களை உண்டு அசைபோடும் எருமை மாட்டுடன் தலைவனை ஒப்பிடுவதை இந்த நூலிலும் காண முடிகிறது.  தலைவியே தலைவனை அவ்வாறு குறிப்பிடவும் செய்கிறாள் (பாடல்கள் - 137, 147, 148). 

மருத நில அகத்திணை ஒழுக்கத்தையும் இயற்கைக் காட்சிகளையும் அறிய திணைமாலை நூற்றைம்பது நூலின் பாடல்கள் மிகவும் உதவுகின்றன. திணைமாலை நூற்றைம்பது நூலின் மருதத் திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவன், தலைவி, தோழி, பாணன், பரத்தையர் போன்ற எந்த ஒரு பாத்திரப் படைப்பும் ஒருவரே என்றோ, அல்லது அவர்கள் வாழுமிடம் குறிப்பிட்ட ஒரு மருத  நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது. இருப்பினும், திணைமாலை நூற்றைம்பது நூலின்  மற்ற பிற திணைப் பாடல்களைத் தொகுத்து ஒரே கதைக்களமாக அமைக்கக் கையாண்ட அதே முறையில், இத்திணைக்குரிய 30  மருத  நிலப் பாடல்களையும் (பாடல்கள்:124 - 153) ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் ஊடலாகக்  கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையையும் உருவாக்கலாம். அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின் வரிசை எண்.  



அன்பும் பண்பும் நிறைந்த தலைவி வளமான வயல்கள்  நிறைந்த அழகிய மருதநில ஊரின் தலைவனின் ஆசை மகள்.  அவள் தான் வாழும் ஊருக்கு அருகில் உள்ள மற்றொரு ஊரின் தலைவனிடம் காதல் கொள்கிறாள்.  அவனும் அவ்வாறே அவள் மீது காதல் கொண்டவனாக இருக்கிறான்.  அவனும் மருத நிலத்தின் ஊர்த் தலைவன்தான்.  அவனது ஊரில் அழகிய சிரல் (மீன்கொத்திப்) பறவை தனது பாட்டினை தங்கிப் பாடுகின்ற, பாய்ந்தோடும் நீர் வளம் நிறைந்திருக்கிறது. கழனிகளில் மலர்ந்த தாமரை மலர்கள்  நிறைந்திருக்கின்றன.  செந்தாமரை மலரோடு ஒன்றாக வளர்ந்து நிற்கின்ற பசுமையான கதிர்க் குலைகளையுடைய செந்நெற் பயிர்கள் நிரம்பிய வயல்கள் கண்ணுக்கு விருந்தாக இருக்கின்றது.  மண்ணில் படிந்தது போன்று தாழ்ந்து தொங்கும் குலையினையுடைய வாழை மரங்கள் நிறைந்த பசுமையான நல்ல வளம் மிகுந்த வயல்கள் நிறைந்துள்ளன.  அவனை மணம்  முடிக்க விரும்பும் தலைவிக்கு அவளது வீட்டில் பெற்றோரும் உற்றாரும் மறுப்பு தெரிவிக்கிறார்கள். தனது காதலுக்குத் தன் இல்லத்தில் வரவேற்பில்லை என்பதால் தலைவியும் வேறுவழியின்றி தோழியிடம் தனது முடிவைத் தெரிவித்து விட்டு தலைவனுடன் உடன்போக்கு செய்கிறாள்.  தலைவனுக்கும்  தலைவிக்கும், உடன்போக்கின் பின் தலைவன் மனையில் மண விழா நிகழ்கிறது. அதனைக் கேள்வியுற்ற செவிலித்தாய்  மணமக்களைக் காண வந்தபொழுது தோழி மணமக்களின் அன்புடன் கூடிய இல்லற வாழ்க்கையினை செவிலித்தாய்க்கு எடுத்துச் சொல்கிறாள்.

தலைவன் மீது மேல் மையல் கொண்டவளான, மருதநிலக் கிழாரின் மகளான நமது தலைவி, தனது கண் நிறைந்த கணவனாகிய காதல் தலைவனின் தோற்றம்  சிறக்கும் வண்ணம்  அவனுக்காக  அழகிய மலர் மாலை தொடுக்கிறாள்(140).   மணம் மிக்க சந்தனக் குழம்பு அணியப் பெற்ற அகன்ற மார்பின் மீது கூடியிருக்கும் தலைவி, அவன் மார்பை விட்டு நீங்காது பொழுதும் புலர்ந்துவிடும் வரை இணைந்திருக்கிறாள். அந்த விடியல் வேளையிலே, இல்லத்தின் அருகில் இருக்கும் நெற் குதிர்களின் உச்சியிலே  தங்கியிருக்கும் சேவலானது கூவி உறக்கத்திலிருந்து எழுப்ப, அதைக் கேட்டுப் பிற உயிரினங்களும் விழித்தெழுந்து இசையோடு பாடல்களைப் பாடத் துவங்கிவிடும் செவிலித்தாயே!  (143) என்று தலைவியும் தலைவனும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பில் திளைத்து நடத்தும் இல்லறத்தை மகிழ்ச்சியுடன் செவிலித்தாயிடம் கூறுகிறாள் தோழி.  

தலைவி கரு கொள்கிறாள்.  பிறக்கப் போகும் தனது குழந்தையின் வரவை எண்ணி மனதில் மகிழ்ச்சி கொள்கிறாள்.  ஆனால், நிலை மாறுகிறது! தலைவனுக்குப் பரத்தையர் தொடர்பு ஏற்படுகிறது.  அவன் அவர்களுடன் புனலாடி மகிழும் செய்திகள் தலைவியை எட்டுகிறது.  தலைவி மனம்  வருந்துகிறாள், அந்தச் செய்தியைத் தலைவனுடன் தொடர்பில் உள்ள பாணனே வந்து   தலைவியிடம்  சொல்கிறான்.  பாணனே! எனக்குத் தேவையற்ற செய்திகளை இங்கு வந்து கூறாதே. முள் போன்று துன்புறுத்தும்  சொற்களைக் கூறாது இவ்விடத்தை விட்டுச் சென்றுவிடு.  புதிய பரத்தையர் இல்லதிற்குள் தலைவன் நுழையும் முன்னர் அங்குச் சென்று அவன் வருகையை அவர்களுக்கு அறிவிப்பாயாக (126).  தலைவன் பற்றிய உண்மைகளை எனக்குச் சொல்லிக் கொண்டிராமல், எழுந்து செல்.  இங்குத் தலைவனின் இல்லத்தில் தனது மனைவியுடன் கூடிக் களிப்பதைக்  காரமான செய்கையாய்க் கருதி தலைவன் விலகுகிறான். பரத்தையருடன் கூடுவதை மிக விரும்பி வருகிறான் என்று தன்னை அலங்கரித்துக் கொண்டு காத்திருக்கும் நல்லவர்களாகிய அந்தப் பரத்தையரிடம் சென்று சொல் (127) என்று தலைவி பாணனிடம்  கூறி அவனை விரட்டுகிறாள்.  

தனிமையில் ஆழ்ந்துள்ள பொழுது, தலைவனின் நடவடிக்கை  அவள் மனதில் துயரத்தைக் கிளறுகிறது.   இவ்வாறு பரத்தையர் அணைத்து மகிழும் தலைவனின் மார்பை இனி  நான் அணைப்பது சரியல்ல(129). பரத்தை அவளது  மார்பின் மீது அணிந்திருக்கும் அழகிய மாலையின் வயப்பட்டு, அவளது மனம் போலச்  செயல்படும் மருத நிலத்து  ஊர்த்தலைவனது தொடர்பின்றி நயமாக விலகிச் சென்று அந்தத் துயருடன் வாழ்வதே மேலானது (128) என்றும் எண்ணி தனது நிலையை நொந்து கொள்கிறாள். தன்னைக் காண வரும் தோழியிடமும் புறத்து ஒழுக்கம் மேற்கொண்டு பரத்தையருடன் தொடர்பில் இருக்கும் தலைவன் பற்றிக் கூறி தலைவி வருந்துகிறாள்.  கரிய பெரிய கொம்புகளையும், சிவந்த கண்களையும் கொண்ட எருமை, வயலில்  பெரிய கொம்பு போல வளர்ந்துள்ள மெல்லிய கரும்புகளை மோதித் தள்ளி, அதன் சிறந்த கொம்புகளால்  ஆம்பல் மலர்களைக் களைந்து, அழகிய குவளை மலர்களையும் தின்று அழகான பற்கள் அசை போட வாயைத் தாழ்த்தி உண்பது போலத் தலைவனும் கரும்பு போன்ற என்னை விலக்கி, ஆம்பல் போன்ற எனது தோழியரைப்  புறம் தள்ளி, குவளை போன்ற  பல்வேறு பரத்தையர் பெண்களுடன் தலைவன் உறவாடுகிறான் பாராய் தோழீ! (137, 147) என்கிறாள். ஆனால், தனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையைப் பார்க்கத் திரும்பவும் வருவான் (148) என்பதை அறிவேன் என்கிறாள்.   

அவ்வாறு தலைவன் வருகையில் அவனிடம் கொண்டிருக்கும் ஊடலைக் கைவிட்டுவிடு என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.  ஆனால் தனக்கு இரண்டகம் செய்த தலைவனை ஏற்க தலைவியின் மனம் இடம் தரவில்லை.  துயர் தரும் மனப் பிரிவினை பொதுவான ஊடல் நிலை என்று எண்ணிப் பேசாதே தோழி! தொடர்ந்து பலகாலம் கனிந்த அன்பினை  தலைவனின் உறவில் நான் பெறவில்லை.  ஆகவே, வெறுப்புற்று இருக்கும் எனது மனநிலை மாறினாலும் கூட, தனது செயலுக்காக வெட்கி நடுங்கும் தலைவனை நான் எப்பொழுதுமே  காண விரும்ப மாட்டேன் (153) என்று தோழியிடம் கூறுகிறாள்.   தலைவிக்கு மகிழ்ச்சி ஏற்படும் வகையில் அழகிய குழந்தை பிறக்கிறது.  தலைவன் பிரிந்த துயரை மறந்து தனது மகனைப் பாலூட்டி சீராட்டி வளர்க்கிறாள் தலைவி.  அவள் எதிர்பார்த்தது போலவே, மகன் பிறந்த செய்தி கேட்டு தலைவன் தனது மகனைக் காண ஆவலுடன் இல்லம் திரும்புகிறான்.  தனது மனைவியைத் தழுவ முற்படுகிறான்.  ஆனால், தலைவி அவனை ஏற்க மறுக்கிறாள்.   தன்னுடைய முலைகளாலும், அணிகளாலும் முன்னே பரத்தையர்கள் தம் உறவுக்காகப் பெற்றுக்  கொண்ட பொருளாலும் உனது மார்பில் அவர்கள் பொருந்தியதற்கான சுவடு கலையும் முன்பே, உமிழ் நீரினைச் சிந்துகின்ற வாயினையுடைய என் மகன் முன்னர் வரும் தலைவனே!    (நீ என்னைத் தழுவினால்) எனது மார்பில் சுரக்கும் பால் உன் மார்பில் அணிந்துள்ள மாலையினைச் சிதைத்துவிடும், ஆகவே என்னைத் தழுவாதே, என்று தலைவி  தலைவனின் அணைப்பை மறுத்துக் கூறுகிறாள்(152). 

தலைவியைச் சமாதானப்படுத்தும் வகை அறியாத தலைவன் மீண்டும் பரத்தையர் இல்லம் திரும்புகிறான்.  பரத்தமை மேற்கொண்டு தலைவியை மறந்து நடந்த தலைவனிடம்  தலைவி பிடிவாதமான ஊடலைக் கொண்டிருந்ததால் அவன் அவளை விலக,  அதனைக் கண்ட பெரியோர் தலைவி தலைவனிடம் கொண்டுள்ள உண்மை அன்பை எடுத்துக் கூறி தலைவனை அவளுடன் சேர்ந்து வாழும்படி நல்வழியில் நடத்தும் பெரியோர் இடித்துரைக்கிறார்கள்.  தலைவனே! வீரப்போர்ப் புண்கள் மிகப்பெற்ற மனுவென்னும் அரசன் வகுத்த அறநெறி வழி நடப்பது என்ற பண்பு உன்னை விட்டு நீங்கி, நன்னெறி விலகி நீ வாழ்ந்தாலும், செங்கயல் மீனினைப் போன்ற கண்களையுடைய தலைவி, உன் நடத்தை கண்டு வருந்தாமல் நாணம் கொள்ளும் நிலையானது தலைவியிடம் பெண்மைப் பண்பு நிறைந்துள்ளதைக் காட்டுகிறது.  இது புது வகை இசை போல   உலகம் அறிந்திராத ஒரு புதுமை என்கிறார்கள்(149).  

நாட்கள் கடக்கின்றன.  வளர்ந்து வரும் மகன் குறித்த செய்திகள் வந்து சேரும் பொழுதெல்லாம் தலைவனுக்குத் தனது மகனைப் பார்க்க ஆவல் மேலிடுகிறது. பரத்தையர் இல்லத்தில் தங்கியிருக்கும், தனது யாழில் பல பண்களையும் இசைக்கும் திறமை கொண்ட பாணனிடம் தனது மனக்குறையைக் கூறுகின்றான். அழகிய குரல்வளம் கொண்டு பாடும் பரத்தையருடன் புணர்ந்து நான் விளையாடினேன் என்பதால், மணியொலி போன்ற குரலையுடைய மேன்மையான எனது தலைவி என்னுடன் பிணக்கு கொண்டுள்ளாள் பாணனே! என்று தலைவன் பாணனிடங் கூறுகின்றான் (141).  தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் உள்ள மனவேறுபாட்டைக்  களைய உதவும்படி தலைவன் கூறுகிறான்.  தான் வரவிருப்பதைத் தலைவியிடம் கூறச் சொல்கிறான்.   அவனது வேண்டுகோளை ஏற்று பாணனும் தலைவியின் இல்லத்திற்குத் தூது செல்கிறான். 

தலைவனின் புகழ் பாடி அவனது செயலுக்கான விளக்கங்களைக் கூறும்  பாணனின் உரையைக் கேட்கும்  பொழுது தலைவி பொறுமை இழக்கிறாள்.  பாணனே! அருமையான சிறு தேரினைத் தனது கையினாலே  இழுத்து உருட்டி விளையாடும் எனது மகன் பிறக்கும் முன்னர், இந்த இல்லத்தில் என்னுடன் அன்புடன் கூடி விளையாடியவன் எனது தலைவன். மாறாக, பின்னர்  எனக்குப் பின் வந்தவர்களாகிய பரத்தையர்களின் தோள்களில் மிகவும் விருப்பத்துடன் கூடி மகிழ்வதை விரும்பினான் (124).  மண்ணால் உருவாக்கப்பட்ட யானை சிலை மீது அமர்ந்து பாகன் போலக் கையில் கோலுடன் ஓட்டி விளையாடும் எனது மகன் பிறப்பதற்கு முன்னர் எனது தலைவன், அழகிய வளைவுகளைக் கொண்ட வளையல்களை அணிந்த பரத்தையரது சேரிக்குச் சென்றானா என்று சொல்வாயாக. அவனது  வாழ்க்கைத் துணையான எனது வீட்டின் வாயிலைத் தாண்டிச் சென்றானா அவன்?  சொல்வாயாக என்று தலைவி பாணனிடம் வினவினாள் (125).  எனக்குப் பின்னவளாகிய பரத்தையோடு தலைவன்  இயல்பாகக் கூடி மகிழ்ச்சியுடன் கிளர்ச்சியடைந்து வாழ்கின்றான்.  அவ்வாறே, தனது சின்னஞ்சிறு கைகளை அசைத்தும், மழலை பேசியும் பொருள் புரியாத வகையில் இங்கே  குழறும் மொழியுடன் ஓடிவிளையாடி நன்கு வளரும் எனது மகனுடன் நானும் நலமாகவே வாழ்கிறேன். ஆதலால், எனக்கொரு குறையும் இல்லை. தலைவன் வருகையைக்  கூற வந்த பாணனே,  என் மகனோடு மகிழ்ச்சியுடன் நான் வாழும் வாழ்க்கையே எனக்குப் போதும் (136) என்று  என்று தலைவி பாணனிடம்  கூறி  அவனை அனுப்பிவிடுகிறாள்.  

தலைவியையும் குழந்தையையும் காண வருகை தரும் உறவினரும், பெரியவர்களும் பிரிந்திருக்கும் இருவரையும் இணைத்து வைக்கத் தங்களால் இயன்றதைச் செய்ய முடிவெடுக்கின்றனர்.  இருவரிடம் ஒருவர் குறித்து மற்றவர் பெருமையைப் பேசி தலைவன் தலைவி இருவருடைய மனங்களையும் மாற்ற முயல்கின்றனர்.  தலைவனே! இம்மண்ணில் வாழ்பவர்களில் சான்றோர்களும் சிறிது நாட்களிலேயே தலைவியின் பெருமை உணர்ந்து அவளைப் பாராட்டி அவளுக்குத் தொண்டு செய்யும் வண்ணம், பெண்ணின் மேன்மையை வெளிப்படுத்தும் வகையில் மார்பில் முத்துமாலைகளைத் தவழ விட்டுள்ள  தலைவி மிகவும் எளிமை இனிமை அன்பின் உறைவிடமாக இல்லறம் நடத்தி வருகிறாள் என்று தலைவியின் இல்லத்தில் நுழைந்து பழகி அவள் இல்லறம் நடத்தும் பாங்கினைக் கண்ணுற்ற ஒருவன் தலைவனிடம் சென்று, தலைவி இல்லறத்தினை ஊரார் மெச்சும் வண்ணம் மாண்புடன் நடத்துவதை அவனுக்குத் தெரிவிக்கிறான் (146).  மற்றும் சிலர் தலைவியிடம் வந்து தலைவன் கூறும் விளக்கங்களைக் கூறி தலைவனின் பிழையைப் பொறுக்கும் படியும், அவன் அவளுடன் இணைய விரும்புவதாகவும் கூறுகிறார்கள்.  உண்மையான போக்கினைக்  கொண்டிராத தலைவனின் பொய்மையான மாய மொழிகளைக்  கேட்டது போதும். தலைவனின் செயல்களே அவன் புகழைக் காட்டுகிறது.  என்னிடம்  காதல் கொண்டு தலைவன் செய்யும் செயல்களே கூடல் கருதி நிற்கும் அவனின் விருப்பத்தைக் காட்டுகிறது, ஆகவே  மேலும் பொய் உரைக்காமல் போய்ச் சேருங்கள் என்று தலைவி வாயில் தேடி வந்து தலைவனைப் புகழ்பவர்களுக்கு  மறுமொழி  கூறி அனுப்பிவிடுகிறாள்  (130).

தலைவனின் தோழர்களும், தலைவியின் தோழியரும் பிரிந்திருக்கும் தலைவனையும் தலைவியையும்  இணைக்கும் முயற்சியில் அடுத்து களம் இறங்குகிறார்கள்.   தலைவியின் தோழியர்களில் ஒருத்திக்கு செம்பட்டினை  உடுத்து வித்து, அவள் அணிந்துள்ள  அணிகலன்கள் எல்லாம் நிறம் மாறும்படி செஞ்சாந்தைப் பூசு வித்து, மிகுந்த அக்கறையோடு சிவந்த குவளை மலர்களையும் சூட்டி அவளைத்  தலைவன்   வாழும் பரத்தையர் வீடு நோக்கி அனுப்புகிறாள் தோழி.   தன்னைப் பிரிவதற்காகப் பரத்தை உன்மீது என்னதான்  வசைபாடினாலும், பரத்தைக்கு  மறுமொழி எதுவும் கூறாது வீடு திரும்புக,  உன் குலம் தழைக்க  தலைவியுடன்  நீ இணைய வேண்டும் என்ற  அறிவுரையையும்  கூறச் சொல்லி தோழி ஒருத்தியை அனுப்பியுள்ளாள் தலைவனே.  ஆகவே, தோழி  தரும் குறிப்பறிந்து நடப்பாயாக என்று தலைவனிடம் அவனுடைய பாங்கர்கள்  கூறுகின்றார்கள் (144). விறலியைத் தலைவன் தலைவியின் மனதை மாற்ற அனுப்பிவிட்டு, தலைவனும் வீடு திரும்புகிறான்.  விறலி தலைவியைப் பாராட்டிப் பேசி தலைவன் இனி தவறிழைக்காமல்  இருப்பான் என்று கூறுகிறாள்.  தலைவி  விறலியின் கூற்றை ஆராய்ந்து மனம் மாறுகிறாள்.  தலைவனை ஏற்றுக் கொள்கிறாள்.  தலைவன் அனுப்பிய பல தூதுகளை மறுத்து விட்ட தலைவி விறலியின் தூதினை மதித்து ஏற்று, தலைவனோடு மீண்டும் மகிழ்ந்திருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்த விறலி, அருகே இருந்த தோழியினிடத்தே தனக்குக் கிடைத்த  நல்வாய்ப்பிற்கு நன்றி பாராட்டிக் கூறுகின்றாள். தலைவிக்கு யாவரையும் தனது உறவு என்று பாராட்டும் பெருந்தன்மையான குணம் குறையாது இருப்பதாலோ; அல்லது  பழமையானவை மக்களுக்குப் பலவகையில் பயன் தருவதை உணர்ந்திருக்கும் நிலையினாலோ;  உரிமையுடன்  தக்க குலத் தலைவர்கள் பலகுடிமக்களையும் உறவாக ஏற்றுக் கொள்ளும் முறையில் தலைவியும் நாய் போன்று மிகவும் தாழ்மையுள்ள என்னையும் ஏற்றுக் கொண்டுள்ளாள்.  தலைவியின் அருள் கிடைக்கப் பெற்றேன் நான்  என்று நெகிழ்கிறாள் விறலி (134). 

தோழியும் தனது பங்கிற்குத் தலைவனைப் புகழ்ந்து அவன் மனதை மாற்றுகிறாள். குளிர்ந்த குளத்தினிடத்திலே மலர்ந்துள்ள தாமரைப் பூவிலேயுள்ள, பெரிய ஆண் அன்னப் பறவையினைக் கீழ்ப்படியும் பெண் அன்னப்பறவையானது நீரிலிருந்து  விரும்பும் படியான கழனிகள் சூழப் பெற்ற மருத நிலத்து ஊர்த் தலைவனே!  வளம் மிக்க  குளத்தினைப் போன்ற உனது பரந்த மார்பானது, புளியம்பழத்தினை மேலும் மேலும் சுவைக்க ஏற்படும்  விருப்பம்போல் விரும்பும் சிறப்பைக் கொண்ட ஒன்றாகும்.  உன்னுடன் கூடி வாழும் தலைவி  உன் மீது கொண்ட மாறாத மயக்கத்திற்கு அதுவே நோய் நீக்கும் மருந்து, என்று தோழி தலைவனைப் புகழ்ந்து அவனிடம் கூறுகின்றாள் (142).  பிரிந்தவர் கூடினர்.  தலைவன் களிப்புடன் தனது மகனுடன் விளையாடுகிறான். தலைவியின் மீது அன்பைப் பொழிகிறான். இதனால் தலைவியும் மனம் மாறிவிடுகிறாள்.  மருதமரங்களுடன் காஞ்சி மரங்களும் இணைந்து உயர்ந்து வளர்ந்துள்ளதால் அவை பரப்பும் நிழலின் கீழே, காளைகளுடன் உழவில் ஈடுபட்டுள்ள  உழவர்கள் எழுப்பும் ஒலியுடன், கழனியில் நாரைகளும் வாத்துக்களும்  எழுப்பும் ஒலியும் சென்று கலந்திருக்க; குளிர்ந்த அழகிய வயல்கள் நிறைந்தது; அமர்ந்து பயணிக்க முடியாத சிறிய பொம்மைத் தேரினை உருட்டும்  எனது மகனின் தந்தையாகிய எனது தலைவனின் மருத நிலத்தின் ஊர் ஒரு சிறந்த வாழிடம் என்று ஊடலைக் கைவிட்டு, தான் தலைவனுடன் மீண்டும் இணையக் காரணமாக இருந்த மகனையும் தன் தலைவனையும், அவர்கள் வாழும் ஊரின் சிறப்பையும்  புகழ்ந்து தலைவி தோழியிடம்  கூறுகிறாள் (138, 139).

தலைவியின் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கினாலும், தலைவனின் காமக்கிழத்தி தன்னைப் பிரிந்து சென்றுவிட்ட தலைவன் மீது ஆத்திரம் கொள்கிறாள்.  தலைவன் தலைவியிடம் சென்றவுடன் தன்னை மறந்து எப்படி மாறிவிட்டான்?  தலைவி ஆட்டுவிக்கும்படி எல்லாம் ஆடுகிறானே என்று மனம் குமைகிறாள். தோழியே! என்ன இது!!! இந்த மண்ணிலும் விண்ணிலும் இதற்கு முன்னர் கேட்டதும், கண்டதும் இல்லை, அதனால் அது குறித்து ஒரு முடிவும் அறியேன் நான். நம்மை விட்டு நீங்கிய தலைவன், மனைவியின்  பின் சென்று, அவள் கூறுவதைக் கேட்டு, அணங்குபோன்ற  தலைவி ஆட்டுவிக்கும் படி நடந்து அவள் கட்டளைகளைத் தட்ட விரும்பாமல், அவன் அணிந்துள்ள அணிகலன்கள் குலைந்தாடும் வண்ணம், மிகவும் பணிவுடன் தலைவியின்   ஏவல்களை நிறைவேற்றுகிறானே!!! என்று காமக்கிழத்தி தன் தோழியிடம்  கூறுகின்றாள்(135).  பாணனைத் தலைவன் வீட்டிற்குத்  தூது அனுப்புகிறாள் காமக்கிழத்தி.  அவனைத்  தலைவனைச்  சந்திக்க விடாமல் தலைவாயிலேயே தடுத்து நிறுத்தும் தலைவி பாணனை விரட்டி அனுப்புகிறாள்.  

பரத்தையர் வீட்டில் இருக்கும் பாணனே! நான் வாழும் இந்த இல்லத்தை நீ அத்தகைய பிற பெண்கள் வாழும் வீடு என்று தவறாகக் கருதி விட்டாய் போலிருக்கிறது.  அது போன்ற பெண்கள் வாழும் வீடு இது என்று தவறாக எண்ணாமல், இங்கிருந்து கிளம்பு. என் பின்னவர்களாகிய பரத்தையரின் வீட்டில்  மாலைப் பொழுது மறையும் நேரம்  மணவிழாத் தொடங்கப் போகும் நேரத்திற்குள் பரத்தையர் மனைக்குச் சென்றுவிடு (132).   சேற்றில் விளையாடுகையில் கிண்கிணி என ஒலிக்கும் கால் சலங்கை அணிந்த என் மகனின்,  செம்மையான பொன்னில் செய்யப்பட்ட நெற்றிச் சுட்டியில் புழுதி படர, இந்த வீட்டின் முன் முற்றத்தில் தன் மகனுடன் விளையாடும்  என் தலைவன், பண்பால் வேறுபட்ட பெண்களான பரத்தையரின்  வீடு சென்று விளையாட விரும்புவானோ? (விரும்பமாட்டான்) ஆகவே, அழகிய கோலுடன் அமைந்த யாழைக் கொண்ட பாணனே, நீ வீணே காலந்தாழ்த்தாது எனக்குப் பின்னவர்களான பரத்தையர் இல்லம் நோக்கிச் சென்றுவிடுவாயாக (151). முன்னர்  தலைவனுக்கு மாலை நேரத்தில் இசைக்கவேண்டிய பண்ணினைப் பாடி அவனுக்கு நீ பணி செய்ததில்லையோ; காலைவேளைக்குரிய  பண்ணினைப்  பாடவேண்டிய நிலையினை அறியாதவனாக விளங்கினாய் அப்பொழுது.  உனது நோக்கமும், நீ எப்படிப்பட்டவன் என்பதையும் நான் நன்கே அறிவேன்.  குறைவறாது நீ கூறும் பொய்களுக்கு மயங்குபவர்  இடம் தேடிச் சென்றுவிடு (133).  நற்பண்பு சிறிதும் அற்ற பாணனே!  தலைவனது கடந்த காலச் செய்திகளை, கொடிய சொற்களால் விவரித்துக்  கிண்டலாக என்னிடம் நினைவூட்டும் வகையில் சொல்லி, ஊடல் விலகி எனக்கும் தலைவனுக்கும் இடையே மீண்டும் தொடங்கப் பெற்றுள்ள உறவினை உன்னுடைய சொற்களால் துண்டிக்க  வேண்டாம்.  தலைவனின் கடந்த கால வாழ்வு குறித்துப் புரிந்தது புரியாதது, தெரிந்தது தெரியாதது அனைத்தும் நான் நன்கு அறிவேன் (131) என்று தலைவி பாணனிடம் கூறி அவனை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறாள். 

தனது முயற்சி பலிக்காது சோர்ந்து திரும்பும் பாணனை வழியில் சந்தித்து விவரம் அறிகிறான் தலைவன். பல பண்களையும் கலந்து யாழில் இசைக்க வல்ல பாணனே! ஆராய்ந்து பார்த்தால் தலைவியைப் போலச் சிறந்த ஒரு பெண்ணை எங்கும்  காண இயலாது.  எண்ணிப் பார்த்தாலும் இன்று என் தலைவிக்கு நிகரான பெண்ணொருத்தி  கடல் சூழ்ந்த இந்த மண்ணுலகில் இல்லை. மறைந்து நடுகல்லாய் சமைந்துவிட்ட முன்னோர்களிலும் அத்தகைய பெண் இருந்ததில்லை. சிறப்பான  விண்ணுலகில் யாரேனும் இவளுக்கு இணையான சிறப்பு கொண்டவராய் இருக்கக் கூடும் (150) என்று ஊடலைக் கைவிட்டு, மன்னித்து  தன்னை ஏற்றுக்  கொண்டு தனக்கு வாழ்வளித்த தலைவியைப் புகழ்ந்து கூறும் தலைவன், பாணனிடம் தன்னைத் தொடர்வது இனி பயனளிக்கப் போவதில்லை என்று உணர்த்துகிறான்.  தலைவனும் தலைவியும் தங்கள் மகனுக்கு ஐம்படைப் பூட்டி, பெயர் சூட்டும் விழா நடத்துகிறார்கள். மகிழ்ச்சியுடன் அவர்கள் ஒருசேர இருப்பதைக் காண்கிறாள் தோழி.  பாடல்களின் ஒலியும், இன்னிசைக் கருவிகள் எழுப்பிய பண் ஒலியும், வளையாது நேராக அமைந்த புல்லாங்குழலினது இசையும் என வகை வகையான பல இசைகளும் கூடி ஒலிக்கும் வேளையில்;  வளைந்த நச்சுப்பற்களைக் கொண்டிருந்த பாம்பினைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த மந்திரமலை போன்ற சிறப்பு அடைந்த தலைவன் தனது மகனைச் சுமந்து கொண்டு  மருத நிலத் தெய்வமாகிய இந்திரனைப் போலத் தலைவியின் இடப்பக்கம் வந்து நிற்கின்றான் (145) என்பதைத்   தலைவியின் மகனுக்கு ஐம்படை பூட்டி பெயரிடும் விழாவில் காணும் தோழி மனம் மகிழ்கிறாள்.

 

குறிப்பு – கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:
140.  தனது கணவனின் தோற்றம் சிறக்கும் வண்ணம் அவன் மேல் காதல் கொண்ட தலைவி அவனுக்கு அழகிய மலர்மாலை தொடுக்கிறாள் செவிலித்தாயே! 
143.  தலைவனும் தலைவியும் கொண்டிருக்கும் அன்பின் நெருக்கத்தால் விடியும் வரையும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதில்லை செவிலித்தாயே!
126.  தேவையற்ற செய்திகளை என்னிடம் கூறாது  சென்றுவிடு, பரத்தையரிடம் சென்று தலைவன் அங்கு வந்து கொண்டிருக்கிறான் என்று சொல் பாணனே!
127.  மனைவியைக் கூடி மகிழ்வதைவிடப் பரத்தையரே தலைவனுக்கு  விருப்பம் என்று அந்தப் பரத்தையரிடம் போய்க் கூறு பாணனே!
129.  தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று பரத்தையுடன் புனலாடும்  செய்தி கேட்ட தலைவி மனம் வருந்தி பரத்தையர் கூடும் தலைவனின் மார்பைத் தான் இனி அணைப்பது நல்லதல்ல என்று எண்ணுகிறாள். 
128.  ஆற்று நீரில் பாய்ந்து ஆடும் பரத்தையர் மனம் போலச் செயல்படும் தலைவனை விலகி, அவன் இல்லாது  துயர் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதே நல்லது என்று தலைவி எண்ணுகிறாள். 
137.  தலைவன் வயலில் புகுந்து பல்வேறு மலர்களைத் தின்னும் எருமை போல பற்பல பெண்களுடன் உறவாடிக் கொண்டிருக்கிறான் தோழி!
147.  புறத்து ஒழுக்கம் மேற்கொண்டு தலைவன் பரத்தையருடன் திரிகிறான் தோழியே!
148.  புறத்து ஒழுக்கம் மேற்கொண்ட தலைவன் பரத்தையர் உறவுக்குப் பின்னர் தனது மகனை நினைத்துக் கொண்டு வீடு திரும்புவான்  தோழியே!
153.  துயர் தரும் மனப் பிரிவினை பொதுவான ஊடல் நிலை என்று எண்ணிப் பேசாதே தோழி! நான் எப்பொழுதுமே  தலைவனைக் காண விரும்ப மாட்டேன். 
152.  உன் மார்பில் நீ அணிந்துள்ள மாலையினை என் முலைப்பால் சிதைக்கும், ஆகவே என்னைத் தழுவ வேண்டாம்  தலைவனே!
149.  தலைவியின் ஊடல் கண்டு விலகும் தலைவனிடம், தலைவி அவனிடம் கொண்டுள்ள உண்மை அன்பை எடுத்துக் கூறி தலைவனைச் சேர்ந்து வாழும்படி நல்வழியில் நடத்தும் பெரியோர் இடித்துரைக்கிறார்கள்.
141.  எனக்குப் பரத்தையர் தொடர்பு உள்ளது என்று  என்னுடன் பிணக்கு கொண்டுள்ளாள் எனது தலைவி பாணனே !
124.  எனது மகன் பிறக்கும் முன்னர் என்னுடன் கூடி மகிழ்ந்திருந்த என் தலைவன் இப்பொழுது பரத்தையர்களை விரும்பி அவர்களைக் கூடி மகிழ்கிறான் பாணனே. 
125.  பாணனே,  என் மகன் பிறப்பதற்கு முன்னர் எனது தலைவன் இந்த வீட்டின் வாயிலைத் தாண்டி பரத்தையர் இல்லம் சென்றதுண்டோ? சொல்வாயாக!
136.  தலைவன் வருகையைக்  கூற வந்த பாணனே,  என் மகனோடு மகிழ்ச்சியுடன் நான் வாழும் வாழ்க்கையே எனக்குப் போதும்.
146.  தலைவி தனது பண்பின் மேன்மையால் சான்றோர் மெச்சும்படி இல்லறம் நடத்துகிறாள். 
130.  தலைவனின் செயல்களே அவன் புகழைக் காட்டுகிறது, மேலும் பொய் உரைக்காமல் செல்லுங்கள் மக்களே என்கிறாள் தலைவி. 
144.  தலைவனே! தோழியின் குறிப்பை அறிந்து, பரத்தை என்ன வசை கூறினாலும் அதற்கு மறுமொழி ஒன்றும் கூறாது, உன் குலம் தழைக்க தலைவியுடன் கூட நீ இல்லம் திரும்புக என்று பாங்கர்கள் கூறுகின்றார்கள்.   
134.  தலைவியின் பெருந்தன்மையால் அவள் என்னை ஏற்றுக் கொண்டது நான் அடைந்த பேறு என்று விறலி தோழியிடம் கூறுகிறாள். 
142.  தலைவனே! உன் மீது மயக்கம் கொண்ட தலைவிக்கு உன் சிறந்த மார்பைச் சேர்வதே அவளது காதல் நோயைத் தீர்க்கும்  மருந்தாக அமையும். 
138.  எனது மகனும் அவனின் தந்தையாகிய எனது தலைவனும் வாழும் இந்த மருத நிலத்தின் ஊர் சிறப்பான இடம் தோழி!
139.  எனது மகனும் அவனின் தந்தையாகிய எனது தலைவனும் வாழும் இந்த மருத நிலத்தின் ஊர் சிறப்பான இடம் தோழி!
135.  தோழியே! தலைவன் தனது மனைவி ஆட்டுவித்தபடி அவள் ஏவிய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறான் என்கிறாள் காமக்கிழத்தி.   
132.  பரத்தையர் வீட்டில் வாழும் பாணனே, இந்த வீடு அத்தகைய பெண்கள் வாழும் வீடல்ல,  பரத்தையர் வீடுகளுக்கே சென்றுவிடு. 
151.  பாணனே! தலைவன் தன் மகனுடன்தான்  விளையாட விரும்புவான், பரத்தையர்களுடன் அன்று. 
133.  பாணனே! நீ சொல்லும் பொய்களுக்கு மயங்குபவர் உள்ள இடம் தேடிச் சென்றுவிடு என்று தலைவி கூறுகிறாள்.  
131.  தலைவனின் கடந்த கால நடத்தை குறித்து நான் நன்கே அறிவேன், எங்களுக்குள் கலகம் மூட்டும் முயற்சியைக் கைவிடுக பாணனே! 
150.  என் குற்றத்தை மன்னித்து என்னை ஏற்றுக் கொண்ட என் தலைவியைப் போலச் சிறந்த பெண்ணொருத்தி இவ்வுலகில் கிடையாது பாணனே!
145.  தலைவன் தனது மகனைச் சுமந்து கொண்டு தலைவியின் இடப்பக்கம் நின்று விழாவில் பங்கேற்றான். 





உதவிய  தளங்கள்:
1. கணிமேதாவியார்  இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
மூலமும் உரையும் - மகாவித்வான் ரா. ராகவையங்கார்
செந்தமிழ்ப் பிரசுரம்,  1927  (இரண்டாம்  பதிப்பு)
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf
https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை - தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார் 
தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html



நன்றி: சிறகு
ஜனவரி 16, 2021



#சிறகு, #இலக்கியம், #ஐந்திணைமாலை, #திணைமாலை நூற்றைம்பது, #Themozhi 



Saturday, January 2, 2021

அன்பின் ஐந்திணை – முல்லை

அன்பின் ஐந்திணை – முல்லை






"மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை நிலம் குறித்து வரையறுக்கிறது. இப்பகுதியில்  மிகுந்துள்ள முல்லை மலரின் பெயரினைத்  தாங்கியுள்ள முல்லை நிலத் திணையின் பெரும் பொழுது கார்காலம் எனவும், சிறுபொழுது மாலை நேரம் எனவும் நிலத்துக்குரிய பொழுதுகளாக அமைந்து வருகிறது. காடும், காடு சார்ந்த  முல்லை நிலம், செம்மண் பரந்திருத்தலால் செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது.  

முல்லைத்திணைக்குரிய  ஒழுக்கம் என்பது தலைவி தலைவன் வருகையை எதிர்நோக்கி ஆற்றியிருக்கும்  இருத்தலும், இருத்தல் நிமித்தமும் என்ற ஒழுக்கமாகும்.   தலைவன் திரும்புவதாகக் குறித்துச் சென்ற கார்ப்பருவம் வந்தும் அவன் வராத நிலை கண்ட தலைவி மனம் கலங்கி தோழியிடம் புலம்பும் வகையிலும், தோழி தலைவியின் துயரை ஆற்றுவிக்கும் வகையிலும் பாடல்களின்  கருத்துகள் அமைவதைக் காணலாம்.  திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத்  திணைப் பாடல்களில்  முல்லை நில வளமையும் தோற்றமும், அழகிய மழைக்காலமும், மயங்கும் மாலைப் பொழுதும் மிக மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. 

மேலும், திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத்  திணைப் பாடல்களில் தொன்மக் கதைகளும் இடம் பெறுகின்றன.  வரிசையில் முதல் பாடலிலேயே மாமர வடிவில் கடலில் புகுந்து ஒளிந்து கொண்ட சூரனை முருகன் தனது வேலால் அழித்த தொன்மக் கதை இடம் பெறுவதைக் காணலாம்.  மழை முகில் சூரனை ஒழித்த முருகனின் வேல் போல ஒளி கொண்டு மின்னியதாகக் காட்டப்படுகிறது (93).  கண்ணன் சக்கரப் படையைச் செலுத்தி யானையின் மத்தகத்தைத் தாக்கி அதனைக் கொன்ற தொன்மக் கதையும் (97)  இடம் பெறுகிறது.   யானையின் மத்தகத்தில் புதைந்த சக்கரம் போல  மலையின் பின் வட்ட வடிவப் பகலவன் மறைவதாக ஒப்பிடப்படுகிறது.   அதுமட்டுமின்றி, கருத்து இருண்ட வானத்திற்கும்,  வெண்மையான பாலொளி சிந்தும் நிலவிற்கும் கண்ணனும் அவனது அண்ணன் பலராமனும் ஒப்புமையாகக் காட்டப் படுகிறார்கள்(96, 97).  

முல்லைத் திணைக்குரியதாக இந்த நூலில் இடம்பெறும் பல பாடல்களில் மழை தோன்றும் அறிவியல் கருத்தும்  இடம் பெறுகின்றது.  முல்லைத் திணைக்கான 31 பாடல்களின் 7 பாடல்களில் (பாடல் எண்கள்: 93, 95, 100, 104, 105, 109,114) கடல் நீர் கதிரவன் வெப்பத்தால் மேகமாகிக் குளிர்ந்து மழையாகப் பொழியும்  அறிவியல் உண்மை கூறப்படுகிறது. 

பாடல்களில் வெளிப்படையாகக் குறிப்பிடாமல் தலைவி ஒருமுறை (பாடல் 108 இல்)  "உருமுடை வான் ஒன்று ஒழிய, நோய் செய்தவாறு"  என்று கூறுகிறாள்.  அதாவது, தோழியே! இடியோடு கூடிப் பெய்கின்ற இம்மழை, என் போன்று காமம் கொண்டவர்களுக்கு  இறப்பு என்ற ஒன்று  நீங்கலாக மற்ற பிற துன்பங்களையும் உண்டாக்குவதாகும் எனத் தலைவி குறிப்பிடுகிறாள்.  அதற்குப் பாடல் வரிகளை மட்டும் வைத்துப் பொருள் கொண்டால் இவ்வாறுதான் பொருள் கொள்ளலாம்.  இருப்பினும் பழைய உரையில், பிரிவினால் காதலர் கொள்ளும்  நோய் வகை பத்து என்ற ஓர் எண்ணிக்கையையும், அதில் இறுதியில் உள்ள மரணம் என்பது தவிர மற்ற ஒன்பது துன்பங்களும் தலைவியை வருத்துகிறது  எனக் குறிப்பிடப்பட்டு ஒரு காதல் நோய்களின் பட்டியலும் கிடைக்கிறது.  காதலர் எதிர்கொள்ளும் பத்துவகை நோய்கள் என்பது அரியதோர் தகவலாக இருப்பதால் அது இங்குக் கொடுக்கப்படுகிறது. 
பத்து வகைக் காதல் நோய்த் துன்பங்கள்:   1. அன்பொடு பார்த்தல்,  2. உளங்கொடு பற்றல்,  3. புணர்ச்சி வேட்கை,  4. உறக்க மொழிதல்,  5. உடல் மெலிதல்,  6. உணர்வொழிதல்,  7. நாணழிதல்,  8. வாய்விட்டரற்றல்,  9. மயக்கமுறுதல் 10. இறப்பு.  

திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத்  திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவனும்  தலைவியும் தோழியும் ஒருவரே என்றோ அல்லது அவர்கள் வாழுமிடம் குறிப்பிட்ட ஒரு முல்லை நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது.  இருப்பினும்,  மற்ற பிற  திணைப் பாடல்களைத் தொகுத்து ஒரே கதைக்களமாக அமைக்கக் கையாண்ட அதே முறையில், இத்திணைக்குரிய  31 முல்லை நிலப்  பாடல்களையும் (பாடல்கள்: 93-123)  ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காதலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையும் உருவாக்கலாம்.  அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. 

திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லை நிலப் பாடல்களில் இடம் பெறுபவர் தலைவியும் தோழியும் மட்டுமே.  தலைவன் ஒரே ஒரு பாடலில் மட்டுமே இடம் பெறுகின்றான்.  அவனுக்குத் தோழனும் கிடையாது.  தலைவி, தோழி தலைவன் என எவருக்குமே பெற்றோர் உடன் பிறந்தவர் போன்ற குடும்ப உறவுகளோ, கடந்த காலத்தில் காதலர்கள் சந்தித்துக் கொண்ட  நிகழ்வுகள் போன்றவற்றைக் குறித்த குறிப்புகளோ கூட இப்பாடல்களில் கொடுக்கப் படவில்லை.  ஆகையால் இதைக் கதை வடிவிற்குக் கொண்டு செல்வதைவிட ஓரங்க நாடகக் காட்சி ஒன்றில்,  மான் போல  மருண்டு நோக்கும்  இளமங்கையான தலைவிக்கும்,  வாள் போன்ற நீண்ட கண்களையுடைய அவளது தோழிக்கும் இடையே நடக்கும் உரையாடலாகவே காட்டிச்  செல்ல இயலும். 

தலைவன் திரும்பி வரக் காலம் தாழ்த்துகிறானே என்று கலங்கும் தலைவியின் கவலைதான் எல்லாப் பாடல்களிலும் ஒலிக்கிறது.  தோழியும் தக்கத் துணையாகத் தலைவிக்கு ஆறுதல் அளிக்கிறாள்.  கண்முன்னே கார்காலத்தின் சுவடுகள் தெரிந்தாலும் கூட தலைவன் திரும்புவதாகச் சொன்ன கார்காலம் இன்னமும் துவங்கவில்லை என்னும்  அளவிற்குப் பொய்யுரைத்து தலைவிக்கு ஆறுதல் கூறும் நிலைக்கும் செல்கிறாள்.  உச்சக்கட்டக் காட்சியாகத் தலைவன் வருகிறான், அவன் வரவினால் தலைவி  மகிழ்ந்தாள்  என்ற வகையில் ஒரு சிறுகதையாக இப்பாடல்களைத் தொகுக்கலாம். வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள்  கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின்  வரிசை எண்.



அழகிய முல்லை நிலப்பகுதியில், வீட்டின்  தோட்டத்தில் அமர்ந்து தலைவியும் தோழியும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  கார்காலத்தில் தளிர்த்து வளரும் தளவமாகிய செம்முல்லைக் கொடிகள் அருகில் உள்ள குருந்த மரத்தினைப் பற்றி அணைத்துத் தழுவிப் படர்ந்திருக்கின்றன.  மழை பொழிந்து முல்லை நிலத்தின் காடுகளெல்லாம்  தழைத்தோங்கி முல்லை நிலப்பகுதி அழகாக மாறி இருக்கின்றது. பொன்னால் செய்யப்பட்ட சரங்களாகக் கொன்றை மரத்தில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன.  காந்தள் மொட்டுக்கள் பூத்து நிற்கின்றன. சாதாரி பண்ணொலி போல  இசை பாடிய வண்ணம் பூக்கள்  தோறும் வண்டுகள் பறந்து செல்கின்றன. முல்லை நிலமெங்கும் ஆண் மான்கள் தம்முடைய பெண்மான்களுடனே கூடிக் களித்திட, அவற்றின் குட்டிகளும் அவற்றோடு சேர்ந்து குதித்துக் கும்மாளமிடுகின்றன. மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன. கருக்கொண்டு பூத்துள்ள காயாம்பூச் செடியின் பூங்கொத்துகளை,  இறகுகள் தொகுதியாக அமைந்த ஆண் மயிலின் தோகை என்று எண்ணி, அஞ்சி விலகிப்  பின்வாங்கி, இடியால் தாக்குண்ட பூக்களையுடைய வெண்காந்தளின் அருகிலே சென்று  நாகப்பாம்பானது அந்த வெண்காந்தள் பூ போன்றே தன் உருவை மறைத்து நிற்கின்றது. இடையர்களின் குழலோசை மனதைக் கவரும் வண்ணம் ஒலிக்கிறது.  அவர்கள் பறியென்னும் படுக்கைக்கு மேலாக ஓலைப்படல் வேயப்பட்டிருக்க, பறிக்குக் கீழாக    பிறியோலையை விலக்கி அழைத்தும் அதட்டியும் ஆடுகளைப் படலுக்குள்  அடைக்கிறார்கள்.  பகலவன் மலைத்தொடரின் பின் சென்று மறைந்ததால் இருள் பரவ,  நிலவு தோன்றி  அவ்விருளைத் தனது வெண்மையான  நிலவொளியினை வெளிவிட்டு விரட்டிவிடுகின்றது.  

கார்காலத்தில் திரும்புவேன் என்று தலைவன் அளித்த உறுதிமொழியை நினைத்து அவன் இன்னமும் வராததால் தலைவி மனம் கலங்குகிறாள். தனது துயரை தோழியிடம் கூறுகிறாள்.   

மயக்கும் மாலைப்பொழுது எனது உயிரை வாட்டுகிறது (94).  கார்ப்பருவம் வந்ததால் கொன்றை மலரத் துவங்குகின்றது தோழியே காண்பாயாக !  (98). கார்காலத்து முல்லைக்கொடிகள்  குருந்த மரத்தை அணைத்துப் படர்ந்திருப்பதையும்  காண்பாய் தோழி! (105).  செம்முல்லைக் கொடிகள் அருகில் உள்ள குருந்த மரத்தில் படர்வது போலத் தலைவனை அணைத்துக் கொள்ள எனக்கு வழி இல்லையே (93).  மாலை மயக்கத்தினைப் பொறுக்க இயலாதவளாகத் தலைவனை எண்ணி வருந்துகின்றேன் (97).  புல்லாங்குழலின் இசையும் மாலைப் பொழுதும் என்னை வருத்துகின்றன (101).  இருண்ட வானும் வெண்ணிலவும் காதல் துணை அற்றவருக்குத்  துன்பத்தைத் தரும்  தன்மையைக் கொண்டனவாய் உள்ளன தோழி! (96).  

முன்னர் பிரியும் பொழுது, தன் விருப்பத்திற்கு நான் இணங்க வேண்டும் என்பதற்காக, கார்காலத்தில் திரும்பிவிடுவேன் என்று தலைவன் கொடுத்த உறுதிமொழி தவறிப் போனது. கார்காலம் துவங்கிவிட்டது. ஆனால், கொடுத்த உறுதிமொழியின்படி தலைவனின் தேர் இங்கு வரவில்லை.  தோழியே! ஆதலால், உள்ளத்தில் ஏற்படும் அச்சத்தால் கண்ணீரால் நிறைகின்றன என் விழிகள் (100).  தலைவனின் பிரிவால்  என் மேனியின் ஒளி மங்கியது,  ஒளியிழந்தன என்னுடைய கண்களும்,  என் தோள்களும் அழகினை இழந்தன. எனது  மெல்லிய விரல்களும் தலைவனைப் பிரிந்ததால் நலமிழந்த நாட்களை எண்ணத் துவங்கி, அந்த நாட்களும்  எண்ணிக்கையில் அதிகமானதால் விரல்களும் தேய்ந்து விட்டன (99).  கார்காலத்தில் திரும்புவேன் என்று உறுதி கூறிய தலைவனின் மொழியும் பொய்யாக இருக்கக்கூடும் என்ற தெளிவைப் பெறாத நானும் தலைவன் வரவை எதிர்நோக்கி கடமையாக  எனது உயிரை  வருத்திக் கொண்டிருக்கிறேன் (102).  துணையின்றித் தவிக்கும் காதலர்கள் துயருற்று இறவாமல் வாழும் வகை ஏதேனுமிருப்பின் என்னவென்று எனக்கு அதை உரைப்பாயாக  தோழி (111). 

கார்காலத்தில்  பூத்துத் தழைத்து மலர்களாய் சொரிந்து என்னைக் கொல்கின்றாய் கொன்றை மரமே! என்று தலைவி கொன்றை மரத்தை நோக்கி தோழியின் காதில் விழும்படி கூறுகின்றாள் (104).   தோழியும் தலைவியின் துயர் நீக்கும் பொருட்டு இது கார்காலம் அல்ல என்று சொல்லிவிட எண்ணுகிறாள். அவளும் மரத்தை நோக்கி,  கார்காலத்தில் பொழியும் மழை போலச் சீரான மழை பொழியாத பொழுதும் செழித்துப் பூத்துள்ள குருந்த மரமே! நீ  இவ்வாறாகப் பூத்திருப்பதைக் கண்டு  கார்காலம் துவங்கிவிட்டதோ என்று தலைவி கருதும்படி  செய்கிறாய்.  இவளை  உடல் மெலிந்து வருந்து என்கிறாய்.  நீ இவளை மட்டும் பெரிதும் துன்புறுத்துகிறாய் என்று தலைவியை ஆற்றுவிக்கும் நோக்கில் இது கார்காலம் அல்ல எனத் தலைவியின் காதில் விழும்படி தோழி குருந்த மரத்தினை நோக்கிக்கூறுகிறாள் (114). 

பிறகு தோழியை அணுகி, இதைக் கார்காலம் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. ஏன் எனில், மழை பெய்யும் தன்மையை நோக்கினால் அது  கார்ப்பருவத்தின் மழைக்கேற்ற முதிர்ச்சியுடன் சீராக இல்லை. கார்காலம்  வந்துவிட்டதே என்று  தவறான ஒரு பருவ காலத்தில் எண்ணி வருந்துவதை நீ ஒரு செயலாகச் செய்யலாமா? தலைவியே! (103) என்று தோழி தலைவி ஆற்றுவிக்க முற்பட்டு இது கார்காலமே அல்ல என்று பொய்யுரைக்க முற்படுகிறாள். 

காந்தள் மொட்டுக்கள் பூத்து நின்றன. எங்கும் மழையால் நீர் நிரம்பி தனக்குரிய கார்ப்பருவத்தினைக் காட்டி நிற்கிறது கார்காலத்து முல்லை நிலக் காடு.  அவ்வாறு இருக்க எதனால் இது என் காதலர் திரும்புவதாகச் சொன்ன கார்ப்பருவம் அல்லவென்று சொல்ல முயல்கிறாய் இப்பொழுது? (118).   கார்காலத்தில் பூக்கும் மலர்கள் எங்கும் தேன் வண்டுகள் பாடும் நிலை கண்டு இது கார்காலம்தான் என்று எவரும் அறிய மாட்டார்களா? (120). ஆனால், நீயோ இது கார்ப்பருவம் அல்ல என்று சொல்லி நிற்கின்றாய்,   அவ்வாறு கார்காலம் அல்ல என்று உரைப்பது பொருத்தமான செயலாகுமா? (119).  கார்காலம் இன்னமும் வரவேயில்லை என்று பலவாறு  சொல்லி எனக்கு ஆறுதல் சொல்லும், மூங்கில் போன்ற தோள்களை உடைய தோழியே! எனது கண்ணீரினையே  தாரை நீராகக் கொண்டு எனது உயிரை வார்த்துக் கொடுத்தேன் இந்தப் பருவமல்லாத பருவத்திற்கு என்று தலைவி தோழியிடம் கூறினாள் (103).

மேலும் தொடர்ந்து, என் காதலர் இத்தனை நாட்களில் திரும்பிவிடுவேன் என்று கூறிச் சென்ற நாட்கணக்கு தவறாதிருக்குமானால் இது கார்காலமே.   இது கார்காலமாக இல்லாவிடில் மழை இவ்வாறு தொடர்ந்து பொழியாது. ஆதலால், எனக்கு ஆறுதல் கூறும் எண்ணத்தில், எனது துயர் நீக்கும் நோக்கில்  இது கார்காலம் அல்ல என்று நீ  சொல்வது எனக்கு நம்பிக்கை அளிக்காது என்று தலைவி தோழியிடம்  கூறினாள் (108). 

தனது மறுதலிக்கும் முயற்சி பயனின்றிப் போனதை  உணர்ந்த தோழி, தலைவியை ஆற்றுவிக்கும்  தனது வழிமுறையை  மாற்றி, தலைவியின் கருத்தை ஏற்று அவளுக்கு இசைவாகப் பேசி அவளது துயர் நீக்க நம்பிக்கையூட்டும் வழிமுறையைக் கையாள்கிறாள். இந்த அழகிய கார்காலம் நம்மை வருத்துவதற்கு என்றே வந்துள்ளது தலைவியே ! (107).  கார்காலத்தின் அறிகுறிகள் தோன்றிவிட்டன எனவே விரைவில் தலைவன் உறுதிமொழி தந்தது போல  வந்துவிடுவான் (95).  தலைவன் திரும்பி வாராது இருந்துவிடுவானோ? நிச்சயம் வருவான். கார்காலம் துவங்கியது.  ஆகவே  நாமும் தலைவன் வரவை  எதிர்நோக்கி  அவனுக்கு விருந்து முதலியன செய்து காத்திருத்தல் நமது கடமையாகும் தலைவியே (112).  தலைவன் திரும்பும்  கார்காலமும் வந்தது,  தலைவனும்  திரும்பி வந்துவிடுவான் என்று தெரிந்தும்  என்ன காரணத்தால் இப்பொழுது உனது மெல்லிய தோள்களில்  பசலை பூக்களாயின? என்று கேட்டு தோழி தலைவியை வருந்தவேண்டாம் எனத் தோழி  வற்புறுத்துகிறாள் (117).  

தன்னை அன்புடன் ஏற்றுக் கொண்ட காதல் துணையைப் பிரிந்து செல்கின்ற காதலர் எப்படிப்பட்ட கொடியவர்! அந்தப் பிரிவினைப் பொறுத்துக் கொள் என்று பிரிவுத் துயரில் வருந்துபவர்களிடம் சொல்பவர்களும் அது போன்ற கொடியவர்களே ஆவார்கள். அவ்வாறு ஆறுதல் அடையச்சொல்லி   வற்புறுத்துவோர் கொடியவர்கள், ஆதலால்  தோழி நீயும் கொடியவளே (106).  பெரியோர் என்பவரின் பெருந்தன்மைப் பண்பு என்பது என்றும் பெருமைக்குரியதே. துன்பம் வரும் சூழலில் இதைக் கண்கூடாக நாம் அறிந்து கொள்ள முடியும்.  நமக்கு அருமையான துணையாக இருந்தவர் வருத்தத்தை நீக்கும் வகையில் அருகில் இல்லையே என வருந்தி, மனம் ஆறாது,  அன்புடன் தலை  சாய்த்துக் கொள்ள வகையற்ற நிலையில் நான் இருப்பதைக்  கண்டு,  குளிர்ந்த செம்முல்லைச் செடிகளோ  சிறுமைக் குணத்தால் சிரித்துக்கொண்டு பூக்கின்றன. ஆனால், அதனைப் பார்த்துப் பொறுக்கவியலாத பெருந்தன்மை கொண்ட மலைகளோ மழை நீரினைக் கண்ணீராக வழிய விட்டு மிகவும் அழுது மயங்குகின்றன (110) என்று கூறி தலைவி வருந்துகிறாள்.   

கார்காலம் தோன்றிய அறிகுறிகளால் தலைவனின் வரவை எண்ணியிருந்த தலைவி பசலை நோய் கொண்டதைக் கண்டு வருந்திய தோழி,   குருந்த மரமே!  கொடி முல்லையே! கொன்றை மரமே!  உங்களால் கார்காலம் தோன்றிய அறிகுறிகளைக் கண்டு  அழகிய கூந்தல் தொங்கிப் புரளும்படியான மூங்கிலையொத்த தோள்களை, பெரும் பீர்க்கம் பூவின் நிறம் போன்று மீண்டும்  பசலை பூக்கச் செய்துவிட்டீர்கள் என்கிறாள் (116). 

நள்ளிரவு பொழுது கடந்தும்,   பரந்த பிடரி மயிரினையுடைய குதிரைகள் பூட்டப்பட்ட தேரிலமர்ந்து பொருள் தேடச் சென்ற என் தலைவன் வந்தாரில்லை (113). ஒற்றை ஆளாக நான் இருந்தும்,  ஒன்று அல்லாது  பல பகைகளும் என்னை வருத்துதலே தமது தொழிலாகக் கொண்டுள்ளன.  துணை அன்றிலை விட்டுப் பிரிந்து வேறாகப்  பொருத்தமற்று பனைமடலில் தங்கியுள்ள அன்றில் பறவையும்,  மாலைப்பொழுதும்,  பெய்யும் மழையும்,  ஆம்பற் குழலோசையும், கடலும் மட்டுமின்றி ஊர்ந்து செல்லும் முகில்களும் என் மேல் சினம் கொண்டுள்ளன இதற்கு நான் என்ன செய்வது தோழியே? (121).  கார்காலத்தில் மீளுவேன் என்று சொன்ன சொல் தவறிய தலைவன் வாராத இந்நிலை கண்டும் உயிரை நீக்காத நாணமில்லாத  என்னுயிரானது, நொறுங்கி உதிர்ந்து விழுவது போலவுள்ளது (122). பொன் போன்ற சிறப்புமிக்க துணையின் அருமை புரியாது பொன் தேடப் பிரிந்து சென்றவர் இக்கார்காலத்தில்  திரும்புவர். அவ்வாறு திரும்பி வாரார் என்றால் இனி துணையைச் சேரும் வாய்ப்பிழந்து வாழ்வார் (109) எனத் தோழியிடம் கூறி தலைவி வருந்தினாள்.

ஆனால் தலைவியை மேலும் காக்க வைக்காமல் மறுநாள் காலையில் தலைவன் திரும்பிவிடுகிறான். வாயிலில் தேரில் பூட்டிய குதிரைகளின் மணியோசை கேட்டு தோழி விரைந்து வந்து பார்க்கிறாள். அவளை நோக்கிப் புன்னகைக்கும்  தலைவன்,   நீண்ட பெரிய கண்களில் கண்ணீர் தளும்பும் படிப் பார்க்கும், மூங்கில் போன்ற மெல்லிய  தோள்களையுடைய தலைவியிடம்,  தலைவனின் தேர் வாசலில்  வந்து   நிற்கிறது, உன் தலைவன்  திரும்பிவிட்டான் என்பதைக் கூறுவாய் தோழியே! என்று கூறுகிறான்(115). 

மகிழ்ச்சியுடன் மின்னலாகத் தோட்டத்திற்கு ஓடி அங்கு மூங்கிலைச் சுட்டுத் துளையிட்டுப் புல்லாங்குழல் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் தலைவியிடம் தலைவன் வரவைக் கூறுகிறாள் தோழி. தலைவன் வந்து விட்டான், தன்னை ஒவ்வொரு மாலையும் குழலிசையால் வருத்தும் மூங்கிலால் ஆன புல்லாங்குழலால் அவ்வாறு இனி செய்ய இயலாது என மகிழ்கிறாள் தலைவி.  ஏடி தோழியே! தலைவனைப் பிரிந்திருந்த என்னை, வருத்துதற்கு இலகுவானவள் என்ற எண்ணத்தில்  என்னை வருத்திய புல்லாங்குழலை  உலகிற் பலர் அறியச்  சுட்டுத் துளை செய்யப்படும் முறையினைக்  காண்பாயாக என்று தலைவி தோழியிடம் கூறி (123) மூங்கில் மீது வஞ்சம் தீர்த்துக் கொண்டவள் போல உள்ளம் உவகையுற தலைவனை வரவேற்க வீட்டிற்குள் விரைகிறாள் தலைவி. 

 
குறிப்பு - கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:
94.  மயக்கும் மாலைப்பொழுது எனது உயிரை வாட்டுகிறது தோழியே!
98.  கார்ப்பருவம் வந்ததால் கொன்றை மலரத் துவங்குகின்றது தோழியே காண்பாயாக !
105.  கார்காலத்து முல்லைக்கொடிகள்  குருந்த மரத்தை அணைத்துப் படர்ந்திருப்பதைக் காண்பாய் தோழி!
93.  செம்முல்லைக் கொடிகள் அருகில் உள்ள குருந்த மரத்தில் படர்வது போலத் தலைவனை அணைத்துக் கொள்ள எனக்கு வழி இல்லையே தோழி!
97.  மாலை மயக்கத்தினைப் பொறுக்க இயலாதவளாகத் தலைவனை எண்ணி வருந்துகின்றேன் தோழியே! 
101.  புல்லாங்குழலின் இசையும் மாலைப் பொழுதும் என்னை வருத்துகின்றன தோழி!
96.  இருண்ட வானும் வெண்ணிலவும் காதல் துணை அற்றவருக்குத்  துன்பத்தைத் தரும்  தன்மையைக் கொண்டனவாய் உள்ளன தோழி!
100.  கொடுத்த உறுதிமொழியின்படி தலைவன்  வராததால் என் உள்ளத்தில் ஏற்படும் அச்சத்தால் கண்ணீரால் நிறைகின்றன என் விழிகள் தோழியே!
99.  தலைவனைப் பிரிந்த நாட்களை எண்ணி எண்ணி என்னுடைய விரல்களும் நலிந்தன தோழி!
102.  கார்காலத்தில் திரும்புவேன் என்று  கூறிய தலைவன் வாக்குறுதி தவறியவனாக இருக்கக்கூடும் என்ற தெளிவைப் பெறாது நானும்  தலைவன் வரவை எதிர்நோக்கி எனது உயிரை  வருத்திக் கொண்டிருக்கிறேன்!
111.  அழகிய கார்காலம் தரும் துயரால்  என் உயிர் நீங்காமல் இருக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்வாயாக தோழி!
104.  கார்காலத்தில்  பூத்துத் தழைத்து மலர்களாய் சொரிந்து என்னைக் கொல்கின்றாய் கொன்றை மரமே!
114.  கார்காலம் வந்தது போன்று காலம் தவறிப் பூத்துள்ள குருந்த மரமே,  இது கார்காலம் அல்ல, தலைவியை வருத்தும் நோக்கில் பூத்துள்ளாய்.
118.  கார்காலத்தின் அறிகுறிகள் தெளிவாகத் தோன்றுகையில் எதனால் இது  கார்ப்பருவம் அல்லவென்று சொல்ல முற்படுகிறாய் தோழி?
120. கொன்றை மலர்கள் மலர்ந்து, வண்டுகள் பாடும் மாலைப் பொழுதைக் கண்ட பிறகும் இது கார்காலம்தான் என்ற உண்மையை அறிய மாட்டார்களா?
119. கார்காலம் இதுவல்ல என்று சொல்கிறார் சிலர், அது சரியல்ல இது கார்காலம்தான் தோழி!
103.  இது கார்காலம் அல்ல வென்று எனக்கு ஆறுதல் கூற முற்படும் தோழியே எனது உயிரை இந்தப் பருவத்திற்கே  அளிக்கிறேன் நான்.
108.  எனக்கு ஆறுதல் கூறும் பொருட்டு எனது துயர் நீக்கும் நோக்கில்  இது கார்காலம் அல்ல என்று நீ  சொல்வது எனக்கு நம்பிக்கை அளிக்காது தோழியே!
107.  இந்த அழகிய கார்காலம் நம்மை வருத்துவதற்கு என்றே வந்துள்ளது தலைவியே !
95.  கார்காலம் துவங்கியது, மழையால் காடுகள் தழைத்தோங்குகின்றன, தலைவன் திரும்பும் காலமும் வந்தது தலைவியே! 
112.  கார்காலம் துவங்கியது.  தலைவன் வரவை  எதிர்நோக்கி  அவனுக்கு விருந்து முதலியன செய்து காத்திருத்தல் நமது கடமை தலைவியே!
117.  தலைவன் திரும்பும்  கார்காலமும் வந்தது. தலைவன் திரும்பி வந்துவிடுவான் என்று தெரிந்தும் ஏன் பசலை நோய் கண்டாய் தலைவி?
106.  தலைவனின் பிரிவினைப் பொறுத்துக் கொள் என்று கூறி என்னை  வற்புறுத்தும் நீ கொடியவள் தோழி!
110. சிறுமதி கொண்ட செம்முல்லைகள் என் துயர் கண்டு நகைக்க, பெருந்தன்மை கொண்ட மலைகளோ  என் நிலை கண்டு அழுகின்றன தோழியே!
116.  கார்காலம் தோன்றிய அறிகுறிகளால் தலைவனின் வரவை எண்ணியிருந்த தலைவி பசலை நோய் கண்டாள்.
113.  நள்ளிரவு பொழுது கடந்தும் பொருள் தேடச் சென்ற என் தலைவன் வந்தாரில்லை தோழியே!
121. கார்காலத்துப் பல நிகழ்வுகளும் ஒற்றை ஆளான என்னை வருத்துதலே தமது தொழிலாகக் கொண்டுள்ளன தோழியே!
122.  முல்லைநிலக் காடுகள் தழைத்துள்ள கார்காலத்தில் தலைவன் திரும்பாததால் என்னுயிரானது, நொறுங்கி உதிர்ந்து விழுவது போலவுள்ளது தோழியே!
109.  பிரிந்து சென்ற தலைவர் சொன்னவாறு திரும்பி வாரார் என்றால் இனி துணையைச் சேரும் வாய்ப்பிழந்து வாழ்வார் தோழி!
115.  தலைவனின் தேர் வாசலில்  வந்து   நிற்கிறது, உன் தலைவன்  திரும்பிவிட்டான் என்பதைக் கூறுவாய் தோழியே!
123. தலைவனைப் பிரிந்திருந்த என்னை வருத்திய குழலும் அதன் கொடிய செய்கையின் பலனை இப்பிறவியிலேயே  அடையும் வண்ணம் துளையிடப்படுவதைக் காண்பாய் தோழி!



உதவிய  தளங்கள்:
1. கணிமேதாவியார்  இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
மூலமும் உரையும் - மகாவித்வான் ரா. ராகவையங்கார்
செந்தமிழ்ப் பிரசுரம்,  1927  (இரண்டாம்  பதிப்பு)
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf
https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை - தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார் 
தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html



நன்றி: சிறகு
ஜனவரி 2, 2021



#சிறகு, #இலக்கியம், #ஐந்திணைமாலை, #திணைமாலை நூற்றைம்பது, #Themozhi