Tuesday, December 31, 2013

கவிஞர் பிறந்தார்!!!

 கவிஞர் பிறந்தார்!!!


“போஸ்ட்இட் நோட்பேட்” தாளில்
அவசரக் குறிப்பொன்று எழுதிக்
கொடுக்கிறேன் மகளுக்கு 
படித்தபின் அவள் சொன்னது . . . 
சொன்னதே இல்லையே நீ இதுவரை!!!
குறுங்கவிதையும் கூட எழுதுவாயா?




நன்றி:  வல்லமை
டிசம்பர்  31, 2013


கவிதை, வல்லமை, Themozhi  



Wednesday, December 4, 2013

சரியா? தவறா?

சரியா? தவறா?




காலிக் கோப்பையில் எறும்புகள்
கண்டன இனிப்புச் சுவைதனை
கழுவும் வேளையும் வந்ததுவே
கண்டேன் நானும் எறும்புகளை
கவனக் குறைவால் அலசிவிட்டால்
கண்டிடும் மரணத்தை அவ்வுயிர்கள்

அக்கறை கொண்டு செயல்பட்டால்
அத்தனை உயிர்களையும் என்னால்
அன்புடன்தான் காத்திட இயலும்
அன்றுடன் முடியாது தொடர்வதற்கு
அச்சிற்றெறும்புகளின் வாழ்க்கையிலோர்
அல்லல் நீக்கும் தேவதையாவேன்

சின்னஞ்சிறு தட்டல்களினால் தரையில்
சிதறியோடின எறும்புகள் எங்கும்
சிற்றெறும்பொன்றோ தன்கால் மாட்டிச்
சிக்கித் தவித்தது கோப்பைப் பிசுக்கில்
சிறுகுச்சியினால் விடுவித்தேன் அதனை
சிறிது தள்ளாடியே விழுந்தது தரையில்

நடக்க முடியாது தவித்த எறும்பின்
நட்பும் சுற்றமும் விட்டு விரைந்தோடின
நலிவுற்றுப் போகும்படி முடமாக்கினேனோ
நாளும் அதற்கினி தனிமையில் உயிர்வதையோ
நானும் துயருற்றேன் கொன்றிருந்தால் அதை
நல்லதோர் முடிவாக இருந்திருக்குமோ ஐயகோ!!!

 

நன்றி: வல்லமை 
டிசம்பர்  4, 2013  



#கவிதை,  #வல்லமை, #Themozhi 



 

Sunday, December 1, 2013

வல்லமைச் சிறுகதைகளில் ஒன்றாக நான் எழுதிய கதையும் ...

 
வல்லமைச் சிறுகதைகளில் ஒன்றாக  நான் எழுதிய கதையும் ...



வல்லமைச் சிறுகதைகள் – நூல் வெளியீடு
[நன்றி : வல்லமை மின்னிதழ்: http://www.vallamai.com/?p=40337]

ஐக்கியா டிரஸ்ட் நிறுவனம் மற்றும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தையும், ஐக்கியா டிரஸ்ட் நிறுவனரும் மற்றும் எழுத்தாளருமான திரு. வையவன் அவர்கள் ’வல்லமைச் சிறுகதைகள்’ என்ற பெயரில் நூலை மிக அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். டபுள் கிரவுன் அளவில், 102 பக்கங்களில், எழுத்தாளர்களின் படங்களுடனும் சுருக்கமான அறிமுகத்துடனும் இந்நூல் வெளிவந்துள்ளது. வாசுவின் பலவண்ண ஓவியங்கள், அட்டையை அலங்கரிக்கின்றன. திரு வையவன் அவர்களுக்கும், இந்த போட்டியில் பங்கு பெற்ற கதைகளிலிருந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ள திரு வெங்கட் சாமிநாதன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகளும், நன்றியும். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள்.

வல்லமைச் சிறுகதைகள் - பல்வேறு எழுத்தாளர்கள்; 
பக்.104; ரூ.100; தாரிணி பதிப்பகம், சென்னை-20;  044-2440 0135.



நன்றி: வல்லமை 
டிசம்பர் 1, 2013  

சிறுகதை: "ஜினா என்றொரு க்ருயெல்லா' - தேமொழி 





#நூல், #வல்லமை, #சிறுகதைகள், #Themozhi 



Wednesday, November 27, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 18

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 18




மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! 
 
உள்ளம் என்பது எப்போதும் உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லை போராட்டம்! கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால் அதைத் தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!  
--- பா. விஜய் 
 
  
நன்றி: வல்லமை - நவம்பர் 27, 2013 

#ஓவியம், #வல்லமை,  Themozhi 




Monday, November 11, 2013

ஒரு ஊதாப்பூவின் கண்ணுறக்கம்

ஒரு ஊதாப்பூவின் கண்ணுறக்கம்


புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரில் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான எழுத்தாளரின் இயற்பெயர் ஸ்ரீ வேணுகோபாலன். இவர் 1000ற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 300க்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியவர்.


இவர் கதைகளில் அமைதியில்லா என் மனமே, துள்ளுவதோ இளமை, சிகப்பு ரோஜா கதைகள், என் பெயர் கமலா, காதல் ஒரு கனவு, தாரா… தாரா… தாரா… திருவரங்கன் உலா, மதுரா விஜயம், சத்ய சாய் போன்ற பல நூல்கள் குறிப்பிடத்தக்கன. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது முதல் கதை இவரது 18 ஆவது வயதில் 1949 இல் தினமணிக்கதிர் பத்திரிக்கையில் வெளியானது.


இவருடைய கதைகள் அறிவியல், சமூகம், துப்பறியும் கதைகள் எனப் பல பரிமாணங்களில் வெளிவந்துள்ளன. கதைகளைத் தவிர்த்து தலபுராணங்கள், தொலைக்காட்சி தொடர்கள், நாடகங்கள், ஆன்மீக வரலாற்று நூல்கள் எனப் பல்துறைகளிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவருடைய புதினங்கள் பல பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவர் துப்பறியும் கதைகளைத் தனது புனை பெயரிலும், தலபுராணக் கட்டுரைகளைத் தனது இயற்பெயரிலும் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ வேணுகோபாலனாக ஆன்மீக, வரலாற்றுப் புதினங்கள் மற்றும் சமுதாயக் கதைகளை எழுதியவரும், புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வணிக நோக்கில் புகழ்பெற்ற இளமைத் துள்ளல் கதைகளை எழுதியவரும் இவரே என்பது இவரது வேறுபட்ட எழுத்துத் திறமையைக் காண்பிக்கும். உண்மைக் கதைகளை எழுதப் புனைபெயரைத் தேர்ந்தெடுத்ததாக இவர்  குறிப்பிட்டுள்ளார். பதினைந்து ஆண்டுகள் எழுத்தாளர் வாழ்க்கையில் அடையாத புகழை ஆறே வாரங்களில் இவருக்குப் புனைபெயர் பெற்றுத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


சென்னை தபால் தலைமையகத்தில் வெளிநாட்டுத் தபால் பிரிவில் பணியாற்றிய இவரால் “ஊதாப்பூ” என்ற மாதாந்திர புதினப் பத்திரிக்கை ஒன்றும் சொந்தமாகத் துவங்கப்பட்டு, குறுகிய காலத்தில் 50,000 பிரதிகள் வரை விற்பனையை எட்டினாலும், நடைமுறையில் எதிர்கொள்ளப்பட்ட மேலாண்மை தொடர்பான குறைபாடுகள் எழவே நிறுத்தப்பட்டது. ஆன்மிகம் என்ற பத்திரிக்கையையும் ஆசிரியராக இருந்து நடத்தி வந்துள்ளார்.


இவரது எழுத்தாற்றலுக்காகப் பரிசுகள் பலவும் பெற்றவர். மதுரகவி நாடகத்திற்காக இந்திய அரசாங்க விருது, சிறந்த சிறுகதைக்காக கல்கி பத்திரிக்கை பரிசு, சிறந்த எழுத்தாளருக்கான சாவி பத்தாண்டு விழா விருது, ராணி வெள்ளிவிழா விருது மற்றும் பாலு ஜுவெல்லர்ஸ் விருது, சிறந்த திரைக்கதைக்காக சென்னை திரைப்பட ரசிகர்கள் விருது, அமுதசுரபி நாவல் போட்டி பரிசு எனப் பல பரிசுகளைப் பெற்றவர் இவர்.

இவரது “ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது,” “நந்தா என் நிலா,” மற்றும் “அந்த ஜூன் 16 ஆம் நாள்”ஆகிய கதைகள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. அந்த ஜூன் 16 ஆம் நாள் திரைக்கதை வசனத்தையும் எழுதியுள்ளார். 2011 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கத் தேர்வாகிய கலை இயக்குநர் பிரபாகரன் இயக்கியுள்ள ‘அம்மா’ என்னும் குறும்படம் புஷ்பா தங்கதுரை எழுதிய சிறுகதையை மையமாக‌க் கொண்டு உருவாக்கப் பட்டது. இவரது ‘பெண் ஒரு ஜீவநதி, ‘நான் குடும்பத்து ஸ்டார்,’ ‘ஊரார்’ கதைகள் தொலைக்காட்சி தொடர்களாக வெளிவந்தன.

நூல்கள் சேகரிப்பில் ஆர்வமுள்ள இவர் பல்லாயிரக் கணக்கான நூல்கள் நிரம்பிய நூலகம் ஒன்றையும் உருவாக்கி இருந்தார். உடல்நலமற்று ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையிலும், பிறகு தனியார் மருத்துவமனை ஒன்றிலும் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா தங்கதுரை அவர்கள் தனது 82ஆவது வயதில், நவம்பர் 10, 2013 அன்று உயிர் நீத்தார்.

பின் குறிப்பு: எனது சிறுவயதில், இவர் கதைகள் சிறுவயதினர் படிக்கத் தகுதியற்றது என்று என் அம்மாவினால் தடை உத்தரவு போடப்பட்டது. இது இவரது எழுத்திற்கு அக்காலத்தில் இருந்த வரவேற்பைக் காட்டும்.


படங்கள் உதவி:
https://plus.google.com/photos/107223873489690009994/albums/5643981174513298545?banner=pwa
http://www.kittz.info/2013/04/blog-post.html



நன்றி: வல்லமை 
நவம்பர் 11, 2013



#வல்லமை, #Themozhi 



Sunday, November 10, 2013

மூளைக்குப் பயிற்சி தரும் இருமொழித் திறன்

 மூளைக்குப் பயிற்சி தரும் இருமொழித் திறன்



தமிழறிஞர்கள் பலரும் இந்த வாரம் 'தி இந்து' தமிழ் நாளிதழ் (நவம்பர் 4, 2013 அன்று) வெளியிட்ட எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின்  "ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?" என்ற கட்டுரையைப் பற்றிய தீவிர விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அக்கட்டுரையில் அவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரோமன் (அவர் ஆங்கில எழுத்துரு என்று பிழையாகக் குறிப்பிடுகிறார்) எழுத்துருவில் தமிழை எழுதிப் பழகப் பரிந்துரை செய்கிறார். அதாவது 'அம்மா' என்பதை 'amma' என்று எழுதுவது தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவும் என்பது அவர் கருத்து. அது தவறு என்று பற்பல மொழியியலாளர்களும், தமிழறிஞர்களும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். தமிழை அழிக்க நினைக்கும் நடவடிக்கை என்று அவரை ஏசுவதும் நடக்கிறது.

மொழிச் சீரழிவு விவாதம் ஒருபுறமிருக்க, அவர் இக்கருத்தை முன்னிறுத்திய விதம் அறிவியல் ஆதாரமற்றதாகவும் இருக்கிறது. திரு. ஜெயமோகன் அவர்கள் குழந்தைகள் கற்பதற்கு இருமொழிப் பயன்பாடு தடைக்கல்லாக இருக்கிறது என்ற கவலை தொனிக்கும் விதத்தில், "இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது" கவலை தெரிவித்து இருக்கிறார். அதற்கு ஏற்றார் போன்று சோகம் ததும்பிய முகத்துடன் உள்ள மழலையர் பள்ளி மாணவர்களின் படமும் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இக்கருத்து, அதாவது இருமொழிக் கொள்கை கற்றலுக்கு இடையூறாக விளங்கும் என்னும் கருத்து, உண்மையல்ல என்பதை நரம்பியல் ஆராய்ச்சி வல்லுநர்கள் பலமுறை ஆதாரத்துடன் நிறுவியுள்ளனர். இந்த ஆராய்ச்சிகளில் முடிவின்படி, திரு. ஜெயமோகனின் கவலைக்கு மாறாக, இருமொழி பயிலும் இந்திய மாணவர்கள் அறிவில் சிறந்து விளங்கவே வாய்ப்புள்ளது. திரு. ஜெயமோகனின் கட்டுரை வெளியான இருநாட்களில் நியூராலாஜி ஆராய்ச்சி சஞ்சிகையில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது. ஒருவருக்குள்ள இருமொழித்திறன் அவருக்கு முதுமை மறதி தோன்றுவதை ஐந்தாண்டுகள் தாமதப்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளது இந்த ஆராய்ச்சி. எழுதப் படிக்கத் தெரியாது, வெறும் இருமொழிகளை மட்டும் பேசும் திறனே இந்த முதுமை மறதியைத் தள்ளிப்போடுவதும் தெரிய வந்திருக்கிறது. அத்துடன் அக்கட்டுரை குறிப்பிடும் ஆராய்ச்சி நிகழ்ந்த இடமும் நம் இந்தியாவே, ஹைதராபாத் மக்களிடம் நடத்தப் பெற்ற ஆய்வு இது.

ஆய்வுக்கு இந்த நகரைத் தேர்ந்தெடுப்பதற்கு அங்கு மக்களில் பெரும்பாலோர் இருமொழிகளையோ, அல்லது அதற்கும் மேலாகவோ தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் நிலை இருப்பதே காரணம். தெலுங்கு, உருது, ஆங்கிலம் போன்ற மொழிகளை வீட்டிலும், அலுவலகத்திலும், பள்ளியிலும் என ஒரே நாளில் பலமுறை மாற்றி மாற்றிப்  பேசும் வகையில் அமைந்துள்ளது அந்நகர மக்கள் பெரும்பாலோரின் தினசரி வாழ்க்கை. அவ்வாறு ஒருமொழியிலிருந்து மறுமொழிக்கு மாற்றி மாற்றிப் பேசுவது மூளைக்குச் சிறந்த பயிற்சியாக அமைகிறது. இவ்வாறு செய்யும் பொழுது, மொழிகளின் ஒலி வடிவம், இலக்கணக் கட்டமைப்பு, கலாச்சாரப் பின்னணிக்கு ஏற்ப மொழியைப் பயன்படுத்தும் முறை எனப் பலவற்றையும் மூளை கவனிக்க வேண்டியிருக்கிறது. இத்தொடர் பயிற்சி முதுமை மறதியிலிருந்து மூளையைப் பாதுகாக்கிறது என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான தாமஸ் பாக், இவர் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக் கழகத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் (Thomas Bak, a neurologist at the University of Edinburgh, Scotland). இந்த ஆராய்ச்சியில் உடன் ஈடுபட்ட மற்றொரு ஆராய்ச்சியாளர் ஹைதராபாத் நிஜாம் மருத்துவ நிலையத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் சுவர்ணா ஆலடி என்பவர் (Suvarna Alladi, a neurologist at Nizam's Institute of Medical Sciences, Hyderabad). இவர் அனைத்துத்தரப்பு இந்திய மக்கள் வாழ்விலும் இருமொழி பயன்பாடு இயல்பாகப் பரவி இருப்பது இந்த ஆராய்ச்சியினை மேற்கொள்ள உதவியாக இருந்தது என்கிறார்.

முதுமை மறதி தாக்கப்பட்டு சிகிச்சை பெரும் முதியவர்கள் 648 பேரில், பலமொழித் திறன் கொண்ட பிரிவினருக்கு 65 வயதில் தோன்றத் தொடங்கிய முதுமை மறதி, அத்திறன் இல்லாதவர்களை 61 வயதிலேயே ஆட்கொண்டிருப்பது இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அத்துடன் இருமொழி பேசும் திறன் உள்ளவர்களிடம் மூவகையான முதுமை மறதி நோய் வகைகளும் (அல்சைமர், மூளைக்கு இரத்த ஓட்டக் குறைவதால் வரும் மறதி, மூளையின் முன்கதுப்புகள் வளர்ச்சி குறைவதால் வரும் மறதி — Alzheimer's disease, vascular dementia, frontotemporal dementia) தோன்றுவது தாமதப் பட்டிருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கும் முன்னர் கனடாவில் புலம் பெயர்ந்து வந்த இருமொழி பேசும் திறன் உள்ளவர்களை அந்நாட்டு மக்களுடன் ஒப்பிட்ட பொழுதும் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த ஆராய்ச்சியில் புலம் பெயர்ந்தவர்களின் கலாச்சாரப் பின்னணி ஏதும் காரணமாக இருக்குமோ என்று தோன்றிய ஐயம் இந்தியாவில் ஒரே நகரில் வசிக்கும் மக்களிடம் நடத்திய ஆய்வின் மூலம் நீங்கியுள்ளது. 

இத்துடன் இது போன்ற ஆராய்ச்சிகள் பலவும் முன்பு வெளி வந்துள்ளன. அவற்றில் இருமொழி பேசுபவர்கள் சிறந்த அறிவாளிகளாகவும் விளங்குவது கண்டறியப் பட்டுள்ளது. இருமொழி பேசுபவர்கள் புதிர்களை விடுவிப்பதில் விரைவாகச் செயல்படுவதை மழலையர் பள்ளி சிறார்களைக் கொண்டு கண்டறிந்துள்ளார்கள் எல்லென் பியாலிச்டோக், மிச்சேல் மார்டின்ரீ என்ற உளவியல் நிபுணர்கள் (Psychologists Ellen Bialystok and Michelle Martin-Rhee). மழலையர்கள் கணினித் திரையில் உள்ள நீல நிற வளையங்களும், சிவப்பு நிறச் சதுரங்களையும் தனித்தனியாகப் பிரிக்குமாறு சொல்லப்பட்டர்கள். அவற்றைப் பிரித்துப் போடப்படவேண்டிய பெட்டியிலோ நீல நிறச் சதுரமும், சிவப்பு நிற வளையமும் என மாற்றிப் படம் எழுதியிருக்கும். நிறங்களை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கும் செயலைச் சிறார்கள் சுலபமாகச் செய்து முடித்தனர். பின்னர், மீண்டும் விளையாட்டை மாற்றி வடிவங்களைக் கொண்டு அவற்றைப் பிரித்து வளையம் மற்றும் சதுரம் வரைந்த பெட்டியிலே போடவேண்டும், ஆனால் நிறத்தைப் பற்றிக் கண்டு கொள்ளக்கூடாது என்ற விதிமுறை கொடுத்தனர். இது சவால் நிறைந்தது, வடிவங்களின் நிறம் கவனச் சிதறலைக் கொடுக்கும். ஆனால், இம்முறையில் வடிவங்களைப் பிரிப்பதில் இருமொழி பேசும் திறன் உள்ள மாணவர்கள் விரைவில் செய்து முடித்துவிட்டனர்.

இது போன்று இருமொழித் திறன் அடிப்படையில் நிகழ்த்தப் பட்ட பல ஆராய்ச்சிகளிலும் இது போன்ற முடிவே கிடைத்துள்ளது. இதனால் இருமொழி பேசும் திறன் உள்ளவர்களின் மூளை கட்டளைகளை நிறைவேற்றி செயல்களை முடிப்பதில் விரைந்து செயல்படுவது தெரிய வந்துள்ளது. ஒரு மொழியிலிருந்து அடுத்த மொழிக்கு மாறும் செய்கை, நாளடைவில் கவனச் சிதறல்களைக் குறைத்து விரைவில் செயல்பட உதவுவது ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் திட்டமிடுதல், புதிர்களை விடுவித்தல் போன்ற சவால் நிறைந்த செயல்களை விரைவில் முடிப்பது இருமொழித் திறன் உள்ளவர்களுக்கு எளிதாக வசப்படுகிறது.

மற்றொரு ஆராய்ச்சி ஆக்னெஸ் கோவக்ஸ் (Agnes Kovacs) என்பவரால் குழந்தைகளை வைத்து இத்தாலியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதில் பிறந்ததில் இருந்து இருமொழிகள் புழங்கும் சூழ்நிலையில் வளரும் ஏழு மாதக் குழந்தைகளை ஒரு மொழி மட்டுமே பேசும் சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட குழந்தைகளுடன் ஒப்பிட்டனர். இரு பிரிவுக் குழந்தைகளுக்கும் ஒலி எழுப்பிய பின்னர், திரை ஒன்றில் ஒரு பக்கத்தில் இருந்து பொம்மை வருவதைக் காண்பித்தனர். சிலமுறை செய்த பிறகு ஒலி எழுப்பிய பின்னர் குழந்தைகள் பொம்மை வரும் திசையை நோக்கத் துவங்கின. பின்னர் ஒலி எழுப்பிய பின்னர் பொம்மையை எதிர்ப்  புறத்தில் இருந்து வரும்படி செய்தனர். இருமொழி சூழ்நிலைக் குழந்தைகள் உடனே மறு திசையைப் பார்க்கக் கற்றுக் கொண்டன. ஆனால் ஒரு மொழிச் சூழலில் வளர்ந்த குழந்தைகளுக்கு இந்த மாற்றம் புரியாது பழையபடியே முதலில் கற்ற திசையையே நோக்கின.

கவுஷன்ஸ்காயா மற்றும் மாரியன் (Kaushanskaya & Marian) மேற்கொண்ட ஆராய்ச்சியும் ஐந்து முதல் பத்தாண்டுகள் இருமொழிகளில் பயின்றவர்கள் ஒரு மொழியில் பயின்றவர்களைவிட அறிவுப் போட்டிகளிலும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இருமொழித் திறன் உள்ளோரின் முன்மூளை சிறந்த முறையில் செயல்படுவதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்று இருமொழி அறியும் வாய்ப்புகளற்ற பிற நாடுகளில், புலம் பெயர்ந்து வரும் பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகளிடம் அவர்கள் தாய்மொழியில் பேசும் வழக்கத்தைக் கைவிட வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும் உளவியல் மருத்துவர் ஜூடி வில்லிஸ் (Judy Willis) குறிப்பிடுகிறார். அதிக உடற்பயிற்சியின் மூலம் தசை வலுவடைவது போல, இருமொழித்திறன் மூளைக்கு அதிகப் பயிற்சி கொடுத்துச் சிறப்பாகச் செயல் படவைப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. உண்மை இவ்வாறிருக்க, இருமொழிகளில் பயிலும் வாய்ப்புள்ள இந்தியாவின் கல்விமுறை மாணவர்களின் மூளைக்குச் சிறந்த பயிற்சியே அன்றி அவர்களுக்கு அது பெரிய சுமை என்று கருதுவது தவறு.

பெற்றோர்களைத் தங்களது பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்குக் கல்வியில் சிறந்து விளங்கச் செறிவூட்டப்பட்ட பானங்களை வழங்க விளம்பரங்கள் அறிவுறுத்துவது போல, இருமொழிப் பயிற்சியும் அறிவுத்திறனை மேம்படுத்தும் என்று விளங்க வைக்கவேண்டும். சிறுவயது மூளையின் பண்பான எதையும் உள்வாங்கும் திறனை 'இளமையில் கல்' என்ற வழக்கின் மூலமாகக் காலம் காலமாக அறிந்தவர்கள் நாம் என்பதை மறக்கத் தேவையில்லை.


ஆதாரங்கள்:
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? - ஜெயமோகன், எழுத்தாளர், தி இந்து, நவம்பர் 4, 2013 (http://tamil.thehindu.com/opinion/columns/article5311674.ece)
Speaking more than one language may delay dementia - Kim Painter, USA TODAY, November 7, 2013 (http://www.usatoday.com/story/tech/2013/11/06/language-bilingual-dementia/3452549/)
Why Bilinguals Are Smarter - Yudhijit Bhattacharjee,The New York Times, March 17, 2012 (http://www.nytimes.com/2012/03/18/opinion/sunday/the-benefits-of-bilingualism.html?_r=0)
Bilingual Brains – Smarter & Faster  - Better attention and cognition in children who grow up in bilingual settings.
Dr. Judy Willis, M.D., M.Ed. in Radical Teaching, Psychology Today, November 22, 2012 (http://www.psychologytoday.com/blog/radical-teaching/201211/bilingual-brains-smarter-faster)


நன்றி: கீற்று - நவம்பர்  10, 2013
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/25425-2013-11-10-10-56-43



#கீற்று, #அறிவியல், #மொழியியல், #Themozhi 



Thursday, October 31, 2013

பண்டிகை தந்ததொரு பாடம்

 பண்டிகை தந்ததொரு பாடம்





சிலர் உயிர்த்தெழுந்த நாளை உலகம் கொண்டாடும்
சிலர் உயிர்துறந்த நாளை அகிலம் கொண்டாடும்
நாம் வாழும் வாழ்க்கைதான் நிர்ணயிக்கும்
நம் வாழ்விற்குப் பிறகு பெறும் மரியாதையை

நல்லவர் மாண்டால் துக்கம் சூழ்வதும்
தீயவர் மாண்டால் துயரம் நீங்குவதும்
எடுத்துரைக்கும் செய்தி அறியாதவரா நாம்
அறிவுறுத்தும் பாடம் புரியாதவரா நாம்

காந்தியாக ஏசுவாக வாழ்ந்ததற்காக
என்றும் போற்றப்படுவதும் நம் கையில்
நரகாசுரனாக மகிஷாசுரனாக வீழ்ந்ததற்காக
என்றும் விழாவாகிப் போவதும் நம் கையில்

பிறர் போற்றும் வாழ்வாக இல்லாவிடினும்
பலர் தூற்றும் மறைவாக இல்லாதிருக்கட்டும்
திருந்தி நாம் வாழ்ந்திடப் பெற்றிடும் அறிவுரையிது
தீபாவளிப் பண்டிகை தரும் நல்லதோர் பாடமிது



குறிப்பு:
தன்னிலை விளக்கம் - தீபாவளி சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் அடைந்த வீடுபேற்றை (மறைவு) நினைவு கூரும் நாள் என்ற வரலாற்று உண்மையை அறிந்திராத காலத்தில் எழுதிய கவிதை 


நன்றி வல்லமை - சிறப்பிதழ்
அக்டோபர்  31, 2013


#கவிதை, #வல்லமை, #Themozhi 


Tuesday, October 29, 2013

அனிச்சமலர்கள்

 

அனிச்சமலர்கள்
ஆசிரியர் : தேமொழி
வகை: சிறுகதைத் தொகுப்பு
பதிப்பு ஆண்டு : அக்டோபர் 2013
பதிப்பு :    முதற் பதிப்பு
பதிப்பகம் :கௌதம் பதிப்பகம்
பக்கங்கள் :192
விலை :80.00
ISBN :    978-93-81134-49-8

மின்னூலாக இணையத்தில் . . . 



                 உள்ளடக்கம் . . . 

     1. சிலை அழுதது
     2. பழங்கணக்கு
     3. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?
     4. யாருக்காக அழுதாள்?
     5. நீ என்றுமே என் மகன்தான்
     6. சான்றோனாக்குதல் தந்தையின் கடன்
     7. அம்மனோ சாமியோ !!!
     8. காசியில் பிடிச்சத விடணும்!
     9. எழுதிச் செல்லும் விதியின் கைகள்
     10. தீதும் நன்றும் பிறர் தர வாரா
     11. சற்றே இளைப்பாற
     12. தெய்வமே கலங்கி நின்ற நேரம்
     13. உண்மைக்காதல்
     14. மை லிட்டில் ரெட் வேகன்
     15. ஜினா என்றொரு க்ருயெல்லா
     16. வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள்
     17. அனிச்ச மலர்கள்


என்ற சிறுகதைகள் தொகுப்பு, என் முதல் நூல், கௌதம் பதிப்பகம் வெளியீடாக வெளிவருகிறது. பல்துறை நாயகியும், வீணை இசைக்கலைஞரும்,  எழுத்தாளருமான திருமதி கீதா பென்னெட் அவர்கள் அன்புடன் அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.  








#நூல், #அனிச்சமலர்கள், #சிறுகதைகள், #Themozhi,



Friday, October 25, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 17

 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 17



ஓவியம்: தேமொழி
கவிதை: கவிஞர் தனுசு

 
காத்திருப்பில் கலங்காதே …

கொல்லிமலை காட்டுக்குள்ள
மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
மூணு நாளா தவிச்சிருக்கு -என்
முகம் காண துடிச்சிருக்கு.

பச்சரிசி சோறோடு
கருவாட்டுக் குழம்பாக்கி
தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
ஒத்தையிலே காத்திருக்கு.

கொஞ்சிப்பேச வாரேனடி
கொஞ்சம் பொறு மயிலே!
கூட்டிக் கொண்டு வாரேன்
குளிர்காயும் நிலவை!
  

 
  
நன்றி: வல்லமை - அக்டோபர் 25, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 



Sunday, October 20, 2013

"காமன்சென்ஸ்" இல்லாத "காமன்வெல்த்" நாடுகள்

"காமன்சென்ஸ்" இல்லாத "காமன்வெல்த்" நாடுகள்


சர்வதேச மனித உரிமை அமைப்பினர் அறிக்கையின்படி,  40 ஆயிரம் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என இந்தியத் தமிழர்கள் கண்டனம் எழுப்புவதும், அதற்கு நடுவண் அரசு மதிப்பு கொடுக்காமல் மழுப்பிப் பேசும் செய்தியும் தமிழுலகத்திற்குப் புதிதல்ல.  தமிழக முதல்வர் பிரதமருக்கு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்திக் கடிதம் எழுதுகிறார் [1].  இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைத் தவிர்க்கக்கோரி தமிழக அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு பொதுநல நோக்கு அமைப்புகளும் வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.  தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு அவர்களும் இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி  அக்டோபர் 1, 2013 முதல் 15 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். மக்கள் உணர்வை மதித்து நல்லதொரு முடிவெடுப்பேன் என்ற இந்தியப் பிரதமரின் உறுதிமொழியின் பேரில் அவரது உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது [2]. 

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று காமன்வெல்த் நாடுகளில் ஒன்றான கனடாவின்  பிரதமர்  ஸ்டீஃபன் ஹார்பர் புறக்கணித்துவிட்டார் [3].  இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் [4].  உலக அளவில் இலங்கையில் காமன்வெல்த்  மாநாடு நடத்த எதிர்ப்புகள் கிளம்பினாலும் உறுதியான முடிவு எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த் நாடுகள், Commonwealth National) என்ற அமைப்பு தேவையா? அதனால் யாருக்கு என்ன பயன் என்பதை ஆராய்வது பலனளிக்கும்.  காமன்வெல்த் நாடுகள் என்பவை சென்ற நூற்றாண்டு வரை இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த 54 நாடுகள்.  தற்பொழுது இவையாவும் சுதந்திர நாடுகள்.  முன்னாள் இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த  இந்த நாடுகள் யாவும் இணைந்து, இங்கிலாந்து நாட்டுடனும்;  அதன் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த தங்கள் நாடுகளுக்கு  இடையேயான நல்லுறவுக்காகவும்  தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு காமன்வெல்த் நாடுகள் என்ற அமைப்பு.  ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளின் பொருளாதாரம், கலாசாரம் போன்றவற்றை மேம்படுத்தத் தோற்றுவிக்கப்பட்டதே  இந்த அமைப்பு என்று இந்த அமைப்பு தோன்றியதற்குக்  காரணம், நோக்கம் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.  அத்துடன் அமைப்பின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைவதே அமைப்பின்  கொள்கைகளும், செயல்பாடுகளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் உறுப்பினர் பதவி என்பது கட்டாயம் அல்ல.  இங்கிலாந்தின் வரலாற்றுடன் தொடர்புடைய எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக விண்ணப்பித்து இந்த காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் [5] [6].


உறுப்பினர் பதவி கட்டாயம் இல்லை என்பது மிக மிக முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.   இதையும் தெரிந்துகொண்டே உறுப்பினராக இருக்க விழைவது இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் அடிமை மனப்பான்மையையே காட்டுகிறது.  ஒருகாலத்தில் இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த அமெரிக்கா இந்த அமைப்பில் பங்கெடுக்க விண்ணப்பிக்கவும் இல்லை, உறுப்பினராகவும் இல்லை. இது அமெரிக்காவின் சுயமதிப்பின் நிலையை, சுதந்திர மனப்பான்மையைப் பறைசாற்றுகிறது.  வரலாற்று உண்மையாக இருந்தாலும் தங்கள் நாடு அடுத்த நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த நாடு என்ற அவமானகரமான காலநிலையை அமெரிக்கா மறக்கவிரும்பும் செயலாகவே இதைக் கருதலாம்.  அமெரிக்கா எடுத்த இந்த நிலைப்பாட்டின் காரணமாக அமெரிக்காவின் சுயகௌரவத்தைப் பாராட்டவே தோன்றுகிறது.

அமெரிக்காவைப் போன்றே எகிப்து, ஜோர்டான், ஈராக், பாலஸ்தீனம், சூடான், சோமாலியா, குவைத், பஹ்ரெய்ன், ஓமன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் யாவும்  தங்களுக்கு இங்கிலாந்துடன் வரலாற்றுத் தொடர்பு இருந்தும் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் உறுப்பினர்களாக இல்லை [5]. 

அக்டோபர் 3, 2013 அன்று காம்பியா காமன்வெல்த் நாடுகளின் அமைப்பிலிருந்து வெளியேறி உள்ளது [7]. அதன் தலைவர் யஹ்யா ஜம்மே  (Yahya Jammeh) இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடு என்பதனைக் குறிக்கும் அமைப்புடன் எந்த உறவும் தங்கள் நாட்டிற்குத் தேவையில்லை என அறிவித்துள்ளார் [8]. இரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையையும், 4,000 சதுர மைல் பரப்பளவுள்ள மிகச் சிறிய நாடு  இந்தக் காம்பியா.

இதனால் இந்த அமைப்பில் பெருமையுடன் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு, "காமன்சென்ஸ் இல்லாத காமன்வெல்த் நாடுகளே, தெளிவு பெறுங்கள், நாமார்க்கும் குடியல்லோம்," என்று உணர்த்த வேண்டும் என்பது தெரிகிறது. இந்நாடுகளுக்கு அடிமை நாடாக இருந்தோம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை  என்பது  விளங்கவில்லை.  இதுவரை காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு உருப்படியாக என்ன சாதித்தது என்பதும் கேள்விக்குரியதே.

உலக அமைதிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட உலக ஐக்கிய நாடுகளின் சபையே இலங்கையின் தமிழர்களுக்குச் சரியான உதவி செய்யாமல் இருக்கும் நிலையில்,  காமன்வெல்த் நாடுகள் அமைப்பு பெரிதாக என்ன உதவி செய்துவிடப்போகிறது? காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் 'ஹாரேர் பொதுநலப் பிரகடனம்' (Harare Commonwealth Declaration) அறிவுறுத்தும் கொள்கைக்கு [9] புறம்பாக, மக்களாட்சி வழிமுறைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நைஜீரியாவும், பாகிஸ்தானும், சிம்பாபுவே நாடுகளும் முறையே 1995, 1999, 2002 ஆண்டுகள் தற்காலிகமாக உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டன.  அதிலும் பாகிஸ்தான் இருமுறை நீக்கப்பட்டுள்ளது.  தற்பொழுது ஃபிஜி நாடு நீக்கப்பட்ட நிலையில் உள்ளது [5].  இலங்கையின் மனித உரிமை மீறல் செயல்களுக்காக அந்நாட்டின் மீது இது போன்ற நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தி கனடாவும் [10], இங்கிலாந்தும் [11] இந்த ஆண்டின் துவக்கத்தில் கண்டனக் குரல்கள் எழுப்பின.  ஆனால் இந்தியாவில் இருந்து எந்த எதிர்ப்பும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. 

Adding insult to injury என்று ஆங்கிலத்தில் கூறுவது போல பட்ட காயத்தினைப் பெரிதுபடுத்தி நோகச் செய்யும் செயலாக இருக்கிறது மனித உரிமைகளை மீறிய, காமன்வெல்த் மாநாட்டின் கொள்கைக்கு எதிராகச் செயல்படும்  இலங்கையிலேயே காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் செயல். நடவடிக்கை எடுக்கப்பட்டு உறுப்பினர் பதவியை நீக்கப்பட வேண்டிய நாட்டில் நடக்கப்போகும் இம்மாடு இலங்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இல்லவே இல்லை என்பதைச்  சிறு குழந்தை கூடச் சொல்லிவிடும்.  காமன்வெல்த் நாடுகளின் இந்த மாநாடு [12] இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுவது வழக்கம்.  வரும் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் 17 தேதி வரை நடக்கப்போகும் மாநாட்டின் விளைவுகள்  இலங்கை அதிபதிக்கு ஒருவகையில் பாராட்டாகவே அமையும்.  சென்ற முறை 2011 ஆம் ஆண்டு நடந்த இம்மாநாடு ஆஸ்திரேலியாவில் கூட்டப்பட்டதால்  அந்த நாட்டின் பிரதமர் 'ஜூலியா கில்லர்ட்' (Julia Gillard) 'காமன்வெல்த் சேர் பெர்சன் இன் ஆஃபிஸ்' (Commonwealth Chairperson-in-Office) என்ற தலைவர்  பதவியைப் பெற்றார்.  ஆஸ்திரேலியப் பிரதமரின் இப்பதவிக்காலம் வரும் மாநாட்டுடன் முடிவடைந்து அடுத்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே இப்பதவியைப் பெறுவார்; தொடர்ந்து அடுத்த மாநாடு நடக்கும் 2015 ஆம் ஆண்டு வரை இப்பதவியையும் வகிப்பார் [5].  இந்த பதவியளிப்பு நடவடிக்கை இலங்கையின் மனிதநேய மீறல்களை ஆதரிப்பதாகவே அமைகிறது. நடக்கப்போகும்  இலங்கை மாநாட்டினால் அநியாயமாக உயிர்நீத்த அல்லது உயிர் நீக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைக்கும் நீதி என்ன என்பது விளங்கவில்லை.

காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் உறுப்பினராக இருப்பது என்பது ஒரு தனிப்பட்ட நாட்டின் விருப்பத்தின் பேரில் அமைந்திருக்கும் பொழுது (அதாவது உறுப்பினராக இருக்க எந்த ஒரு கட்டாயமும் இல்லாத பொழுது); காமன்வெல்த் நாடுகள்  அமைப்பு ஏற்பட்ட நோக்கத்திற்கும் செயல்பாடுகளுக்கும்  முரணாக இலங்கையில் நிலைமை மாறும்பொழுது; முதன் முதலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்து வெளிவந்திருக்க வேண்டிய இந்திய அரசு ஏன் இன்னமும் உறுப்பினராக ஒட்டிக் கொண்டிருக்கிறது?  பங்களாதேஷை 1972 ஆம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு  ஒரு தனி நாடாக அங்கீகரித்த பொழுது, தனது கண்டனத்தைக் காட்ட பாகிஸ்தான் கூட உறுப்பினர் பதவியை ஒருமுறை  நீக்கிக் கொண்டு தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளது [5].  காமன்வெல்த் நாடுகள்  அமைப்பில் அதிக மக்கள்தொகை உள்ள நாடான இந்தியா இது போன்று அமைப்பை விட்டு வெளியேறும் முடிவை எடுத்திருந்தால் அது இலங்கை அரசின் மனிதநேயத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு நல்லதொரு கண்டனமாக அமைந்திருக்கும்.

குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டிக்காத பொழுது அவர்கள் குற்றத்தை ஊக்குவிப்பவர்களாக ஆகிறார்கள், அத்துடன் அவர்களும் குற்றத்திற்கு உடந்தையாகவும்  ஆகிறார்கள் என்பது பொது மொழி.  இந்திய அரசுக்குத்  தான் இன்னமும் இங்கிலாந்து நாட்டின் அடிமை நாடு என்ற எண்ணம் மாறவில்லை என்பதையே காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இந்தியாவின் இச்செயல் தெளிவு படுத்துகிறது.  இந்தியா ஒரு  சுதந்திர நாடாக இருக்கும் பொழுது, காமன்வெல்த் நாடுகள் அமைப்பு சரிவரத் தன் கடமையை ஆற்றாத பொழுது அந்த அமைப்பிலிருந்து வெளியேற இந்தியாவிற்கு என்ன தயக்கம்? ஏன் துணிச்சல் இல்லை?

எதற்கெடுத்தாலும் அமெரிக்கா என்று பெருமை பேசி அதன் வழி நடக்க ஆசைகொள்ளும் இந்தியர்கள் இந்த நிலைமையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை முன்னுதாரணமாகக் கொள்வது நல்லது. காமன்வெல்த் நாடுகளின் அமைப்பின் உறுப்பினர் பதவியை மறுக்கும் இந்தியாவின் நடவடிக்கை மனித உரிமைகளை ஆதரிக்க முன்வரும் செயலாக அமையும், பாராட்டவும் படும்.  இந்தியா ஒரு நல்ல வழிகாட்டியாக அமையுமா?



சான்றாதாரங்கள்:
1. காமன்வெல்த் மாநாடு: பிரதமருக்கு ஜெ., கடிதம், அக்டோபர் 17, 2013, http://www.dinamalar.com/news_detail.asp?id=828940

2. தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்,  அக்டோபர் 15, 2013, http://www.bbc.co.uk/tamil/india/2013/10/131015_thiyaguwid.shtml

3. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பில்லை: கனடா பிரதமர் முடிவு, அக்டோபர் 7, 2013, http://tinyurl.com/kk7orao

4. இலங்கையில், காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது : இங்கிலாந்து எம்.பிக்கள் வலியுறுத்தல்,  அக்டோபர் 18, 2013, http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=65720

5. Commonwealth of Nations - https://en.wikipedia.org/wiki/Commonwealth_of_Nations

6. Commonwealth of Nations membership criteria  - https://en.wikipedia.org/wiki/Commonwealth_of_Nations_membership_criteria

7. Statement by Commonwealth Secretary-General Kamalesh Sharma on The Gambia - http://thecommonwealth.org/media/news/statement-commonwealth-secretary-general-kamalesh-sharma-gambia

8. Q & A: Gambia and the Commonwealth,  David Blair1, 03 Oct 2013, Telegraph, http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/gambia/10352888/Q-and-A-Gambia-and-the-Commonwealth.html

9. Harare Declaration - https://en.wikipedia.org/wiki/Harare_Declaration

10. Mike Blanchfield (14 January 2013). "Harper rebukes Sri Lanka over jurist's dismissal as talk of summit boycott heats up". The Globe and Mail.  - http://www.theglobeandmail.com/news/politics/harper-rebukes-sri-lanka-over-jurists-dismissal-as-talk-of-summit-boycott-heats-up/article7341673/

11. David Miliband (11 March 2013). "Britain must stand up for human rights in Sri Lanka". M.guardian.co.uk. - http://www.theguardian.com/commentisfree/2013/mar/11/britain-human-rights-sri-lanka?view=mobile

12. Commonwealth Heads of Government Meeting 2013 - http://thecommonwealth.org/


Picture Courtesy:
Wikipedia: https://upload.wikimedia.org/wikipedia/commons/5/51/Commonwealth_of_Nations.svg
The Commonwealth - http://thecommonwealth.org/sites/default/files/styles/large/public/images/event/chogm-flags.jpg?itok=gXMAF4HF




நன்றி:
திண்ணை
அக்டோபர் 20, 2013 


#திண்ணை, # வரலாறு, #Themozhi  



Monday, October 14, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16

 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16





கலைமகள் வாழ்த்து
வெள்ளைக் கமலத்திலே -- அவள்
வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான் -- நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்
 -- பாரதி 

 
 
படத்தைப் பற்றிய குறிப்பு:
1987 இல் வரைந்த கோட்டோவியம் இது.  மாசு படிந்து, களையிழந்து இருந்த படத்தை ஒளிவருடி, எண்ணிம வடிவில் கணினியின் உள்ளிழுத்து, பிரகாசத்தை அதிகரித்து, குறைகளை வெளிறச் செய்து, பிரதி எடுத்து, வரிகளை மீண்டும் செப்பனிட்ட படம். பெரும்பாலும் மாதிரி பார்த்து வரையும் என் பழக்கத்தைத் தவிர்த்து, மாதிரியின்றி, மனதில் பதித்திருந்த பல படங்களில் கண்ட சரஸ்வதியின்  படத்தை மனக்கண் முன் கொண்டுவந்து வரைந்த ஓவியம் என்பதால் என் மனதிற்கு நிறைவு தந்த ஓவியங்களில் ஒன்று.

 

  
நன்றி: வல்லமை - அக்டோபர் 14, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 

Friday, October 11, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15



கௌதம புத்தர்

[மின் பலகையில் ‘ஸ்கெட்ச் புக் எக்ஸ்ப்ரெஸ்’ (SketchBook Express apps for Tablets) என்ற ஓவியம் வரையும் மென்பொருள் கொண்டு என் முதல் முயற்சியாக உருவாக்கிய எண்ணிம கௌதம புத்தர் ஓவியம்.]


  
நன்றி: வல்லமை - அக்டோபர் 11, 2013 

#ஓவியம், #வல்லமை,  Themozhi 


 

Monday, October 7, 2013

மீனாள் ஆளும் மதுரையிலே

மீனாள் ஆளும்  மதுரையிலே

[தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகளான கோலாட்டம், கும்மி ஆடல்களுக்காக....
ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு (தூக்குத் தூக்கி - படப்பாடல்) மெட்டின் சாயலில் ]


தானே தன தன்னானனே  - தன
தானே தனனே தன்னானனே
தானே தன தன்னானனே - தன
தானே தனனே தன்னானனே

மீனாள் ஆளும்  மதுரையிலே - சங்கத்
தமிழைத் தந்த மதுரையிலே
நாளும் அவள் ஆட்சியம்மா - அந்த
நான்மாடக் கூடலும் சாட்சியம்மா

வைகைக் கரையின் செல்வியவள் - வளர்
பொதிகை மலையின் செல்வமவள்
வாழும் உயிர்க் (க)அன்னையவள் - வளம்
தந்தே காத்திடும் தேவியவள்

மீனாள் ஆளும்  மதுரையிலே - சங்கத்
தமிழைத் தந்த மதுரையிலே
நாளும் அவள் ஆட்சியம்மா - அந்த
நான்மாடக் கூடலும் சாட்சியம்மா

பாரில் தோன்றும் துன்பமெல்லாம் - அவள்
பார்வை பட்டால் நீங்குமம்மா
மாதா சக்தி காளி என்றே -  அவள்
பாதமே பணிந்துநீ  போற்று அம்மா

மீனாள் ஆளும்  மதுரையிலே - சங்கத்
தமிழைத் தந்த மதுரையிலே
நாளும் அவள் ஆட்சியம்மா - அந்த
நான்மாடக் கூடலும் சாட்சியம்மா

தானே தன தன்னானனே  - தன
தானே தனனே தன்னானனே
தானே தன தன்னானனே - தன
தானே தனனே தன்னானனே


வல்லமைக் குழுமத்தில்,  சக்தி ரதம் என்ற  நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் எழுதிய பாடல் 


அக்டோபர் 7, 2013 


#கவிதை,  #Themozhi 



வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்

வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்


சரளா தாக்ரல் (Sarla Thakral) என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார்.  இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு 'பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்' (group ‘A’ aviation pilot license)  பெற்றார்.  பிறகு தொழில் முறை விமானியாக 'பிரிவு ‘பி’ விமானி உரிமம்' (group B commercial pilot's license) பெற விரும்பிய இவரது கனவும், பயிற்சியும்  சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகத்  தடைப்பட்டது.  விடாது மீண்டும் சுதந்திர இந்தியாவில் தனது பயிற்சியைத் தொடர்ந்த இவர் தொழில் முறை விமானி உரிமம் பெற்று, பிறகு ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக 1948 இல் பணியேற்று ஆறுமாதங்கள் அப்பணியில் நீடித்தார். 

உலக வரலாற்றில் முதன் முதலில் ரைட் சகோதரர்களால் (Wright Brothers) நார்த் கரோலினா மாநிலத்தின் கிட்டி ஹாக் என்னுமிடத்தில் டிசம்பர் 17, 1903 (at Kitty Hawk, North Carolina on December 17, 1903) அன்று வெற்றிகரமாக விமானம் பறக்கவிடப்பட்டது.  உலக அளவில் பல நாடுகளில் பல நிறுவனங்கள் விமானச் சேவையில் 1909 ஆம் ஆண்டு முதல் இறங்கின.  ‘வான்பயணத்தின் பொற்காலம்’ (Aviation's Golden Age 1918–1939) எனக் கருதப்பட்ட காலம் என்பது முதலாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, இரண்டாம் உலகப்போரின் துவக்கம் உரையில் உள்ள இடைப்பட்ட காலமாகும். இக்காலம் விமானங்களின் தொழில் நுட்பமும் எண்ணிக்கையும் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்த காலமாகும்.

இக்காலத்தில் விமானச் சேவை வணிக அளவில் வளர்ந்தபொழுது பல விமானிகள் தோன்றினர்.  அவர்களில் மகளிர் பலரும் அடங்குவர்.  அமெரிக்காவின் ‘ஹரியெட் குயிம்பி’ (Harriet  Quimby) என்ற பெண்மணி 1911 ஆம் ஆண்டு விமானி உரிமம் பெற்று விமானத்தில் பறந்த முதல் பெண்மணி ஆவார்.  இவர் விமானி உரிமம் பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பெண் விமானியாக சரளா தாக்ரல் (அக்காலத்தில் சரளா ஷர்மாவாக இருந்தவர்) விமானி உரிமம் பெற்றார்.  தற்காலத்தின் "ஏர் இந்தியா" விமான நிறுவனம் (அக்கால இந்தியாவில் தனியார் நிறுவனமாக  ஜே.ஆர்.டி டாட்டாவும் அவர் குடும்பத்தினரும் துவக்கிய வர்த்தக விமானச்சேவை) துவக்கப்பட்டு நான்காண்டுகளே ஆகியிருந்த  காலகட்டத்தில், பெண்கள் மட்டுமல்ல பெரும்பான்மையான ஆண்களும் கார் ஓட்டுவது கூட அரிதாக இருந்த காலகட்டத்தில், சரளா விமானியானது ஒரு செயற்கரிய வியப்பூட்டும் சாதனை.

வாழ்க்கைக் குறிப்பு:
சுதந்திரத்திற்கு முன்பிருந்த ஒன்றுபட்ட இந்தியாவின், தற்கால பாகிஸ்தானின் லாகூரில் (Lahore,  Pakistan) பி.டி. ஷர்மா ( P. D. Sharma) என்பவரைத் தனது 16 வயதில் மணந்த சரளா பொது ஆண்டு 1914 இல் பிறந்தவர்.  இவரது கணவர் குடும்பத்தினருக்குச் சொந்தமாக 'ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி'  (Himalaya Flying Company) என்ற விமான நிறுவனம் இருந்தது.   பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும்  (Badrinath and Haridwar) இடையே அந்நிறுவனம் தன் பயணச் சேவையை நடத்தி வந்தது.  சரளாவின் கணவர் குடும்பத்தில் அந்நாட்களில் 9 பேர் விமானியாக இருந்தார்கள்.  முதன் முதலில் ஏர்மெயில் விமானியாக (airmail pilot's license) இந்தியாவில் உரிமம் வாங்கியவரும் இவரது கணவர் பி.டி. ஷர்மாதான். அவர் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையில்  பறக்கும் விமானத்தின் விமானியாகப் பணிபுரிந்து வந்தார்.

தனது மனைவி சரளாவையும் விமானியாக்க அவரது கணவர் ஆர்வமுடன் இருந்தார்.  அவரையும் விடக்  கணவர் ஷர்மாவின் தந்தை மிகவும் தூண்டுகோலாக இருந்து மருமகளை ஊக்குவித்து வந்தார்.  தனது மகனிடம் அவர் சரளாவிற்கு விமானப் பயிற்சியைத் துவக்க வலியுறுத்திய வண்ணம் இருந்தார்.  ஆனால் ஷர்மாவிற்குப் போதிய நேரம் கிட்டாததைக் கண்ட அவர் தானே தனது மருமகளை "லாகூர் ஃப்ளையிங் கிளப்" (Lahore Flying Club) இல் சேர்த்து 'டிம்மி தஸ்த்தூர்' (Timmy Dastur) என்ற பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார்.

இந்தியாவின் முதல் பெண் விமானி:
பயிற்சியாளர் தஸ்த்தூர் சரளாவிற்கு  சரியாக  8 மணி 10 நிமிடங்கள் பயிற்சி அளித்த பிறகு தனியாக விமானத்தை இயக்க அனுமதி கொடுத்தார்.  தனது கணவர் பணியிலிருந்து வரும்வரை காத்திருந்து அவரது அனுமதியுடன் 1936 ஆண்டு 'ஜிப்சி மாத்' (Gypsy Moth) என்ற சிறுவகை விமானத்தில் சரளா தனியாகப் பறந்தார்.  அப்பொழுது நான்கு வயது மகள்  ஒருத்திக்கு இளந்தாயாக இருந்த சரளாவிற்கு வயது 21 தான்.  தான்  வழக்கமாக அணியும் புடவையிலேயே விமானியாகப் பறந்தார்.

இவர் விமானம் ஓட்ட கற்ற பிறகே கார் மற்றும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப்படாத அக்காலத்தில், தான் விமானி பயிற்சி பெறத் தனது குடும்பம், கணவர், உடன்பயின்ற மாணவர்கள், ஆசிரியர் என அனைவரும் மிகவும் ஆதரவு கொடுத்ததாகக் கூறும் இவர், இவரது நோக்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஒரே ஆள் ஃப்ளையிங் கிளப்பில் வேலை செய்த ஓர் ஊழியர் மட்டுமே என்றும் குறிப்பிடுகிறார். முதல் பெண் விமானியாகப் பறந்ததற்குப்  பிறகு தனியாக லாகூர் ஃப்ளையிங் கிளப் விமானம் ஒன்றில் ஆயிரம் மணி நேரம் பறந்த பிறகு விமானியாக உரிமம் பெற்றார்.  

இவர் கணவர் பி.டி. ஷர்மா ஒரு விமான விபத்தில் 1939 ஆம் ஆண்டு இறந்த பிறகு தனது 24 வயதில் தனது ஒன்று மற்றும் ஆறு வயது மகள்களுடன்  சரளா தனித்து விடப்பட்டார்.  தொடர்ந்து தொழில்முறை விமானியாகத் தகுதி பெற விரும்பி இவர் ஜோத்பூர் (Jodhpur) சென்றார்.  அந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போர் துவங்கியதால் உள்நாட்டு விமானப் பயிற்சிகள் தடைப்பட்டது. எனவே, தனது தொழில்நிலை விமானியாகும் திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு மீண்டும் லாகூர் சென்று 'மேயோ கலைக் கல்லூரி'யில் (Mayo School of Art) ஓவியம் கற்று வங்காள முறை ஓவியத்தில் (trained in the Bengal school of painting) நுண்கலையில் பட்டயப் படிப்பை (diploma in fine arts) முடித்தார். 

சுதந்திர இந்தியாவில் சரளாவின் வாழ்க்கை:
நாடு சுதந்திரம் அடையும் நாள் அருகாமையில் வரும் பொழுது பாகிஸ்தானில் கலவரங்கள் அதிகரித்தது.  பெண்கள் அவர்களது கணவர் அல்லது வீட்டில் பிற ஆண்கள் இறக்க நேர்ந்தால் எதிரிகள் கையில் சீரழியாமல் இருக்க, நஞ்சுண்டு உயிரை மாய்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு நச்சுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன.  கைம்பெண்ணாக இரு சிறுமிகளுடன் இருந்த சரளாவை டெல்லிக்குச்  சென்றுவிடும்படி  ஆலோசனை வழங்கப்பட்டது.  அவரும் நிலைமையை உத்தேசித்து தனது மகள்களுடன் புகைவண்டியில் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். 

டெல்லியில் ஓவியங்களை வரைந்தும், ஆடை ஆபரணங்களை வடிவமைத்தும் விற்பனை செய்து ஒரு தொழிலதிபராக சரளா வாழ்க்கையைத் துவக்கினார்.  மகரிஷி சாமி தயானந்த சரஸ்வதி துவக்கிய ஆரிய சமாஜத்தின் வழிநடந்த இவர், அந்த சமாஜத்தின் இந்துமதச் சீர்திருத்தக் கொள்கைகள் மற்றும் தனது பெற்றோர் தந்த ஆதரவினால் மீண்டும் பி.பி. தாக்ரல் (P. P. Thakral) என்பவரை 1948 ஆம் ஆண்டு மறுமணம் புரிந்து கொண்டார்.  தனது தொழில்முறை விமானி பயிற்சியினைத் தொடர்ந்த சரளா  1948  ஆம் ஆண்டு தொழில்முறை விமானி உரிமமும் பெற்றார்.  அப்பொழுது செய்தித்தாளில் வெளிவந்த, ராஜஸ்தான் அரச குடும்பத்தின் அரச குடும்ப விமானத்திற்குப் பெண் விமானி தேவை என்ற விளம்பரத்திற்கு விண்ணப்பித்தார். ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக (job in Rajasthan as a personal pilot to the royalty of Alwar) ஆறு மாதங்கள் அப்பணியை மேற்கொண்டார்.


மார்ச் 15, 2009 இல் உயிர்நீத்த சரளா தன்னுடைய வாழ்நாட்களின் பிற்பகுதியில்  ஆடை ஆபரணங்களை வடிவமைக்கும் பணியில் முழு ஈடுபாடு காட்டினார்.  அச்சுப்பட்டை ஓவியங்களால் இவர் வடிவமைத்த சேலைகளும், கைவினை ஆபரணங்களும் பலராலும் விரும்பப்பட்டன.  அவரது வாடிக்கையாளர்களில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலக்ஷ்மி பண்டிட் (Vijaylaxmi Pandit) குறிப்பிடத் தகுந்த ஒருவர்




ஆதாரங்கள்:
First Licensed Women Pilots, 1936 - India - Sarla Thakral
http://centennialofwomenpilots.com/node/25

Women's Day: Top 100 coolest women of all time, Sarla Thakral: The first Indian woman to fly a plane, back in 1936.
http://ibnlive.in.com/photogallery/inside_photo_new_des.php?slideshow_id=3515&num=72

Flying colours & ground reality, Smriti Kak Ramachandran, February 5, 2006, The Tribune
http://www.tribuneindia.com/2006/20060205/society.htm

Down memory lane: First woman pilot recounts life story - August 13, 2006 - NDTV
http://www.ndtv.com/video/player/news/down-memory-lane-first-woman-pilot-recounts-life-story/6231

Remember Sarla Thakral's maiden flight of fancy, Nov 25, 2009, DNA INDIA
http://www.dnaindia.com/speakup/1316073/report-remember-sarla-thakrals-maiden-flight-of-fancy

Sarla Sharma: Being a Woman and a Pilot in Lahore in 1936, Anurag Sharma
http://www.smartindian.com/Sarla-Sharma-Thakral-Pilot.html

Sarla Thakral - https://en.wikipedia.org/wiki/Sarla_Thakral

India’s First women in air – India’s first lady pilot – Sarla Thakral
http://vivchavan.wordpress.com/2007/10/17/indias-first-women-in-air-indias-first-lady-pilot-sarla-thakral/

Rahul Ittal's statement on India’s First women in air – India’s first lady pilot – Sarla Thakral
http://vivchavan.wordpress.com/2007/10/17/indias-first-women-in-air-indias-first-lady-pilot-sarla-thakral/#comment-371

இந்தியாவின் முதல் பெண் விமானி, டிசம்பர் 15, 2009, விடுதலை
http://viduthalai.periyar.org.in/20091215/news21.html


காணொளி:
Down memory lane: First woman pilot recounts life story - August 13, 2006 - NDTV
http://www.ndtv.com/video/player/news/down-memory-lane-first-woman-pilot-recounts-life-story/6231


படங்கள் உதவி:
Sarla Thakral, First Woman Pilot of India - Late 1930's   - http://www.oldindianphotos.in/2012/07/sarla-thakral-first-woman-pilot-of.html   &
http://www.tribuneindia.com/2006/20060205/society.htm


நன்றி:
திண்ணை
அக்டோபர் 7, 2013 

#திண்ணை, #பெண்ணியம்,  #Themozhi  




Saturday, October 5, 2013

அன்னை சக்தி

அன்னை சக்தி 


பல்லவி
ஒவ்வொரு இரவும் உந்தன் புகழ்பாடி   
இவ்வுலகம் வாழுமே    -- அன்னை சக்தி 
ஒவ்வொரு இரவும் உந்தன் புகழ் பாடியே
 
அனுபல்லவி  
மனமது உருகிநான் 
தினமுனைப் போற்றுவேன்
கரமது குவிந்திடவே 
சிரமது பணிந்திடவே  -- தாயே (ஒவ்வொரு)

சரணம்
செல்வமுடன்  கல்வி வீரமும் வழங்கியே  
செழித்திந்த உலகினை மகிழ்ந்திடச் செய்வாய் 
சேவை புரிந்தே பல்லுயிர் போற்றிடும்  
சேயிழையார்  தினமுனை வாழ்த்திட -- தாயே (ஒவ்வொரு)



வல்லமைக் குழுமத்தில்,  சக்தி ரதம் என்ற  நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் எழுதிய பாடல் 


அக்டோபர் 5, 2013 

#கவிதை,  #Themozhi 

கவிதை

Friday, October 4, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14

 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14



மணமகள்

  
நன்றி: வல்லமை - அக்டோபர் 4, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 

Thursday, August 15, 2013

முன்னேறுவாய், உன் பின் வரும் பாரதமே!!!

முன்னேறுவாய், உன் பின் வரும் பாரதமே!!!


விண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு
விண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே

உன் கைகொடு காலைச் சூரியனை இங்கே பிடித்திழுப்போமே
நம் கரத்திலதன் ஒளியை ஏந்தி அதைச் சுற்றியும் வீசிடுவோமே
ஓ..ஓ..ஓ..
உன் கைகொடு காலைச் சூரியனை இங்கே பிடித்திழுப்போமே
நம் கரத்திலதன் ஒளியை ஏந்தி அதைச் சுற்றியும் வீசிடுவோமே
தொடுவானமே நமதெல்லை, அதை நோக்கி பெருமித நடை போடு
தொடுவானமே நமதெல்லை, அதை நோக்கி பெருமித நடை போடு
விண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு
விண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
நம் பாரதமே
பாரதம்


Tum chalo to hindustan chale… India’s New Anthem என்று கூறும் அளவிற்கு மக்களைக் கவர்ந்த பாடல். 
இக்கால இளைய தலைமுறைக்குக் கீழ்க்காணும் பாடல் பிடிக்கக் கூடும்.
அனைத்து மொழியிலும் அதே மெட்டில் இப்பாடலைப்  பாடவைக்கலாம். 
குல்சார்  பாடலின் ஆங்கில வடிவில் இருந்தது  எனது மொழி பெயர்ப்பு....

காணொளி :  https://www.youtube.com/watch?v=oj83ROoFs6E


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆



Tum chalo, to hindustan chale -- Lyrics  Gulzar 

Tum chalo, to hindustan chale -- English Translation (From the internet)

Hold the sky to stand, and walk with the wind in your hands,
Hold the sky to stand, and walk with the wind in your hands,
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.

Lend your hand to pull out the Sun in the morning,
Fill your hands with sunlight, and throw it around,
Lend your hand to pull out the Sun in the morning,
Fill your hands with sunlight, and throw it around,
Keep you legs on the horizon, and walk with pride,
Keep you legs on the horizon, and walk with pride,
Hold the sky to stand, and walk with the wind in your hands,
Hold the sky to stand, and walk with the wind in your hands,
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Hindustan (India) walks with you.

***

Tum chalo, to hindustan chale -- Lyrics  Gulzar 

Falak pakad ke utho, aur hawa pakad ke chalo
Falak pakad ke utho, aur hawa pakad ke chalo
Tum chalo, to hindustan chale
Tum chalo, to hindustan chale
Tum chalo, to hindustan chale
Tum chalo, to hindustan chale

Lagao haath ke suraj subah nikala karein,
Hatheliyon bhare dhoop aur uchhala karein,
Lagao haath ke suraj subah nikala karein,
Hatheliyon bhare dhoop aur uchhala karein,
Ufaq pe paav rakho, aur chalo akad ke chalo,
Ufaq pe paav rakho, aur chalo akad ke chalo,
Falak pakad ke utho, aur hawa pakad ke chalo,
Falak pakad ke utho, aur hawa pakad ke chalo,
Tum chalo, to hindustan chale
Tum chalo, to hindustan chale
Hndustan chale
Chalo

***

நன்றி: வல்லமை 
ஆகஸ்ட்  15, 2013  


#கவிதை,  #மொழிபெயர்ப்பு, #வல்லமை, #Themozhi 



Monday, July 22, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13



கதகளி நடனம்


  
நன்றி: வல்லமை - ஜூலை 22, 2013   

#ஓவியம், #வல்லமை,  Themozhi 


Friday, July 19, 2013

பிக்கோலிம் போர்

 பிக்கோலிம் போர்


முதலாம், இரண்டாம், மூன்றாம் பானிபட் போர் எனத் தொடர்ந்து நடந்த பானிபட் போர்களையும், போரின் கொடுமை கண்டு மனம் மாறி அசோகரை புத்த மதத்தை ஆதரிக்கச் செய்த கலிங்கப் போர் பற்றியும் இந்திய வரலாற்றுப் பாடத்தில் படிக்காத இந்தியப் பள்ளி மாணவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றிப் படித்ததுண்டா?

படித்திருக்காவிட்டால் கவலை வேண்டாம். உங்கள் தேச பக்தி, பொது அறிவு எதிலும் குறை இருப்பதாக வருந்தவும் தேவை இல்லை.  காரணம், அப்படி  ஒரு போரே நடந்தது இல்லை.  ஆனால் நடந்ததாக ஒரு மோசடி விக்கிப்பீடியாவில் நிகழ்ந்திருக்கிறது.



கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர்  நடந்ததாக ஒரு கட்டுக் கதை.  1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுக்கீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிப்பீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது.   இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுப் போர் நின்றது.  உடன்படிக்கையின் விளைவாகச் சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது.  இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிப்பீடியா வலைத்தளத்தில் இடம் பெற்ற பின்பு, அது மோசடி பதிவு எனக் கண்டு கொள்ளப் பட்டு, 2012ஆம் ஆண்டு  டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை.  தற்பொழுது விக்கிப்பீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict ).

அதிலும் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்டுரை சிறந்த கட்டுரை என்ற பாராட்டுப் பெற்றிருக்கிறது.  அனைத்திற்கும் மேலாக விக்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரை (featured article) வரிசையில் இடம் பெற வேண்டும் என்ற முயற்சி  எடுக்கப்பட்டு, பரிந்துரையையும் செய்யப்பட்டு அது நிறைவேறாமல் போயிருக்கிறது. இது போன்ற மோசடிப்  பதிவுகள் இந்தப் பதிவினை விடவும் அதிகக் காலம் வலம்  வந்திருக்கிறது.   ஜூலியஸ் சீசரைக் கொன்றவன் என்று ஒரு கற்பனை கொலைகாரனின் கதை எட்டு ஆண்டுகளும், சீன நகர் ஒன்றின் நகராட்சித் தலைவர் என்று ஒரு சீன மாணவன் தனது பெயரையே வைத்து எழுதி வைத்த பதிவு ஒன்று ஏழு ஆண்டுகளும் விக்கியில் இடம் பெற்று பின்பு உண்மை அறிந்து நீக்கப் பட்டிருக்கிறது.

மோசடிக் கட்டுரைக்காகக் கொடுக்கப்பட்டிருந்த படங்கள்:
http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24759000005DC-508_306x423.jpg
http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24751000005DC-431_306x423.jpg

இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது; ஒரு விக்கிக் கட்டுரை தகுந்த ஆதாரங்கள் தரத் தவறினால், விக்கியின் மற்ற கட்டுரைகளுக்கு அக்கட்டுரை வழி தொடர்பு கொடுக்கப் படாவிட்டால், இணையத்திலும் தேடும் செய்தி நம்பிக்கைக்குரிய தளங்களில் கொடுக்கப் படாவிட்டால், அதற்கு நாம் முக்கியம் கொடுக்கக் கூடாது.  அதனை ஆதாரமாக உபயோகிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சிந்தனைக்கு:  கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் உண்மையல்ல தீர விசாரிப்பதே மெய் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  கற்பனைத்திறன் வாய்ந்த ஒருவரால் நடந்த வரலாறு என ஒரு கட்டுக் கதை புனைந்து மோசடி செய்ய இயலுமானால், காலம் காலமாக நாம் கேட்டு வளரும் வரலாற்று  மற்றும்  இதிகாசக் கதைகளை எவ்வளவு தூரம் நம்புவது என்பது குழப்பத்தைத் தருகிறது. பொதுவாகவே எந்த ஒரு வரலாற்று உண்மையும் வெற்றி பெற்றவர் கண்ணோட்டத்தில்தான் வழங்கப் படுகிறது என்பதும் நாம் அறிந்ததே.  புரட்சியில் தோல்வி அடைந்தால் தோற்றவரை தீவிரவாதி அடக்கப்பட்டார், சர்வாதிகாரி ஒடுக்கப்பட்டார் என்று நமக்கு அறிவிக்கப் படுவதும், புரட்சியில் வெற்றி பெற்றவரை  நாட்டிற்காக உழைத்த தன்னலமற்ற தியாகி வரிசையில் இடம் பெறச் செய்வதும் நம் வாழ் நாளிலேயே நாம் பார்ப்பதுதான்.

எனவே; “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றி மிகச் சுருக்கமாக …  இவ்வாறு ஒரு போரே நடந்தது இல்லை.  ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்திருக்கிறது.

விக்கிப்பீடியா அதை நீக்கிவிட்டாலும், சிறந்த விக்கி கட்டுரைகளை நூலாக வெளியிடும் பதிப்பகம் ஒன்று, முன்னர் அதனை நூலாக வெளியிட்டு இருந்தது (http://www.alibris.com/search/books/isbn/9785510567311). விக்கி கட்டுரைகளை  இதுபோல விற்பனை செய்வதைக் காப்புரிமை என்ற அடிப்படையில் விக்கி தடுப்பது இல்லை. கல்வி பரவவேண்டும் என்ற அடிப்படையில் அனுமதியும் அளிக்கிறது.  ஆர்வக் கோளாற்றின் காரணமாக, “பிக்கோலிம் போர்” கட்டுரையில் அப்படி என்னதான் இருந்தது எனத் தெரிந்து கொள்ளும் நோக்கில் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆசை எழுந்தது. லென்நெக்ஸ் கார்ப் (LENNEX Corp) பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள 90 பக்கங்கள் உள்ள அந்த நூலில் ஓர் ஆறு பக்கம்  மட்டுமே “பிக்கோலிம் போர்” (Bicholim Conflict) பற்றி கட்டுரையில் விவரிக்கப் படுகிறது.  மற்ற பக்கங்களில் கோவா, பிக்கோலிம், மராட்டியர்கள், போர்ச்சுக்கீசியர்கள்  என்ற மற்ற பல விக்கி கட்டுரைகள் நூலை நிறைக்கிறது.  பிக்கோலிம் போர் என்ற இக்கட்டுரை மட்டும் மொழி பெயர்க்கப்பட்டு “பிக்கோலிம் புளுகு” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.  இனி விக்கிப்பீடியாவில் வெளியிடப்பட்ட கட்டுக்கதை(கட்டுரை) தொடர்கிறது.




முன் குறிப்பு:
*** இது விக்கிப்பீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்***.

பிக்கோலிம் புளுகு:
பிக்கோலிம் போர் என்பது  1640-1641 இல் கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுக்கீசியர்களுக்கும், சிவாஜி பான்ஸ்லே (Shivaji  Bhonsle) ஆட்சிக்குட்பட்ட மராட்டியப் பேரரசிற்கும் இடையே நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆகும். இது நிகழ்ந்தது கோவாவின் வட பகுதியான பிக்கோலிம் என்ற இடத்தில். இப்போராட்டம் 1640 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில் இருந்து 1641 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்கள் வரை நிகழ்ந்தது. பிறகு மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு,  முன்பிருந்த அரசுகளின் எல்லைகளையே இருதரப்பினரும் ஏற்றுக்கொள்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் பிக்கோலிம் போர் முடிவிற்கு வந்தது [1]. எனினும், போர்ச்சுக்கீசியர்களுக்கும் மராத்திய அரசுக்கும் இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை கோவாவிலும் மராட்டியத்தின் அண்டைத் தீவுகளான டையு-டாமனிலும் (Diu, Daman) தொடர்ந்தது[2].  போராட்டம் பெரும்பாலும் கோவாவில் நிகழ்ந்தாலும் சில கால கட்டங்களில் போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிரான கலகம் அருகிருந்த பேர்னம் மற்றும் பார்டெஸ்  (Pernem, Bardez) பகுதிகளிலும் நிகழ்ந்தது [3].

வரலாற்றுப் பின்னணி:
வாஸ்கோட காமா (Vasco da Gama) கோவாவிற்கு வரும் கடல் வழிப் பாதையைக் கண்டறிந்த பிறகு, போர்ச்சுக்கீசிய வர்த்தகர்கள் 1498 இல் இந்தியாவில் கோவாவை தங்களது முதல் வர்த்தக மையமாக அமைத்தார்கள். இதனால் 1542ற்குள், கோவாவின் ‘வெலஸ் கான்கியுஸ்டாஸ்’ (Velhas Conquistas) பகுதி செழிப்படைந்தது [4]. இந்துவாகவோ, இஸ்லாமியர்களாகவோ இருக்கவே விரும்பியவர்களை விட, கிறிஸ்துவர்களாக மதம் மாறிய அப்பகுதி மக்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழக்கப் பட்டன [4]. கோவாவில் 1560 இல் ஒரு விசாரணை அமைப்பு நிறுவப்பட்டு, முதல் சில ஆண்டுகளிலேயே கிறிஸ்துவ மத அமைப்புடன் மாறுபட்ட மனப்போக்கு கொண்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டனர் [5]. இதனால் அருகாமையில் இருந்த இந்துப் பகுதிகளில், குறிப்பாக கோவாவின் வட பகுதியிலும், ‘நோவா கான்கியுஸ்டாஸ்’ (Nova Conquistas) பகுதியிலும் வாழ்ந்த மக்கள், புதியதாக நிறுவப்பட்ட இந்த விசாரணைக் குழுவினால் கலவரம் அடைந்தார்கள் [4].

இக்காலத்தில் கோவாவின் வளர்ச்சி மிகுதியாக இருந்தாலும், வடக்கில் இருந்த மராட்டிய அரசின் வளர்ச்சியும் பரவலும் இதனைவிட அதிகமாக இருந்தது [6]. இதனிடையில், 1603க்கும் 1639க்கும் இடைப்பட்ட காலத்தில், டச்சுக்காரர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போரினால், டச்சு கடற்படை கோவாவின் கடல் வழியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கடல் வழித் தொடர்பைத் துண்டித்தது. இதனால் போர்ச்சுக்கீசியர்களால், தங்கள் போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து எந்த உதவியையும் அடைய முடியாமல் போனது. இதனால் கோவாவில் வாழ்ந்தவர்களின் வாழ்வு வறுமையில் சீரழியத் தொடங்கியது. டச்சு அரசு பிற நாடுகளில் உள்ள போர்ச்சுக்கீசியர்களின் வர்த்தக மையங்களை வென்று, தங்கள் நாட்டுடன் இணைத்துத் தங்கள் பேரரசை விரிவாக்க நினைத்த முயற்சியின் விளைவே டச்சுக்காரர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் கோவாவில் நிகழ்ந்த போருக்குக் காரணம் [4]. இதே காலத்தில் மராட்டியப் பேரரசர்  **சிவாஜி பான்ஸ்லே (Shivaji Bhonsle), பல தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தனது மராட்டியப் பேரரசை விரிவு படுத்திக் கொண்டிருந்தார். இதனால் 1635 ஆம் ஆண்டு வாக்கில், மராட்டியப்பேரரசு விரிவடைந்து போர்ச்சுக்கீசிய கோவாவிற்கும் மராட்டியப் பேரரசிற்கும் ஒரு பொதுவான எல்லை அமைந்தது [7]. மராட்டியப் பேரரசின் வளர்ச்சியும், அதே சமயம் கோவாவில் நிகழ்ந்த பஞ்ச நிலையும், கோவாவின் வட பகுதியில் வாழ்ந்த மக்களை மராட்டியப் பேரரசை ஆதரிக்கச் செய்தது. அப்பகுதியில் வாழ்ந்த பிறரும், குறிப்பாக கோவாவின் எல்லைப் பகுதியில் இருந்த, செல்வாக்கு நிறைந்த கோலாப்பூர் (Kolhapur) பகுதியில் உள்ள ஊர்களின் மக்களும் மராட்டியப் பேரரசின் வருகையை மிக விரும்பி ஆதரித்தார்கள் [7].

டச்சுக்காரர்கள் ஏற்படுத்திய கடல்வழித் தடை நீங்கிய அதே காலத்தில், 1639ஆம் ஆண்டில் மராட்டியப் பேரரசு அண்மையில் உள்ள மைசூர் அரசுடன் ஓர் உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டது. அந்த உடன்படிக்கையின்படி, மராட்டிய அரசும் மைசூர் அரசும், இரு அரசுகளுக்கும் பொதுவாக உள்ள நாடுகளின் எல்லையை மதிப்பதென்றும், ஒருவர் நாட்டின் எல்லைக்குள் மற்றவர் ஊடுருவுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற முடிவுக்குச் சம்மதம் தெரிவித்துக் கொண்டன [8]. அத்துடன் மராட்டியப் பேரரசு தக்காணத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பாதுகாப்பாக இருக்க முடிவு செய்தது. மராட்டியப் பேரரசின் ஒரே ஒரு அமைதியும் பாதுகாப்பும் அற்ற பகுதியாக அந்நாட்டின் தெற்கு எல்லை, அதாவது போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருந்த கோவாவின் பகுதி அமைந்திருந்தது. கோவாவின் வடபகுதியும், கிழக்குப் பகுதியும் மராட்டியப் பேரரசை எல்லையாகக் கொண்டிருந்தது [8].

மோதலின் பாதையில்:

மராட்டியர்கள் 1640 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவாவின் போர்ச்சுக்கீசியத் தலைமை ஆளுநருடன் (Governor-General) பேச்சு வார்த்தை நடத்தத் திட்டமிட்டனர் [8] [9]. சமயத் தலைவர்கள் தனக்குக் கொடுத்த நெருக்கடியின் காரணமாக, தலைமை ஆளுநர் ‘மத்தியாஸ் டி ஆல்பகுர்கே’ (Matias de Albuquerque) மராட்டியர்களுடன் முரண்படும் பேச்சுவார்த்தைக்குத் தயங்கினார். மதத் தலைவர்களின் ஆதிக்கம் அக்கால கோவாவின் போர்ச்சுக்கீசிய அரசாங்கத்தின் மீது அதிகம் இருந்தது. அவர்களது விருப்பத்தை மீறி, இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மராட்டிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது அவர்கள் மதத்தின் குறிக்கோளுக்கு எதிரானதாகக் கருதப் பட்டது [4] [10].

இந்தத் தயக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொண்ட மராட்டிய அரசு, அமைதி நிலவிய மைசூர் எல்லையில் இருந்த தனது படைகளை கோவாவின் எல்லைக்குத் திருப்பியது. மராட்டிய அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாகத் தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, மராட்டியப் பிரதிநிதியுடன் பேச்சு வார்த்தைக்கு இசைந்தார். ஆனாலும் பேச்சு வார்த்தை எந்த ஒரு தீர்வும் இன்றி முடிவுற்றது. மதச்சார்பின்மை கொள்கையைக் கொண்ட மராட்டிய அரசு, மதத்திற்கெதிரான குற்றங்கள் புரிந்ததாகக் கோவா அரசு அங்கு வாழும் இந்துக்களின் மேல் எடுக்கும் நடவடிக்கைகளையும், கொடுக்கப்படும் தண்டனைகளையும் சுட்டிக் காட்டிக் கண்டனம் தெரிவித்தது [4] [9]. எந்தத் தீர்மானத்திற்கும் வர இயலாது போன இந்தப் பேச்சு வார்த்தைதான் பிறகு ஏற்பட்ட மோதல்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது [9].

1640 ஆம் ஆண்டு, கோவாவின் கோடைக் காலம் தொடங்கிய நிலையில் (பிப்ரவரி – மார்ச் 1640), தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, போர்ச்சுக்கீசியப் படைகளை பேர்னம் ( (Pernem) மற்றும் பிக்கோலிம் பகுதிகளைச் சார்ந்த கோவாவின் கிராமங்களில் குவித்தார். சந்தேகத்திற்குரிய இந்த நடவடிக்கைகளினால், மராட்டிய அரசும் தனது சிறிய படை ஒன்றை பிக்கோலிம்மை ஒட்டியிருந்த மராட்டிய எல்லைக்கு நகர்த்தியது. நில வழி போர்ச்சுக்கீசிய ஊடுருவலை எதிர்பார்த்திடாததால் அதுவரை அப்பகுதி பாதுகாப்பினை மராட்டிய அரசு பலப்படுத்தாமல் விட்டு வைத்திருந்தது [9]. பிக்கோலிம் பகுதியானது, கோவாவில் பிறந்து வளர்ந்து, பின்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ‘நிக்கோலா டி மெல்லோ’ (Nicolau de Mello) என்ற போர்ச்சுக்கீசிய அரசுப் பிரதிநிதியின் மேற்பார்வையில் இருந்தது. நிக்கோலா டி மெல்லோ கோவா மக்களிடையே பிரபலமாகவும் அவர்களது நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருந்தார் [9]. கோவாவின் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்றறிஞர் ‘டேவிட் டிஸோஸா’ (David D’Souza), பிக்கோலிம் பகுதி வாழ் இந்துக்கள், நிக்கோலா டி மெல்லோ இந்துக்களுக்கு எதிரானவர் என்று கருதி மராட்டியருக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர் என்று கூறுகிறார் [11]. வசந்தகுலன் ஸ்ரீனிவாசன் என்ற அறிஞரோ, தங்களின் மீது நிக்கோலா டி மெல்லோ கொண்ட அடக்குமுறையால் ஆத்திரமடைந்திருந்தாலும் இந்துக்கள் அவருக்கு விசுவாசத்துடன் இருந்ததாகவும், மராட்டியர்கள் எல்லைப் பகுதியில் படை குவித்ததை அறியாதவர்களாகவும் இருந்தார்கள் என்று கருதுகிறார் [9].

இப்ரம்பூர் மோதல்:


தங்கள் பேரரசின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க விரும்பிய மராட்டியர்கள் அது குறித்து கோவாவின் ஆட்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினர். ஆனால் அவ்வதிகாரிகள் அதற்கு உடன்பட மறுத்தனர் [9] [10]. அத்துடன் ஒரு கால கட்டத்தில் போர்ச்சுக்கீசியர்கள் தங்களது கடற்படையை வடக்கு நோக்கி நகர்த்தி, கோலாப்பூர் பகுதியினை ஊடுருவி நோவா கான்கியுஸ்டாஸ் பகுதியில் உள்ள மராட்டியர்களை விரட்டியடிக்கவும் எண்ணினர். ஆனால் இந்த எண்ணத்தை அவர்கள் நிறைவேற்றத் தயங்கியதற்கு இருந்த ஒரே காரணம், இது மராட்டியர்களுக்கு வெறுப்பை ஏற்றி அவர்களை டச்சுக்காரர்களுடன் கூட்டணி அமைக்கச் செய்து, அந்தக் கூட்டணி போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிராக மாறி அவர்களுக்கே பாதகம் ஏற்படுத்தக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வினால்தான் [12].

மோதலின் முதல் துவக்கம் ஏற்பட்டது பேர்னம் பகுதியில் உள்ள சிறிய ஊரான இப்ரம்பூரில். இப்ரம்பூர் முக்கிய சாலை வழித்தடங்களுக்கும் சப்போரா (Chapora River) ஆற்றுப் பகுதியிலும் அமைந்திருந்தது. போர்ச்சுக்கீசியப் படைகள் இப்ரம்பூரில் குவிக்கப்படுவதாக பிக்கோலிம் பகுதியில் இருந்த மராட்டியர்களுக்குத் தவறான தகவல் கிடைக்கிறது [9]. ஆனால் உண்மையில் அந்தச் சமயத்தில் போர்ச்சுக்கீசியப் படைகள் எல்லையில் இருந்து வெகு தொலைவில் இருந்த ‘அலோர்னா’ (Alorna Fort) கோட்டைப் பகுதியில்தான் இருந்தது [13].

மராட்டியர்கள் தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து குதிரைப்படையை இப்ரம்பூருக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்தனர் [9]. ஆனால், அவர்களுக்குக் கிடைத்த தகவலின் படி போர்ச்சுக்கீசியப் படை  அங்கு இல்லாது போனாலும், போர்ச்சுக்கீசியர்கள் படை அவ்விடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கக்கூடும், எனவே இப்ரம்பூரை கண்காணிப்பது அவசியம் என்று மராட்டியப் படைத் தளபதி கருதினார். பிக்கோலிம் மற்றும் பேர்னம் பகுதியின் போர்ச்சுக்கீசியப் படைகள் ‘மேனுவல் டி எலாமினோஸ்’ (Manuel de Elaminos) தலைமையின் கீழ் வழிநடத்தப் பட்டது. இப்படைத் தளபதிக்கு மராட்டியர்கள் இப்ரம்பூரில் நுழைந்து விட்ட தகவல் கிடைத்தது. மராட்டியர்களின் ஊடுருவல் தகவல் கோவாவில் உள்ள வாஸ்கோட காமா நகருக்கும் அறிவிக்கப்பட்டது [13]. இத்தகவல் அறிந்ததும் போர்ச்சுக்கீசியர்கள் அலோர்னா கோட்டையினைப் பாதுகாப்பில்லாத நிலையில் விட்டு விட்டு இப்ரம்பூருக்கு படையை நகர்த்தி அங்கிருக்கும் மராட்டியர்களைத் தாக்க முடிவு செய்தனர் [13].

ஆகஸ்ட் 1640ஆம் ஆண்டு நடந்த போர்ச்சுக்கீசியத் தாக்குதல் விரைவாகவும் திறம்படவும் நடத்தப்பட்டது. இப்ரம்பூருக்குச் செல்லும் மேற்கிலும் வடக்கிலும் இருந்த இரு முக்கிய வழித்தடங்களும் சூழ்ந்து கொள்ளப்பட்டது. நகருக்கு அதிகச் சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் பொருட்டு காலாட்படைகளையே அடுத்தடுத்து அனுப்பி போர்ச்சுக்கீசியர்கள் போரை நடத்தினர். காலாட்படையினுக்குச் சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில், மராட்டியர்கள் குவித்திருந்த சேனையின் அளவைக் கண்டதும் போர்ச்சுக்கீசியர்கள் பின்வாங்கத் தொடங்கினர் [9]. போரில் தங்கள் கை மேலோங்கியிருப்பதை உணர்ந்த மராட்டியர்கள் போர்ச்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டைக்குச் செல்லும் வழியில் விரட்டியடிக்க முடிவெடுத்தனர் [9]. மராட்டியர்களின் குதிரைப்படை பின்வாங்கிய போர்ச்சுக்கீசியர்களின் காலாட்படையை மேலும் எல்லையிலிருந்து துரத்தியது. தொடர்ந்த போரின் காரணமாக இப்ரம்பூரின் வடதிசைப் பாதுகாப்பில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகள் மேற்குப் பகுதியில் நடைபெறும் போரில் உதவி புரிய வரவழைக்கப் பட்டனர் [9].

ஆனால் ஒப்பிடும்பொழுது அளவில் மிகக்குறைவாக இருந்த வடதிசையின் போர்ச்சுக்கீசியப் படை, இப்ரம்பூரில் இருந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைகளினால் தடை செய்யப் பட்டது [9]. அதனால் முதல் நாள் போரின் இறுதியில் இரு துருப்புகள் மட்டுமே எஞ்சின, இழப்புகளும் குறைவாகவே இருந்தது. அத்துடன் மேற்குப் பகுதியின் போர்ச்சுக்கீசியப் படை கையாண்ட புத்திசாலித்தனமான போர் நடவடிக்கைகளினால் ஓர் ஒழுங்கு முறையில் கட்டுப்பாட்டுடன் அவர்களால் பின்வாங்க முடிந்தது [9]. ஆயினும், போரின் தீவிரமும், மராட்டியச் சேனையின் பெரும்பான்மை பலமும் போர்ச்சுக்கீசியர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன், இப்ரம்பூர் மக்கள் மராட்டியப் படைகளை ஆதரித்ததுடன் அவர்களது படைகளையும் பலப்படுத்திக் கொள்ள உதவியுள்ளனர் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்குப் போர்ச்சுக்கீசியர்கள் தள்ளப் பட்டனர். இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இப்ரம்பூர் போன்ற மற்ற பிற எல்லைப்புற ஊர்களுக்கும் இப்ரம்பூர் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் நம்பத் தொடங்கினர் [14].

தொடர்ந்து இரண்டு நாட்களாக அலோர்னா கோட்டையினை நோக்கி மராட்டியர்கள் விரட்டிய பின்பு கோவாவின் வாஸ்கோட காமா பகுதியிலிருந்த போர்ச்சுக்கீசியப் படை போர்ச்சுக்கீசியர்களின் உதவிக்கு வந்து சேர்ந்தது [9]. இதனால் ஏற்பட்ட சம அளவுள்ள படை பலத்தினால் போர்ச்சுக்கீசியர்களுக்கு மராட்டியர்களை எதிர்த்து நிற்கும் திறன் ஏற்பட்டது. அடுத்த நாள் மேற்கொண்ட திறமையான நடவடிக்கைகளினால் இருபடைகளும் ஒன்றை ஒன்று முன்னேறவிடாதவாறு முடக்கப் பட்ட நிலை ஏற்பட்டது. அடுத்துத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் நிகழவில்லை. இருதரப்பினரும் தேவையற்ற, ஆபத்து நிறைந்த வழிகளை மேற்கொண்டு இழப்புகளை அதிகப்படுத்தும் நிலையினைத் தவிர்க்க விரும்பினர் [9]. இருதரப்பினரும் தற்காப்பிற்காக மட்டுமே தாக்குதலை நடத்த முயன்றனர். போரின் முதல் இரு துவக்க நாட்களில் மராட்டியப் படை ஏற்படுத்திய சேதங்கள் போர்ச்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டையினை நோக்கிப் பின் வாங்க வைத்திருந்தது. ஆனால் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டுப் பின்வாங்குதல் நிறுத்துப் பட்டிருந்தது. தனது திறமையான குதிரைப்படையினைக் கையாண்ட விதத்தின் மூலம் போர்ச்சுக்கீசியர்களைத் தாக்காமல் அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே மராட்டியப் படை தடை செய்தது [9].

ஜூலை மாதத்தின் துவக்கத்தில், இப்ரம்பூரில் இருந்து வெகு தொலைவிற்கு நகர்த்தப் பட்டு விட்ட காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் பீரங்கிகளைப் போரில் உபயோகப் படுத்த தங்கள் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றனர். பீரங்கித் தாக்குதல் மராட்டியக் காலாட்படையினைச் செயலிழக்கச் செய்ய உதவியது, ஆயினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறைவே. தொடர்ந்த பீரங்கித் தாக்குதல் மராட்டியக் குதிரைப் படைகளைக் குறிவைத்தது. இதனால் சுடப்படக்கூடிய தாக்குதல் எல்லையிலிருந்து மராட்டியப் படைகள் பின்னடைந்தன [9].

மராட்டியர்கள், அலோர்னா கோட்டையின் அருகாமையை விட்டு விலகி, மீண்டும் ஒருங்கிணைத்து, சாலையின் தென்திசையில் இருந்து வேகமாக முன்னேறித் தாக்கி எதிரியின் பீரங்கிப் படையைச் சிதறடித்து அவர்களுக்குப் பேரிழப்பை உருவாக்கத் திட்டமிட்டனர் [9]. போர்ச்சுக்கீசியர்களின் கைவசம் இருந்த உயர் தொழில்நுட்பப் போர்க்கருவிகளுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் தங்களது போர்த் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மராட்டியப் படைகள் தள்ளப்பட்டன.

மராட்டியர்களின் போர்த்திட்டத்தைப் புரிந்து கொண்ட போர்ச்சுக்கீசியர்கள் விரைவில் தங்களது படைகளைப் பல பிரிவுகளாக்கி புதிய வேகத்துடன் முன்னேறிய மராட்டியப் படையினை எதிர்த்துத் தாக்கினர். இத்தாக்குதல் முறையினைச் சற்றும் எதிர்பாராத மராட்டியப் படை, எதிர்த் தாக்குதலில் நிலைகுலைந்து மேலும் தென் திசையை நோக்கி, சப்போரா ஆற்றினை நோக்கி நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது [9].

சப்போரா ஆற்றினை அடைந்த மராட்டியக் குதிரைப் படை, மராட்டிய எல்லைக்குள் பின்வாங்கி தந்திரமாகப் போர்ச்சுக்கீசியப் படையினை அவர்களது பாதுகாப்பான கோவா பகுதியில் இருந்து நகரச் செய்து தங்களது மராட்டிய எல்லைக்குள் இழுக்க நினைத்தனர். ஆனால் போர்ச்சுக்கீசியப் படையோ சப்போரா ஆற்றினை நோக்கி முன்னேறுவதைத் தவிர்த்தனர் [9]. ஜூலை மாதத்தின் முடிவில் மராட்டியப் படைகள் தங்கள் எல்லைக்குள் ஒருங்கிணைந்தன. அலோர்னா கோட்டையினைப் பலப்படுத்திய பிறகு, ஆல்பெர்ட்டோ பின்ட்டோவின் தலைமையின் கீழ் போர்ச்சுக்கீசியப் படைகள் சப்போரா ஆற்றின் வடக்கில் பரவலாக நிலைகொண்டு தங்களது நிலையினை நன்கு பலப்படுத்திக் கொண்டனர் [11].

மராட்டியர்களின் பிக்கோலிம் ஊடுருவல்:
சப்போரா ஆற்றின் வடகரையில் போர்ச்சுக்கீசியர்களும், தென்கரையில் மராட்டியர்களும் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொண்ட பின்பு, இந்தத் தகராற்றின் இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டு வரப் போர் ஒன்றே உதவும் என்று இருதரப்பினரும் கருதினர் [12].  மராட்டியர்கள் இன்னமும் போர்ச்சுக்கீசியர்கள்  இப்ரம்பூர் நோக்கித் தங்களது படைகளை நகர்த்தி மராட்டிய எல்லையை ஊடுருவ முயல்வதாக எண்ணினார்கள். போர்ச்சுக்கீசியர்களோ கோவாவிற்கும் மராட்டியப் பேரரசிற்கும் இடையில் உள்ள பகுதியை ஒரு பாதுகாப்பான அரணாக உருவாக்கிக் கொள்ள விரும்பினர். இதற்கு அவர்கள் கோலாப்பூரையும், கோலாப்பூருக்கு வடக்கில் உள்ள பகுதியையும் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டியது  தேவையாயிருக்கும். ஆனால் இந்த நடவடிக்கை உண்மையில் போர்ச்சுக்கீசியர்களின் ஒரு திட்டமா அல்லது வெறும் வதந்தியா என்பது சரிவர உறுதியாகத் தெரியவில்லை [12]. பேர்னம் (Pernem) பகுதியின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மராட்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளால் சூழப்பட்டிருந்தது. இதனால் பேர்னம் பகுதியில் போர் நிகழ்வது தவிர்க்க இயலாதது என்பதை இருதரப்பினரும் அறிந்திருந்தார்கள் [11] [13]. மராட்டியர்கள் பேர்னமை பாதுகாக்கக்  கருதியிருந்த தங்களது ஆரம்பக் காலத் திட்டத்தைக் கைவிட்டு, பிக்கோலிம்மின் தென்பகுதிக்குத்  தங்கள் படையை நகர்த்தினர் [9].

பிக்கோலிம் படைகளால் நன்கு பலப்படுத்தப்படா விட்டாலும், மையமாகவும், பான்ஞ்சிம் (Panjim) இல் இருந்து எளிதில் அடையக்கூடிய வழித்தடத்திலும் இருந்தது. மராட்டியர்கள் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில், வடக்குப் பகுதியில் இருந்த நிலவழியாக, பரந்த வயல் வெளிகள் வழியாக, சப்போரா ஆற்றின் தென்பகுதியிலிருந்து பிக்கோலிம்மிற்குள் நுழைந்தனர் [9]. இவ்வாறு மராட்டியர்கள் பிக்கோலிம்மில் நுழைந்ததை அப்பகுதி வாழ் மக்கள் அறிந்திருக்கவில்லை, இத்தகவல் தெரியவராமல் அவர்கள் ஏமாற்றப்பட்டோ அல்லது மராட்டியப் படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  அத்தகவல் மறைத்தோ வைக்கப் பட்டிருந்தது [9].

ஆகஸ்ட் மாத முடிவில் மராட்டியக் காலாட்படை கன்சர்பால் (Kansarpal) மற்றும் லட்டம்பர்செம் (Latambarcem) நகர்களையும், மற்றொரு சிறிய படை  அருகிருக்கும் ஸல் (Sal) பகுதியையும் தாக்கியது. இந்த இரு ஊர்களும் முக்கியமான இந்து மதம் மற்றும் இந்துக் கலாச்சாரத்தின் மையங்களாகும் [9] [15]. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அப்பகுதி அதிக எதிர்ப்பினைக் காட்டவில்லை. அதனால் போரில் மிகக் குறைவான இழப்புகளுடன் அப்பகுதியைக்  கைப்பற்றிய மராட்டியப் படைகள், அதனை மேலும் பலப்படுத்தி தங்கள் படைத்தளமாக மாற்றிக் கொண்டது [9]. சந்தடியின்றி நிகழ்ந்த இந்த மராட்டியப்படையின் ஆக்கிரமிப்பு பிக்கோலிம் நகரில் இருந்த நிகொல டி  மெல்லோ (Nicolau de Mello) வின் கவனத்திற்கு வர ஒரு வாரக் காலம் ஆனது.  ஆனால் வாஸ்கோட காமா நகருக்கும், இப்ரம்பூர் மற்றும் அலோர்னா கோட்டைப் பகுதிகளில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகளுக்கும் இத்தகவல் கிடைக்க மேலும் அதிகக் காலம் ஆனது [9].

மராட்டியப்படை, தோடமார்க் (Dodamarg) பகுதியில் இருந்து பார்டஸ் (Bardez) ன் எல்லைப் பகுதி  வரை  சென்ற நெடுஞ்சாலையையும், அச்சாலைக்கும் சப்போரா ஆற்றிற்கும் இடையே உள்ள அனைத்து இடைப்பட்ட பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது [9].  செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள், அலோர்னாவின் மேற்குப் பகுதியில் இருந்த பாலம் வழியாகப் போர்ச்சுக்கீசியப் படையினர் சப்போரா ஆற்றைக் கடந்தனர் [9]. அவர்கள் உளவு பார்த்த பொழுது மராட்டியக் காலாட்படைகள் ஆற்றின் தெற்குப் பகுதியில் ரோந்து செய்வது தெரிய வந்தது, இதனால் நள்ளிரவில் போர்ச்சுக்கீசியப் படை ஆற்றைக் கடந்தது. இரவில் நடக்கும் ஆயுதத் தாக்குதல் திறனற்றதாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது [9]. ஓசையின்றி முன்னேறிய போர்ச்சுக்கீசியப் படையினர்  கன்சர்பாலுக்கு வடக்கில் இருந்த மராட்டியர்களின் படைத்தளத்தை அதிகாலையில் தாக்கினர். எனினும் இறுதியில் மராட்டியப் படை போர்ச்சுக்கீசியர்களைப் புடை சூழ்ந்த பொழுது  வேறு வழியின்றி அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தனர் [9].

போர்ச்சுக்கீசியர்களின் இந்தத் தோல்வி, போராட்டத்தில் ஒரு மிக முக்கியத் திருப்பமாக மாறியது.  அவர்களுக்குச் சாதகமாக இருந்த நிலை பறிபோனதுடன், ஆயுதங்களையும் இழந்தனர். மராட்டியர்களை முன்னர் கோவாவில் இருந்து விரட்டிய படைகளும் அலோர்னா கோட்டையில் இருந்த தங்கள் ஆயுதக் கிடங்கைக் கைவிட நேர்ந்தது. மராட்டியர்கள் மீண்டும் எல்லைப் பகுதியில் இருந்து மற்றொரு தாக்குதலை மாலிங்கும்  (Maulinguem) மீது நிகழ்த்தினார்கள். அப்பகுதியில் இந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்ததாலும், அவர்கள் மராட்டியர்களை ஏற்றுக் கொண்டதாலும் மீண்டும் தாக்குதல் சுலபமாக மராட்டியர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது [9].

போர்ச்சுக்கீசியர்கள் பிக்கோலிம், லம்கவோ (Lamgao), முல்கவான் (Mulgaon), வதாடியா (Vathadeo) மற்றும் மராட்டியப் பேரரசிற்கும் சட்டாரி (Satari) க்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதிகளில் அவர்களது படைகளை நிலை நிறுத்தினர் [9].  மராட்டியர்களுக்கு பிக்கோலிம் மக்களிடம் இருந்த ஆதரவை நன்கறிந்திருந்த அவர்கள் பிக்கோலிம்மில் இருந்த மராட்டியர்களை நேரடியாகத் தாக்குவதைத் தவிர்த்தனர். போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் படைகளை நிறுத்தி, பாதுகாப்பினைப் பலப்படுத்தி இருந்த  ஊர்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதனால் அவை மராட்டியர்கள் வசம் இழக்கப்படும் வாய்ப்பும் குறைவாக இருந்தது [9]. அக்டோபரில் வதாடியா தக்கப்பட்டபொழுது மீண்டும் போர் துவங்கியது [9].

வதாடியா போர்:
வதாடியாவிற்காக நிகழ்ந்த போர் விரைவில் முடிந்துவிட்ட ஒன்று என்றாலும் கோவாவில் போர்ச்சுக்கீசியர்களின் ஆளுமையை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது அது. வதாடியா அமைந்திருந்த இடத்தின் முக்கியத்தத்துவத்தினால் மராட்டியர்கள் வதாடியாவைக் கைப்பற்றுவது பிக்கோலிம் நகரைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதவும் எனக் கருதினார்கள். போர்ச்சுக்கீசியர்கள்  தேவையான பாதுகாப்பை அந்நகரைச் சுற்றி அமைத்திருந்தபோதிலும், அந்நகருக்கென நிரந்தரப் படை பாதுகாப்பிற்காக இல்லாமல் இருந்தது [9]. வதாடியாவைக் காக்க ‘ஆல்பர்ட் பின்ட்டோ’ பேர்னமில் இருந்து பிக்கோலிம்மிற்கு வரவழைக்கப் பட்டார் [9]. எதிர்பார்த்தவாறே மராட்டியர்கள் வடக்கிலிருந்து வதாடியாவைத் தாக்கினர். போர்ச்சுக்கீசியர்கள்  உடனடியாகப் பீரங்கித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தனர் [9]. இத்தாக்குதலால் மராட்டியக் குதிரைப்படை சிதறுண்டது.  தொடர்ந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைக்கும் சிறிது இழப்பு நேர்ந்தது [9]. போர்ச்சுக்கீசியர்களின் பீரங்கித் தாக்குதலின் குறி திறம்பட அமையாததால் மராட்டியக் குதிரைப்படையை அழிக்க முடியாது போனது [9].

போர்ச்சுக்கீசியர்கள் வதாடியாவின் வடக்குப்புற எல்லையைக் காக்கும் வகையில் படைகளை நிறுத்தினர். குதிரைப்படைகள் போர்ச்சுக்கீசியர்களை நெருங்கித்  தாக்கி இழப்புகளை ஏற்படுத்த உதவும் வகையில் மராட்டியக் காலாட்படை அவர்களை எதிர்கொண்டது [9]. ஆனால் மோதல் துவங்கியவுடன் போர்ச்சுக்கீசியர்கள்  மராட்டியர்களின் பாதுகாப்பு வளையத்தை விரைவில் உடைத்து மராட்டியர்களைத் தாக்கி அவர்களுக்குப் பெரும் அழிவை உண்டாக்கினர். இதன் விளைவாக மராட்டியர்களின் போர்த்திட்டம் சிதைந்ததுடன்  அவர்களது காலாட்படைக்கும் அதிக இழப்பு ஏற்பட்டது. படைத்தளபதிகள் கொடுத்த திறனற்றக் கட்டளைகளினால் மராட்டியக் குதிரைப்படை போர்ச்சுக்கீசியர்களின் எதிர்த்தாக்குதலைத் தடை செய்யக் கால தாமதம் ஆனது [9].

வதாடியாவின் வட முனையில் நிகழ்ந்த இப்போர்தான் பிக்கோலிம்  போரில் தீவிரமான ஒன்று. தொடர் தீவிரத் தாக்குதல்களும், இரு பக்கங்களுக்கும் ஏற்பட்ட சம அளவு இழப்புகளும் தாக்குதல் நிகழ்ந்த நாளில் பெரும்பான்மையாக இருந்தது [9]. இறுதியில் இருள் கவிழத் தொடங்கியதும் ஆல்பர்ட் பின்டோ தனது போர்ச்சுக்கீசிய வீரர்களை முன்னேறுவதை நிறுத்துமாறும், வதாடியாவிற்குத் திரும்புமாறும் கட்டளை இட்டார் [9]. இப்போரின் இழப்பினைப்  பற்றிய தகவல்களை வரலாற்றில் மராட்டியர்களோ, போர்ச்சுக்கீசியர்களோ குறிப்பிடாவிட்டாலும் இழப்புகள் அதிகம் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது [9]. இப்போரில் நிகழ்ந்த இழப்பினை அடிப்படையாகக் கொண்டு இப்போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதைத் தீர்மானித்துவிடக் கூடும் என்பதினால் இரு தரப்பினரும் தங்களுக்கு நேர்ந்த அதிக இழப்புகளை ஒப்புக்கொள்ளத் தயங்கியிருக்கலாம் என ‘டேவிட் டிஸோசா’ கருதுகிறார் [11].

போர்ச்சுக்கீசியர்களின் பீரங்கிப் படைகளின் தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு மறுநாள் மராட்டியர்கள் மீண்டும் விடிவதற்கும் முன்னரே வடக்கிலிருந்து தாக்கத் தொடங்கினர்[9]. அதிகாலையில் தாக்குதல் வெற்றிகரமாகத் துவங்கினாலும் மீண்டும் மராட்டியர்களின் திட்டம் தோல்வியுற்றது. ஆல்பர்ட் பின்ட்டோவின் ராணுவத் திறமை மராட்டியர்களின் சாதக நிலையை முறியடித்து அவர்களை வடக்கு நோக்கித் துரத்தியது. ஆல்பர்ட் பின்ட்டோவின் அணுகுமுறையின் காரணமான திறமையான வழிநடத்துதலால் போர்ச்சுக்கீசியப்  படைகளுக்குக் குறைவான சேதம் விளைந்தது [9]. ஆனால் மராட்டியக் குதிரைப்படையினர் திறமையாகத் தெற்கு நோக்கி முன்னேறி நகரில் இருந்த போர்ச்சுக்கீசியப் படையினரையும் தாக்கத் துவங்கினர் [9].  மராட்டியக் குதிரைப்படையினரின் தீவிரத் தாக்குதலால், போர்ச்சுக்கீசியர்களின் பெரும்பான்மையான படை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் அவர்கள் வேறு வழியின்றி வதாடியாவில் சரணடையும் நிலை ஏற்பட்டது [9].

போரின் நிலையை உணர்ந்த ஆல்பர்ட் பிளேட்டோவிற்குக் கோபம் ஏற்பட்டாலும், வெள்ளை நிறச் சமாதானக் கொடியை உயர்த்தி வதாடியாவிற்குள் பின்வாங்க நேர்ந்தது [9]. ஆனால் படைகள் பின்வாங்குதல் ஆல்பர்ட் பின்ட்டோவின் திறமையின் காரணமாக ஒழுங்குமுறையான கட்டுப்பாட்டுடன், படைகளின் இழப்பைக் குறைக்கும் வகையில் இருந்தது.  இக்காரணத்தினால் பின்வாங்கி நகருக்குள் நுழைய இரவாகிவிட்டது [9]. மராட்டியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள் திறமையாகத் திட்டமிடப்பட்டு ஆல்பர்ட் பின்ட்டோவின் படைகளைத் தாக்கத் தயாரான நிலையில் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டனர் [9]. இவ்வாறு படைகள் நகர்த்தப்பட்டதால் மராட்டியர்களின் குதிரைப் படை வதாடியாவின் வடக்குப் பகுதிக்குத் தள்ளப்பட்டது.  இரு தரப்பினரும் வெற்றி உறுதி என நம்பியதால் போர் நள்ளிரவு வரை தொடர்ந்தது [9]. ஆனால் இறுதியில் சோர்வடைந்த  போர்ச்சுக்கீசியப் படையினர் நகரின் தென் பகுதிக்குப் பின்வாங்கிய பின்பு அப்பகுதியைப் பலப்படுத்திக் கொண்டு, நகரின் வட பகுதியை மராட்டியர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றடையுமாறு விட்டு விட்டனர் [9].

இவ்வாறு ஊர் இரண்டுபட்ட பிறகு மராட்டியர்கள் குடிமக்களை  நகரின் இருபகுதிகளுக்கும் தடையின்றிப் போய் வர அனுமதித்தனர். மராட்டியர்களின் அடிப்படை நோக்கத்தை உணர்ந்த ஆல்பர்ட் பின்ட்டோ ஊரடங்குச் சட்டம் போன்ற முறையினை அமல்படுத்தி, தனது படையின் ஒரு பகுதி வீரர்களை நகர மக்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் ஈடுபடுத்தினார்.  குறிப்பாக உயர் ஜாதி இந்துக்கள் எனப் பின்புலம் கொண்ட பிரிவினர் தீவிரமாகக் கண்காணிக்கப் பட்டனர் [9]. இக்குடிமக்கள் நகரின் வடபகுதிக்குச் சென்று மராட்டியப் படையைச் சந்தித்து, மராட்டியர்களுக்கு ஆதரவாகச் செயல் படுவார்கள் என்று சந்தேகிக்கப் பட்டது [9].  இந்தச் சந்தேகத்தில் சிறிது உண்மையும் இருந்தது. மறுநாள் மதியம் இருதரப்பினர் படையும் இக்கட்டான செயலிழந்த நிலையில் இருக்கும் பொழுது, வடபகுதியில் இருந்து வந்த குடிமக்களின் கூட்டமொன்று போர்ச்சுக்கீசியர்களின் ஆயுதங்களைக் கொள்ளையடிக்கத் துணிந்தது. இவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டதும், கடினமான முறையில் தண்டிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, அவர்களின் துரோகச் செயலுக்காக ‘வாஸ்கோடா காமா’ நகருக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர் [9]. எனினும், போர்ச்சுக்கீசியர்களின் இந்த நடவடிக்கை வதந்தியாக விரைவில் மக்களிடையே பரவி, குடிமக்களிடையே அமைதி குறைந்த காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் குடிமக்கள் தென்பகுதிக்கு வருவதையே தடை செய்துவிட்டனர்[9] [11]. இந்நிலை ஏற்படக் காரணம் மராட்டியர்கள் வதந்திகளை மிகைப் படுத்தியதால் ஏற்பட்டதன் விளைவு என ‘டேவிட் டிஸோசா’ கருதுகிறார் [11].

நிலைமை எதுவாயினும் நகரின் வடபகுதிக்கும் தென் பகுதிக்கு இடையே இருந்த இருவேறுபட்ட இறுக்கமான சூழ்நிலை மக்களிடையே அமைதியின்மையை அதிகப்படுத்தியது [9]. மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நகரின் வடபகுதியில் இயல்பு நிலை நிலவி, மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.  ஆனால் போர்ச்சுக்கீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தென்பகுதியில், வசதிபடைத்த, சலுகை அளிக்கப்பட்ட ஒரு சிலரைத் தவிரப் பெரும்பாலான குடிமக்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது [9]. மறுநாள் மராட்டியர்கள் தங்கள் காலாட்படையை நகர்த்தி போர்ச்சுக்கீசிய்ர்களைத் தாக்கியவாறு முன்னேறத் துவங்கினர். போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் படைகளை ஒருங்கிணைத்து பதிலுக்குத் தாக்கி, மராட்டியர்களின் காலாட்படையைப் பின் வாங்கச் செய்தனர் [9]. மராட்டியர்கள் மேலும் வேகமாக முன்னேறி இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் மிகவும் புத்திசாலித்தனத்துடன் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைந்து குடிமக்களிடம் அவர்கள் விடுதலை அடைந்துவிட்டனர் எனக் கூறுவதில் நேரத்தைச் செலவழித்தனர் [9]. போர்ச்சுக்கீசியர்கள் தங்கள்  பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்த பின்பு குடிமக்களை அவர்கள் வீட்டிற்குள் செல்லுமாறு கட்டளை இட்டனர்[9]. வீட்டிற்குள் செல்வதற்குப் பதிலாகக் குடிமக்கள் போர்ச்சுக்கீசியப் படையை எதிர்த்து கலவரம் செய்யத் தொடங்கியதால் வதாடியா நகரின் தென்பகுதியின் கட்டுப்பாடு நிலைகுலையத் துவங்கியது [9]. இவ்வாறு போர்ச்சுக்கீசியப் படை கலவரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதில் தங்கள் கவனத்தைச் செலுத்திக்  கொண்டிருந்த பொழுது, இரவில் மீண்டும் மராட்டியர்கள் எதிர்பாராவிதமாகத் தாக்கத் தொடங்கினர். விரைவாகவும் தீவிரமாகவும் நிகழ்த்திய தாக்குதலின் முடிவில் மராட்டியர்கள் நகரின் தென்மேற்கில் உள்ள மிகச் சிறிய பகுதிக்குள் போர்ச்சுக்கீசியர்களை ஓரங்கட்டினார்கள் [9].

ஆல்பர்ட் பின்ட்டோ தனது படையினரை வதாடியா நகரின் தென்பகுதியில் உள்ள சாலைக்குப் பின்வாங்கச் செய்தார். இதன் மூலம் மறுநாள் காலையில் நகரை முற்றுகை இடலாம் என்பது அவர் திட்டமாக இருந்தது [9]. போர்ச்சுக்கீசியப் படையினருக்கு வதாடியா  நகரை அவர்கள் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு ‘வாஸ் கோடா காமா’ நகரில் இருந்து புதிய கட்டளைகள் வந்தன [9]. இரு நாட்களுக்குப் பிறகு போர்ச்சுக்கீசியர்கள் நகருக்குள் செல்லும் விநியோக வழிகளைத் துண்டித்தனர் [9]. அவர்கள் மக்களை நகரெல்லையில் இருந்த வயல்களுக்கும் செல்லவிடாது தடுத்தனர். இதனால் எதிர்பாராத முற்றுகை போன்ற சூழ்நிலைக்குத் தயாராகாத மக்கள் உணவின்றித் துன்புற்றனர் [9]. நவம்பர் மாதத் தொடக்கத்தில் மக்கள் வதாடியா நகரில் இருந்து வெளியேறி போர்ச்சுக்கீசியர்களுக்கு அடிபணிந்தனர். அவர்களில் சிலர் துரோகியர்கள் எனக் குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தவிர்த்து நகரை விட்டு சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கப் பட்டவர்களில் பெரும்பான்மையோர் கத்தோலிக்கப் போர்ச்சுக்கீசியப் பிரிவினராவார்கள் [9] [11] [16].

எழுச்சியின் துவக்கம்:
மராட்டியர்கள் மேலும் படைகளை அனுப்பிப் போரிட இயலாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள்  விரைவாகவும் திறம்படவும் முன் நிகழ்த்திய போர்களுக்கு எதிர் மாறாக, இப்போரில் போர்ச்சுக்கீசியர்களின் அதிநுட்பப் போர்க்கருவிகளின் தாக்குதலைத் தவிர்ப்பதற்கு அதிகக் காலம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது [9]. மராட்டியர்களின் படை வதாடியாவில் முற்றுகையில் சிக்கித் தவித்தது. அவர்கள் தங்களுக்கு அதிக இழப்புகளைத் தரும் நடவடிக்கைகளைத்  தவிர்க்க எண்ணி சூழ்நிலை சாதகமாக மாறும் காலத்தை எதிர்நோக்கி இருந்தார்கள் [9].

ஆனால் போர்ச்சுக்கீசியர்கள் வதாடியா நகரில் வாழ்ந்த இந்துக்களைக் கைது செய்ததும், அவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியதும் அருகில் உள்ள கோவாவின் கிராமப் பகுதிகளுக்கு வெகு வேகமாகப் பரவியது [16]. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் போர்ச்சுக்கீசியர்களின் விருப்பத்திற்கு மாறாக மராட்டியர்களுடன் இணைந்த வதாடியா மக்கள் படுகொலைகள்  செய்யப்பட்டதாக மிகைப்படுத்தப்பட்ட வதந்திகள் உருவெடுத்து கதைகள் பரவ ஆரம்பித்தது [11]. இப்ரம்பூர் நகரில் முதல் பெரிய எதிர்ப்பு தோன்றியது. இப்ரம்பூர் முதலில் மராட்டியர்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும் இப்பொழுது அவர்கள் போர்ச்சுக்கீசியர்களின் பலத்த கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார்கள் [9].  இம்பரம்பூர் மக்கள் தங்கள் பணிகளை விட்டுவிட்டு போர்ச்சுக்கீசியப் படைகளை எதிர்க்க முனைந்தார்கள். ஆயுதமற்ற கலகக்காரர்கள்  நிகழ்த்திய இந்த எதிர்ப்பை, போர்ச்சுக்கீசியர்கள் வானை நோக்கிச் சுட்டுப்  பலரைக்  கதிகலங்கச் செய்தும், அடங்காது தொல்லைகள் கொடுத்தவர்களைச்  சிறையிலடைத்தும் சுலபமாகக் கலவரத்தை அடக்கி நகருக்கு அதிகம் சேதம் விளைவிக்காத நடவடிக்கைகளை மேற்கொண்டனர் [9].  இப்ரம்பூருக்கு வடக்கில் இருந்த அன்கோனம் (Anconem) நகருக்கும் இதே கதிதான் ஏற்பட்டது [9].

எனினும், அலோர்னா கோட்டைக்கு வடக்கில் உள்ள தற்றாடிங்கம் (Tatradingam) என்ற குக்கிராமத்தின் மக்கள் கோட்டைக்கு ஊர்வலமாகச் சென்று, போர்ச்சுக்கீசியர்கள் பேர்னம்மை  (Pernem) மராட்டியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நிர்ப்பந்தித்தார்கள், இதன் விளைவாகச் சிறிய சண்டையும் நிகழ்ந்தது [9]. அத்துமீறி கோட்டைக்குள் நுழைந்த கிராம மக்களிடம் போர்ச்சுக்கீசியப் பிரதிநிதிகள் எந்த உடன்படிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இது இராணுவ தளத்தின் மீது நிகழ்த்தப் பட்ட அத்துமீறிய ஊடுருவல் என்பதால், கோட்டையின் தளபதி  மக்களைத் தாக்க முடிவெடுத்து மக்களில் சிலரைக் காயமுறவும் செய்தார் [9]. அவர் கட்டளையின் கீழ் அதி உற்சாகமாகத்  தாக்கிய படையினர் மக்களில் பெரும்பகுதியினரை மரணக் காயங்கள் ஏற்படும் அளவிற்குத் தாக்கினர். காயமடைந்தோரால் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் இயலாது போனது [9]. டி ஆல்பெகுயிர்கேவும்  (De Albequerque) படைத்தளத்தைப் பாதுகாக்க இத்தாக்குதல் அத்தியாவசியம் என்ற கண்ணோட்டத்துடன் இந்தத் தாக்குதலை அணுகியதால், இந்த வன்முறையை அவரும்  கண்டிக்கவில்லை[9].

பிக்கோலிம் நகர மக்கள் டி மெல்லோ (D’Mello) தங்கியிருந்த அரசு மாளிகையைச் சூழ்ந்துகொண்டு இந்தப் படுகொலைகளை நிறுத்தச் சொல்லிப் போராட்டம் நடத்தினார்கள் [9]. ஆனால் டி மெல்லோ சர்ச்சைக்குரிய விதத்தில் படைகளிடம் நகரில் ஊரடங்கு உத்தரவை  நிறைவேற்றக் கட்டளை இட்டார் [9]. இந்த ஊரடங்கு உத்தரவு பிக்கோலிம்மின் பிற பகுதிகளுக்கும் அதிகப் படைகளின் கண்காணிப்பின் கீழ் நீட்டிக்கப் பட்டது  [9]. சிரிகவோ (Sirigao) பகுதியில் துவங்கிய மற்றொரு புரட்சி எழுச்சி பிக்கோலிம் பகுதி முழுமையிலுமே (போர்ச்சுக்கீசியர்களின்  கட்டுப்பாட்டிற்குள் அடங்கிய பகுதிகளில்) அவசர நிலைப்  பிரகடனத்தை அறிவிக்கும்படி செய்தது[9]. பேரினமின் கிழக்குப் பகுதியும் இராணுவத்தின்  அவசரக்காலச்  சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது [9].

டிசம்பர் மாத இறுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்நோக்கி இருக்கும் பொழுது, பார்டெஸ் (Bardez) நகரின் ட்ராவிண்டா (Dravinda) பகுதியில், ஐந்திலிருந்து பத்து இந்துக்கள் அடங்கிய ஒரு குழுவினர்  நகரில் உள்ள வீடுகளுக்குத் தீ வைத்தனர். அவர்கள் கோவாவைச் சுதந்திரமடையச் செய்து மராட்டியர்களிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்தார்கள் [11]. இத்தாக்குதல் மோசமான பழிவாங்கும் எதிர் விளைவை ஏற்படுத்தியது.  போர்ச்சுக்கீசியர்கள் இந்த ட்ராவிண்டா கலகக் கும்பலைச் சுற்றி வளைத்தனர்.  இவர்களுடன் சேர்ந்து சதி செய்தவர்களையும், இப்போராட்டக் குழுவினரையும் தண்டிக்கும் பொருட்டு பொதுமக்கள் முன்னிலையில் அவர்களைத் தூக்கிலிட்டனர் [11].

புத்தாண்டு பிறந்ததும், போர்ச்சுக்கீசியர்கள் மவுலிஞ்சியம் (Maulinguem) பகுதியில் மராட்டியர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த சிறு பகுதியைத் தாக்கினர் [9]. வெற்றிகரமான இத்தாக்குதலின் இறுதியில் அதிக இழப்பின்றி நகரைக் கைப்பற்றினர் [9]. மீண்டும் துரோகிகள் என்று குற்றம் சாட்டி மேலும் சில குடிமக்களைக் கைது செய்தனர் [9]. பிக்கோலிம்மில் தாங்கள் இழந்த பகுதியைக் கைப்பற்றும் எண்ணத்தில் போர்ச்சுக்கீசியர்கள் முன்னேறினார்கள். மராட்டியப்படைகள்  தங்கள் கைவசம் இருந்த பகுதிகள் போர்ச்சுக்கீசியர்கள் வசம் செல்லத் தொடங்கியதும் கோவாவை விட்டு வெளியேற நேர்ந்தது[9]. எனினும், மேலும் பல மராட்டியப் படையினர் எல்லையில் ஒருங்கிணைந்து மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் வாய்ப்பினை எதிர்நோக்கி இருந்தனர் [9]. அந்நிலையில் கோவாவில் மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே பகுதி வதாடியா  மட்டுமே [9]. அங்கும் மராட்டியப் படை இரண்டு மாதங்களாக முற்றுகைக்குக் கீழ் இருந்ததால் தீவிர மராட்டிய ஆதரவாளர்களும் அமைதியை இழக்கத் துவங்கினர் [9].

சமாதான உடன்படிக்கை:
வதாடியாவில் மராட்டியர்களின் உணவுக் கிடங்குகள் போர்ச்சுக்கீசியர்களால் நாசப்படுத்தப்பட்டது, இது அவர்கள் உறுதியைக் குலைக்கும் இறுதிப் பேரிடியாக இறங்கியது. எனினும் மராட்டியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வதாடியா நகர மக்கள் பட்டினி கிடந்து மரணத்தைத் தழுவும் அவலத்தை விரும்பாததால், 1641 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெள்ளைக்கொடியை உயர்த்தி சமாதானத்தைத் தெரிவித்துச்  சரணடைந்தார்கள் [9]. முதலில் இந்த நடவடிக்கையைச் சந்தேகித்த போர்ச்சுக்கீசியர்கள் தாக்குதலை எதிர்பார்த்துத் தயாராக இருந்தார்கள்.  ஆனால் சிறு சிறு குழுக்களாக நகரில் இருந்து வெளியேறிய மராட்டியப் படைகள் எந்த விதத் தீங்கும் இழைப்பதாகத் தெரியவில்லை [9]. போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் பங்கிற்கு, மராட்டியப் படையினர் நகரை விட்டு சுதந்திரமாக வெளியேற அனுமதித்தனர். உடனடியாகத் தங்கள் ஆயுதங்களை ஒப்புவிக்காத மராட்டியப் படையினரை மட்டுமே அவர்கள் கைது செய்தனர் [9]. மராட்டியப் படை வீரர்கள் போர்ச்சுக்கீசியர்களைத் தாக்க எண்ணியிருந்தாலும் பலநாள் பட்டினியினாலும், மனவுறுதி குலைந்த நிலையிலும் மிக எளிதில் போரில் தோல்வி அடைந்திருப்பார்கள் என ஸ்ரீநிவாசன் வசந்தகுலன் கருதுகிறார். போர்ச்சுக்கீசியர்கள் மிக விரைவில் படைகளைப் பலப்படுத்தியதால் மராட்டியர்களைவிடப் போர்ச்சுக்கீசியப் படையினரின் எண்ணிக்கை நகரில் அதிக அளவு இருந்தது [9].

பிப்ரவரி மாதத்  துவக்கத்தில் மராட்டியப் படைகள் இப்ரம்பூருக்குள் நுழைந்தது. ஆனால் இம்முறை அவர்கள் உடன்படிக்கை ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதைத் தெரிவித்தனர். மராட்டியப் போர்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், மராட்டிய ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப் படவேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைத்தனர் [9]. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியே டி’ ஆல்பெகுயிர்கேவை நேரில் சந்தித்து சமாதான உடன்படிக்கைக் கோரிக்கைகளைக் குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்தினார். அந்த  உடன்படிக்கையின் படி; மராட்டியப் பேரரசுக்கும் போர்ச்சுக்கீசியர்களின் கோவாவிற்கும் இடையிலான எல்லையையும், அருகில் உள்ள  சிற்றரசுகளின் எல்லைகளையும் மராட்டியர்கள்  அங்கீகரிப்பதாகத்  தெரிவிக்கப் பட்டது [9].  பதிலுக்குப் போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் வடபகுதியின் எல்லையை விரிவுபடுத்த முயல்வதில்லை எனவும் முடிவானது [9].

இந்த உடன்படிக்கை ஏற்பட்டதன் காரணங்கள் பற்பல [11] [13]. மராட்டியர்கள் வதாடியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் அவர்களது படைவீரர்களை மீட்டு மீண்டும் தங்கள் படையில் இணைத்துக் கொள்ள விரும்பினர். மராட்டியர்கள்  தாங்கள்  முன் நினைத்திருந்ததைப் போல கோவாவை விரைவான தாக்குதல் மூலம் கைப்பற்றி  விடலாம் என்பது இனி நிச்சயமற்ற நிலை என அறிந்திருந்தனர். அத்துடன் முதலில் திட்டமிட்டபடியே மராட்டியப் பேரரசின் தென் எல்லையை மட்டும் பாதுகாப்பதே போதுமானது என்ற முடிவுக்கும் வந்தனர். இதனால் தெற்கெல்லையில் போரைத் தொடர அவர்களுக்கு விருப்பம் இருக்கவில்லை. இந்த உடன்படிக்கையின் மூலம், இரு அரசுகளுக்கும் இடையே இருந்த மராட்டியர்களின் தெற்கெல்லை முழுதிலுமே   அமைதியான முறையில்  பாதுகாப்பினைப் பெற வழி கிடைக்கும் [11].

போர்ச்சுக்கீசியர்களின் கண்ணோட்டத்தில், பிக்கோலிம்மிலும் பேரினமிலும் ஏற்பட்டது போன்ற மக்களின் புரட்சிகரமான எழுச்சி விரைவில் மற்ற பகுதிகளுக்கும் பரவி, அந்தச் சூழ்நிலை மராட்டியர்களுக்கு ஆதரவாக மாறிவிடலாம் என்ற அதிகப்படியான அச்சம் இருந்தது. அத்துடன் அவர்களுக்கு மராட்டியர்கள் எல்லைப்பகுதியில் படைகளைக் குவித்து தங்களைப் பலப்படுத்திக் கொண்டிருப்பதும் தெரிந்திருந்தது . ஒரே சமயத்தில் மக்களின் எழுச்சிப் போராட்டமும், எல்லையிலிருக்கும் மராட்டியப் படைகளின் தாக்குதல்களும் நிகழ்ந்தால்  கோவாவின் வட பகுதி முழுமையையுமே மராட்டியர் வசம் இழக்க நேரிடலாம்.  அத்துடன் பான்ஞ்சிம் (Pangim) மற்றும் வாஸ்கோட காமா நகர்களின் பாதுகாப்பான நிலையும் கேள்விக்குறியாகிவிடும் என்பதும் போர்ச்சுக்கீசியர்களுக்குப் புரிந்திருந்தது [9] [11]. ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிகழ்ந்த பொழுதே மராட்டியர்களும் தங்களால் இப்ரம்பூரை எந்தவித  எதிர்ப்புமின்றி தாக்க முடியும் என்பதையும் போர்ச்சுக்கீசியர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர் [11].

ஒரு சில கோவா குடிமக்களுக்கு இந்த உடன்படிக்கை திருப்தி அளிக்கவில்லை. மராட்டிய எல்லையை விரிவுபடுத்தக் கிடைத்த வாய்ப்பு நழுவிப் போனது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஆனால் பெரும்பாலோருக்கு இந்த உடன்படிக்கை ஏற்பட்டது மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்தது. மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் ஏற்படும் உடன்படிக்கை மூலம் அமைதி நிலவிவிட்டால் தாங்கள் எதிர்கொள்ளும்  பாரபட்சமான நடவடிக்கைகள் தொடராது என இவர்கள் கருதினர் [2]. போர் கோவாவின் மக்களிடையே தோன்றிய எழுச்சியை நிறுத்தாவிட்டாலும் அதைத்  தீவிரமாகக் குறைத்தது. மேலும் மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே நிகழ்ந்த இந்தப் போராட்டம் போர் என்ற முறையில் வரலாற்றில் எங்குமே குறிப்பிடப் படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்குக்  காரணம் இருதரப்பினருமே தாங்கள் போர் நிகழ்த்துவதாக வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை.  ஆயினும் மராட்டியர்களும் போர்ச்சுக்கீசியர்களும் ஒருவரை ஒருவர் தாக்க, போருக்குத் தங்களைத் தயார் படுத்திய வண்ணமே இருந்தனர் [9].

பாரம்பரியச் சிறப்பு:
வரலாற்றுச் சிறப்பு — இந்தச் சிறப்பு மிக்க சமாதான உடன்படிக்கையின் காரணத்தினால் மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே நம்பிக்கையும் நல்லெண்ணமும் வளர்ந்தது. இதன் காரணமாகப் பின்னர் மராட்டியப் பேரரசு மிகவும் வலிமை நிறைந்ததாக இருந்த காலத்திலும் கோவாவை நோக்கித்  தனது  தெற்கு எல்லையை விரிவு படுத்த முயலவில்லை. இதனால் போர்ச்சுக்கீசியர்கள்  கட்டுப்பாட்டிலேயே கோவா தொடர்ந்து இருந்து வந்தது, பின்னர் இந்தியாவின் நடுவண் அரசின் ஒன்றிய ஆளுமைப் பகுதிகளில் ஒன்றாக1961 இல்  இணைத்துக் கொள்ளப்பட்டது [17]. தற்காலக் கோவா தனக்கென ஓர் அரசாங்கமும், கலாச்சாரமும் கொண்டு, தன்னுரிமைப் பெற்று இந்தியாவின் ஒன்றிய ஆளுமைப் பகுதியாக விளங்கி வருகிறது.

கலாச்சாரச் சிறப்பு — இந்தப் போர் மிகக் குறுகியது, இதன் தாக்கமும், போரின் இழப்புகளும், சேதங்களும் மிகக் குறைவு. இதன் காரணமாக வரலாற்று ஆசிரியர்களின் கவனத்தையோ, திரைப்படத் தயாரிப்பாளர்களின் கவனத்தையோ இது சற்றும் ஈர்க்கவில்லை.  1921 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபிராங்க் மெச்காலஸ் (Frank McCallus) எழுதிய புதினமொன்றில் விவரிக்கப்பட்ட இந்தியப் புரட்சி பற்றிய நிகழ்ச்சியில் பிக்கோலிம் போர் போன்ற நிகழ்ச்சிகளின் குறிப்பிடத்தக்கச் சாயல்கள்  உள்ளது [17]. மற்றொரு கோவாவின் எழுத்தாளர் விக்டர் டி’ ஸோசா 1958 இல் வெளியிட்ட ‘கோவாவில் வாழ்க்கை’ (Goan  Life, a Book by Victor D’ Souza) என்ற நூலில், கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவக் குடும்பம் ஒன்று மராட்டியப்  பேரரசின் மீது உள்ள தங்கள் பற்றுதலை விளக்கிக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.  பெரும்பாலும் இந்தக்  கதை பிக்கோலிம் போரினால் ஏற்பட்ட தாக்கத்தினால், அந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம் [17].




References:
[1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
[2] Thompson op cit. p 208.
[3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
[4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
[5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
[6] Thompson op cit. p 199.
[7] Thompson op cit. p 200.
[8] Thompson op cit. p 201.
[9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
[10] Thompson op cit. p 203.
[11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
[12] Thompson op cit. p 211.
[13] Thompson op cit. p 212.
[14] Thompson op cit. p 206.
[15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
[16] Thompson op cit. p 215.
[17] Thompson op cit. p 219.

Further reading
Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003
______________________________________

        எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
        மெய்ப்பொருள் காண்பது அறிவு

**என் குறிப்பு:
சிவாஜி பிறந்தது 1630 இல் என்பதையும், அவருக்கு அரசராக முடி சூட்டப்பட்டது அவரது 44 வயதில் (1674இல்) என்பதையும் கவனத்தில் கொள்க. இந்தக் கட்டுக்கதை குறிப்பிடும் காலத்தில் அவர் பதின்ம வயது சிறுவனாகக் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை.
______________________________________

Related Articles:
War is over: Imaginary ‘Bicholim Conflict’ page removed from Wikipedia after five years, Eric Pfeiffer, Yahoo! News Eric Pfeiffer, Yahoo! News January 4, 2013;   http://news.yahoo.com/blogs/sideshow/war-over-imaginary-bicholim-conflict-page-removed-wikipedia-234717353.html
A copy of the deleted Wikipedia’s Bicholim Conflict Article:  http://www.absoluteastronomy.com/topics/Bicholim_conflict

படம் உதவி:
Chapel of St. Catherine, built in Old Goa during the Portuguese occupation: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/aa/Churcholdgoa_%2864%29.JPG/450px-Churcholdgoa_%2864%29.JPG
Portuguese Goa: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/GoaConquistas.png/477px-GoaConquistas.png
அலோர்னா கோட்டை – http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

செய்தி ஆதாரம்:
http://www.dailydot.com/news/wikipedia-bicholim-conflict-hoax-deleted/
http://www.dailymail.co.uk/news/article-2257482/The-war-Wikipedia-fooled-years-Bicholim-Conflict-article-elaborate-4-500-word-hoax.html?ito=feeds-newsxml



நன்றி: வல்லமை
ஜனவரி 7, 2013;   மார்ச் 20, 2013;   ஏப்ரல் 3, 2013;   மே 7, 2013;   ஜூன் 7, 2013;   ஜூலை 12, 2013;   ஜூலை 19, 2013


#வரலாறு, #வரலாற்றில் பொய்கள், #வல்லமை, #Themozhi