Saturday, June 20, 2020

பாலம் ஏன் பாடியது?

பாலம் ஏன் பாடியது? 




சிவப்பு நிற  'கோல்டன் கேட் பிரிட்ஜ்' (golden gate bridge) என்ற பாலம் கலிபோர்னியாவின் புவியதிர்ச்சிகள்  ஏற்படக்கூடிய இடத்தில்  இருக்கும்  ஒரு தொங்கு பாலம் (suspension bridge). இது  நிலநடுக்க அசைவுகளைத் தாங்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  எளிய வடிவத் தொங்குபால அமைப்பு என்பது வரலாற்றில் மிகப் பழமையானது என்றாலும், இத்தகைய  தற்கால நவீனக் கட்டுமான அமைப்பில் செங்குத்தான கோபுரங்களுக்கு இடையில், பாலம் கிடைமட்டமாகத் தொங்கும் வகையில்  அமைக்கப்படும் தொங்குபாலங்களின் தோற்றம் சுமார் 1800களில் துவங்கியது. ஒரு மைல்  நீள இடைவெளி உள்ள  நீர்ப்பரப்பின் மேலே,  பசிபிக் கடலும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவும் இணையும் சந்திப்பில், சான்பிரான்சிஸ்கோ நகரையும் அதற்கு வடக்கே உள்ள மாரின் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது இந்தப் பாலம்.   இது அமெரிக்கத் தேசிய நெடுஞ்சாலை 101 என்பதன் ஒரு பகுதி. 


சற்றொப்ப நூறாண்டுகளுக்கு முன்னர் கோல்டன் கேட் பிரிட்ஜ் பாலத்தின் கட்டுமானம் துவக்கப்பட்டது.   'ஜோசப் ஸ்ட்ரவுஸ்' (Joseph Strauss) என்ற பொறியாளர்  தலைமையில் ஒரு பொறியாளர் குழு 1917 இல் கோல்டன் கேட் பிரிட்ஜ் (golden gate bridge) பாலத்தை வடிவமைத்தது. 1933 இல் பாலத்தின் கட்டுமானப்பணி தொடங்கி நான்காண்டுகளுக்குப் பிறகு முடிவடைந்தது;  மே 27, 1937இல் திறப்புவிழாவிலிருந்து  இது பயனில் உள்ளது. நாளொன்றுக்குச் சுமார் ஓர் இலட்சத்திற்கும்  மேலான எண்ணிக்கையில் மக்கள்  இதனைக் கடக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரத் தகவல். 

அமெரிக்க  சான்பிரான்சிஸ்கோ நகரின் அடையாளச் சின்னமாகக் கருதப்படும் சிறப்புப் பெற்றது இந்த கோல்டன் கேட் பிரிட்ஜ்.   இன்றைய நவீனக்  கைப்பேசி-இணையவழி காலத்தில், மக்கள் 'எமோஜி' (Emoji) என்ற பட முத்திரைகள்  உதவியுடன் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி சமூக வலைத்தளங்கள் உரையாடும்  ஒரு காலத்தில்,  அந்த எமோஜி வரிசையில் இரண்டு முறை இடம் பெற்றுவிட்டது இந்தப் பாலம்.  இத்தகைய சிறப்பு உலகின் வேறு எந்த நில அடையாளச் சின்னத்திற்கும் கிட்டவில்லை.   


விரல்விட்டு  எண்ணக்கூடிய அளவில்:   ஜப்பானின் ஃபுஜி மலை (🗻Mount Fuji, Japan); பிரான்சின் ஈஃபில் கோபுரம் (🗼Eiffel Tower, France), நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலை (🗽Statue of Liberty, New York), ஈஸ்டர் தீவின் மோவாய் சிலை (🗿 Moai of Easter Island), கஃபா என்னும் மக்கா நகர் பள்ளிவாசல் (🕋 Kaaba, Mosque in Mecca) ஆகிய இவை மட்டுமே "பயணம்-இடங்கள்" பிரிவின் எமோஜி படங்களாக இடம் பெற்றுள்ளன.  இந்தியா என்றால் அதைக் குறிக்கும் தாஜ்மகால் கூட எமோஜி அடையாளச் சின்னங்கள் வரிசையில் இடம் பெறவில்லை.  ஆனால்  கோல்டன் கேட் பிரிட்ஜ்  சின்னமோ, பாலம், பனி மூட்டம்,  இரவில் பாலம்,  பகற்பொழுதில் பாலம், சான்பிரான்சிஸ்கோ நகர்  என்று பல குறியீடுகளாகப்  பயன்படுத்தக் கூடிய  வகையில் இரு எமோஜிகளாக 🌉 - Bridge at Night Emoji (U+1F309) மற்றும்  🌁 - Foggy Emoji (U+1F301) ஆகக் கிடைக்கின்றன.  இதையும் விட மற்றொரு சிறப்பு அண்மையில் நடந்தது. ஒரு பெருங்காற்று வீசிய நாளில் இந்தப் பாலம் பாடியது!!!! ஆம், ஒரு பெரிய இசைக்கருவி போல இசை எழுப்பியது.  

பாலத்தை மேம்படுத்திப் புதுப்பிக்கும்  முயற்சியாக,  பாலத்தின் மேற்குப் பகுதியில் புதிய கைப்பிடி பலகைகள் பொருத்தப்பட்டு வருகின்றன.  புதிய கைப்பிடி வேலியின்  இரும்புப் பலகைகள்  பெருங்காற்று வீசுகையில் அதைத் தாக்குப் பிடிக்கும் நோக்கில் மாற்றப்படுகிறது.  அதற்காக முன்னர் இருந்ததைவிட இதன் சட்டங்கள் அகலத்தில் குறைவாக, காற்று எளிதில் அதிகத்  தடையின்றி ஊடுருவும்  வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பாலம்  காற்றின் வேகத்தைத்  தாங்கும் திறனை  அதிகரிக்கும் என்பது இந்த புதுப்பிக்கும் திட்டத்தின்  அடிப்படை நோக்கம்.   



கடலிலிருந்து காற்று நிலம் நோக்கி வீசினால் இந்தக் கைப்பிடியின் வழியே காற்று ஊடுருவிச் செல்லும்.  ஜூன் 5 ஆம் தேதி அன்று ஒரு பெருங்காற்று வீசிய பொழுது பாலம்  எழுப்பிய 'ஊ .. ஊ.. ஊ.. ஊ ..'  என்ற ஓர் ஒலி சான்பிரான்சிஸ்கோ நகர் முழுவதும் கேட்கப்பட்டதுடன்,  கிழக்கில் சான்பாப்லோ வளைகுடா பகுதியைக் கடந்து பெர்க்லி, ரிச்மாண்ட்  போன்ற நகர்களில் வாழும் மக்களும் கேட்டதாகப் பதிவாகியுள்ளது.  அன்று மேற்கு-வடமேற்குத் திசையிலிருந்து  காற்று 43 மைல் (43 mph) வேகத்தில் வீசியுள்ளதும் பதிவாகியுள்ளது. இந்தச் சுட்டியில் உள்ள காணொளியில் https://youtu.be/mP0P5_q1BJ4 பாலம் எழுப்பும் ஓசையைக் கேட்கலாம்.   இப்பொழுது ஒரு 75% புதிய  கைப்பிடிப் பலகை வேலிகள் பொருத்தும் பணி முடிந்துவிட்டன, வரும் நான்கைந்து ஆண்டுகளில் பணி முழுதும் நிறைவடைந்த பிறகு மேலும் அதிகத் தொலைவு உள்ளவரும் பாலம் பாடுவதைக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.  

இப்பொழுது காற்றின் வேகம் என்னவாக இருந்தால் இது போன்ற ஓசை எழும்பும் என்ற அறிவியல் நோக்கில்  கேள்விகளும் எழும்புகின்றன. இனி இந்தப் புதிய கைப்பிடிப் பலகை  சட்டங்களும் பாலத்துடன் பலகாலம் இருக்கப் போவதால், இது போன்ற மேலும் பல ஆய்வு கேள்விகளும் அவற்றுக்கான விடைகளும் கிடைத்தவண்ணம் இருக்கும். 



For more Info.Ref.: 
Rafi Letzter, What's causing a spooky hum to fill parts of San Francisco?, June 8, 2020, Live Science. 
https://www.livescience.com/golden-gate-bridge-hum.html

Wilson Walker, Hum, Baby! Golden Gate Bridge Now ‘Sings’ During High Wind, June 6, 2020, San Francisco Chronicle. 
https://sanfrancisco.cbslocal.com/2020/06/06/wind-baffles-on-golden-gate-bridge-creates-loud-humming-music-sound-heard-for-miles/ 

Video: SFO-Bridge Hums During High Wind: Video
https://youtu.be/mP0P5_q1BJ4

Golden Gate Bridge - Wind Tunnel Testing: Video 
https://youtu.be/PYS6Z3pbmsA


நன்றி: சிறகு 
ஜூன் 20, 2020


#அறிவியல், #சிறகு, #அமெரிக்கா, #Themozhi 




Saturday, June 6, 2020

பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்



கொரோனா தாக்கம்-பொதுமுடக்கக் காலத்தில் கோலிவுட் இயக்கம் இழந்து போன நிலையில், திரையரங்குகளில் வெளியிடப்படாமல் நேரடியாக ஓடிடி (Over-the-top media service) வெளியீடாக வந்திருக்கிறது "பொன்மகள் வந்தாள்" திரைப்படம்.  நூறாண்டுகளுக்கு முன்னர், "கீசக வதம்" என்ற ஒரு பேசாப்படத்துடன் ஆர். நடராஜ முதலியார் தயாரிப்பில் 1918ஆம் ஆண்டு தொடங்கியது  தமிழ்த்திரைப்பட வரலாறு. "பொன்மகள் வந்தாள்" திரைப்படம் இப்பொழுது திரையரங்க வெளியீடு என்பதே  இல்லாது வெளியாகியுள்ளது. இது தமிழ்ப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனை. தொலைத்தொடர்பு தொழில்நுட்பமும் கொரோனா பொதுமுடக்கக் காலமும் இத்திருப்புமுனையை ஏற்படுத்திக்  கொடுத்து,  வரலாற்றில் இப்படத்திற்குத் தனி இடத்தை அளித்துள்ளது. 

பொன்மகள் வந்தாள் என்ற  விஜய் தொலைக்காட்சியின் தொடர் விடைபெற்றுக்கொண்ட மிகச்சிறிய  இடைவெளியில் மீண்டும் அதே தலைப்பு ஓர் அலுப்பு, ஆனாலும் பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்  என்ற டி எம் எஸ் பாடிய பழைய பாடலைத்  தவிர்க்க முடியாமல் நினைவில் ஒலிக்கச் செய்வது தலைப்பின் ஒரு சிறப்பு.   மார்ச் 27-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்படத் தயாராக இருந்த இந்தப்படம்  பற்பலத் தடைகளைத் தாண்டி  29 மே 2020 அன்று  ஆமசான் பிரைம் வீடியோவின் வழியாக வெளியானது.  தமிழகத் திரைப்படத்தை  அது வெளியான அன்றே உலகின் மறுகோடியிலும் பார்க்க முடியும் வண்ணம் வெளியிடப்பட்டது  என்ற  நிலை   தனிச்சிறப்பு.  இனி திருட்டுக் காணொளிகளின் விற்பனைக்கு  மூடுவிழா அதிகத் தொலைவில் இல்லை  என்பதை இந்தத் திரைப்பட வெளியீட்டு முறை காட்டுகிறது. தென்னிந்தியத் திரைப்படச் சங்கமே இப்படி ஒரு வெளியீட்டு முறையைத் தங்கள் பொறுப்பில் ஏற்றால் திரைப்படத் துறை கலைஞர்களின் வாழ்வில் மாறுதல் கொண்டுவர அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் தேவை இருக்காது என்று தோன்றுகிறது.   சட்டப்படி படத்தை நேரடியாக இணையவழியில் குறைந்த விலையில் பார்க்க முடியும் என்றால் பெரும்பாலோர் அந்த வழியைத்தான் தேர்வு செய்வார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். 

அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ஃபிரெட்ரிக்  இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையில்,  சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் உருவாக்கத்தில்  வெளிவந்துள்ளது இப்படம். சுருக்கமாக, ஜோதிகா இல்லை என்றால் படம் இல்லை என்ற அளவிற்கு அவரது திறமைதான் படம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. ஜோதிகாவும் தனது உச்ச அளவு  நடிப்புத் திறமையை, நடிப்பு என்றே தெரியாத  வகையில் வெளிப்படுத்தியுள்ளார்.  கே. பாக்கியராஜ், பார்த்திபன்,  தியாகராஜன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் என்று 1980களில்  தமிழ்த் திரைப்பட உலகில் தோன்றி தங்கள் திறமைகளை நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் வெளிப்படுத்தியவர்களை  மீண்டும் திரையில் காண்பது ஒரு நிறைவு.  குளிருக்கு  இதமாகக் கணப்பு அருகில் அமர்ந்து கொண்டு 'என் இனிய பொன் நிலாவே' என்று பிரதாப் போத்தன் பாடும் காட்சி மூடுபனி நினைவலைகளை மீட்டி மனதுக்கும் இதமாகவே இருக்கிறது. உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டத் தெரியாது இயந்திரம் போன்ற முகபாவத்துடன் நடிக்கும்  தியாகராஜனுக்குப்  பொருந்தும் வகையில் அவர் ஓர் அழுத்தமான ஆள் என்று கூறி அவருக்கும்  ஏற்ற வகையில் ஒரு பாத்திரத்தைக் கொடுத்த இயக்குநர் பாராட்டப் பட  வேண்டியவர்தான். நீதிபதியின் நெடுநாள் நண்பராக வரும் பாண்டியராஜனுக்கு  மேலும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.  பார்த்திபனுக்கு  ஜோதிகாவுக்கு இணையாக, எதிர்க்கட்சி  வழக்கறிஞராகத் தனது  முத்திரையைப் பதித்துப் படத்தின் தரத்தை உயர்த்தும் பொறுப்பு.  அவருக்கு இது போன்ற நடிப்பு பெரிய காரியமே இல்லை என்பதை மீண்டும் காட்டியுள்ளார்.  பாக்கியராஜ் வழக்கறிஞர் வெண்பா என்ற பாத்திரத்தை ஏற்ற ஜோதிகாவின் வளர்ப்பு அப்பாவாக நடித்துள்ளார். அவரும் தன் பங்கைச் செவ்வனே  செய்துள்ளார் என்ற நிறைவைத் தருகிறார்.  

நடிப்பைப் பொருத்தவரை அனைவரும் நிறைவாகவே செய்துள்ளார்கள், வினோதினி வைத்தியநாதன் நன்றாக, மிக இயல்பாக நடித்தார் என்றாலும் அந்த இடத்தில் பாக்கியராஜுக்குத் துணைவியாக முந்தானை முடிச்சு திரைப்படப்  புகழ் ஊர்வசி நடித்திருந்தால் இன்னமும் நன்றாகவே இருந்திருக்கும் என்று தோன்றாமல் இல்லை.  படத்தில் மிகத் தேவையற்ற ஒரு திருப்புமுனையாக, நேர்மையான நீதிபதியாகக் காட்டிய பிரதாப் போத்தனின்  பாத்திரத்தைக் குலைத்து அவரும் குற்றங்களுக்குத் துணைபோகும் வகையில் கொலைகாரனிடம் பணப்பெட்டி வாங்கும் ஆளாக மாற்றியதுதான்.  அதனால் எதுவும் சாதிக்கப்படவில்லை என்பது ஒரு நெருடல்.  தரவுகளின் அடிப்படையில் சாட்சிகளின் அடிப்படையில்  நீதி சொல்ல வேண்டிய கடமைக்குள் கட்டுப்படுத்தப்படும் நீதிபதிகள் மீது நம்பிக்கை இழக்கும் வண்ணம் அந்தக் காட்சி அமைந்துவிட்டது. அதைத் தவிர்த்திருக்கலாம்.  

பாடல் காட்சிகள் மனதைக் கவர்ந்தாலும், குறிப்பாகத் தாயும் மகளும் அன்பு பாராட்டும் பாடற்காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் பாடல் எதுவும் மனதில் தங்கவில்லை. இசையமைப்பு, காட்சி அமைப்பு, படத்தொகுப்பு, ஊட்டியின்  இயற்கை அழகு படமாக்கப்பட்ட விதம் அனைத்தும் சிறப்பு. படம் தொய்வின்றி  நகர்த்தப்படுவதில் இயக்குநரின் திறமை மிளிர்கிறது.  ஓரிடத்திலும் சலிப்பு ஏற்பட்டது என்று கூறுவதற்கில்லை. 

படத்தின்  கதை  சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதைத் தடுக்கும் நோக்கில் ஒரு விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கில் அமைவது என்றாலும்,  பெண்களின் வாழ்க்கை எந்தெந்த வகையில் பாதிக்கப்படுகிறது என்பதைப் படத்தின் கதையமைப்பு  பல இடங்களில் சொல்லிச் செல்கிறது.  படத்தின் கதை:  காதலித்து  வேற்றுக் குலத்து  ஆண் ஒருவரைக் கைப்பிடிக்கும் சக்திஜோதி என்ற தமிழ்ப்பெண் ஆணவக் கொலையில் தன் கணவரை இழக்கிறார்.  கர்ப்பிணியான அவர் பிறக்கப் போகும் குழந்தையைக்  காப்பாற்றவும், தனது உயிருக்குத் தப்பியும்  வடநாட்டிற்கு ஓடுகிறார்.  மீண்டும் சிறுமியாக வளர்ந்துவிட்ட தனது மகளுடன் தமிழகம் திரும்பி ஊட்டியில் ஏதோ ஒரு பணியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வாழும் அந்த வாழ்விலும் அவருக்கு நிம்மதி நிலைக்கவில்லை.  மகளைப்  பாலியல்  வன்கொடுமைக்குப்  பறி கொடுக்கிறார்.  அந்தக் கொடியவர்கள் துரத்தும் பொழுது அவர்களை அவர்  கொலை செய்யவும் நேரிடுகிறது.  அரசியல்வாதியின் மகன்களான அவர்கள் பெரிய இடத்துப் பிள்ளைகள் என்பதால் அதிகார வர்க்கத்தின் சதியில் சிக்கிவிடுகிறார். அரசியல்வாதியின் தூண்டுதலால்  காவல்துறையால்  அவர் ஒரு  வடநாட்டு சைக்கோ ஜோதி என்று முத்திரை குத்தப்பட்டு, மற்ற சிறுமிகளின் கொலைப்பழியும் அவர்மீது சுமத்தப்பட்டு என்கவுண்டரில் அவர் கதை முடிக்கப்படுகிறது.  அவரைப்பற்றிய தடயங்களும்  உண்மைகளும் அத்தோடு மறைக்கப்படுகிறது.   இவ்வாறு சக்திஜோதியின் கதை பரபரப்பாகப் பேசப்படும் காலத்தில் அதை அறியக்கூட வழியின்றி அவரது அம்மா அவர் வீட்டிலிருந்து துரத்தப்பட்டு வேதாரண்யத்தில் ஏதோ ஒரு மடத்தில் உலகம் அறியாமல் முடங்கிய நிலையிலிருந்தார் என்று பின்னர் நீதிமன்றத்தில் அவர் சாட்சி சொல்கையில் தெரிய வருகிறது.  ஆகவே முடிவு: பெண்களுக்கு எங்கும், எந்த வயதிலும், எந்த வகையிலும் வாழ்க்கையில் பாதுகாப்பில்லை. அவர்களுக்குத் துயர்கள்  மட்டுமே தொடர்கதை. 

பதினைந்து ஆண்டுகள் கழித்து வடநாட்டு சைக்கோ கொலைகாரி என்று மக்களால்  வெறுக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று வழக்கை மீண்டும் துவக்குகிறார் பெட்டிஷன் பெத்துராஜாக நடிக்கும் பாக்கியராஜ். அவரது வளர்ப்பு மகள் வழக்கறிஞரான வெண்பாவின் முதல் வழக்கு அது.  புகழுக்காக வழக்கு மீண்டும் திறக்கப்படுவதாகக் கொதிக்கும்  பிள்ளைகளைப் பறிகொடுத்த  பெற்றோர்கள் நீதிமன்றத்தின் வாசலிலேயே வெண்பாவைத் தாக்குகிறார்கள்.  ஆனாலும் பொறுமையாக, உறுதியாக, நிதானமாகத் தனது தந்தை உதவியுடன் தரவுகளைத் துருவி எடுக்கிறார் வெண்பா.  தான்தான் குற்றம்சாட்டப்பட்டு என்கவுண்டரில்  காவல்துறையால் போட்டுத்தள்ளப்பட்டப்  பெண்ணின் மகள் என்று தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறுகிறார். தாய்மீது பொய்க் குற்றம் சாடப்பட்டது என்று நீதி கேட்கிறார்.  இதனால் விழித்துக் கொள்ளும் அரசியல்வாதி காவல்துறை நீதித்துறை என அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். பெரிய வழக்கறிஞர் வெண்பாவிற்கு எதிராக அமர்த்தப்படுகிறார். தாய் சக்திஜோதி காவல்துறையிடம்  சரணடைந்தார் என்ற உண்மை தெரிந்த காவல்துறை அதிகாரியும் தற்கொலை செய்து கொள்ளும்  சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.  ஒவ்வொரு வகையிலும் முடக்கப்படும் வெண்பா துவண்டு சோர்ந்து மீண்டும் மீண்டும் தந்தையின் ஆதரவினால் முயற்சியைத் தொடர்கிறார். எல்லாவகையிலும் தோல்வி என்ற நேரத்தில் அரசியல்வாதியின் பலவீனத்தைப் பயன்படுத்துகிறார். அந்தப் பெரிய மனிதர்  கௌரவம் மரியாதை போன்றவற்றை எதிர்பார்ப்பவர் என்ற உண்மையை  நேரடியாக ஒரு சந்திப்பின் மூலம்  அறிந்திருக்கும் வெண்பா அதைச்  சீண்டிவிட்டு, நடந்த  உண்மையை  அவர் வாயாலேயே  அகங்காரத்துடன்  வெளியிட வைத்துவிடுகிறார். 

இதில் இடையில் தற்கொலை செய்து கொள்ளும் அதிகாரியின் வீட்டில்  துக்கம் விசாரிக்கச் செல்லும் வெண்பாவிற்கு எதிராக அதிகாரியின் கைபேசியுடன் வீட்டுக் குழந்தைகள் விளையாடுகையில் அதன் திரையை எட்டிப் பார்க்கிறார், தாயின் கொலை குறித்த செய்திகளைத் தொகுத்து வைத்திருக்கும் புல்லட்டின் போர்டில் இருந்து, வெண்பா தோல்வியில் துவண்டிருக்கையில் ஒரு செய்தித்தாள் துண்டு  மட்டும் காற்றில் படபடத்துப் பறந்து கீழே வீழ்கிறது. அவற்றில் ஏதேனும் அவருக்குத் தடயங்கள் இருக்குமோ என நாம் தான் எதிர்பார்க்க நேரிடுகிறது.  ஆனால் கதையில் அப்படி ஒன்றும் இல்லை. இறுதியில் வெண்பா உண்மையில் சக்தி ஜோதியின் மகள் இல்லை, அவரால் காப்பாற்றப்படும் மற்றொரு பெண்ணான ஏஞ்சல் என்பவள் என்று பார்த்திபன் எப்படியோ கண்டு பிடித்துவிடுகிறார். ஆனால் இந்தத் திருப்பத்தால் என்ன சாதிக்கப்படுகிறது என்பதும் புரியவில்லை, கதைக்கு உதவாத மேலும் சில தேவையற்ற திருப்பங்கள் என்ற வகையில் அதற்கு மேல் மேற்கொண்டு  குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. வடநாட்டுக்  கொலைகாரர் கொள்ளைக்காரர் என்று எளிதில் மக்களின்  உணர்ச்சி தூண்டப்படுவதையும் படம் சுட்டிக் காட்டுகிறது. 

படத்தின் கருத்து  மீண்டும் மீண்டும் பலமுறை ஜோதிகாவின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டோருக்கான  இழப்பு என்பது ஒரு விளையாட்டல்ல, அவர்களுக்கு நீதி தேவை.  பாலியல் வன்கொடுமை செய்வது ஆண்களுக்குப் பொழுது போக்காக இருக்கலாம் ஆனால் அது பாதிக்கப்பட்டவருக்கு வாழ்நாள் முழுவதும் அது ஒரு தண்டனை. வாழ்நாள் முழுவதும் அவர்களது உறக்கத்திலும் கனவுகளாகத்  தொடரும் அச்சுறுத்தல்.  இறுதியில் வாய்மையே வெல்லும்,  ஆனால் அதற்கு இடையில்.. .. .. துயருற்றவர் மன உளைச்சலுக்கு என்னதான் வடிகால்? 

அண்மையில்   இந்துக்களையும்  தஞ்சை பெரியகோயிலையும்  அவமதித்தார் ஜோதிகா என்று காவி பிரிவினரால் ஒரு குற்றம் சாட்டப்பட்டது. ஜோதிகா கூறியவற்றைத்  திரித்துக் கூறி அவருக்குக்  குறி வைக்கப்பட்டது. அதனால் ஜோதிகா, சூரியா, நடிகர் சிவகுமார் குடும்பம் சமூக வலைத்தள அலப்பறையில் சிக்கியது.  மீண்டும் இந்தப் படம் வெளியானபிறகும் கூட ஒரு கூட்டம்  ஜோதிகாவையும் படத்தையும் நையாண்டி செய்து கொண்டிருக்கிறது என்பதும் யாவரும் அறிந்ததே.  அவர்களின் கவனத்திற்கு..  .. .. பெண் குழந்தைகளை ஒவ்வொருமுறையும் கட்டுப்படுத்தி அவர்களைத் தொடர்ந்து கண்டித்து  வளர்க்கும் பெற்றோர், ஆண் பிள்ளைகளை அவ்வாறு வளர்க்கத் தவறுவது ஏன்?  இதுதான் படத்தின்  இறுதியில் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் கருத்து.  இதைத்தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் 2014 ஆகஸ்ட் 15, சுதந்திரதினச் சிறப்புரையில் கூறினார்.  பிரதமர் முன் வைத்த ஒரு கருத்தை மக்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ள ஜோதிகா உண்மையில் பாராட்டப் பட வேண்டியவர் அல்லவா?  அதை அவர்கள் நினைவில் கொள்வார்களாக.  

படத்தின் இறுதியில் புள்ளிவிவரங்களுடன் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருப்பதாகக் கவலை தெரிவிக்கப் படுகிறது; குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் 3-ம் இடத்தில் இருப்பதாகத் தேசியக் குற்ற ஆவண அறிக்கை சொல்கிறது என்பதுதான் அது.  இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மைதானா என விகடன் ஆய்வு மேற்கொண்டு, "தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்"  தரவுகளின் அடிப்படையில்  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்ற ஒரு கட்டுரை வெளியிட்டது.  அது மேலும் அதிர்ச்சி தரும் தரும் தரவுகளை முன் வைக்கிறது. போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்ற வழக்குகளில் இந்தியாவில், நாளொன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற தகவலைக் கூறுகிறது விகடன் கட்டுரை.  அத்துடன்  இந்த ஊரடங்கு காலத்தில் குற்றங்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளதாகவும்  தெரிகிறது. உலக அளவில், ஆபாசப் படங்கள் அதிகம் பார்ப்பதில் இந்தியாதான் முதல் இடம் வகிக்கிறது என்பதும் இதற்குக் காரணம் என்று தெரியவருகிறது. 

ஆண்களுக்கு உடன் வாழும் பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்கும் மனப்பான்மையைப் பெற்றோர் முதன்மையாகக் கொள்ள வேண்டும்.  அந்த நிலை ஏற்படாவிட்டால் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை.  பெற்றோர் அனைவரும் குழந்தை வளர்ப்பு குறித்துப்  பாடம் கற்க வேண்டிய ஒரு படம் பொன்மகள் வந்தாள்.  



மேலும் தகவலுக்கு, பார்க்க: 
Take responsibility for sons: PM Narendra Modi on rising rape cases, PTI, Aug 15, 2014.
https://m.economictimes.com/news/politics-and-nation/take-responsibility-for-sons-pm-narendra-modi-on-rising-rape-cases/articleshow/40305367.cms

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்... `பொன்மகள் வந்தாள்' படம் சொல்லும் தரவுகள் உண்மைதானா?! விகடன்,  ஜூன் 1,  2020. 
https://www.vikatan.com/social-affairs/crime/is-the-data-on-crimes-against-children-that-showed-in-ponmagal-vandhal-movie-is-true


நன்றி: சிறகு
ஜூன் 6, 2020



#விமர்சனம், #சிறகு, #Themozhi