Saturday, December 25, 2021

ஈ.வெ.ரா. வின் கணிப்பில் “இனிவரும் உலகம்”

ஈ.வெ.ரா. வின் கணிப்பில் “இனிவரும் உலகம்”



‘பொதுநலமோ தியாகமோ பெருமைக்குரியதல்ல. பொதுவாழ்க்கையில் கிடைக்கும் திருப்தி என்பதும் சுயநலம்தான்’ என்று பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டே அதுகுறித்து வெளிப்படையாகக் கருத்துரைத்த ஈ.வெ.ரா. பெரியாரின் கருத்துகள் காலாவதியானவையா அல்லது காலம் கடந்து சிந்திக்கப் பட்டவையா என்று ஆராய்ந்து எடை போட உதவும் நூல்களுள் ஒன்று அவர் எழுதிய “இனிவரும் உலகம்” என்ற நூல். விற்பனையில் கலை கட்டிக்கொண்டிருந்த அவரது கழகத் தோழர்கள் கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா ஆகியோரின் திரை வசன நூல்களை அச்சிட்ட முறை போலத்தான் இந்த நூலின் அமைப்பும் அமைந்துள்ளது. ஈரோடு குடி அரசு பதிப்பகம் மூலம் 1961 ஆம் ஆண்டு ஆறாம் பதிப்பாக 15 காசுக்கு வெளியிடப்பட்ட இந்நூலின் படி ஒன்று தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகச் சேமிப்பில் கிடைக்கிறது.

திராவிட இயக்கக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரோ, அல்லது தொடர்வண்டி பேருந்து போன்றவற்றுக்குக் காத்திருக்கும் வேளையிலோ சற்றொப்ப பத்து மணித்துளிகளுக்குள் படித்து முடித்துவிடக் கூடிய ஒரு நீண்ட கட்டுரைதான் “இனிவரும் உலகம்” என்ற தலைப்பில் ஈ.வெ.ரா. எழுதிய அளவில் சிறிய நூல். திராவிட இயக்கப் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கொண்டு, ஒரு பொருண்மையின் கீழ் ஒருசிலக் கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பித்து, பலரைச் சென்றடையும் நோக்கில் வெளியிடப்பட்ட அக்காலத்து ஒரு பரப்புரை நூல் வடிவில் அமைந்துள்ள இந்த நூலில் நான்கு பக்க முன்னுரையும் உட்பட நூலின் மொத்தப் பக்கங்கள் 20, பக்கத்திற்குச் சுமார் 115 சொற்களாக 2300 சொற்களில் அடங்கிவிடக்கூடிய ஒரு நெடிய கட்டுரையாக நூல் அமைந்துள்ளது. இன்றைய சமூகவலைத்தளப் பயனர்களுக்கு விளங்கும்படி சொல்ல வேண்டும் என்றால் ஒரு நிமிட வாசிப்பு கொண்டவையாக 10 பதிவுகளில் நீளும் ஒரு கட்டுரைதான் இனிவரும் உலகம் எப்படி இருக்கும் என்று பெரியார் கணித்த கணிப்பைத் தொகுக்கிறது.

உண்மையைச் சொல்லப்போனால், 19 ஆம் நூற்றாண்டில் பிறந்து 20 ஆம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்து முடித்த காலத்தில் இருந்த தொழில் நுட்பத்தை மீளாய்வு செய்தால் இவரால் எப்படி இவ்வாறு சிந்திக்க முடிந்தது என்று ஈ.வெ.ரா. வியக்கவைக்கிறார்.

எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு முறை எப்படி மாறும் அவர் கூறியவற்றில் சில கீழே:
    ▪️ போக்குவரவு எங்கும் ஆகாயவிமானமும் அதிவேகச் சாதனமுமாகவே இருக்கும்.
    ▪️ கம்பியில்லாத் தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.
    ▪️ ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
    ▪️ உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்கச் சவுகரியம் ஏற்படும். (பக்கம்: 17)

கையில் உள்ள திறன்பேசி இல்லாமல் வாழத் தெரியாத நடைமுறையில் இன்று நாமிருக்கும் நிலையையும், அது தரும் வசதிகளையும், பொதுமுடக்கக் காலத்தில் இணையவழி கற்றல், கலந்துரையாடல் என்ற முறைக்கு நாம் மாறிவிட்ட நிலையையும் சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சொல்லிவிட்டார் என்பதைக் கணக்கில் கொண்டால் அவர் கணிப்புகள் ஐயத்திற்கு இடமின்றிக் காலத்தைக் கடந்தவைதான்.

மனித வாழ்க்கையில் அறிவியல் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களாக அவர் குறிப்பவை: நீண்ட மனித ஆயுள், சோதனைக்குழாய் கருத்தரிப்பு-குழந்தை, குறைந்த அளவு மக்கட் தொகை நோக்கில் உலகில் ஏற்படும் மாற்றம். இந்தியாவே அந்த மக்கள்தொகை நகர்வை எட்டிவிட்டது. இப்பொழுது இந்தியப் பெண்ணொருத்திக்கு இரு குழந்தைகள் மட்டுமே இருப்பதாக அண்மைய புள்ளிவிவரம் சொல்கிறது. அவர் சொற்களிலேயே கீழே அவர் கருத்து கொடுக்கப்படுகிறது.

    ▪️ மனிதனுடைய “ஆயுள் நூறு” ஆண்டு என்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.
    ▪️ பிள்ளைப்பேற்றுக்கு ஆண்பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும் காத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை ‘இன்செக்க்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.
    ▪️ மக்கள் பிறப்புக் கட்டுப்படுத்தப்பட்டு ஓர் அளவுக்குள் கொண்டுவந்துவிடக்கூடும்.(பக்கம்: 18)

சமூக நோக்கில் மக்களின் வேலை, அதன் தேவை, அதற்கான ஊதியம், கிரிப்டோ கரன்சி முறை பொருளாதாரம் அவை மனித வாழ்வில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள், பெண்கள் வாழ்வில் அவை எத்தகைய முன்னேற்றத்தைக் கொண்டுவரலாம் என்று அவர் கணிப்பதை அடுத்ததாகக் காணலாம்.

    ▪️ ஏன் பிறக்கவேண்டும்? சகல சவுகரியங்களுமுள்ள இப்பரந்த உலகில் உணவுக்காக என்று ஒருவன் ஏன் பாடுபடவேண்டும்? ஏன் சாகவேண்டும்? என்கின்ற பிரச்சினைகள் சிந்தனைக்கு மயக்கமளித்து வந்து சிக்கலான பிரச்சினைகளாக இருந்தவை இன்று தெளிவாக்கப்பட்டுப் பரிகாரம் தேடப்பட்டும் வருகிற காலம் நடக்கிறது. இந்தப் போக்குச் சீக்கிரத்தில் மக்களின் பொதுவாழ்விலேயே பெரியதொரு புரட்சியை உண்டாக்கும்படியான புதிய உலகத்தை உண்டாக்கித்தான் தீரும். அப்போதுதான் நான் முன் சொன்ன பணம், காசு என்ற உலோக நாணயமே இருக்காது. அரச ஆட்சி இருக்காது. கடினமான உழைப்பு என்பது இருக்காது. இழிவான வேலை என்பது இருக்காது. அடிமைத் தன்மை இருக்காது. ஒருவரை ஒருவர் நம்பிக்கொண்டு வாழவேண்டிய அவசியம் இருக்காது. பெண்களுக்குக் காவல் கட்டுப் பாடு, பாதுகாப்பு என்பவையான அவசியம் இருக்காது.(பக்கம்: 9)

    ▪️ வாழ்வுக்காக எப்படி எப்படி உழைப்பது என்கின்ற கவலையும், முயற்சியும் மிகச்சிறிய அளவுக்கு வந்துவிடும். சுகம் பெறுவதிலும், போக போக்கியமடைவதிலும், நீண்ட நாள் வாழ்வதிலும், ஆராய்ச்சியும் முயற்சியும் வளர்ந்து கொண்டே போகும். மக்களின் தேவைகள் எவ்வளவு வளர்ந்தாலும், அவற்றை உற்பத்தி செய்வதற்காக மனிதன் செலவழிக்க வேண்டிய நேரம், மிகமிகக் குறைவாகவே இருக்கும். (பக்கம்: 11)

   ▪️ புதிய உலகத்தில் மோட்ச நரகத்திற்கு இடம் இருக்காது. நன்மை தீமை செய்ய இடமிருந்தால் தானே மோட்சமும், நரகமும் வேண்டும்; எவருக்கும் யாருடைய நன்மையும் தேவை இருக்காது. புத்திக்கோளாறு இருந்தால் ஒழிய ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்யமாட்டான். ஒழுக்கக்கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில் மோட்ச நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது?(பக்கம்: 21)

சுருக்கமாக அவர் பார்வையில், கடின உழைப்போ மனிதர்களின் தன்மானத்தை இழிவுபடுத்தக் கூடிய வேலைகளோ வழக்கொழிந்துவிடும். இன்று இழிவாகக் கருதப்படும் வேலைகள் கருவிகளின் துணையுடன் முடிக்கப் பெறும். மக்கள் வேலை செய்யும் நோக்கம் உடற்பயிற்சிக்காக என்ற முறையில் மாறும். எனவே அவர்கள் உழைப்பில் கொள்ளும் ஆர்வமும் அதை நோக்கி இருக்கும். அதிசயப் பொருளும், அற்புதக்காட்சிகளும், அவற்றின் அனுபவங்களும் அனைத்து மக்களும் ஒன்றுபோல் அனுபவிப்பார்கள். முடியாட்சி மறைந்துவிடும். குற்றம் நிகழ்ந்தால் அதற்கான காரணம் உளவியல் கோணத்தில் மனநோய் பிழற்சியால் நேரும் என்கிறார்.

இந்தியர்கள் அறிவியலில் பின்தங்கியிருந்த கடந்த கால நிலைக்கு அவர்களது கல்வியில் பிழையையும் தேவைக்கு உதவாத தரக்குறைவான பாடத்திட்டங்களையும் காரணமாகக் காட்டுகிறார். “மக்களுக்கு அறிவு வளர்க்க வேண்டிய பாடத்திட்டங்களின் குறையினால் மக்கள் புதுமை, முற்போக்கு போன்ற சிந்தனைகள் இன்றி வாழ்கிறார்கள். பழையவற்றை ஏற்ற அளவுக்கும் நற்பயன் தரவேண்டிய அளவுக்கும் பயன்கொள்ள வேண்டியது தேவை என்றாலும்; புதியவற்றில் முயற்சியும் ஆராய்வதில் ஆர்வமும் இருக்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில் அவற்றினால் தான் இயற்கையைப் படிப்பது என்பதோடு புதியவற்றைக் கண்டு பிடிப்பதும் முற்போக்கு அடைவதும் (இன்வென்ஷன், ப்ராக்ரஸ்) சுலபத்தில் சாத்தியமாகலாம்” என்கிறார்.

இந்த மாற்றங்களை எளிதில் அடைய முடியுமா என்று சிந்திக்கும் ஈ.வெ.ரா. மாற்றத்தைத் தடைபடுத்த ஏற்படக் கூடிய இருவகை முட்டுக்கட்டைகளைச் சுட்டிக் காட்டுகிறார். பழமை மாறாது இருந்தால் ஆதாயம் அடையக்கூடிய தன்னலவாதிகளும், அவர்களின் சூழ்ச்சியான எண்ணத்தைப் புரிந்து கொள்ளும் திறனற்ற அறிவற்றவர்களும் புதிய வகை மாற்றங்களைத் தடுக்க முயல்வது இயல்பாக நிகழும். இந்த இரண்டு பெரிய எதிரிகளையும் கண்டு கலங்காமல் மனித முன்னேற்றத்திற்கான கடமையை முன்னெடுப்பவரே இனிவரும் புதிய உலகை வடிக்கும் உலகச் சிற்பிகளாக முடியும் என்பது ஈ.வெ.ரா.வின் ‘இனிவரும் உலகம்’  நூல் கொடுக்கும் அறிவுரை.



நூல் விவரம்:
இனி வரும் உலகம்: பெரியார் ஈ.வெ.ரா.
குடி அரசு பதிப்பகம், ஈரோடு
ஆறாம் பதிப்பு - 1961
தமிழன் அச்சகம், ஈரோடு.
விலை: 15 காசு


நன்றி: சிறகு
டிசம்பர் 25, 2021



#சிறகு, #நூல் மதிப்புரை, #Themozhi  





Saturday, December 11, 2021

தமிழவன் எழுதிய ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’

தமிழவன் எழுதிய ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’


இரயில் பயணங்களில், கைப்பேசியில் முகம் கவிழ்க்காமல் அருகில் உள்ளவர்களைக் கவனித்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வுமுறையையும் புரிந்து கொள்ளும் முறை என்பது கடந்த காலம். அந்தக் கடந்த காலக் கட்டமைப்பில் இரயில் பயணிகள் இருவரின் அறிமுகத்தைத் தருகிறது தமிழவன் எழுதிய ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள முதல் கதையான ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’ என்ற சிறுகதை.

தொடர்வண்டிப் பயணங்களில் பொழுதைக் கழிக்கும் இராமநாதன், முதிய வயதில் உறவுகள் யாரும் இன்றி, மனதில் தோன்றும் பொழுது கோவைக்கும் பாலக்காட்டுக்கும் எனக் காரணம் ஏதுமின்றி பயணித்து, இயற்கை அழகையும் மக்களையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மனம் போன போக்கில் வாழும் ஓர் ஓய்வுபெற்ற தத்துவப் பேராசிரியர்.

ஒரு பயணத்தில் அவருடன் பயணிக்கிறார் ஜார்ஜ் மேயர் என்ற ஒரு வெள்ளைக்காரப் பேராசிரியர். ஆய்வு செய்து எதையும் தெரிந்து கொள்வதில் தனக்கு மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறும் ஜார்ஜ் மேயரின் மனநிலையை, அவர் விவரிக்கும் அந்த மகிழ்ச்சியை, அப்பண்பில் தோய்ந்தவர்களால் மட்டுமே உணர முடியும். அவர் இந்திய வரலாற்றை ஆய்வு செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பவர்.

இருவருக்கும் நடக்கும் உரையாடலில் தமிழர்களின் முற்காலக் குடும்ப வரலாற்று அறிவு என்பது குறுகியது. அவர்களின் தந்தையார் பாட்டனார் தலைமுறைகளுக்கு மேல் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் குடும்ப வரலாற்று அறிவு அவ்வளவுதான் என்பதைப் புரிந்து கொள்கிறார் ஜார்ஜ் மேயர், “உங்கள் அறிவு மூன்று தலைமுறை வரை மட்டுமே விரிந்தது. அதற்கு முன்பும் யாரைப் பற்றியும் ஒன்றும் தெரியாது” என்று வியக்கிறார். அத்துடன், இந்தியாவின் பழமையான தொல் வரலாறாக அறியப்படுவது எல்லாம், மக்கள் நினைவில் கடத்தப்படும் ஓர் இனத்தின் கூட்டு வரலாறு, அதுவே வரலாறாக இலக்கியங்களில் பதியப்பட்ட வரலாறு என்பதையும் ஜார்ஜ் மேயர் புரிந்து கொள்கிறார்.

தனி மனித, குல வரலாறுகள் மூன்று தலைமுறைக்கு மேல் கடத்தப்படுவதற்கு ஒருவர் வாழ்க்கை தனித்துவமாக அறியப்படும் நிலையில் இருக்க வேண்டும் என்பதைத் தமிழர்கள் கருதுவார்கள் என்பதும், மாறாக வரலாறு என்று ஆவணப்படுத்துவதில் மேலை நாட்டவர்க்கு வேறு கோணம் உள்ளது என்பதையும் இருவரும் உணர்ந்து மௌனமானார்கள் என்பதை இருவரின் உரையாடல் முற்றுப்பெற்று மௌனம் குடிகொண்டதன் மூலம் உணரலாம்.

எவரும் தனது மூதாதையர் வாழ்வு முறை வரலாறு குறித்து ஆராய்ந்தாலே பாரம்பரிய வரலாறு என்பது உருவாகும். ஆனால் தமிழர்கள் தங்களின் நடைமுறை வாழ்விற்கு அத்தேடலில் மூலம் ஆதாயம் எதுவும் கிட்டாது என்றால், தங்கள் முன்னோர் வரலாற்றை அறிந்து கொள்வதில் அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள் என்பதுதான் உண்மை. எல்லோருக்கும் தங்கள் பரம்பரை எந்தவகையில் ‘ஆண்ட பரம்பரை’ என்று ஆய்வதில் உள்ள இன்றைய அக்கறை இத்தகைய ஆதாயம் தேடும் ஓர் ஆய்வே, அவர்கள் வரலாற்றுக்குத் தரும் மதிப்பின் இப்பின்னணியில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

‘தனிமனிதர்களின் வாழ்வை அணுகும் முறை’ இருபண்பாடுகளிலும் வேறு வேறு என்பதை உலகின் கிழக்கு மற்றும் மேற்கு என்ற இரு பண்பாட்டிலும் வாழ்ந்தவர்களால் தெளிவாக அறியமுடியும். இதுவே இச்சிறுகதையின் மையக்கருத்தாக எடுத்தாளப்பட்டுள்ளது என்று கருதலாம். ஆனால் நம் நாட்டிலோ தெளிவாகத் தெரிந்திராத அந்தப் பாரம்பரியம் என்பதன் மேல்தான் சாதிக் கட்டுப்பாடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் ஒரு நகைமுரண். இதை நேரடியாகச் சுட்டிக்காட்டாமல் மௌனம் காப்பது நல்லது என்று வரலாற்று ஆய்வாளர் ஜார்ஜ் மேயர் மௌனம் காக்க முடிவெடுத்தார் என்று வாசிப்பவர் கோணமாக எடுத்துக் கொள்ள நேர்வது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. கதை இறுதியில் உரையாடுபவர்கள் இடையே ஏற்படுவதாகச் சுட்டப்படும் அந்த மௌனம் உண்மையை வெளிப்படையாகச் சுட்டாத பொருள் பொதிந்த மௌனம். ஆகவே பாரம்பரியம் என்று நம் மக்கள் பேசுவது பேசுவது எத்தகைய வெற்றுப் பேச்சு என்பது கசப்பான ஓர் உண்மைதான்.

சாதாரண மக்கள் குறித்தும் அவர்கள் வாழ்வியல் முறைகள் குறித்தும் நம்முடைய இலக்கியங்களில் வரலாற்றில் வெற்றிடங்கள் மிகுதி ஏன் என்பதை நினைவுபடுத்தும் சிறுகதை இது.



தமிழவன் – உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?
http://tamizhavan.com/blog/?paged=5&author=1



நன்றி: சிறகு
டிசம்பர் 11, 2021



#சிறகு, #திறனாய்வு, #Themozhi



Thursday, November 25, 2021

Nature as a Teacher

Dr. Jothi S. Themozhi

Did poets perceive their works as inspirations of nature in ancient Tamil Nadu? This concept is best illustrated by a Sangam Classical Tamil poem from Puranānūru. Classical Sangam literature deals with love, war, governance, trade and bereavement of ancient Tamils. Learning how to approach life was also addressed in few poems; in Puranānūru, most of these musings are clustered between 182–194 songs. Few other mentions, however, can be found outside this categorical boundary. These poems fall under Thinai: ‘Pothuviyal’ (that means: the concept is global, and applicable to people everywhere) and Thurai: ‘Porunmozhi Kanji’ classification (that means: giving the essence of things of living, inspiring noble ideas, often the philosophical thoughts about life and advising on better ways to handle one’s living in ever-changing nature of life).

Of those poems one philosophical idea, one poem particularly attracts attention and is frequently quoted to portray characteristics of Tamil’s culture around the world. That poem is “Yādhum ūrē Yāvarum Kēlir” (which means: ‘To us, all villages are one, all people our kin’). This 192nd poem of Puranānūru) was written by Kaniyan Pūngundranār about some 2, 000 years ago.

This ancient poem has surprising modern day political history attached to it. This poem is oft cited at the United Nations in order to project thousands of years of vibrant Indian culture and its admirable history of the universality of all humans. G. G. Ponnambalam concluded his 1966 address to the 21st Session of the United Nations General Assembly by invoking this quote. Former President of India, Dr. A. P. J. Abdul Kalam, quoted this poem during his Historical Speech at European Union, and more recently by Indian Prime Minister, Narendra Modi quoted it in 74th Session of the United Nations General Assembly.

Although this poem’s first line is cited to describe the broadmindedness of ancient Tamil people, the rest of the poem exposes ancient Tamil’s philosophical contribution to the society. The verses consists of 13 lines and explains that people understand life happens, and many things not under our control, which is an inherent part of nature. Since the Tamil poets understood this fact from their fore parents, they should neither judge people based on their status in life nor discriminate them. Because of their understanding, they consider all people in the world are their relatives and that all lands are their countries.

In a nutshell, the poem describes people who received enlightenment about the nature of living; neither the suffering nor the comfort can change their attitude towards the life, and they will not discriminate people or places. They are never awed by those who are great and do not despise those who are vulnerable. They understand that experiences we encounter, either evil or good, are a part of living, and they cannot attribute them to others’ act. They are aware that death is part of the life we live, and experiencing sadness and feeling rejoice also part of life. Because this attitude, they do not feel miserable or complain about the hardship of life. The reason behind this approach is due to their understanding that, whatever happens is part of living and we do not have much control over that. These are many fine traits of nobility and wisdom, and those who aware how nature leads the way and find bliss.

The essence of this poem, we can narrow it down to the following lines that explains that:

mallal pēriyāṟṟu

nīrvaḻip paṭū’um puṇaipōl āruyir

muṟai vaḻip paṭū’um

(Kaniyan Pūngundran, Puranānūru — 192)

“This much-praised life of ours a fragile raft

Borne down the waters of some mountain stream

That o’er huge boulders roaring seeks the plain

Tho’ storms with lightning’s flash from darkened skies

Descend, the raft goes on as fates ordain

(Adapted from translation by G. U. Pope, 1906)

Comparing life to a journey by boat through waterways is a metaphor used in many modern Tamil literary works. People recite them without realizing that this comparison has a place in ancient scribes.

How did the poets see their work as inspiration from nature in ancient Tamil land? The basic premise lies in the concept of Nature as Teacher. In fact, Nature is a preacher and theologian. Though Nature has given us everything, human beings do not recognize its value.

“That’s life.” This familiar statement implies that the circumstances must be accepted as part of life, in which problems and inconveniences are inevitable. “That’s life” is an expression of our acceptance of a situation, however difficult it is. We may hear this statement many times, but only people say “that’s life” after an unlucky or unpleasant event or about an unpleasant fact to show that they realize such things are part of life and must be accepted. But wise people understood this fact under any circumstances, pleasant or sorrowful.

There are quite a few non-theistic (Nāstika) religions like Jainism, Buddhism, Ājīvika, Cārvāka (also known as Lokāyata) schools of the Indian philosophies that were practiced by ancient Tamils. These religious philosophies emerged in India about the same time as Buddhism. They have a common ground as they were in anti-Vedic philosophy; they reject the authority of sacred scriptures of Vedas of Brahmanism. Many of them did not survive brutal treatment of Brahmanism, but still Buddhism (0.7%) and Jainism (0.4%) practiced by a very few Indians.

Many researchers conclude that Porunmozhi Kanji Thurai songs are written by poets who were described as philosophies of non-theistic religions. Their ideas were from these non-theistic religious concepts, especially “Yādhum ūrē Yāvarum Kēlir” poem and its’ reference to way of living is from philosophies of Charvaka school of thoughts, that considers nature as the teacher. The condensed ideas stating the nature of the world, which is widely practiced in the world and how the world functions. The teaching can be narrowed simply to, sticking to moral principles, and understands that this life is to live.

Of the above-mentioned non-theistic religions, the Cārvāka school of philosophy rejects ritualism, supernatural concepts like God and soul, and metaphysical concepts like afterlife, rebirth, reincarnation, paradise and hell. The essential tenets of the philosophy were:

- Direct perception is the only means of establishing and accepting any truth

- What cannot be perceived and understood by the senses does not exist

- All that exists are the observable elements of air, earth, fire, and water

- The ultimate good in life is pleasure; the only evil is pain

- Pursuing pleasure and avoiding pain is the sole purpose of human existence

- Religion is an invention of the strong and clever who prey on the weak

We can observe that, generally, the concepts dealt with in poems of Porunmozhi Kanji Thurai are: wise people who will give up their lives for fame, but will not accept fame if it comes with dishonor and with noble virtues. They understand that the need for a measure of food to eat and two sets of clothes, thus they consider the purpose of wealth is charity. Also, noble people who consider virtue as their principle and live for that, and are wise and have self-control. The principles are constructed on the ideal of simple ethical humanity.


About the Author:

Dr. Themozhi, a native of Trichy, writes short stories, essays, translation essays, science essays, research essays and poems. She has published 9 books so far, and contributed as editor for two online magazines. She holds a PhD in Public Administration and previously worked as a Program Evaluator for a State Agency of Oklahoma. She lived in the United States for the past 35 years and is currently living in California with her family.

Thanks: 
Cenkantal
Nov 25, 2021
Nature as a Teacher
https://medium.com/cenkantal/nature-as-a-teacher-e4b93c29483a

#Cenkantal, #English, #Themozhi

Sunday, November 21, 2021

இந்தியாவின் மிகப்பெரும் உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்

இந்தியாவின் மிகப்பெரும் உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்

 


இந்திய எழுத்தாளர்களில் முதலாவதாக புக்கர் பரிசு வென்ற முற்போக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய “வாக்கிங் வித்  காம்ரேட்ஸ்” (Walking with the comrades) என்ற நூல் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்புக்குரிய நூலாக 2017 ஆம் ஆண்டு முதல் பாடத்திட்டத்திலிருந்தது.  ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்பான ஏ.பி.வி.பி. என்கிற மாணவர் அமைப்பு,  இந்த நூலில் நக்சலைட்கள் தொடர்பான கருத்துகள் இருப்பதற்காக எதிர்ப்பு தெரிவித்துக்  கொடுத்த புகாரின் பேரில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணி தன்னிச்சையாக நூலை அந்தப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கி விட்டு, அந்த நீக்கத்தை முறைப்படி உறுதிப்படுத்த, பாடத்திட்டக் குழுவினரைக் கூட்டி இருக்கும் செய்தி நவம்பர் 12, 2020 அன்று ஊடகங்களில் வெளியானது.  

இவ்வாறு இந்தநூல் நீக்கப்பட்டது  பல்கலைக்கழகச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல், அதை அனுமதிக்க முடியாது என்றும்,  மீண்டும் பாடத்திட்டத்தில் அந்நூலைச் சேர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உட்பட,  கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப்  பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

நூலின் ஆசிரியர் அருந்ததி ராய்  இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியையோ வியப்பையோ அளிக்கவில்லை என்று கூறினார். மேலும், எழுதுவது மட்டுமே எழுத்தாளர் ஒருவரின் கடமை.  ஒரு நூலைத் தடை செய்வதாலோ அல்லது நீக்கப்படுவதாலோ அது மக்களால் படிக்கப்படாமல் இருக்கப் போவதில்லை என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.   அருந்ததி ராய் எழுத்துப் பணியுடன் ஒரு சமூக சேவகராகவும் அறியப்படுபவர். இவரது  'காட் ஆப் ஸ்மால் திங்ஸ்' இன்றளவும் விறுவிறுப்பான விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு நூல்களைத் தடை செய்வது ஒருவகையில் நூல்களுக்குக் கொடுக்கப்படும் செலவில்லாத  விளம்பரமாக மாறிவிடுகிறது என்பதுதான் உண்மை. அதுவரை அந்த நூல் குறித்து அக்கறை காட்டாதவரும் கூட, அவ்வாறு தடை செய்யும் அளவிற்கு அந்த நூலில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆர்வத்துடன் படிப்பர். அது போன்றதொரு ஆர்வத்தில் படிக்கப்பட்டதுதான் இந்த நூலும்.  

இந்தியாவின் மத்தியக் கிழக்குப் பகுதி மாநிலங்களில் பரவியிருக்கும் தண்டகாரண்யா என்ற காட்டுப் பகுதியின் பழங்குடியினர் தங்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதையும்,  உரிமைகள் மறுக்கப்படுவதையும் எதிர்த்து மாவோயிஸ்ட் கொள்கையை ஆதரிப்பவர்களாக மாறியதுடன்  அவர்களது உரிமையை நிலைநாட்ட அரசை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.  இது குறித்து பழங்குடியினருக்கு எதிரான ஒருபக்கச்  சார்பான பார்வை நாட்டில் நிலவிய நேரத்தில், நேரடியாக அவர்கள் வாழும் காட்டிற்குள் பயணம் சென்று, கள ஆய்வு மேற்கொண்டு அவர்கள் தரப்பு நியாயத்தை இந்த நூல் மூலம் வெளிக்கொண்டு வந்தார் அருந்ததி ராய். 

அருந்ததி ராய் பலமாதங்கள் காத்திருந்து, பழங்குடியினர் தந்த ஒப்புதல் பேரில் சத்தீஸ்கர் மாநிலத்தின் தந்தேவாடா பகுதிக்கு வருமாறு கிடைத்த அவர்களது அழைப்பை ஏற்று அங்குச் சென்று அவர்களைச் சந்திக்கிறார். காடுமேடெல்லாம் அவர்களுடன் பயணித்து, அவர்களது "பூம்கால்" விழாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்திலும், இரவு முழுவதும் நடைபெறும்  பழங்குடியினர் கொண்டாட்டத்தின் கலைநிகழ்ச்சிகளிலும்  பங்கேற்று, அவர்களில் ஒருவராக அவர்களது உணவை உண்டு, அவர்களுடன் உறவாடி, இரவில் காட்டில் வெட்டவெளியில் உள்ள அவர்களது  முகாம்களில்  உறங்கி, களப்பயணம் செய்து, அவர்களை நேர்காணல்கள் செய்து பழங்குடியினர் குறித்து தாம் கண்டறிந்தவற்றை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் அருந்ததி ராய். 

தண்டகாரண்யா பகுதி மாவோயிஸ்ட்கள் 1980 ஆண்டு முதற்கொண்டு, அரசின் வனத்துறையால் பழங்குடியினருக்கு நிகழ்ந்த அநீதிகளை எதிர்த்துப் போராடியவர்கள். பழங்குடியினரை அடிமைகளாக நடத்திய வனத் துறையினரை மாவோயிஸ்ட்கள்  எதிர்த்தனர். பழங்குடியினரின் விளை பொருட்களைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்துவந்த ஒப்பந்தக்காரர்களிடம் பேரம் பேசி பழங்குடி மக்களுக்கு நல்ல விலை பெற்றுத் தந்தனர். அதனால் அவர்கள் பழங்குடியினரிடம்  பெற்ற நன்மதிப்பு, நட்புறவு ஆகியன காம்ரேட் வேணு என்பவரால் அருந்ததி ராய்க்கு ஒரு விரிவான வரலாற்றுப் பாடம் போலச் சொல்லப்படுகிறது. 'ஜனாதன சர்க்கார்' என்ற  பழங்குடி மக்களால் நடத்தப்படும் அரசியல் நிர்வாகம்  மாவோயிஸ்ட்டுகள் உதவியுடன் பழங்குடியினரால் உருவாக்கப் பட்டுள்ளது.  இந்த வட்டார ஆட்சிமுறை அருந்ததி ராய்க்குப் பழங்குடி மக்களால் விளக்கப்படுகிறது.   'ஜனாதன சர்க்கார்' ஆட்சி என்ற மக்கள் அரசு முறையில், இந்தப் பகுதி ஏறத்தாழ ஒரு  தனி நாடாக இயங்குகிறது (இது ஸ்ரீலங்காவில் ஈழப் புலிகள் அமைத்த ஆட்சிமுறையை நினைவிற்குக் கொண்டு வருகிறது).   வேளாண்மை, வணிகம், தொழில், பொருளாதாரம், நீதி, பாதுகாப்பு, மருத்துவம், மக்கள் தொடர்பு, கல்வி-கலாச்சாரம், மற்றும் காடுகள் என்ற ஒன்பது துறைகளின் கீழ் இந்த மக்கள் அரசு இயங்குகிறது. பழங்குடியினரின் இது போன்ற தன்னாட்சி அமைப்புமுறை இந்திய அரசுக்கு அச்சமூட்டுகிறது என்பதுவும் பழங்குடியினரின் கருத்து. 

எனவே, அரசு சொல்லி வருவது போல மாவோயிஸ்ட்டுகளிடம் சிக்கிக் கொண்ட பழங்குடியினரை மீட்பது, மாவோயிஸ்ட்டுகளை அழிப்பது என்பது சரியல்ல;  பாதிக்கப்பட்ட பழங்குடியினரில் பலரே மாவோயிஸ்ட்டுகளாக மாறி,  பயிற்சி பெற்று  தங்கள் மக்களுக்கான அரசை நடத்துகிறார்கள் என்பதைத்தான் நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.   பழங்குடியினரிடம் நூலின் பெரும்பகுதி மாவோயிஸ்ட்டுகளுடன் அருந்ததி ராய்  பல பகுதிகளுக்கு நடைப்பயணம் சென்ற அறிந்தவை நிரம்பியுள்ளது, ஆகவே “வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்” என்ற தலைப்பு நூலுக்கு மிகப் பொருத்தமே.  அருந்ததி ராயின் இத்தகைய அரிய, துணிகர முயற்சியால் தண்டகாரணியப் பகுதியில் வாழும் பழங்குடியினர் எதிர் கொள்ளும் துயர வாழ்வு பொதுமக்களுக்கு இந்த நூல் மூலம் கிடைத்துள்ளது.

இந்த நூல் 'தோழர்களுடன் ஒரு பயணம்' என்ற தலைப்பில் தமிழில் சமூக செயல்பாட்டாளர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. அது குறித்த மதிப்புரையே இக்கட்டுரை. படிக்கப்பட்ட முதல் பதிப்பு நூலின் தொடக்கத்தில், முதல் வரியின் முதற்சொல்லே ('சொற்ச்செறிவுடைய' ???!!!) பிழையுடன் தொடங்கி நூல் முழுவதும் சொற்பிழைகள் மலிந்து கிடக்கின்றன. அடுத்துத் தொடர்ந்து வெளி வந்த பதிப்பிலாவது மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் நல்லது.  இந்த நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ளக்கூடிய பழங்குடியினர் வரலாறு சுருக்கமாக அடுத்து இங்குக்  கொடுக்கப்பட்டுள்ளது.


தண்டகாரண்யா காட்டுப் பகுதியானது, ஆந்திரம், தெலுங்கானா, ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லைப்புறங்களை ஒட்டியிருக்கும் பகுதியாகும். கான்கேர், பஸ்தர், தந்தேவாடா, நாராயண்பூர், பிஜாப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை அடக்கியது இந்த தண்டகாரண்யா காட்டுப் பகுதி.  சுமார்  80,000 சதுர கி.மீ.  பரப்பளவுள்ள இப்பகுதியில், சட்டப்பூர்வமாக 40,000 சதுர கி.மீ.  பரப்பளவுள்ள பகுதி காடுகளுக்காக ஒதுக்கப்பட்டது, மீதியுள்ள பகுதியில் பல பழங்குடிப் பிரிவினர் வாழ்கின்றனர். இவர்கள் ஹல்பா, கோண்ட், மூடியா, மாடியா எனப் பற்பல பிரிவுகளை உள்ளடக்கிய பழங்குடியினர். இவர்கள் வாழும் காட்டுப் பகுதியானது, குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தின் பகுதியானது பாக்சைட்,  நிலக்கரி, இரும்புத் தாது, சுண்ணாம்புக் கல், தங்கம், வைரம் உட்பட  28 கனிம வளங்களைக் கொண்டது.

சற்றொப்ப 2005 ஆண்டையொட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள்  பல பெருவணிக நிறுவனங்களுடன் நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டு பழங்குடியினர் பகுதிகளைப்  பெருவணிக நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடத் திட்டங்கள் வரைந்தன.  இரும்பாலைகள், மின் திட்டங்கள், அலுமினிய சுத்திகரிப்பு நிலையங்கள், அணைகள், கனிமச்  சுரங்கங்கள் என அத்திட்டங்கள் யாவும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புடையவை.  அவற்றை நடைமுறைப்படுத்தப் பழங்குடியினரை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப் பட வேண்டும். இதையொட்டி அரசை எதிர்க்கும் பழங்குடியினர் எதிர்ப்பும் அக்காலத்திலிருந்து உச்சக் கட்ட நிலையை எட்டத் துவங்கியது.   

2005 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியிலிருந்த சத்தீஸ்கர் மாநில அரசு டாட்டா, எஸ்சார் ஆகிய இரு பெரும் நிறுவனங்களுடன் இப்பகுதியில் பல ஆயிரம் கோடி பெறுமானமுள்ள இரும்பு ஆலைகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.  அதே 2005 ஆம் ஆண்டில் அனைத்து மாநில காவல் துறைத் தலைவர்களின் கூட்டத்தை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு கூட்டிய பொழுது, ‘நாட்டின் கனிம வளம் மிகுந்திருக்கும் பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தலைதூக்குவது என்பது முதலீட்டுச் சூழலைப்  பாதிக்கும்’ என்றும், 'நம் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு முதன்மையான மிகப்பெரும் அச்சுறுத்தல், மாவோயிஸ்ட்டுகள்தான். ஆனால், அவர்களுக்கு, பழங்குடியினர் மற்றும் அறிஞர்கள் சிலரின் ஆதரவு உள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையை மிக நுட்பமாகக் கையாள வேண்டும்' என்றார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் பிறகு,  தீவிர நடவடிக்கை மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதற்கு "பச்சை வேட்டை" ('ஆபரேஷன் கிரீன் ஹண்ட்' திட்டம்) என்று அரசு பெயர் சூட்டியது. ஏற்கனவே இருந்த துணை ராணுவப் படையினருடன், மேலும் பல ஆயிரக் கணக்கில் துணை ராணுவப் படையினர்  பஸ்தர் பகுதியில்  மத்திய அரசால் குவிக்கப் பட்டனர். 

தனியார் நிறுவனம் ஒரு டன் இரும்புத் தாதுக்கு அரசுக்கு 27 ரூபாய் வழங்குகிறது, ஆனால் அதற்கு அவர்களுக்குக் கிடைப்பது ஒரு டன்னுக்கு 5000 ரூபாய்  என்ற கொள்ளை லாபம் என்பதை லோகாயிதா அறிக்கை கூறுகிறது. கனிமவளங்கள் நிறைந்த அந்தப் பகுதியைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், டாட்டா, அம்பானி, மிட்டல், எஸ்சார், வேதாந்தா போன்ற பெரு வணிக நிறுவனங்களுக்கும் சொந்தமாக்கும் நோக்கத்தில் இந்திய அரசு செயல்படுவதையும்;   அவர்கள் வாழும் காட்டுப் பகுதியின் வளங்கள் சுரண்டப்படுவதையும், அதற்காக இப்பகுதியில் வாழும்  பழங்குடி மக்களை விரட்டி வெளியேற்றுவதையும் பழங்குடியினர் விரும்புவதில்லை.   

சுவைகண்ட பூனைகளான அரசும் முதலாளித்துவ அமைப்புகளும் விட்டுக் கொடுப்பதாகவும் இல்லை.  இதன் விளைவு அரசின் அடக்குமுறையும், அதை எதிர்த்து மாவோயிஸ்ட் வழியைப் பின்பற்றி கொரில்லாப் போரில் இறங்கும் பழங்குடியினரின் போராட்டமும்தான்.  அவர்களின் போராட்டம் நிறைந்த நிம்மதியற்ற வாழ்வினால்  உடைமை உயிர் இழப்புகளும் பழங்குடியினருக்குத் தொடர்கதையாகிறது.  பெருவணிக நிறுவனங்கள் சிலவற்றில் இயக்குநராகவும்;  மேலும் சில பெரு வணிக நிறுவனங்களுக்கு வழக்கறிஞராகவும் இருந்தவர்  ப.சிதம்பரம்.  அவர் அப்பொழுது உள்துறை அமைச்சராகப்  பொறுப்பிலிருந்த காலம்.   அவர்   தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் துணை ராணுவப்படைகளை ஒரு கூலிப்படை போல, பெருவணிக நிறுவனங்களுக்கு ஆதரவாக,  பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தக் காரணமாக இருந்தார் என்பது அரசியல் கவனிப்பார்களின் கருத்து.  ஆனால் பழங்குடியினருக்கு எதிரான இந்த விஷயத்தில் மட்டும் நாட்டின் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரேநிலைப்பாடு இருந்து வருகிறது.


"மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கை” என்ற பெயரில், இந்தப் பழங்குடி மக்களின் உடைமைகள் மற்றும்  உரிமைகள் மீதும் ஓர் உள்நாட்டுப் போரை மத்திய அரசு தொடுத்திருக்கிறது. இது ஓர் அரசு தனது மக்களுடனே தொடுத்த போர் (தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை). பார்க்கப்போனால் மாவோயிஸ்ட்டுகள்  சென்ற நூற்றாண்டு முதல்தான், அதாவது மேற்கு வங்க நக்சல்பாரி இயக்கத்திற்கு  பிறகுதான் இந்த நாடகத்தில் இடம் பெறுபவர்கள். பிறகு, மாவோயிஸ்ட் யார் என்றும் பழங்குடியினர் யார் என்றும் பிரித்தறிய முடியாமல் போனது  பிற்கால இன்றைய  நிலை.  ஆனால், பழங்குடியினர் தங்கள் உரிமைக்காக  அரசை எதிர்க்கும் போராட்டமோ ஒரு நெடிய வரலாற்றைக் கொண்டது.  ஆங்கிலேயர் காலத்திலும், 1910 ஆம் ஆண்டிலும் கூட அரசுக்கு எதிராகப் பழங்குடியினரின் கிளர்ச்சிகள் நடந்துள்ளன (அந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவான 'பூம்கால்' விழா கொண்டாட்டத்தில்தான் அருந்ததி ராய் பங்கு கொண்டது  இந்த நூலிலும்  இடம் பெறுகிறது).

பழங்குடியினரை ஒடுக்க அல்லது மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க இந்திய அரசின் ராணுவம், அவர்களால் பயிற்சி அளிக்கப்படும் மாநில காவல் துறையினர் களம் இறங்கினர். அப்பகுதி பழங்குடியினரை இந்துக்களாக  மாற்றும் முயற்சியும் முன்னரே தொடங்கி இருந்தது.  இந்துக்களாக மாற மறுத்தவர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர் என அறிவிக்கப்பட்டனர். இவ்வாறு ஒதுக்கப்பட்ட இவர்களே பின்னர் மாவோயிஸ்ட்  தொகுதியாக மாறினர் என்கிறார் அருந்ததி ராய்(பக்கம்-33).   இது ஒரு வழக்கமான மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிதான்.  நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் பழங்குடிகள் எவரும்  இந்துக்கள் அல்ல என்பது ஏற்கனவே  உறுதி செய்யப் பட்டுள்ளது.  அண்மையில் (நவம்பர் 2020) ஜார்க்கண்ட் அரசின் சட்டசபையும் பழங்குடியினர் இந்துக்கள் அல்ல என்று அதிகாரப்பூர்வமான தீர்மானத்தை வெளியிட்டது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இந்துக்களாக  மாற்றப்பட்டவர்கள் 'சல்வா ஜுதும்' (சுத்திகரிப்பு வேட்டை) என்ற இயக்கத்தை 2004 ஆண்டு  தொடங்கினர். பழங்குடி மக்களைக் கொண்டே பழங்குடி மக்களை ஒடுக்கும் முயற்சி இது.  இவர்களால் பழங்குடி மக்கள், அவர்கள் வாழும் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டு  சாலையோர அரசு முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர்.  அவ்வாறு அரசு முகாமில் தங்காதவர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டுக் கொல்லப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப் பட்டார்கள். இதனால், பழங்குடி மக்களுக்கு, அவர்கள் எந்த ஒரு வம்புக்கும் போகாமல் தங்கள் வீட்டில் தங்கியிருந்தாலே அவர்கள் மாவோயிஸ்ட் என்ற பயங்கரவாதிகளுக்கு  இணையானவர்கள் என்ற நிலை ஏற்படுகிறது. பழங்குடி மக்கள்  இதனால் வேறு வழியின்றி அரசு முகாம்களுக்குத் தாங்களே  செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  இது மக்களை அச்சுறுத்தி தங்கள் கட்டுக்குள்  கொண்டுவரும் ஒரு முயற்சி. ஆணையின்படி முகாமுக்கு வாராத பழங்குடியினர் கிராமங்களை சல்வா ஜுதும்  எரிக்கத் துவங்கியது.

சல்வா ஜுதும் மற்றும் துணை இராணுவம், மாநில காவல்துறை ஆகியோருக்கு  மாநில அரசின் ஆதரவு, ஆயுதங்கள், சட்டப் பாதுகாப்பு போன்ற  உதவிகள் உண்டு. இதனால்   ஆறு மாதங்களில்  தந்தேவாடா, பிஜாப்பூர் மாவட்டங்களில், 644 கிராமங்கள் சூறையாடப்பட்டன. 60,000 பழங்குடியினர் அகதிகளாக அரசு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.  அப்பகுதியை விட்டுத் தப்பியோடி இடம் பெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்கள்  குறித்த சரியான எண்ணிக்கை எதுவும் இல்லை.   நிகழ்வுகளைப் பார்த்த உச்ச நீதிமன்றம்,  சல்வா ஜுதும் இயக்கத்தையும், மாநில அரசையும் கண்டித்தது. ஆனால், பழங்குடியினரை ஒடுக்கும் மாநில அரசுகளின் போக்கில் மாறுதல் எதுவும் ஏற்படவில்லை. 

மாறாக, சத்தீஸ்கர் மாநிலம் ஒரு படி மேலே சென்று 'சிறப்பு பொதுப் பாதுகாப்பு சட்டம்' ஒன்றைக் கொண்டு வந்தது.  அதன் மூலம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, நீதிமன்ற ஆணை இல்லாமலே எவரையும் சிறையில் தள்ள முடியும்.  காவல் துறையினர் தங்களுக்குத் தேவைப்படும்பொழுது பழங்குடியினர் கிராமத்தில் நுழைந்து வேண்டும் பெண்களைப் பலாத்காரம் செய்வதும், கோழிகளைக் கொள்ளையிட்டுச் செல்வதும், கிராமத்தையே தீயிட்டுக் கொளுத்துவதும் வாடிக்கையானது. எதிர்க்கவோ தடுக்கவோ வழியின்றிப் போனது. தாங்கமுடியாத பழங்குடியினரே சில சமயங்களில் நக்சலைட்டுகளே,  வாருங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள்  சுவர்களில் எழுதி வேண்டுகோள் வைக்கும் நிலையும் உருவானது.

மாவோயிஸ்ட் பயிற்சி பெற்ற பழங்குடியினர் இராணுவம், மாநில காவல்துறை அனைவரையும் எதிர்த்துப்  போராடிய வண்ணமே இருந்தனர்.  பழங்குடியினர் பலர் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக் கொரில்லாப் போர்ப் பயிற்சி பெற்றனர்.  அரசை எதிர்க்கும் பயிற்சி பெற்ற 'குடிமக்கள் படை'  உருவாகிறது.  இது எண்ணிக்கையிலும், பயிற்சியிலும், ஆயுத பலத்திலும், தாக்குதல் முறையிலும்  இந்திய  இராணுவத்திற்கு இணையாகவே இருந்து வந்துள்ளது.  இதனால், 'மாவோயிஸ்ட்டுகளின் அச்சுறுத்தலால் பஸ்தர் பகுதியில், கனிம நிறுவனங்களின் திட்டங்களைத் தொடங்க முடியவில்லை' என சத்தீஸ்கர் மாநில முதன்மைச் செயலர் வெளிப்படையாகவே கூறினார்.

ஒவ்வொருமுறையும் பெரிய அணைக்கான திட்டங்கள், கனிமச் சுரங்கங்கள்  அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு திட்டமிடுகையில் 'பழங்குடியினரை மைய நீரோட்டத்தில் இணைப்பது', 'பழங்குடியினரை வளர்ச்சிப் பாதையில் அழைப்பது' போன்ற சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டு பழங்குடியினர் அவர்களுக்கான வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என்பதுதான் வரலாறு. அரசு பழங்குடியினர் நலன் குறித்து அக்கறையுடன் பேசத் தொடங்கினால்,  அது கவலை கொள்ள வேண்டிய நேரம் என்கிறார் அருந்ததி ராய் (பக்கம் - 11).

***நிறைவாக,  இதுவரை நூல் சொன்ன கருத்துக்களின் அடிப்படையில் மேலும் சில குறிப்புகள்;  பொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்குவதிலும், நாட்டின் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் பழங்குடியினரை அவர்கள் வாழ்விடத்திலிருந்து இராணுவத்தின் உதவியுடன் விரட்டுவதிலும், எதிர்க்கும் போராளிகளை  ஒடுக்குவதிலும் அனைத்து இந்தியக் கட்சிகளும் ஒரே கொள்கை கொண்டனவாக உள்ளன. 

இந்நேரத்தில் இங்கு நினைவுகூரத்தக்கச் செய்தி ஒன்றும் உண்டு.  விடுதலைப் பெற்ற இந்தியாவில் நேருவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் வாழ்வின்  முன்னேற்றத்திற்காகத் திட்டங்கள் பல உருவாக்கப் பட்டன.  அவற்றில் பழங்குடியினர் வாழ்வை மேம்படுத்த அவர்களைப் பொது நீரோட்டத்தில் இணைப்பது என்ற ஒரு குறிக்கோளும் இருந்தது. இதற்காக ஆய்வு மற்றும் திட்டக் குழு ஒன்றும் அன்றைய அரசால் உருவாக்கப் பட்டது.  அதன் முக்கியப் பொறுப்பை ஏற்றவர் இங்கிலாந்தில் பிறந்த இந்திய மானுடவியல் ஆய்வாளர் வெரியர் எல்வின் (Verrier Elwin,1902 – 1964) என்பவராவார்.  இவர் நேருவின் நண்பராகவும் அறியப்படுகிறார். பழங்குடியினர் மானுடவியல் குறித்த இவரது கருத்துகளை இன்றைய ஆய்வாளர்களும் மேற்கோள் காட்டுவதுண்டு. 

தனித்துவம் மிக்க வளமான பழங்குடி மக்களின் பண்பாடு சிறப்பானது.  அதைப் பொருட்படுத்தாது  பொது நீரோட்டத்துடன் பழங்குடி மக்களை இணைக்கும் திட்டங்கள் ஏற்புடையதல்ல, என்பது இவர் இந்தியப் பழங்குடிகள் குறித்த நேருவின் மத்திய அரசுக்கு வழங்கிய ஆய்வறிக்கை.  மேலும்,  பழங்குடி சமூகத்தின் மேதைகளின் கருத்துகளின் படியும்  அவர்களின் விருப்பப்படியுமே  பழங்குடியினர் வளர்ச்சி இருக்க வேண்டும், அவர்கள் மீது எதுவும் திணிக்கப்படக்கூடாது என்பதையும் இவரது அறிக்கை குறிப்பிட்டது (வெரியர் எல்வின் கமிட்டி, 1960).

ஆனால் இந்த அறிக்கை குறித்து அரசு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாம் பாகத்தின் கீழ் உள்ள பிரிவு 244-இன் படி, ஐந்தாவது அட்டவணையில் பழங்குடிகளுக்குச் சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதையும் அரசு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.  அதாவது சென்ற ஆண்டுவரை இதுதான் நிலைமை. 

அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதை எதிர்த்த பழங்குடியினர்,  அவர்கள்  வாழும் பல பகுதிகளில் ‘பதல்காடி இயக்கம்’ (Pathalgadi Movement) என்பதைத் தொடங்கினர். சென்ற ஆண்டு (2019) ஜார்கண்ட் பழங்குடி மக்கள் அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமையை ஊரின் நடுவில் கல்வெட்டாக அமைத்தனர். அதற்காக 10,000 பேர் மீது தேசத்துரோக வழக்குப் போட்டுள்ளது அரசு.

மேற்கொண்டு என்ன நடக்கலாம் என்ற கோணத்தில்  சிந்தித்த பொழுது; காஷ்மீருக்குச்  சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்ட  370வது பிரிவை ரத்து செய்வதற்கு இந்திய அரசு  எடுத்த முடிவு  மனத்தில் நிழலாடுகிறது.  

தண்டகாரணியப் பகுதி கனிம வளங்களைப் பெருநிறுவனங்களிடம் குத்தகைக்கு விட அரசு எடுக்கும் முடிவுகளுக்கு எதிர்ப்பாக எப்பொழுதும் தங்களது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள உரிமையைப் பழங்குடியினர் முன்னெடுப்பதால், அடுத்த நடவடிக்கையாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாம் பாகத்தின் கீழ் உள்ள பிரிவு 244-இன் படி, ஐந்தாவது அட்டவணையில் பழங்குடிகளுக்குச் சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளவற்றை ரத்து செய்யக்கூடிய நடவடிக்கையை  எடுக்க அரசு அடுத்துத் திட்டமிடும் என்பதையும் நாம் எதிர்பார்க்கலாம்.   காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் போலப் பழங்குடியினரும்  தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு உரிமைகளை  இழக்கலாம்.  இந்தத் திருத்தத்திற்கு உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற காரணம் காட்டப்பட்டு, மாவோயிஸ்ட், நக்சலைட் தீவிரவாதங்களை ஒடுக்க அரசு எடுக்கும் திட்டங்களாக அவை காட்டப்படலாம்.  ஒருவகையில், இந்த நூலுக்காக வைக்கப்படும் அண்மைய எதிர்ப்பு அதற்கான ஒரு கவனயீர்ப்பு தொடக்கப் புள்ளியாகக் கூட இருக்கலாம்.



நூல் குறித்து:
தோழர்களுடன் ஒரு பயணம், அருந்ததி ராய்  
(தமிழ் மொழிபெயர்ப்பு - அ.முத்துக்கிருஷ்ணன்) 
பயணி வெளியீடு - முதல் பதிப்பு - 2010
(Walking with the Comrades, by Arundhati Roy, New Delhi: Penguin, 2011. ISBN 978-0-670-08553-8)

தமிழ்ப் பதிப்பு கிடைக்குமிடம்: https://www.discoverybookpalace.com/தோழர்களுடன்-ஒரு-பயணம்-1



References:
[1]
The essence of this policy is that Tribal Development should be along the lines of the genius of the tribal community and nothing should be imposed upon them. i) Verrier Elwin Committee – 1960, (to report on Special Multi –Purpose blocks). 
International Journal of Academic Research;  ISSN: 2348-7666 Vol.1 Issue.1, June, 2014 [http://ijar.org.in/stuff/issues/v1-i1/v1-i1-a001.pdf]

[2]
The special autonomy granted to Adivasi areas under the Fifth Schedule of the Indian Constitution; 
FIFTH SCHEDULE - [Article 244(1)]- Provisions as to the Administration and Control of Scheduled Areas and Scheduled Tribes (https://www.mea.gov.in/Images/pdf1/S5.pdf)
&
[https://tribal.nic.in/declarationof5thSchedule.aspx#:~:text=As%20per%20the%20Constitutional%20provision,of%20the%20Constitution%20of%20India.]

[3]
பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் !
https://www.vinavu.com/2019/12/25/indian-democracy-in-crisis-what-is-people-opinion-2/


நன்றி: சிறகு 
நவம்பர் 21, 2020

#நூல் மதிப்புரை, #சிறகு, #Themozhi 



Saturday, November 13, 2021

எட்கர் தர்ஸ்டனின் மானுடவியல் பார்வையில் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்

எட்கர் தர்ஸ்டனின் மானுடவியல் பார்வையில் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்





எட்கர் தர்ஸ்டன் -1885 இல் சென்னை அருங்காட்சியகக் கண்காணிப்பாளராகப் பணியேற்று கால் நூற்றாண்டுக் காலம் அப்பணியைச் செவ்வனே மேற்கொண்டவர். இப்பொறுப்புடன் 1901-இல் தென்னிந்திய இனவியல் (Ethnology) ஆய்வுப் பொறுப்பும் ஆங்கில அரசால் இவரிடம் கொடுக்கப்பட்டது. வங்காளத்தில் உள்ள ஆசியக் கழகத்தினரிடம் இருந்து மனித உடற்கூற்றினை அளக்க உதவும் கருவிகளைப் பெற்று அவர் இந்த ஆய்வினை முன்னெடுத்தார்.

தர்ஸ்டன் தனது ஆய்வை ‘Castes and Tribes of South India’ என்ற தலைப்பில் 7 தொகுதிகளாக 1909 இல் வெளியிட்டார். மத்திய இந்தியாவின் கோண்ட் பழங்குடியினர் உட்பட 300க்கும் மேற்பட்ட குலங்களையும் குடிகளையும் கொண்ட தகவல் களஞ்சியம் இந்த நூல்கள். இவை வரலாற்றியல், சமூகவியல், இனவியல் நோக்கில் குடிகளையும் குலங்களையும் அறிய உதவும் தகவல்கள் நிரம்பியவை. ந.சி.கந்தையா பிள்ளை இவற்றின் சில பகுதிகளைச் சுருக்கி முன்னர் தமிழில் வெளியிட்டுள்ளார்.

மானிடவியல் ஆய்வாளர்களுக்கு மிக இன்றியமையாததும், அடிப்படையுமான ஆய்வு நூல் என்பதால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 7 தொகுதிகள் கொண்ட இந்த ஆய்வு நூல் தொகுப்பை முனைவர் க. ரத்னம் அவர்களின் மொழி பெயர்ப்பில் 1986 முதல் 2005 வரை வெளியிட்டுள்ளது. தனி ஒரு மனிதராக மொழிபெயர்ப்பைக் கையாண்டு எளிதில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் 7 தொகுதிகளையும் தமிழாக்கம் செய்தது க. ரத்னம் அவர்களின் பாராட்டிற்குரிய செயல் என்று சொல்வது மிகையல்ல. படிப்பவருக்கு அவரது பணியின் சிறப்பு விளங்கும்.

நூலின் துவக்கத்தில் ஆய்வு நடந்தவிதம் குறித்து ஒரு விரிவான முன்னுரையிலும், மனிதவியல் நோக்கில் மனிதகுலத்தின் தோற்றமும் பரவலும் குறித்த ஆய்வுகளாக 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஆய்வுலகம் அறிந்தவற்றையும் (Literature Review) தர்ஸ்டன் இணைத்துள்ளார். தொடர்ந்து இவரது ஆய்வுத் தரவுகளும் விளக்கங்களும் சுமார் 75 பக்கங்களுக்கு நீண்டு ஓர் ஆய்வுநூலுக்கு இணையாக அமைந்துள்ளது. அதன் பிறகு தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் பற்றிய விவரங்கள் தொடங்கிப் பின் வரும் வகையில் 7 தொகுதிகளாகத் தொடர்கின்றது.

தொகுதி – 1. அபிசேகர் முதல் பயகர வரை
தொகுதி – 2. கஞ்சி முதல் ஜுங்கு வரை
தொகுதி – 3. கப்பேரர் முதல் குறவர் வரை
தொகுதி – 4. கோரி முதல் மரக்காலு வரை
தொகுதி – 5.மரக்காயர் முதல் பள்ளெ வரை
தொகுதி – 6. பள்ளி முதல் சிரியன் கிறிஸ்துவர் வரை
தொகுதி – 7. தாபேலு முதல் சொன்னல வரை

தரவுகளுக்குச் சான்றாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளில் மக்களே தங்களைப் பற்றிக் குறிப்பிட்டவை, மாவட்டக் குறிப்புக்களாகத் தொகுக்கப்பட்ட கையேடுகளில் இருந்து பெறப்பட்டவை, சட்ட நூல்களில் கிடைத்த குறிப்புக்கள், ஆய்வு நூல்களில் இருந்தும் ஆய்வு இதழ்களில் இருந்தும் பெறப்பட்ட குறிப்புகள் என்று தர்ஸ்டன் ஆவணப்படுத்தியுள்ளார். சற்றொப்ப ஒன்றரை லட்சம் சதுர மைல்கள் பரப்பளவில், சுமார் நான்கு கோடி மக்கட் தொகை வாழ்ந்த தென்னிந்தியப் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த மிகப்பெரிய சென்னை மாகாணமும், புதுக்கோட்டை, திருவாங்கூர், கொச்சின், பங்கனபள்ளி போன்று ஆங்கில அரசைச் சார்ந்த சிற்றரசுகளின் பகுதிகளும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

உடற்கூற்றினை அளவிடும் இந்த அளவீடு பகுதியைப் பிழைகளைக் குறைக்கும் நோக்கில் இவர்மட்டுமே மேற்கொண்டார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பிரிவு மக்களின் உடல்வாகு, உயரம், மூக்களவு, தலையின் நீள அகலம் போன்றவற்றை அடிப்படை அளவுகளாக அளந்து பதிவு செய்து கொண்டுள்ளார். ஒவ்வொரு சாதியிலும் 30-60 பேர் இவ்வாறு அளவெடுக்கப் பட்டார்கள். இவர் ஓர் அரசு அலுவலர் என்பதால் அந்தப் பணியில் இவர் குறித்து மக்கள் தவறான கருத்துகள் கொண்டு, உயிருக்குப் பயந்தோ அல்லது கூலி வேலைக்கு நாடு கடத்தப் படுவோம் என்றெண்ணியோ அல்லது தடுப்பூசி போட வருகிறார்கள் என்றோ அஞ்சி ஊரையே விட்டு ஓடும் அளவிற்கு மக்கள் அறியாமையில் இருந்ததைப் பதிவு செய்துள்ளார் தர்ஸ்டன். அது போல, ஒரே அளக்கும் கருவியைச் சாதி வேறுபாடு இன்றி அனைவருக்கும் பயன்படுத்திய முறையும் மக்களுக்கு உவப்பாக இருக்கவில்லை. பாட்டு, கூத்து போன்றவற்றை நிகழ்த்தியும், நாணயங்கள் சுருட்டுகள் வழங்கியும் மக்களைக் கவர்ந்து ஆய்வுக்காக அணுகியுள்ளார். தனது தரவுகளின் அடிப்படையில் தமிழர் மலையாளர் ஆகிய இரு பிரிவினரின் மண்டையோட்டு அளவுகளில் பிற திராவிடக் குலத்தினருடன் ஒப்பிடுகையில், அளவில் சீர்மை இருப்பதாகவும் குறிப்பிடுகிறார் தர்ஸ்டன் (தொகுதி-1, பக்கம் XLI).

மக்களைப் பலி கொடுக்கும் மெரியாச் (Meriah) சடங்கு போன்றவை ஆடுகள், எருமைகளைக் கொடுக்கும் பலியாக மாறி வருவதைச் சுட்டிக் காட்டி, நாகரீக வளர்ச்சியால் (1901-1910க்கும் இடைப்பட்ட காலத்துப் பதிவு இது) பலர் தங்கள் தொன்ம வாழ்க்கைமுறைகளைக் கைவிட்டு மாறி வருதலைக் கவனித்த தர்ஸ்டன், இனவியல் ஆய்வு நோக்கில் பண்டைய செய்திகளை ஆவணப் படுத்த விரும்பினால் விரைந்து செயல்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“திராவிடக் குடும்பத்திற்குரிய பண்டைய பெயர் ‘தமிழ்’ என்பதனை மனதிற் கொள்ளவேண்டும். திராவிடம் என்ற சொல்லாட்சியினைக் கால்டுவெல் பயன்படுத்தியதற்குக் காரணம் தமிழ் என்ற சொல்லாட்சி தமிழ் மொழிக்கு உரியவர்களின் மொழிக்காகத் தனித்து ஒதுக்கப்பட வேண்டும் என்ற கருத்தினாலேயே ஆம்” என்பது தர்ஸ்டன் தரும் விளக்கம்.

மனிதவியல் ஆய்வு வரலாற்றினை அறிமுகப்படுத்தும் நோக்கில் தர்ஸ்டன் அக்காலத்தில் அறியப்பட்ட மனிதப் பிரிவுகள் அதன் பரவல்கள் குறித்து ஆய்வுலகில் நிலவும் சில கருத்துகளைச் சொல்லிச் செல்கிறார். இன்று தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் என்ற அளவில் குறுகிவிட்ட திராவிட இனம், முன்னர் இந்தியா முழுவதிலும் அதற்கு அப்பாலும் கூடப் பரவியிருந்ததாகத் தெரிகிறது. அக்காலத்தில் பலரும் அறிந்திருந்த லெமூரியா கோட்பாட்டையும், இறுதிப்பனியுறை காலத்திற்குப் பிறகு பனியுருகி நீர்மட்ட உயர்வால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஹயேக்கெல் (Haeckel) விளக்குவதாக தர்ஸ்டன் சுட்டுகிறார்.

ஹயேக்கெல் மூன்று பிரிவு மக்களைப் பல வகைப்பட்டவர்களாகப் பிரிக்கிறார்.
- திராவிடர்கள் (தக்காணர்(அ)தக்காணப் பகுதியினர், சிங்களவர்)
- நுபியன்கள்
- மத்தியதரைக்கடற் பகுதியினர் (காக்கசியன்கள், பாங்குகள், செனமட்ஸ், இந்தோ-ஜெர்மானியப் பழங்குடிகள்)

ஒவ்வொரு பிரிவு மக்களிலும் அவரவர் வகைகளுக்குள் உள்ள ஒற்றுமை அவர்கள் நெருங்கிய உறவைக் காட்டும். அத்துடன் அவர்கள் உடற்கூறுகள் மற்ற பிரிவினரிடம் இருந்து வேறுபடுத்தியும் காட்ட வல்லது.

எடுத்துக்காட்டாக, மற்ற பிரிவினரிடம் அடர்த்தியற்றும் அல்லது இல்லாமலும் உள்ள தாடி திராவிடர்களிடம் நன்கு வளர்ச்சியுற்று இருப்பதைக் காணலாகும். இவர்களின் தோல் நிறம் பழுப்பாகவும் கரும்பழுப்பு நிறமாகவும் இருக்கும். மேலும் இவர்களது கருத்த முடி ‘லியோட்ரிச்சி’ வகை. மத்தியத் தரைக் கடற் பகுதி வாழ் ‘யூத்திகோமி’ (ஐரோப்பிய) இனத்தவர் போன்று மென்மையாகவோ, அல்லது ‘உலோட்ரிச்சி’ (ஆப்பிரிக்க) இனத்தவர் முடி போன்று கம்பளி தோற்றத்திலும் இருப்பதில்லை. பொதுவாக இவர்களுக்கு முன்தலை உயர்ந்தும், மூக்கு நீண்டு பருத்துமுள்ளது. இவ்வாறு தடயவியல் மானுடவியல் (Forensic anthropology) முறையில் மனித இனத்தை வகைப்படுத்துதலை ஹக்ஸ்லியும் செய்துள்ளார். மேலும் ஹக்ஸ்லி ஆஸ்திரேலியப் பழங்குடிகளும் தக்காணப் பீடபூமிப் பழங்குடிகளும் ஒத்தமைந்தவர்கள் என்ற கருத்தும் கொண்டவர்.

போர்னியா நாட்டின் மரம் ஏறும் டையக்ஸ் மக்கள் குறித்து வாலஸ் விவரிப்பது ஆனை மலைப்பகுதி காடர் மக்களுக்கும் பொருந்தும் என்கிறார் தர்ஸ்டன். அவ்வாறே, மலாய் ஜாகுன் மக்களின் பற்களைக் கூர்மையாக்கிக் கொள்ளும் வழக்கமாக கிராபோர்ட் குறிக்கும் வழக்கம் திருவாங்கூர் மலை வேடர்களிடமும் இருப்பதாகக் கூறுகிறார்.

அறிவியல் வளர்ச்சியுற்று இன்று இன்றியமையாது விளங்கும் மரபணு ஆய்வுகள் மூலம் மனித இனங்களின் தொடர்பு ஒற்றுமை வேற்றுமை அறியும் வழக்கம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், சென்ற நூற்றாண்டுகளில் மானிடவியல் ஆய்வாளர்கள் தொல்லியல் ஆய்வில் கிடைக்கும் மண்டையோடு, மனித எலும்புகள், மூக்கின் அளவு, தாடையின் அளவு கொண்டு மக்களிடையே காணும் ஒற்றுமை வேற்றுமைகளைப் புரிந்து கொள்ளும் அளவிற்கே வாய்ப்பு இருந்தது. அத்துடன் மனிதர்களின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றில் அவர்களின் பழக்க வழக்கங்கள் சடங்குகளாக வெளிப்படுகையில் அவற்றை ஒப்பிட்டு பண்பாட்டு ஒற்றுமைகளையும் அறிய முயன்றனர். தர்ஸ்டன் அவர்களின் ஆய்வும் அந்த வகையைச் சார்ந்ததே. ஆதிச்சநல்லூர் புதைபொருள் ஆய்வுகளில் கிடைத்த மண்டையோடுகள் குறித்தும், ஆய்வாளர்கள் அ.ரியா, எம். எல். லாபிக்யூ ஆய்வுகளின் தரவுகள் குறித்தும் மீள்பார்வை செய்கிறார்.

ஆரியர்களின் சமூகத் தாக்கம் இந்தியவாழ் மக்களிடம் நாகரீகத்தை ஏற்படுத்தியது, நிலையை உயர்த்தியது. ஆனால் வழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவர் பழங்குடியினராகப் பின்தங்கிவிட்டனர் என்று டபிள்யூ. க்ரூக்கெ கருத்தினை ஒட்டி விளக்கம் அளிக்கிறார் தர்ஸ்டன்(தொகுதி-1, பக்கம் XXVII). ஆனால், இவர் ஆய்வு நூல் வெளியான 1909ஆம் ஆண்டின் காலகட்டத்தில் இந்தியாவின் சிந்துசமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை (சிந்து சமவெளி நாகரிகம் முதலில் 1921 இல் பஞ்சாப் பகுதியில் உள்ள ஹரப்பாவிலும் பின்னர் 1922 இல் சிந்து நதிக்கு அருகிலுள்ள மொகஞ்சதாரோவிலும் அடையாளம் காணப்பட்டது). ஆகவே, இந்திய மண்ணில் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மேம்பட்டிருந்த மொகஞ்சதாரோ-ஹரப்பா மக்கள் குறித்து அன்றைய உலகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று புரிந்து கொண்டு இக்கருத்தைப் பொருட்படுத்தாமல் நாம் கடந்துவிடலாம். என்றும் வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொல்லியல் ஆய்வுகளும் மனித வரலாற்றைத் தரவுகள் அடிப்படையில் மாற்றி எழுத வைப்பவை என்பதை இன்றைய உலகம் ஐயமின்றி அறிந்துள்ளது.



நூல் குறிப்பு:
தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்: எட்கர் தர்ஸ்டன்
Castes and Tribes of South India: Edgar Thurston
(தமிழாக்கம்: முனைவர் க. ரத்னம்)
பிரிவு: மானிடவியல்
வெளியீடு: தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்


நன்றி: சிறகு
நவம்பர் 13, 2021



#சிறகு, #நூல் மதிப்புரை,  #Themozhi  



Saturday, October 30, 2021

சிறுகதை: குறை நிறை மதிப்பிடும் முறை

சிறுகதை: குறை நிறை மதிப்பிடும் முறை


சிறுகதை ஒன்றை மதிப்பீடு செய்வதை அக்கதையைப் படிப்பவர் எவரும் செய்யலாம். கதை பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்ற ஒற்றைச் சொல் கருத்துக்கும் மேற்பட்டு, அது ஏன் எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று விவரித்தால் அது விமர்சனம் ஆகிவிடும். படிப்பதைக் குறித்து ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டவர் எவருமே விமர்சிப்பவர்தான், அதைச் செய்யும் தகுதி உடையவர்தான். அதற்குத் தனிப்பட்ட தகுதி என்ற ஒன்று கிடையாது. ஒவ்வொருவர் கருத்துக்கும் மதிப்புண்டு. இருப்பினும், பரந்துபட்ட வாசிப்பும், ஒருதுறையின் வல்லுநரான ஒருவர் தனது துறைசார்ந்து பின்புலத்துடன் ஒப்பீட்டு அளவில் தனது மதிப்பீட்டை முன்வைக்கும் பொழுது அக்கருத்துக்கு மதிப்பு அதிகம். திரைப்படம் ஒன்றைப் பார்த்து அது குறித்து கருத்து பகிரத் தெரிந்த எவரும் சிறுகதையையும் அவ்வாறே விமர்சிக்கலாம். திரைப்படத்தில் பங்குபெறும் நடிகர், இசையமைப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர், இயக்குநர் என்று பலரையும் தனித்தனியே பாராட்டி விமர்சிக்க இயலும். ஆனால் எழுத்திலக்கியத்தில் கதாசிரியர் ஒருவரின் செயல்பாட்டை மட்டுமே மதிப்பீடு செய்யமுடியும் என்பதே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.

சிறுகதை திறனாய்வு என்பது ஆசிரியர் கூறிய கதையை நாமும் அப்படியே சுருக்கமாகத் திருப்பிச் சொல்வதல்ல. கதையை அலசுவதற்குத் தேவையான அளவில் கதையைப் படிப்பவருக்குச் சுருக்கமாக அறிமுகப்படுத்திவிட்டு கதையை ஆசிரியர் கையாண்ட விதம் குறித்து நம் கருத்தை முன்வைப்பது சிறுகதை மதிப்பீட்டிற்கான அடிப்படை. விமர்சனம் என்பதும் திறனாய்வு என்பதும் ஒன்றா? என்பது பலரின் மனதில் எழும் கேள்வி. மேலோட்டமாக தன் மதிப்பீட்டைச் சொல்லிச் செல்வது விமர்சனம் என்றும், அதையும் தாண்டி நுணுகிப் பலபிரிவுகளில் ஓர் ஆய்வுக் கட்டமைப்பிற்கு உட்பட்டு ஆராய்வது திறனாய்வு என்றும் மக்களிடம் கருத்து நிலவுகிறது என்பதும் தெரிகிறது. பொதுவாக இலக்கிய உலகில் ‘திறனாய்வு’ மற்றும் ‘விமர்சனம்’ என்ற இரு சொற்களும் ஒரே பொருளையே தருவதாகவும்; ‘திறனாய்வு’ என்ற சொல் கல்வியாளர்கள் மத்தியிலும், விமர்சனம் என்ற சொல் கல்வியாளர்கள் அல்லாத பிற நவீன எழுத்தாளர்கள் மத்தியிலும் அதிகமாக வழங்குகின்றன’ என்பது தெ.மதுசூதனன் அவர்களின் கருத்து (பார்க்க: ‘இலக்கிய திறனாய்வுக் கோட்பாடுகள், பேரா. முனைவர் சபா. ஜெயராசா – நூலின் முன்னுரை).

பொதுவாக விமர்சனம் என்று வழக்கத்தில் இருக்கும் ஒரு மதிப்பீட்டில் அக்கதை நமக்கு ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது என்ற நமது சொந்தக் கருத்து முதன்மை என்றாலும், அச்சிறுகதை மதிப்பீட்டில் பின்வருவன எவையும் அவற்றுக்கான தேவை இருப்பின் இடம் பெறலாம்: ஆசிரியர் கவனிக்கத் தவறிய சில முரண்களை, குறிப்பாக; கதைக்குள்ளேயே கருத்து முரண்பாடு, காலக்கோட்டில் வழுவிச் செல்வது, அல்லது கதை மாந்தரின் இயல்பின் கட்டுக்கோப்பைச் சிதைத்துவிடுவது, தொய்வான அயர்ச்சி ஏற்படுத்தும் மொழிநடை, சொல்லப்படும் கருத்து சமூகத்தில் பிற்போக்குத் தனத்திற்குத் துணை சென்று பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கை என இவை போன்று கதையைப் படித்துக் கொண்டே இருக்கும்பொழுது மனதில் நிழலாடும் எண்ணங்களைப் பதிவிடுவது மதிப்பீடு செய்பவரின் இன்றியமையாத சமூகப் பொறுப்பு.

இந்த மதிப்பீட்டையே (Criticism, Feedback and Comments) திறனாய்வு என்ற நோக்கில் வழங்கும் பொழுது பின்வரும் கட்டமைப்பில் மதிப்பிடுவது வழக்கமாக உள்ளது.

— கரு: கதையின் கரு என்ன? அது சொல்லப்படும் கதைக்களம் என்ன? (Overview of the Plot)

— படிப்பினை: ஆசிரியர் அந்தக் கதையின் மூலம் சொல்ல விரும்புவது என்ன? (Author’s Viewpoint)

— கதை மாந்தர்கள்: கதை மாந்தர்கள் யார் யார்? அவர்களின் செயல்பாடுகள் கதையின் நோக்கத்திற்கு உதவுகிறதா? (Characters and their Performance)

— கதை சொல்லும் பாணி: கதை விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளதா? அல்லது விவரிப்புகள் கண்முன்னே காட்சியை விரிய வைக்கும் கதைக்குத் தேவையான விவரிப்பு என்ற எல்லையைத் தாண்டி எங்கேனும் திசை திரும்புகிறதா ? (Handling Theme)

— மொழிநடை: ஆசிரியரின் கதை சொல்லும் முறை, எழுதும் பாணியின் சிறப்பு என்ன? (Quotes and Figurative Language, etc.,)

— சமூகத் தாக்கம், மாற்றம்: ஆசிரியர் கருத்தின் தேர்வும், அதைக் கையாண்ட முறையும் எந்தவகையில் சமூகத் தொலைநோக்கு கொண்டுள்ளது? எவ்வாறு பயன் அல்லது பாதிப்பை உண்டாக்கக் கூடியது? (Impact and Implication)

கதையின் கரு என்ன என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடுவதை விட; அதாவது இராமன் பெண்டாட்டியை இராவணன் தூக்கிப் போனான், அனுமன் அவளை மீட்க உதவினான் என்று நகைச்சுவையுடன் குறிப்பிடும் வழக்கத்திற்கு ஒப்ப; காதலர்கள் தடைகளை மீறி இறுதியில் இணையும் வழக்கமான காதல் கதை என்றோ, தங்கள் குடும்பத்தைக் குலைத்த கயவனை நாயகன் பழிக்குப் பழிவாங்கி தாயின் ஆணையை நிறைவேற்றிய பழைய மசாலா கதைதான் என்றோ, அண்ணன்-தங்கை பாசம் குறித்துச் சொல்லும் அழுமூஞ்சிக் கதை வரிசையில் மற்றும் ஒரு கதை என்றோ ஒரே வரியில் சொல்லாமல் அந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதை ஒரு 100 சொற்களுக்குப் படிப்பவருக்கு அறிமுகம் செய்யலாம்.

படிப்பவர் முன்னரே கதையைத் தெரிந்தவர் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, கதை தெரியாத ஒருவருக்குச் சொல்வதாக இருந்தால் எப்படிச் சொல்வோமோ அதைப் போன்ற முறையில், இந்தத் தலைப்பில், இவர் எழுதிய கதை, இதைக் குறித்துப் பேசுகிறது, இதில் இவர்களுக்கு இடையே ஏற்படும் போராட்டங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று விவரிப்பது படிப்பவரை நாம் வழங்கவிருக்கும் மதிப்பீட்டுக் கருத்தை உள்வாங்க ஆயத்தப்படுத்தும். படிப்பவர் மனதைத் தொடக்கூடிய வகையில் அமைந்த ஒரு கதையின் மையக்கருத்துக்குக் கதையின் தலைப்பும் அதற்குப் பொருத்தமாக இருக்கவேண்டும். தலைப்பு பொருத்தமாக இல்லாவிடில் அது நினைவில் நிலைத்து நிற்கும் தன்மையை இழந்துவிடும். தலைப்பு குறித்து எங்கும் கதையில் சொல்ல வேண்டிய தேவை இல்லை, ஆனால் படிப்பவர் கதையைப் படித்து முடித்ததும் அவருக்கும் ஏறக்குறைய கதையின் தலைப்பே மனதில் எழுவது போல இருக்கும் பொழுது நல்லதொரு கதை அதன் இலக்கியத் தரத்தில் உயர்ந்து விடும். அத்துடன் அது இலக்கியவாதிகளின் தொடர்ந்த மீளாய்வுக்கு உட்படும் நிலையை எட்டிவிடும். ஆகவே, கதையின் கரு, அதன் தலைப்பு, கதை சொல்லும் படிப்பினை, கதை மாந்தர்கள் சிறப்பு ஆகியவற்றைக் குறித்து மதிப்பீட்டாளர் தங்கள் பார்வையை அறியத் தரலாம்.

அடுத்து, கதையின் ஆசிரியர் மனதைக் கவரும் வண்ணம் கதையைச் செவ்வனே எழுதியுள்ளாரா, கதையைப் படிக்கும் பொழுது அது நம் மனதில் ஏற்படுத்திய உணர்ச்சி என்ன என்பதை விவரிக்கலாம். சிறப்பான கவனத்தைக் கவரும் வண்ணம் ஆசிரியர் கையாண்ட உத்திக்குப் பாராட்டு, இவ்வாறு பிழைகளைச் செப்பம் செய்தால் இன்னமும் கூட சிறப்பாக இருக்கலாம் என்ற வகையில் ஆக்கப்பூர்வமான கருத்துகளைச் சொல்லுதல் திறனாய்வின் சில தேவையான கூறுகள். அதாவது பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்று சொல்லாமல், கதையின் இந்த குறிப்பிடப்படும் ஒன்று ஏன் பிடிக்கிறது அல்லது ஏன் சரியில்லை என்பதைக் காரணத்துடன் குறிப்பிடுதல் மதிப்பீடு செய்பவர் பார்வையைப் படிப்பவர் புரிந்து கொள்ள உதவும்.

கதையின் நடை எளிமையாகக் கதையோட்டத்திற்கு உதவும் வகையில் இருப்பதும், எழுத்தாளருக்கே உரிய தனித்து அடையாளம் காட்டக்கூடிய பாணியில் இருப்பதும் படிப்பவரைக் கதையின் எழுத்தாளருடன் ஒன்ற வைக்கும் என்பதால் கதை ஆசிரியரின் மொழிநடை குறித்தும் நிறை குறைகளை முன்வைக்கலாம். தனித்தமிழ் நடையோ இலக்கிய நடையோ சிறுகதைக்கு இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையல்ல. பழகுதமிழை தேவையானால் வட்டாரத் தமிழைக் கையாண்டிருந்தால் சிறப்பு. அக்கதை அப்பொழுது வரலாற்றில் அக்கால கட்டத்தினை ஆவணப்படுத்தும் விதத்தில் அமைந்துவிடும். கதைமாந்தரின் பின்புலத்தைக் காட்ட கதையின் மொழிநடை சிறப்பாகப் பயன்படும். அதை ஆசிரியர் தக்க முறையில் கையாண்டிருந்தால் அது கதைக்கு மெருகு சேர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை. பொழுது போக்கு, இலக்கியம், வாழ்வியல் பதிவு என்பதையும் கடந்து மனித மனத்தை வளப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு தகவலை விட்டுச் செல்லும் கதை சிறப்பானது. அது கதையில் எழுத்தாளரின் கருத்தாக, நோக்கமாக இருக்கும்பொழுது அதைச் சுட்டிக் காட்டி, படிப்பவர் கவனத்திற்குக் கொண்டு வந்து பாராட்டி எழுதப்படும் திறனாய்வும் சிறப்பானது.

இது போன்ற வகைக் கதைகளுடன் ஒப்பீட்டளவில் இக்கதை எவ்வாறு அமைகிறது, இது ஆசிரியரின் வழக்கமான பாணியா? இன்றைய சமுதாயத்தில் இக்கதையினால் என்ன தாக்கம் ஏற்படலாம் என்பன போன்றவற்றையும் எழுதுவது சிறுகதைகளின் போக்கின் வளர்ச்சிக்கும் எழுத்தாளர்களுக்கும் உதவும் வகையில் அமையும். இது கட்டாயம் ஒருமுறையாவது படிக்க வேண்டிய கதை, இது இவரிவருக்கு இந்த வகையில் பயன்படலாம், அல்லது பத்தோடு பதினொன்று என்ற வகையில் இது ஒரு பொழுதுபோக்கு கதை, அல்லது கால விரயம் என்ற வகையில் இடம் பிடிக்கக் கூடிய ஒரு கதை இது போன்ற குறிப்புகள் படிப்பவருக்கு உதவும் வகையில் அமையும். விமர்சனம் அல்லது திறனாய்வு செய்பவர் ஒரு வழிகாட்டி. எழுத்தாளருக்கும் அவர் சொல்வது வழிகாட்டும், படிப்பவருக்கும் அவர் சொல்வது வழிகாட்டும். அவர்கள் இருவருக்குமே அவர்கள் போக வேண்டிய இடம் எது என்று காட்டும் வகையில் எழுதப்படும் மதிப்பீடு ஆற்றுப்படுத்தும் தன்மை கொண்டது.

ஒரு பத்து ஆண்டுகள் கழித்து நாம் எழுதிய மதிப்பீட்டை நாமே எடுத்துப் படித்தாலும் எதைப் பற்றி என்ற விவரம் தெளிவாக விளங்கும் வண்ணம் தேவையான குறிப்புகளுடன் அது இருக்குமானால் எழுதிய நமக்கே குழப்பம் வராத வகையில் அமையும். படித்த கதை குறித்து ஒரு 250-300 சொற்களுக்கு, அதாவது பொதுவாக தாளின் ஒரு பக்க அளவில் இருப்பது போன்ற அளவில் எழுதுவது நன்று. இதை அடுத்தவர் படித்தாலும் நாம் எழுதிய கோணத்தை அவர் புரிந்து கொள்கிறாரா என்ற அளவில் எழுதுவது சிறப்பாக இருக்கும். ஒருவர் தரும் மதிப்பீடு சில காலம் கழித்து மீண்டும் படிக்கப்படும் பொழுது அது காலத்தைக் கடந்தும் நிற்கலாம், நிற்காமல் பொருத்தமின்றியும் இருக்கலாம். ஆனால் இந்தக் கதை குறித்து இது போன்ற ஒரு கருத்து ஒருவர் மனதில் எழுந்தது என்பதுதான் முக்கியம். கதை குறித்து மதிப்பிடுபவர் குறிப்பிடும் கருத்துகள், மேற்கோள்கள், எடுத்துக்காட்டுகள் போன்றவை மதிப்பீட்டின் தரத்தை வேறுபடுத்திக் காட்டுவதுடன் அது படிப்பவருக்கு உதவும் வகையில் தனித்து நிற்கும்.

ஒருவர் செய்யும் மதிப்பீடு நேர்மறையாகவோ அல்லது எதிர் மறையாகவோ இருக்கலாம். எவ்வாறு இருந்தாலும் அதற்குத் தனி மதிப்பளிக்கப்படும். மதிப்பிடுபவருக்கு அவரது கருத்து காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற வகையில் தனித்துவமாக இருக்கலாம், ஆனால் அவரது மதிப்பீட்டையோ, கோணத்தையோ, கருத்தையோ மற்றவரும் ஏற்க வேண்டும் என்ற தேவையில்லை. எழுத்தாளரும் அந்த மதிப்பீட்டைக் கவனத்தில் கொள்ளலாம். ஆனால் எந்தத் திறனாய்வையும் யார் சொன்னாலும் ஏற்கவேண்டிய கட்டாயம் எழுத்தாளருக்கும் இல்லவே இல்லை. அதுவும் தனிமனிதத் தாக்குதல் நோக்கில், வெறுப்பாளர்கள் சார்பு நிலையுடன் சொல்லும் கருத்தை எழுத்தாளர்கள் கடந்துவிடுவதே நல்லது. ஏனெனில் மதிப்பீட்டாளரின் பார்வையில் அவர் வளர்ந்த, வாழ்ந்த சூழ்நிலைத் தாக்கம் இருப்பது இயல்பு.

தனிமனிதத் தாக்குதலோ, உள்நோக்கமோ அற்ற வகையில், சார்பற்ற ஆய்வாளர் நடுநிலையுடன் எழுதும் திறனாய்வு ஏற்புடையது. இருப்பினும், அந்த மதிப்பீடு தனிப்பட்ட ஒருவர் பார்வையில் அமைவது என்பதும் உண்மை. எனவே மதிப்பீடு செய்பவர் அவர் புரிதலில் சொல்கிறார் என்பதை மட்டும் எழுத்தாளரும் படிப்பவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஏன் என்றால், படிப்பது என்னவோ ராமாயணம்தான் என்றாலும் படிப்பவர்களில் வால்மீகியை ஒரு கோணத்தில் பார்த்துப் படித்து புண்ணியம் சேர்க்க எண்ணுபவர்களும் உண்டு, அதில் கவனத்திற்கு வரவேண்டிய மற்றொரு சமூகநீதி மீறல்களை மற்றொரு கோணத்தில் சுட்டிக் காட்டி நூலை எரிக்கும் பெரியாரும் உண்டு என்பதை மறந்துவிடலாகாது.

மேலும் எந்த ஓர் எழுத்தாளரும் கதையை எழுதுகையில் மதிப்பீடு பெறும் நோக்கில் கதையை எழுதத் துவங்குவதும் இல்லை. எழுத்தாளர்கள் பொதுவாகவே சமூக அக்கறை கொண்டவர்களாக இருப்பவர்கள். அவர்கள் கொண்டிருக்கும் இத்தகைய மனப்பான்மை அவர்கள் தங்களின் சுற்றுப்புறத்தை, சமூக நடவடிக்கைகளை எப்பொழுதும் அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் அக்கறை. ஒரு நிகழ்ச்சி தந்த தாக்கத்தை மையமாகக் கொண்டு, தங்கள் கற்பனையால் அதனை விரிவுபடுத்தி, தங்களுக்கு உருவான கருத்தை எழுத்துகள் மூலம் சமுதாயத்திற்குக் கடத்த விரும்புகிறார்கள் என்பதே அவர்களுடைய எழுத்துக்கான உந்துதல். நல்ல சிறுகதை மதிப்பீடுகள் இலக்கிய வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கு உதவும். பரந்துபட்ட படிப்பாளராகவும், சிறந்த இலக்கிய நுகர்ச்சி உள்ளவராகவும் இருப்பவர் விமர்சனங்களும் திறனாய்வுகளும் செய்ய முற்படவேண்டும். அவ்வாறு செய்வதும் ஓர் இலக்கியப்பணியே.

நன்றி:  சிறகு 
அக்டோபர் 30, 2021


#சிறகு, #இலக்கியம், #Themozhi, #திறனாய்வு 


Saturday, October 16, 2021

ஆங்கிலம் இந்தியாவின் பொதுமொழியாக இருக்க வேண்டும்: பண்டிதர் அயோத்திதாசர்

ஆங்கிலம் இந்தியாவின் பொதுமொழியாக இருக்க வேண்டும்: பண்டிதர் அயோத்திதாசர்




இந்தியாவின் மாபெரும் அறிஞர்களுள் ஒருவரும் தமிழ் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான பண்டிதர் அயோத்திதாசர் (1845-1914), சமத்துவம், சமநீதி, பெண்ணியம், பகுத்தறிவு ஆகிய கருத்துக்களை முன்வைத்த முற்போக்குச் சிந்தனையாளர். தமிழக அளவில் பெரியாருக்கும் இந்திய அளவில் அம்பேத்கருக்கும் முன்னோடியாகக் குறிப்பிடப்படுகிறார். அவரால் நடத்தப்பட்ட ‘தமிழன்’ என்னும் வார இதழில், 1907 முதல் 1914 வரையிலான இடைப்பட்ட ஏழாண்டு காலகட்டத்தில், அயோத்திதாசர் சமுதாய முன்னேற்றத்திற்கான தமது ஆழ்ந்த சிந்தனைகளின் வெளிப்பாட்டை ஆவணப்படுத்தி இருந்தார். இவையாவும் அரசியல், சமூகம், சமயம், இலக்கியம் என்ற பிரிவுகளின் கீழ் சமூகவியல் மற்றும் வரலாற்றுத் துறை ஆய்வாளர் ஞான. அலாய்சியஸ் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் நூல்களாக வெளியாகியுள்ளன. பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் சிந்தனைகள் பொதுமக்களைச் சேரவேண்டும் என்ற நோக்கில் அவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கும் பல சமூகச் சிக்கல்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அவை குறித்து அவர் ஆழமாகச் சித்துள்ளமையும், அவரது சிந்தனையின் முற்போக்கும் வீச்சும் நம்மை வியக்க வைக்கின்றது.

இந்திய நாட்டிற்குப் பொது மொழியாக இருக்கவேண்டியவை எவை என்பது குறித்து அயோத்திதாசர் என்ன எண்ணியுள்ளார்? பார்ப்போம். ‘இந்திய தேசத்திற்குப் பொது பாஷையா யிருக்கவேண்டியவை ஆங்கில பாஷையாம்’ என்ற தலைப்பில் நூறாண்டுகளுக்கு முன்னரே (பிப்ரவரி 22, 1911) தனது முடிவைத் தெரிவித்துவிட்டார் பண்டிதர் அயோத்திதாசர். ஆனால் மொழிப் பிரச்சனையால் எண்ணற்ற உயிர்ப்பலிகளுக்குப் பிறகும், இன்றும் கூட மாநிலங்களில், நெடுஞ்சாலைகளில், அஞ்சல் அலுவலகத்தில், அறிவிப்புப் பலகைகளில், இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பும் அஞ்சல்களில், பொதுமக்களுக்கான அரசு விளம்பரங்களில், அறிவிப்புகளில் என்று எங்கும் எதிலும் இந்தியின் ஊடுருவல் நிற்கவில்லை.

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் ஆங்கிலமொழி தவிர்த்து, இந்திய மொழிகள் அனைத்திலும் சாதிபேதம் திணிக்கும் கட்டுக்கதைகள் மிகுதியாகவும், நீதி நெறியின்றி அறமற்ற முறையில் அவையாவும் சீரழிவுக்கு உள்ளானதால் எந்த ஒரு இந்திய மொழியையுமே பொதுமொழியாக ஏற்றுக் கொள்வது வீண் என்கிறார் பண்டிதர். மொழி முக்கியமா அல்லது அம்மொழி பேசும் மக்களின் ஒழுக்கம் முக்கியமா என ஆராயவேண்டியதே முக்கியம். இதைக் கருத்தில் கொள்ளாமல் இந்தி மொழி கற்க வேண்டும் என்றும் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்றும் விவாதிப்பது பொருளற்றது என்பது அயோத்திதாசரின் சிந்தனைப் போக்கு.

ஆங்கில மொழி உலகெங்கிலும் பரவியுள்ளது, அத்துடன் அதன் நிலை அனைத்து நாட்டினரும் மதிக்கும்வகையில் உள்ளது, மக்கள் எளிதில் கற்கும் மொழியாகவும் உள்ளது, அம்மொழியில் சாதி பேதம் பற்றிய கருத்துக்கள் இன்றி எங்கு சென்றாலும் மக்களை மக்களாக மதிக்கும் முறையிலும் அறிவாளிகளும் திறமைசாலிகளும் நிறைந்த மொழியாகவும் உள்ளது. எனவே, இந்தியா முழுவதும் ஆங்கிலத்தைப் பொதுமொழியாகக் கொண்டால் இந்திய மக்களும் அறிவார்ந்தவர்களாக பேதமற்றவர்களாக மாற வழியுண்டு.

சாதி பேதம், சமயச் சச்சரவுகள் ஒழிந்து மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் மனப்பான்மை மக்களிடையே வளரும். அதைவிடுத்து பேதங்கள் கூறும் மொழிகளைக் கற்றால், மக்கள் பேதம் கூறும் இழி சிந்தனைகளைக் கைவிடாது நாட்டில் பிரிவினைகள்தான் தொடரும். அதையும் விட, இந்திக் கற்றவர்களால் நாடு எந்த வகையில் அறிவார்ந்த மக்களைக் கொண்டவர்களாக மாறியுள்ளது? நாட்டு மக்களின் நிலை எவ்வாறு முன்னேறியுள்ளது? இந்தி கற்பதால் மக்களிடம் சாதி பேதம் இல்லாமல் போய்விடுமா? மற்றவர் மாற்று இனத்தவர் என்ற கசப்புணர்வு மனதிலிருந்து அகன்றுவிடுமா? என்று கேள்விகளை அடுக்குகிறார் அயோத்திதாசர்.

ஆங்கிலம் பொது மொழியானால் மக்களிடையே பேதங்கள் குறைந்து ஒற்றுமையும் அன்பும் அறிவும் மேலோங்கும் என்று நம்புகிறார். சச்சரவுகள் குறையும், உலகில் உள்ள ஆங்கிலம் அறிந்த எந்த மொழி மக்களுடன் எளிதில் உறவாடலாம். இந்தியைக் கற்பது காசிக்குப் போய் வருவதற்கு மட்டும் பயன்படலாம். ஆனால், ஆங்கிலம் பொதுமொழியானால் உலகெங்குமே தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையே சிறப்பு என்பதால் இந்திய மக்கள் ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் பண்டிதர் அயோத்திதாசர்.

தமிழர்கள் ஆங்கிலம் கற்கவேண்டும் என்ற பெரியார் ஈ.வெ.ரா.வுக்கும்; தங்கள் தாய்மொழி தமிழும், பொதுமொழி ஆங்கிலமும் தமிழர் கற்கவேண்டிய மொழிகள் என இருமொழிக் கொள்கையை முன்வைத்த அறிஞர் சி. என். அண்ணாதுரைக்கும் முன்னோடியாக விளங்குகிறார் பண்டிதர் அயோத்திதாசர்.



உதவிய நூல்:
க.அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள் – அரசியல், சமூகம்
192. இந்திய தேசத்திற்குப் பொது பாஷையா யிருக்கவேண்டியவை ஆங்கிலபாஷையாம் (பிப்ரவரி 22, 1911), பக்கம்:326



நன்றி: சிறகு 
அக்டோபர் 16, 2021


#சிறகு, #தமிழறிஞர், #Themozhi  


Saturday, October 2, 2021

தமிழில் புதிர்கள்

தமிழில் புதிர்கள்


தமிழில் புதிர்கள் புதுமை அல்ல. அவை பல வகைகளில் நம்மிடம் உலாவி வருகின்றன. பொதுவாக, புதிர்களை விடுகதை என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. தமிழின் முதல் நூலாகக் கூறப்படும் இலக்கண நூலான தொல்காப்பியம் குறிப்பிடும் ‘பிசி’ என்ற சொல்லும், கம்பராமாயணத்தில் இடம்பெறும் ‘பிதிர்’ என்ற சொல்லும் புதிர் என்பதைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிசி >> பிதிர் >> புதிர் என்று மருவியதாக கி. வா. ஜகந்நாதன் கருத்துரைக்கிறார். பிசி, பிதிர் வழக்கிலிருந்து மறைந்து, இன்று புதிர் என்ற சொல்லே மறைபொருள் ஒன்றை உள்ளடக்கிய கூற்றைக் குறிக்கும் சொல்லாக வழக்கில் இருக்கிறது. இது ஆங்கிலச் சொல் ‘Riddle’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லாகக் கருதப்படுகிறது. மறைபொருளை விடுவிப்பதால் ஒரு புதிர் ‘விடுகதை’ என்று அழைக்கப்படுகிறது என்ற கருத்தும் உள்ளது. விடுவி என்பதன் அடிப்படையில் புதிர் என்பது ‘வெடி’ என்று தமிழ் நாட்டின் வட மாவட்டங்களில் அழைக்கப்படுவதும், அவற்றையே ‘அழிப்பாங் கதை’ என்று தென் மாவட்டங்களில் கூறுவதும் வழக்கில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விடுகதையில் மறைபொருளாக வரும் சிக்கலை அவிழ்ப்பதால், அவிழ்ப்பான் கதை என்பது நாளடைவில் அழிப்பாங் கதை என மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆக, மறை பொருளினின்றும் விடுவிக்கப்பட வேண்டிய கதை என்னும் பொருளுடையது விடுகதை என்பது இதனால் தெளிவாகிறது.

ஆரம்பப் பள்ளி நாட்களிலேயே பாடநூலில் நாம் “ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு வைத்து அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டைகள், அது என்ன? ” என்பது போன்ற விடுகதைகளைப் படித்திருக்கிறோம். இருப்பினும் விடுகதைகள் பல வழக்கில் இருந்தாலும், அவை பெரும்பாலும் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் பெறுவது இல்லை என்பதே கருத்தாக வைக்கப்படுகிறது. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட, ‘சிறுவர்க்கான விடுகதைப் பாட்டுக்கள்’ என்று தலைப்பில் முதற் பதிப்பாக 1940இல் வெளியான நூல்தான் இவ்வகையில் முதல் நூலாகக் கூறப்படுகிறது. ரோஜா முத்தையாவின் (1961) ‘விடுகதைக்களஞ்சியம்’; வ.மு. இராமலிங்கம் (1962) வெளியிட்டுள்ள ‘களவுக் காதலர் கையாண்ட விடுகதைகள்’; குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா (1962) தமிழாக்கம் செய்து தொகுத்தளித்த வெளிநாட்டு விடுகதைகள்’; ச.வே. சுப்பிரமணியனின் (1977) தொகுப்பான ‘தமிழில் விடுகதைகள்’; ஆறு. இராமநாதன் (1982) வெளியிட்டுள்ள ‘காதலர் விடுகதைகள்’’ ஆகியன குறிப்பிடத்தக்க விடுகதைகள் தொகுப்பு நூல்களாகும். தொகுப்பு நூல்கள் மட்டுமின்றி, விடுகதைகள் குறித்த ஆய்வு நூல்களும் குறைவு என்றும் அறிய முடிகிறது. ஆறு. இராமநாதன் அவர்களின் ‘தமிழில் புதிர்கள்’ என்னும் தலைப்பில் (1978-2001) வெளியான நூலே நூல்வடிவில் வெளியிடப்பட்ட விடுகதைகள் குறித்த ஒரே ஆய்வு நூலாகும்.

எழுத்திலக்கிய விடுகதை வகைகளில் ‘சிலேடைகள்’ என்ற வகையும் ‘இரு சொல் அலங்காரம்’ (இதன் மாறுபட்ட வடிவமான ‘முச்சொல் அலங்காரம்’) என்ற வகைகளும் கூட உண்டு. இவை சற்று காலத்தால் முற்பட்டவை எனலாம். ஒரே பாடல் இருவேறு விதமான பொருள் தரும்படி அமைத்துப் பாடுவது சிலேடை அணியாகும். பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கவி காளமேகத்தின் தனிப்பாடல்களில் பல சிலேடைப் பாடல்கள் பல உள்ளன.

   ஆடிக்குடத்தடையும், ஆடும்போதே இரையும்
   மூடித்திறக்கின் முகங்காட்டும் – ஓடி மண்டை
   பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
   உற்றிடும் பாம்பெள்ளெனவே ஓது
என்கின்ற காளமேகப் புலவர் பாடல் பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடையாக அமைந்துள்ள பாடல், இப்பாடல் பள்ளிப் பாடங்களில் இடம்பெற்று அனைவரும் அறிந்த பாடலே.

இருசொல் அலங்காரம்:
தமிழில் முதல் புதிர் நூல் அல்லது முதல் விடுகதைத் தொகுப்பு அருணாச்சல முதலியாரின் "இரு சொல் அலங்காரம்" என்ற நூல். ‘இரு சொல் அலங்காரம்’ (1877), ‘இரு சொல் அலங்காரமும் முச்சொல் அலங்காரமும் (1892), ‘விவேக விளக்க விடுகவிப் பொக்கிஷம்’ முதலிய நூல்களில் இருசொல் அலங்கார வகை  எழுத்திலக்கிய விடுகதைகள் 19 ஆம் நூற்றாண்டிலேயே தொகுக்கப்பட்டு அச்சு நூல் வடிவம் பெற்றன. இரு சொல் அலங்காரம் என்றால் வினா இரண்டு விடை ஒன்று. அதாவது, ஒரே சொல் இரு பொருள் பட வருவதை  "சிலேடை" என்பது வழக்கம்.  அதுபோல, இரண்டு வெவ்வேறு கேள்விகளுக்கும் ஒரே விடையாக இருப்பது  இலக்கியத்தில் 'இருசொல் அலங்காரம்' எனப்படுகிறது. 

இரு சொல் அலங்காரம் முச்சொல் அலங்காரம் வகை எழுத்திலக்கிய விடுகதைகளுக்குக் கீழே சில  எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது: 
காலில் எவ்வாறு காயம் ஏற்பட்டது?
உன் சொந்த ஊர் எது?
(விடை: செங்கல் பட்டு)
செங்கல்பட்டு ஊர்க்காரனின் காலில் செங்கல்  விழுந்ததால் காயம் ஏற்பட்டது.

மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது ‘முச்சொல் அலங்காரம்' எனப்படுகிறது.
பாம்பு ஓடுவதேன் 
பாறை விழுவதேன்
பறை தொங்குவதேன்
(விடை: அடிப்பாரற்று)
அடிப்பவர் யாரும் இல்லாததால் பாம்பு ஓடுகிறது
பாறையைத் தாங்கி இருக்கும் அடி மண் (அடிப்பார்) விழுந்து விடுவதால் (அற்று) பாறை விழுகிறது.
பறையை அடிப்பவர் இல்லாத பொழுது அது சுவரில் ஆணியில் தொங்கவிடப்படும் 

மேலும் சில: இரு அடிகளுக்குமான ஒரு பொதுச் சொல்லை விடையாகக் கொண்ட  இரு சொல் அலங்காரங்கள்.
1. 
போர்வீரன் சாவதேன்?
சாம்பார் மணப்பதேன்?
(விடை: பெருங்காயத்தால்)

ரசம் மணப்பதேன் ?
ரத்தம் பெருகுவதேன்  ?
(விடை: பெருங்காயத்தால்)
என்றும் கூறப்படுவதுண்டு. 

2. 
எருக்கிலை பழுப்பதேன்?
எருமைக்கன்று சாவதேன்?
(விடை: பால் வற்றியதால் ..)

3. 
உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?
குடும்பச் செலவு கூடுவதேன்?
(விடை: 'உழைப்பின்றி!')

4. 
நெல் அளப்பதும் எதனாலே ?
முடவர் நடப்பதும் எதனாலே ?
(விடை: மரக்காலால்)
 
5. 
அச்சாணி வண்டி ஓடுவதேன்?
மச்சான் உறவாடுவதேன்?
(விடை : அக்காளையிட்டு (அக் காளை/அக்காளை(அக்கா)

6.
அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்குப் போனதேன்?
(விடை : அரிதாரம் (சாயம்; அ(ஹ)ரியின் தாரம்... (அரியின் அவதாரம் ராமர்)

7.
கீரை வளர்ப்பது எதனாலே? 
கீழோர் செல்வந்தரைச் சுற்றுவது எதனாலே?
(விடை : பிடுங்கித் தின்ன - கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களைப் பிடுங்கித்தின்ன)

8.
சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்தது ஏன்?
(விடை :  பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)

9. 
மரம் துண்டுகளாக ஆனதேன் ?
மாணவர்கள் வகுப்பில் உறங்குவதேன் ?
(விடை :  அறுவையின் விளைவால்)

10. 
தேளைக் கண்டு அஞ்சுவானேன் !
மழையைக் கண்டு மகிழ்வானேன் !
(விடை :  கொட்டுவதால்)

11. 
பத்திரிகை பிறந்தது எதனால்? 
வண்டி ஓடுவது எதனால்?
(விடை: அச்சினால்)

12. 
தவமியற்றும் முனிவர் நாடுவது எது? 
வழி தவறிய குழந்தை தேடுவது எது? 
(விடை:  வீடு)

13. 
பலர்கூடி சண்டையிட்டால் கேட்பதென்ன?  
மேகம் குறைவாகப் பொழிந்தால் வருவதென்ன? 
(விடை: தூற்றல்)

14. 
பற்கள் விழுவது என் ?
பரமசிவன் களைப்பது ஏன் ?
(விடை: ஆடுவதால்)

15. 
ஆலிலையைப்  பறிப்பதேன் ?
அனுமார் இலங்கைக்குப் போனதேன் ?
(விடை: தையலுக்காக; ஆலிலையை தைத்து  தட்டு செய்வார்கள், அனுமார் போனது சீதை என்ற தையலைத்  தேடிச் சென்றார்)

16. 
வேங்கைக்கு அழகு எதனாலே ?
அரசு நடப்பது எதனாலே ?
(விடை: வரியாலே)

17. 
வண்டி ஓடுவது எதனால்?
வீட்டை மெழுகுவது எதனால்?
(விடை: அச்சாணியால்; அச் சாணியால்)

18. 
ஆலிழை பழுப்பதேன்?
இராவழி நடப்பதேன்??
(விடை:  பறிப்பாரற்று)

19. 
பஞ்சாமிர்தம் மணப்பதேன்?
பலசொல் ஆட்டம் சுவைப்பதேன்?
(விடை: பழனியால்)

20. 
பற்களெல்லாம் தெரிவதேன்?
பொற்கொல்லர் தட்டுவதேன்?
(விடை: நகை செய்ய)

21. 
நா இனிப்பது எதனாலே?
நாய் ஓடுவது எதனாலே?
(விடை: கல்-கண்டு)

அறிவைக் கூர்மைப்படுத்திக் கொள்ளல், தன்னம்பிக்கையை வளர்த்தல், நினைவாற்றலை வளர்த்தல், பணிச்சுமையைக் குறைத்தல், அறிவுத்திறனைச் சோதித்தல், நுண்ணறிவினை வெளிப்படுத்துதல், மரபு வழிக் கல்வியளித்தல், சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உதவுதல் போன்ற பல நிலைகளில் பயன்படும் பண்புகளைக் கொண்டவை விடுகதைகள் என்றும்; அவை தாம் காணும் பொருட்களையும் செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் மறை பொருளாக உருவாக்கப்படும் இலக்கியம் என்றும்; மக்கள் அறிவுத் திறனின் வெளிப்படுத்தும் இலக்கிய வடிவம் என்றும் நாட்டுப்புறவியல் இலக்கிய ஆய்வாளர் முனைவர் ஆறு. இராமநாதன் சுருக்கமாக விடுகதைகளின் பெருமையை எடுத்துரைக்கிறார்.



கட்டுரைக்கு உதவிய ஆவணங்கள்:
நாட்டுப்புறவியல் - இலக்கியங்கள்: விடுகதைகள்(A08132), முனைவர் ஆறு. இராமநாதன்
http://www.tamilvu.org/courses/diploma/a081/a0813/html/a08132c1.htm

மேலும்;  இணையத் தேடலில் கிடைக்கப்பெற்ற,  புதிர்களை விவாதித்த பல இணையதளங்கள் 


நன்றி: சிறகு 
அக்டோபர் 2, 2021


#சிறகு, #இலக்கியம், #Themozhi