'திருக்குறள் வைப்புமுறை'
Wednesday, December 24, 2025
திருக்குறள் வைப்புமுறை
Tuesday, December 9, 2025
எண்ணென்ப சொல்லென்ப
Tuesday, December 2, 2025
'நமது கல்வி முறை'
பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .
Tuesday, November 25, 2025
வள்ளுவம் உறுதிப்பட உணர்த்தும் கருத்துகள்
பொதுவாக "உறுதிப்பொருள்கள்" நான்கு என்று கூறப்படும். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன ஆகும். ஆனால், திருவள்ளுவர் எவற்றை எல்லாம் மிக "உறுதியான கருத்துக்களாகக்" கூறுகின்றார் என்று அறிய முயல்வது ஆர்வமூட்டும் ஒரு தேடலாக அமையும் என்பதில் ஐயமில்லை. எதையும் உறுதிப்படக் கூறுவதற்கு இலக்கியத்தில் "தேற்ற ஏகாரம்" பயன் கொள்ளப்படும்.
என்ற முதல் குறளிலேயே அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை என்பதை "முதற்றே" என்ற தேற்ற ஏகாரத்தில் முடியும் சொல்லாக அமைத்து உறுதிப்படக் கூறுகிறார். தேற்றப் படுத்தும் ஏகாரம் அல்லது உறுதிப்படுத்தும் ஏகாரம் கொண்டு 'முதற்றே' என்ற சொல் அமைகிறது.
இந்த "ஏகார இடைச்சொல்" தேற்றம் தவிர்த்து; வினா, பிரிநிலை, எண், ஈற்றசை எனும் பொருள்களை உணர்த்தியும் அமையும்.
“தேற்றம், வினாவே, பிரிநிலை, எண்ணே,
ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே”
என்பது தொல்காப்பிய இடையியல் நூற்பா.
‘ஏ’ இடைச் சொல்லுக்குத் தொல்காப்பியர் கூறியுள்ளவற்றோடு ‘இசைநிறை’ என்ற ஒன்றையும் கூட்டி ‘ஏ’ ஆறு பொருளில் வரும் என்று நன்னூலார் இடையியலில் கூறியுள்ளார்.
“பிரிநிலை வினாஎண் ஈற்றசை தேற்றம்
இசைநிறை என ஆறு ஏகாரம்மே”
ஆக, ஏகார இடைச்சொல் அசைநிலையாகவும் இசைநிறைக்கவும் கூட செய்யுள்களில் இடம் பெறுவதுண்டு. இது ஏகார இடைச்சொல் என்பதன் இலக்கணப் பின்னணி.
குறளில் ஏகார இடைச்சொல் சற்றொப்ப 90 குறள்களில் இடம் பெறுகின்றன, அவற்றுள் சில;
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது; இதில் 'உழவே தலை' தேற்றமாகக் கூறப்படுகிறது. தேற்றம் என்றால் தெளிவு, உறுதி என்று பொருள். என்று இதில் ஏ தேற்றப் படுத்துகின்றது. ஆகவே இது தேற்றம்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. (39)
அற வாழ்வில் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன அல்ல, அவை புகழ் தராது; இதில் ஏ என்பது பலவழிகளை ஒப்பிட்டு அறவழியைப் பிரித்துச் சுட்டுகிறது. பிரிநிலை என்றால் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துக் காட்டுவது. ஆகவே இது பிரிநிலை.
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு. (766)
வீரம், மானம், நன்னடத்தை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்; இதில் வீரம், மானம், நன்னடத்தை, நம்பிக்கைக்கு உரியவராக இருத்தல் என எண்ணிச் சொல்கிறது. ஆகவே இது எண்ணுப் பொருள்.
குறளில் ஏகார இடைச்சொல் பயன்கொண்டு தேற்றமாகவும் பிரித்து ஒப்பிட்டுக் காட்டும்வகையில் உறுதியாக உணர்த்தப்படும் கருத்துகள் சிலவற்றைப் பின் வரும் குறள்களில் காணலாம்.
தேற்றம்:
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் (282)
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும் (293)
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் (394)
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505)
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள (527)
பிரிநிலை:
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (64)
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை (76)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று (108)
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு (129)
குறியெதிர்ப்பை நீர துடைத்து (221)
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு (299)
Sunday, November 23, 2025
அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்—அறிவியல் நூல் அறிமுகம்
Wednesday, November 12, 2025
திருக்குறள் நூற்றெட்டு
Tuesday, November 11, 2025
குறளுக்கு உரிமை கோரல்
Tuesday, November 4, 2025
திருக்குறள் அந்தாதி
Tuesday, October 28, 2025
கபடி வீரர் தங்க மகள் சென்னை கார்த்திகா
பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025 (Asian Youth Games 2025)இல் இந்தியாவின் இளையோர் மகளிர் கபடி அணியின் சார்பாகப் பங்கேற்ற சென்னை கார்த்திகா சிறப்பாக விளையாடி இந்தியாவிற்காகத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், வெற்றியைப் பெற்று பதக்கத்தை வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. இறுதிச் சுற்றில் ஈரானை 75–21 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிகண்டது.
தொடரின் தொடக்கமாக வங்காளதேசத்திற்கு எதிராக 46–18; தாய்லாந்து அணிக்கு எதிராக 70–23; இலங்கை அணிக்கு எதிராக 73–10; ஈரான் அணிக்கு எதிராக 59–26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா, இந்தத் தொடரில் அதிகப் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவும் ஈரானும் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் மீண்டும் விளையாடின. தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி அசைக்க முடியாத ஒரு முன்னிலையை வகித்து,75–21 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா. இந்த ஆட்டத்தில் தனித்துத் தெரியுமாறு திறன் காட்டியவர்களுள் ஒருவர் 17 வயதான சென்னை கார்த்திகா. இதுதான் கார்த்திகா உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பெற்ற முதல் பதக்கமும் கூட. இந்தியாவுக்காக விளையாடி தங்கம் வெல்ல விரும்பிய இவரது கனவு இதனால் நிறைவேறியுள்ளது. இந்திய ஆண்கள் அணியும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஈரானை வென்றதால் கபடியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது. இது இந்திய இளைஞர்களின் விளையாட்டுத் திறன் குறித்த ஒளிமயமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.
வெற்றிபெற்ற சென்னை கார்த்திகா மிக எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்று இந்தியாவிற்காகப் பதக்கம் வென்று சாதனை செய்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. சென்ற 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதம், பீகார் மாநிலத்தில் நடந்த இந்தியாவிற்கான மகளிர் தேசிய 33வது சப் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் தொடரில், சென்னை கார்த்திகா தமிழ்நாடு அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று பீகார் அணியை 33-32 புள்ளிக் கணக்கில் அப்பொழுது வென்றார். அந்த விளையாட்டுப் போட்டியிலும் இவர் விளையாட்டுத் திறமைக்காக ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணிக்குத் தங்கப்பதக்கம் பெற்றுத் தந்த தங்கமகள் சென்னை கார்த்திகாவிற்குப் பாராட்டு.
----------------
முனைவர் தேமொழி
https://archive.org/details/sakthi-nov-25/page/11/mode/2up
நன்றி: சக்தி நவம்பர் 2025 (பக்கம்: 11-12)
#சக்தி, #பெண்ணியம், #Themozhi
வள்ளுவம் என்ற எடுத்துக்காட்டு களஞ்சியம்
வள்ளுவம் என்ற எடுத்துக்காட்டு களஞ்சியம்
வள்ளுவர் குறளில் வாழ்வியல் நெறிகளை விளக்க பொருத்தமான பல எடுத்துக்காட்டுகளைக் கையாண்டுள்ளார். உலகம் போற்றும் நன்னெறி இவையிவை, பின்பற்ற வேண்டியவை இவை, உலகம் ஏற்கும் ஒழுக்கமுறை, இகழப்படும் நடைமுறை, தவிர்க்க வேண்டியவை, செயல்படுத்த வேண்டியவை எனப் பல பொருள்களை எடுத்துக்காட்டுகள் மூலமே விளக்கியுள்ளார். ஒப்பிட்டுக் காட்டப் பல உவமைகளைக் குறிப்பிட்டுள்ளார். உலகத்தின் இயல்புகளை, மக்களின் பண்புகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த முறையை 'ஏது நடையினும் எடுத்துக் காட்டினும்' என்று தொல்காப்பியம் (மரபியல் நூற்பா 104) குறிப்பிடுகிறது.
இயற்கையில் இருந்தும், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கருவிகள் எனவும் வள்ளுவரால் எடுத்துக்காட்டுகளாக, உருவகங்களாக உவமைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. குழல், யாழ், பறை, பாறை, மலை, குன்று, கல், மழை, நீர், கடல், ஊருணி, ஊற்று, மணற்கேணி, குளம், வெள்ளம், நிலம், நன்னிலம், களர்நிலம், வேலி, தீ, வானம், வெயில், நிலவு, மதிமறைப்பு, மேகம், குவளை, அனிச்சம், மலர்கள், தளிர், நெருஞ்சி, பனை, தினை, நிழல், மரம், நச்சு மரம், பழுத்த மரம், பட்டமரம், மூங்கில், குன்றிமணி, கரும்பு, கருக்காய், எள், விதை, களை, பயிர், மீன், யானை, குதிரை, எருது, பசு, ஆட்டுக்கடா, புலி, நரி, முதலை, பாம்பு, எலி, புழு, கவரிமா, காக்கை, மயில், கொக்கு, அன்னம், ஆந்தை, ஆமை, வேடன், ஆயன், உழவன், மீனவன், அரசன், அமைச்சர், ஒற்றர், தூதர், படைத்தளபதி, வீரர், பேடி, யானைப்பாகன், தாய், தந்தை, மக்கள், மகன், தலைவன், தலைவி, செவிலி, தோழி, குழந்தை, புலவர், ஆசிரியர், மாணவர், மருத்துவர், நோயாளி, நல்லவர், தீயவர், செல்வந்தர், வறியவர், வள்ளல், கருமி, பிச்சைக்காரர், கொலையாளி, திருடர், கயவர், விலைமகளிர், தவம், தானம், வேள்வி, துறவி, அந்தணர், பார்ப்பனர், அறவோர், சான்றோர், பாவி, தெய்வம், இறைவன், இந்திரன், தாமரைக்கண்ணான், தேவர், எமன், பேய், அணங்கு, திருமகள், தவ்வை, பிணம், சொர்க்கம், நரகம், பகை, நட்பு, வில், வேல், வாள், காவடி, செங்கோல், ஊன்றுகோல், துலாக்கோல், அளவுகோல், தூண்டில், உரைகல், அரம், ஏர், எரு, அச்சாணி, வண்டி, தேர், சிவிகை, நாவாய், படகு, தெப்பம், தோணி, பளிங்கு, சதுரங்கம், கூத்தாடும் அரங்கு, சூதாட்டக் கழகம், சாக்கடை, வைக்கோல், குடிசை, கூடு, தூண், தாழ்ப்பாள், கதவு, அரண், சிறை, கோடாரி, கயிறு, பொம்மலாட்ட மரப்பாவை, மண் பொம்மை, மண்கலம், செப்புக்கலம், கைவிளக்கு, தூங்கா விளக்கு, பட்டடை, பாரம், உடை, அன்னத்தூவி, மயிலிறகு, முகபடாம், பொன், அணிகலன், முத்து, பவளம், கண், மயிர், நெஞ்சம், உணவு, கொழுப்பு, நெய், தேன் கலந்த பால், கள், உப்பு, நோய், புண், மருந்து, நஞ்சு, மாசு, அமுது, கனி, காய், பிறப்பு, இறப்பு, உறக்கம், மறைமொழி, எழுத்து, நூல், செல்வம், ஊதியம், முதல் என்று அப்பட்டியல் மிக நீண்டது. இவை நேரடியாகவோ கொடுக்கப்பட்ட குறிப்பு மூலமோ அறியக் கூடியவை.
இவ்வாறு வள்ளுவர் எடுத்துக்காட்டும் பொருள்கள் எல்லாம் மக்களின் வாழ்வில் இடம் பெறுபவை, மக்களாலும் நன்கு அறியப்பட்டவை. எளிமை, தெளிவு, சுருக்கம், ஆழமுடைமை,என்னும் பண்புகள் கொண்டவனாய் உணர்த்தும் பொருளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டுகள் முந்நூற்றைம்பதுக்கும் மேலானவை திருக்குறளில் இடம் பெறுவதாக 'திருக்குறள் அமைப்பும் முறையும்’ (1972) நூலில் மு. சண்முகம் பிள்ளை கூறுகிறார்.
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 308 - 29.10.2025]
#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi















