Sunday, December 30, 2012

பெண்களின் விதிகள்

பெண்களின் விதிகள்


டிசம்பர் 16, 2012 ஆம் நாள் இரவு, இந்தியத் தலைநகர் டெல்லியில், கயவர்களால் வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளான 23 வயது கல்லூரி மாணவியின் நிலையைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. தற்பொழுது சிங்கப்பூர் அனுப்பப்பட்டு, உறுப்பு மாற்றச் சிகிச்சை பெறும்  நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் அவர். ஞாயிறு மாலை திரைப்படம் பார்த்துவிட்டு, தக்கத் துணையுடன் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை இது.  இதனால் மக்கள் பொங்கி எழுந்து, தலைநகரும், நாடும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. கலவரத்தில் மேலும் உயிர்ச் சேதம்.

செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள், இணையப் பதிவுகள் என ஊடகங்கள் யாவும் இந்தக் கொடூர நிகழ்ச்சியினை ஆராய்ந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.  கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றது.  இந்தியப் பெருநகரங்களில் வன்புணர்ச்சி நிகழ்வுகள் அதிகம் என்றொரு  தகவல்.  இந்த ஆண்டு மட்டுமே டெல்லியில் 582 வன்புணர்வுக் குற்றங்கள் பதியப் பட்டிருக்கிறது என்ற தகவலை வெளியிடுகிறது “மெயில் டுடே”.

காலம் காலமாக நகரில் நடக்கும் கொடுமைதான் இது. மக்கள் தற்காலத்தில் விழிப்புணர்ச்சியுடன்  தைரியமாக வெளிவந்து போராடுவதாலும், நியாயம் கேட்பதாலும், ஊடகங்களின் தகவல் தொலைத்தொடர்பு முன்னேற்றத்தினாலும் இப்பொழுது புள்ளிவிவரங்கள் அதிகம், மக்கள் கவனத்தையும் அது கவர்கிறது.  முன்பு மானம், மரியாதை போகும் என வெளியில் சொல்லாமல் குமைந்து கிடந்தனர் என்று விளக்க முற்படுகிறார்கள்  ஒரு சாரர்.

இது தகுந்த வாதமல்ல, முன்னை விடக் குற்றங்கள் அதிகரித்து விட்டது.  இதற்குக் காரணம் இவை இவை எனப் பட்டியலிடுகிறார்கள் மற்றப் பிரிவினர்.  கடுமையான மரண தண்டனையே இதற்குச் சரியான தீர்வு எனக்  குற்றத்தைக் குறைக்க வழியும் சிலரால் சொல்லப்படுகிறது. இவ்வாறு நடந்த பின்பு, நோய் வந்தபின்பு மருந்து போடுவதைப் போலச்  செயல் படாமல், நோயே வராமல் வழி வகுப்பது போல, குற்றம்  நிகழக் காரணமாக இருந்த காரணிகளை நீக்க வேண்டும் என்ற கருத்துக்களும் வலம் வருகிறது.

குற்ற நிகழ்ச்சியின் மூலம் என ஆராயும் பொழுது அதற்கும் பற்பல காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன:
- பெண்களின் ஆபாச உடை குற்றத்திற்கு ஒரு காரணம் என்று சொல்பவர் உண்டு.  பொருள் பூட்டப் படாமல் வெளியே இருந்தால் நமது என்று திருடும் மனப்பான்மை நம்மிடம் உண்டு என்பதைச் சொல்கிறது இந்த வாதம். உணர்ச்சிகளைச் சுயக்கட்டுப்பாட்டில் வைக்காமல் பெண்களைக் கண்டவுடன் மேலே பாயும்   நாகரீகம் அடையாத காட்டுமிராண்டித்தனத்திலிருந்து முன்னேற்றம் அடையாதவர்களா மனித இனத்தினர்?

- பெற்றோர்கள் வளர்ப்பைக் குறை கூறுவோர் உள்ளனர். இவர்கள் வாதப்படி உழைக்கும் பெற்றோர்களால் குழந்தை வளர்ப்பில் நேரம் செலுத்த முடிவதில்லை.  இதன் விளைவு போக்கிரிப் பிள்ளைகள் உருவாதல் என்பது.  இவ்வாறு குறை கூறுபவர்கள் காலம் மாறிவிட்ட நிலையில் குழந்தைகள் வளர்ப்புச் சூழ்நிலை முன்பு போல இல்லை என்ற உண்மையை முக்கியமாக மறந்து விடுகிறார்கள்.

இயற்கையாக மரபணு அடிப்படையில்  வந்த   குணநலன்களும், வளர்ப்பு சூழ்நிலையும் (Nature + Nurture) மனிதப் பண்புகளுக்கு அடிப்படைக் காரணம்.  எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வளர்ந்து சமுதாயத்தின் களைகளாக மாற வேண்டும் என்று விரும்புவதும் இல்லை, அவ்வாறு வளர்க்க நினைப்பதும் இல்லை. குழந்தை பிறந்த முதலே அவர்களை  எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்பது  பெற்றோர்களின் கனவு.  அதைக் குறைத்து மதிப்பிடுவது தவறு.  குழந்தை வளர்ப்புச் சூழ்நிலை மிகவும் மாறிவிட்டது.  வளரும் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து கற்றுக் கொள்வதைவிட ஊடகங்களின் மூலம் அறிந்துகொள்வது இக்காலத்தில் அதிகம்.

பெண்களின் நடை உடை பாவனையைக் கட்டுப் படுத்த நினைப்பதோ, அல்லது “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே”,  என்று பாடிக்கொண்டிருப்பதோ காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்கள் மட்டுமல்ல, பெண்களுக்குக்  குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டு,  அவர்களை மறைமுகமாகக் கட்டுப்படுத்த நினைக்கும் செயல் திட்டங்கள்.  இது போன்ற வாதங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும்.

உண்மையான காரணம் குடும்பத்திற்குள் கருத்துப் பரிமாற்றத்தில் ஏற்படும் குறைகள்.  பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்பைக் குழந்தைகளுக்குச் சரியான முறையில் எடுத்துச் சொல்வதில்லை. குழந்தைகளுக்குக் கிடைக்கும் கருத்துப் பரிமாற்றங்களோ அவர்களை நல்வழிப் படுத்துவதாக இல்லை.  காலம் காலமாகக் குழந்தைகளை நல்வழிப்படுத்த நன்னெறி கதைகள் கூறப்பட்டு வளர்க்கப்பட்டார்கள். சத்ரபதி சிவாஜி  தன் தாயிடம் கதை கேட்டு  வளர்ந்ததையும், காந்தி அரிச்சந்திரா கதை கேட்டு உண்மையே பேசும் மகாத்மாவாக வளர்ந்ததையும் சிறு வயதில் நாம் அனைவரும் பள்ளியில் படித்துள்ளோம்.

இக்காலக் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பில்லை.  அவர்களுக்கு சத்ரபதி சிவாஜிக்கும், காந்திக்கும் கொடுக்கப்பட்ட முன்னுதாரணங்கள் போல நல்ல முன்னுதாரணங்கள் காட்டப் படுவதில்லை. பெற்றோர் நல்ல முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக முன்பு பிள்ளைகளுக்கு ஒரு கதை சொல்லப்படும்.  தன்  தந்தையை அவமதித்துச் சரிவர உணவிடாமல் இருந்தான் ஒருவன். அவனது தந்தை இறந்த பிறகு அவன் மகனே அந்த உணவுத் தட்டை எடுத்து பத்திரப் படுத்துவான். அதில் அவன் கிழவன் ஆனவுடன் அதே  போலச் சோறு போடப் போவதாகச் சிறுவன் சொல்வதாகவும் கூறப்படும். இதைக் கேட்ட பின்பு தந்தையை அவமதித்தவனுக்குத்   தன் தவறு புரியும்.

இது போன்ற நன்னெறிக் கதைகளும், நம்  நாட்டின் பெருமை வாய்ந்த இதிகாச நீதிக் கதைகளும், இலக்கியக் கதைகளும் வளரும் பிள்ளைகளை நல்வழிப் படுத்த இப்பொழுது பயன் படுவதில்லை. அவர்களை எளிதில் சென்றடையும் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள்,  காணொளி விளையாட்டுகள் யாவும் போதிப்பது வன்முறையே. இப்பொழுது குழந்தைகளுக்கான திரைப்படங்கள்  தயாரிக்கப் படுவதில்லை. சமீபத்தில் கர்ணன் படம் பார்த்தவர்கள் இது போன்று குடும்பமாகச் சென்று பார்க்கும் படங்கள் இப்பொழுது வருவதில்லை என்று நொந்து கொண்டார்கள்.

இந்தியத்  தணிக்கைக் குழுவால் பெரியவர்கள் பார்ப்பதற்கு மட்டும் என்ற தகுதிச் சான்றிதழ் பெற்ற படங்கள் திரை அரங்குகளில் மட்டும் வெளியிடப்பட்டுப்  பார்க்கப் படுவதில்லை. குழந்தைகள் பார்க்கத் தகுதியற்ற அப்படங்கள் “இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக… திரைக்கு வந்து சில மாதங்களே ஆன… புத்தம் புதிய திரைப்படம் என்ற அறிவிப்புடன் ” சில வாரங்களில் தொலைக்காட்சி வழியே வளரும் குழந்தைகளின் பார்வைக்கு வருகிறது. அப்பொழுது இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு சான்றிதழ் தன் தகுதியை இழந்து விடுகிறது. படம் ஆரம்பிக்கும் முன் காட்டப்படும் தகுதிச் சான்றிதழைத் தொலைக்காட்சியில் படம் பார்ப்பவர் மதித்ததாகக் கேள்விப் பட்டதில்லை.

இதுபோன்ற தகுதியற்ற திரைப்படங்களும், இவற்றையும் விடத் தகுதியற்ற தொலைக் காட்சிகளும், அவற்றை ஆதரிக்கும் விளம்பரங்களும் குழந்தைகளுக்குப் போதிக்கும் நன்னெறி என்ன? அவை  வாழ்வின் குறிக்கோள் என்னவென்று வளரும் குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறது? உண்மைக்குப் புறம்பான காட்சிகளும் வன்முறையும்தான் அவர்களுக்கு வாழ்வில் என்ன குறிக்கோளைக் கொடுத்துவிடும்.

அத்துடன் இதுபோன்ற திரைப்பட, தொலைக்காட்சிகள் மற்றும் விளம்பரங்களில் பெண்களைச் சித்தரிப்பதும் அவர்கள் பிறப்பின் நோக்கமே ஆண்களின் தேவையைப்   பூர்த்தி செய்வதும், அதற்காகத்  தங்கள் அழகு ஒப்பனை பற்றியே கவனம் செலுத்த வேண்டும்  என்ற நோக்கிலேயே அமைக்கப் படுகிறது (ஓரிரு விதிவிலக்குகளும்   உண்டு).

பெண்களை ஆண்களின் வாழ்க்கைத் துணையாக, நல்ல நட்பாக அறிவுறுத்த வேண்டும்.   ஆண்களின் இச்சைப் பொருட்களாக,  தனக்கென சுயசிந்தனை இல்லாத உயிரினம் போன்ற எண்ணங்களை உருவாக்கும் காட்சிகளைத்  தவிர்க்க வேண்டும்.  உண்மையாக நடப்பதைத்தான் சித்தரிக்கிறேன் என்ற காரணம் கூறி சமுதாயப் பொறுப்பிலிருந்து தவறக்கூடாது.  பெண்களைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தைச்  சமுதாயத்தில் நிலை  நிறுத்தாத வரை பெண்களுக்குத் தற்காப்பு பயிற்சிகள் அளிப்பதோ, மீண்டும் நீதி போதனை வகுப்புக்களைப் பள்ளியில் துவக்குவதோ சரியான பயனை அளிக்காது.

பொழுதுபோக்கு படைப்புகளில்  பெண்கள் பண்புடன் சித்தரிக்கப் படுவதை நிர்ணயிக்க  அமெரிக்காவில் “பெஷல் சோதனை” (Bechdel Test; /bech·del test/) உபயோகப் படுத்தப் படுகிறது. பெஷல் சோதனை முறை மிகச் சமீபத்தில்தான் பிரபலமடைந்தது (இந்தச் சுட்டி வழி சென்று அதன் பரவலைக் காணலாம்: http://www.google.com/trends/explore#q=Bechdel%20Test).  ஆலிசன் பெஷல் (Alison Bechdel) எழுதிய “டைக்ஸ்  டு வாட்ச் அவுட் ஃபார்” (Dykes to Watch Out For ) என்ற ஓவியக் கதையே இந்த ‘பெஷல் சோதனை’ முறை தோன்ற அடிப்படையாகும். இக்கதைத் தொடரில் 1985 ஆம் ஆண்டு வெளியான “தி ரூல்” (“The Rule”) என்ற அத்தியாயத்தில் ஒரு பெண் தன் தோழியிடம் அவர் பார்க்கும் திரைப்படங்களின் தகுதி எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிடுவார்.

தி ரூல் கதையின் படம்:


அப்பெண்ணின் கொள்கையின் படி அப்படங்கள் கீழ்க்கண்ட மூன்று தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
(1) குறைந்தது இரண்டு பெண்களாவது கதையில் இடம் பெற்றிருக்க வேண்டும்

(2) இடம் பெறுவது மட்டும் போதாது அவர்கள் தங்களுடன் உரையாடிக்கொள்ள வேண்டும்

(3) அப்பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதும் ஆண்களைப் பற்றி இருக்கக்கூடாது


இந்த மூன்று விதிகளிலும் தேர்ச்சி  பெறும் கதைகளே  பெண்களின் சமத்துவத்திற்கு ஊறு விளைவிப்பதில்லை என முடிவெடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு தேர்ச்சி  பெறும் படங்கள் பார்க்கத் தகுதி வாய்ந்த படவரிசையிலும் இடம் பிடிக்கிறது. இதனால், பெஷல் சோதனை முறை புனைகதை படைப்புகளில் பெண்களுக்குக் கொடுக்கப்படும் சமத்துவத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாக உதவுகிறது.

முதலில் இச்சோதனை திரைப்படங்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப் பட்டாலும், பின்னர் தொலைக் காட்சி, புத்தகங்கள் என மற்ற புனை ஆக்கங்களின் தகுதியையும் நிர்ணயம் செய்ய உபயோகப் படுத்தப் படுகிறது.  இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அமெரிக்கப் படங்களில் ஏறத்தாழ 50% படங்கள் பெண்களுக்குச் சமத்துவம் தருவதாகத் தகுதி பெறவில்லை.  இதுவரை 3000 க்கும் மேற்பட்ட படங்கள் இச்சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. தகுதி பெற்ற படங்களிலும் பேசும் பெண்கள் உரையாடலில் தங்கள் குடும்பம், குழந்தைகள் போன்றவற்றையே பேசுகிறவர்களாகச் சித்தரிக்கப் படுகிறார்கள்  எனக் குறைபடுவோரும் உண்டு.

இச்சோதனையை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் எத்தனை இந்தியப் படங்கள் தேர்ச்சி  பெறும் என்பது கேள்விக்குறியே.   பொழுது போக்கு ஆக்கங்களில் பெண்கள் சமத்துவத்துடன் சித்தரிக்கப் படும்  பொழுது, சமுதாயத்தில்  அவர்களுக்குத்  தகுந்த மரியாதையை அந்த முயற்சி பெற்றுத்தரும்  என்பதில் சந்தேகமில்லை. அதனால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் குறையும்.

இந்தியா ஆன்மீக நாடு, பெண்கள் எங்கள் கண்கள் போன்றவர்கள் என்பது போன்ற வெட்டிப் பேச்சுக்களைக் குறைத்துக் கொண்டு வளரும் இளைய சமுதாயத்திற்கு நல்வழி காட்ட முன்வந்து அதற்கேற்ற நடவடிக்கையை  எடுக்க வேண்டும்.

சமுதாயப் பொறுப்புமிக்க படைப்புகளை உருவாக்குவதும் , அவற்றின் வழியே தகுதி நிறைந்த முன்னோடிகளை வளரும் பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்தி அவர்களை நல்வழிப்படுத்துவதும்  நம் யாவருக்கும் கடமையாகிறது.

References:
Shock and outrage over India Delhi bus gang rape, 17 December 2012 – (http://www.bbc.co.uk/news/world-asia-india-20765320)

Bechdel test, From Wikipedia, the free encyclopedia – (http://en.wikipedia.org/wiki/Bechdel_test)

The ‘Bechdel Rule,’ Defining Pop-Culture Character, by Neda Ulaby, September 02, 2008 – (http://www.npr.org/templates/story/story.php?storyId=94202522)

Alison Bechdel’s ‘The Rule’ strip, from a 1985 installment of her comic Dykes to Watch Out For – (http://dykestowatchoutfor.com/)



நன்றி: திண்ணை
டிசம்பர் 30, 2012



#திண்ணை, #பெண்ணியம், #Themozhi 




Wednesday, December 19, 2012

காத்திருக்க வேணும்!

 காத்திருக்க வேணும்!

 
ஓவியம்: ஓவியர் இளையராஜா


பத்துப் பாத்திரம் கழுவ வேணும்
அழுக்குத் துணியும் துவைக்க வேணும்
தோசைக்குச் சட்னி அரைக்க வேணும்
இட்லிக்கு மாவும் அரைக்க வேணும்
கம்பளத்து தூசி நீக்க வேணும்

தொட்டியில் நீர் நிரப்ப வேணும்
மகன் குளிக்க வெந்நீரும் வேணும்
மகள் படிக்க விளக்கு வேணும்
இவை முடிக்க மின்சாரம் வேணும்
இதற்கு நாளும் காத்திருக்க வேணும்
 



நன்றி: வல்லமை 
டிசம்பர் 19, 2012 


#கவிதை, #வல்லமை, #Themozhi 





Wednesday, November 28, 2012

தனிம வரிசை அட்டவணை: வேதியியல் வரலாற்றில் இன்றியமையாத கண்டுபிடிப்பு

தனிம வரிசை அட்டவணை: வேதியியல் வரலாற்றில் இன்றியமையாத கண்டுபிடிப்பு



இதுவரை உலகில் 120  தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இத்தனிமங்கள் அனைத்தையும் தனித்தனியாக அவற்றின் பண்புகளை அறிந்து நினைவில் கொள்வது கடினம்.

இதற்கு உதவுவது தனிம வரிசை அட்டவணை. தனிம வரிசை அட்டவணையில்,  தனிமங்களை  அதன் பண்புகளின் அடிப்படையில் தொகுதிகளாகப் பிரித்து அட்டவணையாக வரிசைப்படுத்திய விதம் தனிமத்தின் வேதியியல் பண்புகளை நினைவில் நிறுத்திக் கொள்ள உதவுகிறது. தனிம வரிசை அட்டவணையானது மனிதக்குலம் உருவாக்கிய, மனிதக் குலத்தின் அறிவாற்றலைக் காட்டும் ஓர் ஈடு இணையற்ற படைப்பாகும்.


டோபரின்னர், ஜான் நியூலேண்ட், லோதர் மேயர் போன்ற அறிவியல் அறிஞர்கள் தனிமங்களின் பண்புகளை அடிப்படையாகக்கொண்டு அவற்றை வரிசைப்படுத்த முயன்றுள்ளனர்.  ஆனால், ரஷ்ய வேதியியல் அறிஞர் ‘டிமிட்ரீ மெண்டலீயா’ (Dmitri Mendeleev) என்பவர் 1871ஆம் ஆண்டில் உருவாக்கிய தனிம வரிசை அட்டவணை அனைத்தையும் விட மிகச் சிறப்பானது.

மெண்டலீயா தனிமங்களை அவைகளின் அணுநிறைகளின் அடிப்படையில், குறைந்த அணுநிறையிலிருந்து அதிக அணுநிறை உள்ள தனிமங்களை இடமிருந்து வலமாக (நாம் எழுதுவதுபோல) அட்டவணைப்படுத்தினார். அவர் அவ்வாறு வரிசைப்படுத்தி ஆராய்ந்த பொழுது, வரிசையில் ஒத்த தன்மை இல்லாத தனிமங்களுக்கு இடையில் வெற்றிடம் விட்டு  அங்கு  இடம்பெற வேண்டிய பண்புகளையுடைய  தனிமங்கள் இனிமேல்தான் கண்டறியப்பட வேண்டும் என நிர்ணயித்தார். இதுதான் மிகவும் ஆச்சரியகரமான அறிவியல் கண்டுபிடிப்பு. 



இவ்வாறு வெற்றிடங்களில் இடம் பெற வேண்டிய தனிமங்கள் என அவர் குறிப்பிட்டவை  அவர் அட்டவணையைத்  தயாரித்த காலத்தில் கண்டறியப் பட்டிருக்கவில்லை. எனினும்,  இன்னமும் கண்டறியப்படாத அந்தத் தனிமங்களின் பண்புகளை அட்டவணையில் அவை இடம் பெற்ற இடத்தினையும், அருகே சூழ்ந்திருக்கும் மற்ற தனிமங்களின் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு யூகிக்க முடியும்.  இதுவே இவரது தனிம அட்டவணையின் சிறப்பிற்குக்  காரணம்.

அவ்வாறு தனிம அட்டவணையில் இடம் பெற வேண்டிய தனிமங்களின்  இடத்தினைக்  கருத்தில் கொண்டு, அவற்றின் பண்புகளை யூகித்து  சில தனிமங்களை  ‘எகா  அலுமினியம்’ (அலுமினியத்தின் பண்பினை ஒத்தது), ‘எகா சிலிக்கான்’ (சிலிக்கானின் பண்பினை ஒத்தது)  என்று குறிப்பிட்டார்.  ஆனால் அது போன்ற பண்புகளைக் கொண்ட தனிமங்கள் அப்பொழுது கண்டறியப் பட்டிருக்காவிட்டாலும், பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மெண்டலீயா யூகித்தது போன்றே அவற்றின் பண்புகளும் இருந்தன.

மெண்டலீயா 1871 ஆம் ஆண்டு எகா  அலுமினியத்தின் பண்புகளைக் குறிப்பிட்டார். அதன் பிறகு 1875 ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘பால் எமிலி லெகாக் டி பாய்ஸ்பவுட்ரன்’ (Paul Emile Lecoq de Boisbaudran) ‘காலியம்’ (gallium) என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். ஃபிரான்ஸ் நாட்டினைக் குறிக்கும் ‘கால்’ (Gaul) என்ற சொல் இந்தப் பெயரினை இட அடிப்படைக் காரணமானது. இந்தத் தனிமத்தின் பண்புகள் அலுமினியத்தைப் போன்றே இருக்கிறது.  காலியத்தைத் தவிர ஸ்கேண்டியம், ஜெர்மானியம், ரேனியம் ஆகிய தனிமங்களின் பண்புகளையும் அவைகளைக் கண்டுபிடிக்கப்படும் முன்பே மெண்டலீயா குறிப்பிட்டு விட்டார். 

மெண்டலீயா ‘எகா மாங்கனீஸ்’ எனக் குறிப்பிட்ட தனிமம் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ‘டெக்னீடியம்’ என்று பெயரிடப்பட்டது. டெக்னீடியம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1937, அதாவது மெண்டலீயா அத்தனிமத்தின்  பண்புகளைக் குறிப்பிட்ட பின்பு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகே, அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகே கண்டு பிடிக்கப்பட்டது.

நோபல் பரிசுகள் கொடுக்க ஆரம்பித்த ஆரம்ப ஆண்டுகளில், 1907 ஆம் ஆண்டு மெண்டலீயா இறந்துவிட்டதால் அவரது கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனது. ஆனால், 1955 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம் (University of California, Berkeley) உருவாக்கிய, அணு எண்  101 ஐக் கொண்ட தனிமத்திற்கு மெண்டலீயாவினைப் போற்றும் விதமாக மெண்டலீயம் (mendelevium) எனப் பெயரிடப்பட்டது. இந்த கௌரவம் நோபல் பரிசை விட உயர்ந்தது. இதுவரை நோபல் பரிசை 800 க்கும் அதிகமானவர் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தனிம வரிசை அட்டவணையில் இடம் பிடித்த அறிவியல் அறிஞர்கள் 15  பேர்கள் மட்டுமே, அவர்களில் மெண்டலீயாவும்  ஒருவர்.

இவர் பிறந்த ரஷ்யாவில் இவரைப் போற்றும் வண்ணம் பல பல்கலைக் கழகங்களின்  ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மெண்டலீயாவின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.  ‘மெண்டலீயா தங்கப் பதக்கம்’ என்ற பரிசும் 1962 ஆம் முதல் சிறந்த அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.



சான்றாதாரம்: TED Ed – The genius of Mendeleev’s periodic table


படம் உதவி:
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/DIMendeleevCab.jpg/427px-DIMendeleevCab.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/5/55/Mendelejevs_periodiska_system_1871.png
http://upload.wikimedia.org/wikipedia/commons/8/84/Periodic_table.svg

 
நன்றி: வல்லமை 
நவம்பர் 28, 2012  


#அறிவியல், #வல்லமை, #Themozhi 



 

Monday, November 26, 2012

வலி நிவாரணி வேலை செய்யும் விதம்

வலி நிவாரணி வேலை செய்யும் விதம்


நம் காலில் ஒரு முள் குத்தினால் நமக்கு எவ்வாறு  தெரிகிறது?
நாம்  முள் குத்தியதை அறியும் விதம் வலி என்ற உணர்வு தோன்றும் காரணத்தினால்தான். 



வலி ஏன் ஏற்படுகிறது?
வலி என்ற உணர்வு நம்மை ஆபத்திலிருந்து காப்பதற்கு உதவுகிறது.  இது உயிர் காக்கும் ஒரு நட்பைப் போன்றது. வலியை நாம் உணராவிட்டால் நம் விரலைத் தவறுதலாகக் காய் வெட்டும்பொழுது வெட்டிக்கொண்டாலும் நமக்குத் தெரியப்போவதில்லை. நமக்கு நாமே தீங்கு செய்து கொண்டு இழப்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். அல்லது சுற்றுச் சூழலில் உருவாகும் ஆபத்தை உணராமல் நமக்குத் தீங்கு நேரும், உயிருக்கும் ஆபத்து நேரும். வலி நமக்கு ஆபத்தைத் தவிர்க்க உடல் ஏற்படுத்தித் தந்த ஒரு முன்னெச்சரிக்கை  ஒலி.

நாம் வளரும்பொழுது வலியை உணர்த்தும் நரம்பு செல்கள் நம் உடலில் ஆங்காங்கே பல பகுதிகளில் நிறுவப்படுகிறது. வலியை உணரும் நரம்பு செல்கள் சாதாரண நரம்பு செல்களில் இருந்து வேறுபட்டவை, மேம்பட்டவை. இவற்றை “நோசிசெப்டர்ஸ்”(nociceptors) எனக் குறிப்பிடுகிறோம்.

இந்த நரம்பு செல்கள் தண்டுவடத்திலிருந்து கிளம்பித் தோல், தசை, எலும்பு, மூட்டுகள், உடலின் உள்ளுறுப்புகள் எனப் பல  பாகங்களையும் மூளையுடன் இணைக்கிறது. மற்ற நரம்பு செயல்களைப் போலவே வேலை செய்து  மின் சமிக்கைகள் மூலம் செய்திகளை மூளைக்கும் உடலுறுப்புகளுக்கும் பரிமாற்றம் செய்கிறது. ஆனால் உடலுக்குச் சேதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே இவை இயங்கத் தூண்டப்படும்.

உதாரணமாக, ஓர் ஊசியின் முனையை மெதுவாகத் தொட்டவுடன் நமக்கு வலி தெரியாது, வழக்கமான உணர்வு அதைத் தொடுகிறோம் என மட்டுமே நமக்கு அறிவுறுத்தும்.  ஆனால் முனையை மேலும் அழுத்தினால் நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்களின் இயக்கம் தூண்டப்படும். உடலுக்குச் சேதம் ஏற்படும் நிலை ஏற்படும் பொழுது அப்பகுதியில் உள்ள செல்கள் அராக்கிடானிக் அமிலம் (arachidonic acid) எனப்படும் வேதிப்பொருட்களை வெளியிட்டு நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்களை இயங்கத் தூண்டும். அந்த நரம்பு செல்கள் வலியின் தீவிரத்தை நமக்குத் தெரியப்படுத்தும்.

வலியின் தீவிரம் என்பதும்  நிலையான ஒன்றல்ல.  வேதிப்பொருட்களால் அதன் தீவிரத்தை மாறுபடுத்த முடியும்.  வேதிப் பொருட்களிலான மருந்துகளை நாம் வலிநிவாரணிகளாக  உபயோகப்படுத்துவதும்  அதனால்தான். இதனால் வலியின் தீவிரத்தை நாம் குறைக்கிறோம். “ஆஸ்ப்ரின்” மற்றும் “ஐபிப்ரோஃபின்” மருந்துகள் வலியின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது. 


வலியை உணர்வது எப்படி? 
உடலுக்குச் சேதம் ஏற்படும் நிலை தோன்றினால் அப்பகுதியில் உள்ள செல்கள் அராக்கிடானிக் அமிலத்தினை உற்பத்தி செய்யும். திசுக்களில் உள்ள “காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற வேதிப்பொருட்கள்” (COX-1 and COX-2 enzymes) இவ்வாறு வெளிக்கிளம்பும் அராக்கிடானிக் அமிலத்தினை “ப்ரோஸ்ட்டாகிலாண்டின்ஸ்” (prostaglandins-H2) எனப்படும் வேதிப்பொருளாக மாற்றும்.  தொடர்ந்து ப்ரோஸ்ட்டாகிலாண்டின்ஸ் வேறு பற்பல வேதிப்பொருட்களாகத் தொடர்ந்து மாறுதல்களை  அடைந்து உடலில் சுரம், அழற்சி, வீக்கம் ஏற்படுத்துவது எனப் பல வகையில் செயல் படத் தொடங்கும்.  

ஒவ்வொரு வேதிப் பொருளுக்கும் வினையூக்கி பகுதி (active site) என்ற ஒரு பகுதி ஒன்று உண்டு. இந்தப் பகுதியில்தான் வேதியியல் வினைமாற்றங்கள் நிகழும்.  காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற வேதிப்பொருட்களின்  வினைப்பகுதியில், பாதிக்கப்பட்ட செல்கள் வெளியேற்றிய அராக்கிடானிக் அமிலம் கச்சிதமாக வந்து பொருந்தும். இதன் விளைவு, நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்கள்  இயங்கத் தூண்டப்பட்டு வலியை நாம் உணர்வது.

நியூரோபத்திக் வலி (Neuropathic pain) என்பது நரம்பு செல்களே சேதம் அடைந்தால் உண்டாவது. இந்த வலி உண்டாக உடலுக்கு வெளியிலிருந்து தூண்டப்படும் பாதிப்பு தேவையில்லை. 


வலிநிவாரணிகள் எவ்வாறு வேலை செய்கிறது?
ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃபின் மருந்துகள் உட்கொள்ளப்பட்டபின் அவை இரத்தத்தில் கலந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும், அதுபோல பாதிக்கப்பட்ட உடலுறுப்பினையும் அடையும்.  அங்கு அது காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற வேதிப்பொருட்களின் வினைப்பகுதியினை அடைந்து அங்கு அராக்கிடானிக் அமிலம் பொருந்த விடாமல் அப்பகுதியைச் செயலிழக்கச் செய்யும்.

இவ்வாறு செயலிழக்கச் செய்வதை ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃபின் மருந்துகள் வேறு வேறு விதமாக நிகழ்த்தும்.  ஆஸ்ப்ரின் வினைப்பகுதியின் இடத்தில் சிதைவடைந்து அந்த வினைப்பகுதியின் இடத்தையும் அடைத்துவிடும், அந்த வேதிப் பொருட்களை  நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்யும்.

ஐபிப்ரோஃபின் அவ்வாறு சிதைவடையாவிட்டாலும், காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற வேதிப்பொருட்களின் வினைப்பகுதியினை அடைந்து அந்த இடத்தில் அது இருக்கும் வரை அராக்கிடானிக் அமிலத்தினைப் பொருந்த விடாது தடை செய்யும். இந்த வினையில் காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற வேதிப்பொருட்களின் தன்மை மாறுபடாது ஆனால் தற்காலிகமாகச் செயலிழக்கும்.

இவ்வாறு வலிநிவாரணிகள் வெவ்வேறு வகையில் செயல் பட்டு  வேதிப்பொருட்களை  வெவ்வேறு வகையில் செயலிழக்கச் செய்து,  வேதிப்பொருட்களை அராக்கிடானிக் அமிலத்துடன் வினை செய்வதைத் தடுப்பதன் மூலம் வலியின் தீவிரத்தைக் குறைத்து வலியிலிருந்து நமக்கு நிவாரணத்தைத் தருகின்றன.

வலியை உணர்வதிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் நமது மூளையும்  பெரும்பான்மையான பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு  வலியைப்பற்றியே அதே கவனத்தில் இருந்தாலோ அல்லது நாம் மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருந்தாலோ நாம் வலியின் தீவிரம் அதிகம் இருப்பது போல உணர்வோம் 



உதவிய தளம்: 
TED Ed – How Do Pain Relievers Work?
படம் உதவி: http://static3.businessinsider.com/image/4f3552766bb3f79b6c000050/headache.jpg

 
நன்றி: வல்லமை 
நவம்பர் 26, 2012  

​​​​​​--------------------------------

நன்றி: ஹெல்த்கேர் மருத்துவ மாத இதழ் - ஜூலை 





#அறிவியல், #வல்லமை, #ஹெல்த்கேர், #Themozhi 

 

வாழ்க்கைச் சுவடுகள்


வாழ்க்கைச் சுவடுகள்


நம் பாரதத்தில் பிறந்தவர்களின் வரலாற்றுக் குறிப்புகளின் நிலை மிகவும் வருந்தத் தக்கது.

பொதுவாக ஒருவர் காலம் பல கடந்தும், அதாவது பற்பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் நினைவுகூரப்பட வேண்டும் என்றால் அவர்கள் பொதுவாகச் சில பண்புகளைக் கொண்டிருப்பார்கள்.
- அவர்கள் கலையிலோ, இலக்கியத்திலோ (ஆன்மீகம், அரசியல், அறிவியல் துறைகள் உள்ளடக்கிய படைப்புகள் உட்பட)  தங்கள் பங்கினை அளித்திருப்பார்கள்
- அதிகாரம் மிக்க அரச குடும்பத்தினராக இருந்திருப்பார்கள்
- செல்வந்தராக இருந்து ஈகைகள் பல புரிந்த புரவலர்களாக இருந்திருப்பார்கள், அல்லது
- மக்கட்பணியாற்றிய (ஆன்மீகத் தொண்டு ஆற்றியவர்களையும் இப்பிரிவில் கொள்ளலாம்) மாமேதைகளின் பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை  என்ற காரணங்களினாலும் சிலர் வரலாற்றில் இடம் பெறுவார்கள்.

இவர்களைப் பற்றிய இது போன்ற குறிப்புகள்தான் நமக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.  சாதனையாளர்கள் மட்டுமே வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். மற்ற சாதாரணர்களுக்கு அந்த வாய்ப்பு இருந்ததில்லை.

பெரும்பாலும் ஆண்களோ அல்லது பெண்களோ, இந்த விதிக்கு விலக்கல்ல. இதில் சொத்துரிமை இருந்ததினால் ஆண்களின் வாழ்க்கைக் குறிப்புகள் சற்று அதிகம் இருக்க வாய்ப்பிருந்தது. இன்னாரின் மகனும் இன்னாரின் பேரனுமான இன்னாருக்கு உடமையான இந்தச் சொத்து, இன்னாரின் மகன்களான இவர்களுக்கு இவ்வாறு பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்ற ஆவணங்கள் இருக்கும்.  இதற்கும் மேலாக பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னர் சராசரி வாழ்க்கை வாழ்ந்த ஆண்களுக்கு அவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் இருக்குமா எனத் தெரியவில்லை.

அடுத்த நூற்றாண்டினரிடம் இந்த நிலையில் சிறிது முன்னேற்றம் இருக்கலாம். பெரும்பாலும் பிறப்பும், திருமணமும், இறப்பும் பதிவு செய்யப்படாத  நிலை பரவலாக இருந்திருக்கலாம்.  ஆனால் பள்ளி சென்ற குறிப்புகளும், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற குறிப்புகள் எனவும் ஏதாவது ஒரு சில குறிப்புகள் இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளின் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது.

பண்டைக் காலத்தில் இலக்கியப் பணியாற்றிய ஒளவையார், காக்கைப் பாடினியார், இடைக்காலத்தில் இருந்த கோதை நாச்சியார், தற்காலத்தில் மறைந்த சரோஜினி நாயுடு, லஷ்மி, அனுராதா ரமணன் போன்றவர்கள் இலக்கியத்திற்காக நினைவில் நிற்கிறார்கள்.

அது போன்றே எம்.எஸ்.சுப்புலஷ்மி, டி. கே. பட்டம்மாள், டி. பாலசரஸ்வதி , சாவித்திரி, பத்மினி, டி.ஆர். ராஜகுமாரி போன்றவர்கள் அவர்களது கலைப்பணிக்காக நினைவுகூரப்படுவார்கள்.

அதிகாரம் மற்றும் வீரம் போன்ற பங்களிப்பினால், வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, லக்ஷ்மி பாய், இந்திரா காந்தி போன்றவர்களும் நினைவு கொள்ளப் படுவார்கள்.

அரச குடும்பத்தில் பிறந்ததாலும், தனக்கென செல்வம் கொண்டிருந்ததாலும் இராஜராஜ சோழன் அரச குடும்பத்தைச் சார்ந்த செம்பியன் மாதேவி, அக்கன் குந்தவை, அந்த அரசனின் பெண்டுகள் அளித்த கொடைகளினால் கல்வெட்டிலும், செப்புப் பட்டயங்களிலும் குறிப்பிடப்பட்டார்கள்.

சத்ரபதி சிவாஜியின் தாய், புத்தரின் தாய், நேருவின் தாய், மற்றும் புகழ் பெற்ற காந்தியின் மனைவி போன்ற உறவுக் குறிப்புகளாலும் சிலர் வரலாற்றில் குறிப்பிடப் படுவார்கள்.

ஆனால் மற்ற பெண்களின் நிலை என்ன?

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்களுக்குக் கல்விக்குச் சென்றது, வேலையில் பணி  புரிந்தது, குடும்பச் சொத்தைக் கொண்டிருந்தது என்பதனால் அவர்களைப் பற்றிய குறிப்புகள் தெரிய வரலாம்.  ஆனால் பெண்களின் நிலை அதுவல்ல.

இதனை ஆதாரத்துடன் விளக்க என் மாமியாரின் வாழ்க்கையைப் பற்றி நினைவு கூர்ந்து என் கருத்தை விளக்க முற்படுகிறேன்.  மதிப்பிற்குரிய மறைந்த என் அத்தை அவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு தொண்ணூறுக்கும் மேலே வயதிருக்கலாம். சரியான வயது யாருக்கும் தெரியாது, ஆணித்தரமாகச் சொல்லவும் ஆதாரம் கிடையாது. இவர் என் தாய் மற்றும் தந்தை வழி பாட்டிகளையும் விட வயதில் மூத்தவர். நான் பழகிய குடும்ப உறுப்பினர்களுள் வயதானவர் என்பதால் அவரைத் தெரிவு செய்துள்ளேன்.

மனைவி மறைந்தவுடன் கைக்குழந்தைகளுடன் தனித்துவிடப்பட்ட என் மாமனாரை மணந்தவர்.  இருவருக்கும் ஏகப்பட்ட வயது வித்தியாசம் இருந்திருக்க வேண்டும், சரியாகச்  சொல்ல ஆதாரம் இல்லை.  அவரது மூத்த மகனுக்கு என் தந்தையின் வயது, அவரது கடைசி மகனை நான் மணந்து கொண்டேன்.  குறிப்பிடப்பட்ட இந்த இரு மகன்களுக்கும் இடையே உள்ள ஏகப்பட்ட இடைவெளியில் மேலும் பல மகன்களும் மகள்களும் இவருக்கு உண்டு.

அந்தக் காலத்தில் பெண்கல்வி இருந்த பரிதாபத்திற்குரிய நிலையினால் பள்ளிக்கும் அனுப்பப் படவில்லை. பிறந்ததற்கும் ஆதாரம் இல்லை. வளர்ந்ததற்குப் பள்ளி சென்ற ஆதாரமும் இல்லை. மணம் செய்து கொண்டதற்கும் ஆதாரமில்லை.  மணந்த பின்பு கந்தசாமியின் மனைவி, திருமதி கந்தசாமி போன்றுதான் குறிப்பிடப்பட்டார்.  அவர் பெயரால் யாரும் அவரை அழைக்கவில்லை. கலை மற்றும் இலக்கியத் தொண்டு என்றால் என்ன என்று  தெரியாதவர்.  அதிகாரம் எல்லாம் தன் பிள்ளைகளிடம் மட்டும்தான் செலுத்தினார், சொத்து என்று எதுவும் கிடையாது,  உழைத்தது குடும்பத்திற்கு மட்டும்தான். வயது அதிகமானவுடன் மரியாதை நிமித்தம் உறவு முறை சொல்லி அம்மா அக்கா, பாட்டி, அத்தை என அழைக்கப்பட்டார். பொதுவாகச் சென்ற நூற்றாண்டில் சராசரி  வாழ்க்கை வாழ்ந்த  ஓர் இந்தியப் பெண்ணின் வாழ்க்கை இது.

இறந்த பின்பு எரியூட்டும் வழக்கத்தினால் அவர் பெயரைக் குறிக்க நினைவுக்கல் என்றோ சமாதி என்றோ  எதுவுமில்லை. அவர் இறந்த பின்பும் அது குறித்துப் பதியப் படவில்லை.  அவ்வாறு செய்வதால் யாருக்கு என்ன ஆதாயம்?  அதனால் அதற்கு என்ன தேவை?  எனவே எங்கும் அவர் மரணத்தைப் பற்றிய குறிப்பு இல்லை. அவர் மறைந்த பின்பு குடும்பச் சொத்து பிரிக்கப் பட்டது.  சந்ததியினர் பிரித்துக் கொண்டனர். என் மாமனாரின் பெயரில் உள்ள சொத்து  பிரிக்கப் படுகிறது என்று பிரித்து ஆவணப் படுத்தி அதைப் பதிவு செய்து கொண்டார்கள். அதில் கந்தசாமி அவர்களின் பிள்ளைகள் என்ற குறிப்பிருக்கிறது.  ஆனால் அத்தையின் பிள்ளைகள் என்று யாரும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

சென்ற நூற்றாண்டு என்பதால் ஒரே ஒரு முன்னேற்றம், அவர் பிள்ளைகளின் பள்ளி இறுதி சான்றிதழ்களில், வெளிநாடு செல்ல நேர்ந்ததால் என் கணவரின் கடவுச்சீட்டு (passport) போன்றவற்றில்  ‘தாயார் பெயர்’ என்ற இடத்திலும், குடும்ப மற்றும்  வாக்காளர்  அட்டை  ஆகியவற்றிலும் அவர் பெயர் இருக்கிறது.

இவற்றைத் தவிர அந்த அம்மையார் வந்ததற்கும் ஆதாரமில்லை, வாழ்ந்ததற்கும் ஆதாரமில்லை, மறைந்ததற்கும் ஆதாரமில்லை.

    தேடிச் சோறு நிதந்தின்று-பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி
    மனம்வாடித் துன்பம் மிக உழன்று
    பிறர்வாடப் பல செயல்கள் செய்து
    நரை கூடிக் கிழப்பருவமெய்தி
    கொடுங்கூற்றுக் கிரையென மாயும்
    பல வேடிக்கை மனிதரைப் போலே
    நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
என்று பாரதியார் மனம் குமைந்து கேள்வியாகக் கேட்ட அதே வாழ்க்கையைத்தான் வாழ்ந்து மறைந்தார்கள்; இதற்கும் முன் இதுபோன்றே பலர் தோன்றி மறைந்தது போல.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்; அவர்கள் பிறந்தார்கள்…வளர்ந்தார்கள்...வாழ்ந்தார்கள்…மறைந்தார்கள்... ஒரு கதை முடிந்தது.

அவர்கள் பெற்றெடுத்து, வளர்த்து உருவாக்கிய சந்ததிகள் தொடர்கின்றனர் தங்களது வாழ்க்கைப் பயணத்தை. மக்களும், பேரக்குழந்தைகளும் இருக்கும்வரை அவர்களை அவ்வப்பொழுது நினைத்துப் பார்ப்பார்கள், பிறகு???

இவ்வளவும் சொல்லிய பிறகு அவர் பெயரைக் குறிப்பிடாவிட்டால் இக்கட்டுரையின் கருத்தை வலியுறுத்துவதற்கு மாறாக அமையும், அத்தாய்க்குலப் பிரதிநிதியின் பெயர் அழகம்மா என்பது.

சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் இயக்குநர் சசிகுமார் அவர்களும் இதனை வேடிக்கையாக வலியுறுத்துவார்.  அத்திரைப்படத்தில் தோன்றும் குடும்பத்தினருக்குத் தனக்கு முன் வாழ்ந்த இரண்டு தலைமுறையினருக்கு முன் உள்ள மூதாதையர்களைப் பற்றி எதுவும் தெரியாது.  அதற்கு நானும் விதிவிலக்கல்ல. என்குடும்பத்திலும், தாய் மற்றும் தந்தைவழி இரு பக்கங்களிலும் மூதாதையர்களைப் பற்றிய என் அறிவும் அதே  அளவுதான். என் பெற்றோருக்கும் அந்த அளவில்தான் நினைவிலிருந்து அவர்கள் மூதாதையரைப் பற்றிச் சொல்ல முடியும்.  அதைப் பதிந்து வைத்துக் கொள்வதற்கு யாருக்கும் பொறுமையும் ஆவலும் இருப்பதில்லை.

இந்த அழகில் மூதாதையரைப் பற்றி இவ்வளவு சிற்றறிவு கொண்ட நம் நாட்டினர் காதல் திருமணம், கலப்புத் திருமணம் போன்றவை தங்கள் குடும்பத்தில் நடந்தால்  பரம்பரைக் கௌரவம் போய்விட்டதாகவும், பரம்பரைப் பெருமைக்குக் குந்தகம் வந்து விட்டதாகவும் குய்யோ முறையோ எனக் கூக்குரலிடுவதைத் தனியாக விவாதிக்க வேண்டும்.

இந்த வகையில் மேற்கத்திய நாட்டினரைப் பாராட்ட வேண்டும்.  அவர்கள் பல வாழ்க்கை நிகழ்ச்சிகளை நன்றாகவே ஆவணப் படுத்தியுள்ளனர்.  அரச பரம்பரைக்குத்தான் என்று அல்ல, சராசரி மக்களுக்கும்தான். எதை எதையோ அவர்களிடம் இருந்து கற்கும் நாம் இதனையும் அவர்களிடம் இருந்து கற்றால் என்ன குறைந்துவிடும்?

அவர்கள்  தங்களது பரம்பரை  பற்றிய செய்திகளில் (Genealogy) ஆர்வம் உள்ளவர்களாக இருந்து வந்துள்ளார்கள்.  இப்பொழுது  பல இணைய தளங்களும் தோன்றி இதற்கு உதவுகின்றன. சமீபத்தில், ஜூலை 30, 2012 அன்று வெளியிடப்பட்ட சி.என்.என். செய்தி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களின் முன்னோர்களான பதினொரு தலைமுறை மூதாதையர்களையும் கண்டறிந்து, அவர் அமெரிக்காவிற்கு முதன் முதல் வந்த ஆப்ரிக்க நாட்டு அடிமை ஒருவரின் வழித்தோன்றல் என்று கண்டறிந்துள்ளார்கள்.  இதற்கு அவர்களுக்கு உதவியது ஒபாமாவின் தாய் வழி மூதாதையரின் பல ஆவணங்கள் ஆகும். இடைக்காலத்தில் எப்பொழுதோ கறுப்பரினத்திற்கும் வெள்ளையர் இனத்திற்கும் உறவு நிகழ்ந்து அதில் ஒபாமாவின் தாய் வெள்ளையர் இனப் பெண்ணாகப் பிறந்திருக்கிறார். 

நம் நாட்டினர்  இந்த வகையில்  ஏன் இவ்வாறு அசட்டையாக இருக்கிறோம்? பொதுவாக அரச குடும்பங்களைப் பற்றி அறியவே நம் வரலாற்று அறிஞர்கள் மிகவும் தடுமாற வேண்டியிருக்கிறது.  இதில் சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை.

நம் அசட்டைக்குக் காரணம் என்ன?  இவர்கள் என்ன பெரிதாகக் கிழித்துவிட்டார்கள் என்ற இளக்காரமா? இல்லை, நான் என்ன பெரிதாகச் சாதித்துவிட்டேன் எல்லாவற்றையும் குறிப்பில் கொள்ள என்ற தன்னடக்கமா?

கல்வெட்டுகளும் பல அரசகுல தான தர்மத்தைக் குறிப்பதில்  மட்டுமே அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறது. பணம் தொடர்புடையவற்றில் மட்டும்தான் நாம் அக்கறை செலுத்துவோமா?  மற்ற நிகழ்ச்சிகள் முக்கியமற்றவையா?  இல்லை, எல்லாவற்றையும் பதிவு செய்தால் வருங்காலத்தில் இதுபோன்றவரிற்குக் கையூட்டு கொடுத்து மாளாது, அதற்கே கைக்காசு செலவழிந்துவிடும் என்ற  தீர்க்கதரிசனமா?



நன்றி: திண்ணை
நவம்பர் 26, 2012


#திண்ணை, #பெண்ணியம், #Themozhi 


Sunday, November 11, 2012

பொன்னியின் செல்வன் (சுருக்கப்பட்ட பதிப்பு)


பொன்னியின் செல்வன் (சுருக்கப்பட்ட பதிப்பு)
An abridged version of Kalki's Ponniyin Selvan in Tamil Script

 


இணையதளத்தில்:

மின்னூலாக:
@ books.google.com

@ archive.org

@ freetamilebooks.com

நவம்பர்  11, 2012

#நூல், #Themozhi 


Sunday, September 30, 2012

கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?


கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?


சோழ மன்னர்களில் மிகச் சிறந்தவன் கரிகால்சோழன். “சிலப்பதிகாரத்தில்” கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என்று கீழ்க் காணும் வரிகளின் மூலம் கூறப்படுகிறது.

“பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்”

மற்றுமொரு இலக்கியக்குறிப்பு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இயற்றப்பட்ட நூலாகிய செயங்கொண்டார் பாடிய “கலிங்கத்துப் பரணி”யில் காணப்படுகிறது.

“செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்
சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே.”

என்று இராசப் பாரம்பரியம், இமயத்தில் புலிக்கொடி என்ற பகுதியில் செயங்கொண்டார் இவ்வாறு குறிப்பிடுவார்.

சேக்கிழார் பெருமான்  திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செய்யுள் 85 இல், வல்லார்வாய்க் கேட்டணர்ந்த செய்தியாக; கரிகாலன் இமயம் செல்லும்பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக் காஞ்சி நகரத்தின் வளமையைக்கூற, அப் பேரரசன் அந்நகரத்தைத்  தனதாக்கிக் குன்று போன்ற மதிலை எழுப்பிப் பலரைக் குடியிருத்தினன் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு இரண்டாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தது. 

தமிழ் மன்னர்களில் கரிகாலனும், செங்குட்டுவனும் இமயம் வரை சென்றதாக இலக்கியங்களின் வாயிலாக அறியப்படுகிறார்கள்.  இவர்கள் காலம் கடைச்சங்கக் காலமாக (கி.மு. 250 – கி.பி. 250 வரை) கருதப்படுகிறது.

தமிழ் மன்னர்களின் இமயத்தை நோக்கிய பயணத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஆராவமுதன் என்பவர் தமது நூலில் அவர்களது பயணத்திற்குச் சாதகமான சூழ்நிலை, அதாவது எதிர்ப்புகள் குறைந்த வலிமையற்ற வடநாட்டு மன்னர்களின் காலமாக இருக்கக்கூடும் என்று முடிவு செய்து,
1. அசோகனுக்கு பிற்பட்ட மௌரியர் காலம் (கி.மு. 232 – கி.மு. 184)
2. புஷ்ய மித்திர சிங்காவுக்குப் பிற்பட்ட காலம் (கி.மு. 148 – கி. மு. 27)
3. ஆந்திரர் ஆட்சி குன்றிய காலம் (கி.பி. 163 – 300)
என்ற காலங்களைக் குறிப்பிட்டார்.

இத்தகவல் ராசமாணிக்கனார் அவர்களது 'பல்லவர் வரலாறு' என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.  இதில் செங்குட்டுவன் இமயம் சென்ற காலம் கி.பி. 166 – 193 க்கு இடைப்பட்ட காலம் என ஆராய்ச்சியின் மூலம் முடிவுக்கு வருகிறார்  ராசமாணிக்கனார். அது போலவே, கரிகாலன் இமயம் சென்றது கி.மு. 44 – கி. மு. 17க்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளுக்குள் இருக்கக்கூடும் எனவும் திரு. ராசமாணிக்கனார் கருதுகிறார்.  மேலும், கரிகாலன் படையெடுத்த காலமாகக் கருதப்படும் காலத்தில், கண்வ மரபினர் மகத நாட்டை ஆண்டவர்கள், அவர்கள் வலிமையற்ற மன்னர்களாக இருந்திருக்கிறார்கள் என்று V.A. Smith’s “Early History of India” pp.215, 216 என்ற நூலில் காணப்படும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்.

அத்துடன், கலைமகள் (1932) தொகுதி 1. பக்கங்கள் 62-63 இல் வெளியான ராவ்சாகிப் மு. ராகவையங்கார் என்பவர் கட்டுரையில்,  “சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கே அதற்கும் திபெத்துக்கும் உள்ள எல்லையை வரையறுத்து நிற்கும் மலைத் தொடருக்கு சோல மலைத்தொடர் (Chola Range) என்றும், அதனை அடுத்துள்ள பெருங்கணவாய்க்கு சோல கணவாய் (Chola Pass) என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. ‘சோல’ என்பதும் சிக்கிம், திபெத் மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருந்தவில்லை” என்று குறிப்பிட்டதைப் புதிய சான்றாகக் கருதலாம் எனவும் ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இக்குறிப்பு காணப்படுவது பக்கம் 9, ‘பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்’ என்ற அத்தியாயத்தில்.

சோல மலைத்தொடர்:
இத்தகவலைப் படித்தபின்பு இணையத்தில் கூகிள் வரைபடத்தில் Chola Range என்ற இடத்தைப் பார்க்கும் ஆவலில் தேடினேன்.  அப்பொழுது Chola Range பற்றி மேலும் பல தகவல்கள் விக்கிப்பீடியாவிலும் கிடைத்தன.
[The Chola range is situated on the Sikkim and Bhutan border. The highest peak is Rishila. The town of Kalimpong is situated in this region. Neora Valley National Park is located here.
(Ref:   http://en.wikipedia.org/wiki/Darjeeling_Himalayan_hill_region)]

இந்த மலைத்தொடர், கிழக்கு இமயமலைச் சாரலில், இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான காங்க்டோக் (Gangtok, the capital of the Indian state of Sikkim) நகருக்குக் கிழக்கே அமைந்துள்ளது.  இந்த மலைத்தொடர் சிக்கிம்-திபெத்தின்(சீனா) எல்லையாகவும், சிக்கிம்-பூடான் நாட்டின் எல்லையாகவும் அமையப்பெற்றுள்ளது.  இந்திய வரைபடத்தையும் , இத்தகவல்கள் குறிக்கப்பட்ட கூகிள் வரைபடத்தைக் கீழே காண்க.




சோல மலைத்தொடர் ‘, ‘சோல ஏரி’, ‘சோல கணவாய்’ மற்றும் ‘சோல சிகரம்’ ஆகியவையும் சிக்கிம் பகுதியில் உள்ளன.  சோல கணவாய் (Chola Pass) கடல் மட்டத்திலிருந்து 15,000 அடி உயரத்தில் உள்ளன.  சோல கணவாய்  சிக்கிமிலிருந்து திபெத்திற்குச் செல்லும் வழியில் உள்ளது.  சமீபகாலமாக மலை ஏறுவதில் விருப்பமுடையோரிடம் புகழ் பெற்ற இடமாகவும் அது மாறி வருகிறது.  சோல கணவாய் (Chola Pass) பற்றி ‘யூடியூபில்’ (YouTube) பல காணொளிகள் காணக் கிடைக்கின்றன.

Chola Range மற்றும் Chola Pass ஒளிப்படங்களைப் பார்க்க ஃபிலிக்கர் தளத்தில் பலர் வெளியிட்டுள்ள படங்களைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் வழியே சென்று பார்க்கலாம்.

Chola Range – Photos Link
http://www.flickr.com//search/show/?q=chola+range
Chola Pass – Photos Link
http://www.flickr.com//search/show/?q=chola+pass

சோலமலை என்ற பெயர் வரக் காரணம் என்ன?
சோல’ என்ற பெயர் நம் தமிழக கரிகால் பெருவளத்தான் இமயம் சென்றதால் வந்தது என்று சொல்ல விரும்புவதில் நமக்கு அதிக ஆர்வம் இருக்கக் கூடும்.  ஆனால் உண்மை என்ன என்பதையும் ஆராய வேண்டும்.  ‘சோல’ என்ற பதத்தின் பொருள் என்ன? அது எதைக் குறிக்கக் கூடும்? என்று ஆராய்ந்ததில் அதைக்குறித்துப் பல கருத்துக்கள் உள்ளது என்பதும் தெரிய வருகிறது.

சோல’ என்ற சொல் திபெத்தியர்களால் ‘ஜோல’ என உச்சரிக்கப் பெறும் என்றும், அதற்குத் திபெத்திய மொழியில் ‘பனிமலை’ என்ற பொருள் என்றும் கருதப்படுகிறது.  மற்றுமொரு கருத்து  ‘சோல’ என்பதைச் சீனர்கள் தங்கள் உச்சரிப்பின் அடிப்படையில் ஒலிக்கேற்ற எழுத்துக்களால் அவர்கள் மொழியில் குறித்ததாகவும், ஆனால் அதே எழுத்துக்கள் உள்ள வார்த்தை அவர்கள் மொழியில் பறவையைக் குறித்தபொழுது நாளடைவில் அந்தச்சொல் ‘பறவை மலை’ எனப் பொருள்படும்படி ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

‘ல’ என்ற ஒலியில் முடியும் பல பெயர்கள் அம்மலைப்பகுதியில் உள்ளது. உதாரணமாக, சிக்கிமின் கிழக்கு எல்லையில் உள்ளது சோல மலைத்தொடர்; அது போலவே சிக்கிமின் மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள மலைத்தொடருக்கு ‘சிங்கலி ல’ (Singalila) என்று பெயர்.  அப்பகுதியில் உள்ள முக்கியமான கணவாய்களுக்கு ‘நதுப் ல’ மற்றும் ‘ஜலேப் ல’  (Nathu La and Jelep La) என்ற பெயர்களும் உள்ளன.  எனவே ‘ல’ என்ற சொல்  ‘மலை’க்கு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாக  இருக்கலாம்.  அவ்விடத்திற்கு  அருகில் உள்ள திபெத், நேப்பாள்பூடான், வங்க  தேசத்து மொழிகளிலோ; அல்லது சிக்கிம் பகுதிகளில் வழங்கும் பற்பல மொழிகளில்  (languages spoken in Sikkim: Nepali, Bhutia, Lepcha, Limbu, Newari, Kulung, Gurung, Mangar, Sherpa, Tamang and Sunwar) ஏதோ ஒன்றில் மலைப் பகுதிக்குத் தொடர்பு படுத்தும் வகையில் குறிப்பிடப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.

சர்ரிச்சர்ட் ராபர்ட் என்பவர் தன்னுடைய புவியியல் ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடுவதை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். அவர் ‘சோல’ என்பதில் உச்சரிப்புக் கோளாறு இருக்கக் கூடும் என்று கருதுகிறார்.  மொழி தெரியாத அந்நியர்கள் தவறாக உச்சரித்ததால் அச்சொல் சிதைந்திருக்கும் என்பது அவர் கருத்து. அத்துடன் ‘ல’ என்பது திபெத்திய மொழியில் கணவாயைக் குறிக்கும் சொல், ‘சோ’ என்பது நீர்நிலையை அல்லது ஏரியைக் குறிப்பது என்றும் கூறுகிறார்.  இவரது விவாதத்திற்கு அப்பகுதி மக்களிடமோ அல்லது மற்றவரிடமோ  வேறு மாற்றுக் கருத்து உள்ளதா என்பது தெரியவில்லை.

“…Tso is a common termination in Tibetan names, meaning water, and is sometimes pronounced tcho;  in fact, Europeans cannot tell whether natives are saying tso or tcho. It merely means a lake. Nimyetso is Nimye Lake. And I ought to take this opportunity of mentioning that the termination la means a pass, so that Chola, or Cho-la merely means lake-pass, and Yakla, or Yak-la, is nothing more than the pass
of the Yak, the famous Tibetan cow…. (p. 334)”

Reference: Proceedings of the Royal Geographical Society and monthly record of Geography, Volume 3, 1881. Chapter: Lake Region of Sikkim, on the Frontier of Tibet, by Sir Richard Temple(p. 334). By Royal Geographical Society (Great Britain).

எனவே, சோலமலையில் உள்ள ‘சோல’ என்பது சோழர்களைக் குறிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. கரிகால் வளவன் இமயம் சென்றதாகக் கருதப் படும் காலத்திலிருந்து ஏறத்தாழ ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் கடந்த பின்பும் சோழர் பெயர் அங்கு நிலைத்திருப்பதாகச் சொல்ல விரும்பினால் அதனைத் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நம்மால் நிரூபிக்க முடியும்.

அப்பகுதியில் ‘டைகர் ஹில்’ (Tiger Hill) என்ற மலைச்சிகரம் ஒன்று உள்ளது.  அது சோழர் சின்னமாகிய புலியைக் குறிக்க வாய்ப்பிருப்பதாகக் கருதுவதைவிட, அருகில் உள்ள புலிகளுக்குப் புகழ் பெற்ற வங்க மாநிலத்துடன் அதற்கு உள்ள தொடர்பு அதிகம் இருப்பதாக மாற்றுக் கருத்து எழுந்தால் மறுக்க முடியாது. கரிகால் வளவன் இமயம் சென்றதை நிரூபிக்க மேலும் உறுதியான ஆதாரம் நமக்கு வேண்டும்.


நன்றி: திண்ணை 
செப்டெம்பர் 30, 2012


#திண்ணை, #Themozhi 

  

Sunday, January 8, 2012

அன்பு அம்மாவிற்கு

 அன்பு அம்மாவிற்கு






பசியுடன் பள்ளியில்
இருந்து வந்த பொழுது
பரிவுடன் சமைத்த
உணவைக் கொடுத்தாய்

பாடநூலுக்கு உடனே
அட்டை வேண்டிய பொழுது 
பாசத்துடன்  பழுப்பு
அட்டைதனைப் போட்டாய்

பெயர் நீ  எழுதினால்
ராசியென்ற பொழுது
பெருமையுடன் சிட்டை
ஒட்டி எழுதினாய்

பெற்றவன் பெயரின்
முதலெழுத்தும்  பின்னால்
பெற்ற அன்பு 
செல்வமெனது பெயருமாய்

அன்பு அன்னை நீ 
மனம் வருந்தாமல்
தன் கடமையிது என்பது
போல் நினைக்கிறாய்

என் வாழ்வில் உனக்கு
உரிமை இல்லாததுபோல்
உன்னால் எப்படியிது
முடிந்தது சொல்வாய்



நன்றி: வகுப்பறை  
ஜனவரி 08, 2012



#கவிதை, #வகுப்பறை, #Themozhi