Monday, December 4, 2023

என்றென்றும் பெரியார்!

என்றென்றும் பெரியார்!  



ஆயிற்று;  பெரியார் ஈரோடு வெ.ராமசாமி அவர்கள் மறைந்த டிசம்பர்  24, 1973 நாள் முதல், இந்த டிசம்பர் 24, 2023  வரை அவர் மறைந்து 50 ஆண்டுகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது!!!  இருப்பினும் தமிழ் நாட்டில் அவரது தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை!   அவர் மறைந்து  அரை நூற்றாண்டுக்குப் பிறகும் மறுக்கமுடியாத வகையில் பெரியாரின்  தாக்கம் இன்றும் தொடர்கிறது.  பெரியார் யார்? என்ற கேள்விக்கு விடையளிக்கும் வண்ணம் திரைப்படம் உட்பட,  எண்ணற்ற நூல்களும், கட்டுரைகளும், கவிதைகளும், காணொளிகளும் வெளியாகி தமிழக வரலாற்றில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பங்களிப்பை விவரித்துள்ளன. அவரது பிறந்த நாள், மறைந்த நாள் ஆகிய நாட்களில் அவரை நினைவு கூர்வது மட்டுமின்றி,  இந்த ஆண்டின் பிற நாட்களிலும் அவர் ஒரு பேசு பொருளாகத்தான் இருக்கிறார் என்பதற்குப் பல நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம்.  இந்த ஆண்டு மட்டுமன்று,  கடந்த ஆண்டுகளிலும் இதே கதைதான்.  

இன்றிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், 2017 ஆம் ஆண்டில், சென்னை 40வது புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையாகி சாதனை படைத்த நூல்  ‘பெரியார் இன்றும் என்றும்’  என்ற தலைப்பில் விடியல் பதிப்பகம்  வெளியிட்ட, சற்றொப்ப 1000 பக்கங்களைக் கொண்ட ஒரு பெரிய நூல். சமுதாயம், மதம், கலைகள், சாதி, தேசியம் என 21 தலைப்புகளில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் வகை பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருந்தது.  இது அதிகம் விற்ற நூல் என்பது மட்டுமல்ல,  ஒரே புத்தகக்காட்சியில் முதல் பதிப்பு உடனே விற்றுத் தீர்ந்துவிட,  இரண்டாம்  பதிப்பும் உடனே வெளியிடப்பட்டு அதுவும் விற்பனையில் சாதனை படைத்தது. ஆம், அதிக எண்ணிக்கை என்பது மட்டுமல்ல,  ஒரே புத்தகக்காட்சியில் உடனுக்குடன் இரண்டு பதிப்புகளும் விற்று சாதனை படைத்த நூல் என்ற பெருமைக்கு உரியது பெரியார் குறித்த நூல்தான். பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளுக்கு என்றைக்கும் மக்களிடம் வரவேற்பு உண்டு என்பதையே இது காட்டுகிறது என்று செய்தித்தாள்கள் செய்திகள் வெளியிட்டன[1].

பெரியார் மறைந்த இந்த 50 ஆம் ஆண்டு, வைக்கம் போராட்ட நூற்றாண்டும் கூட.  வைக்கம் போராட்டம் இந்தியாவின் சமூகநீதிக்கான ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.  கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரிலிருந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில், தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடமாடக் கூடாது என்றிருந்த தடையை நீக்க, சென்ற நூற்றாண்டில் வைக்கம் போராட்டம் நடத்தப்பட்டது.  பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற இப்போராட்டம் 1924 மார்ச் 30 முதல், 1925 நவம்பர் 23ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தை வழிநடத்திய கேரள போராட்டத் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அரசால் சிறையில் அடைக்கப்பட்டதும் இடையில் இப்போராட்டம் தொய்வடைந்தது.  இந்த நிலையில் கேரள போராட்டக் குழுவினரின் அழைப்பை ஏற்று வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. பங்கேற்றார். இப்போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்தில் தடையை மீறிப்  போராடினார் என்று பெரியார் இருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முதல் முறை கைதாகி சிறைத்தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஊரை விட்டு வெளியேறாமல் தடை ஆணையை மீறி மீண்டும் போராட்டத்திற்குச் சென்றதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.  பெரியார் ஓர் அரசியல் கைதி என்ற தகுதியும் அவருக்கு  மறுக்கப்பட்டு சிறையில்  கடுங்காவல் தண்டனைக்கு  உள்ளாக்கப் பட்டார்[2].  

கேரளாவின் சனாதன ஆதிக்க சக்திகளால் அடக்குமுறைக்கு ஆளான ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டமாகத் தொடங்கிய வைக்கம் போராட்டம், இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த ஓர் உரிமைப் போராட்ட நிகழ்வாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.  பின்னாளில் இந்தியாவில் நிகழ்ந்த பல கோவில் நுழைவுப் போராட்டங்களின் துவக்கப்புள்ளி தான் இந்த வைக்கம் போராட்டம். அண்ணல் அம்பேத்கர் 3.3.1930 அன்று முன்னெடுத்த, நாசிக் நகரில் உள்ள காலாராம் கோயில் நுழைவுப் போராட்டமும், வைக்கம் போராட்டம் தந்த தாக்கமே.    திரு.வி.க. அவர்கள் நடத்திய நவசக்தி இதழில் பெரியாரை வைக்கம் வீரர் என்று புகழ்ந்து பாராட்டினார். "வைக்கம் வீரர் சொற்பொழிவு"  என்ற தலைப்பில் பெரியாரின் போராட்டக் காலச் சொற்பொழிவை 'நவசக்தி' 1924ஆம் ஆண்டு இதழில்  திரு. வி. க.  வெளியிட்டார்[3].    வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பெரும் பங்களிப்பைப் போற்றி, கேரள அரசும்  தமிழ்நாடு அரசும் இணைந்து வைக்கம் போராட்ட நூற்றாண்டை ஏப்ரல் மாதம் 1, 2023-ஆம்தேதி அன்று நடந்த நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தன. பெரியார் தொண்டினைப் போற்றி இரு மாநில அரசுகளின் சார்பிலும் வைக்கம் வீரருக்குப் புகழ் வணக்கம் செலுத்தப் பட்டது.  வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை ஏப்ரல் மாதம் 1-ஆம்தேதி முதல் 603 நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாட கேரள அரசும் முடிவு செய்துள்ளது[4].  

அண்டை மாநிலத்தில் மட்டும் அல்ல, அயல்  நாட்டிலும் பெரியாரின் புகழ்க்கொடி உயரப் பறக்கிறது.  அண்மையில் நவம்பர் 5, 2023  அன்று சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற ஏற்பாட்டில் “பெரியார் விழா 2023” நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் “பெரியாரும் அறிவியலும்” என்ற தலைப்பில்  உரையாற்றினார் (https://www.youtube.com/watch?v=01sP83hB3kY).   சமூக ஊடகங்களில் உள்ளவர்களால் பெரியார் குறித்த இவ்வுரை  பரபரப்பாக  விவாதிக்கும்  நிலையையும் எட்டியது [5].  

மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் பெரியார் ஈ.வெ.ரா.வின் கொள்கைகள்தான் என்ன? என்ற வியப்பு எழாமல் இருக்காது.  பெரியார் முன்னெடுத்த போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது அனைவரும் சமம் என்ற சமத்துவ அடிப்படையிலான அவரது சமூக நீதிக் கொள்கைதான். மக்கள் அனைவருக்கும் பொதுவானவை அவர் மொழிந்த சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், மனித நேயம், பெண்கள் முன்னேற்றம், சமயச் சார்பற்ற அரசியல், அறிவியல் மனப்பான்மை ஆகியவை.  இவையாவும் பெரியாரியத்தின் அடிப்படைக் கூறுகள்.   ஆதிக்கங்களுக்கும் அடக்குமுறைக்கு எதிரானவர் பெரியார்.  அவரின் கொள்கைப்படி பேதம் கூறும் சாதியை எது, அல்லது எவர் முன்னிறுத்தினாலும் அவர் எதிர்ப்பார். அது யாராக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி. நலிந்தவர் நலன் அவருக்கு  முக்கியம்.  இதுதான் பெரியார் தம் சொற்பொழிவுகள் மூலமும் எழுத்துக்கள் மூலமும் மக்களுக்கு ஊட்டிய விழிப்புணர்வு, தமிழ் நாட்டிற்கு அவர் அளித்த மறுமலர்ச்சி.  

"உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருந்து வருகிறது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்), வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார் - கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும், முதன்மையாகவும் இருப்பதால் அது பணக்காரன் - ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது" [6] என்று மிகச் சரியாக இந்தியாவின் சமத்துவமின்மை எவ்வாறு பிற உலக நாடுகளில் இருக்கும் சமத்துவமின்மையில் இருந்து வேறுபட்டது என்று அதன் அடிப்படையை இனங்கண்டார். நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் [குறள் -48]   என்பதற்கு இணங்க இந்தியாவின் சாதிபேதம்  கூறும் நோய்க்குப் பல நூறு ஆண்டுகளாக அதைக் கட்டிக் காக்கும் வைதீகச் சமயத்தின்  பிறப்பு அடிப்படையிலான பேதம் கூறும் சனாதனக் கருத்துகள்தான் ஆணிவேர் என்பதையும் இனங்கண்டு கொண்டார். அந்த நச்சு மரத்தை அழிக்க வேருடன் நீக்க நாத்திக வழியில் தாக்குதல் தொடுத்தார்.  சுருக்கமாக, பெரியாரின் கொள்கை, பெரியாரின் சமூக பங்களிப்பு என்பன,  மனிதநேயமற்ற நடவடிக்கைகளைக் கண்டித்ததும், அந்த மனிதநேயமற்ற நடவடிக்கைக்கு மூலகாரணத்தைக் குறிவைத்துத் தாக்கி ஆட்டம் காண வைத்ததும் ஆகும்.

பெரியார் நடத்திய போராட்டங்களின் பட்டியல் நெடியது. அத்தனை போராட்டங்களின் மையக் கருத்து எதுவென நோக்கினால், அவை அனைத்திற்கும் அடிப்படை நோக்கம் ஏதோ ஒரு அடக்குமுறையை எதிர்த்துச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களாகவே அவை இருக்கும். மனிதநேயம், சமத்துவம், சமூகநீதி ஆகியன எவருக்கோ எந்தவகையிலோ மறுக்கப்பட்டுள்ளது என்று போராட்டக் களம் இறங்கியிருக்கிறார் பெரியார்.

ஒரு பெரிய நாடு இன்னொரு சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தினால் நான் சிறிய நாட்டின் பக்கம் நிற்பேன். அந்தச் சிறிய நாட்டில் ஒரு பெரிய மதம் இருந்து மற்ற சிறுபான்மை மதத்தை ஒடுக்கினால் நான் சிறுபான்மை மதத்தின் பக்கமே நிற்பேன். அந்தச் சிறுபான்மை மதத்தில் சாதி இருந்து, இன்னொரு சாதியின் மீது தாக்குதல் நடத்தினால் நான் தாக்குதலுக்குள்ளான அந்தச் சாதியின் பக்கமே நிற்பேன். அந்த ஒடுக்கப்பட்ட சாதியிலிருக்கும் ஒரு முதலாளி இன்னொரு தொழிலாளியை வஞ்சிப்பானேயானால் நான் தொழிலாளியின் பக்கமே நிற்பேன். அந்தத் தொழிலாளி வீட்டிற்குப் போய் அவன் மனைவியிடம் ஆதிக்கம் செலுத்தினால் அந்தப் பெண்ணிற்காக நான் நிற்பேன்.  மொத்தத்தில் ஆதிக்கம்தான் என் எதிரி என்று  தனது நிலைப்பாட்டை விளக்கியவர் பெரியார்.

      "நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்
      நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்
      பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
      பிறக்கையிலே பெரியாராய்த் தான் பிறந்தார்"
என்று கவிஞர் கண்ணதாசன் பெரியாரைப் பாராட்டி கவிதை வடித்துள்ளார்[7].

பெரியார் மண் என்று பெருமிதத்துடன் இன்று அறிவித்துக் கொள்ளும் தமிழ் நாட்டின் வரலாற்றிலிருந்தோ,  இந்திய அரசின் வரலாற்றிலிருந்தோ அவரின் பங்களிப்பை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதபடி ஆழமான சுவடுகளைப் பல துறைகளில் பதித்துவிட்டுச் சென்றுள்ளார் பெரியார்; அவற்றில் குறிப்பிடத்தக்கச் சில:  

இந்திய மற்றும் தமிழகச் சட்ட மாற்றங்களில் பெரியாரின் பங்களிப்பு:
இந்தியாவின் புதிய அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26 இல் நடைமுறைக்கு வந்தபிறகு, குமாரசாமி ராஜா ஆட்சியில் நாட்டின் புதிய அரசியல் சட்டத்தின் துணையுடன் தமிழ்நாட்டில் நடைமுறையிலிருந்த  கம்யூனல் ஜி.ஓ. வை (1920களில் நீதிக்கட்சி உருவாக்கிய வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆணையை) முறியடிக்கும் நோக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. செண்பகம் துரைசாமி என்பவரும், சீனிவாசன் என்பவரும் தொழிற்கல்வி  மாணவர் சேர்ப்பில் கம்யூனல் ஜி.ஓ. குறுக்கீடு இருக்கக் கூடாது என்று வழக்குத் தொடுத்தனர். தமிழக அரசின் கம்யூனல் ஜி.ஒ. என்ற வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆணை இந்திய அரசின் சட்டப்படி செல்லாது என்று தலைமை நீதிபதி பி. வி. இராசமன்னார் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதுவரை இடவொதுக்கீடு, சமூகநீதி என்று போராடிப் பெற்ற தமிழக அரசின் அத்தனை முயற்சியும் தீர்ப்பால் செயலற்றுப் போனது. அரசியல் சட்டத்தினாலேயே மக்களின் உரிமை பறிக்கப்பட்ட அவலநிலை அது.   இந்தியாவின் சட்டவரைவை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் இடவொதுக்கீட்டுக்கு ஊறு விளைவிக்கும் ஒரு சட்டத்தையும் சட்டவரைவில் இடம்பெறச் செய்து, பார்ப்பன மாணவர்கள் சார்பில் ஒரு வழக்கையும் தொடுத்து, அவரே வாதாடி சட்ட வரையறையைக் கொண்டே இடவொதுக்கீட்டு ஆணையை முறியடித்தும் காட்டினார் என்பது அன்று தமிழகத்தின் முதுகில் குத்தப்பட்ட நிகழ்வு [8].

ஒரு தீர்ப்பு சட்டப்படி சரி, ஆனால் அறத்தின் அடிப்படையில் பிழை என்றால் சட்டத் திருத்தம் ஒன்றுதான் மீண்டும் அறத்தை நிலை நிறுத்தும். ஆகவே, தீர்ப்பையடுத்து ஈ.வெ.ரா. பெரியாரின் தலைமையில், திருச்சியில் நடந்த இடவொதுக்கீடு குறித்த மாநாட்டில் இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இட ஒதுக்கீட்டு முறைக்காகச் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இங்குதான் இட ஒதுக்கீட்டில் பெரியாரின் பங்களிப்பின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இன்றும் இடவொதுக்கீட்டின் தேவையையும் அதன் வரலாற்றையும் அறியாதவர் எண்ணற்றவர் என்பது ஒரு பெரிய குறைபாடு. கட்சி வேறுபாடு இன்றி தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும் பெரியாரின் கீழ் ஒன்று திரண்டனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜரும் ஆதரவு அளித்தார். பெரியாரின் தலைமையில் எடுக்கப்பட்ட போராட்ட நடவடிக்கை 'இந்தியாவின் முதல் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியது', அனைவருக்கும் இடவொதுக்கீட்டு உரிமையை மீட்டுக் கொடுத்தது. தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு நேரு தலைமையிலிருந்த ஒன்றிய  அரசை உலுக்கியது. போராட்டத்திலிருந்த நியாயம் உணரப்பட்டது. இந்தியா அரசின் முதல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த காலத்திலேயே இட ஒதுக்கீடு அளிக்கப்பட அரசியல் சட்டத்தில் 15(4) பிரிவு (ஆர்ட்டிக்கில் – 15(4)) என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. கல்வி மற்றும் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்கள் தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வரையறை உறுதி செய்யப்பட்டது. கல்வி மற்றும் சமூகவாழ்வில் முன்னேற வேண்டிய எந்த ஒரு வகுப்பினருக்கான திட்டங்களில் அரசின் எந்த ஒரு சட்டமும் தடை செய்ய முடியாத வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பெரியாரின்  போராட்ட நடவடிக்கை இந்தியாவின் முதல் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியது என்பதும் இந்திய அரசியல் வரலாற்றில் நிலை பெற்றுவிட்டது. இன்றைய ஒன்றிய அரசின் ‘அரியவகை ஏழைப் பிரிவு’ என்ற உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க எடுத்த முடிவு இந்தச் சட்டத்திற்குப் புறம்பானது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகர் என்ற சமூக மாற்றத்திற்காக மரணத்திற்கு முன்னர் அவர் அளித்த இறுதி உரை வரை போராடியவர் பெரியார். சென்னை தியாகராயர் நகரில், டிசம்பர் 19, 1973 அன்று, தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை இரவு 10 மணிக்கும் மேல் தொடர்ந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, வரும் அடுத்த ஆண்டு 1974 ஜனவரியில் நடத்தத் திட்டமிட்ட “சமுதாய இழிவு ஒழிப்பு” என்ற கிளர்ச்சியின் நோக்கம் மற்றும் தேவை என்ன என்பதை விளக்கி, அதில் மக்களின் கடமை என்ன என்று சிந்திக்கச் சொல்லி சமுதாய இழிவு ஒழிப்பு கிளர்ச்சியில் பங்கேற்க அவரது தொண்டர்களை(தோழர்களை) ஆயத்தமாக்குகிறார். தந்தை பெரியாரின் இந்த இறுதிப் பேருரையை, ‘மரண சாசனமாகவே அமைந்துவிட்ட தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை’ என்றே பலரும் குறிப்பிடுவதை அறிய முடிகிறது[9].

அவரது இந்தப் போராட்டத்தின் துவக்கம் 1920 களிலேயே தொடங்கியது என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.  "ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள பிறப்புரிமையைப் பிடுங்கிக்கொண்டதினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச்செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது" என 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5, 6 தேதிகளில் திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற சேலம் 3-ஆவது அரசியல்  மகாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது [10]. இவ்வாறாக ஒரு  தீர்மானம் முன்மொழியப்பட்டு சுமார் 93 ஆண்டுகள் கழிந்த பிறகு  இத்தீர்மானம் பல போராட்டங்கள் மற்றும்  சட்டச் சிக்கல்களுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது. தந்தை 'பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்' இதனால் அகற்றப்பட்டது[11].

சாதி மறுப்பு திருமணங்களும், சீர்திருத்த முறைப்படி வைதீகச் சடங்குகள் இன்றி நடை பெறும் திருமணங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றதிலும் பெரியாரின் பங்களிப்பை எவராலும் மறுக்க இயலாது.  சாதிக்கான கட்டமைப்பு, சொந்த சாதி திருமண முறையால் வலுவடைகிறது என்பதால் பெரியார் காதல் திருமணங்களையும் கலப்புத் திருமணங்களையும் ஆதரித்துச் சாதிக் கட்டமைப்பை ஒழிக்கப் பாடுபட்டார்.  வைதீக  முறையில் நடக்காத சீர்திருத்தத் திருமண முறையைச் சமுதாய முன்னேற்றத்திற்கான  வழியாகக் கண்டார்.  அதற்கான சட்ட வடிவம் தான் சுயமரியாதைத் திருமணச் சட்டமாக அவரது கொள்கையைப் பின்பற்றிய அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் அண்ணாதுரையால் நடைமுறைப் படுத்தப்பட்டது. நவம்பர் 28, 1967 ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள். [12].

சமூக மாற்றங்களில் பெரியாரின் பங்களிப்பு:
ஐம்பது அகவையை எட்டிவிடும் பொழுதில், சமூகத் தொண்டின் மூலம் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்த பெரியார், 1927ம் ஆண்டில் தனது பெயருக்குப் பின்னொட்டாக இருந்து வந்த ‘நாயக்கர்’ என்ற சாதிப்பட்டத்தை நீக்கிவிடுகிறார். தமது “குடிஅரசு” 25-12-1927 இதழ் முதற்கொண்டு ‘ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி’ என்று அறிவித்து சாதிப்பெயரைத் தவிர்த்துவிடுகிறார். பிறகு, 1929இல் பெரியார் சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, 'ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’ எனும் நான் இன்றுமுதல் ‘ஈ.வெ.ராமசாமி' என அழைக்கப்படுவேன்" என்று அறிவித்து அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.   அதே மாநாட்டில்  பெரியாரோடு இணைந்து சௌந்தரபாண்டிய நாடார், விருதுநகர் ராமசாமி நாடார் உள்ளிட்ட பல தலைவர்களும் பெரியாரின் தொண்டர்கள் பலரும் தங்களின் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை நீக்கிக் கொண்டனர்[13]. இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு பெரியாரின் தூண்டுதல் காரணமாகச் சாதிப்பெயரைத் தங்கள் பெயருடன் இணைப்பதைக் கைவிட்டனர் தமிழர்.  ஒருவரின் சாதிப் பின்னணியை வெளிப்படையாகக் கேட்பது தவறான பண்பாடு என்று கூசும் அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது, அவ்வாறு மாற்றியவர் பெரியார்.  

பெண்ணுரிமைக்கு என்று உரத்துக் குரல் கொடுத்தவர் பெரியார்.  ஓர் ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அது பெண்ணுக்கும் இருக்கிறது என்று சென்ற நூற்றாண்டிலேயே  பெண்ணுரிமை பேசியவரும்,  பெண்ணுக்கு எதிரான சமூக அடக்குமுறைகளை ஒழிக்கப் போர்க்கொடி உயர்த்தியவர் அவர்.   'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற பெரியாரின் நூல் 1942-இல் வெளியான  79 பக்கங்கள்  மட்டுமே கொண்ட ஒரு  சிறு நூல்.  இந்த நூல்  பெண் ஏன் அடிமையானாள் என்று பல கோணங்களில் பெண்களின் நிலையை அணுகி,  பெண்ணுரிமை அற்ற நிலையை விளக்கிக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியது[14].   ஆண் உரிமைக்கும்  பெண் உரிமைக்கும்  ஏன் வேறுபாடு இருக்க வேண்டும் என்று சென்ற நூற்றாண்டிலேயே கேள்வி எழுப்பிய பெரியார், ஆண்களுக்கு இருக்கும்  அனைத்து உரிமைகளும்  பெண்களுக்கும்  கொடுக்கப்பட வேண்டும் என்ற உறுதியான கருத்தை முன்வைத்து பெண்களின் நிலையை மாற்றப் போராடினார். பெண் ஏன் அடிமையானாள் நூல் இன்றும் விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக் கொண்டிருக்கிறது.  தங்களுக்காக உரிமைக்குரல் எழுப்பிப் போராடிய  ஈ.வெ.ரா.  அவர்களைப் பெண்கள் பெரிதும் மதித்தனர். இந்தி எதிர்ப்பையொட்டி சென்னையில் 13.11.1938-ல் நடைபெற்ற தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் தந்தை ஈ. வெ. ரா. அவர்களுக்கு  “பெரியார்” எனும் பட்டம் பெண்கள் சார்பாக அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களால் வழங்கப்பட்டது[15].

குடிஅரசு 20.1.1935 தேதியிட்ட இதழிலிருந்து எழுத்துச் சீர்திருத்தத்தைப் பெரியார் நடைமுறைப்படுத்தினார். பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1978-79 ல் எம்.ஜி.ஆர்.  தலைமையிலான அன்றைய தமிழ்நாடு அரசு,  1935 பெரியார் இயக்கம் பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் (அய், அவ் மாற்றங்களைத் தவிர்த்து) தவிர மற்ற மற்ற மாற்றங்களை ஏற்றுச் செயற்படுத்தியது[16].  இவ்வாறாக, தமிழ் மொழி வரலாற்றிலும்  பெரியார் எழுத்து சீர் திருத்தம் என்ற முறையும் நிலைத்துவிட்டது.

தமிழக வரலாற்றில், இந்திய அரசியலில், இந்திய மற்றும் தமிழ் நாட்டுச் சட்ட வரையறைகளில், தமிழ்மொழி வளர்ச்சியில், மனிதநேய சமத்துவ மாற்றங்களில் என நிலையாக இடம் பிடித்தவர் பெரியார்.  மறைக்கவோ மறுக்கவோ முடியாதபடி தன் தடத்தைப் பதித்துச் சென்றவர் பெரியார்.  சாதி ஒழிப்பு, சாதிப் பெயர் மறுப்பு, எழுத்துச் சீர்திருத்தம், சுயமரியாதை, பகுத்தறிவு, கருத்துரிமை, பெண்ணுரிமை, சட்ட வரையறை திருத்தம் என்று எந்த ஒரு துறையிலும் அவர் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் தடம் பதித்துச் சென்றுள்ளார் என்பதை அவர் மறைந்து 50 ஆண்டுகள் கழித்தும் அவர் பேசு பொருளாக இருப்பது நிரூபிக்கிறது.  அவர் மறைவிற்குப் பிறகு பிறந்த தலைமுறையினர் இடையில் பெரியாரின்  புரட்சிக் கருத்துகள் போற்றப்படுகிறது.  பெரியார் பிறந்தநாளைச் சமூக நீதி நாள் என்று செப்டம்பர் 06, 2021 முதல் தமிழகம் கொண்டாடி வருகிறது.   பெரியார் என்றென்றும் நினைவு கூரப் படுவார்.   பெரியாரின்  தாக்கம் என்றென்றும் தொடரும்.

வாழ்க பெரியார் !! பெரியார் புகழ் ஓங்குக!!


உதவிய நூல்களும் செய்திக் குறிப்புகளும்:  
1.  சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்ற புத்தகம்
http://www.noolulagam.com/2017/01/31/168797/

2.  வைக்கம் போராட்டம்: சமூகநீதிக்கான வரலாற்றுத் திருப்புமுனை, முனைவர். தேமொழி. திராவிடப் பொழில்— திராவிட ஆய்விதழ், தொகுதி: 3, இதழ்:  2 , ஏப்ரல் - ஜூன் 2023. பக்கம் 69-75.
https://dravidapozhil.pmu.edu/pdf/Vaikom-Poraattam.pdf  

3.  வைக்கம் வீரர் சொற்பொழிவு - திரு. வி. கலியாணசுந்தரனாரின் 'நவசக்தி' 1924 இதழ்.

4.  வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி அழைப்பு.
https://www.dailythanthi.com/News/State/vaikam-protest-centenary-kerala-chief-minister-calls-on-chief-minister-mk-stalin-925668

5.  விதைத்தவர் பெரியார் : விளைந்தது சந்திரயான் ..., ச.பிரின்சு என்னாரெசு பெரியார், நவம்பர் 9, 2023
https://minnambalam.com/featured-article/periyar-and-science-mylswamy-annadurai-speech-in-singapore/

6.  பெரியார், 14.12.1931 திராவிட இயக்க இதழ்கள்: தொகுதி 2

7.  "பிறப்பினிலே பெரியாராய்த் தான்பிறந்தார்!", கவிஞர் கண்ணதாசன். பெரியார் ஒரு சகாப்தம் ஏன்?எப்படி? அறிஞர் பதில் -கி.வீரமணி நூலிலிருந்து.  

8.  வகுப்புரிமைப் போராட்டம், க. அன்பழகன், 1951; மக்கள் மன்றம், பவழக்காரத் தெரு, சென்னை.

9.  தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை: மரண சாசனம்,  தந்தை பெரியார், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, கிண்டில் பதிப்பு, 2017.

10. சேலம் 3-வது அரசியல்  மகாநாடு. குடி அரசு. 13-11-1927 இதழ். பக்கம் - 13

11.  அனைத்து ஜாதி அர்ச்சகர் வழக்கு: நீதிமன்ற தீர்ப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தலாம்?, முரளிதரன் காசி விஸ்வநாதன், பிபிசி தமிழ், 22 ஆகஸ்ட் 2022. https://www.bbc.com/tamil/india-62633574

12.  சுயமரியாதை திருமணம் சட்டம் - ஓர் பார்வை!, ரமணி மோகன கிருஷ்ணன், நவம்பர் 29, 2015.
https://www.vikatan.com/literature/arts/55766-

13.  "முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு”, 1929 டிசம்பர், ‘குடிஅரசு’ இதழ்கள்

14.  பெண் ஏன் அடிமையானாள்?, தந்தை பெரியார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.  பக்கங்கள்:79 1942.  

15.  ‘தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு’ , 20.11. 1938, ‘குடிஅரசு’ இதழின் தலைப்புச் செய்தி.  

16. பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள், வே. ஆனைமுத்து, முதல் தொகுதி, சிந்தனையாளர் கழகம், 1974 – http://dvkperiyar.com/wp-content/uploads/2015/11/EVRT-VOL-1-part-1.pdf



நன்றி:
தமிழணங்கு 
டிசம்பர்,   2023


#பெரியார்,  #தமிழணங்கு, #Themozhi  



Monday, November 6, 2023

ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்

ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்

 
தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் பொலிவிழந்த நிலை தோழியை வருத்துகிறது. தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள். அப்பொழுது தலைவி  தோழியிடம் தங்களுக்கென நிலையான ஓர் இருப்பிடம்  இன்றி ஊர் ஊராகச் சென்று கூத்து நடத்துபவர்கள் மூதூர் ஒன்றில் கூத்து நிகழ்த்திவிட்டு வேறு ஊருக்குச் சென்றுவிடுவார்கள். அவர்கள் இருந்தபொழுது ஆரவாரமாக இருந்த மன்றம் பொலிவிழந்த நிலையில் இருப்பதைப் பார்க்கும் ஊர் மக்கள் வருந்துவார்கள்.  அது போன்று  தலைவன் இருந்த பொழுது மகிழ்ச்சியுடன் பொலிவுடன் இருந்த என் வாழ்க்கை அவன் பிரிவுக்குப் பின் வறண்டு போயுள்ளது, அதைக் காணச் சகியாது நீ  வருந்துகிறாய் என்று கூறுவதாக அதியன் விண்ணத்தனார் எழுதிய ஒரு அகநானூற்றுப் பாடலில் கூறுவார். இப்பாடல் கூத்தர்களின் கவலையற்ற  மகிழ்ச்சியான வாழ்க்கைமுறையை விரிவாகக் கூறும் பாடலாக அமைந்திருக்கும். இப்பாடலில் கூத்தர்கள் தங்கள் வண்டியில் செல்லும் நிலை விவரிக்கப்பட்டிருக்கும்.

      நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
      'ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து',
      ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை
          [அகநானூறு 301, அதியன் விண்ணத்தனார், வரிகள் 6-8]
இந்த வரிகள் கூறுவது; நீரில் வாழும் முதலை அகல வாய்திறந்து கொட்டாவி விட்டால் எப்படி இருக்குமோ அவ்வாறு அந்த வண்டியின் அமைப்பு இருக்கும். பனையோலைப் பாய் கூரையாக வேயப்பட்டிருக்கும் அந்தக் கூண்டு வண்டியின் சக்கரங்கள் தரையை அறைத்து ஒலியெழுப்பிச் செல்லும்.  இவ்வாறாகத் தங்கள் ஊர் இது என்ற கூற வழியின்றி தடையற்ற வாழ்வைக் கொண்டவர்கள் கூத்தர்கள் என்று விவரிக்கப்பட்டிருக்கும்.  


நீரில் வாழும் முதலை அகல வாய்திறந்து கொட்டாவி விடும் அமைப்பில் வண்டியா? என்று வியப்பாக இன்று இருக்கலாம்.  ஆனால் அத்தகைய வண்டிகள் சங்க காலம் முதல் 19 நூற்றாண்டு வரையிலும், ஏன் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை கூட மக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. புகைப்படத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புகைப்படங்களில்  இத்தகைய வண்டிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் ஆவணப்படுத்தப்  பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தேயிலைத் தோட்டப் பகுதியில் எடுக்கப்பட்ட பல படங்களில் இந்த வகை வண்டிகள் பதிவாகியுள்ளன.  


அகநானூறு  காட்டும் கூத்தர் வண்டி போன்றே கடியலூர் உருத்திரங் கண்ணனார்  எழுதிய பெரும்பாணாற்றுப்படை பாடல்  ஒன்று உமணர்(உப்பு விற்பவர்)  வண்டி ஒன்றை விவரிக்கும்.  அவ்வண்டியும் "ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்" என்றே கூறப்பட்டிருக்கும்.   பாதை வழியே ஊடறுத்துச் செல்லும் இந்த ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்தை ஓட்டுபவள் மடியில் குழந்தையை வைத்திருக்கும் ஒரு பெண், அவள் மாட்டை அடித்து விரட்டி ஓட்டுகிறாள்.

      மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன
      'ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்'
      வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
      கோழி சேக்கும் கூடுடைப் புதவின்
          [பெரும்பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, வரிகள் 49-52]

இந்த வரிகள் கூறுவது; மழைக்காலத்தில் தனது முகட்டில்  மேகத்தைச் சுமந்து  நின்ற மலையைப்  போல,   பனையோலைப் பாய் கூரையாக வேயப்பட்டிருக்கும் அந்தக் கூண்டு வண்டியின் கூரைமீது வைக்கப்பட்டிருக்கும் கோழிக்கூட்டைக் கொண்ட அந்த உமர் கூண்டு வண்டியின் சக்கரங்கள் தரையை அறைத்து ஒலியெழுப்பிச் செல்லும்.  கானவர்கள் பயிரிட்டுள்ள தினையை அழிக்க வரும் யானைகளிடம் இருந்து காப்பதற்காக அவர்கள் புனங்களின்  இடையில் அமைத்திருக்கும் நிழல் தரும் குடில் கொண்ட  பரணைப் போலக்  காட்சி அளிக்கிறதாம் வண்டிக் கூரைமீது வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கோழிக்கூடு. (பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை: புலவர் கா. கோவிந்தன். 1996, பக்கம் -50)


இன்றைய நாளில் ஊர்திகளின் மேல் நாம் சரக்கு ஏற்றிச் செல்வது போல (Carrier/Roof rack) அக்காலத்தின் கூண்டு வண்டியின் கூண்டின் மேலும் சரக்கு ஏற்றிச் சென்றுள்ளது இதனால் தெரிகிறது.  

ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம் என்பது பனையோலைப் பாய் வேய்ந்த,  செல்லும் வழியை ஒலியுடன் அறுக்கும் கூண்டு வண்டி என்பதையும், அந்தக் கூண்டின் அமைப்பு வாய்திறந்து கொட்டாவி விடும் முதலையின் வாய் போன்ற அமைப்பில் இருக்கும் என்பதையும், அதன்மேல் சரக்கு வைக்கும் கூடு மலையின் மேல் மழைமேகம் தங்கி  இருப்பது போல இருக்கும் என்றும் தொகை இலக்கியப் பாடல் வரிகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.  அந்த அமைப்பில் உள்ள மாட்டு வண்டிகள் சென்ற நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தும் உள்ளன என்பதை ஒளிப்படங்கள் மூலம் அறியவும் முடிகிறது.  



நன்றி: தமிழணங்கு 
நவம்பர்,  2023



#இலக்கிய நுட்பம், #இலக்கியம், #தமிழணங்கு, #Themozhi  




Monday, October 23, 2023

நம் சூழலும் உணவு முறையும்

 

நம் சூழலும் உணவு முறையும்
நூல் வரிசை : நுண்பொருள் காண்பதறிவு (தொகுதி-3)
ஆசிரியர்: தேமொழி
மொழி: தமிழ்
வகை: அறிவியல் கட்டுரைகள்
ISBN: 978-81-969421-9-9
பக்கங்கள்: 140
விலை: ரூ.150
வெளியீடு:  அக்டோபர் 2023

கிடைக்குமிடம்:
சந்திரோதயம் பதிப்பகம்
3/422, திருவள்ளுவர் தெரு
தினமணி நகர், மதுரை - 625 018
தொடர்பு எண்:  +91 70109 97639




                           உள்ளடக்கம் . . . 

         1. நிலநடுக்கங்களைத் தூண்டும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி — 19
         2. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தோன்றும் புதைகுழிகளும் — 40
         3. செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் கதிரியக்கத் தாக்கத்தின் விளைவுகள் — 47
         4. காற்றிலிருந்து எரிபொருள் — 54
         5. உலக காடுகள்: காடழிப்பு நடவடிக்கைகளும் அதன் விளைவுகளும் — 59
         6. மரபணு மாற்றம் செய்த உணவுகள் தேவையா? — 74
         7. உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணும் வழி — 81
         8. இரண்டாம் பசுமைப்புரட்சி துவங்குகிறது — 89
         9. அடுக்களை அறிவியல்: சோற்றைச் சமைக்கும் முறையில் செய்ய வேண்டிய மாற்றம் — 98
         10. ஆரோக்கிய வாழ்விற்கு வழிகோலும் மத்தியதரைக்கடல் நாடுகளின் உணவுமுறை — 105
         11. சிறந்த உணவுமுறை எது? — 117
         12. ஒரு சிலர் மட்டும் அதிகநாட்கள் உயிர் வாழக் காரணம் என்ன? — 134







#நூல், #நம் சூழலும் உணவு முறையும், #Themozhi 



Sunday, October 15, 2023

உடல் நலமும் புதிய சிகிச்சை முறைகளும்

 

உடல் நலமும் புதிய சிகிச்சை முறைகளும்
நூல் வரிசை : நுண்பொருள் காண்பதறிவு (தொகுதி-2)
ஆசிரியர்: தேமொழி
மொழி: தமிழ்
வகை: அறிவியல் கட்டுரைகள்
ISBN: 978-81-968428-2-6
பக்கங்கள்: 124
விலை: ரூ.150
வெளியீடு:  அக்டோபர் 2023

கிடைக்குமிடம்:
சந்திரோதயம் பதிப்பகம்
3/422, திருவள்ளுவர் தெரு
தினமணி நகர், மதுரை - 625 018
தொடர்பு எண்:  +91 70109 97639



                           உள்ளடக்கம் . . . 

         1. படைப்பாற்றல் நம் மூளையின் எப்பகுதியில் உருவாகிறது? — 19
         2. கற்கும்பொழுது மூளை அதிகம் சிந்திக்குமானால் கற்பது தாமதமாகும் — 27
         3. ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் அளவில் வேறுபாடில்லை — 33
         4. இரத்த வகைகளுக்கும் மூளையின செயல்திறனுக்கும் உள்ள தொடர்பு — 40
         5. மூளையின் செயல்பாட்டைக் குறைக்கும் நீர்ப்பாசியின் வைரஸ்கள் — 46
         6. மகிழ்ச்சி என்றால் என்ன? அதை அடைவதைப் பற்றி அறிவியல் சொல்வதென்ன? — 53
         7. அன்புடை நெஞ்சங்களில் நிகழும் மாறுதல்கள் —  62
         8. பட்டறிவும் அறிவியல் விதிகளும் — 71
         9. ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டவரின் மூளையின் கட்டமைப்பில் உள்ள மாறுதல் — 82
         10. ஆட்டிசம் ஆய்விற்கு உதவும் கைபேசி செயலி — 89
         11. மறுவளர்ச்சி மருத்துவச் சிகிச்சை முறை சாத்தியமா? — 99
         12. தொடக்கநிலை புரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை — 108
         13. புற்றுநோயைக் கண்டறியும் எளிய சோதனை முறை கண்டுபிடிப்பு — 114
         14. மரபணு சிகிச்சை மூலம் பார்வைக் குறைபாட்டிற்குத் தீர்வு — 118









#நூல், #உடல் நலமும் புதிய சிகிச்சை முறைகளும், #Themozhi 


ஏன்? எதற்கு? எப்படி? எதனால்?

 


ஏன்? எதற்கு? எப்படி? எதனால்?
நூல் வரிசை : நுண்பொருள் காண்பதறிவு (தொகுதி-1)
ஆசிரியர்: தேமொழி
மொழி: தமிழ்
வகை: அறிவியல் கட்டுரைகள்
ISBN: 978-81-968428-5-7
பக்கங்கள்: 128
விலை: ரூ.150
வெளியீடு:  அக்டோபர் 2023

கிடைக்குமிடம்:
சந்திரோதயம் பதிப்பகம்
3/422, திருவள்ளுவர் தெரு
தினமணி நகர், மதுரை - 625 018
தொடர்பு எண்:  +91 70109 97639



                           உள்ளடக்கம் . . . 

         1. நிலவின் மறுபக்கத்தை நம்மால் ஏன் காணமுடிவதில்லை? — 19
         2. உறைபனிக்கட்டிகள் உடைவதேன்? — 23
         3. திமிங்கிலம் ஏன் பெரிய உயிரினமாக இருக்கிறது? — 27
         4. பாலம் ஏன் பாடியது? — 36 
         5. வலி நிவாரணி எவ்வாறு வேலை செய்கிறது? — 42
         6. பயணப்பிணி தோன்றக் காரணம் என்ன? — 47
         7. ஹச்சிமோஜி டிஎன்ஏ — 52
         8. ஸ்குடாய்ட் என்றொரு புதிய வடிவம் கணித வடிவியலில் அறிமுகம் — 58
         9. தேன்கூட்டின் கட்டமைப்பு: ஒரு வடிவமைப்பின் சிறப்பு — 61
         10. பிரிக்காமல் படிக்கப்படும் கடிதங்கள் — 66
         11. இலங்கை தெதிகம கோட்டாவேரா - யானைவிளக்கு — 72
         12. ஆய்வறிக்கைகளையும் அவற்றின் முடிவுகளையும் அறிந்து கொள்ளும் முறை — 79
         13. மருத்துவத்தில் நோய் கண்டறிய உதவும் கணினியின் செயற்கை நுண்ணறிவு — 86
         14. செயற்கை நுண்ணறிவுடன் ஓர் கலந்துரையாடல் — 95
         15. செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் ஓவியங்கள் — 107
         16. திறன்பேசியின் வளர்ச்சி — 116







#நூல், #ஏன்? எதற்கு? எப்படி? எதனால்?, #Themozhi 

Friday, October 13, 2023

"வையச்சிற்றூர்"

"வையச்சிற்றூர்"



வையச்சிற்றூரில்
வாழ்கிறோம் தனிமையில்
தொடர்புகள் பலப்பல
உறவுகளோ வெகுசில
தொடர்புகொள்ள இயலாத
கடைக்கோடிப் பகுதி
என்றெதுவும் இனியில்லை
விரைந்து அடைய முடியாத
அத்துவானக்காடு
என்றெதுவும் இனியில்லை
பழகுகிறோம் நாளும்
புதிய புதிய மக்களுடன்
உள்ளத்தால் விலகுகிறோம்
உடன்வாழும் உறவுகளை மறந்து
அன்புக்கு ஏங்கும் உண்மை
உறவுகள் வாடுகின்ற
மௌனமான தனிமையில்
வாழ்வுக்குப் பொருள்தான் என்ன
காட்சிப்பிழையாக விளங்கும்
வையச் சிற்றூர் வாழ்க்கை
நமக்கு வரமா சாபமா ??!!



அக்டோபர் 13, 2023

#கவிதை,  #Themozhi 



Saturday, September 23, 2023

தொல்காப்பியம் கூறும் பழந்தமிழரின் ஆண்டின் தொடக்கம்

தொல்காப்பியம் கூறும் பழந்தமிழரின் ஆண்டின் தொடக்கம்


முன்னுரை:
தமிழரின் தொன்மையான நூலாகக் கிடைக்கப் பெறுவது தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம்.  தொல்காப்பியர் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர் என்பது பொதுவாக அறிஞர்கள் ஏற்கும் ஒரு கருத்து.  தொல்காப்பியம் நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேற்றப்பட்டதாக பனம்பாரனார் யாத்த தொல்காப்பியப் பாயிரம் வழி அறிகிறோம்.  தமிழ்மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்கும் தொல்காப்பியம் உரைவளம் கொண்ட ஒரு பெரும்நூல்  மட்டுமன்றி,  தொல்காப்பியத்திற்குப் பின்னர் தோன்றிய பல இலக்கண இலக்கியங்களுக்கு முன்னோடியாக அமைந்த நூல் என்ற சிறப்பும் கொண்டது. ஏனைய மொழி நூல்கள் மொழியின் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்த பொழுது  தொல்காப்பியம் தமிழரின் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து அதைப் பொருளதிகாரமாக வழங்கிய முறை சீர் சால் தமிழுக்கே உரிய தனிச் சிறப்பு.

இத்தகைய சிறப்புமிக்க தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், காலங்களை வரிசைப்படுத்தும் நூற்பா "காரும் மாலையும் முல்லை" (அகத்திணையியல் நூற்பாக்கள் வரிசை: 6 — 12) என்று தொடங்குகிறது.   கார்காலத்தின் தொடக்கம் ஆவணி.  இன்றைய நாட்களில் இளவேனில் காலத்துச் சித்திரைத் திங்கள் ஆண்டின் தொடக்கமாகத் தமிழரால் அறியப்படுகையில் ஏன் இவ்வாறு தொல்காப்பியர் கார்காலத்தில் தொடங்குகிறார் என்பது ஐயத்திற்கும் ஆய்வுக்கும் உரிய ஒரு கேள்வி.  பழந்தமிழர் ஆண்டின் தொடக்கமாக எத்திங்களைக் கணக்கில் கொண்டிருந்தனர் என்பதற்குத் தொல்காப்பியமும் அதன் உரை ஆசிரியர்கள் அளிக்கும் விளக்கங்கள் மூலமும் விடை அறியும் முயற்சியே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

தொல்காப்பியமும் அதன் உரை நூல்களும்:
அக்காலத் தமிழரின் வாழ்க்கை முறையைப் பதிவு செய்தவை பழந்தமிழ் இலக்கியங்கள். அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்ட வாழ்வியலைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் விளக்குகிறது.   தாம் வாழும் காலத்து மக்களின் வாழ்வியல், பண்பாடு, மரபு ஆகியவற்றை உரைகளின் வழியே நூலை விளக்கும் நோக்கில் ஆங்காங்கு சுட்டிச் செல்வது உரையாசிரியர்கள் வழக்கம்.

 "தமிழ்நாட்டு வரலாறு எழுதுவோர், பழைய உரைகள் வாயிலாகக் காலத்தின் குரலைக் கேட்கலாம்; வரலாற்று நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். வரலாற்று ஆசிரியர்கள் பழைய உரைகளைச் சிறந்த வரலாற்று மூலங்களாகக் கருதி அவற்றைக் கற்றுத் தெளிந்து, தமிழக வரலாற்றை உருவாக்க வேண்டும்"
என்கிறார் 'உரையாசிரியர்கள்' நூலின் ஆசிரியர் மு.வை.அரவிந்தன் (பக்கம்.62-63). உரையாசிரியர்கள் மிக விரிவான உரையும் விளக்கமும்  தந்து உதவும் பொழுது ஐயத்திற்கு இடமாக இருக்கும் பாடல் கருத்தை அவ்வுரைகள் தெளிவுபடுத்தும் என்பது இவர் கருத்து.

தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை கண்டவரும் நூலின் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் உரை தந்தவரும் 'உரையாசிரியர்' என்று சிறப்புடன் சுட்டப்பெறும்  இளம்பூரணர் ஆவார். ஆனால் இவருக்கும் முற்பட்டோர் உரைகளும் இருந்தன என்று இவர் நூலின் மேற்கோள்கள்  மூலம் அறிய முடிகிறது.   நாம் அறியும் உரையாசிரியர்களுள்  காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணர். இவரைத் தொடர்ந்து சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோர் எழுதிய உரைகள் யாவும் தொல்காப்பியத்திற்குப் பழங்காலத்தில் தோன்றிய உரைகள் என அறியப்படுகிறது.  இவற்றோடு  பழைய உரை என்று அறியப்படும் உரை ஒன்றும் உள்ளது.  இந்த உரைநூலில் காணப்படும் மேற்கோள்கள் மூலம் இது மேற்கூறப்பட்ட ஆசிரியர்கள் யாத்த  உரைகளுக்கும் பிற்பட்டது என்று அறிகிறோம்.  பழங்காலத்தில் தோன்றிய உரைகள் என்று கூறப்பட்டாலும் இவை எழுதப்பட்டது பதினொன்றாம் நூற்றாண்டுக்  காலத்திற்கும் பதினைந்தாம் நூற்றாண்டுக் காலத்திற்கும்  இடைப்பட்ட காலத்திலாகும்.  ஒரு சில நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிற்காலத்தில் தொல்காப்பியத்திற்குப்  பதினேழாம் நூற்றாண்டு முதற்கொண்டு உரைகள் எழுதுவது தொடர்ந்தது.  

எழுத்து, சொல், பொருள் என்ற முப்பகுப்புடைய தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகமும், புறமும், மரபுகளும் தெற்றென விளக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.  நூலின் முதல் பகுதியான அகத்திணையியல் காதலர் வாழ்க்கை தொடங்கும் நிலப்பாகுபாடு காட்டி முதல், கரு, உரிப்பொருள்களை விளக்கிக் காட்டுகிறது.  1. அகத்திணையியல், 2. புறத்திணையியல், 3. களவியல், 4. கற்பியல், 5. பொருளியல், 6. மெய்ப்பாட்டியல், 7. உவமையியல், 8. செய்யுளியல், 9. மரபியல்  என்ற ஒன்பது இயல்கள் கொண்டது தொல்காப்பியத்தின் பொருளதிகாரம்.  பழங்காலத்தில் தோன்றிய உரைகளில் எழுத்து, சொல், பொருள், அதிகாரங்களில் சொல்லதிகாரத்திற்கே பலர் வழங்கிய உரைகள் கிடைக்கப் பெறுகின்றன.  பொருளதிகாரத்திற்கு உரை வழங்கியவர்கள் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவர் மட்டுமே.   நம் ஆய்வுக்குரிய தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல்  6 — 12 நூற்பாக்களுக்கு நாம் பொருள் அறிய விரும்பினால் இவர்கள் உரைகள் மட்டுமே நமக்கு உதவக்கூடியவை. இவற்றுள்;  

தொல்காப்பியத்திற்குப் பழங்காலத்தில் தோன்றிய உரைகளுள் இளம்பூரணர் எழுதிய உரை மட்டுமே இது வரை முழுமையாகக் கிடைத்துள்ளது. இது தொல்காப்பியத்திற்கு எழுந்த முதல் உரை மட்டும் அன்று, மற்ற உரைகளுக்கும் வழிகாட்டியாக அமைந்தது என்ற சிறப்பையும் கொண்டது.  

பேராசிரியர் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் முதலாக மரபியல் இறுதியாக உள்ள இயல்களுக்கு மட்டும் உரை எழுதியுள்ளார். பேராசிரியர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதினார் என்ற குறிப்புகள் நூலின் மூலமே அறிய முடிந்தாலும் நூல் முழுமையும் நமக்குக் கிட்டாதது ஒரு கெடுவாய்ப்பே. அகத்திணையியல் உரை நமக்குக் கிடைத்திலது.

நச்சினார்க்கினியர் நூல் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களுக்கும் என தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர். அகத்திணையியல் முதலாக பொருளியல் இறுதியாக ஐந்தியல்களுக்கும், செய்யுள் இயலுக்கும் உரை கிடைக்கிறது.  ஆக இங்கு நமக்கோர் நல்வாய்ப்பாகப் பொருளதிகாரம் அகத்திணையியல் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை கிடைக்கப் பெற்றுள்ளோம்.

     “ காரும் மாலையும் முல்லை”  - அகத்திணையியல், நூ. 6

     “ குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்”   -  அகத்திணையியல், நூ. 7

      “பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப”   - அகத்திணையியல், நூ. 8

      “வைகறை விடியல் மருதம்  -  அகத்திணையியல், நூ. 9

      “எற்பாடு, நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும்”   -  அகத்திணையியல், நூ. 10

      “நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
      முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே”     -  அகத்திணையியல், நூ. 11

      “பின்பனிதானும் உரித்து என மொழிப”  -  அகத்திணையியல், நூ. 12

பொருளதிகாரம் கற்போர் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோர் உரைகளை ஒப்பிட்டு பொருள் கொள்வது வழக்கம்.  அம்முறையில் தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல் நூற்பாக்கள்: 6 — 12க்கு  நாம் பழங்கால உரைகளின் உதவியுடன் பொருளறிய விரும்பினால் அகத்திணையியலுக்கு உரைகண்ட இளம்பூரணர் மற்றும்  நச்சினார்க்கினியர் ஆகியோர் இருவர் விளக்கங்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. அகத்திணையியல் உரை விளக்கம்  பேராசிரியர் எழுதிய உரை நூலில் இல்லாமையால் நாம் இளம்பூரணர் மற்றும் நச்சினார்க்கினியர் வழங்கிய உரைகளை ஒப்புநோக்கலாம்.

இளம்பூரணர் உரை:
இளம்பூரணர் உரையின் அடிப்படையில் கீழ்க்காணுமாறு இந்த நூற்பாக்களுக்கு நாம் பொருள் கொள்ள இயலும்.  

ஆவணித்‌ திங்களும்‌ புரட்டாசித்‌ திங்களுமாகிய கார்காலமும்‌, மாலைப்‌ பொழுதும்‌ முறையே முல்லைத்‌ திணைக்குரிய பெரும்‌ பொழுதும்‌ சிறு பொழுதும்‌ ஆகும்‌.  [அகத்திணையியல், நூ. 6]

ஐப்பசித்‌ திங்களும்‌ கார்த்திகைத்‌ திங்களுமாகிய கூதிர்‌ காலமும்‌, நள்ளிரவும்‌ முறையே குறிஞ்சித்‌ திணைக்குரிய பெரும்‌ பொழுதும்‌ சிறு பொழுதுமாகும் என்பர் புலவர்.  [அகத்திணையியல், நூ. 7]

மார்கழித்‌ திங்களும்‌ தைத்திங்களும்‌ கூடிய முன்பனிக்‌ காலமும்‌ குறிஞ்சித்‌ திணைக்கு உரியது என்று கூறுவர்‌. [அகத்திணையியல், நூ. 8]

இராப்பொழுதின்‌ பின்பகுதியான  வைகறையும்‌, பகற்‌ பொழுதின்‌ முன்பகுதியான விடியலும்‌ மருதத்‌ திணைக்குரிய சிறுபொழுதுகளாகும்‌. [அகத்திணையியல், நூ. 9]

நெய்தல்‌ திணைக்குரிய சிறு பொழுது பகற்பொழுதின்‌ பிற்பகுதியான எற்பாடாகும். [அகத்திணையியல், நூ. 10]

ஐந்திணையின்‌ நடுவதாகிய பாலைத்திணைக்கு வேனிற்‌ காலமும்‌ நண்பகலும்‌ முறையே உரிய பெரும்பொழுதும்‌ சிறு பொழுதுமாகும்‌. சித்திரை, வைகாசி என்னும்‌ இரு திங்களும்‌ கொண்டது இளவேனில்‌.  ஆனியும்‌ ஆடியும்‌ கொண்டது முதுவேனில்‌. நண்பகலாவது பகற்பொழுதின்‌ நடுப்பகுதி. பாலைக்கெனத்‌ தனியே நிலம்‌ ஒன்றைக் கூறாமையால்‌, இப்‌பெரும்பொழுதும்‌ சிறுபொழுதும்‌ எந்த நிலத்தில் அல்லது எத்திணையில் ‌ நிகழ்ந்தாலும்‌ அது பாலையாகக்‌ கருதப்படும்‌.  அதாவது, முதற்பொருள்கள்‌ இரண்டினுள்‌ பொழுதால்‌ குறிக்கப்படுவது பாலைத்திணை என்றவாறு. [11]

மாசித்திங்களும்‌ பங்குனித்திங்களும்‌ சேர்ந்த பின்பனிப்‌ பருவமாகிய பெரும்பொழுதும்‌ பாலைத்திணைக்கு உரியது என்று கூறுவர்‌.[12] பொதுவாக, கால அளவீட்டின் கூறுகளை நாம் பயன்படுத்தும் வரிசையில் முதலிலிருந்து இறுதிவரை கூறுவது மரபு.  

      “வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
      மாசறு திங்கள் கங்கை முடி அணிந்தென் உளமே புகுந்த அதனால்
      ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளிசனிபாம்பு இரண்டும் உடனே
      ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.”
                                -  ( சம்பந்தர் -  கோளறு பதிகம்)
என்று திருஞான சம்பந்தர் தான் பாடிய கோளறு பதிகத்தில் வார நாட்கள் அனைத்தும் நல்ல நாட்களே.  தீமை கொடுக்கும் நாட்கள் என எவையும் இல்லை என்று குறிப்பிடுகிறார். அதில் வழக்கத்தில் இருக்கும் முறையாக வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றில் தொடங்கி  வாரத்தின் இறுதி நாளான சனியில், நாம் இன்றும் பயன் கொள்ளும் அதே வரிசையில் கூறிச் செல்வதைக் காணலாம்.  இப்பாடலின் பொருள்; கங்கையையும் பிறைச்சந்திரனையும் முடியில் அணிந்த சிவன், என் உள்ளத்திலும் குடிபுகுந்து இருப்பதால், ஒரு வாரத்தின் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களும் ராகு கேது என்பனவும் ஒரு தீமையும் செய்யமாட்டா. அவை எல்லாம் நல்லவையே; அடியார்களுக்கு மிக நல்லவை என்பதாகும்.

கால அளவீட்டின் கூறுகளை நாம் பயன்படுத்தும் வரிசையில் முதலிலிருந்து இறுதிவரை கூறுவது மரபு என்பது இப்பாடல் மூலம் விளங்கும். இது  இவ்வாறு வழக்கத்தில் இருக்க, தமிழர் சித்திரையை ஆண்டின் தொடக்கம் என்று இன்றைய நாட்களில் கொண்டாடுவது வழக்கத்தில் இருக்கும்பொழுது ஏன் தொல்காப்பியர் கார்காலம் என்று ஆவணியில் இருந்து தொடங்குகிறார் என்ற  கேள்வி நமக்கு எழுகிறது.   அதற்கான விடையைப் பழங்கால உரைகளில் இளம்பூரணர் காலத்திற்குப் பிறகு பதினான்காம் நூற்றாண்டில் அகத்திணையியலுக்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் விளக்குகிறார்.

மிகச் சுருக்கமாகக் கூறி எளிய வகையில் தெளிவான விளக்கக் கருத்தைக் கூறுபவர் இளம்பூரணர் என்று பாராட்டும் 'உரையாசிரியர்கள்' நூலின் ஆசிரியர் மு.வை.அரவிந்தன், நச்சினார்க்கினியர் உரையை மதிப்பீடு செய்யும் பொழுது நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர் என்று நச்சினார்க்கினியரைப் பாராட்டுகிறார். “நச்சினார்க்கினியர் நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர். பல்வேறு கலைகளைக் கற்றுத் துறைபோகிய வித்தகர். பாட்டிற்குச் சொற்பொருள் கண்டு எழுதுவதோடு அவர் நிற்கவில்லை. நூலில் இடம் பெறும் சமயக் கருத்து, இசை, நாடகம் முதலிய கலைகளைப் பற்றிய அறிவு, ஆடை அணிபற்றிய நுண்ணிய விளக்கம், உலகில் உள்ள பல இனத்து மக்களின் பழக்க வழக்கம், பண்பாடு இவற்றை அறிந்தவர். தமிழில் உள்ள இலக்கணம் இலக்கியம் நிகண்டு காவியப் புராணம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர். சோதிடம், மருத்துவம் பற்றியும் கட்டடக்கலை பற்றியும் போதிய அறிவு இவரிடம் உண்டு. பயிர்வகையும் உயிர்வகையும் பற்றி நிறைய அறிந்தவர்" என்று நச்சினார்க்கினியர் அருளிய உரைவளத்தை மு.வை.அரவிந்தன் சிறப்பித்துக் கூறுகிறார். இனி இலக்கியச் சுவை நுகர்ச்சிக்கு உறுதுணை என்று அறியப்படும் நச்சினார்க்கினியர் உரை விளக்கத்தை நோக்கலாம்.

நச்சினார்க்கினியர் உரை:
      “காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
      கூதிர் யாமம் என்மனார் புலவர்”     – அகத்திணையியல், நூ. 6
என்ற நூற்பாவிற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் . . .  

"இக்காலங்கட்கு விதந்து ஓர் பெயர் கூறாது வாளா கூறினார்.  அப்பெயர் உலக வழக்காய் அப்பொருள் உணர நிற்றலின்.   காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்" என்று உரை எழுதியுள்ளார்.

இதன் பொருள்; உலக வழக்காக யாவரும் அறிந்த செய்தி என்பதால் தொல்காப்பியர் சிறப்பாகப் பொருள் கூற முற்படாமல் வழக்காற்றை அவ்வாறே நூற்பாவாகச் சொல்லிச் சென்றுள்ளார்.  இதன் விளக்கம் யாதெனில், ஞாயிற்றின் ஆட்சி வீடாகிய சிங்கவோரை முதல் (ஆவணித் திங்கள்),  திங்களின் ஆட்சி வீடாகிய  கற்கடகவோரையின் இறுதி (ஆடித்திங்கள்) வந்து முடியும்வரை ஓர் ஆண்டாகும்.  இதனை முறையாக ஆறு பருவங்களாகப் பகுத்து ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு திங்கள் உரியதாக்கினார் என்று நச்சினார்க்கினியர் மிகத் தெளிவாக விளக்கம் உரைக்கிறார்.  அத்துடன் ஞாயிற்றைக் கொண்டே காலம் வரையறுக்கப்பட்டதால்  'காலவுரிமை எய்திய ஞாயிறு' என்றும் குறிப்பிடுகிறார்.  

(குறிப்பு:  வானியல் துணை கொண்டு கணிக்கும் முறையில் 'ஓரை' என்பது வானில் ஒரு குறிப்பிட்ட விண்மீன் கூட்டம் உள்ள காலம் கொண்ட ஒரு பகுதி.  அதாவது, இன்றைய நாளில் நாம் கூறும் இராசி மண்டலத்தின் 12 பிரிவுகளில் 30 பாகை கொண்ட ஒரு பிரிவு.  சிங்க ஓரை என்பது சூரியன் ஆட்சி செய்யும் இடமாக ஆரூடத்தில் கூறப்படும் சிம்ம இராசி.  அவ்வாறே கற்கடக ஓரை என்பது சந்திரனின் ஆட்சி இடமாகக் கூறப்படும் கடக இராசி. காலப் பகுப்பைக் குறிக்கும் ஓரை என்பது காலம் என்ற பொருள் குறிக்கும் ஹோரா (ஹோரா/hṓrā) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவான கலைச்சொல் என்று கூறுவர் என்பதை அறிக.  இலத்தீன்hōra, ஆங்கில Hour யாவற்றுக்கும் கிரேக்கச் சொல்தான் மூலம்)

சற்றொப்ப 2500 ஆண்டுகளுக்கு  முன்னர் தொல்காப்பியம் யாத்த தொல்காப்பியரே இது முன்னர் இருந்த வழக்கம் என்பதை  'என்மனார் புலவர்' என்பதன் மூலம் சுட்டுகிறார்.  நச்சினார்க்கினியர் காலம் 14ஆம் நூற்றாண்டு என்பதால் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் உரை எழுதிய நச்சினார்க்கினியர், ஆவணி ஆண்டின் தொடக்கம் என்பது யாவரும் அறிந்த ஒரு வழக்கம்,  தன் ஆட்சி வீடான சிம்ம ராசியில் சூரியன் நுழையும் ஆவணியில் ஆண்டு தொடங்கி,  சந்திரனின் ஆட்சி வீடாகிய கடக ராசியில் சூரியன் ஒரு சுற்றை நிறைவு செய்யும் ஆடித் திங்கள் இறுதியில் ஓர் ஆண்டு முடியும், இந்த ஓர் ஆண்டுக் காலத்தை, கார்காலத்தைத்  தொடக்கமாகக் கொண்டு ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு திங்களாக  வரையறுத்து பருவங்கள் கீழ்வருமாறு கணக்கிடப்படும் என்று ஐயமற விளக்குகிறார்.  

      கார்காலம்: ஆவணி, புரட்டாசி;  
      கூதிர் காலம்: ஐப்பசி, கார்த்திகை;
      முன்பனிக் காலம்: மார்கழி, தை;
      பின்பனிக் காலம்: மாசி, பங்குனி;  
      இளவேனில் காலம்: சித்திரை, வைகாசி;
      முதுவேனில் காலம்: ஆனி, ஆடி    
மேற்கண்டவாறு நச்சினார்க்கினியர் வழங்கும் இந்த உரை விளக்க முறைமையே நமக்குப் பழந்தமிழரின் ஆண்டின் தொடக்கம்  ஆவணித் திங்கள் என்பத்தை அறுதியிட்டுக் கூறும் சான்றாக உண்மையை நிலை நிறுத்த உதவுகிறது.

சற்றொப்ப பொது ஆண்டிற்கு முன் (பொ. ஆ. மு.) 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்யும் வேளாண் தொழில் நுட்பம் நடைமுறைக்கு வருகிறது. வேளாண்மை  செய்து வாழும் சமுதாயமாக மனிதகுலம் முன்னேறியபொழுது காலத்தே பயிர் செய்து உழைப்பிற்கான பலனைப்  பெறுவது அவர்களின் முதன்மை நோக்கமாக மாறியது.  ஆறு பருவங்களும் ஒரு சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வருகிறது என்று காலத்தின் சுழற்சி முறையைக் கவனித்திருந்த அவர்கள் அதைத் துல்லியமாகக் கணக்கிட வானியல் நிகழ்வுகளைத் துணைகொண்டு காலத்தைக் கணக்கிட்டனர்.  வானில் கதிரவன் மற்றும் நிலவின் இருப்பையும், விண்மீன்கள்  கூட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.  தற்காலத்தில் ராசி மண்டலம் என்று ஆரூடம் கணிக்கப் பயன்படும் வானியல் மாற்றங்கள் இதிலிருந்து வளர்ச்சி அடைந்த  ஒரு பிற்கால முறை.  விண்மீன்கள் கூட்டத்தில்  கண்ட ஒரு கற்பனை உருவத்திற்கு ஒரு பெயர் சூட்டி வானத்தைப் பகுதிகளாக அல்லது ஓரைகளாகப் பிரித்துக்  கொண்டு, ஒரு குறிப்பிட்ட விண்மீன் கூட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருக்கும் நிலையை கொண்டு அதன் அடிப்படையில் காலத்தை  12 மாதங்களாகப் பிரித்துக் கணக்கிட்டுக் கொண்டனர்.  பின்னர் இதன் அடிப்படையில் பருவங்களை அடையாளம் கண்டு கொண்ட பொழுது சரியான பருவத்தில் உழவுத் தொழிலை  மேற்கொண்டு பலன் பெற முடிந்தது.

இந்த வழக்கில் தமிழர் பன்னெடுங்காலமாகச் சிம்ம ஓரையில் சூரியன் செல்லும் காலத்தை (ஆவணித் திங்களை) ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதையும், 14ஆம் நூற்றாண்டினாரான நச்சினார்க்கினியர் எழுதிய உரையின் அடிப்படையில்  இந்த வழக்கம் 14ஆம் நூற்றாண்டு வரை தமிழரிடம் இருந்தது என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.

இந்தத் தகவலை வலியுறுத்தும் சான்றுகளாக நிகண்டுகள் தரும் குறிப்புகளும் அணி சேர்கின்றன.  இதே காலகட்டத்தில் 9ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டு  வரை இயற்றப்பட்ட தமிழ் நிகண்டுகளின் மூலமும் ஆவணி ஆண்டின் தொடக்கம் என்ற தகவலைப் பெறமுடியும்.

9ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திவாகர நிகண்டு - "ஆவணி முதலா இரண்டு இரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே"  
     [சேந்தன் திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்-தெய்வப் பெயர் தொகுதி-134]

10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிங்கல நிகண்டு - "ஆவணி முதலா இரண்டு இரண்டாக மேவிய திங்கள்‌ எண்ணினர்‌ கொளலே"
      [பிங்கல முனிவர் இயற்றிய பிங்கலந்தை-'வான்வகை' - சூத்திரங்கள்:210]

16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சூடாமணி நிகண்டு - "ஆவணியே ஆதி மற்று இரண்டு இரண்டு மாதம்‌ பருவம்‌ மூவிரண்டும்‌ ஆய்ந்து பார்த்திடின்‌ வாய்த்த பேராம்."  
      [மண்டல புருடர் எழுதிய சூடாமணி நிகண்டு: 95]

இச்சான்றுகள் மூலம் 16 ஆம் நூற்றாண்டுவரை தமிழர்கள் ஆவணித் திங்களை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.

அதுமட்டுமின்றி,  வைதீகர்களின் சமஸ்கிருத வழக்கப்படி பருவம்  என்பது 'இருது'(Ritu) என்று அழைக்கப் பெறும் ‌ (பருவமும்‌ இருதுவும்‌ பகரில்‌ ஒன்றே - 208) என பிங்கல நிகண்டு கூறுகிறது;

 வசந்தம்‌, இரீடம்‌, வருடம்‌, சரமே, ஏமந்தம்‌, சிசிரம் என இருது ஆறு ஆகும்‌. (பிங்கல நிகண்டு - 211)

  அவை தாம்‌ சித்திரை முதலாச்‌ செல் மாதம்‌  இரண்டா வைத்தன எண்ணிக்‌ கொள்க என்ப. (பிங்கல நிகண்டு - 212)

ஆக, ஆரிய வழக்கப்படி இருதுகளின் வரிசை வசந்த இருதுவில் அல்லது இளவேனில் பருவத்துச் சித்திரைத் திங்களில் தொடங்கி, இருதுவுக்கு இரண்டிரண்டு திங்களாக ஆண்டின் கால அளவீடு கணக்கிடப்படும் என்பதையும் பிங்கல நிகண்டு மூலமாகவே அறிந்து கொள்ளவும் முடிகிறது.  தமிழகக் கோயில் கல்வெட்டுகளில் வைதீகச் சமய ஆதரவு நிலைகொண்ட அந்நியர்களான விஜயநகர அரசர்கள் ஆட்சிக் காலத்திலேயே வசந்த இருதுவில் சித்திரையை முதல் திங்களாகக் கொண்டு ஆண்டைக் கணக்கிடும் ஆரிய வழக்கம் நுழைந்ததுள்ளது என்பது தெரிகிறது. விஜயநகர அரசர்களின் ஆட்சிக் காலத்தில்தான் கோயில் கல்வெட்டுகளில் 'பிரபவ' என்பதில் தொடங்கி 'அட்சய' என்பதில் முடியும் வடமொழிப் பெயர்கள் கொண்ட 60 வியாழ வட்ட ஆண்டு கணக்கீடு கல்வெட்டுகளில் பதிவாகத் தொடங்குவதையும் காண முடிகிறது.

நாம் இதுகாறும் அறிந்த வரலாற்றுக் காலம் தொடங்கி  ஆவணங்களில் பதியப்பட்ட குறிப்பில் இருந்து மட்டுமே ஆராய்ந்தால் 16ஆம்  நூற்றாண்டுவரை ஆவணியைத் தமிழர் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, பழந்தமிழரின் ஆண்டின் தொடக்கம் எது என்ற கேள்விக்குத் தொல்காப்பிய நூற்பா, அதற்கான நச்சினார்க்கினியர் உரை ஆகியவற்றின் அடிப்படையில் ஆவணியே தமிழரின் புத்தாண்டு தொடக்கம் என்றே விடை அளிக்க இயலும்.  அதுமட்டுமன்றி, தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட காலத்தில் இருந்து இவ்வழக்கம் தமிழரிடம் இருந்தது என்பதற்கும் தொல்காப்பியத்தில் குறிப்பு இருக்கிறது.
 
முடிவுரை:
ஒரு கருதுகோளை நிறுவ உதவும் சான்றுகளை முதன்மை நிலைச் சான்றுகள் எனவும், இரண்டாம் நிலை மூன்றாம் நிலைச்  சான்றுகள் எனவும் வரையறுத்து ஆய்வு நெறி வகுக்கப்பட்டுள்ளது[1]. இந்த வழிகாட்டுதலில் எழுத்தாளர் இயற்றியது முதன்மை நிலைச் சான்றாக அமையும்.  அதற்கு எழுதப்படும் உரை இரண்டாம் நிலைச் சான்றாகவும், வழக்காற்றில்  உள்ள அத்தகவலைக் குறிப்பிடும்  அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள் மூன்றாம் நிலைத் தரவுகளாகவும் ஆய்வாளர்களால் கையாளப்படும் என அறிக. இம்முறையை அடியொற்றி, 
தொல்காப்பியர் குறிப்பிடும் "காரும் மாலையும் முல்லை குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்" என்பது தமிழர் கார்காலத்தை அல்லது ஆவணியை ஆண்டின் தொடக்கமாகக் கணக்கிட்டனர் என்பதை முதன்மை நிலைச் சான்றாகவும்;

அதனை விரித்து "காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம்" என நச்சினார்க்கினியர் வழங்கிய உரை இரண்டாம் நிலைச்சான்றாகவும்,

"ஆவணி முதலா இரண்டு இரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே" என்றும் "ஆவணியே ஆதி மற்று இரண்டு இரண்டு மாதம்‌ பருவம்‌ மூவிரண்டும்‌ ஆய்ந்து பார்த்திடின்‌ வாய்த்த பேராம்" என்று இடைக்காலத்தில் எழுதப்பட்ட நிகண்டுகள் தரும் செய்திகள் மூன்றாம் நிலைக்க சான்றுகளாகவும் அமைந்து,
ஆவணித் திங்களைப் பழந்தமிழர்கள் ஆண்டின் தொடக்கமாகக் கணக்கிட்டனர் என்பதை நிறுவ இயலுகிறது.
 
மு.வை.அரவிந்தன் எழுதிய உரையாசிரியர்கள் நூலிற்குச் சிறப்புரை தந்த கி. வா. ஜகந்நாதன் அவர்கள் "நூலாசிரியர்களின் உள்ளக் கிடக்கையை நன்கு தெரிந்துகொண்டு கருத்தை விளக்குவதோடு, உவமை மேற்கோள் முதலியவற்றையும் கட்டித் தெளிவிக்க வேண்டும். இதுவோ அதுவோ என்று ஐயுறுவதற்குரிய இடங்களில் தக்கக் காரணங்களைக் காட்டி இன்னதுதான் என்று தெளிவுபடுத்த வேண்டும். செய்யுள் வழக்கு, உலக வழக்கு இரண்டிலிருந்தும் மேற்கோள்களும் ஒப்புமைகளும் காட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டு மூலப்பொருளை அறிய உதவுவன உரைகளே என வலியுறுத்துகிறார். இக்கருத்து தொல்காப்பியர் தன் நூலில் "காரும் மாலையும் முல்லை" என்று கார்காலத்தை ஏன் முதலில் வைத்தார் என்பதற்கான காரணத்தை நச்சினார்க்கினியர் எழுதிய உரை விவரித்துக் கூறியதன் மூலம் தமிழரின் ஆண்டின் தொடக்கம் குறித்துக் கொண்டிருந்த ஐயத்தை நீக்கி நாம் உண்மை அறிய உதவியுள்ளது.

............................................................................

பார்வை நூல்கள்:
௧.  தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரையுடன், கழக வெளியீடு (1969)
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0017098_%20தொல்காப்பியம்_பொருளதிகாரம்.pdf

௨.  தொல்காப்பியம் பொருளதிகார மூலமும்  நச்சினார்க்கினியருரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (2007)
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdluhy.TVA_BOK_0006010/page/20/mode/2up

௩.  உரையாசிரியர்கள்,  மு.வை.அரவிந்தன்
https://www.tamilvu.org/ta/library-lA476-html-lA476ind-115089

அடிக்குறிப்புகள்:
1. Primary, Secondary and Tertiary Sources.  University of Maryland Libraries
https://web.archive.org/web/20130726061349/http://www.lib.umd.edu/ues/guides/primary-sources

............................................................................
முனைவர் ஜோதி எஸ். தேமொழி;  “மின்தமிழ்” இதழின் பொறுப்பாசிரியர், “தமிழணங்கு” இதழின் ஆசிரியர் குழு அங்கத்தவர், “தமிழ் மரபு அறக்கட்டளை” பன்னாட்டு அமைப்பின் செயலாளர், “அறிவியல் தமிழ் மன்றம்” இயக்குநர் குழுவின் புறக்குழு உறுப்பினர்.

............................................................................



கனடா தொல்காப்பிய மன்றத்தின்  8 ஆம் ஆண்டு  (செப்டெம்பர் 23, 2023 அன்று  ஒன்டோரியோ நகரில் நடைபெற்ற) விழாவின்,  தொல்காப்பிய மன்றக் கலைவிழா மலரில் வெளியான கட்டுரை.  

............................................................................
நன்றி:  கனடா தொல்காப்பிய மன்றம் 
செப்டெம்பர் 23, 2023


#கருத்தரங்கம், #இலக்கியம், #தொல்காப்பியம்,  #Themozhi 





Monday, September 4, 2023

அறிஞர் அண்ணா எழுதிய "செவ்வாழை" - சிறுகதைத் திறனாய்வு

அறிஞர் அண்ணா எழுதிய "செவ்வாழை" - சிறுகதைத் திறனாய்வு

 
தன் மனதின் உணர்வுகளை வெளியில் கொட்டுவதற்காகக் கதைகள் எழுதுவோர் ஒருவகை; அவ்வாறு தன் உணர்வைக் கதைகளாக எழுதும் பொழுது அவற்றால் இச் சமுதாயத்தில் மாற்றம் வரவேண்டும் என்று எழுதுவோர் மற்றொருவகை.  "புத்தகங்கள் மூலமே பழங் கருத்துகளை நீக்கி, பாசி படிந்த எண்ணங்களைப் போக்கி, நல்வாழ்வுக்கான நல்லறிவுக் கருத்துகளை, புதுமை எண்ணங்களை ஏற்படுத்த முடியும்" என்ற கொள்கை கொண்ட அறிஞர் அண்ணாவின் எழுத்து இரண்டாவது வகை.  'செவ்வாழை' என்னும் சிறுகதையின் குறிக்கோளும் அதுவே.

"செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான்" என்ற வரி அந்த ஏழை விவசாயி, தனது உழைப்பில் வளரும் தனது வீட்டுத் தோட்டத்துச் செவ்வாழையை எத்தகைய கருவூலமாகக் கருதினான் என்று காட்டுகிறது. பண்ணை மருமகளின் பிறந்தநாளுக்காகச் சிறப்புக் கோயில் ஆராதனைக்குக்  கணக்குப்பிள்ளை சுந்தரம், "கடையில் நல்ல பழங்கள் இல்லை. நம் செங்கோடனின் கொல்லையில் தரமாக ஒரு செவ்வாழைக் குலை இருக்கு" என்று கூறி அதைக் கொண்டுவர ஏற்பாடு செய்கிறான். அதில் நான்கு சீப்பு வாழைப் பழங்களைக் கடையில் விற்று வரும்படியும் பார்த்துவிடுகிறான் அந்த இடைத்தரகன். ஓர் ஏழை உழவனின் உழைப்பு அவனுக்கோ அவன் குடும்பத்திற்கோ கிடைக்காமல் செய்கிறான் அக்கயவன் கணக்குப்பிள்ளை.

தன் வீட்டுப் பழமே கடையில் விற்பனைக்கு  இருக்கும் பொழுது கையில் இருக்கும் காலணாவுக்குச் செங்கோடனின் மகன் கரியனால் அதை வாங்க  முடியாமல், "பழம், ஒரு அணாடா பயலே. காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா... போடா" என்று கடைக்காரனால் அவன் விரட்டப்படும் பொழுது அந்தச் சிறுவனின் ஏக்கமும், குலை வெட்டப்பட்டச் செவ்வாழை, இறந்துவிட்ட தன் பாட்டியின் பாடையில் கட்டப்படும் பொழுது பாடையைக் காட்டி, "எங்க வீட்டுச் செவ்வாழைடா" என்று அவன் பெருமை பேசும் பொழுதும் எவருக்கும் மனதில் கழிவிரக்கம் தோன்றும்.

சமூகச் சீர்திருத்தம் நோக்கி மக்களைச் சிந்திக்க வைக்கவேண்டியது எழுத்தாளரின் நோக்கம் என்றால் அது நிறைவேறிவிட்டது.  கதையின் கரு அக்காலத்தில் மட்டுமல்ல, இன்றும் பொருந்தும். உழைக்கும் வர்க்கத்தின் வறிய நிலையையும், முதலாளி வர்க்கம் அவர்கள் உழைப்பை மதிக்காமல் உறிஞ்சி வாழும் வளர்ச்சியையும் பார்க்கையில் இது போன்று வஞ்சிக்கப்படும் தொழிலாளர்களின் நிலையை எடுத்துரைக்க, பலர் சமூகச் சீர்திருத்த நோக்கில் கதைகள் எழுதவேண்டியது தேவையாகிறது. அண்ணாவின் கேள்வியே படித்துமுடித்தபின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.  "உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம், பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா".  செங்கொடிப் பொதுவுடைமைக் கருத்து  கொண்ட கதையின் நாயகனுக்குச்  செங்கோடன் என்று பெயர் சூட்டி, வாழையையும் செவ்வாழையாகக் காட்டிய அண்ணாவின் உள்நோக்கத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


நன்றி: தமிழணங்கு 
செப்டெம்பர், 2023


#தமிழணங்கு, #திறனாய்வு, #Themozhi






Tuesday, August 15, 2023

சிறு நல் வாழ்க்கை

 

சிறு நல் வாழ்க்கை
ஆசிரியர்: தேமொழி
மொழி: தமிழ்
வகை: சமூகவியல் கட்டுரைகள்
ISBN: 978-81-968782-3-8
பக்கங்கள்: 86
விலை: ரூ.200
வெளியீடு:  2023

கிடைக்குமிடம்:
சந்திரோதயம் பதிப்பகம்
3/422, திருவள்ளுவர் தெரு
தினமணி நகர், மதுரை - 625 018
தொடர்பு எண்:  +91 70109 97639


                           உள்ளடக்கம் . . . 

1. சிறு நல் வாழ்க்கை — 15
2. 18ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றுப் பதிவுகள் — 21
3. பெண்ணடிமை நிலை குறித்து பெரியாரின் பார்வை — 30
4. அண்ணல் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் — 42
5. தீபாவளி என்ற சொல் எப்பொழுது தோன்றியது? — 54
6. ஆய்ச்சியர் குரவை — 66
7. இந்தியாவின் முதலை இனங்கள் — 73
8. செய்க பொருளை — 82



#நூல், #சிறு நல் வாழ்க்கை,  #Themozhi 

Monday, August 7, 2023

நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமா?

நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமா?



'எது தமிழ்ப் புத்தாண்டு?' தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமான முறையில் அறிவிக்கப்பட்ட  தைத் திங்களின் முதல் நாளா (2008-ஆம் ஆண்டு அரசாணை) அல்லது அதுநாள் வரையில் வழக்கத்தில் இருந்துவந்த சித்திரைத் திங்களின் முதல் நாளா  என்ற புத்தாண்டு குறித்த சர்ச்சைகள் தமிழகத்தில் ஒரு தொடர்கதை.  ஆனால், இந்த இருநாட்களும் அல்ல, தொல் தமிழ் நாட்டில் ஆண்டின் தொடக்கமாக இருந்தது ஆவணித் திங்கள் முதல் நாள்தான் என்பதற்கு அசைக்கமுடியாத சான்றுகள் உள்ளன.  

எனவே சித்திரை முதல் நாள் ஆண்டின் தொடக்கமாகவும், அதன் வியாழவட்ட 60  ஆண்டுகள் சுழற்சி முறைக் கணக்கிடலில் பயன் கொள்ளப்பட்ட 'வடமொழி ஆண்டுப் பெயர்கள்’ கொண்ட காலக்கணிப்பு முறை வழக்கத்திற்கு வந்தது பிற்காலத்தில் நிகழ்ந்த ஒரு மாற்றம் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.  வைதீகத்தின் தாக்கம் கொண்டுவந்த விளைவே இடையில் தொடங்கிய  சித்திரைத் திங்கள் புத்தாண்டு வழக்கமாகும்.  அந்நாட்களில் அக்காலத்தில் ஆட்சியிலிருந்த அரச ஆதரவுடன் சித்திரைத் திங்கள் புத்தாண்டு வழக்கம் தமிழகத்தில் நடைமுறைக்கு  ஏற்றுக் கொள்ளப்பட்டது எனலாம்.  

தைத்திங்கள் புத்தாண்டு விரும்பிகளோ அல்லது சித்திரைத்திங்கள் புத்தாண்டு விரும்பிகளோ தங்கள் வாதத்தை ஆணித்தரமாக நிறுவுவதற்கென இரு  பிரிவினருமே  'தைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்' என்பதற்கோ, அல்லது 'சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்'  என்பதற்கோ உறுதியான சான்றுகள் எதுவுமே அளித்தது இல்லை.   இந்த மாதம்தான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்று “உறுதியாக அறுதியிட்டு நேரடியாகக் கூறாத”  கல்வெட்டுப் பதிவுகள்,  இலக்கிய வரிகள் போன்றவற்றை எல்லாம் இயன்றவரை மேற்கோள் கொடுத்து  வாதிடுவார்கள்.  

சித்திரை என்பதற்கு அறிவியல் மற்றும் வானியல் அடிப்படையில் சான்று கொடுக்க முற்படுகையில், தஞ்சை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரையில் தமிழர் புத்தாண்டு என்ற உரையை பேராசிரியர் முனைவர் சி.கோ.தெய்வநாயகம் வழங்கினார். இவ்வுரையில் நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமாக அமைகிறது, தமிழர் புத்தாண்டின் தொடக்கம் அறிவியல் அடிப்படையில் வானியல் நிகழ்வை அடியொற்றி அமைகிறது என்று கூறுகிறார். அந்த உரையில் நிழலற்ற நாளில் ஆண்டின் தொடக்கம் என்று அவர் விளக்கும் பகுதியின்  சுருக்கம் அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு என்பது தமிழர்களுக்கு எப்பொழுது தொடங்குகிறது என்றால், வானியல் நிகழ்வுகளின்படி,  அறிவியல் அடிப்படையில் வலசை போகும் சூரியனின் வடபுல நகர்வில் சித்திரைத் திங்களில் மேஷ ராசியில் சூரியன் நுழையும் பொழுது,  அரைநாள் நண்பகல் பொழுதில் இரு குச்சிகளை வைத்து அவற்றின் நிழல் மூலம்  காலத்தை அளவிட்ட பண்டைய நாட்களில், சூரியன் மிகச் செங்குத்தாக வான் உச்சியில் வரும்பொழுது கோலின் நிழல் சாய் கோண நிலையில் விழாமல், கோலின் அடியிலேயே விழும் நாள்தான் ஆண்டின் தொடக்கம் எனக் கொள்ளப்பட்டது. எனவே சித்திரைத் திங்களின் நிழலற்ற நாளில்  இளவேனில் பருவத்துடன் தமிழர் புத்தாண்டு தொடங்குகிறது என விளக்குகிறார் (https://www.youtube.com/watch?v=_ja_dxCOyFs&t=382s).  

நிழலற்ற நாள் என்பது பண்டைய நாட்களில் பருவ கால அளவீட்டின் பகுதியாக இருந்திருக்கக் கூடும்.   அதற்கான வாய்ப்புண்டு. இருப்பினும் இது ஓர் அறிவார்ந்த கணிப்பு (educated guess). இது மிகப் பொருந்தக்கூடிய ஒன்று என்றாலும், சான்றுக் குறிப்புகள் அற்ற ஒரு யூகம் என்பதில் ஐயமில்லை.
இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்னவெனில்;  நிழலற்ற நாள்  என்ற வானியல்  நிகழ்வு ஆண்டில் இருமுறை நிகழ்கிறது. புவிநடுக்கோட்டிற்கு (Equator) அருகில்; கடக ராசிக்கும் (tropic of cancer) மகர ராசிக்கும் (tropic of Capricorn) இடையே உள்ள வெப்ப மண்டலப் பகுதியில் (tropical region) உள்ள இடங்கள் ஆண்டிற்கு  இருமுறை   நிழலற்ற நாட்களை எதிர்கொள்ளும்.

1. சூரியனின் வடதிசைச் செலவில் சித்திரையில் ஒருமுறை நிழலற்ற நாளும், 2. சூரியனின் தென்திசைச் செலவில் ஆவணியில் ஒருமுறையும் நிழலற்ற நாள்  நிகழ்கிறது. மக்கள் சித்திரையில் வரும் நிழலற்ற நாளைப் பேசுவதைப் போல ஆவணியில் வரும் நிழலற்ற நாளுக்கு  முக்கியத்துவம் தருவதாகத் தெரியவில்லை. சித்திரைப்  புத்தாண்டு நிழலற்ற நாளில் என்ற கோட்பாடு ஆவணி நிழலற்ற நாளுக்கும் பொருந்துமன்றோ ?

நிழலற்ற நாள் (Zero Shadow Day) என்ற வானியல் நிகழ்வின் அறிவியல் பின்னணி:
தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் புவி தன் அச்சில் தோராயமாக 23.5° சாய்வாகச் சுற்றுகிறது.  துருவங்கள் மாறி மாறி சூரியனை அணுகியும் விலகியும் சாய் கோணத்தில் சுற்றுவதால் புவியில் பருவநிலை மாறுதல்கள் ஏற்படுகிறது. வானில் சூரியனின் நகர்வு நாள்தோறும் மாறும். சூரியனுடைய நகர்வின் அடிப்படையில் (சூரியனைச் சுற்றிய பூமியின் சுழற்சியின் அடிப்படையில்) பருவங்கள் இயற்கையாக அமையும்.  புவியின் தென் துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்து சுற்றுகையில் வடதுருவப் பகுதியில் நீண்ட இரவும், புவியின் வட துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்து  சுற்றுகையில் தென் துருவப் பகுதியில் நீண்ட இரவும் ஏற்படும்.

புவியின் நிலநடுக்கோட்டிலிருந்து கிடைக்கோடு (Latitude) - மகரரேகை 23.5° அளவில் உள்ள தென் மண்டலப் பகுதியும், நிலநடுக்கோட்டிலிருந்து கிடைக்கோடு  - கடக ரேகை   23.5° அளவில் உள்ள வட மண்டலப்பகுதியும் உள்ள புவியின் வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள இடங்கள் ஆண்டிற்கு இரண்டு நாட்களில் சூரியனை மிகச் சரியாக அதன் வான் உச்சியில் கொண்டிருக்கும், அந்நாட்களில் அப்பகுதியில் நிழலற்ற நாள் ஏற்பாடும்.  கடகரேகை மகரரேகைகளுக்கு அப்பால் உள்ள வட துருவ தென் துருவப் பகுதிகளில் சூரியன் வான் உச்சியை அடையாது என்பதால் அப்பகுதிகளில்  நிழலற்ற நாட்கள் ஏற்பட வாய்ப்பில்லை.    


டிசம்பர் 22 குளிர்கால கதிர்த்திருப்ப நாள் (solstice), ஜூன் 21 கோடைக்கால கதிர்த்திருப்ப நாள். இவ்வாறு சூரியன் வட தென் திசைகளை நோக்கி மாறி மாறி நகர்வது சூரியனின் தென்திசைச் செலவு என்றும் சூரியனின் வடதிசைச் செலவு என்றும் அழைக்கப்படுகிறது.

சூரியனின் தென்திசைச் செலவு/தட்சிணாயனம் (ஜூன் 21 — டிசம்பர் 22);
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும்  காலத்தினைத் தென்திசைச் செலவு என்று கூறுகின்றனர். இக்காலம்  ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். தென்திசைச் செலவு ஆடித் திங்களில் தொடங்கி மார்கழியில் முடிகிறது.

சூரியனின் வடதிசைச் செலவு/உத்தராயணம் (டிசம்பர் 22 — ஜூன் 21);
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலத்தினை வடதிசைச் செலவு என்று கூறுகின்றனர். இக்காலம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். வடதிசைச் செலவு தைத்திங்களில் தொடங்கி ஆனியில் முடிகிறது. சூரியனின் வடதிசைச் செலவு தொடக்க நாளில் தமிழகத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
 

நிழலற்ற நாள் என்பது நிழல் காண இயலா நாள் ஆகும்.  அது சூரியன் நாம் இருக்கும்  பகுதிக்கு மேல் நேர் செங்குத்தாக  வான் உச்சியில் உள்ள நாள். அன்று நண்பகலில் நம் நிழல் நாம் பார்க்க இயலாதவாறு நம் காலடியிலேயே விழுவதால் நிழலற்ற நாள் என்ற பெயர் பெற்றது. சூரிய நகர்வினால் பிற நாட்களின் நண்பகலில் நம் நிழல்  சாய்கோணத்தில் விழுவதால் நண்பகலில் நம்மால் நம் நிழலைக் காண இயலும்.  நிழலற்ற நாள் என்ற வானியல் நிகழ்வு புவியின் வெப்பமண்டலப் பகுதியில் ஆண்டுக்கு இருமுறை நிகழ்வதன் காரணம் சூரியன் வடக்கிலிருந்து தெற்கிலும், தெற்கிலிருந்து வடக்கிற்கும் வலசை போவதால்தான்.  புவியின் நிலநடுக்கோட்டில் இருந்து துருவங்களுக்கு உள்ள சூரியனின் சாய்வுக் கோணம் அளவிடப்படும்.  இந்தச் சாய்வுக் கோணத்தின் பாகை அளவும்,  நாம் இருக்கும்  பகுதியின் கிடைக்கோடு இருக்கும் பாகை அளவும் சமமாக இருக்கும் நாளில் சூரியன் நம் தலைக்கு மேல் வான் உச்சியில் இருக்கும்.

இந்த ஆண்டின் முதல் நிழலற்றநாளாக, ஏப்ரல் 25, 2023ஆம் நாள்  அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டது.  ஏப்ரல் 25ம் நாளில் ஆண்டின் முதல் நிழலற்ற நாளை எதிர்கொண்ட இதே பகுதிகளில்  அடுத்த நிழலற்ற நாள்  ஆகஸ்ட் 17 ஆம் நாள் ஏற்படும்.  இந்த ஏப்ரல் 25 மற்றும்  ஆகஸ்ட் 17, 2023 நிழலற்ற நாட்கள்  சென்னை, பெங்களூரு, மங்களூரு பகுதிகளை ஒட்டி அவற்றுக்கு அருகில் நிகழும் நிழலற்ற நாட்கள். இப்பகுதிகள் சற்றொப்ப ஒரே கிடைக்கோட்டில் அமைந்துள்ள இடங்கள்.  சூரியனின் தொடர்ச்சியான நகர்வினால்  நிழலற்ற நாட்கள் என்பது இந்தியாவின் வெவ்வேறு பகுதிக்கும் மாறுபடும் என்பதைக் கொடுக்கப்பட்டுள்ள  படங்கள் தெளிவாக விளக்கும்.  எடுத்துக் காட்டாக; மதுரையில் - ஏப்ரல் 15, ஆகஸ்ட் 27 ஆகிய நாட்களிலும்; கோயம்புத்தூரில் - ஏப்ரல் 18, ஆகஸ்ட் 24 ஆகிய நாட்களிலும் நிழலற்ற நாட்கள் ஏற்படும்.  
 



இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பில்  நிழலற்ற நாட்கள் சூரியன் அப்பகுதிகளின் உச்சிக்கு வரும் நாளுக்கேற்ற வகையில் மாறுபடும். இவ்வாறு நிழலற்ற நாட்கள் தமிழகப் பகுதியில் நிகழும் நாட்கள்  ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 26 வரை ; ஆகஸ்ட் 16 முதல் செப்டெம்பர் 1 வரை.  
தமிழ்நாடு, கேரளா பகுதிகளின் நிழலற்ற நாள்கள்:
10 ஏப்ரல் & 1 செப்டம்பர்— கன்னியாகுமரி, நாகர்கோவில், கூடங்குளம்
11 ஏப்ரல் & 31 ஆகஸ்ட்— கோவளம், திருவனந்தபுரம், திருச்செந்தூர்
12 ஏப்ரல் & 30 ஆகஸ்ட்— கொல்லம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி
13 ஏப்ரல் & 29 ஆகஸ்ட்— கோவில்பட்டி, ராமேஸ்வரம், ராமநாதபுரம்
14 ஏப்ரல் & 28 ஆகஸ்ட்— ஆலப்புழா, சிவகாசி, விருதுநகர், பரமக்குடி
15 ஏப்ரல் & 27 ஆகஸ்ட்— கொச்சி, மதுரை, சிவகங்கை, காரைக்குடி
16 ஏப்ரல் & 26 ஆகஸ்ட்— கொடைக்கானல், திண்டுக்கல், வேதாரண்யம்
17 ஏப்ரல் & 25 ஆகஸ்ட்— திருச்சூர், பாலக்காடு, திருச்சி, நாகப்பட்டினம்
18 ஏப்ரல் & 24 ஆகஸ்ட்— கோயம்புத்தூர், கரூர், காரைக்கால், பூம்புகார்
19 ஏப்ரல் & 23 ஆகஸ்ட்— கோழிக்கோடு, ஊட்டி, ஈரோடு, சீர்காழி, சிதம்பரம்
20 ஏப்ரல் & 22 ஆகஸ்ட்— வயநாடு, முதுமலை, சேலம், நெய்வேலி, கடலூர்
21 ஏப்ரல் & 21 ஆகஸ்ட்— தர்மபுரி, விழுப்புரம், பாண்டிச்சேரி
22 ஏப்ரல் & 20 ஆகஸ்ட்— மைசூர், திருவண்ணாமலை, திண்டிவனம்
23 ஏப்ரல் & 19 ஆகஸ்ட்— ஓசூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு
24 ஏப்ரல் & 18 ஆகஸ்ட்— மங்களூர், பெங்களூரு, வேலூர், ஆற்காடு, திருவள்ளூர்
25 ஏப்ரல் & 17 ஆகஸ்ட்— உடுப்பி, சித்தூர், திருத்தணி, மீஞ்சூர், புலிகாட்
26 ஏப்ரல் & 16 ஆகஸ்ட்— திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீஹரிகோட்டா

இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் சித்திரை ஆண்டு தொடக்கம் நிழலற்ற நாளில் ஏற்படுகிறது  என்ற கூற்று ஆவணியில் புத்தாண்டு தொடக்கம் என்பதற்கும் மாறுபாடின்றி அப்படியே பொருந்தும்.

பழந்தமிழர்கள் ஆவணியில்தான் ஆண்டைத் தொடங்கினார்கள்.  இன்றும் பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியாக அன்றைய  சேரநாடாக இருந்த இன்றைய கேரளாவில் ஆவணியின் முதல்நாள்தான் புத்தாண்டு  தொடங்குகிறது.

இன்றைய 1. வழக்காறுகள், 2. இலக்கண, 3. இலக்கிய,  4. நிகண்டுகள் மற்றும் 5. கல்வெட்டுகள் தரும் காலக்குறிப்புகள் அடிப்படையில்  ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கான சான்றுகள் ‘ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்’ என்ற கட்டுரையில் கீழ் வருமாறு காட்டப்பட்டுள்ளது.
(1) வழக்காறு:  தமிழரிடம் இருந்து பிரிந்த சென்ற பழந்தமிழ் மலையாள உறவுகள் தங்களுக்கென பொ.ஆ. 825ஆம் ஆண்டு முதல் புதியதாகக்  கட்டமைத்துக்கொண்ட 'கொல்லம் ஆண்டு' என்ற வளர்ச்சி முறைக் காலக் கணக்கிடல் முறையில் ஆண்டின் தொடக்கம் ஆவணியைத் தொடக்கமாகக் கொண்டிருக்கும் வழக்கம் ஒரு சான்று. இவ்வழக்கம் பழந்தமிழர் பண்பாட்டின் எச்சம் எனலாம்.  கேரளத்தில் ஆகஸ்ட் 17ஆம் நாள், ஆவணித் திங்கள் முதல் நாளில்தான்  புத்தாண்டு தொடங்குகிறது. இது வழக்கில் உள்ள சான்று.

(2) இலக்கணம்: தொன்மையான தமிழ் நூலான தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் நூற்பா (அகத்திணையியல்: 6  — 10)    அகத்திணை இயலில் ஐவகை  நிலங்களுக்குரிய பொழுதுகளை வகுத்துரைக்கும் பொழுது; “காரும் மாலையும் முல்லை;  குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்”  என்று கார் காலத்தினைத் தொடக்கமாகக் கொண்டு  கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்   என்னும் பெரும் பொழுதுகளைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.  இத் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்க்கினியரும் இதன் பொருளைத் தெளிவாக விளக்கி "காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டுமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்" என்று விளக்கம் தருகிறார். அதாவது ஆவணி முதலாக ஆடி இறுதியாக உள்ள காலம் ஓர்  ஆண்டாகும் என்று தெளிவு படுத்துகிறார். இது எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்ட சான்று.

(3) இலக்கியம்:  தொல்காப்பிய நூற்பா சொல்வது போலவே சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 — 125),      'கார்' அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் (96) என்று தொடங்கும் பாடல் பகுதியில் இளங்கோவடிகள் கார் முதலிய ஆறு வகைப் பருவங்களையும் அதே முறையில் வரிசைப்படுத்தி எழுதியுள்ளார்.  மதுரை மாநகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் படுக்கையில் கிடந்து பழைய நினைவுகளில் மனம் செலுத்தினராம். தங்களின்  நினைவோட்டத்தில் அப்பெண்கள் கார்காலம், கூதிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என வரிசையாக ஒவ்வொரு கால நிகழ்வுகளையும்  நினைவு கூர்வதாக இளங்கோவடிகள் சொல்லிச் செல்கிறார்.

(4) நிகண்டுகள் (அகராதி நூல்கள்): ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு மற்றொரு உறுதியான, எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்ட சான்றை முதல் நிகண்டான, 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சேந்தன் திவாகரம் என்னும் ‘திவாகர நிகண்டு’ கொடுக்கிறது.
          “அறு வகைப் பருவமாவன
          காரே, கூதிர், முன் பனி, பின் பனி,
           (சீர்) இள வேனில், முது வேனில் (என்று ஆங்கு)
          இரு மூன்று வகைப் பருவம்; (அவை தாம்
          ‘ஆவணி முதலா’ இரண்டு இரண்டாக
          மேவின திங்கள் எண்ணினர் கொளலே).”
                    —  (6 பெயர்கள்)  [சேந்தன் திவாகரம்-தெய்வப் பெயர் தொகுதி-134]
இருதிங்கள் சேர்ந்த காலப்பகுதி பருவம் எனப்படும். ஆவணி தொடங்கி இரண்டிரண்டு மாதங்களாக முறையே கார், கூதிர், முன்பனி, பின்பனி,  இளவேனில், முதுவேனில் என ஆறு பருவங்களைக் கொண்டது ஓர் ஆண்டு என்பதாகவும், கார் பருவத்தை முதன்மையாக வைத்து அது தொடங்கும்  ஆவணி முதலாக வைத்துப்  பிற மாதங்களை எண்ணியுள்ளனர் என்பதை இப்பாடல் கூறுகிறது.  எனவே இந்த நூல் 10 ஆம் நூற்றாண்டிற்கும்  முற்பட்ட தமிழக இலக்கிய வழக்காறுகளைப் பதிவு செய்யும் ஆவணமாக இது திகழ்கிறது என்பதை மறுக்க இயலாது.  இதுவும் ஆண்டின்‌ தொடக்கத்தைக்‌ கார்ப்பருவத்தினை முதலாகக் கொண்டு,  ஆவணி மாதத்திலிருந்து தொடங்கினர்‌ பழந்தமிழர் என்ற தொல்காப்பிய நூற்பாவை அடியொட்டியே அமைந்துள்ளதைக் காணலாம். ஒவ்வொரு பருவத்திற்கும்‌ இரண்டிரண்டு திங்களாகக் காலத்தைப் பகுத்த முறையை “ஆவணி முதலா இரண்டிரண்‌டாக மேவின திங்கள்‌ எண்ணினர்‌ கொளலே" என்றுதான் திவாகரப்‌ பாடல்‌ குறிப்பிடுகிறது.

திவாகரா நிகண்டைத் தொடர்ந்து,  அதையொட்டி விரித்து எழுதப்பட்ட பிங்கலநிகண்டும் “ஆவணி முதலா இரண்டு இரண்டாக மேவிய திங்கள்‌ எண்ணினர்‌ கொளலே. (வான்வகை  சூத்திரம் 210) “  என்ற ஆண்டுப் பிறப்பு ஆவணி முதலாகத் தொடங்குகிறது  என்றே  கூறுவதுடன்  சித்திரையில், வசந்தத்தில் ஆண்டு தொடங்குவது ஆரிய சமஸ்கிருத வழக்கம் என்றும் கூறுகிறது.  இந்த வரிசையில் காலத்தால் பிற்பட்ட, 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டு ஆண்டின் தொடக்கம் என்பதை,  "ஆவணியே ஆதி"  மற்று இரண்டு இரண்டு மாதம்‌  பருவம்‌ மூவிரண்டும்‌ ஆய்ந்து  பார்த்திடின்‌ வாய்த்த பேராம்.  (சூத்திரம் 6 பெயர்கள்‌-95)  என்று அறுதியிட்டுக் கூறுகிறது. எனவே 16 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களுக்கான ஆண்டின் தொடக்கம் ஆவணியில் தொடங்குகிறது என்பதற்கு உறுதியான, எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்ட  சான்றுகள் நிகண்டுகளிலும் இருக்கின்றன.

(5) கோயில் கல்வெட்டுகள்: திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுகளை  அவை வெட்டப்பட்ட  காலமான  9ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம்  நூற்றாண்டுவரை காலக்கோட்டில் வரிசைப்படுத்தி ஆராய்ந்ததில்;  பிரபவ முதல் அட்சய என்று வடமொழியில் பெயரிடப்பட்டுள்ள “அறுபது வியாழ வட்ட ஆண்டுகள்” கொண்ட கணக்கு விஜயநகர மன்னர்கள் ஆட்சியில்தான் தொடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.  இந்தக் காலக் குறிப்பு மாற்றம் விஜயநகர ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் தொடங்கித்தான் திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கிறது. விஜயநகர ஆட்சிக் காலத்திற்கு முன்னர், இந்தப் பேரரசின், இந்த மன்னரின், இத்தனையாவது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது என்று குறிப்பிடும் முறைதான் கல்வெட்டுகளில்  முன்னர் வழக்கமாக இருந்திருப்பது தெரிகிறது.

ஆகவே மேற்குறிப்பிட்ட,
(1) பழந்தமிழர் காலக் கணக்கீட்டின் தொடர்ச்சியாகப் பண்டைய தமிழ் உறவுகளான கேரள நாட்டில் வழக்கில் இருக்கும் கொல்லம் ஆண்டு கணக்கிடல் முறை,
(2) தொல்காப்பியரின் பொருளதிகாரம் (அகத்திணையியல்: 6  — 10),
(3) சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 —  125),
(4) திவாகர, பிங்கல, சூடாமணி நிகண்டுகள் தரும் செய்திகளின் ஒப்பீடு,
(5) திருவல்லிக்கேணி கோயிலின் கல்வெட்டுத் தொடர் வரிசை அறியத் தரும் செய்திகள் மூலம்  ஆவணியே தமிழர்களுக்கான ஆண்டின் தொடக்கமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

இப்பொழுது  இந்த வரிசையில் . . .
முன்னர் கொடுக்கப்பட்ட  நிழலற்ற நாள் ஆண்டின் தொடக்கம் என்ற வானியல் மற்றும் அறிவியல் அடிப்படை விளக்கமும் பொருந்துவதைக் காணலாம்.

பிற்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஆட்சிகளும் சமயக் காட்சிகளும் மாறியதும், அவற்றின் எதிரொலியாகத் தமிழரின் காலக்கணக்கிடலில் மாற்றம் நிகழ்ந்துள்ளதும் சான்றுகள் மூலம்  தெளிவாகிறது.  

தமிழ் நாட்டை ஆண்ட அந்நியர்களான நாயக்கர்கள் ஆட்சிக் கால கட்டத்தில் ஆரூடம் பார்க்க வழக்கிலிருந்த ஆரிய வைதீகப் பண்பாட்டின் சித்திரைத் திங்களைத் தொடக்கமாகக் கொண்ட காலக் கணக்கிடும் முறை தமிழகத்தின் கோயில் வளாக எல்லையைக்  கடந்து பொதுமக்களின் வாழ்வுமுறையில் நுழைந்துள்ளது. இம்மாற்றம் சோதிட நாட்காட்டியின் அடிப்படையில் அக்கால அரச ஆதரவுடன் ஏற்படுத்திக் கொண்ட மாற்றம் என்பதும் தெளிவாகிறது.  தமிழகத்தில் அதுவரை வழக்கத்திலிருந்த ஆவணிப் புத்தாண்டு முறை நீக்கப்பட்டு வைதீக சித்திரைப் புத்தாண்டு வழக்க முறைக்கு புத்தாண்டு மாற்றப்பட்டது என்றுதான் தரவுகள் மூலம் முடிவெடுக்க இயலும்.  ஆகவே தரவுகளின் அடிப்படையில் பழந்தமிழர் ஆவணித் திங்களையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தனர். ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று உறுதியாகக் கூறலாம்.  

கட்டுரைக்கு உதவியவை:
நிழல் இல்லா நாள்
https://astron-soc.in/outreach/wp-content/uploads/2023/04/ZSD_Tamil.pdf

தமிழ்நாடு-கேரளா நிழல் இல்லா நாள்
https://astron-soc.in/outreach/wp-content/uploads/2017/04/zsd_kerala_tn.jpg

நிழல் இல்லா நாள் - ஆண்ட்ராய்ட் கைபேசி செயலி
https://play.google.com/store/apps/details?id=com.alokm.zsd

The Public Outreach & Education Committee of the Astronomical Society of India (ASI - POEC)
https://astron-soc.in/outreach/activities/zero-shadow-day/

India Sunrise and Sunset Times
https://www.sunrisesunsettime.org/asia/india/

சித்திரை தமிழர் புத்தாண்டு -பேராசிரியர் முனைவர் சி.கோ.தெய்வநாயகம்
https://www.youtube.com/watch?v=_ja_dxCOyFs&t=382s

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், தேமொழி, இலக்கிய மீளாய்வு, பக்கம் 97- 112, தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம், 2023.

நன்றி: 
படங்கள் உதவி — விக்கிப்பீடியா மற்றும் இந்திய வானியல் கழகத்தின் கல்வி, பொதுமக்கள் தொடர்பு குழு
https://astron-soc.in/outreach/activities/zero-shadow-day/



காணொளி:
ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்
— முனைவர் தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு –
திசைக்கூடல் – 339 [ஆகஸ்ட் 13, 2023]
https://youtu.be/F7Qm6Uu
------

நன்றி:  தமிழணங்கு
ஆகஸ்ட்,  2023



#தமிழணங்கு, #இலக்கியம், #தமிழ்ப்புத்தாண்டு, #Themozhi 




Thursday, July 20, 2023

பரிப்பெருமாள் எழுதிய திருக்குறள் உரை கூறும் மதங்கள்



அறம், பொருள், இன்பம் எனத் திருக்குறள் பகுத்துரைக்கும் பொருட்களில் அனைத்துப் பொருட்களையும் கூறுவது தமிழர் பெற்ற பேறு.  திருக்குறள்  அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற சிறப்பையும், தொடர்ந்து அயல்நாட்டினரும் தமிழரும் என  எண்ணிறைந்தோர் உரைகளை வழங்கிய சிறப்பையும் பெற்றுள்ளது.  

திருக்குறளின் பழைய உரைகள் பத்து:
திருக்குறளுக்கு பதினான்காம் நூற்றாண்டிற்கு முன் உரை எழுதியவர்கள் எனக் கீழே கொடுக்கப்படும் பதின்மரையும் திருக்குறளின் பழைய உரையாசிரியர்களாக வெண்பா ஒன்று கூறுகின்றது.
          'தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
          பருதி பரிமேலழகர் - திருமலையர்
          மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்
          கெல்லையுரை செய்தா ரிவர்'     (தனிப்பாடல்)
1. தருமர், 2. மணக்குடவர், 3. தாமத்தர், 4. நச்சர், 5. பரிமேலழகர், 6. பருதி, 7. திருமலையர், 8. மல்லர், 9. பரிப்பெருமாள், 10. காளிங்கர் ஆகிய  இவர்களுள் மணக்குடவர், பருதி, பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர் ஆகிய  ஐவர் எழுதிய உரைகளே இன்று நமக்குக் கிடைக்கின்றன. மணக்குடவர் திருக்குறளின் முதல் உரையாசிரியர் என்பது ஆய்வாளர்களின் கருத்து.  இந்த உரையாசிரியர்கள் வரிசையில் பரிமேலழகர் காலத்தால் பிற்பட்டவர் எனவும் அறிகிறோம்.  இவர்களின் காலம் 10ஆம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை என்பது ஆய்வாளர்களின் முடிவு.  

இவர்களுள்  பரிப்பெருமாள் குறித்த வரலாற்றை  இன்றுவரை தெளிவாக அறிய முடியவில்லை, இருப்பினும் இவருடைய உரையின் முடிவில் உள்ள  வெண்பா மூலமாக, தென் செழுவை என்பது இவர் ஊர் என்பதும், "தெய்வப் பரிப்பெருமாள்” என்று பெரிதும் போற்றப் பெற்றுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.  இவர் வடமொழிப் புலமை பெற்றவராகவும் அறியப்படுகிறார்.  

‘தெரிந்து தெளிதல்” என்னும் அதிகாரத்தில்  உள்ள குறள்களுக்கு இவர் எழுதிய  உரையில்  துரோணாசாரியார் மதம், மகேச்சுரர் மதம், பராசரர் மதம், வியாதன் மதம், உத்தவாசாரியர் மதம், நாரதர் மதம், சுக்கிரர் மதம்,  கௌடிலியர் மதம் என்பனபோன்று பல்வேறு கோட்பாடுகளைச் சுட்டிச் செல்கின்றார். இவை குறித்து விவரமான செய்திகள் எதுவும் அறிய முடியவில்லை.  பரிப்பெருமாள் தெரிந்து தெளிதல் அதிகாரத்தில் உள்ள குறள்களுக்கு எழுதிய உரையைத் தொடர்ந்து காணலாம்.

தெரிந்து தெளிதல்-பரிப்பெருமாள் உரை:
தெரிந்து தெளிதலாவது அமாத்தியரை (அமாத்தியர் இலக்கணம்; அமாத்தியர்=அமைச்சர்) ஆராய்ந்து தெளிதல், காரியந்தப்பாமலெண்ணி, அதற்காங் காலமும் இடமும் அறிந்தாலும், அது செய்து முடிக்கும் அமாத்தியரையும் எண்ணிக் கொள்ள வேண்டுதலின், அவற்றின் பின் கூறப்பட்டது.

          'அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
          லின்மை பரிதே வெளிறு'
உரை:  கற்றற்கரியனவற்றைக் கற்றுக் குற்றமற்றார் மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.  கல்வியுடையார் உள்ளும் புறம்பும் தூயாரைத் தேறலாம் என்பது "துரோணாசாரியார் மதம்". அவ்வளவில் தேறலாகா தென்று இது கூறப்பட்டது.

          'அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
          பற்றிலர் நாணார் பழி'
உரை:  ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையரும் அல்லர்; பழிக்கும் நாணாராதலான். அரசனோடொத்த மறைந்த குற்றமுடையாரைத் தேறலாம்.  அவர் தம் குற்றம் மறைக்கு மாறு போல அவர் குற்றமும் மறைப்பர் ஆதலான் என்பது "மகேச்சுரர் மதம்". அது குற்றமென்று கூறப்பட்டது.

          'காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
          பேதைமை யெல்லாந் தரும்'
உரை:  அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லதாரைத் தேறுதல், எல்லா அறியாமையும் தரும்.   அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது "பராசரர் மதம்". இஃது, இவ்வளவினால் தேறலாகாதென்றது.

          'தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
          தீரா விடும்பை தரும்'
உரை:  பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு, தீர்தலில்லாத துன்பமுண்டாகும்.   வழிமுறை என்றது தன்வழியின் உள்ளார்க்கு அவன் வழியின் உள்ளார் அமாத்தியராய்ப் போந்த முறைமை. தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத்தேறலா மென்பது "வியாதன் மதம்". அது குற்றமென்று இது கூறப்பட்டது.

          'தேரான் றெளிவுந் தெளிந்தான் கணையுறவுந்
          தீரா விடும்பை தரும்'
உரை:  ஒருவனை ஆராயாது தெளிதலும் தெளிந்தபின்பு ஐயுறுதலும் தீர்தலில்லாத துன்பத்தைத் தரும்.   முன்பு ஒருவினை செய்து அறியாதாரைத் தேறலாம்; அவர்கள் வறியராதலான் என்பது "உத்தவாசாரியர் மதம்". அது குற்றம் என்று இது கூறப்பட்டது.

          'பெருமைக்கு மேனைச் சிறுமைக்குத் தத்தங்
          கருமமே கட்டளைக் கல்'
உரை:  ஒருவனைப் பெரியனாக்குதற்கும் (மற்றைச்) சிறியனாக்குதற்கும் வேறு தேடவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே படிக்கல்லாம் அதற்குத்தக ஒழுகுக.  இஃது, ஒருவனை ஒருகாரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்ய வல்ல அளவுங் கண்டு, பின்னைப்பெரியனாக்க அமையுமென்பது "நாரதர் மதம்". இது, குற்றங்கூறாமையால் யாவர்க்கும் உடம்பாடென்று கொள்ளப்படும்.

          'குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
          நாணுடையான் கட்டே தெளிவு'
உரை:  உயர்குடிப் பிறந்து, காமம் வெகுளி முதலான குற்றத்தினின்று நீங்கித் தனக்குவரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன் கண்ணே தெளிதல்.   இது "சுக்கிரர் மதம்".  இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படும்.  

          'குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
          மிகைநாடி மிக்க கொளல்'
உரை:  ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து, குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து, அவற்றுள்ளும் தலைமையானும் பன்மையானும் மிக்கதனை அறிந்து கொள்க.  இது "கௌடிலியர் மதம்".  காரியம் பல காலின் அது செய்வாரும் பலர் வேண்டும். ஆதலால் அவர் எல்லாரையும் நற்குணத்தராகத் தேடுதலரிது என்பதனால் இது கூறப்பட்டது.

இவ்வாறாக பரிப்பெருமாள் திருக்குறள்  தெரிந்து தெளிதல் அதிகாரத்தில் குறிப்பிடும்  உரை கூறும் துரோணாசாரியார் மதம், மகேச்சுரர் மதம், பராசரர் மதம், வியாதன் மதம், உத்தவாசாரியர் மதம், நாரதர் மதம், சுக்கிரர் மதம்,  கௌடிலியர் மதம் போன்றவை குறித்து நாம் தேடித் தெளிவு பெறுதல் நலன் பயக்கும்.  


உதவிய நூல்:
திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரையும்
பதிப்பாசிரியர் வித்துவான். கா. ம. வேங்கடராமையா எம். ஏ.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1988
https://www.tamilvu.org/library/nationalized/pdf/90-venkataramiya/thirukuralmulamumpariporuluraiyum.pdf

நன்றி: 
"தவப்புதல்வி"  -  ஏப்ரல்-ஜூன் - தமிழ் காலாண்டிதழ்   

திணை  - 34 [அக்டோபர்  - 2023]
https://archive.org/details/thinai-34/page/112/mode/2up