Monday, September 4, 2023

அறிஞர் அண்ணா எழுதிய "செவ்வாழை" - சிறுகதைத் திறனாய்வு

அறிஞர் அண்ணா எழுதிய "செவ்வாழை" - சிறுகதைத் திறனாய்வு

 
தன் மனதின் உணர்வுகளை வெளியில் கொட்டுவதற்காகக் கதைகள் எழுதுவோர் ஒருவகை; அவ்வாறு தன் உணர்வைக் கதைகளாக எழுதும் பொழுது அவற்றால் இச் சமுதாயத்தில் மாற்றம் வரவேண்டும் என்று எழுதுவோர் மற்றொருவகை.  "புத்தகங்கள் மூலமே பழங் கருத்துகளை நீக்கி, பாசி படிந்த எண்ணங்களைப் போக்கி, நல்வாழ்வுக்கான நல்லறிவுக் கருத்துகளை, புதுமை எண்ணங்களை ஏற்படுத்த முடியும்" என்ற கொள்கை கொண்ட அறிஞர் அண்ணாவின் எழுத்து இரண்டாவது வகை.  'செவ்வாழை' என்னும் சிறுகதையின் குறிக்கோளும் அதுவே.

"செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான்" என்ற வரி அந்த ஏழை விவசாயி, தனது உழைப்பில் வளரும் தனது வீட்டுத் தோட்டத்துச் செவ்வாழையை எத்தகைய கருவூலமாகக் கருதினான் என்று காட்டுகிறது. பண்ணை மருமகளின் பிறந்தநாளுக்காகச் சிறப்புக் கோயில் ஆராதனைக்குக்  கணக்குப்பிள்ளை சுந்தரம், "கடையில் நல்ல பழங்கள் இல்லை. நம் செங்கோடனின் கொல்லையில் தரமாக ஒரு செவ்வாழைக் குலை இருக்கு" என்று கூறி அதைக் கொண்டுவர ஏற்பாடு செய்கிறான். அதில் நான்கு சீப்பு வாழைப் பழங்களைக் கடையில் விற்று வரும்படியும் பார்த்துவிடுகிறான் அந்த இடைத்தரகன். ஓர் ஏழை உழவனின் உழைப்பு அவனுக்கோ அவன் குடும்பத்திற்கோ கிடைக்காமல் செய்கிறான் அக்கயவன் கணக்குப்பிள்ளை.

தன் வீட்டுப் பழமே கடையில் விற்பனைக்கு  இருக்கும் பொழுது கையில் இருக்கும் காலணாவுக்குச் செங்கோடனின் மகன் கரியனால் அதை வாங்க  முடியாமல், "பழம், ஒரு அணாடா பயலே. காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா... போடா" என்று கடைக்காரனால் அவன் விரட்டப்படும் பொழுது அந்தச் சிறுவனின் ஏக்கமும், குலை வெட்டப்பட்டச் செவ்வாழை, இறந்துவிட்ட தன் பாட்டியின் பாடையில் கட்டப்படும் பொழுது பாடையைக் காட்டி, "எங்க வீட்டுச் செவ்வாழைடா" என்று அவன் பெருமை பேசும் பொழுதும் எவருக்கும் மனதில் கழிவிரக்கம் தோன்றும்.

சமூகச் சீர்திருத்தம் நோக்கி மக்களைச் சிந்திக்க வைக்கவேண்டியது எழுத்தாளரின் நோக்கம் என்றால் அது நிறைவேறிவிட்டது.  கதையின் கரு அக்காலத்தில் மட்டுமல்ல, இன்றும் பொருந்தும். உழைக்கும் வர்க்கத்தின் வறிய நிலையையும், முதலாளி வர்க்கம் அவர்கள் உழைப்பை மதிக்காமல் உறிஞ்சி வாழும் வளர்ச்சியையும் பார்க்கையில் இது போன்று வஞ்சிக்கப்படும் தொழிலாளர்களின் நிலையை எடுத்துரைக்க, பலர் சமூகச் சீர்திருத்த நோக்கில் கதைகள் எழுதவேண்டியது தேவையாகிறது. அண்ணாவின் கேள்வியே படித்துமுடித்தபின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.  "உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம், பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா".  செங்கொடிப் பொதுவுடைமைக் கருத்து  கொண்ட கதையின் நாயகனுக்குச்  செங்கோடன் என்று பெயர் சூட்டி, வாழையையும் செவ்வாழையாகக் காட்டிய அண்ணாவின் உள்நோக்கத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


நன்றி: தமிழணங்கு 
செப்டெம்பர், 2023


#தமிழணங்கு, #திறனாய்வு, #Themozhi