Saturday, February 27, 2021

துல்லியத்தை நோக்கி முன்னேறும் உலக வரைபடம்

துல்லியத்தை நோக்கி முன்னேறும் உலக வரைபடம்


பலநூற்றாண்டுகளாகப் புவியின் வரைபடம் வரைவோருக்குச்  சவாலாக இருந்து வருவது,  அளவிலும் அமைப்பிலும் திரிபற்ற நிலையில் உலகின் வரைபடத்தை இரு பரிமாணத்தில் கொடுக்கும்  முயற்சிதான். முப்பரிமாணம் கொண்ட உலக உருண்டையை  நீளம் மற்றும் அகலம் கொண்ட இருபரிமாண  வடிவ வரைபடமாக மாற்றுவதில் இடங்களின் உருவம், அளவு, தொலைவு, திசை, அமைந்திருக்கும் கோணம் ஆகியவற்றைத் துல்லியமாகக் காட்டுவது பல சவால்களை முன் வைப்பதாக அமைகிறது. 

அவ்வாறானால்  நாம்  பயன்படுத்தும் வரைபடங்கள் துல்லியமான அளவில் இல்லையா என்ற  கேள்விக்கு, ஆம், இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.  புவியின் நடுவில், சுற்றளவு அதிகம் உள்ள பகுதியில் (40,075.017 கி. மீ அல்லது  24,901.461 மைல்) கற்பனையாக நாம் வரைந்து கொள்ளும் நிலநடுக்கோட்டை (Equator) நாம் 0° பாகை என்று குறிப்பிட்டு, அதிலிருந்து விலகிச் செல்லும் தொலைவுகளையும் கற்பனையான நிலநேர்க்கோடுகளால் (latitude) ஒவ்வொரு பாகைக்கும் குறிப்பிடுகிறோம்.  இவற்றுக்கு இடையே உள்ள தொலைவு சமமாக இருக்கும்.  ஆனால் வரை படத்தில் குறிப்பிடுகையில் புவியின் வட தென் முனைகளை நோக்கி நகருகையில் 60° முதல் 90° நிலநேர்க்கோடுகளுக்கு இடையே உள்ள தொலைவு அதிகரித்துக் காட்டப்படுகிறது.  கோடுகளுக்கு இடையே வேறுபட்ட தொலைவுகள் பயன் படுத்தப்படுவதால் அளவில் திரிபு நிலை ஏற்பட்டு கிரீன்லாண்ட், ஆப்பிரிக்கா, அண்டார்டிக்கா  (Greenland, Africa, and Antarctica)  போன்ற பகுதிகளின் அளவு வரை படத்தில் துல்லியமாக இருப்பதில்லை.  உண்மை அளவையும் காட்டுவதில்லை. நீல் கயே -2018 (Neil Kaye) என்பவர் உருவாக்கிய விளக்கப் படம் உலக வரைபடத்தின் திரிபு நிலையத் தெளிவாகக் காட்டும். 

புவியின் வரைபடம் வரைவதின் அடிப்படையாக உருளை, கூம்பு, முகட்டுத் திசை சார் நிலை/ஆசமத், பலகோணம் (Cylindrical, Conic, Azimuthal, Polyhedral) என்ற நான்கு முறைகளும்; அல்லது இவற்றில் சில மாறுதல்களுடனும்;  அல்லது இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை இணைத்தும்  வரைபடம் வரைதல் நடைமுறையில் உள்ளது. உருளை  நிலையை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட உலக வரைபடங்களே இவற்றில் பெரும்பான்மை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.   உருளை  நிலையை அடிப்படையாகக் கொண்ட வரைபடங்கள் கடலில் கப்பல்களைச் செலுத்த உருவாக்கப் பட்டன.  கூம்பு நிலையை அடிப்படையாகக் கொண்ட வரைபடங்கள்  விமானத்தைச் செலுத்த உதவுகிறது. முகட்டுத் திசை சார் நிலையை அடிப்படையாகக் கொண்டு புவியின் வடமுனையை நடுவில் வைத்து வரையப்படும் புவியின் வரைபடம் ஐக்கிய நாடுகள் சபையின் இலச்சினையாக உள்ளது. 



வளைவான பரப்பைக் கொண்ட முப்பரிமாணப் புவிக் கோளத்தினை  இருபரிமாணம் கொண்ட  தட்டையான புவி வரைபடமாக  உருவாக்குவதில் ஏற்படும் ஆறு குறைகள்:  திசைச் சீர்மை, பரப்பளவு, நெகிழ்வு, வளைவு, தொலைவு மற்றும் எல்லை அளவு குறைப்பு (Isotropy, Area, Flexion, Skewness, Distances, and Boundary Cuts). புவி வரைபடத்தில் துல்லியம் இல்லை என்ற நிலையில் சரியான தகவல் தரும் புவியுருண்டையை மாற்றாக நாம் ஏன்  பயன்படுத்த முடியாது என்ற கேள்விக்குக் குறிப்பாக  இரண்டு காரணங்கள் விளக்கமாகக் கிடைக்கின்றன. ஒன்று, புவிக்கோளத்தில்  உலகம் முழுவதையும் ஒரே பார்வையில் காட்ட முடியாது, மேலும் கோள வடிவ அமைப்பு என்பது நடைமுறை  வாழ்வில் கையாள, எடுத்துச்  செல்ல வசதியான ஒன்றும் அல்ல.  ஆகவே புவிவரைபடம்தான் கற்பிப்பதற்கும் பயன் கொள்வதற்கும் தகுந்த கருவி. 

உலக வரைபடம் வரையும் முயற்சி, குறிப்பாக மேற்குலகில்,  2500 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டதற்குச் சான்றுகள் உள்ளன.  பெரும்பான்மையாக வரைபடம் வரையும் முயற்சிகளை மேற்கொண்டவர் ஒன்றுக்கு மேற்பட்ட துறையில் வல்லுநர்களாக இருந்திருப்பதும் தெரிகிறது. குறிப்பாக வானியல், புவியியல், கணிதம், வடிவியல் (Astronomy Geography, Mathematics, Geometry) ஆகிய துறைகளில் வல்லவர்களாக இருந்தவர்களே புவியின் வரைபடம் (Cartography) வரைவதிலும் வல்லவர்களாக (Cartographer) இருந்துள்ளார்கள்.  ஒவ்வொரு முறைக்கும் அது வரையப்படும் நோக்கத்தினால் சில குறைகளும் நிறைகளும் இருப்பது இயல்பு. ஆனால் அவை தேவைகளை ஈடுகட்ட உருவாக்கப்பட்டவை என்பதே கவனிக்கப் பட வேண்டியது. இருப்பினும், ஒரு துல்லியமான உலக வரைபடத்தை உருவாக்கும் முயற்சி பல ஆண்டுகளாகப் பலரால், பலமுறைகளைப் புகுத்தி இன்றுவரை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.   

முப்பரிமாணக் கோள வடிவில் இருக்கும் புவி உருண்டை தரும் துல்லிய அளவை இருபரிமாணத்தில்  வரைபடமாகக் கொடுப்பதில் ஏதாவது ஒரு பண்பைக் கைவிட்டு, யாருடைய தேவைக்காகப் படம் வரையப்படுகிறதோ, அவர்களுக்கு எது துல்லியமான தகவல் தந்து அவர்களுக்குப் பயன்பாட்டுக்கு உதவுகிறதோ, அதற்கு உடன்பட்டு  ஒத்திசைந்து புவியின் வரைபடங்கள் காலம் காலமாக வரையப்பட்டு வருகிறது என்பதுதான் வரலாறு.  ஆகவே திரிபு தவிர்க்க இயலாத ஒன்று. இருப்பினும், எவ்வாறாயினும் தேவையின் அடிப்படையில் துல்லியமான ஒரு வரைபடத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல என்ற ஒரு குறிப்புடன் சுமார் 80 புவிவரைபட உருவாக்க முயற்சிகள் விக்கிப்பீடியாவில் தொகுக்கப் பட்டிருக்கிறது.  பொதுவாக நிலங்களுக்கு இடையே உள்ள தொலைவையும் பரப்பளவையும் (Equal-area, equidistant) சரியான முறையில் காட்ட எடுத்த முயற்சிகளே பெரும்பான்மையுமாக இருக்கிறது.  அவற்றில் குறிப்பிடத்தக்கன, பிற வரைபடங்கள் வரையும் முறைக்குத் தாக்கம் கொடுத்தவை எனக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடலாம்:
  • சமநிலை உருளை வரைபட முறை (இரண்டாம் நூற்றாண்டு)
  • மெர்கேட்டர் உலக வரைபடம் (1569)
  • வின்கெல் டிரிப்பல் உலக வரைபடம் (1921)
  • டிமாக்ஸியன் உலக வரைபடம் (1943)
  • ஆத்தாகிராஃப் உலக வரைபடம் (1999)
  • ரிச்சர்ட் காட், ராபர்ட் வாண்டர்பீ மற்றும் டேவிட் கோல்ட்பர்க் உலக வரைபடம் (2021) 


சமநிலை உருளை வரைபட முறை:
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, டயர் நகரத்தில் வாழ்ந்த 'மரினஸ் டயர்' (Marinus of Tyre) ரோம் நாட்டின் புவியியலாளர், இவர் உலகவரைபடங்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.  கிளாடியஸ் டாலமி (Claudius Ptolemy) வரைந்த உலக வரைபடங்களுக்கு இவரே முன்னோடி. இவர் உருவாக்கிய படங்கள்  சமநிலை உருளை (Equidistant cylindrical) வரைபட முறையினை அடிப்படையாகக் கொண்டது.  இது புவியின் மீது கற்பனையாகக் கொண்ட குறுக்கும் நெடுக்குமான  நிலநேர்க்கோடு, நிலநெடுங்கோடு (Latitude and Longitude) கொண்டு சட்டங்களாக அமைந்த  நாற்கரக் கட்டங்களின் உதவியுடன் உலகப் படம் வரையும் முறையைப் பின்பற்றுகிறது. இக்கோடுகள் நிலநடுக்கோட்டுக்கும் (Equator) நிலநிரைக்கோட்டுக்கும் (Meridian) இணைகோடுகளாக (parallel lines) வரையப்படுபவை.  

இது மிக எளிய வரைபடம் வரையும் முறை என்பதால்;  பலகாலத்திற்கு,    'மெர்கேட்டர் வரைபட உருவாக்கம்' வரும் வரை,  வழக்கத்தில் இருந்தது. இந்த வரைமுறையை அடிப்படையாகக்  கொண்டு, இதில்  எண்ணற்ற மேம்பாடுகள் செய்யப்பட்டு பற்பல உலகவரைபடங்களும் வரையப்பட்டன. 

மெர்கேட்டர் உலக வரைபடம்:
இருப்பதில் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் துல்லியம்  கொண்டதாகக் கருதப்படும்  வரைபடங்களில்  முக்கியமானது 'மெர்கேட்டர் உருவாக்கம்' (Mercator Map / Mercator Projection — 1569) என்ற வரைபடம்.  பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெரார்டஸ் மெர்கேட்டர் (Gerardus Mercator) என்ற ஜெர்மானியர் உருவாக்கிய வரைபடம் இன்றுவரை பரவலான பயன்பாட்டில் உள்ளது.  இது உலக வரைபட வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கிய கண்டுபிடிப்பு. மெர்கேட்டர் இந்தப் படத்தைக் கப்பல் மாலுமிகளின் பயன்பாட்டிற்காக உருவாக்கினார். முதன் முதலில் நிலவரைபடங்களைத்  துல்லியமாக வரைந்து அவற்றைத் தொகுத்து வரைபடத் தொகுப்பான அட்லஸ் (Atlas) உருவாக்கி அதற்கு அவ்வாறு பெயர் சூட்டியவரும் மெர்கேட்டர் தான்.   இவர் டாலமி உருவாக்கிய இரண்டாம் நூற்றாண்டு வரைபடங்களின் தகவலை எடுத்து அவற்றைப் புதிய முறையில் மீள்பதிப்பு செய்தார். 
இன்று நாம் "Hey, Google how to go to airport" என்று வழி கேட்டால் மெர்கேட்டர் வரைபடத்தின் அடிப்படையில், விரைவான கணக்கிடலுக்கு உதவும் வகையில் செம்மைப்படுத்தப்பட்ட ஒரு கணக்கிடலில்தான் கூகுள் நமக்கு வழி சொல்கிறது. கூகுள் பயன்படுத்தும் இதே அடிப்படைதான் இணையவழி உலகவரைபட உதவி செய்யும் மற்றவர்களும் பின்பற்றுகிறார்கள்.  இதிலிருந்து மெர்கேட்டர் உருவாக்கிய வரைபடத்தின் தாக்கத்தை நாம் உணரலாம். இவரது வரைபட முறையிலும் எண்ணற்ற மேம்பாடுகள் செய்யப்பட்டு பற்பல உலகவரைபடங்களும் வரையப்பட்டன. 

ஆசுவால்ட் வின்கெல் உலக வரைபடம்:
நேஷனல் ஜியோகிராஃபிக் சொசைட்டி (National Geographic Society) 1998  ஆண்டிலிருந்து வின்கெல் டிரிப்பல் (The Winkel Tripel projection) உலக வரைபடத்தைப் பயன்படுத்தி வருகிறது. இது  ஆசுவால்ட் வின்கெல்  (Oswald Winkel  — 1921) என்பவர் டேவிட் ஏ. ஐடோஃப் (David A. Aitoff — 1889) மற்றும் சமநிலை உருளை (equidistant cylindrical) வடிவாக்க முறைகளை மேம்படுத்தி  உருவாக்கிய உலக வரைபடமாகும். பரப்பளவு, திசை, தொலைவு ஆகிய மூன்றில் உள்ள திரிபுகளைக் குறைக்கும் நோக்கம் என்பதால் டிரிப்பல் வரைபடம் எனக் குறிப்பிடப்பட்டது.  இதில், நிலநடுக்கோடு தவிர்த்து மற்ற அனைத்து  நிலக்கோடுகள் நேர்க்கோடுகளாக இல்லாமல் வளைவான கோடுகளாக மாற்றி அமைக்கப் பட்டன.  இதனால் செவ்வக அமைப்பு மறைந்து உலக வரைபடம் நீள்வட்ட வடிவிற்கு மாறியது. நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம் உலக வரைபடங்களுக்காகப்  பயன்படுத்தும் இந்த 'வின்கெல் டிரிப்பல்' உலக வரைபடமே மேற்கூறிய திசை சீர்மை, பரப்பளவு, நெகிழ்வு, வளைவு, தொலைவு மற்றும் எல்லை அளவு குறைப்பு  என்ற ஆறு குறைகளையும் குறைந்த அளவில் கொண்ட, உலக அமைப்பின் அளவில் ஒத்துப்போகும்  ஒரு சிறந்த வரைபடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

டிமாக்ஸியன் உலக வரைபடம்:
டிமாக்ஸியன் வரைபடம் அல்லது ஃபுல்லர் வரைபடம் என்பது பக்மின்ஸ்டர் ஃபுல்லர் (Dymaxion World Map by R. Buckminster Fuller — 1943) என்பவரால் உருவாக்கப் பட்டது. இந்த உலக வரைபடம் 20 முகப்பு (icosahedron) பட்டைகளைக் கொண்ட உலக முப்பரிமாண உருண்டை வடிவம். இதனை விரித்து தட்டையான இருபரிமாண உலக வரைபடமாகவும் மாற்றலாம்.  


இந்த  உலக கோளத்தின் சம அளவு கொண்டதாகப் பிரித்துக் கொள்ளப்பட்ட  96 பகுதிகளும் சரியான இடங்களில் அமைந்து திரிபு நிலையைக் குறைத்தது  இதன் சிறப்பு. 

ஹாஜிம் நருகாவா - ஆத்தாகிராஃப் உலக வரைபடம்:
இந்த டிமாக்ஸியன் உலக வரைபடம் தந்த தாக்கத்தில் ஜப்பானியர் ஹாஜிம் நருகாவா என்பவர் ஆறு ஆண்டுகள் முயன்று  ஆத்தாகிராஃப் உலக வரைபடம் என்ற உலக வரைபடத்தை 1999 இல் உருவாக்கினார் (Hajime Narukawa's  AuthaGraph world map — 1999) . இது மிகவும் துல்லியமான வரைபடம், வடிவ அமைப்பு என்ற பாராட்டையும், ஜப்பான் நாட்டின் சிறந்த வடிவமைப்பிற்கான விருதையும் 2016 ஆண்டு இவருக்குப் பெற்றுத் தந்தது. திசைசாராத நிலையில் கடல் நிலம் ஆகியவற்றின் சரியான பரப்பளவு விகிதங்களையும் உருவங்களையும்  சரியான அளவில் காட்டப்படுவதாக அமைக்கப்பட்ட ஒரு செவ்வக வரைபடம் இது.   இதற்குச் சம + பரப்பு  (AuthaGraph="authalic"+"graph") படம்  என்றும் பெயர் சூட்டப்பட்டது.  இந்த உலகப் படத்தை விரிக்கலாம், உலக உருண்டையாகவும் சுருட்டலாம். இது நிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாக அமைவதைத் தெளிவாகக் காட்டியது.  ஆகவே மரபணு ஆய்வின் மூலம் உலகில் மனித இனப் பரவலை விவரிக்க ஆத்தாகிராஃப் உலக வரைபடம் பயன் படுத்தப் பட்டது. விண்ணில் சுற்றும் செயற்கை விண்வெளிக் கோளின் பாதையையும் தொடர்ச்சியாக இதில் காட்ட இயலும். 

ரிச்சர்ட் காட் உலக வரைபடம்:
பிப்ரவரி 2021 அன்று  பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் (Princeton University Astrophysicist) பேராசிரியர் ரிச்சர்ட் காட் என்பவரும் மற்றும் இரு துணை ஆய்வாளர்களும் (J. Richard Gott, David M. Goldberg, and Robert J. Vanderbei) முற்றிலும் ஒரு புதிய முறையில், வேறுபட்ட கோணத்தில் அணுகி புவியின் வரைபடத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள்.  இதுவரை உருவாக்கப் பட்ட  வரைபடங்களிலேயே இதுதான் மிகவும் துல்லியமாகச் சரியான முறையிலும்  அளவிலும்  புவியின் இட அமைப்பைக் காட்டும்  ஒரு மேம்பட்ட  வரைபடமாக அமைந்துள்ளது.  இந்த வரைபடம் இரட்டை பக்கங்கள் கொண்டதாக வட்ட வடிவில், அக்காலத்து இசைத்தட்டுகள் (phonograph records) போன்ற தோற்றம் கொண்டுள்ளதாக உருவாக்கப் பட்டுள்ளது. இருபரிமாண உலக வரைபடங்களில் தவிர்க்க முடியாததாக இருக்கும், தோற்றத்தில் அளவில் ஏற்படும் திரிபு வரைபடத்தில் ஏறத்தாழ இல்லாமல் போனது என்றே சொல்லலாம். 

மெர்கேட்டர் உலக வரைபடம் திரிபு பிழை மதிப்பீடு எண் 8.296. இது ஆசுவால்ட் வின்கெல் உலக வரைபடத்தில் திரிபு பிழை மதிப்பீடு எண் 4.563 என்று குறைக்கப் பட்டது.  இப்பொழுது புவியைத் தட்டையாக்கும் ஒரு புதிய முறையில் ரிச்சர்ட் காட் உலக வரைபடத்தில் திரிபு பிழை மதிப்பீடு எண்  0.881.  தட்டையான  இருபரிமாண உலக வரைபடம் '0' துல்லியத்தை நோக்கி முன்னேறியுள்ளது. 



References:
[1] "Flat Maps that improve on the Winkel Tripel", J. Richard Gott, David M. Goldberg, and Robert J. Vanderbei, Feb 2021. ResearchGate. 
a) Full-text: https://www.researchgate.net/publication/349363392_Flat_Maps_that_improve_on_the_Winkel_Tripel/download
b) Here is a gif movie showing how it will look:
https://vanderbei.princeton.edu/tmp/Earth_gif.mp4

[2] The Most Accurate Flat Map of Earth Yet, J. Richard Gott on February 17, 2021, Scientific American 
https://www.scientificamerican.com/article/the-most-accurate-flat-map-of-earth-yet/

[3] List of Map Projections:
https://en.wikipedia.org/wiki/List_of_map_projections

[4] Selected List of Map Projections:
Equidistant-cylindrical:  https://pro.arcgis.com/en/pro-app/latest/help/mapping/properties/equidistant-cylindrical.htm
Aitoff:  https://pro.arcgis.com/en/pro-app/latest/help/mapping/properties/aitoff.htm
Winkel-Tripel:  https://pro.arcgis.com/en/pro-app/latest/help/mapping/properties/winkel-tripel.htm






நன்றி: சிறகு 
பிப்ரவரி  27, 2021



#சிறகு, #அறிவியல், #Themozhi 



Saturday, February 13, 2021

வரலாற்றில் தடம் பதித்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி

வரலாற்றில் தடம் பதித்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி


கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி தமிழகத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் மற்றும் ஆய்வு அறிஞர். தென்னிந்திய வரலாறு குறித்த அவருடைய நூல்கள் அவரின் சிறப்பான ஆய்வுப் பங்களிப்பாக இன்றும் பேசப்படுகிறது. தமிழக வரலாற்று ஆய்வாளர்களுக்கு இன்றும் வழிகாட்டியாகக் கருதப்படுவது கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய வரலாற்று நூல்கள்தாம்.

கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி என்பது ‘கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரி’ (K. A. Nilakanta Sastri) என்பதன் சுருக்கம். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் எளிய நியோகி பிராமணர் குலத்தில் ஆகஸ்ட் 12, 1892 அன்று பிறந்து வரலாற்றாளர், ஆய்வாளர், பேராசிரியர், எழுத்தாளர் என்று பலவகையில் வரலாற்றுத்துறைக்குப் பங்காற்றி, ஜூன் 15, 1975 அன்று தமது 82 ஆம் வயதில் மறைந்தார். இவர் பள்ளிப் படிப்பையும், அதைத் தொடர்ந்து இளங்கலை படிப்பை நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் முடித்தார். பின்னர் அவரது அண்ணன் நல்கிய பொருளாதார உதவியுடனும், மாணவர் உதவித் தொகை வழங்கிய ஆதரவிலும் மேற்படிப்பை சென்னை தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் முடித்து சென்னை மாநில அளவில் முதன்மை மாணவராகத் தேர்வு பெற்று முதுநிலை படிப்பை முடித்தார்.

இவர் தம் ஆசிரியப் பணியை 1913 இல் தொடங்கி, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராக 5 ஆண்டுகள், வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக 2 ஆண்டுகள் எனப் பணிபுரிந்தார். சீனிவாச சாஸ்திரியின் பரிந்துரையினை ஏற்று பண்டிதர் மதன் மோகன் மாளவியா அவரை வாரணாசி இந்து பல்கலைக்கழகப் பேராசிரியராக ஏற்றக் கொண்டார் (ஸ்ரீராம், 2009). இரு ஆண்டுகளுக்குப் பிறகு அப்பொழுது புதிதாகத் தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கலைக்கல்லூரியின் (சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரி) முதல்வராகப் பொறுப்பேற்று மாணவர்களின் எண்ணிக்கை 70 இல் இருந்து 700 வரை வளர்ச்சியுறும் வகையில் எட்டு ஆண்டுகள் கலைக்கல்லூரியின் வளர்ச்சிக்காகச் சிறப்பாகப் பங்களித்தார். பிறகு 1929ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் ஓராண்டு வரலாற்றுப் பேராசிரியர் பணி, தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியராகப் பொறுப்பேற்று 1947 வரையிலும், அதன் பிறகு தொடர்ந்து மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் பேராசிரியராக 1956ஆம் ஆண்டுவரை என இவரது பேராசிரியர் பணி தொடர்ந்தது. மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறையின் கௌரவ இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டு வரை இவர் யுனெஸ்கோவின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார். இந்தியப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் விருதை 1957ல் இவருக்கு அளித்து இந்திய அரசு இவருக்குச் சிறப்புச் செய்தது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக 1959 ல் தென்னிந்திய வரலாறு பற்றிப் பல சொற்பொழிவுகள் வழங்கினார்.

இவருடைய வரலாற்று நூல்களும் ஆய்வுகளும் வரலாற்றுத் துறை ஆய்வாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும், இவருடைய நூல்கள் வரலாற்றைச் சான்றுகள் அடிப்படையில் வழங்குவது அவற்றின் சிறப்பு என்று வரலாற்றுத் துறை அறிஞர்கள் பாராட்டுகள் வழங்கினர். அவ்வாறே இவரது அணுகுமுறை குறித்த விமர்சனங்களும் உண்டு. இவரது இந்து சமயச் சார்பும், சமஸ்கிருத ஆதரவும், இந்தியாதான் உலகிலேயே சிறந்த நாடு போன்ற கருத்தாக்கமும் இவரது எழுத்தில் வெளிப்படுவதாக விமர்சனங்களும் உள்ளன (சங்கர் கோயல் – 2005) .

பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியை 20 ஆம் நூற்றாண்டு தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்று எழுத்தாளர் என்று பாராட்டுவார். கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி பற்றி அவர் குறிப்பிடும் மற்றொரு செய்தியும் உண்டு. ‘கன்ஃபஷன்ஸ் ஆஃப் அ ஹிஸ்டரி டீச்சர்’ என்ற கட்டுரையை வங்காள வரலாற்றாளர் ஜாதுநாத் சர்க்கார் (Jadunath Sarkar) 1915ல் மாடர்ன் ரிவ்யூ இதழில் வெளியிட்டார். அக்கட்டுரையில், வரலாறு குறித்த படைப்புகள் வட்டார மொழிகளில் குறைவாக உள்ளன. அக்குறை நீக்க வட்டார மொழிகளில் வரலாற்று நூல்கள் எழுதி வெளியிடப்பட வேண்டும், வட்டார மொழியில் வரலாற்றுப் பாடம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அப்பொழுது நெல்லை கல்லூரியில் ஆசிரியப் பணியிலிருந்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தமிழைவிட ஆங்கிலம்தான் தனது கருத்துக்களை வெளிப்படுத்த வசதியாக இருப்பதாகவும், வட்டார மொழிகள் அந்த வளமையான மொழிகளாக இல்லாமையே அதற்குக் காரணம் என்று ஜாதுநாத் சர்க்காரின் கருத்துக்கு மறுப்புக் கருத்து தெரிவித்து செய்தித்தாளில் எழுதினார். இக்கருத்துக்குச் சுப்பிரமணிய பாரதியார் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தார் எனப் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி (A.R.Venkatachalapathy) தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அந்த அளவு தமிழறியாதவர் என்பதுவும், தமிழ் இலக்கியங்களை ச. வையாபுரிப்பிள்ளையின் விளக்கங்களோடுதான் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது என்றும், அதனால் காலமாற்றத்துக்கு ஏற்ப கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களால் தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் கொள்ள இயலவில்லை என்பதும் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் கருத்து.

ஜப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆன நொபொரு காராசிமா (Noboru Karashima) அவரது “தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு” (A Concise History of South India, 2014), என்ற நூலில் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாற்று நூலின் சிறப்பை முழுமையான மற்றும் துல்லியமான ஆய்வு எனப் பாராட்டுகிறார். அத்துடன், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஒரு பிராமணராக இருந்த காரணத்தால் அவர் “தென்னிந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சியில் வட இந்திய மற்றும் சமஸ்கிருத கலாச்சாரத்தின்” பங்கை வலியுறுத்த விரும்பி அவ்வப்போது வரலாற்றை எழுதுவதில் சார்பு நிலையை மேற்கொள்கிறார் என்றும் சுட்டிக் காட்டினார்.

இவரது சமஸ்கிருத சார்பு மற்றவர்களாலும் சுட்டிக் காட்டப்பட்டதுண்டு. அவர் இளவயது ஆய்வாளராக இருக்கையில், தமிழருக்கென்று நன்கு முதிர்ச்சியடைந்த நிலையில் தனிப்பண்பாடு இருந்தது என்றும் அது அயலார் தாக்கத்தால் பின்னர் மாறியது என்றும் கூறியவர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி. இருப்பினும் பிற்காலத்தில் சங்க காலத்தின் பண்பாடு என்பது இரண்டு தனித்துவமான திராவிட-ஆரியப் பண்பாட்டின் கலவை என்றும் கூறத் துவங்கினார். இறுதியில் இந்தியாவின் பண்பாட்டின் அடிப்படை சமஸ்கிருதம்தான், தமிழகப் பண்பாடும் அதற்கு விதிவிலக்கல்ல என்ற கருத்தை முன்வைக்கத் தொடங்கினார் என்கிறார் கணபதி சுப்பையா (2007). இவரது இந்தக் கருத்தாக்கம் மட்டும் மலேசியாவில் சென்ற நூற்றாண்டில் வெற்றி பெற்றிருந்தால் இன்று சிங்கப்பூரின் சட்டமன்ற மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ தமிழ் இல்லாது போயிருந்திருக்கலாம்.

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த நாடுகளில் பொதுமக்கள் அனைவரின் உயர்கல்விக்காகப் பல கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் உருவாகின. இந்த நிலை இந்தியாவிலும், ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த பிற பிரிட்டிஷ் காலனி நாடுகளிலும் நிகழ்ந்தன. உயர்கல்வி பயிற்று மொழியாக ஆங்கிலமும், இரண்டாவது மொழியாக அந்நாட்டின் மொழியாகவும் தெரிவு செய்யப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மொழியாகப் பரிந்துரைக்கப் பட்ட சமஸ்கிருதம் நாட்டின் செம்மொழி எனக் கூறப்பட்டது. சமஸ்கிருதம் என்பது ஒரு சமயத்தின் மொழி என்ற பரவலான கருத்து தாக்கத்தால் ஆங்கிலேயர் இதை ஏற்காமல் முடிவெடுக்கும் பொறுப்பைக் கல்வி நிலையங்களிடமே ஒப்படைத்தனர். செம்மொழித் தகுதி சமஸ்கிருதத்திற்கு மட்டுமல்ல தமிழுக்கும் அத்தகைய தகுதி உண்டு என்று முதன் முதல் எதிர்க்குரல் எழுப்பியவர் கிறிஸ்துவக் கல்லூரியின் பேராசிரியரான பரிதிமாற் கலைஞர். முடிவில் அந்தந்த வட்டாரங்களில் எது மக்களின் மொழியாக வழக்கத்தில் உள்ளதோ அதுவே உயர்கல்வி திட்டத்திற்கான இரண்டாம் மொழி என்ற தீர்மானம் செய்யப்பட்டது (விஸ்வநாதன், 2004).

இதே நிலை ஒருங்கிணைந்த நாடுகளாக இருந்த மலேசிய-சிங்கப்பூர் நாடுகளிலும் இருந்தது. இன்று இந்தியப் பின்புலம் கொண்ட அந்நாட்டு மக்களில் தமிழரே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர், 60% கக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தமிழரே (சிங்கப்பூர் மக்கட் தொகையில் சீனர் – 75%, மலாய் – 13%, தமிழர் – 5%, பிற இந்தியர் – 4%, மற்றவர் – 3%); சென்ற நூற்றாண்டிலும் இதே நிலைதான் இருந்தது. 1819 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தமிழர் பெருவாரியாகக் குடியேறி இருந்தனர். ஆங்கிலம், சீனம் (மாண்டரின்), மலாய், தமிழ் மொழிகள் தொடக்கத்திலிருந்து நாட்டின் புழக்கத்திலிருந்தது. அதிக இந்தியர் பேசியது தமிழே. மலேயா பல்கலைக் கழகம் தொடங்கப்பட்ட பொழுது குடிபெயர்ந்த இந்தியப் பின்புலம் கொண்டவருக்கான மொழியாக என்ன மொழியைப் பல்கலையில் தொடங்கலாம் என்ற கேள்வி எழுந்தது. இந்திய நாட்டின் சார்பில் பேராளராக கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆங்கிலேய அரசால் மலேயா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி இந்திய மொழியாகச் சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்று கூறி சமஸ்கிருத மொழியைப் பரிந்துரைத்தார். இதைக் கண்டு வெகுண்டு, 10000 தமிழர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தில் இறங்கினார் தமிழர்களின் தலைவராக விளங்கிய கோ. சாரங்கபாணி. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் “தமிழவேள்” எனும் சிறப்புப் பட்டமளிக்கப்பட்டு சிங்கப்பூர் தமிழர்களின் தலைவராகப் பாராட்டப்பட்டவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி. இவர் தமது எதிர்ப்பு முயற்சியால் போராடி வெற்றி பெற்றதால் இந்திய மக்களுக்கான மொழியாக (Department of Indian Studies at the University of Malaya in Singapore) பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று குறிப்பிடுகிறார் சிங்கப்பூர் கவிஞர். நா. ஆண்டியப்பன் (2020). தமிழவேள் கோ. சாரங்கபாணி முன்னெடுப்பில்தான் சிங்கப்பூர் நாட்டின் ஆட்சி மொழியாகவும் தமிழ் இருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி வரலாற்றை எழுதுகையில் கிடைக்கும் இலக்கியச் சான்றுகள், தொல்பொருள், கல்வெட்டு, நாணயவியல் மற்றும் வெளிநாட்டுப் பயணியர் பதிவு செய்த செய்திகள் ஆகிய ஐந்து சான்றுகளையும் கண்டறிந்து அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து வரலாற்றை எழுதும் முறையைக் கையாண்டார். மேலும், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியைப் பொருத்தவரை வரலாறு குறித்து அவர் கருதியது, வரலாறு என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே வரலாறு கற்கும் மாணவர் அவர்களுக்குக் கிடைக்கும் சான்றுகள் எங்கு எடுத்துச் சென்றாலும் அதன் வழியில் செல்லத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் வரலாற்றின் முடிவுகள் ஒவ்வொரு தலைமுறையினராலும் அவர்களது காலத்தின் சூழலுக்கு ஏற்ப பார்க்கப்பட்டுப் புரிந்து கொள்ளப்படும்.

இவர் சற்றொப்ப 40 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் பல தென்னிந்திய வரலாற்று நூல்கள், குறிப்பாகத் தமிழக வரலாறு குறித்த நூல்கள். கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களின் நூல்களை (1) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அவரது முக்கியமான வரலாற்றுப் படைப்புகள், (2) பண்பாடு மற்றும் சமூக வரலாறு குறித்த அவருடைய படைப்புகள், (3) அவர் பதிப்பித்த வரலாற்று நூல்கள், (4) வரலாற்று ஆய்வுமுறைகள் குறித்து அவர் எழுதிய நூல்கள், மற்றும் (5) குறிப்பிடத்தக்க அவரது சிறிய கட்டுரைகளும் இன்னபிற படைப்புகளும் எனப் பகுக்கலாம் என்று சங்கர் கோயல் (2005) வகைப்படுத்துகிறார். 1929ஆம் ஆண்டு முதல் 1975ஆண்டுக்கும் இடைப்பட்ட சுமார் ஓர் அரை நூற்றாண்டுக் கால இடைவெளியில் 30 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தென்னிந்திய வரலாறுபற்றி 25 நூல்களும் அடங்கும். பாண்டிய வரலாறு, சோழர் வரலாறு, நாயக்கர் வரலாறு, பண்டைய தமிழகம் முதல் நாயக்கர் காலம் வரையிலான தமிழக வரலாறு, தென்னிந்தியப் பேரரசுகள், தென்கிழக்காசிய நாடுகளில் தென்னிந்தியத் தாக்கம், தென்னிந்தியாவில் சமய வளர்ச்சி, சங்கப்பாடல்கள் மூலம் அறியும் தமிழக வரலாறு, தமிழர்களின் வரலாறும் பண்பாடும், ஆரிய-திராவிடப் பண்பாட்டுத் தொடர்பு போன்ற தலைப்புகள் கொண்ட இவருடைய நூல்கள் தமிழக வரலாறு கற்பவருக்கு இன்றியமையாத வரலாற்று நூல்கள்.



References:
(1) “Historiography of Professor K.A. Nilakanta Sastri”, Dr. Shankar Goyal, Page: 36-50; September 2005, Journal of Indian History and Culture.
https://journalcpriir.files.wordpress.com/2019/06/2005-journal-12th-issue.pdf

(2) “Historiographical analysis of K A Nilakanta Sastri writings on history”, Chinnapan, S; 1991, http://hdl.handle.net/10603/103875

(3) “In Those Days There was No Coffee: Writings in Cultural Histor”; Venkatasalapati, A. Ira (2006). Yoda Press. Page: 2-5; ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8.

(4) “Thamizhukku Magudam Sootiya Singapore”, Kavingar Na. Andiappan, Singapore, September 11, 2020. Tamil Heritage Foundation International – Internet Speech Series.
https://youtu.be/k1MWi2TIIUU?t=1050 (and) https://youtu.be/k1MWi2TIIUU?t=2300

(5) Historic Residences in Chennai – 30, Sriram V., Madras Musings, Vol. XIX NO. 15, November 16-30, 2009.
http://madrasmusings.com/Vol%2019%20No%2015/historic_residences_of_chennai_30.html

(6) K. A. Nilakanta Sastri – https://en.wikipedia.org/wiki/K._A._Nilakanta_Sastri

(7) “Recognising a classic”, S. Viswanathan, The Hindu-Frontline Print edition, November 05, 2004 https://frontline.thehindu.com/social-issues/article30225244.ece

(8) “Sectional President’s Address – Dakṣināpatha: Where does the path lead us?”; Ganapathy Subbiah (2007). Proceedings of the Indian History Congress. 67: 49–81. JSTOR 44147923


நன்றி: சிறகு 
பிப்ரவரி 13, 2021


#சிறகு, #தமிழறிஞர், #Themozhi