Wednesday, September 18, 2024

ஞாயிறு ஓசனித்தல்

           

           கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட

           வேனில் வேந்தன் வேற்று புலம் படர

           ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்        123-125

                     (சிலப்பதிகாரம்: 2-மதுரைக்காண்டம்; 4. ஊர்காண் காதை)

(வேற்று புலம் படர ஓசனிக்கின்ற - புலம் பெயர்வதற்காக நகர்கின்ற) 

மேலைக் காற்றோடு வந்து புகுந்து, கூடலை ஆட்சி செய்த வேனிலாகிய அரசன்,  மகர ரேகை  அமைந்துள்ள  தென் திசைக்குச்  செல்வதற்கு இடம் பெயர்கின்ற மிக்க வெயிலையுடைய வேனிலின் கடை நாளான ஆடித் திங்கள் இறுதி நாள்;  என்று  பருவகாலமான கோடைக் காலத்தின் இறுதி நாளை சிலப்பதிகாரம் இப்பாடலில்  குறிப்பிடுகிறது. இன்றைய நாட்களில், ஆகஸ்ட் திங்கள் மூன்றாம் வாரத் தொடக்கம் போன்ற நாளில் இது நிகழும். மதுரையை விட்டு நகர்ந்து கதிரவன் தனது தென் திசை செலவைத் தொடர்கிறது, ஆனால்,  மீண்டும்  திசை மாறி,  தைத் திங்களில்  வடதிசைச் செலவாக சித்திரைத் திங்கள் நாட்களில் கதிரவன் மதுரைக்குத் திரும்பி வரும். 

ஓசனித்தல் என்ற சொல் பறவையுடன் தொடர்பு கொண்ட சொல். ஓசனித்தல் - சிறகடித்தல் எனப் பொருள் கூறுவார் நச்சினார்க்கினியர்.   படபடவென்று துரிதமாகச் சிறகை அடித்துப் பறக்கும் 'ஓசனிச்சிட்டு' (Hummingbird) என்ற பறவையும் ஒன்று உண்டு. 

ஓசனித்தல் என்பது இக்கால வழக்கில் பருவ காலத்திற்கு ஏற்ப பறவைகள் 'வலசை' போதலைக் குறிக்கிறது, வெறும் புலம் பெயர்தல் அல்ல, மீண்டும் அதே இடத்திற்கு மற்றொரு காலத்தில் திரும்பும் எண்ணத்துடன் புலம் பெயர்தல் மட்டுமே 'வலசை' போதல் எனப்படும். அதாவது, போய் வருதல். 

           உடை திரை முத்தம் சிந்த ஓசனிக்கின்ற அன்னம்

           படர் கதிர் திங்கள் ஆக பரந்து வான் பூத்தது என்னா

                 (சீவக சிந்தாமணி - 2652)

என்று சீவக சிந்தாமணி பாடலில் அன்னம் (Anser indicus) ஓசனிப்பதாகக் கூறப் பட்டுள்ளது. பருவகாலம் மாறும் பொழுது வலசை போகக் கிளம்புகிறது அன்னப்பறவை.   அன்னப் பறவையானது  சீனா-மங்கோலியா பகுதிக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையே, 13,000 அடிகளுக்கும் மேலான உயரத்தில், இமய மலையையும் தாண்டிப் பறந்து வலசை போகும் பறவை என்பதை அக்காலத் தமிழர் அறிந்திருந்தனர். 

"சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்" என்ற நூலின் ஆசிரியர்  பி. எல். சாமி அவர்கள், "சிலப்பதிகாரத்திலும் சீவக சிந்தாமணியிலும்  ஓசனித்தல் என்றொரு சொல் பயில்கின்றது. இந்தச்  சொல் வேறு எந்தத் தமிழ் நூல்களிலோ, பிற எந்தத் திராவிட மொழிகளிலோ வழங்கிய தாகத் தெரியவில்லை. இந்தச் சொல்லை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இச்  சொல் அரியதோர் அறிவியல் கலைச்சொல்லாகவே (Scientific terminology) காணப்படுகிறது" என்கிறார்.  'ஓசனித்தல்' என்ற கலைச்சொல் 'வலசை போதல்'  என்பதைக் குறிக்கிறது என உறுதியாகச் சொல்லலாம்.

 

நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 250
9/18/2024      ஞாயிறு ஓசனித்தல் 

#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi