Thursday, July 2, 2026

சுதந்திரத்தின் கனவிலிருந்து உலகளாவிய செல்வாக்கு வரை — 250 ஆண்டு அமெரிக்காவின் வரலாறு

சுதந்திரத்தின் கனவிலிருந்து உலகளாவிய செல்வாக்கு வரை — 250 ஆண்டு அமெரிக்காவின் வரலாறு

அமெரிக்கா தன்னை ஒரு சுதந்திர நாடாக அறிவித்தது 1776 ஜூலை 4 அன்று. பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற அமெரிக்க ஐக்கிய நாடுகள், 2026 ஆம் ஆண்டில் தனது 250வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மனித வரலாற்றில் மிகப் பெரிய மக்களாட்சிப் பரிசோதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் அமெரிக்கா, இரண்டரை நூற்றாண்டுகளாக அரசியல், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 



அமெரிக்காவின் உருவாக்கம்:
அமெரிக்காவின் பிறப்பு ஒரு சாதாரண அரசியல் மாற்றம் அல்ல. “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர்” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு விடுதலை  அறிவிப்பு. இந்த அறிவிப்பு உலகெங்கும் மக்களாட்சி இயக்கங்களுக்கு ஊக்கமளித்தது. விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னர், அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதித்துவம், அதிகாரப் பிரிவு மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட குடியரசு அமைப்பு நிறுவப்பட்டது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் திருப்புமுனையான புரட்சியான பல வரலாற்று நிகழ்வுகளின் மூலம் உருவாகி, இன்று தன் அடையாளத்தைப் பெற்றுள்ளது. புரட்சிப் போராட்டம், மேற்கு நோக்கிய விரிவாக்கம், உள்நாட்டுப் போர், தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றைக் கடந்து, பின்னர் உலக அளவில் ஒப்பற்ற நாடாக உயர்ந்ததுள்ளது. அதாவது அமெரிக்காவின் வரலாறு என்பது போராட்டம், பொறுமை, மறுசீரமைப்பு, முன்னேற்றம் ஆகியவற்றின் சிக்கலான பின்னலாகும்.

அமெரிக்காவை வடிவமைத்த மிக முக்கிய நிகழ்வுகள்:
1.  அமெரிக்கப் புரட்சி (1775–1783)
பிரித்தானிய அரசால் தங்கள் மீது திணிக்கப்பட்ட “பிரதிநிதித்துவமின்றி விதிக்கப்பட்ட வரிவிதிப்பு” என்ற நிலையினை எதிர்த்த  பின்னணியில், அமெரிக்க மண்ணின் பதின்மூன்று குடியேற்றங்கள் (காலனிகள்)  பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அறிவித்தன. 1776 ஜூலை 4 அன்று சுதந்திர அறிவிப்பு கையெழுத்தானது. இது சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்ற தேசியக் கொள்கைகளை நிறுவியது.

2.  மேற்கு நோக்கிய விரிவாக்கம் (1803–1890களில்)
லூசியானா கொள்முதல் அமெரிக்காவின் பரப்பளவைப் பெரிதும் அதிகரித்தது. 'வெளிப்படையான விதி' (“Manifest Destiny”) என்பது 19 ஆம் நூற்றாண்டு அமெரிக்காவின் கொள்கையாக இருந்தது.  இது, வட அமெரிக்கக் கண்டம் முழுவதும் தனது மக்களாட்சியை நிறுவி ஆட்சிக்குள்ளான நிலப்பரப்பையும் விரிவுபடுத்துவதாக அமைந்தது.  இப்பணிக்காகக்  கடவுளால்  அமெரிக்கா  தெய்வீகமாக  நியமிக்கப்பட்டுள்ளது என்று கருதிய மனப்பான்மை அந்த நூற்றாண்டு அமெரிக்க மக்களிடம் பரவலாக இருந்தது. இக் கொள்கையால் அமெரிக்கா என்ற நாடு அமெரிக்கக் கண்டம் முழுவதும் விரிவடையத் தொடங்கியது. ஆனால் இந்த விரிவாக்கம் மண்ணின் பழங்குடி மக்களின் மரபையும் வாழ்வையும் அழித்தது.  

3. அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861–1865):
அடிமைத்தனம் தொடர்பான அரசியலுக்கும் அறநெறி வழி ஆட்சி என்ற கொள்கை மாறுபாட்டாலும் இந்தப் போர் வெடித்தது. அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் செல்வந்தர்கள் கறுப்பின மக்களை  அடிமையாக்கி தங்கள் பண்ணைகளையும் செல்வத்தையும் வளர்த்துக் கொண்டனர். உழைப்பை உறிஞ்சும் மனித நேயமற்ற இச்செயலை அமெரிக்காவின் வடக்கு மாநிலங்கள் கண்டித்தன.  இருதரப்பின் எதிரெதிரான கருத்துக்களால் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஆபிரகாம் லிங்கன் காலத்தில் நடந்து, அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னர் நாடு ஒன்றுபட்டது. இருப்பினும் சமத்துவத்திற்கான போராட்டம் தொடர்ந்தது.

4. தொழில்துறை மற்றும் முற்போக்கு காலம் (1800களின் பிற்பகுதி முதல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை):
தொழிற் புரட்சி அடுத்த மாற்றத்தைக் கொண்டு வந்தது. வேகமான தொழில் வளர்ச்சியும் நகரமயமாக்கலும் அமெரிக்காவைப் பொருளாதார வல்லரசாக மாற்றின. தொழிலாளர் உரிமைகள், பெண்கள் வாக்குரிமை என்று ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்தவர் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் இயக்கங்கள் மூலம் நாட்டில் அரசியல் சீர்திருத்தங்கள் உருவாயின.

5. பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் ‘நியூ டீல்’ (1929–1939):
அமெரிக்கப்  பங்குச்சந்தை 1929இல் சரிந்ததால் இவ்வீழ்ச்சி உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. அதனால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தம், அரசின் பொருளாதார நிலையையும் மாற்றியது. மக்களுக்காக 'நியூ டீல்' என்ற சமூக நலத்திட்டங்கள் மற்றும் நிதி ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

6. இரண்டாம் உலகப்போர் (1941–1945):
இரண்டு உலகப் போர்களிலும் முக்கிய பங்கு வகித்தது அமெரிக்கா.  இருப்பினும் இரண்டாவது போரில் முதலில் நடுநிலை வகித்த அமெரிக்கா, பின்னர் டிசம்பர் 1941 ஆம் ஆண்டில் ஹவாயில் உள்ள பேர்ல் துறைமுகம் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலால் அச்சு நாடுகளுக்கு எதிரான போரில் நேச நாடுகளுடன் இணைந்து போரில் நுழையும் நிலை ஏற்பட்டது.  அமெரிக்கா போரில் இணைந்து, பொருளாதார மந்தநிலையிலிருந்த நாட்டை மீட்டதுடன், உலகின் முக்கிய இராணுவ மற்றும் தொழில்துறை வல்லரசாக உயர்ந்தது. போருக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கத்திலும் அமெரிக்கா முன்னிலை வகித்தது.

7. குடியுரிமைப் போராட்டம் (1950–1960களில்)
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்ற கறுப்பினத் தலைவர்கள் இன வேறுபாடு மற்றும் பிரிவினைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடினர். இப்போராட்டத்தின் விளைவாக 1964ஆம் ஆண்டின்  குடியுரிமைச் சட்டமும் 1965ஆம் ஆண்டின்  வாக்குரிமைச் சட்டமும் உருவாகின. 

8. செப்டம்பர் 11 தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் (2001)
அமெரிக்க மண்ணிலேயே நிகழ்த்தப்பட்ட அயல்நாட்டின் இந்தப் பயங்கரவாத தாக்குதல்கள் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை, உள்நாட்டுப் பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை அடிப்படையாக மாற்றின.

9. பராக் ஒபாமா ஆட்சி (2009 – 2017)
பெரும் பொருளியல் நிலைத் தேக்கத்தை (Great Recession-2007 –2009) அமெரிக்கா எதிர்கொண்ட பொழுது 2008ஆண்டில் நடந்த தேர்தல் அமெரிக்க வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பெரும் பொருளாதார மந்தத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நெருக்கடியான சூழலில் ஒரு கலாச்சார மாறுதலாக, முதல் கறுப்பின அமெரிக்க அதிபர் என்ற வரலாற்றுத் திருப்புமுனையுடன் பராக் ஒபாமாவிடம் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.   ஒபாமா பெரும் பொருளாதார மந்தநிலைக்கு எதிரான ஊக்கத் திட்டங்களை அறிவித்தார்.  சுகாதாரத் துறையில் தேவையான மறுசீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். ஒரே பாலினத் திருமணத்திற்குத் தேசிய அளவில் சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.  அமெரிக்காவிற்கு அழிவு ஏற்படுத்தினால் விளைவு  என்னவாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்யும் விதமாகச் செப்டம்பர் 11 தாக்குதலுக்குக் காரணமான ஒசாமா பின் லாடன் மீது  அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. 


அமெரிக்காவின் சிறந்த அதிபர்கள்:
இதுநாள் வரை முதலாம் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனில் தொடங்கி இன்றைய அதிபர் டொனால்ட் டிரம்ப் வரை 46 அமெரிக்க அதிபர்கள் நாட்டை வழி நடத்தியுள்ளார்கள். இவர்களில் ஆகச் சிறந்த அமெரிக்க அதிபர்கள்  என்று வரலாற்று ஆய்வாளர்கள் மூவரைக் குறிப்பிடுவார்கள். தொடர்ந்து நடக்கும் இந்த ஆய்வுகளின் தரவரிசைப் பட்டியலில் ஜார்ஜ் வாஷிங்டன்(1789 –1797) முதல் அதிபர்; ஆபிரகாம் லிங்கன் (1861–1865) 16ஆவது அதிபர்; பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் (1933–1945) 32ஆவது அதிபர் என இந்த மூவரும் வரிசை மாறினாலும் முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து இடம் பிடிப்பவர்கள். சிறந்த அதிபர் மதிப்பீடுகளில்; நாட்டின் அக்கால நெருக்கடி நிலையைச் சமாளித்து வழிநடத்துவது, பொருளாதாரத்தை மறுவடிவமைப்பது மற்றும் குடிமை உரிமைகளை விரிவுபடுத்துவது ஆகிய மூன்று செயல்பாடுகள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. 


பிரசிடென்சியல்  கிரேட்னஸ் ஆய்வுத் திட்டம் (‘Presidential Greatness Project’) என்ற  2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வின் முடிவின் மதிப்பீட்டில்  1. ஆபிரகாம் லிங்கன் (95.03), 2. பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் (90.83), 3. ஜார்ஜ் வாஷிங்டன் (90.32) ஆகியோர் சிறந்த அதிபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். (இதில் 10.92 என்ற மதிப்பீட்டுடன் இறுதி இடம் பெறுபவர் இன்றைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்; டொனால்ட் டிரம்ப் மிகவும் பிளவுபடுத்தும் அதிபராகக் கருதப்படுகிறார்).  இந்த மதிப்பீட்டில் ஜார்ஜ் வாஷிங்டன் மிகக் குறைவாகப் பிளவுபடுத்தும் தலைவராக மதிப்பிடப்பட்டுள்ளார். 

சிறந்த அதிபர்கள் ஆய்வில், வரலாற்றாசிரியர்களும் அரசியல் வல்லுநர்களும் அதிபர்களின் செயல்பாடுகளை மதிப்பிடும் அளவுகோல்களாக எடுத்துக் கொள்ளும் அலகுகள்:  1. நாட்டின் நெருக்கடி நிலை வளர்ச்சிக்கான மேலாண்மை, 2. நன்நெறிமுறைத் தலைமைத்துவம், 3. சீரிய பொருளாதார மேலாண்மை, 4. மக்களுக்குச் சம உரிமைகள் வழங்குவதில் முன்னேற்றம், 5. அமெரிக்கச் சட்டசபையுடன் இணைந்து பணியாற்றும் திறன், 6. அயல்நாட்டு உறவுகளைக் கையாளும் தன்மை ஆகியன.  இந்த அடிப்படையில்; 
ஜார்ஜ் வாஷிங்டன் – புதிய குடியரசின் அடித்தளத்தை அமைத்தார்; புதிய நாட்டுக்கான சிறந்த முன்னோடியாக வழிகாட்டியாகச் செயல்பட்டார். 
ஆபிரகாம் லிங்கன் – பிளவுபட்ட ஒன்றியத்தை ஒருங்கிணைத்துக் காப்பாற்றினார்; அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் – பெரும் பொருளாதார பெரும் மந்த நிலையையும்  உலகப்போரையும் திறமையாகச் சமாளித்தார்.
என்று இவர்களின் சாதனையில் சிறந்த அதிபர்களாகத் தேர்வு செய்கிறார்கள் 

மற்ற முக்கிய தலைவர்கள்: 
இவர்கள் தவிர்த்து;  
தாமஸ் ஜெஃபர்சன் (லூசியானா கொள்முதல் மூலம் அமெரிக்காவின் பரப்பளவை இரட்டிப்பாக்கியவர்);  
தியோடர் ரூஸ்வெல்ட்(பெருநிறுவன ஏகபோகங்களை உடைத்தவர்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தவர்);  
டுவைட் ஐசன்ஹோவர் (நெடுஞ்சாலை அமைப்பை முன்னெடுத்தவர்,பள்ளிகளில் இனவெறி ஒழிப்பை அமல்படுத்தியவர்); 
லிண்டன் ஜான்சன் (1964 இல் குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்தவர் ; முதியோருக்கும், இயலாதவருக்கும் சுகாதார உதவிக்கு வழிவகுத்தவர்)            
ஆகியோரும் முதல் பத்து இடங்களில் இடம் பிடிப்பவர்கள்


உலகளாவிய செல்வாக்கு:
இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கா தொழில்துறை வல்லரசாக வளர்ந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அசைக்க முடியாத ஓர் உலக வல்லரசாக உருவெடுத்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் உருவாக்கத்திலும் அதன் பங்கு குறிப்பிடத்தக்கது. பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியத்துடன் போட்டியிட்ட அமெரிக்கா, விண்வெளிப் போட்டியில் நிலவிற்கு மனிதனை அனுப்பி வரலாறு படைத்தது.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்காவின் பங்களிப்பு அளப்பரியது. இணையம், கணினி புரட்சி, உயிரியல் மருத்துவ முன்னேற்றங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகிய பல துறைகளில் அமெரிக்க நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் உலக முன்னணியில் உள்ளன. உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களை ஈர்க்கும் நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது.

அதே நேரத்தில், அமெரிக்காவின் வரலாறு குறைபாடுகள் அற்றதல்ல. இன வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, அரசியல் பிளவுகள், குடியேற்றக் கொள்கைகள் மற்றும் உலகளாவிய இராணுவ தலையீடுகள் போன்றவை தொடர்ந்து விவாதப் பொருள்களாக இருந்து வருகின்றன. இருப்பினும் தன்னைத்தானே விமர்சித்துத் திருத்திக்கொள்ளும் திறன் அமெரிக்க மக்களாட்சியின்  முக்கிய பலமாகக் கருதப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் 250வது ஆண்டு விழா, அமெரிக்காவின் சாதனைகளை மட்டுமல்லாது அதன் பயணத்தில் ஏற்பட்ட தவறுகளையும் நினைவுகூரும் தருணமாகும். சுதந்திரம், சமத்துவம், வாய்ப்புகள் மற்றும் மக்களாட்சியின்  மீதான நம்பிக்கை ஆகியவை இன்னும் அமெரிக்க அடையாளத்தின் மையக் கருத்துக்களாக உள்ளன. இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு குடியரசு இன்று உலகின் மிகுந்த செல்வாக்கு மிக்க நாடுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 250 ஆண்டுகளை எட்டும் இந்த நேரத்தில், அமெரிக்கா தனது கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, மேலும் சமத்துவமான, நிலையான மற்றும் மனிதநேயமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய கட்டத்தில் நிற்கிறது.

சுதந்திரத்தின் கனவிலிருந்து உலகளாவிய செல்வாக்கு வரை — 250 ஆண்டுகள் அமெரிக்காவின் வரலாறு, மனித முயற்சி, மாற்றம் மற்றும் ஜனநாயகத்தின் தொடர்ச்சியான தேடலின் கதை ஆகும்.



உதவிய ஆய்வறிக்கை:
Assessing Presidential Greatness in a Polarized Moment: Analyzing the 2024 Presidential Greatness Project Survey
Brandon Rottinghaus, Justin Vaughn; 26 April 2026 https://doi.org/10.1111/psq.70048


நன்றி: தமிழணங்கு 
ஜூலை  2026 


#தமிழணங்கு, #அமெரிக்கா,  #Themozhi