அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு
"வகுப்புரிமைப் போராட்டம்" என்ற நூல் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் 1951 ஆம் ஆண்டில் எழுதப்பட்டு, மக்கள் மன்றம் பதிப்பாக வெளியிடப்பட்ட நூல். இனமான பேராசிரியர் என அழைக்கப்பட்ட பேராசிரியர் க. அன்பழகன் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக தி.மு.க. உருவான நாள் முதல் அதன் உறுப்பினராகவும், 1977 முதல் 2020இல் இறக்கும் வரை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். தமிழகத்தின் நிதி, கல்வி ஆகிய துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர். சட்டமன்ற உறுப்பினராக ஒன்பது முறையும், நாடாளுமன்ற உறுப்பினராக ஒருமுறையும், சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட அரசியல் பங்களிப்பைச் செய்தவர்.
இந்த நூலை எழுதிய காலத்தில் க.அன்பழகன் ஒரு ஆறேழு ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியவராகவும், திராவிடக் கொள்கைகளில் ஊறிப்போன 30 வயதுக்கும் குறைவான இளைஞராகவும் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. புள்ளிவிவரங்கள், தரவுகள் நிரம்பப் பெற்ற நூலாக இருப்பினும் நூலின் நடை எளிமையாகவும் உள்ளது. வகுப்புரிமை கொள்கைக்காகப் போராடிய தமிழகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணம் என்றே இந்நூலை வகைப்படுத்த முடியும். தமிழக ஆசிரியப்பணியில் இருப்போர் வரலாற்று அடிப்படையில் அறிந்திருக்க வேண்டிய நூல் இது.
நான் படித்த இந்த "வகுப்புரிமைப் போராட்டம்" நூலின் பதிப்பில் முன்னுரை, அணிந்துரை, அறிமுகவுரை, ஆசிரியர் எழுதும் என்னுரை, உள்ளுறை என்று நூலின் உள்ளடக்கம் போன்ற எதுவுமே காணப்படவில்லை. நூலின் தொடக்கத்தில், முதலில் வகுப்புரிமை கொள்கையின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் பார்ட்டி) பெரியோர்களின் கருத்துகளும், தொடர்ந்து அவர்களின் வழியில் அதற்காகப் போராடியோரின் கருத்துரைகளை ஒருபக்க அளவில் சுருக்கமாக மேற்கோள்களாகக் கொடுத்து நூலின் பொருளைக் கோடி காட்டுகிறது இந்த நூல். சமூகநீதிக் கொள்கையில் பற்று கொண்டிருந்த டாக்டர் பி. நடேச முதலியார், வகுப்புரிமை கொள்கைக்கு மாநாட்டில் உறுதியான ஆதரவுக்குரல் கொடுத்த வ.உ.சி, வகுப்புரிமையை நடைமுறைக்காகப் போராடிய பெரியார் ஈ. வெ.ரா., மற்றும் அறிஞர் அண்ணாதுரை ஆகிய நால்வரின் படங்களைக் கொடுத்து விட்டு நேரடியாக நூலின் நோக்கத்திற்குச் சென்றுவிடுகிறது நூல். நூலின் சாரத்தைச் சுருக்கமாக இனி அறிவோம்.
வகுப்புரிமைப் போராட்டத்தின் வரலாறு:
கல்வித்துறையில் 'வகுப்புரிமை அரசாணை' அல்லது 'கம்யூனல் ஜி.ஒ.' (Communal G.O./communal government order) என்று அறியப்பட்ட, சமூகநீதிக்கான இடவொதுக்கீடு நோக்கில் உருவாக்கப்பட்ட அரச ஆணை சட்டப்படி செல்லாது, அது இந்திய அரசியல் அமைப்புச்சட்ட வரைவுக்கு எதிரானது என்று கூறப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எழுதப்பட்ட நூல் இது. 1950 ஜூலை 27இல் தமிழகச் சமூகநீதிப் போராளிகளை உலுக்கிய சட்டத் தீர்ப்பு குறித்த நிகழ்வுடன் நூல் தொடங்குகிறது. பாலுமகேந்திராவின் திரைப்படத்தில் இந்து டீச்சர் மறைந்துவிட்டார் என்ற கடிதச் செய்தியைப் படித்த பிறகு நாயகனின் நினைவுகள் பின்னோக்கி ஓடும் வகையில் தொடங்கும் பாணியில் நூல் அமைகிறது. தமிழக வரலாற்றில் நீதிக்கட்சி என்ற ஒரு கட்சி தொடங்கப்பட்டதே வகுப்புரிமை என்ற சமூகநீதியை நடைமுறைக்குக் கொண்டு வரும் நோக்கில்தான். அதற்காகக் காலம் காலமாகப் போராடிய சமூகநீதி நோக்கம் கொண்டோருக்கு இத்தீர்ப்பு அதிர்ச்சியை அளித்தது. ஆனால்... இத்தீர்ப்பை எதிர்த்தோர் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தனர்.
இத்தீர்ப்பிற்குப் பிறகு கல்லூரியில், அரசு அலுவலகத்தில், செய்தி நிறுவன அலுவலகத்தில், இசையரங்கில், மகளிர் சங்கத்தில் எனப் பல இடங்களில் பார்ப்பன பின்புலம் கொண்டோர் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியாக உரையாடுவதான கற்பனைக் காட்சிகளுடன் நூலின் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. இதில் ஆசிரியர் கொடுக்கும் இடங்கள் யாவும் அக்காலத்தில் பார்ப்பன குல மக்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இடங்கள். இதை ஆசிரியர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் வரலாறு புரிந்தவருக்கு அது புரியாமல் போகாது. உரையாடல்கள் அவர்கள் குல வழக்கின்படியும், சமஸ்கிருதமும் ஆங்கிலமும் கலந்த நடையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஆசிரியர் சுட்டிக் காட்ட விரும்பியது, இந்தத் தீர்ப்பு ஆதிக்க நிலையில் இருந்தவர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சியை அளித்தாலும் அதை வெளிப்படையாகக் கொண்டாட முடியாத இக்கட்டான சூழல் அன்று தமிழகத்தில் நிலவியது. அடைந்த மகிழ்ச்சியை அடக்கி வாசிக்கும் நிலையிலிருந்தார்கள் அவர்கள் என்பதைப் படிப்போருக்கு உணர்த்துகிறார் அன்பழகன். இதைத் தொடர்ந்து வகுப்பு நீதி வளர்ந்த விதம் குறித்த தமிழக வரலாற்றுப் பின்னணியைக் கொடுக்கிறார்.
வகுப்புரிமைப் போராட்டம் என்பதில் உள்ள ‘உரிமை’ என்பதை ஏற்றுக் கொள்ளாது, அது ஒரு வகுப்புவாத அல்லது வகுப்புபேத திட்டம், அதன் நோக்கம் திறமையையும் தகுதியையும் மதிக்காது ஒரு சிலரின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் திட்டம் என்ற வகையிலேயே பலகாலம் கல்வியையும் அதனால் பலனையும் பெற்றிருந்த ஆதிக்கப் பிரிவினரால் இத்திட்டம் குறித்துக் குற்றம் சாட்டப்பட்டது. இதனை மறுத்து வகுப்புரிமையின் தேவையை விளக்குகிறார் அன்பழகன். ஒரு கல்லூரிப் பேராசிரியர் நாட்டின் கல்வி அமைப்பு மற்றும் நடைமுறை குறித்து எழுதுவது பொருத்தம் ஆகும். நூல் முழுவதும் பல உவமை மூலம் அவர் விளக்கும் விதம் சிறப்பு. காலம் காலமாகக் கல்வியைத் தனக்கென ஒதுக்கிக் கொண்ட ஆதிக்கப்பிரிவினர் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியா வந்த பொழுது; அப்பொழுதும் தங்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் அனைத்து அரசு வேலைகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டனர். பார்ப்பனர் அல்லாதோரில் (அதாவது; பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், ஆதிதிராவிடர், இஸ்லாமியர், கிறித்துவர்களாகிய தமிழக மக்கள்) கல்வி கற்றிருந்த ஒரு சிலர் அரசுப்பணிகளில் நுழைய இடம் விடாமல் அவர்கள் கூட்டத்தின் உள்தொடர்பு முறையில் கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசுப்பணிகளில் இருந்தோர் குறித்த புள்ளிவிவரங்களின் படி எங்கும் எதிலும் அவர்களே நீக்கமற நிறைந்திருந்தனர். பிறர் அரசின் ஓர் உதவியை எதிர்பார்ப்பது என்றாலும் கூட அது பார்ப்பனர் கருணையைப் பெற்றாலே இயலும் என்ற அளவில் நிலைமை அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்தது. இதே நிலை கல்வித்துறையிலும் இருந்தது. அதனால் நல்ல கல்வி அதன் மூலம் ஒரு நல்ல பணி என்பதிலிருந்த பாதையை அவர்களின் கைவசம் வைத்துக் கொண்டு அதை மற்றவர் அடையாமல் கட்டுப்படுத்துதல் அவர்களுக்கு எளிதாயிற்று. இதனைப் பார்ப்பனர்களின் இனப்பற்று ஆதிக்கவெறி ஆகியவற்றின் விளைவாகப் புரிந்து கொள்ளலாம். ஆகவே நடைமுறையில் மறுவகையில் ஆங்கிலேயர் ஆட்சியிலும் வருணாசிரம முறை மீண்டும் நடைமுறையிலிருந்தது என்றே சொல்ல வேண்டும்.
மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பார்ப்பனர் அல்லாதவரில் நல்ல கல்வியும் செல்வமும் பெற்றவர், பாதிக்கப்பட்டவர் சிலர் முயற்சி எடுத்தனர். 'திராவிடத் தந்தை டாக்டர் சி. நடேச முதலியார்', 'திராவிடச் செம்மல் சர். பி. தியாகராய செட்டியார், திராவிடப் பேரறிஞர் டாக்டர் டி. எம். நாயர் ஆகியோர் ஒருங்கிணைந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனைப் பாதுகாக்க முன்வந்தனர். மெட்ராஸ் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த அவர்கள் 1916 ஆம் ஆண்டில் 'தென் இந்தியர் நலவுரிமைச் சங்கதை'யும் தோற்றுவித்தனர். காங்கிரஸ் கட்சியில் சமூகநீதி வகுப்புரிமைக்கு இடம் இல்லாமையினால் இந்த நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது என்பதுதான் சமூகநீதிக்கான கட்சி ஒன்றின் தொடக்க வரலாறு. இவர்களின் தொடர் முயற்சியால் முதலில் வரிவசூல் துறையில் அனைத்து வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறை அரசு உத்தரவாக ஏற்படுத்தப்பட்டது. 1920இல் பனகல் அரசரின் தலைமையில் நீதிக் கட்சி ஆட்சி அமைத்தபொழுது 1921இல் மேல்சபையில் இது தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டு அந்த ஆண்டு செப்டெம்பர் 1921இல் உத்தரவாக நிறைவேற்றப்பட்டது. 1915ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் இருந்த நிலையை அறிந்தவரால்தான் பார்ப்பனர் அல்லாதோரின் சமூகநீதி இயக்கத்தின் முக்கியத்தை உணரமுடியும் என்கிறார் அன்பழகன். அதைக் கவனத்திற்குக் கொண்டுவரப் பல புள்ளிவிவரங்களை அடுக்கிறார். தமிழக மக்கள் தொகையில் வெறும் 3% இருந்த பார்ப்பனர் அனைத்து உயர்பதவி, அரசு பதவி, கல்வி, தொழிற்கல்வி, சட்டம், நீதி, காவல்துறை, கல்வித்துறை என அனைத்திலும் பெருவாரியாக நிரம்பி இருந்தனர்.
பார்ப்பனர் காங்கிரஸ் கட்சியைக் கேடயமாகப் பயன்படுத்தி அதன் மறைவில் வகுப்புரிமை கொள்கையை வகுப்புவாதம் எனப் பெயர் சூட்டி எதிர்த்தனர். நீதிக்கட்சியில் வந்து சேர்ந்தவரெல்லாம் அதற்கு முன் காங்கிரசிலிருந்து பின்னர் உண்மை புரிந்து வெளிவந்தவர்களே. வ. உ. சி. 1927ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை ஏற்று வகுப்புரிமையின் தேவையை எடுத்துக் கூறினார், பிறகு நிலைமை புரிந்து அவரும் காங்கிரசைக் கைவிட்டார். காங்கிரசின் முக்கிய பதவிகளில் செயலாற்றிய பார்ப்பனர் அல்லாதோர், ஈ. வெ. ரா. பெரியார் உட்பட, அங்குப் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் சமூகநீதிக்கு உலை வைக்கப்படுவதை உணர்ந்தபொழுது, வகுப்புரிமையை வலியுறுத்தி வந்தவர்கள். ஆனால், அதற்குக் காங்கிரசில் இடமில்லை என்று புரிந்து ஒவ்வொருவராகத் தொடர்ந்து வெளியேறி வந்தனர் என்பதை வரலாறு காட்டுகிறது. டாக்டர். வரதராஜுலு நாயுடு, திரு. வி. க. போன்றோர் சிலர் மேலும் இவர்களில் குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் ஆவார்கள். இவர்களைப் போன்று சமூகநீதி குறித்த அக்கறையுடன் போராடியவர்கள் சென்ற நூற்றாண்டிலும் கூட தேசத்துரோகிகள் என்றுதான் முத்திரை குத்தப்பட்டனர் என்பதில் இருந்து இது வருணாசிரமதர்ம ஆதரவாளர்களின் முறையாக என்றுமே இருந்திருப்பது தெரிகிறது.
1926ஆம் ஆண்டின் தேர்தலுக்குப் பின்னர் டாக்டர் சுப்பராயன் தலைமையின் கீழ் ஆட்சியமைத்த அரசு, மாகாண அரசு ஊழியர்களின் பணிக்கான விதிகளை நிர்ணயிக்குமாறு ஆங்கிலேய அரசு மாகாணங்களுக்கு அனுப்பிய ஆணையை ஒரு வாய்ப்பாகத் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டது. மக்கள்தொகை விகிதப்படி பல வகுப்பினரின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் நோக்கில் விகிதாசார அடிப்படையில் வாய்ப்பளிக்கும் ஒரு முறை திட்டமிடப்பட்டது. 1928ஆம் ஆண்டில் சுப்பராயன் அரசின் அமைச்சர் முத்தையா 'கம்யூனல் ஜி.ஒ.' என்பதற்குத் தோற்றமளித்து அரச ஆணையாக்கினார். இது முடிவான முடிவல்ல. காலத்திற்கு ஏற்ப மறு பரிசீலனை செய்து மாற்றியமைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். இத் திட்டம் 1921இல் மேல்சபையில் தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டது, ஆனால் ஓர் அரச ஆணையாக மாற்றம் பெற மேலும் ஏழாண்டுகள் ஆயின. முதலில் ஆவணப் பதிவுத் துறையில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதன்படி 12 பணியிடங்கள் இருப்பின், அதில் 10 இடங்கள் பார்ப்பனர் அல்லாதவருக்கு என்ற அளவில் வரையறுக்கப் பட்டது. இது தமிழக மக்கட் தொகை அளவில் சதவிகித அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கும் அரசுப் பணிகளில் சம வாய்ப்பு அளிக்கும் அடிப்படையில் அமைந்தது. அதுநாள் வரையில் 12 இடங்களில் 10 இடங்கள் போல ஆக்கிரமித்திருந்த பார்ப்பன வகுப்பினரின் நிலைமை தலைகீழானது. இருப்பினும் மக்கட் தொகையில் 3% இருந்தோருக்கு 16% பணிகள் ஒதுக்கப்பட்டிருந்தும் அவர்கள் குமைந்து கொண்டிருந்தார்கள். சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் பணிகளை அபகரித்தால் அது சமூக அநீதி, அறமற்ற முறைகேடு என்ற அடிப்படைப் புரிதல் இன்றும் பலருக்கு இல்லை என்னும் நிலையில், சென்ற நூற்றாண்டில் எல்லாமே தங்கள் உரிமை என எண்ணியிருந்தவரைப் பற்றிக் குறை கூற வழியேது?
குடிமக்கள் அனைவருக்கும் சம வாய்ப்பளிப்பது ஓர் அரசின் கடமையாக இருக்கவேண்டும். மக்களில் பெரும்பான்மையோர் கட்டும் வரிப்பணத்தில் ஒருசிறு பிரிவினருக்கு மட்டும் கல்வி கற்கும் வாய்ப்பும் அளித்து, அவர்களை அதிகாரம் உள்ள பதவிகளில் இடம்பெற வைத்து, அவர்களையே ஆளவும் வைத்து, பெரும்பான்மை மக்கள் தங்கள் உரிமையை அடையாமல் புறக்கணிக்கப்பட்டதும் அல்லாமல், தங்கள் வரிப்பணத்தில் தாங்களே வளர்த்துவிட்டவரின் தயவை எதிர்பார்த்து வாழவேண்டிய சூழலில் இருந்தார்கள். தங்களது சொந்தக் காசில் தங்களுக்கே சூனியம் வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த நிலையை மாற்ற உருவாக்கப் பட்ட இத்திட்டத்தை நாட்டில் தகுதி திறமையை வீணடிக்கும் வகுப்பு பேதத் திட்டம் என்று பார்ப்பன வகுப்பினர் கண்டித்துக் கொண்டிருந்தனர். கல்வி மூலமே ஒருவர் அதிகாரமுள்ள அரசுப் பணிகளில் பங்கு பெறமுடியும். ஆனால், நடைமுறையில், கல்வி கற்பிக்கச் செலவிடும் தொகையும், கல்விக்கூடங்களில் ஆசிரியப் பணி யாவும் எனக் கல்வித்துறையே பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்தது.
இருப்பினும், கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அனைவரின் தகுதி திறமைகளை வளர்த்துவிட்ட பிறகு 1950களில்தான் உருவாகும் எனவும் ஆட்சியாளர்களால் அன்றைய நிலைமை கணிக்கப்பட்டது. இதற்காக அனைவருக்கும் கல்வியளிக்க ஏற்பாடு செய்து, பணிகளுக்குத் தகுதியுள்ளவரை அதிகரிக்க இருக்கும் தேவையும் அரசால் உணரப்பட்டது. அதுவரை தகுதி உள்ளவர் கிடைக்கவில்லை என்று கூறி பார்ப்பனர்தான் தொடர்ந்து பணியில் அமர்த்தப்பட்டும் வந்தனர் என்பதுதான் அன்றைய நிலைமையாகவும் இருந்தது. இந்த நிலையில் எதிர் வரப் போவதை உணர்ந்த ஆதிக்கப் பிரிவினர் பணிகளுக்கான தகுதிகளைத் தேவையின்றிச் செயற்கை முறையில் அதிகரிக்கவும் தலைப்பட்டனர். அடுத்து காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பொழுது முதலமைச்சர் இராஜாஜி (இவர் இந்த நூல் வெளிவந்த காலத்திற்குப் பிறகும், மற்றொருமுறை 1953 ஆண்டுக் காலத்தில் அவர் பதவியிலிருந்த பொழுது குலக்கல்வி முறையை நுழைத்து கல்வித்தடையை உருவாக்க முயன்றார், அப்பொழுது தமிழகத்தில் கல்வி கற்றவர் வெறும் 21% தான் என்பதையும் தமிழக வரலாறு அறிந்தவர் நினைவு கூரலாம்) நேரடியாக 'கம்யூனல் ஜி.ஒ.' செயல்படுத்துவதை எதிர்த்து மக்களின் கசப்புணர்வைக் கூட்டி தங்கள் ஆட்சியை இழக்காமல் சூழ்ச்சியின் மூலம் திட்டத்தைச் செயல்படவிடாமல் தடுக்கும் முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கல்லூரிகளில் அனைவருக்கும் வாய்ப்பளிக்க பனகல் அரசரின் காலத்தில், 1920களில் உருவாக்கப்பட்டு அன்று நடைமுறையிலிருந்த 'கல்லூரிக் குழு' என்ற கண்காணிக்கும் அமைப்பு இராஜாஜியின் ஆட்சியில் நீக்கப்பட்டது. அனைவரும் கல்வி கற்க ஆர்வம் கொண்டு, பிறவகுப்பாரும் கல்லூரிகளில் படிக்க விரும்பிய பொழுதும் தொழிற் கல்விகள் படிக்க முன்வந்த பொழுதும் இந்தக் கல்லூரிக் குழு சம வாய்ப்பு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த ஓர் அமைப்பு என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இதுதான் இராஜாஜி ஆட்சியில் சூழ்ச்சியுடன் நீக்கப்பட்டது. இராஜாஜி ஆட்சியில் ஆதிக்கப் பிரிவினர் எந்தெந்த வகையில் கல்வியிலும் தகுதியிலும் பிற வகுப்பினர் உயர்வதை, 'கம்யூனல் ஜி.ஒ.' நடைமுறைக்கு வருவதை முடக்க முடியுமோ அவற்றைச் செய்து தங்கள் திட்டத்தைச் செயலாக்கிக் கொண்டிருந்தனர். இதன் விளைவாக மாணவர்களைச் சேர்க்கும் முறை கல்லூரித் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அப்பொழுது அரசு கல்லூரித் தலைமைப் பொறுப்பிலிருந்தவரெல்லாம் பெரும்பான்மையும் பார்ப்பனரே என்பதும் தமிழகம் அறிந்த உண்மை. ஆகையால் , இத்தகைய மாற்றத்தின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கலாம்.
இராஜாஜி பதவி விலகிய பின்னர் 1942இல் தொழிற்கல்வி கல்லூரி முதல்வர்களுக்கு 'கம்யூனல் ஜி.ஒ.' முறைப்படி மாணவர்கள் சேர்க்கை அமைய வேண்டும் என்ற உத்தரவு மீண்டும் அனுப்பப்பட்டது. கல்லூரிக்குழு மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதனால் தங்கள் கல்விக்குத் தடை என்று பார்ப்பனர் குமுறத் தொடங்கினர். ஆனால் அதில் உண்மை இல்லை என்பதற்கு அன்பழகன் புள்ளிவிவரங்கள் கொடுக்கிறார். அதில் மாணவர்களின் விகிதாசாரம் ஆரம்பப் பள்ளியில் இருக்கும் நிலை, உயர்நிலைப்பள்ளி முடிக்கும் பொழுது மாறிவிடுவதைக் காட்டுகிறார். பார்ப்பனர் அல்லாத பிரிவினர் பலர் இடையில் கல்வியைக் கைவிட்டு விடுவது அதன் மூலம் தெரியவருகிறது. அதற்கு அக்காலப் பள்ளிகளின் கல்விச்சூழல் மற்றும் மாணவர்களின் படிப்பு குறித்துப் பார்ப்பனர் அல்லாத குடும்பங்கள் கொண்டிருந்த கருத்து நிலைமையும் காரணம் என்கிறார் அன்பழகன்.
தொழிற்கல்வி குறித்த தரவுகளும் இது போன்ற நிலையிலேயே இருந்திருக்கிறது. 1946இல் (பக்கம் 74 இல் கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்) காட்டுவது; தகுதி என்ற மதிப்பெண் அடிப்படையில் பார்ப்பன பிரிவு மாணவர்கள் தங்கள் வகுப்புரிமை விழுக்காட்டை எட்டிவிட்டாலும், மீண்டும் ஒருமுறை வகுப்பு விகித அடிப்படையில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு முறையற்ற நிலையை. அதனால் 3% என்பதற்குப் பதிலாக 20% க்கும் மேலான அளவில் இடங்கள் அவர்களுக்குக் கிடைத்துள்ளன (இது ஆங்கிலத்தில்.. Legal definition of double dipping என்பதற்கு ஒப்பான முறை). இருந்தும் பார்ப்பன குல மக்கள் மகிழ்ச்சி அடைந்தார் இல்லை.
தகுதி அடிப்படை என்ற பொருந்தா வாதத்தை அன்பழகன் நல்லதொரு உவமையுடன் தெளிவாக விளக்குகிறார். ஊர்மக்களுக்குப் பொதுவான விளைநிலத்தில் அனைவரிடம் இருந்தும் விதைநெல் பெற்று, விதைத்து, பயிர் விளைவித்த பின்னர், விளைச்சலைத் தக்க முறையில் பங்கிடாது, அவரவர் திறமைக்கும் வலுவுக்கும் ஏற்ப அறுவடை செய்து கட்டிக் கொண்டு போங்கள் என்று கூறுவோமானால், அறம் எதுவெனத் தெரிந்தவர் அதை ஏற்றுக்கொள்ள வழியில்லை என்கிறார் (பக்கம் - 64). ஆனால் கல்வித்துறைக்காகச் செலவிடும் வரிப் பணத்திற்கு அதுதான் அப்பொழுது விளைவாக இருந்திருக்கிறது. இந்த சுரண்டல் முறையை அநீதி என்று உணர்ந்தவர் வெகு சிலரே. அரசு குடியானவத் தெரு கடைத் தேங்காயை எடுத்துச் சென்று, அக்கிரகாரத் தெரு பிள்ளையார் கோவிலில் உடைத்துக் கொண்டிருப்பது போல நிர்வாகம் செய்துள்ளனர் என்கிறார் அன்பழகன்.
உண்மையில் பார்ப்பன வகுப்புரிமைக்கான வாய்ப்பை அவர்கள் இழக்கவில்லை என்பதைத்தான் தரவுகள் காட்டுகிறது. இத்தரவுகளைக் கொடுத்த அன்பழகன் சதவிகித எண்களையும் அடைப்புக் குறிக்குள் கொடுத்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் நூலைப் படிப்பவர் கணக்குப் போட வேண்டிய தேவையின்றி ஒரு பார்வையிலேயே வகுப்புரிமை நிலையை அறிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும். தரவுகள் குறித்து அன்பழகன் தனது நூலில் ஒரு கேள்வியை எழுப்பாமல் விட்டாலும்.. தரவுகளைப் பார்வையிட்ட பிறகு நமக்கு எழவேண்டிய கேள்வி ... தகுதியும் திறமையும் உள்ளவர் என்று தொழிற்கல்வியை 1940களில் ஆக்கிரமித்த இந்தப் பிரிவினரிலிருந்து அப்துல் கலாம் போல எத்தனை விஞ்ஞானிகளை நாம் இவர்களிலிருந்து அடையாளம் காட்ட முடியும்? தரவுகள் காட்டும் காலகட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவராகவே கலாம் இருந்திருப்பார். இவர்கள் அவருக்கும் மூத்த தலைமுறையினர்.
மேலும், தகுதி என்பதை மதிப்பெண்கள் கொண்டு நிர்ணயிக்கும் நிலையில் உள்ள இக்கட்டையும் தெளிவாக விளக்குகிறார். தகுதியும் திறமையும் என்ற தலைப்பின் கீழ் மதிப்பெண்கள் காட்டுவது உண்மையான தகுதியையா என்பது குறித்த ஒரு விளக்கமும் அளிக்கிறார் அன்பழகன் (பக்கம் 75-76). மாணவர்களின் வேறுபட்ட கல்வி கற்கும் சூழலை விளக்கும் விதமாக அட்வகேட் அனந்தாச்சாரி என்பவர் வீட்டில் வளரக்கூடிய மாணவர், வக்கீல் குமாஸ்தா கோவிந்தசாமிப் பிள்ளை வீட்டில் வளரக்கூடிய மாணவர், கூலி வேலை செய்யும் குப்பன் குடும்பத்தில் வளரும் மாணவர் (பக்கம் 80 - 84) என மூன்று வெவ்வேறு சூழலில் படிக்கும் மாணவர்களின் நிலையைக் காட்டி, இவர்களின் கல்வித் திறமையை மதிப்பெண் தகுதி என்பதன் கீழ் நிர்ணயிக்க முற்படும் முறையில் உள்ள பிழையையும் சுட்டிக் காட்டுகிறார். தகுதி என்ற முறையில் அண்மையில் சமூகநீதி இழந்து பாதிக்கப்பட்ட நன்கு படித்த மாணவியான டாக்டர் அனிதா என்பவரின் தொழிற்கல்வி கனவு சிதைந்ததை யாரும் மறந்திருக்க வழியில்லை.
முன்னேறிவிட்டவருக்குப் படிப்பு ஓர் அடையாளச் சீட்டு, நடுத்தர நிலையில் உள்ளவருக்கு வாழ்க்கைப் பிரச்சனை, தாழ்த்தப்பட்ட சூழலில் சிக்கிக் கொண்டவருக்கோ அது ஒரு தண்டனை, வேதனைச் சூழல் என விளக்குகிறார். அதனால் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியேற்றப்படுபவர்கள் அறிவாற்றல் அற்றவர்கள் அல்ல எனத் தெளிவு படுத்துகிறார். "ஒரு நாட்டிற்கு இன்றியமையாத 'தகுதியும் திறமையும்' பாழாக விடக்கூடாது" என்பதற்காகவே, கம்யூனல் ஜி.ஒ. வை எதிர்ப்பதாகக் கூறுவது உண்மையிலேயே இல்லாத ஆற்றிலே, ஓடாத தண்ணீரைத் தேக்காதது குற்றம் என்று பேசும் பித்தலாட்டமேயாகும்" என்பது அன்பழகன் வைக்கும் வாதம் (பக்கம் 92, இப்பக்கத்தில் உள்ள வாதங்கள் பலவும் சிறப்பானவை).
இவ்வாறாகப் பல போராட்டத்திற்கு இடையில் உருவாக்கப்பட்டு, எதிர்ப்புகளுக்கு இடையில் நடைமுறைப் படுத்தப்பட்ட கம்யூனல் ஜி.ஒ. வை எவ்வளவு முயன்றும் மாநில சபையின் மூலம் ஒழிக்க முடியாததால், விடுதலை பெற்ற இந்தியாவின் மத்திய அரசின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மற்றொரு பக்கம் நடந்து கொண்டிருந்தன. 1948ஆம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு இந்து சமய மக்களுக்குள் சாதி பேதம் காட்டும் முறை அரசு கொள்கைக்கு மாறானது என்ற சுற்றறிக்கை அனுப்பியது. மாநில முதல்வர் ஓமந்தூர் ராமசாமி தெளிவான முறையில் உறுதியோடு இது குறித்த நடவடிக்கைகள் எடுத்த வண்ணம் இருந்தார். தமிழகத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல பொதுநல அமைப்புகள் அதை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றின.
பிராமணர்களுக்கு உத்தியோகமில்லையா? அவர்கள் தகுதி திறமை பாழாவதா என்று வெகுண்டவர்கள், "புல்லேந்தும் மரபில் வந்த நாம், சமயம் நேர்ந்தால் வாள் ஏந்தும் திறமையுடையோர்கள் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்" என்று 1948 மே மாதத்தில் நடைபெற்ற "முற்போக்கு பார்ப்பனர் மாநாட்டில்" முழக்கமிட்டிருக்கின்றனர் (பக்கம் 111). இது இக்காலத்தில் வைரமுத்துவின் ஆண்டாள் விளக்கம் குறித்து சினம் கொண்டு 'கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் தெரியும்' என்று மார்தட்டிய சோடா புட்டி ஜீயரை நினைவுபடுத்துகிறது. இது பார்ப்பன வகுப்பினரின் கம்யூனல் ஜி.ஒ. எதிர்ப்பின் உச்ச நிலையைக் காட்டும். ஓமந்தூர் ராமசாமிக்குத் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டிய நெருக்கடி உருவாக்கப்பட்டது (இதை மண்டல் அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவந்த பிரதமர் வி.பி.சிங் 1990இல் எதிர் கொண்ட நிலையுடன் ஒப்பிடலாம்).
அடுத்து 1949 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த குமாரசாமி ராஜா ஆட்சியில் நாட்டின் புதிய அரசியல் சட்டத்தின் துணையுடன் கம்யூனல் ஜி.ஒ. வை முறியடிக்கும் நோக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. 1950 ஜனவரி 26 இல் இந்தியாவின் புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்ததுதான் இதற்கான திருப்புமுனை. தமிழகத்தில் நடைமுறை வழக்கிலிருக்கும் கம்யூனல் ஜி.ஒ. விளைவாகத் தாம் ஒரு பிராமணர் என்பதால் மருத்துவம் படிக்க இயலாது போகக்கூடும் என்று செண்பகம் துரைசாமி என்பவரும், பொறியியல் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகக்கூடும் என்று சீனிவாசன் என்பவரும் மனு செய்தனர். தகுதி அடிப்படையில் அவர்கள் விண்ணப்பங்கள் மதிப்பிடப்பட வேண்டும் கம்யூனல் ஜி.ஒ. குறுக்கீடு இருக்கக் கூடாது என்பது அவர்கள் கோரிக்கை. இவர்களுக்காக இந்த வழக்கில் வாதாடியவர் அன்றைய அட்வகேட் ஜெனரல் ஆகப் பதவி வகித்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்பவர். இவர் இந்திய அரசியல் அமைப்புச்சட்ட வரைவுக்குழுவில் இடம் பெற்றவர். வரைவுக் குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து இந்திய அரசியல் அமைப்புச்சட்ட வரைவு உருவாக்கப்படக் காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் இவரது மகன் அல்லாடி குப்புசாமி அய்யரும் இணைந்து வழக்காடினார்.
வழக்கின் முடிவில் தமிழக அரசின் கம்யூனல் ஜி.ஒ. என்ற இட ஒதுக்கீடு ஆணை இந்திய அரசின் சட்டப்படி செல்லாது என்ற தீர்ப்பு தலைமை நீதிபதி பி. வி. இராசமன்னார் அவர்களால் வழங்கப்பட்டது. அரசியல் அமைப்புச்சட்ட வரைவை உருவாக்கிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே இந்தியச் சட்டத்திற்கு எதிராக உள்ள ஆணை என்று வாதாடினால் தீர்ப்பு வேறு எவ்வாறு இருக்க முடியும்? இதுவரை இடவொதுக்கீடு, சமூகநீதி என்று போராடிப் பெற்ற அத்தனை முயற்சியும் தீர்ப்பால் செயலற்றுப் போனது. அரசியல் சட்டத்தினாலேயே மக்களின் உரிமை பறிக்கப்பட்ட அவலநிலை இது. இதிலிருந்துதான் இந்த நூலைத் தொடங்கியுள்ளார் அன்பழகன்.
இந்திய அரசியல் அமைப்புச்சட்ட வரைவுக்குழுவில் இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டும் விதத்தில் சட்டம் இயற்றப்பட்டது வரைவுக்குழுவில் இடம் பெற்ற அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்களாலும் டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் ஆகியோரால் என்பதையும் தமிழகம் அன்று உணர்ந்திருந்தது. இதை "இவர்களது நல்லெண்ணத்தின் பாற்பட்ட செயல்" என்று வஞ்சப் புகழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார் அன்பழகன். சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்ற நால்வர் பார்ப்பனர், அவர்களில் தென்னாட்டிலிருந்து பிரதிநிதிகளாகச் சென்ற மூவருமே பார்ப்பனர், இவர்கள் கருத்தின்படி இச்சட்டம் தயாரானது என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு குறிப்பு. சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் ஒருவர் செய்த சூழ்ச்சி இது என்பதைச் சென்னை மேல்சபை உறுப்பினர் பி. நாராயணசாமி நாயுடு எம். எல். சி. ஆற்றிய ஒரு உரையின் மூலமும் அறிந்து கொள்ளலாம். மாநிலக் கல்லூரி கூட்டம் ஒன்றில் வழக்கு நடக்கும் முன்னரே அல்லாடி கிருஷ்ணசாமி இடவொதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆற்றிய சொற்பொழிவுச் சான்றும் கூட உண்டு.
இக்காலத்திலேயே இந்த நிலை என்றால் !!!... என்ற எண்ணம் எழுவதை யாராலும் தவிர்க்க இயலாது என்பதுதான் உண்மை. மக்களாட்சி ஒன்றில் அனைவரின் பிரதிநிதித்துவத்தின் இன்றியமையாமை குறித்து கற்க வேண்டிய பாடம் இதில் இருக்கிறது (பக்கம் 144 - 146). இந்தியாவின் சட்டவரைவை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றவரே இடவொதுக்கீட்டுக்கு ஊறு விளைவிக்கும் ஒரு சட்டத்தையும் இடம்பெறச் செய்து, பார்ப்பன மாணவர்கள் சார்பில் ஒரு வழக்கையும் தொடுத்து, அவரே வாதாடி சட்ட வரையறையைக் கொண்டே இடவொதுக்கீட்டு ஆணையை முறியடித்தும் காட்டினார் என்பது அன்று தமிழகத்தின் முதுகில் குத்தப்பட்ட நிகழ்வு. வழக்குத் தொடுத்த மாணவர் இருவரும் தொழிற்கல்வி கற்கச் செல்லவில்லை என்பது வேறு ஒரு தனிக்கதை. நூல் வெளியான அக்காலத்தில் நிகழ்ந்தவரைத்தான் இந்த நூல் குறிப்பிடுகிறது. சட்டம் திருத்தப் பட வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. மக்களின் தீர்ப்பை மக்களாட்சி கேட்க வேண்டும் என்று கூறி வெற்றி பெற்ற பிறகு என்ன செய்யவேண்டும் என்ற பல அறிவுரைகளோடு நூல் நிறைவுறுகிறது.
தமிழரின் அறப்போராட்டத்தைச் சான்றுகளுடனும் தரவுகளுடனும் பதிவு செய்துள்ளார் அன்பழகன். நூலின் இறுதிப்பகுதி இந்திய அரசியல் அமைப்புச்சட்ட வரைவைக் குடிமக்களின் உரிமை, அரசின் கடமை என்ற கோணத்தில் விரிவாகவும் நூலாசிரியர் அலசுகிறார். இந்த நூல், தமிழரின், தமிழகத்தின் வரலாற்றின் ஒரு பகுதி. 180 பக்கங்களில் தமிழரின் இடவொதுக்கீடு போராட்டத்தைப் பதிவு செய்யும் ஒரு சிறந்த வரலாற்று ஆவணம். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் தமிழக வரலாற்றைக் காட்டும் காலக் கண்ணாடி.
பிறகு நடந்தது என்ன?
ஒரு தீர்ப்பு சட்டப்படி சரி, ஆனால் அறத்தின் அடிப்படையில் பிழை என்றால் சட்டத் திருத்தம் ஒன்றுதான் மீண்டும் அறத்தை நிலை நிறுத்தும். ஆகவே, தீர்ப்பையடுத்து ஈ. வெ. ரா. பெரியாரின் தலைமையில், திருச்சியில் நடந்த இடவொதுக்கீடு குறித்த மாநாட்டில் இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இட ஒதுக்கீட்டு முறைக்காகச் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இங்குதான் இட ஒதுக்கீட்டில் பெரியாரின் பங்களிப்பின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இன்றும் இடவொதுக்கீட்டின் தேவையையும் அதன் வரலாற்றையும் அறியாதவர் எண்ணற்றவர் என்பது ஒரு பெரிய குறைபாடு. கட்சி வேறுபாடு இன்றி தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜரும் ஆதரவு அளித்தார். பெரியாரின் தலைமையில் எடுக்கப்பட்ட போராட்ட நடவடிக்கை இந்தியாவின் முதல் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியது, இடவொதுக்கீடு உரிமையை மீட்டுக் கொடுத்தது.
தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு நேரு தலைமையிலிருந்த மத்திய அரசை உலுக்கியது. போராட்டத்திலிருந்த நியாயம் உணரப்பட்டது. இந்தியா அரசின் முதல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த காலத்திலேயே இட ஒதுக்கீடு அளிக்கப்பட அரசியல் சட்டத்தில் 15(4) பிரிவு (ஆர்ட்டிக்கில் - 15(4)) என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. கல்வி மற்றும் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்கள் தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வரையறை உறுதி செய்யப்பட்டது. கல்வி மற்றும் சமூகவாழ்வில் முன்னேறவேண்டிய எந்த ஒரு வகுப்பினருக்கான திட்டங்களில் அரசின் எந்த ஒரு சட்டமும் தடை செய்ய முடியாத வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் பொருளாதார நிலை குறித்த அளவுகோலை நுழைக்கும் முயற்சி பொருத்தம் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவற்றுடன் பெண்கள் சொத்துரிமை விவாகரத்து உரிமை போன்றவற்றுக்கும் வழிவகுக்க அம்பேத்கர் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது, தனது எதிர்ப்பைக் காட்ட அவர் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.
ராபர்ட்-டி-நொபிலி (Robert de Nobili)என்ற இத்தாலியர் கிறித்துவ மதபோதகராக 1600களில் மதுரையில் சமயப் பணியாற்றினார். முதல் உரைநடை நூலைத் தமிழில் எழுதியவர் என்ற சிறப்புப் பெற்றவர் இவர். அத்துடன் தமிழ் நூல்கள் சிலவும் எழுதினார். தம்மை இத்தாலியப் பிராமணர் என்று கூறிக் கொண்ட இவர் மதுரை திருமலை நாயக்க மன்னரின் நல்லதோர் நண்பராகவும் விளங்கினார்.
1610ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22ஆம் நாள் நொபிலி எழுதிய கடிதமொன்று மதுரை நாயக்க மன்னரின் கல்வியமைப்பைப்பற்றி நமக்கு அறியத் தருகிறது. 'மதுரையில், 10,000 கக்கும் மேலான எண்ணிக்கையில் மாணவர்கள் கல்வி கற்றனர். அவர்கள் வகுப்பொன்றுக்கு 200 முதல் 300 வரை என்ற எண்ணிக்கையில் பல வகுப்புகளில் கல்வி கற்றனர். அவர்களெல்லோரும் பிராமணர்களே; அவர்களுக்கு மட்டுமே உயர்தரக் கல்வியைக் கற்பது தனிவுரிமையாக்கப் பட்டிருந்தது. அவர்கள் வாழ்வாதாரத்திற்குப் பொருள் தேடி அல்லல்படாது கருத்தூன்றிக் கல்வி கற்கும் பொருட்டு அவர்களுக்காக மன்னர் சிறந்த வகையில் கொடைகள் வழங்கியிருந்தார்' (History of the Nayaks of Madura, p.257.). இவ்வாறு இந்தியாவில் காலம் காலமாக மக்களின் வரிப்பணம் பார்ப்பனர் கல்வி என்பதற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது என்பதும், கல்வி கற்கும் உரிமையும் சமய சட்டங்கள் மூலம் அவர்களுக்கே அளிக்கப்பட்டிருந்தது என்பதும்தான் இந்தியாவின் சமூக அநீதியின் வரலாறு. வைதீக சமயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்.
கடந்த கால வரலாற்றை ஊன்றிப் படிப்போருக்குத் தெரியும், இட ஒதுக்கீடு என்பது ஒரு சலுகை அல்ல! அது ஒரு நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கான உரிமையும் பங்கீடும் என்ற அறநெறி என்பது.
நூல் விவரம்:
வகுப்புரிமைப் போராட்டம், க. அன்பழகன், 1951; மக்கள் மன்றம், பவழக்காரத்தெரு, சென்னை.
[ https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh8lZxy&tag=வகுப்புரிமைப்%20போரட்டம்#book1/ ]
படங்கள் உதவி: நூலில் காணப்படும் படங்கள் மற்றும் விக்கிப்பீடியா
செய்தி பெற்ற தளங்கள்:
[1] The State Of Madras vs Srimathi Champakam; on 9 April, 1951
https://indiankanoon.org/doc/149321/
[2] சமூகநீதி வரலாற்றைச் சுமக்கும் தமிழ்நாடு கடந்துவந்த பாதை: இடவொதுக்கீடு: 150 ஆண்டுக்கால வரலாற்றுத் தொகுப்பை கூர்மை வெளியிடுகிறது, 2018 செப். 30
https://www.koormai.com/pathivu.html?vakai=5&therivu=350
[3] History Of The Nayaks Of Madura, Sathyanath Aiyar, 1941, pp.257
https://archive.org/details/in.ernet.dli.2015.156898/page/n267/mode/2up
நன்றி: சிறகு
Mar 14 & 21, 2020
#நூல் மதிப்புரை, #சிறகு, #Themozhi
நூல் மதிப்புரை, சிறகு







