ராமானுஜரின் மேல்கோட்டைப் பயணம்
ராமானுஜர் வாழ்ந்த காலம் முதலாம் குலோத்துங்கன் காலம் என்பதை வரலாற்றுச் செய்திகள் மூலம் அறிய முடிகிறது. ராமானுஜருடன் சோழ மன்னருக்குத் தனிப்பட்ட வகையில் மோதல் இருந்திருக்கலாம், இது நடந்த காலம் கிபி 1100 களின் தொடக்கமாகவும் இருந்திருக்கலாம். வைணவக் கோயில்களுக்குக் கொடை வழங்கிய மன்னர் இவர் என்பதால் மன்னர் ஒரு வைணவப் பெரியாருடன் கொண்ட மோதலை மதவெறிச் செயல் என்று கூற வாய்ப்பில்லை.
சூழ்நிலை சரியில்லை என்று ராமானுஜர் சோழநாட்டிலிருந்து வெளியேறி இன்றைய கர்நாடகா பகுதிக்குச் சென்றார் என்பதற்கு கர்நாடகா / ஹோய்சாள மன்னர் பக்கத்துத் தரவுகளும் உண்டு. ஹோய்சாள மன்னர் பிட்டிதேவா / விஷ்ணுவர்தனன் (1108-1152) என்பவரைச் சமணத்திலிருந்து வைணவத்திற்கு மாற்றினார் ராமானுஜர் என்பது கர்நாடக நாட்டு வரலாறு.
மன்னரின் மகளுக்கு வயிற்றுவலி போல அவளைத் துன்புறுத்திய ஒரு தீராத நோயை ராமானுஜர் தீர்த்தார் அதனால் மன்னர் மதம் மாறினார் என்பது ஒரு கர்நாடகா கதை.
ராமானுஜரை தப்புவித்த அவருடைய சீடர் கூரத்தாழ்வார் கண்கள் சோழ மன்னர் ஆணையால் குருடாக்கப்பட்டன என்று மற்றொரு தமிழ்நாட்டுக் கதையும் உண்டு.
அடிப்படையில், சுங்கம் தவிர்த்த சோழர் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் ராமானுஜர் மேல்கோட்டைக்குச் சென்றார் என்பது உறுதியாகத் தெரிகிறது. அந்நாட்டு மன்னரைச் சந்தித்து அவரை வைணவத்திற்கு மாற்றினார் என்பதும் தெரிகிறது. விஷ்ணுவர்தனன் என்ற பெயரே ராமானுஜர் பிட்டி தேவா மன்னருக்குச் சூட்டிய பெயர்.
(குறிப்பு: ராமானுஜர் சோழ நாட்டைவிட்டு ஏன் போனார் எதற்காகப் போனார் என்பதும் வேறு ஓர் ஆய்வு; எவ்வாறு ஹோய்சாள மன்னரை மதம் மாற்றினார் என்பதும் வேறு ஓர் ஆய்வு).
அவ்வாறு சென்றவர் ஈரோடு சத்தியமங்கலம் வழியாகச் சென்ற பொழுது அப்பகுதி வேட்டுவ அரசரும் அவருடைய மக்களும் ராமானுஜருக்கு உணவளித்து அவரைக் கொள்ளேகலம் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள். வைணவப் பெரியார் ஒருவரைக் காப்பாற்றிய அவர்களுடைய செயலை மெச்சி ஹோய்சாள மன்னர் அவர்களுக்கு நான்கு கிராமங்களையும் அவற்றுடன் திருக்கோயில் மற்றும் ஒரு திருக்குளம் ஆகியனவற்றை வழங்கினார் என்று கொங்கு நாட்டுச் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
[This document was provided by Dr. Valaiparameswaran. MD]
இச்செய்திக்கு சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள மெக்கன்சி ஆவணங்கள் ஒன்றிலும் சான்று இருப்பதாகக் கணக்கம்பாளையம் கோயில் திருப்பணி அறிவிப்பில் கூறப்படுகிறது. இச்செய்தி குறித்து மெக்கன்சி ஆவணத்தில் இருப்பது தொல்லியல் குறிப்புகளா அல்லது வாய்வழியாகப் பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்ட தகவலா என்பது விரிவாக அறிய வேண்டிய ஒன்று. விஷ்ணுவர்தனன் சோழர் ஆட்சியில் இருந்த சில கொங்குப் பகுதிகளையும் கங்கபாடி பகுதிகளைக் கைப்பற்றி நாட்டை விரிவாக்கிய மன்னன் என்பதும், ஹோய்சாள மன்னர்களில் சிறந்தவன் என்பதும் வரலாறு. அப்பகுதி விஷ்ணுவர்தனன் ஆட்சியின் கீழ் இருந்ததால்தான் அவராலும் வேட்டுவ குடி மக்களின் செயலைப் பாராட்டி கிராமங்களைக் கொடையாகக் கொடுக்க முடிந்துள்ளது.
இச்செய்தியின் அடிப்படையில்; ராமானுஜர் திருவரங்கத்தில் இருந்து காவிரியின் வடகரையில் பயணப்பட்டு ஈரோடு சத்தியமங்கலம் வழியாகக் கொள்ளேகலம் சென்று சேர்ந்தார் என்பதை யூகிக்க முடிகிறது.
தில்லை கோவிந்தராஜர் சிலையை கடலில் வீசியதாகக் கூறப்படும் நிகழ்ச்சியும் அக்காலத்தில் வாழ்ந்த சோழ அரசவைப் புலவர் ஒட்டக்கூத்தரால் அவருடைய நூல்களில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால்; பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் நிறுவப்பட்ட தில்லைக் கோவிந்தராஜர் சிலையைக் கடலில் மூழ்கடித்த சோழ மன்னர் இரண்டாம் குலோத்துங்கர் ஆவார். இவர் அநபாயச் சோழர் என்றும் கிருமிகண்ட சோழர் என்றும் அழைக்கப்படுவார். இவர் முதலாம் குலோத்துங்கரின் பேரன். இவரும் மதவெறியால் செய்யவில்லை. சிதம்பரம் நடராஜர் கோயிலைச் சீரமைக்கும் நோக்கில் செய்தார் என்றும் கூறுகிறார்கள். (ஆனால்; அரசன் ஒரு பாழ்பட்ட படிமத்தை நீக்கி, அதைக் கடலில் போட ஏற்பாடு செய்தது அரசவைப் புலவர் பாடல்களில் மீண்டும் மீண்டும் ஒரு சாதனை போலக் குறிப்பிடும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது அல்ல.)
சோழ வேந்தர் கால வரிசை :
குலோத்துங்க சோழன் I – கி.பி. 1070-1120
விக்கிரம சோழன் – கி.பி. 1118-1135
குலோத்துங்க சோழன் II – கி.பி. 1133-1150
இராசராச சோழன் II – கி.பி. 1146-1163
ஒட்டக்கூத்தரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு. ஒட்டக்கூத்தர், விக்கிரமசோழன் காலத்தில் அவைப்புலவராக இருந்துள்ளார். தொடர்ந்து அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும், பிறகு அவனது மகன் இராசராசன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். இம்மூவர் காலத்தைக் கி.பி. 1118-1163 வரை என்று வரலாறு குறிக்கிறது. அப்பொழுது இவர் அம்மூவர் மீதும் ‘விக்கிரம சோழனுலா’, ‘குலோத்துங்க சோழனுலா’, ‘இராச ராச சோழனுலா’ என்று இயற்றிய உலாக்கள் “மூவருலா” என்று அழைக்கப்படுகிறது. ஒட்டக்கூத்தர் இயற்றிய மற்றொரு நூல் - தக்கயாகப்பரணி.
இணையக்கல்விக்கழகம் மூவருலா நூலுக்குத் தரும் விளக்கத்தில் திருமாலை கடலில் மூழ்கடித்த செய்தியைக் காணலாம் (பார்க்க: https://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01244l2.htm);
மற்றும்: ஒட்டக்கூத்தர் அவர் இயற்றிய மூவருலா (https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZI2/mode/2up) நூலிலும் இச்செய்தியைக் குறிப்பிடுகிறார்.
தில்லைக் கோயிலில் இருந்த திருமால் மூர்த்தியை எடுத்துக் கடலில் மூழ்கச் செய்தான் சோழன் என்பதைக் குலோத்துங்க சோழனுலா மற்றும் இராசராச சோழனுலா நூல்களில் கீழ்க்கண்டவாறு ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார்
“தில்லைத் திருமன்றின் முன்றிற் சிறுதெய்வத், தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து - மல்லற்"
(ஒட்டக்கூத்தர் இயற்றிய - குலோத்துங்க சோழனுலா கண்ணி - 39)
"பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பறுத்து, முன்னைக் கடலகழின் மூழ்குவித்த - சென்னி."
(ஒட்டக்கூத்தர் இயற்றிய - இராசராச சோழனுலா கண்ணி - 33)
தக்கயாகப்பரணி நூலில் :
"முன்றிற் கிடந்த தடங்கடல்போய் முன்னைக் கடல்புகப் பின்னைத்தில்லை, மன்றிற் கிடங்கண்ட கொண்டல்” :
(ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப்பரணி-777)
எது எப்படி இருந்தாலும் இச்செயல்கள் வைணவர்களுக்குத் துயரத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை மறுக்க முடியாது. தாத்தா ராமானுஜரிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கும் பேரன் கோவிந்தராஜர் சிலையைக் கடலில் போட்டதற்கும் இடையே உள்ள கால இடைவெளி அரை நூற்றாண்டுக்கும் குறைவாக இருக்கலாம்.
#வரலாறு, #Themozhi

