ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்
பழந்தமிழர் ஆவணித் திங்களையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தனர்.
முன்னுரை:
சித்திரை ஆண்டின் முதல் மாதமாக இன்றைய வழக்கத்தில் இருப்பது பிற்காலத்தில் நிகழ்ந்த ஒரு மாற்றமாகும். அது வைதீக சமயம் தமிழக மண்ணில் ஆணித்தரமாகக் காலூன்றியதன் காரணமாக ஏற்பட்ட ஆரியப் பண்பாட்டுத் தாக்கத்தின் விளைவு. அதனால் வியாழவட்ட 60 ஆண்டுகள் 'சுழற்சி முறைக் கணக்கிடல்' அடிப்படையில், வடமொழி ஆண்டு பெயர்கள் கொண்ட காலக்கணிப்பு முறை அரச ஆதரவுடன் தமிழகத்தில் நடைமுறைக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டது எனலாம். வைதீகத்தின் தாக்கம் கொண்டுவந்த விளைவே சித்திரைத் திங்கள் புத்தாண்டு வழக்கமாகும்.
தமிழக அரசின் முயற்சியாக, வடமொழி ஆண்டுப்பெயர்கள் கொண்ட 60 ஆண்டு சுழற்சி முறையைக் கைவிட்டு, திருவள்ளுவர் பிறப்பைத் தொடக்கமாகக் கணக்கில் கொண்ட தொடர் 'வளர்ச்சி முறைக் கணக்கிடல்' 1971ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, 1981 இல் நடைமுறைக்கு வந்தது. தைத்திங்கள் இந்தத் திருவள்ளுவர் ஆண்டின் புத்தாண்டின் தொடக்கமாக 2008ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்டது. இதை ஏற்காத பிரிவினர் அதை மறுதலித்தார்கள். அதுமட்டுமின்றித் தொடர்ந்து வடமொழிப் பெயர் கொண்ட ஆண்டுகளின் பெயர்களை வலிந்து தமிழ்ப்படுத்திப் புழக்கத்திற்கு விட்டார்கள். இருப்பினும் தமிழ்ப் புத்தாண்டு இது என்று தொடர்ந்து ஒரு வடமொழி ஆண்டு பெயரை அறிவிக்கும் அவல நிலை இன்றும் தொடர்ந்தே வருகிறது.
புத்தாண்டு குறித்த சர்ச்சைகள்:
ஒவ்வொரு தைத்திங்களும் பொங்கல் பொங்குவதுடன் பொங்கல் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக 'எது தமிழ்ப் புத்தாண்டு?' என்ற பட்டிமன்றம் போன்ற விவாதங்களும் வழக்கத்திற்கு வந்தது. அது அத்துடன் நிற்காது சித்திரைத் திங்கள் தொடக்கத்தில் மீண்டும் ஒரு பாட்டம் விவாதங்கள் தொடங்கிவிடும். ஆனால் இரு பிரிவினரிடமுமே 'தைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்' என்பதற்கோ, அல்லது 'சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்' என்பதற்கோ உறுதியான சான்றுகள் எதுவுமே இல்லை. இந்த மாதம்தான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்று உறுதியாக அறுதியிட்டு நேரடியாகக் கூறாத கல்வெட்டுப் பதிவுகள், இலக்கிய வரிகள் போன்றவற்றை எல்லாம் இயன்றவரை மேற்கோள் கொடுத்து வாதிடுவார்கள்.
சொல்லப் போனால் தமிழ்த் திங்களின் கால அளவீட்டு முறையை இன்று வழக்கத்தில் பின்பற்றுவோர் பொதுமக்களில் எவரும் இல்லை என்பதுதான் உண்மை. அது இறைவழிபாட்டுடன் தொடர்புடையதாக, அதாவது வைதீகத்துடன் தொடர்புடையதாகக் கோவில்களில் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. இன்று என்ன தமிழ் மாதம் அல்லது நாள் என்று ஒரு நூறு பேரிடம் கேள்வி கேட்டால் ஒரு 3 விழுக்காட்டினர் கூட சரியான விடை அளிக்க இயலாத நிலைதான் இன்றைய நடைமுறை. இருப்பினும் இது ஒரு தன்மானப் பிரச்சனையாகத் தமிழர் இடையே தொடர்கிறது. இந்த விவாதக் களத்தில் இந்த இருபிரிவினர் மட்டுமல்ல, மற்றொரு பிரிவினரும் உள்ளனர். அவர்கள் ஆவணிதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், தொல்காப்பியம் மூலம் அவ்வாறு பொருள் கொள்ள இயலும் என்று கூறும் பிரிவினர். இவர்கள் பலநாள் படுக்கையில் இருக்கும் நோயாளி போல வலுவிழந்த நிலையில் இடையில் வந்து, நலிவுற்ற குரலில் முடிந்தவரை முனகிப் பார்த்துவிட்டு தங்கள் வாதங்கள் எடுபடாது என்று காணாமல் போய்விடுவார்கள். ஆனால், தை, சித்திரை போன்ற மற்ற பிரிவினருக்குத் தங்கள் கருத்து அடிப்படைக்கு வலுவான சான்றுகள் ஏதும் இல்லாவிடினும் வாதக் களமிறங்கி வன்மையாக ஆடுவார்கள். எதிரணியைப் பலமாகச் சொற்களால் தாக்குவார்கள்.
இன்றைய வழக்காறுகள், இலக்கண, இலக்கிய, நிகண்டுகள் மற்றும் கல்வெட்டுகள் தரும் காலக்குறிப்புகள்:
ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்குச் சான்றுகளாக அமையும் இன்றைய 1. வழக்காறுகள், 2. இலக்கண, 3. இலக்கிய, 4. நிகண்டுகள் மற்றும் 5. கல்வெட்டுகள் தரும் காலக்குறிப்புகளை அடுத்துக் காணலாம் ...
1. கொல்லம் ஆண்டு வழக்காறு:
தமிழரிடம் இருந்து பிரிந்த சென்ற பழந்தமிழ் மலையாள உறவுகள் தங்களுக்கென பொ.ஆ. 825ஆம் ஆண்டு முதல் புதியதாகக் கட்டமைத்துக்கொண்ட 'கொல்லம் ஆண்டு' என்ற வளர்ச்சி முறைக் காலக் கணக்கிடல் முறையில் ஆவணியைத் தொடக்கமாகக் கொண்டிருக்கும் வழக்கம் ஒரு சான்று.[1] இவ்வழக்கம் பழந்தமிழர் பண்பாட்டின் எச்சம் எனலாம். கேரளத்தில் ஆகஸ்ட் 17ஆம் நாள் வாக்கில் புத்தாண்டு தொடங்கும்.
2. தொல்காப்பிய நூற்பா:
தொன்மையான தமிழ் நூலான தொல்காப்பியத்தில் அகத்திணை இயலில் ஐவகை நிலங்களுக்குரிய பொழுதுகளை வகுத்துரைக்கும் பொழுது;
காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்
பனிஎதிர் பருவமும் உரித்து எனமொழிப
வைகுறு விடியல் மருதம்; எற்பாடு
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானும் உரித்துஎன மொழிப
(தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல்: 6 — 10)
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளை கார் காலத்தினைத் தொடக்கமாகக் கொண்டு குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.
இத் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரும் (இவரது காலம் பொ.ஆ.14-ஆம் நூற்றாண்டு) இதன் பொருளைத் தெளிவாக விளக்கிக் கீழ்க்காணும் உரை தந்துள்ளார்.
"காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டுமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்."
சிங்கவோரை = ஆவணித்திங்கள், கற்கடகவோரை = ஆடித் திங்கள்; அதாவது ஆவணி முதலாக ஆடி இறுதியாக உள்ள காலம் ஓர் ஆண்டாம், ஆதலினால் அவற்றை இரண்டிரண்டு மாதங்கள் கொண்ட கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறுவகைப் பருவங்கள் கொண்டதாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது[2].
3. சிலப்பதிகாரம்:
சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 — 125), பகுதியில் இளங்கோவடிகள் கார் முதலிய ஆறு வகைப் பருவங்களையும் முறையே வரிசைப்படுத்தியே எழுதியுள்ளார். மதுரை மாநகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் படுக்கையில் கிடந்து பழைய நினைவுகளில் மனம் செலுத்தினராம். தங்களின் நினைவோட்டத்தில் அப்பெண்கள் கார்காலம், கூதிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என வரிசையாக ஒவ்வொரு கால நிகழ்வுகளையும் நினைவு கூர்வதாக இளங்கோவடிகள் சொல்லிச் செல்கிறார் [3].
'கார்' அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் (96)
குறுங்கண் அடைக்குங் 'கூதிர்’க்காலையும் (101)
வெண் மழை அரிதில் தோன்றும் 'அச்சிரக்காலையும்' (105)
'பங்குனி' முயக்கத்துப் 'பனியரசி' யாண்டுளன் (112)
'இன்னிள வேனில்' யாண்டுளன் கொல் (117)
'கோடையொடு' புகுந்து கூடலாண்ட வேனில் வேந்தன்(124)
[அச்சிரக்காலையும்=முன்பனிக் காலமும்; பங்குனி, பனியரசு =பின்பனிக் காலமும்]
இக்கால வரிசை தொல்காப்பியம் குறிப்பிடும் அதே வரிசையில் அமைவதைக் காணலாம்.
4. நிகண்டுகள்:
I. திவாகர நிகண்டு:
ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு மற்றொரு உறுதியாக, எழுத்தில் பதியப்பட்ட சான்றைச் சேந்தன் திவாகரம் என்னும் திவாகர நிகண்டு கொடுக்கிறது [4].
அறு வகைப் பருவமாவன
காரே, கூதிர், முன் பனி, பின் பனி,
(சீர்) இள வேனில், முது வேனில் (என்று ஆங்கு)
இரு மூன்று வகைப் பருவம்; (அவை தாம்
ஆவணி முதலா இரண்டு இரண்டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே).
(6 பெயர்கள்) [சேந்தன் திவாகரம்-தெய்வப் பெயர் தொகுதி-134]
இருதிங்கள் சேர்ந்த காலப்பகுதி பருவம் எனப்படும். ஆவணி தொடங்கி இரண்டிரண்டு மாதங்களாக முறையே கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என ஆறு பருவங்களைக் கொண்டது ஓர் ஆண்டு என்பதாகவும், கார் பருவத்தை முதன்மையாக வைத்து அது தொடங்கும் ஆவணி முதலாக வைத்துப் பிற மாதங்களை எண்ணியுள்ளனர் என்பதை இப்பாடல் கூறுகிறது.
சேந்தன் திவாகரம் என்னும் திவாகர நிகண்டும் அதன் காலமும்: சேந்தன் திவாகரம் நிகண்டு என்றால் என்ன? அது எந்தக் காலத்து நூல்? யார் எழுதியது? போன்ற விவரங்கள் அறிந்திருப்பவர் எண்ணிக்கை சராசரி தமிழரில் குறைவே. சேந்தன் திவாகரம் என்பது ஒரு நிகண்டு, இது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல். அதாவது இக்கால வழக்கில் அரிய சொற்களின் பொருளை அறிய உதவும் அகராதி நூல் என்பதற்கு நிகரானது. ஒரு சொல்லுக்கு நிகரான சொற்களைக் கொடுப்பதால் நிகண்டு என்று அழைக்கப்பட்டது என்றும் பொருள் தரப்படுகிறது, நிகண்டு ஒரு வடமொழிச் சொல் என்றும் கூறுவாருண்டு. நிகண்டு என்ற சொல் பிற்காலச் சொல், முன்னர் இத்தகைய பொருள் விளக்கம் தரும் நூல்கள் 'உரிச்சொற் பனுவல்' என்று தொல்காப்பியர் அடியொற்றி சொற்களுக்கு விளக்கம் தரும் நூல்களாக அறியப்பட்டன. நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது அருஞ்சொற்களுக்கு பொருள்கூறும் தொல்காப்பியமே. நிகண்டுகளை மனனம் செய்து முற்றிலும் அறிந்திருப்பது முற்காலத் தமிழ்க் கற்றலுக்கும் மொழிப்புலமை பெறுவதற்கும் அடிப்படையாக இருந்தது[5].
சேந்தன் திவாகரம், நாகப்பட்டினம் அருகே உள்ள அம்பல் என்னும் சிற்றூரில் வாழ்ந்த சேந்தன் என்ற சிற்றரசன் அல்லது வள்ளலின் ஆதரவில் திவாகரன் என்ற சமண முனிவரால் தொகுக்கப்பட்டதற்குச் சேந்தன் திவாகரம் நூலில் சான்றுகள் உள்ளன.[6] திவாகர முனிவரை சைவர் என்று குறிப்பிடுவதைப் பிழை என்று பேராசிரியர் வையாபுரி பிள்ளை தனது 'தமிழிலக்கிய சரித்திரத்தில் காவிய காலம்' என்ற நூலில் (பக்கம் 164) மறுத்துள்ளார்.[7]
நிகண்டுகளில் பழமையானது திவாகர நிகண்டு. இதன் காலம் ஏழாம் அல்லது எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப் பட்டதாகப் பல ஆய்வாளர்களால் வெவ்வேறுவகையில் கணிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் காலம் 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.[7] இந்த நிகண்டே முதல் நிகண்டு என்று ஆய்வாளர் பலரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்நூல் ஆதி திவாகரம் என்னும் நூலைத் தழுவி எழுதியதாகக் கருதப்படும் கூற்றுக்குச் சான்று இல்லை என்று மறுக்கப்படுவதுடன், சேந்தன் திவாகரம் நூலின் மற்றொரு பெயரே ஆதி திவாகரம் என்று கூறப்படுகிறது.[8]
திவாகர நிகண்டின் 12 தொகுதிகளில், 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் தமிழ்ச் சொல்லுக்கு நிகரான பொருள் தரும் பல வடமொழிச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பல நிகண்டுகள் பிற்காலத்தில் வீரமாமுனிவரின் சதுரகராதி வரையும் அதற்குப் பின்னரும் கூட தோன்றியுள்ளன. சேந்தன் திவாகரம் நூலைத் தழுவி இருபதாம் நூற்றாண்டு வரை சுமார் 25 நிகண்டுகள் வந்திருப்பது தமிழின் சிறப்பாகக் கூறப்படுகிறது.[7]
அவற்றில் குறிப்பிடத்தக்கவை பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு போன்ற நிகண்டுகளாகும்.
திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயற்றியது) (9 ஆம் நூற்றாண்டு)
பிங்கல நிகண்டு (பிங்கல முனிவர் இயற்றியது) (10 ஆம் நூற்றாண்டு)
சூடாமணி நிகண்டு (மண்டல புருடர் இயற்றியது) (16 ஆம் நூற்றாண்டு)
முழுமையான ‘சேந்தன் திவாகரம்’ 1923ஆம் ஆண்டில் முதன் முதலில் அச்சுவடிவம் பெற்றது, பின்னர் 1958-ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது. சேந்தன் திவாகரம் பிங்கலம் சூடாமணி, ஆகிய நிகண்டுகளின் தொகுதி சாந்தி சாதனா பதிப்பாக 2004ஆம் ஆண்டு வெளியானது.[4]
ஆய்வாளர்களின் குறிப்புகளிலிருந்து பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதே காலத்தால் முற்பட்ட நிகண்டு நூலான சேந்தன் திவாகரம் என்பது தெளிவாகிறது. இந்த நூல் இக்காலத்திற்கு முற்பட்ட தமிழக இலக்கிய வழக்காறுகளைப் பதிவு செய்யும் ஆவணமாகத் திகழ்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இருப்பதற்கு வழியில்லை.
ஆண்டின் தொடக்கத்தைக் கார்ப்பருவத்தினை முதலாகக் கொண்டு, ஆவணி மாதத்திலிருந்து தொடங்கினர் பழந்தமிழர். கார்காலம் தொடங்கும் காலமான ஆவணித்திங்கள், தொல்காப்பியம் அகப்பொருள் விளக்கம் பகுதியில் இடம் பெற்றுள்ளது போலவே திவாகர நிகண்டிலும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு திங்களாகக் காலத்தைப் பகுத்த முறையை “ஆவணி முதலா இரண்டிரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே" என்றுதான் திவாகரப் பாடல் குறிப்பிடுகிறது.
மேலும், குறிப்பிடத்தக்க வகையில் சித்திரையைத் துவக்கமாகக் கொள்ளும் வசந்தம் என்ற சொல்லே திவாகர நிகண்டில் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி காலத்தை வகைப்படுத்தும் முறையான வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம் என 'இருதுகள்' அல்லது பருவ வகைப்பாடும் [6 Ritu (season): Vasant Ritu (Spring), Grishma Ritu (Summer), Varsha Ritu (Rain), Sharad Ritu (Autumn), Hemant Ritu (Pre-winter), and Shishir or Shita Ritu (Winter)] திவாகர நிகண்டில் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகண்டு உருவான காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஆட்சிகளும் சமயக் காட்சிகளும் மாறியதும், அவற்றின் எதிரொலியாகத் தமிழரின் காலக்கணக்கிடலில் மாற்றம் நிகழ்ந்துள்ளதும் இக்குறிப்பிலிருந்து தெளிவாகிறது.
II. பிங்கல நிகண்டு:
சேந்தன் திவாகரம் நிகண்டின் செய்தியைத் தொடர்ந்து பிங்கல நிகண்டு தரும் செய்திகளையும் காணலாம். சேந்தன் திவாகரம் செய்த திவாகர முனிவரின் மகன் பிங்கல முனிவர் வரையறுத்து விரித்துச்செய்த பிங்கல நிகண்டு சங்க மருவிய காலத்து நிகண்டு என்று குறிப்பிடப்படுகிறது. இதைப் பிங்கல நிகண்டின் சிறப்புப் பாயிரமும், "செங்கதிர் வரத்தாற் றிவாகரன் பயந்த பிங்கல முனிவனெனத் தன் பெயர் நிறீஇ-உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை" என்று குறிப்பிடுகிறது. சூரியன் வரத்தால் வந்த திவாகர முனிவர் பெற்ற பிங்கல முனிவனானவன் பிங்கலம் என்று தன்பெயரைத் தன்நூலுக்குத் தந்து மக்களிடத்தும் அன்பு கூர்ந்து நூல் செய்யுங்காலத்தில், என்பது இதன் பொருள்.
பிங்கல நிகண்டின் சிறப்பை, “செங்கதிர்வரத்திற்றோன்றுந் திவாகரர் சிறப்பின் மிக்க, பிங்கலருரை நூற்பாவிற் பேணினர் செய்தார் சேர, இங்கிவை இரண்டுங் கற்க எளிதலவென்று சூழ்ந்து” எனக் குறிப்பிடும் மண்டல புருடனின் சூடாமணி நிகண்டாலும், ஆதி திவாகரம் இறப்பப் பிங்கலம் நிலைபெற்றுள்ளது என்பது “பிங்கல முதலா நல்லோருரிச்சொலி னயந்தனர் கொளலே” எனவரும் நன்னூலாலும் உணரலாம் எனத் தமிழ்ப்புலவர் வீ. தி. சிவன் பிள்ளை எடுத்துரைக்கிறார்.[9] இந்த வரிகளிலிருந்து மண்டல புருடர் சூடாமணி நிகண்டு எழுதுகையில் முதன்மையான நிகண்டுகளாகக் கருதப் பட்டவை திவாகரரும் அவர் மகன் பிங்கலரும் உருவாக்கிய இரு நிகண்டுகளும் என்பது தெரிகிறது. அத்துடன் பிங்கல நிகண்டு உருவான பின்னர் சேந்தன் திவாகரம் பயன்பாடு குறைந்து பிங்கல நிகண்டு அத்தேவையை நிறைவு செய்ததையும் அறிய முடிகிறது.
சேந்தன் திவாகரம் நிகண்டைத் தொடர்ந்து தோன்றிய பிங்கல முனிவர் செய்த பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு" நூலும் ஆவணி முதலாகக் காலம் கணக்கிடப்பட்டதை அறிவிக்கிறது. அத்துடன் 'இருது' என்பதும் பருவம் என்ற சொல்லுக்கு நிகரானது (பருவமும் இருதுவுமொருபொருட்கிளவி) என்றும் குறிப்பிடுகிறது.
கார் காலத்தைத் தொடக்கமாகக் கொண்டு கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் எனப் பருவங்கள் இரண்டிரண்டு திங்கள்கள் கொண்டதாக ஆறு பருவங்கள் குறிப்பிடுவது வழக்கம் போல; வசந்த காலத்தைத் தொடக்கமாகக் கொண்டு வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம் என இருதுகள் இரண்டிரண்டு திங்கள்கள் கொண்டதாக ஆறு இருதுகள் குறிப்பிடும் வழக்கத்தையும் காட்டுகிறது. [9]
இதில் இருக்கும் வியக்கத்தக்கச் செய்தி என்னவெனில், இந்த இருது வரிசையில் இடம் பெறும் வருடம் என்பதன் பிறப்பும் ஆவணித் திங்கள்தான். ஆக, வருஷப் பிறப்பு என்றாலும் அது மீண்டும் ஆவணி என்றே அமைகிறது. ஆண்டைக் குறிக்கும் வடமொழிச் சொல் 'வருஷ' (varSa) என்பதே மழை/கார்காலத்தின் தொடக்கத்தைத்தான் குறிக்கிறது. வடமொழியில் ஆண்டு, மழை ஆகியவற்றுக்கான சொல் (varSa=year; varSA=rain) வருஷ என்றே இருப்பது தற்செயலான ஒற்றுமையாக இருக்க வழியில்லை. கார்காலமே முற்காலத்தில் பரந்துபட்ட இந்திய மண்ணின் பெரும்பாலான பகுதிகளில் ஓர் ஆண்டின் தொடக்கமாக இருந்திருக்கக் கூடிய வாய்ப்பிருந்திருக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளலாம். பருவகால வகைப்பாடுகள் குறித்து விரிவாக கீழ்க்காணும் சூத்திரங்கள் விவரிக்கின்றன.
பிங்கலநிகண்டு: முதலாவது 'வான்வகை' - சூத்திரங்கள்:
பருவமும் இருதுவும் பகரில் ஒன்றே. (208)
அறுவகைப் பருவ காலம்
காரே, கூதிர், முன் பனி, பின் பனி,
சீர் இளவேனில், முதுவேனில் என்று ஆங்கு
இரு மூன்று வகைப் பருவம்தானே. (6 பெயர்கள்) (209)
அவைதாம் ஆவணி முதலா இரண்டு இரண்டாக
மேவிய திங்கள் எண்ணினர் கொளலே. (210)
இந்த சூத்திரங்களுக்கு அடுத்து வருவது ...
அறு வகை இருது
வசந்தம், இரீடம், வருடம், சரமே,
ஏமந்தம், சிசிரம், என இருது ஆறு ஆகும். (6 பெயர்கள்) (211)
அவை தாம் சித்திரை முதலாச் செல் மாதம்
இரண்டா வைத்தன எண்ணிக் கொள்க என்ப. (212)
பிங்கலநிகண்டு: இரண்டாவது 'வானவர்' வகை - சூத்திரங்கள்:
பருவமும் இருதுவும் ஒருபொருட்கிளவி
அறுவகைப் பருவகாலப் பெயர் -
கார்,கூதிர், முன்பனி, பின்பனி,
இளவேனில், முதுவேனில்.
அவைதாம் - ஆவணி, புரட்டாதி கார்;
ஐப்பசி, கார்த்திகை கூதிர்;
மார்கழி, தை முன்பனி;
மாசி, பங்குனி பின்பனி;
சித்திரை, வைகாசி இளவேனில்;
ஆனி, ஆடி முதுவேனில்.
அறுவகை இருதுவின் பெயர் -
வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம்.
அவைதாம் - சித்திரை, வைகாசி வசந்தம்;
ஆனி, ஆடி கிரீடம்;
ஆவணி, புரட்டாதி வருடம்;
ஐப்பசி, கார்த்திகை சரம்;
மார்கழி, தை ஏமந்தம்;
மாசி, பங்குனி சிசிரம்.
III. சூடாமணி நிகண்டு:
சூடாமணி நிகண்டு இந்த வரிசையில் காலத்தால் பிற்பட்ட நிகண்டு ஆகும். பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது சூடாமணி நிகண்டு. விருத்தப்பாவால் ஆன இந்நூல் 12 பிரிவுகளின் கீழ், 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.[10]
ஆவணி முதல் இரண்டிரண்டு மாதம்
ஆகிய அறுவகைப் பருவம்
பரவிய காரே, கூதிர்,
முன், பினிற் பனிகளோடு,
விரவிய இளைய வேனில்,
விரைந்திடு முதிர்ந்த வேனில்,
மருவும் "ஆவணியே ஆதி"
மற்று இரண்டு இரண்டு மாதம்
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து
பார்த்திடின் வாய்த்த பேராம். (6 பெயர்கள்) (95)
ஆண்டின் தொடக்கம் என்பதை "ஆவணியே ஆதி" என்ற சொற்றொடரின் மூலம் 16 ஆம் நூற்றாண்டின் சூடாமணி நிகண்டு அறுதியிட்டுக் கூறுவதைக் காணமுடிகிறது.
5. திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள்:
திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுகளை அவை வெட்டப்பட்ட காலமான 9ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டுவரை காலக்கோட்டில் வரிசைப்படுத்தி ஆராய்ந்ததில்; பிரபவ முதல் அட்சய என்று வடமொழியில் பெயரிடப்பட்டுள்ள “அறுபது வியாழ வட்ட ஆண்டுகள்” கொண்ட கணக்கு விஜயநகர மன்னர்கள் ஆட்சியில்தான் தொடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.[11] இந்தக் காலக் குறிப்பு மாற்றம் விஜயநகர ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் தொடங்கித்தான் திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கிறது. விஜயநகர ஆட்சிக் காலத்திற்கு முன்னர், இந்தப் பேரரசின், இந்த மன்னரின், இத்தனையாவது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது என்று குறிப்பிடும் முறைதான் கல்வெட்டுகளில் முன்னர் வழக்கமாக இருந்திருப்பது தெரிகிறது.
முடிவுரை:
எனவே ஆரூடம் பார்க்க வழக்கிலிருந்த ஆரிய வைதீகப் பண்பாட்டின் அறுவகை இருது (வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம்) என்ற காலக் கணக்கிடல் முறை, தமிழ் நாட்டை ஆண்ட அந்நியர்களான நாயக்கர்கள் ஆட்சிக் கால கட்டத்தில் கோயில் எல்லையைக் கடந்து பொதுமக்களின் வாழ்வுமுறையில் நுழைந்துள்ளது. அதுவரை வழக்கத்திலிருந்த ஆவணிப் புத்தாண்டு முறையை நீக்கி வைதீக சித்திரைப் புத்தாண்டு வழக்க முறைக்கு மாற்றியது என்றுதான் இந்த மூன்று நிகண்டுகளின் செய்திகளையும் ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் முடிவெடுக்க வேண்டியுள்ளது. மேலும், 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தோன்றிய இலக்கியங்களையும், நிகண்டுகளையும் ஆராய்வதன் மூலம் இதை உறுதி செய்யலாம். இம்மாற்றம் சோதிட நாட்காட்டியின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றம் என்பதும் தெளிவாகிறது[12].
அத்துடன் "சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்பது வரலாற்றில் ஒரு பொய்" என்பதும் தெளிவாகிறது.
(1) பழந்தமிழர் காலக் கணக்கீட்டின் தொடர்ச்சியாகப் பண்டைய தமிழ் உறவுகளான கேரள நாட்டில் வழக்கில் இருக்கும் கொல்லம் ஆண்டு கணக்கிடல் முறை,
(2) தொல்காப்பியரின் பொருளதிகாரம் (அகத்திணையியல்: 6 — 10),
(3) சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 — 125),
(4) திவாகர, பிங்கல, சூடாமணி நிகண்டுகள் தரும் செய்திகளின் ஒப்பீடு,
(5) திருவல்லிக்கேணி கோயிலின் கல்வெட்டுத் தொடர் அறியத் தரும் செய்திகள்,
இவற்றின் மூலம் "ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்" என்று உறுதியாகக் கூறலாம்.
இது போன்று தகவலின் உண்மைத்தன்மையை வேறுபட்ட பல மூலங்களில் கிடைக்கும் தரவுகளை ஒப்பிட்டு நம்பகத்தன்மையை மதிப்பிடும் முறைகள் இன்றைய காலத்தின் ஆய்வுநெறி வகைகளில் ஒன்று. ஆய்வுகளில் 'டிரையாங்குலேஷன் ஆஃப் டேட்டா' (triangulation of data) என்ற தரவுகள் உறுதிப்படுத்தும் மற்றொரு முறையில், மூன்றாவதாகவும், மற்றொரு சான்று, வேறொரு கோணத்தில் அதே செய்தியை உறுதிப்படுத்த வேண்டும் (Triangulation refers to the use of multiple methods or data sources in qualitative research to develop a comprehensive understanding of phenomena - Patton, 1999). [13] இதனை மும்முனைத் தரவு ஆய்வு முறை எனலாம். இக்கட்டுரையில் ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்குச் சான்றுகளாக அமையும் இன்றைய 1. வழக்காறுகள், 2. இலக்கண, 3. இலக்கிய, 4. நிகண்டுகள் மற்றும் 5. கல்வெட்டுகள் தரும் காலக்குறிப்புகள் என ஐந்து வெவ்வேறு மூலங்களிலிருந்து தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
சரியான தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட விரும்பும் 'உண்மையான தமிழராய்' இருந்தால் வரும் ஆவணித் திங்கள் தொடக்கத்தைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடலாம், அவ்வாறு மாற்றச் சொல்லி அரசுக்கும் கோரிக்கை அனுப்பலாம். ஆவணிப் புத்தாண்டை மீண்டும் அதிகாரப்பூர்வமாக வழக்கத்திற்குக் கொண்டுவர அரசும் முயற்சி மேற்கொள்வதும் வரவேற்கத்தக்கதே.
மேலும், எதிர்காலத் தலைமுறைக்கு எளிதாகப் பழந்தமிழ் வழக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் பாடநூல்களில் தமிழ் மாதங்களின் வரிசையை 1. ஆவணி, 2. புரட்டாசி, 3. ஐப்பசி, 4. கார்த்திகை, 5. மார்கழி, 6. தை, 7. மாசி, 8. பங்குனி, 9. சித்திரை, 10. வைகாசி, 11. ஆனி, 12. ஆடி என்று மாற்றி அமைக்கலாம். பழந்தமிழர் வழக்கம் இடைக்காலத்தில் அரச ஆதரவுடன் மாற்றம் பெற்றிருந்தால், மீண்டும் அதே அரச ஆதரவுடன்தான் மாற்றம் செய்வது தேவையாக இருக்கும்.
ஏனெனில், தமிழர் ஒருவர் சித்திரைப் புத்தாண்டு விரும்பியோ அல்லது தைப் புத்தாண்டு விரும்பியோ என்பது ஒரு பொருட்டல்ல. உண்மைதான் முக்கியம். வரலாற்று உண்மை நிலைநாட்டப் படவேண்டும். பிழை சீர் செய்யப்படுதல் தேவை.
இது தவிர்த்து, காலம் முழுவதும், உலகம் முழுவதும் நாட்காட்டிகளை மாற்றியமைத்துக் கொண்டதும் செப்பனிட்டுச் சீர் செய்து கொண்டதும் வரலாறே. மலையாளக் கொல்லம் ஆண்டு வளர்ச்சி முறைக் கணக்கிடலும் அவ்வாறான ஓர் எடுத்துக்காட்டே. திருவள்ளுவர் பிறப்பைத் தொடக்கமாகக் கணக்கில் கொண்ட தொடர் வளர்ச்சி முறைக் கணக்கிடல் முறையில் தைத்திங்கள் புத்தாண்டின் தொடக்கமாகத் தமிழக அரசால் அறிவிக்கப் பட்டதும் இத்தகைய மாற்றம் என்ற வகையிலேயே அடங்கும். இது ஓர் ஏற்கத்தக்க ஒரு மாற்றமே.
மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத் திருவிழாவை, திருமலை நாயக்கர் சித்திரை மாதத்திற்கு மாற்றியதை ஏற்றுக் கொண்டு தமிழர் இன்றும் சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடிக் கொண்டிருப்பது போலத்தான் இம்மாற்றமும்.[14] எனவே, ஆவணியில் இருந்த புத்தாண்டுப் பிறப்பை, இடைக்காலத்தில் சித்திரைக்கு மாற்றிக் கொண்ட தமிழர்களுக்கு, அதே போல இப்பொழுதும் தைத்திங்களைப் புத்தாண்டின் தொடக்கமாக ஏற்றுக் கொள்வதில் மனத்தடைகள் இருக்கத் தேவையில்லை.
சான்றாதாரங்கள்:
[1] 'Kollam Era,' K.V.Sarma, Indian Journal of History of Science, 31(1), p.99. 1996.
[https://web.archive.org/web/20150527163650/http://www.new1.dli.ernet.in/data1/upload/insa/INSA_1/20005b5f_93.pdf]
[2] பொருளதிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், (பக்கம் - 21), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2007.
[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdluhy.TVA_BOK_0006010/page/20/mode/2up]
[3] சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், 4. ஊர் காண் காதை.
[https://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=16]
[4] சேந்தன் திவாகரம் பிங்கலம் சூடாமணி, சாந்தி சாதனா பதிப்பு, 2004.
[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp7kZUy.TVA_BOK_0002448]
[5] நிகண்டு நூல்கள்.
[https://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412554.htm]
[6] உரிச்சொல் நிகண்டு, மு. அருணாசலம், செந்தமிழ், பக்கம்: 1- 12. 1965.
[https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0008294_செந்தமிழ்_April_May_1965.pdf]
[7] திவாகரம் முதல் தொகுதி, சென்னைப் பல்கலைக் கழகம் பதிப்பு, பக்கம்: xii-xv, 1990.
TVA_BOK_0022928_திவாகரம்_தொகுதி_1.pdf
[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0022928_திவாகரம்_தொகுதி_1.pdf]
[8] தமிழ் அகராதிக் கலை, பேரா. சுந்தரசண்முகனார், புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பக வெளியீடு, பக்கம்:80, 1965.
[https://ta.wikisource.org/s/2t33]
[9] பிங்கல முனிவர் செய்த பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு" - பாகம் 1. (சூத்திரங்களும் அவற்றின் பெயர்ப்பிரிவும்), வீ. தி. சிவன் பிள்ளை. 1890.
[https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0515_01.html]
[10] சூடாமணி நிகண்டு, சரசுவதி மகால் நூலகம் பதிப்பு, 1999.
[https://www.tamilvu.org/library/nationalized/pdf/05-kovaiilancheran/soodamaninikhandu.pdf]
[11] திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் அறியத் தரும் செய்திகள், தேமொழி, 2021.
[http://siragu.com/திருவல்லிக்கேணி-கோயில்-க/]
[12] TN celebrates new New Year, dumps ‘Brahminical’ tradition, M.R. VenkateshJan, Hindustan Times. Jan 14, 2009.
[https://www.hindustantimes.com/india/tn-celebrates-new-new-year-dumps-brahminical-tradition/story-qCcoJFXhGF91kJR8WAsF9O.html]
[13] Realistic Evaluation, Michael Quinn Patton (1999), American Journal of Evaluation, Volume: 20 issue: 2, page(s): 385-388, Issue published: June 1, 1999.
[14] மதுரை சித்திரைத் திருவிழா - ஆய்வாளர்கள் சொல்லும் சுவாரஸ்யத் தகவல்கள், ஜோ மகேஸ்வரன், பிபிசி தமிழ், 13 ஏப்ரல் 2022.
https://www.bbc.com/tamil/arts-and-culture-61096773
நன்றி: சிறகு
ஜூலை 23, 2022
#சிறகு, #தமிழ்ப்புத்தாண்டு, #Themozhi



