Monday, March 4, 2024

அடிமைப்படுத்தும் தளைகளை உடைத்தெறிய பெண்கள் உறுதி பூண வேண்டும்


அடிமைப்படுத்தும் தளைகளை உடைத்தெறிய பெண்கள் உறுதி பூண வேண்டும்
 

"ஆணின் அழகும் ஆளுமையும்"
ஆசிரியர்: முனைவர் த.ஜான்சி பால்ராஜ்
நூலின் விலை: ₹ 200
வெளியீடு: எழிலினி பதிப்பகம்


பெண்ணியம், சமூகம், சுற்றுச் சூழல் சார்ந்து கதை, கவிதை, கட்டுரைகள், புதினங்கள் எழுதிவரும் முனைவர் த.ஜான்சி பால்ராஜ் அவர்களின் நூல் "ஆணின் அழகும் ஆளுமையும்".   அனைத்துலக மகளிர்  நாள் கொண்டாடப்படும் மார்ச் மாதம் பெண்களின் உரிமையை வலியுறுத்தி ஒரு வித்தியாசமான தலைப்பின்  மூலம் பெண்ணியக் கருத்தை முன்வைத்துள்ள முனைவர் ஜான்சி பால்ராஜ் அவர்களின் நூலின் கருத்துகளைப் பார்ப்பது பெண்ணுரிமை குறித்த சிந்தனையைப் புதுப்பித்துக் கொள்ளவும்  உதவும் என்பதில் ஐயமில்லை

பெண்களின் உரிமைகள் குறித்தும் பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு,  வாய்ப்புகள் பல மறுக்கப்பட்டு அடிமைத்தளையில் சிக்குண்டிருந்த, இன்றும் சிக்குண்டிருக்கும் மகளிர் நலம் மேம்பட வேண்டும் என்ற அக்கறையில் சமூகப் பொறுப்புடன் முனைவர் ஜான்சி பால்ராஜ்  எழுதியுள்ள பல கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.  இந்நூலைப் பெண்கள் எந்த அளவு படிக்க வேண்டியது  முக்கியமோ, அதே அளவு ஆண்களும் படிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.  பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய  சமத்துவம் குறித்து இருபாலரும் அறிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு தரும் நூல் இது.  

பாரதி பாடிய புரட்சிப் பெண்ணாகப் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்று பல துறைகளில் இன்று பெண்கள் சாதனை செய்வது பாராட்டிற்கு உரிய முன்னேற்றம்.  இருப்பினும்,   இன்றும் சமூக வாழ்வில் தன்னைக் கட்டுப்படுத்தும், பல உரிமைகளை மட்டுப்படுத்தும் சூழ்நிலையில் பெண்கள் சிக்கித்தான் இருக்கிறார்கள்.

கடந்த பல நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் பெண்களின் கல்வி வளர்ச்சி முன்னேறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் வளர்க்கப்பட்ட முறையும், வளர்ந்த சூழ்நிலையின் தாக்கமும் இன்றும் பெண்களுக்குப் பல மனத்தடைகளை அவர்களின் ஆழ்மனதில் நிரந்தரமாகப் பதியவைத்துவிட்டது. கூண்டுக்கிளிகளின் கூட்டைத் திறந்து விட்டாலும் வெளியேறத் தயங்கும் பறவைகளாக  முடங்கியே உள்ளனர் பலர்.  அதற்குக் காரணம் பெண்கள் என்றால்  அவர்கள் பண்பில்  அச்சம், மடம், நாணம் ஆகியவற்றுடன் இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்பிற்கு இசைந்து சச்சரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துவிடலாமே என்ற எண்ணம்தான்.  பெண் என்றால் அழகு, சகிப்புத்தன்மை,  பொறுமையின் நிறைகுடம், அர்ப்பணிப்பு மனப்பான்மை என்று சமூகம் காலம் காலமாகப் பெண்களின் வாழ்வில் செய்த கருத்துத் திணிப்புகளை அப்படியே தங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்து விட வேண்டும் என்ற முனைப்பும் பெண்களிடத்தில் மாறாமல் நிரந்தரமாக உள்ளது.    

தான் யார்? தன் திறமைகள் என்ன? வாழ்வில் தன் எதிர்பார்ப்புகள் என்ன ? என்று தன்னைக் குறித்து உள்நோக்கி ஆராய மறந்து, அடுத்தவர் குறிக்கோளுக்கு ஏற்ப அவர்கள் வகுத்துக் கொடுத்த வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்யத் தீர்மானித்துவிட்ட நிலைதான் பெண்களின் வாழ்வை  இன்று வரை நிர்ணயித்து வருகிறது.  பெண்கள் பலருக்குத் தங்களின் மீது  சுமத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கேள்வி கேட்கும் மனப்பான்மையும் இல்லை.  பெண்களின் வாழ்வைக் கட்டுப்படுத்தி உள்ள எவரும் அதைப் பெண்களின் நன்மைக்காகச் செய்ததில்லை. தங்களின் வசதிக்காக விதிகளைச் செய்து வைத்தார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. மறுக்கப்பட்ட உரிமைகள் குறித்துக் கேள்வி கேட்கவும், அவற்றுக்காகப் போராடவும் தேவையான அறிவு வளர்ச்சியைத் தரும் கல்வியும், தற்சார்புடன் வாழ உதவும் சொத்தும், ஊதியமும் மறுக்கப்பட்ட நிலையில், தன் வாழ்வாதாரம், தன் பிள்ளைகளின் எதிர்காலம் இவற்றைத் தக்க வைத்துக் கொள்ள வேறு வழியின்றிப் பெண்களும் சமூகம் தங்களிடம் இருந்து பறித்த உரிமைகளை ஒப்புக் கொண்டு, அது வகுத்த வழியில் வாழ முற்பட்டுவிட்டார்கள்.

பெண்களின் இந்த அடிமை நிலை  குறித்து கேள்வி கேட்ட சில நல்ல உள்ளங்களும் நம்முடன் வாழ்ந்து உள்ளார்கள். அவர்கள் பெண்கள் சார்பில் சமூகத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்டுள்ளார்கள். அதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளைக்கண்டு அவர்கள் அஞ்சியதும் இல்லை, பின் வாங்கியதும் இல்லை.  அத்தகையரில் பெண் நலத்திற்காகப் பாடுபட்ட ஆண்களும் உள்ளனர்.  சென்ற நூற்றாண்டில் தமிழ் நாட்டில் தேவதாசி முறையை ஒழிக்கும்  சட்டம் உருவாகக் காரணமாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி, மூவலூர் ராமாமிர்தம்  போன்ற முன்னோடி மகளிர் பெயர்களை நினைவு  கூராமல்  தமிழகப் பெண்களின்  வரலாற்றை எழுத இயலாது.  

அவ்வாறே பெண்களால் தந்தை பெரியார் என்று பாராட்டப் பட்ட பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களையும் போற்றாமல் இருக்க முடியாது.  ஆண் உரிமைக்கும்  பெண் உரிமைக்கும்  ஏன் வேறுபாடு இருக்க வேண்டும் என்பது அவருடைய கேள்வி.  பெண்களுக்கு விடுதலை என்ற நிலை உருவாக, கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவாகி,  ஆணைப் போலவே பெண்ணுக்கும் அனைத்து உரிமைகளும் கொடுக்கப்படுதல் வேண்டும் என்பது அவரது உறுதியான கொள்கை.   99.80% பெண்களுக்கு நமக்கு ஏன் இந்த அடிமை நிலை என்ற எண்ணம் கூட வருவதில்லை என்றார் பெரியார்.  கற்பு, தெய்வீகக் காதல், புனிதத் திருமணம், கைம்பெண் நிலை, விபச்சாரம் என்று சமூகம் வகுத்துள்ள விதிகள் ஆண்களைக் கட்டுப்படுத்தாமல் பெண்களை மட்டுமே குறிவைத்ததைப் பெண்களுக்கு விளங்க வைக்க முற்பட்டார், அவற்றைக் குறித்து கேள்விகள் எழுப்பி விழிப்புணர்வை ஊட்டினார்.  

தன்னல நோக்குடன் வலிய  நிலையில் ஆதிக்க மனப்பான்மையிலிருந்த ஆண்களால் பெண்களைக் கட்டுப்படுத்தும் விதிகள் சமைக்கப்பட்டு  பெண்கள் வாழ்வில் அவை திணிக்கப்பட்டு பெண்களை அடிமைத் தளையில் சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள். எதிர்க்கேள்வி எழுப்பாமல் இதனைப் பெண்களும் ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்கியதுதான் அவர்களின் அடிமை நிலைக்குக் காரணம். கீழ் சாதி என்பவர்கள் எவ்வாறு தங்களுக்கு விதிக்கப்பட்ட அந்த நிலையை  மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அதன் படி வாழ்கிறார்களோ  அது போன்றே பெண்ணடிமை நிலையும் உருவாகிவிட்டது என்று பெரியார் பரப்புரை செய்து பெண்களின் நிலைக்காகச் சென்ற நூற்றாண்டிலேயே வாதாடினாலும் இன்றும் கூட ஆணைப் போலவே பெண்ணுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்பதைப் பெரும்பாலோர், குறிப்பாகப் பெண்களிலும் ஒரு சிலர்  உட்பட ஏற்போர் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

பெண்களுக்கான சமவுரிமை என்ற கருத்தில் பெரியார் போன்றே கொள்கைகள் கொண்டிருந்தவர் இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி. ஆர். அம்பேத்கர். பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன் என்று கூறியவர்  அண்ணல் அம்பேத்கர்.  அவருக்குச் சட்டமுறையில் பெண்களின் முன்னேற்றத்திற்கான வழிவகைகளை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது அவற்றைச்  செவ்வனே பயன்படுத்திப் பெண்களின் பல உரிமைகளுக்கு வழி வகுத்தார். அவர் சட்ட அமைச்சராக இருந்தபோது, பெண்களின் சமத்துவத்துக்காக, இந்து நெறிமுறை மசோதாவை (Hindu Code Bill) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். ஆதிக்கச்சாதி இந்துக்களின் எதிர்ப்பால் பெண்கள் முன்னேற்றத்திற்கான அவரது புரட்சிகர மசோதா நிறைவேற்றப் படாத பொழுது அண்ணல்  அம்பேத்கர் தன் சட்ட அமைச்சர் பதவியையும் துறந்து தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.  

பெண்களின் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அண்மைய அறிக்கை ஒன்று உலகில் பெண்களின் தற்போதைய முன்னேற்ற நிலையைக் கருத்தில் கொண்டால், ஆண்களுக்கு நிகரான சட்ட உரிமைகளும்  பாதுகாப்புகளும்  பெண்களுக்குக்  கிடைக்க இன்னும் 286 ஆண்டுகள் ஆகலாம் என்று குறிப்பிட்டுள்ளது.  எனவே தொடர்ந்த பெண் சமத்துவப் பரப்புரையும் விழிப்புணர்வும் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.  அந்தக் குறிக்கோளில் அனைவரும் தொடர்ந்து செயல்படுவதும் தேவையாகிறது.  

முனைவர். ஜான்சி பால்ராஜ் அவர்களும் தன் பங்கிற்குப் பெண் சமத்துவ விழிப்புணர்விற்கு இந்த நூலில் கட்டுரைகள் பல வடித்துள்ளார். மனித இனத்தின் சரிபாதியரான பெண்களை மதிக்காமல் அடிமைப்படுத்தும் நிலை உருவான வரலாற்றையும், பெண்களைப் பண்பாட்டுக் குறியீடாக மாற்றி அவர்களது அடிப்படை மனித உரிமைகளைப் பறித்து வாழ்வெல்லையைச் சுருக்கி கட்டுப்படுத்திய சமூக வரையறைகளையும் தெளிவாக விளக்கும் கட்டுரைகள் இவை.  சமூகத்தில் பெண்கள் குறித்து இருக்கும் பல பிற்போக்கான சூழல்களை நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.  அத்துடன் சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் பலவற்றையும் முன்வைக்கின்றார். அது மட்டுமின்றி பெண் சமத்துவ இலக்கு என்ற மாறுதலை நோக்கி நடை போடச் சிறந்த வழிமுறைகளையும் காட்டியுள்ளார்.  

இந்த நூலில்;  சமத்துவத்தைத்  தங்களது வாழ்வியல் முறையாகக்  கொண்டிருக்கும் மக்களே உயர்ந்த பண்பாட்டின்  குறியீடு என்று வரையறுத்து, பெண் தன்னைப்   பண்பாட்டின் குறியீடாகக் காட்டும் சமூக அமைப்பிலிருந்து வெளிவர வேண்டும் என்று தெளிவாக வழிகாட்டுகிறார் நூலாசிரியர்.  அற்பத்தனமான  ஆதிக்க ஆசையால் தன் இனத்தின் சரி பாதியான பெண்ணினத்தின் அறிவிற்கு விலங்கிட்ட மனிதர்களது செயலை  அவர்களது அறிவின்மைக்குள் அடக்குவதா இயலாமையில் இணைப்பதா என்ற வினாவையும் எழுப்புகிறார்.  

பெண்ணின் நல்லொழுக்க அடையாளமாக இச்சமூகம்  வரையறுத்து  வைத்திருக்கும் மாயத்தைத்  தோலுரிக்கும் அறிவுசார் சிந்தனை மாற்றம் வரவேண்டும் என்கிறார் முனைவர் ஜான்சி பால்ராஜ்.  பெண்களுக்கு அவர்களது வலிமையை  உணரவைக்கும்  ஒரே ஆயுதம்  கல்விதான் என்று ஆணித்தரமாகக் கூறும்  முனைவர் ஜான்சி பால்ராஜ், குடும்பமே பெண்களுக்கு முதல் எதிரியாக அமைந்துவிடுகிறது.  குடும்பத்தின்  உயர்ந்த கௌரவத்திற்கு என்று பெண்ணின் சுதந்திரப் பறிப்பும்  அவள் மீதான அடக்கு முறைகளும்  மறைமுகமாகப்  பயன்படுத்தப் படுகின்றன என்று பெண் இனத்திற்கு எதிரான பாகுபாட்டின் 'கிரவுண்ட் சீரோ' (ground zero) எது என்பதைத்  துல்லியமாகக் குறிப்பிடுகிறார்.

எந்த ஒரு  சரியான சமூக மாற்றமும்  சமூகத்தின் அடிப்படை  அலகான குடும்பத்திலிருந்துதான் தொடங்கியாக  வேண்டும்.  அவ்வாறே பெண்கள் நிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் அதைச் சமூகத்தின் அலகான குடும்பத்தில் தொடங்க வேண்டும்.  ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் சமம் என்ற சமத்துவக் கருத்தை  இருபாலினப் பிள்ளைகளும் உணரும் வண்ணம் அவர்கள் வளர்க்கப் பட வேண்டும். கல்வி நிலையங்களும் இதை வளரும் பிள்ளைகளிடம் வலியுறுத்த வேண்டும். ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் வளர்க்கப்படும் விதம் ஒரே விதமாக  இருந்தால் பெண்கள் நிலை விரைவில் தானே மாறும் என்பது நூலாசிரியர் முடிபு.

பெற்றோர்களும்  ஆசிரியர்களும் வளரிளம்  பருவத்தினரைத் தக்க வழியில்  நெறிப்படுத்தும் போது  பாலின வன்முறைகள் போன்ற மிகப் பெரிய சமூகப் பிழைகளிலிருந்து திசைதிருப்பி சமூகத்தின் எதிர்கால, அறிவார்ந்த சிற்பிகளாக அவர்களை மாற்ற முடியும் என்ற வழிமுறையையும் கூறுகிறார்.  இது குறிப்பாக அடுத்த தலைமுறையை வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு வகிக்கும் பெண்கள் கையில்தான் உள்ளது.  குடும்பத்தில் பெண் குழந்தைகளின் வளர்ப்பு முறை  ஆண் குழந்தைக்கு இணையானதாக இயல்பான பராமரிப்பாக  இருக்க வேண்டும்.பாலினச் சமத்துவத்தைக் காட்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குமுன் மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் நூலாசிரியர்.  

குடும்ப அளவில் பெண்களைக் கீழமைப் படுத்தாமல் மதிப்பளிக்கும் முறையில் ஒவ்வொரு செயலிலும் தங்கள் செயல்பாடுகளைப் பெற்றவர்கள் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப வேலைகளில் ஆண் வேலை இது, பெண்ணின் பொறுப்பு இது என்ற பாலினப் பாகுபாடு காட்டுவது இருவரும் உழைத்து ஊதியம் ஈட்டும் காலத்திற்குப் பொருத்தமற்ற நடைமுறை.  பெண்களின் உழைப்பை இரு மடங்கு உறிஞ்சும் நிலையில், உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் நிலை பெண்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பாதிப்பதுடன் அவர்களுக்கான ஓய்வு, பொழுதுபோக்கு என்பனவற்றை இல்லாமல் செய்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.  

பெண்களும் தாங்கள் ஒரு பாலினப் போகப் பொருள் என்ற பழமையான கருத்துகளைக் கைவிட்டு, ஆண்களை ஈர்ப்பதுதான் பெண்ணுக்குரிய இலக்கணம் என்ற எண்ணத்துடன் தங்களின் மதிப்பைத் தாங்களே குறைத்துக் கொள்ளும் வகையில் அமையக் கூடிய  நடை உடை பாவனைகளைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் தங்களுக்குச் சட்டம் மூலம் கொடுக்கப்படும் உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்ள, தங்களுக்கு உள்ள வாக்குரிமையைத் திறமையாகப் பயன்படுத்தி தங்கள் உரிமைகளை நிலைநாட்டும் வாய்ப்புகளைத் தவறவிடக்கூடாது, தங்கள் உரிமையை வலியுறுத்த வேண்டும் என்று பெண்களுக்கு நேரடியாக நல்ல பல ஆலோசனைகளையும் கூறுகிறார்.

புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞரும் சமூக ஆர்வலருமான  மாயா ஆஞ்சலூ தனது 'நான் எழுவேன்' (Still I Rise) கவிதையில் . . .
நிலவினைப் போலக் கதிரவனைப் போல
நிரந்தரமான அலைகளைப்போல
மேலெழும் நம்பிக்கை போல
நானும் மேலெழுவேன் . . .
என்று குறிப்பிட்டவாறு பெண்கள் தங்களை அடிமைப்படுத்தும் தளைகளை உடைத்து மேலே உயர இந்த நூல் உதவும்.

பெண்கள் சமத்துவத்திற்காகத் தன் எழுத்து மூலம் விழிப்புணர்வு கொண்டு வர இந்த நூல் மூலம் முயலும்  முனைவர். ஜான்சி பால்ராஜ் பாராட்டிற்குரியவர். உயர்நிலைப்பள்ளி பதின்மவயது மாணவர்களுக்குத் துணைப்பாட நூலாக  இந்த நூல் அறிமுகப் படுத்தப் பட்டால் தமிழ் இளைஞர் மனதில் தேவையான மாற்றத்தைக் கொண்டுவர உதவும்.

பெண்ணியத்தை வலியுறுத்தும் நூலைப் படைத்த முனைவர் ஜான்சி பால்ராஜ்  அவர்களுக்குப்  பாராட்டுகளும் வாழ்த்துகளும். 



நன்றி:
தமிழணங்கு 
மார்ச்,  2024 




#நூல் மதிப்புரை, #தமிழணங்கு, #Themozhi