Monday, June 5, 2023

சிறு நல் வாழ்க்கை

சிறு நல் வாழ்க்கை
 

வாழ்க்கை வாழ்வதற்கே என்று கூறினாலும் வாழும் ஒவ்வொரு மணித்துளியும் நாம் அதைப் பற்றிய நினைவின்றியே வாழ்கிறோம்.  வாழ, வாழ், வாழ்வு, வாழ்க, வாழிய, வாழ்த்து என்ற சொற்களின் வரிசையில் வாழ்க்கையும் இடம்பெறுகிறது.  வாழ்க்கை என்பது ஒரு பழந்தமிழ்ச் சொல்.  சான்றுகளுடன் பார்க்கையில் குறைந்தது ஒரு 2500 ஆண்டுகளாக நம் புழக்கத்தில் வாழ்க்கை என்ற சொல் அவ்வாறே, அதே பொருளில் தொடர்ந்து வழக்கத்தில் இருப்பதை தமிழின் தொன்மையான முதல் நூலாகிய தொல்காப்பியம் மூலம் அறிய முடிகிறது.

            புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் - தொல்காப்பியம்-பொருள். புறத்:21/9
வறுமையிலும் செம்மையுடையவராக வாழும் வெற்றித் திறத்தினை புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் என்பது இப்புறத் துறைச் சொற்றொடரின் பொருள் என இளம்பூரணர் விளக்கம் தருகிறார்.

தமிழின் செவ்வியல் இலக்கியமான சங்கப் பாடல்கள் என்ற பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய தொகை இலக்கியங்களில் வாழ்க்கை  என்ற சொல் 62 முறை இடம் பெறுகிறது. அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றிப் பல செய்திகளையும் தருகிறது. உப்பு விற்கும் உமணர், பாடிப் பரிசில் பெரும் பாணர்,  வில் கொண்டு பகை ஒழிக்கும் மறவர் எனப் பலரின் வாழ்க்கை குறித்த பாடல்களில் இடம் பெறுகிறது.  அது மட்டுமின்றி விலங்குகள்,பறவைகள், தேனி வாழ்க்கை குறித்தும் பாடல்களில் இடம் பெறுகின்றது.  தமிழர் அனைவரும் நன்கு அறிந்த "கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி" என்று மலர்கள் எல்லாம் சென்று தேன் உண்ணும் தேனீயின் வாழ்க்கையைக் குறிக்கும் குறுந்தொகைப் பாடலும் இந்த வரிசையில் அடங்கும்.

வாழப்படும் வாழ்க்கையின் தன்மை குறித்த சிந்தனையைத் தூண்டும் பல கருத்துகளும் இடம் பெறுகின்றன.  
அவற்றுள்;
            "ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே" (புறநானூறு: 193/4)
            சுற்றத்தோடு கூடி வாழும் இல்வாழ்க்கை தப்பவிடாமல் காலைத் தடுக்கும், கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது

            "கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை" (நற்றிணை: 243/5)
            சூதாடுகருவியை உருட்டிவிட்டாற்போன்ற நிலையற்ற வாழ்க்கை

            "பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை" (பதிற்றுப்பத்து: 48/15,16)
            சோலைகளில் தங்கியிருந்து செய்யும் வேனில் விழாவும் கொண்ட பெரிய அழகிய வாழ்க்கை .

            "பெருநீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை" (நற்றிணை: 45/9,10)
            கடலுள் விளையும் பொருள்களை வைத்து வாழும் எம் சிறிய நல்ல வாழ்க்கை
போன்ற பாடல் வரிகள் வாழ்க்கை பற்றிய பல வேறு கோணங்களைக்  காட்டுகின்றன.

பேர் எழில் வாழ்க்கை:
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து புலவர் பரணர் சேர அரசன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பு. அத் தொகுப்பின் 48 ஆவது  பாடலில் பரணர் சேர மன்னனை  நீடு வாழ்க என வாழ்த்துகிறார்.  

            "பல் பொறி மார்ப நின் பெயர் வாழியரோ
            நின் மலை பிறந்து நின் கடல் மண்டும்
            மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின்
            பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை
            மேவரு சுற்றமோடு உண்டு இனிது நுகரும்
            தீம் புனல் ஆயம் ஆடும்
            காஞ்சி அம் பெரும் துறை மணலினும் பலவே"
                  (பதிற்றுப்பத்து: 4, பரணர்)

மன்னா,  உன்னை நாடிப் பாடிப் பரிசில் பெற வரும் பாணர்களும் விறலியர்களுக்கும் பொன்னால் செய்த தாமரைப் பூக்களையும்,  மாலைகளையும் சூட்டி அவர்களை மகிழ்வித்து,  உன் புகழை நிலைநாட்ட கடலில் பகைவரோடு போரிட்டு வெற்றிபெற்ற, குளிர்ந்த துறைகளைக் கொண்ட பரதவனே! அவ்வாறு வென்று கொணர்ந்த பொருட்களைத் தனக்கென வைத்துக் கொள்ளாது புலவர்களின் ஒப்பற்றப் பாடல்களுக்குப் பரிசாக அளிப்பதால் கொடுப்பதை அன்றி தனக்கென வைத்துக்கொள்ளும் பண்பை அறியாதவன் இவன் என்று அவர்கள் போற்றிப் பாட,  வேண்டியவர்க்கு மென்மையானவனாகவும், பகைவர்களுக்கு வன்மையானவாகவும் விளங்குபவனே. அவ்வாறு நீ போரில் பகைவரின் ஊர்களைச் சுடுகின்ற நெருப்பின் வெப்பத்தால் உன் மார்பில் சூடிய மாலையின் மலர்களும், பூசிய சந்தனமும்  காய்ந்து போன புள்ளிகளைக் கொண்ட மார்பைக் கொண்டவனே உன் பெயர் நீடு வாழ்க.  

உனது மலையில் பிறந்து, உனது கடலில் சென்று கலக்கும் மிகுந்த நீர் நிறைந்த ஆற்றில் நிகழ்த்தப்பெறும் இனிய நீராட்டு விழாவும், சோலைகளில் தங்கியிருந்து செய்யும் வேனில் விழாவும் கொண்ட  உன் பெரிய அழகிய வாழ்க்கையில் உன்னை விரும்பிச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தாரோடு உண்டு, இனிமையாகத் துய்த்து, இனிய வெள்ளத்தில், மக்கள் கூட்டம் நீர்விளையாட்டு ஆடுகின்ற காஞ்சி என்னும் ஆற்றின் அழகிய, பெரிய துறையிலிருக்கும் மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் நீ நீடூழி  வாழ்வாயாக என்று பரணர்  கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை வாழ்த்திப் பாடுகிறார்.  இவ்வரிகள் மூலம் 'பேர் எழில் வாழ்க்கை' எத்தகையது என்பது புலனாகிறது.  பலரும் போற்றும் வண்ணம் புகழ் பெற்று, எதிரிகளை வென்று, தன் உறவுடனும் நட்புடனும் விழாக்கள் கொண்டாடி  வாழும் அரசரின் வாழ்வு ஒரு 'பேர் எழில் வாழ்க்கை' என்று காட்டப்படுகிறது.  

சிறு நல் வாழ்க்கை:
அவ்வாறே சங்கப்பாடலில் 'சிறு நல் வாழ்க்கை' குறித்த ஒரு குறிப்பும் காணப்படுகிறது. இந்த வாழ்க்கை நெய்தல் நிலத்தின் சிறு குடியில் வாழும் பரதவர்களின் வாழ்க்கை.  பழம்பெரும் நகரின் பெருஞ் செல்வந்தரின் மகன் ஒருவன், மீனவர் குடியில் வாழும் பெண் ஒருத்தி மேல் மையல் கொண்டு அவளை நாடி வருகிறான்.  அவனை இடைமறித்து அறிவுரை கூறுகிறாள் மீனவப் பெண்ணின் தோழி.  அப்பொழுது தங்களின் எளிய சிறு நல் வாழ்க்கை அவனுக்கு ஒத்துவராதது என உணர்த்துகிறாள்.

            "இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
            நீல் நிற பெரும் கடல் கலங்க உள் புக்கு
            மீன் எறி பரதவர் மகளே நீயே
            நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர்
            கடும் தேர் செல்வன் காதல் மகனே
            நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி
            இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ
            புலவு நாறுதும் செல நின்றீமோ
            பெருநீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
            நும்மொடு புரைவதோ அன்றே
            எம்மனோரில் செம்மலும் உடைத்தே"
                        (நற்றிணை: 45, நெய்தல் பாடல் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை)

இவளோ, கடற்கரைச் சோலையை அடுத்துள்ள மீனவர்களின் அழகிய சிறுகுடியில் வாழ்பவள். நீல நிறப் பெருங்கடல் கலங்குமாறு அதன் உள்ளே புகுந்து மீனைப் பிடிக்கும் பரதவர் மகள் இவள்! நீயோ, உயர்ந்த கொடிகள் அசையும் கடைத் தெருக்களைக் கொண்ட பழைய ஊரில் வாழும், விரைந்து செல்லும் தேர்களையுடைய ஒரு செல்வந்தரின் அன்புக்குரிய மகன் ஆவீர்! கொழுப்பு மிகுந்த சுறாமீனை அறுத்த துண்டங்களை உலர்த்தும் பொழுது கூட்டமாக வரும் பறவைகளை விரட்டும் எமக்கு உம்  உயர்ந்த நலன்கள் என்ன வேண்டியுள்ளது? புலால் நாற்றம் வீசும் எம்மிடம் இருந்து தள்ளி நிற்பீர்.  பெரிய கடல் நீரில் விளையும் பொருட்களை வைத்து வாழும் எங்களின் சிறிய நல்ல வாழ்க்கை உங்களுக்குப் பொருத்தமற்றது. எங்கள் பரதவர் குலத்திலும் இவளுக்குப் பொருத்தமான பண்பு நிறைந்த ஆண்மக்கள் உள்ளனர் என்று பரதவர் குலப் பெண்ணின் தோழி மூதூரில் வாழும் செல்வந்தனுக்கு நிலைமையைத் தெளிவாகக் கூறி அறிவுறுத்துகிறாள்.

இந்த இருவேறு பாடல்களையும் ஒப்பிடுவதன் மூலம் இருவேறு வாழ்க்கை முறையின் வேறுபாட்டைத் தெளிவாக அறிய முடியும். ஆரவாரத்துடன் வாழும் மன்னர்களின் பேர் எழில் வாழ்க்கையைப் போலன்றி, இப்பரதவர் வாழ்க்கை வறுமையிலும் செம்மையுடையதாக, தங்கள் எளிய வாழ்விலும் மனநிறைவு கொண்டு அமைதியுடன் வாழும் சிறு நல் வாழ்க்கையாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.

உதவிய தளம்:  
சங்கச் சோலை, முனைவர்.ப.பாண்டியராஜா - http://sangacholai.in/index.html 



நன்றி: தமிழணங்கு
ஜூன், 2023

#தமிழணங்கு, #இலக்கியம் #Themozhi