அன்பின் ஐந்திணை: திணைமாலை நூற்றைம்பது
தமிழிலக்கியத்திற்கு இலக்கணம் வகுக்கப்படும் பொழுது, ஒரு திணைக்கு உரியபொருள் அத்திணையின் உரிப்பொருள் எனக் காட்டப்படுகிறது. ஐந்து நிலங்களுக்குரிய ஒழுக்கங்களாக; புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியவையும் அவற்றின் நிமித்தமும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணைகளின் உரிப்பொருள் எனப்படும்.
இந்த அன்பின் ஐந்திணைகளை;
'புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்த மென்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.'
(தொல். பொருள். அகத்திணையியல் நூற்பா-16)
என்று தொல்காப்பிய நூற்பா வரையறுக்கிறது.
ஆகவே,
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி ;
பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை ;
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை ;
இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் ;
ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம்
ஆகிய நிலங்களுக்கு உரியவையாக நாம் அறிகிறோம்.
ஒரு திணைக்குரிய உரிப்பொருள் மயங்குவதில்லை. ஒரு பாடலின் உரிப்பொருளே அப்பாடல் அகத்திணையில் எந்தத் திணையைச் சார்ந்தது எனத் தீர்மானிக்க உதவுகிறது. குறிஞ்சித்திணைப் பாடல்களின் காட்சிகள் கருத்துகள் உரையாடல்கள் என எவற்றுக்குமே அதன் பொருண்மையான புணர்தலும் புணர்தல் நிமித்தமும்தான் அடிப்படை. இதே வரையறையே மற்ற பிறதிணைப் பாடல்களுக்கும் பொருந்தும்.
பாட்டும் தொகையும் என அறியப்படும் சங்கப்பாடல்களில் தோழிக்குத் தனிச் சிறப்புண்டு. தலைவன் தலைவியை மணந்து (வரைவு) கொள்ளாமல் காலம் தாழ்த்தும் பொழுது தோழி தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ள வரைவு கடாதல் என்ற நோக்கில் தலைவியைச் சந்திக்க அவன் வரும் இடர் தரும் வழி, தலைவிக்குக் காவல் மிகுதி, இற்செறிப்பு, ஊரில் அலர் தொடக்கம், வரைவு வேட்கை, வெறியாட்டு ஏற்பாடு என்று நிலைமையை அறிவுறுத்துதல்; குறியிடம் மறுப்பது, பகற்குறி, இரவுக்குறி, அறத்தொடு நிற்றல், ஆற்றுவித்தல், தூது செல்லல் என்றும்; உடன்போக்கு, வரைவு மலிதல் உதவிகள் செய்வது என்றும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் தொடங்கி வளர்ந்து கைகூடுவதில் சங்ககாலத் தோழியின் பங்களிப்பு மிகுதி.
திணைமாலை நூற்றைம்பது:
எளிய வழியில் அகப் பாடல்கள் கூறும் அன்பின் ஐந்திணை ஒழுக்கம் குறித்து அறிய 'திணைமாலை நூற்றைம்பது' நூலின் பாடல்கள் உதவுகின்றன. மதுரைத்தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது என்ற நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 'ஏலாதி' நூல் இயற்றிய அதே கணிமேதாவியார் இயற்றிய நூல் இது. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதையும், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்ற செய்தியையும் ஏலாதி நூலின் முகவுரையின் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்நூலில், அகத்திணை ஒழுக்கம் குறித்த வெண்பாக்கள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசையில் அமைந்துள்ளன.
ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தொடுத்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கையின் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும் இந்நூல் பெயர் பெற்றது என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் என மொத்தம் 150 பாடல்கள் இருக்க வேண்டிய நிலைக்கு மாறாக; இந்நூலில் குறிஞ்சி, நெய்தல், முல்லைத் திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளதால் மொத்தம் 153 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நூலின் இறுதியிலே காணப்பெறும் பாயிரச் செய்யுள் ஒன்றையும் கணக்கில் கொண்டால் இந்நூல் மொத்தம் 154 பாடல்களைக் கொண்டதாகும்.
இவற்றுக்கு மிகப் பழைய உரையும் உள்ளது. அகத்திணை தொகுப்பாக அமைந்த மற்ற கீழ்க்கணக்கு நூல்களில் தலைப்பிற்கு ஏற்ப பாடல்களின் எண்ணிக்கை அமைந்திருக்க, இந்த நூல் மட்டும் அந்த விதியிலிருந்து மாறுபடுவது குறிப்பிடத்தக்கது. தமிழிலக்கியம் கூறும் அகத்திணைகள் பற்றி அறிய இது ஒரு சிறந்த நூல் என்று இதற்கு உரை எழுதிய மகாவித்வான் ரா. ராகவையங்கார் தனது நூலின் முன்னுரையில் பரிந்துரைக்கிறார். ஐந்திணை இயற்கைக் காட்சிகள் அழகாக இந்நூலில் விவரிக்கப்படுகிறது. குறிஞ்சித் திணையின் முதற்பொருள்(நிலமும் பொழுதும்), கருப்பொருள்(நிலத்தின் தனித்தன்மையைக் குறிப்பன), உரிப்பொருள்(அந்த நில மக்களின் ஒழுக்கமும் வாழ்வு முறையும்) என இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வழி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
தொடுக்கப் பெற்ற மலர் மாலையினைப் போன்று, ஒப்புமை கூறுவதற்கு அரிய இனிய தமிழ் மொழியில் சிறப்பாக ஆராய்ந்து இயற்றிய திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலில், அகத்திணை கருத்துக்களை வெறுத்தவர்களின் வெறுப்பு விலகும்படியாக, முத்துக்களைப் போன்ற வெண்பாச் செய்யுட்களில் அகப் பொருளாகிய களவியல் கொள்கைகளைக் கணிமேதாவியார் கனிவுடன் கூறினார் என்று நூலின் இறுதியில் இடம்பெறும் பாயிரம் குறிப்பிடுகிறது.
நன்றி: சிறகு
அக்டோபர் 10, 2020
#சிறகு, #இலக்கியம், #ஐந்திணைமாலை, #திணைமாலை நூற்றைம்பது, #Themozhi