Monday, February 5, 2024

நெஞ்சில் இட்ட கோலங்களின் தொகுப்பு

நெஞ்சில் இட்ட கோலங்களின் தொகுப்பு



அடுக்குப் பானை கவிதைகள் இனிமையான மெல்லிய இசையாய் நெஞ்சத்தை மீட்டிச் செல்லும் கவிதைகளின் ஓர் தொகுப்பு.

கருவறை முதல்  கல்லறை வரைக்கும் இமையாய் காத்து வளர்த்த தன்  பெற்றோருக்கு இந்நூலைச் சமர்ப்பணம் செய்யும் கவிதையுடன் தொடங்கும்  இக்கவிதைத் தொகுப்பு, உணர்வோடு கலந்த கவிதைகளின் ஒரு தொகுப்பு. இலக்கிய வெளியில் எதையும் அழகுணர்வோடு வெளிப்படுத்த உதவுவது கவிதை மொழி என்பதற்கு மீண்டும் ஒருமுறை இந்த நூல் சான்று கூறி நிற்கிறது. காவ்யா பதிப்பகத்தின் வெளியீடான இந்த நூலில் தன் நெஞ்சில் இட்ட அழியாத கோலங்களைப்  படம் பிடித்து வழங்கியுள்ளார் கவிஞர் சுகந்தி அன்னத்தாய்,

தனது தாய்மொழி, பெற்றோர், ஆசிரியர், உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, இயற்கை, அன்புக்குரிய தலைவர்கள்  என அனைவர் மீதும்  கவிஞர் சுகந்தி அன்னத்தாய் அவர்கள் கொண்டுள்ள அன்பும் மதிப்பும் கவிதைகளாக வெளிப்பட்டு படிப்பவரைப் பரவசமூட்டுகிறது. தன்னுடன் படிப்பவரையும் அவரது சிறுவயது நாட்களுக்குக் கடத்திச் செல்லும் வித்தையைக் கற்றுள்ளார் கவிஞர். கவிதைகள் சிலவற்றில்  புது முயற்சிகளையும் புகுத்தியுள்ளார்.

திருக்குறள்  அடியொட்டி 'ஆசிரியர் மாட்சி' என்ற 10 குறட்பாக்களை உடைய அதிகாரம் குறள்  நூலிலிருந்து தப்பி வந்த அதிகாரம் போலச் சிறப்புடன் ஆசிரியப் பணியின் சிறப்பைப் போற்றுகிறது, ஆசிரியரின் கடமையைக் கூறுகிறது.
         குறைகளைந்து கற்பிக்கும் ஆசான் மாணவர்க்கு
         இறையென்று போற்றப் படும்.

மாலையாகி பூஜைக்குச் செல்லும் மலர்களுடன் ஒப்பிட்டு,  மலர்போன்ற தமிழ்மொழி  செம்மொழித் தகுதி பெறும் சிறப்பை இணைத்துக் காட்டும் பாங்கும்  சிறப்பு.  தமிழைத் தன் நட்பாக, ஆசிரியராக  உருவகிக்கும் முறையும் சிறப்பு.  உருவகங்கள் மிக எளிதாகக் கவிஞருக்குக் கைவருகின்றது!  சுகம்தேடா சுமைதாங்கி என்கிறார் அம்மாவை. அவ்வாறே அன்னையும் ஆசானும் இணைந்து மனிதரை உயர்த்துவார்கள் என்ற கருத்தும் சிறப்பு.    

குழந்தைகள்தானே என நாம் எளிதாகக்  கடந்துவிடும் மழலைகளை, அவர்களை  முன்மாதிரியாகக் கொண்டு நாம் அவர்களிடம் கற்க வேண்டிய பல நற்குணங்கள் உள்ளன, அதனால் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என நினைவூட்டுகிறார். அது போன்றே முதியோரின் முக்கியத்துவத்தையும் முன்வைக்கிறார்.  ‘தலைமுறை இடைவெளி’யென பாரா முகமாய் நடத்திடாமல் பாசத்துடன் பண்பாய் நடத்திட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

ஊரின் அடையாளமாக இருந்த மரங்கள் பலவும், வயல்கள் பலவும் நகரமயமாக்கலில்  மறைந்து போனதை மனம் உலுக்கும் வண்ணம் கூறுகிறார்.  ஆண்டுகள் பல கழிந்து சொந்த ஊருக்குப் பசுமையான நினைவுகளோடு திரும்பியவர்,  ஊரின் புதிய கான்கிரீட் கட்டிடப்  பரவலைக் கண்டு மலைப்பவர், தனது இளமைக்கால நினைவுகள் கருகிப்போன அதிர்ச்சியை அனுபவித்தவர் எவரும் இந்த வரிகளுடன் உணர்ச்சிப் பூர்வமாகக் கலந்து போவார்கள்.  

மரங்கள் என்று மட்டுமல்ல, "பொருநை நதியெனும் பெயர் பெற்றவள்- இன்று கருணையில்லா மனித செயலால் துயரில் மூழ்கினாள்!" என்று மணற் கொள்ளையால் பொலிவிழந்த தாமிரபரணியைக் கண்டும்  கலங்குகிறார்.
      நாளைய வாழ்வின்
      நிழலைத் தேடலில்
      இன்றைய வாழ்வின்
      நிஜங்கள் தொலைத்தோம்!
என்ற வரிகள் இக் கையறு நிலையின் எதிரொலி.

அவரது இளம்பருவத்து நாட்களின் கவிதைகள் மூலம் நம் பள்ளி நாட்களையும் விடுமுறை நாட்களையும் நெஞ்சில் அசைபோட வைக்கிறார் . மகிழ்வின் நாட்களில் அவருடன் நாமும் இணைந்து மகிழ்ந்து களிக்கலாம்.  நினைக்கையில் நெஞ்சமெல்லாம் நிறையத்தான் செய்கிறது.

ஆழம் காண இயலா பெண்மனம் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவகை சிந்தனைகளுடன் போர்க்களமாவதைச் சித்தரிக்கும் முறை அழகிய கவிதையாக உருவெடுத்துள்ளது. வெற்றியின் வித்து, வாழ்க்கை ஒரு வரம் கவிதைகள்  எளிய சொற்களில் அமைந்த தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகள்.

உழைத்தும் வெள்ளாமை வீடு வந்து சேராத நிலையில் உழவரின் கலைந்த கனவு, கிராமத்துக் கணவன்-மனைவியின் காதல் பாடல், கடல் கடந்த காதல் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுகதை. இவற்றில் நம் நெஞ்சை நெகிழவைப்பது  நன்றிக்கடன்-முத்துராசுவின் அன்பும் பாசமும் கடமையுணர்வும்.

ஓசை என்ற சொல்லுக்குப் பலபொருள்கள் அமையுமாறு அமைக்கப்பட்ட தமிழின் இன்பம் கவிதையும்,  நீரின்றி அமையாது உலகு கவிதையும், தமிழ்நேசன் கண்ணதாசன் கவிதையும் வித்தியாசமான முயற்சியால் கவனத்தைக் கவரும் கவிதைகள்.  

ஆளுமைகளைப் போற்றும் விதமாக அமைந்துள்ள பூலித்தேவன்,  வேலு நாச்சியார்,  பசும்பொன்னார், காந்தி, நேரு, கலாம், காமராஜர்,  கருணாநிதி, பாரதி, கண்ணதாசன், வைரமுத்து ஆகியோர் மீது பாடப்பட்ட கவிதைகள் ஓர் அருமையான பாடல் தொகுதி. குறிப்பாக . . .
      சொத்து நிலையென்று சொல்லவந்தால்
      இருபாலருக்கும் பொதுவில் வைக்க
      சட்டம் இயற்றிய திராவிடத் துணைவன்
என்று பேனாவின் கூர்முனையால் தமிழ் இலக்கியங்களில் வாழும் கலைஞர் எனும் காவியத்தைப்  பாராட்டும் பாங்கு படித்து மகிழத்தக்க வரிகள்.

சமர்ப்பணம் தொடங்கி அறுபத்து ஐந்துக்கும் மேற்பட்ட கவிதைகளைப் பொதிந்து வைத்துள்ள முனைவர் சுகந்தி அன்னத்தாய் அவர்களின்  "அடுக்குப் பானை' கவி நூலைப் படித்த பிறகு நம் உறவுகளைப் போற்றுவோம்... நம்  உணர்வுகளைப் போற்றுவோம் என்று நம்மை நாமே நினைவூட்டிக் கொள்ளமுடியும் என்பது உறுதி. அருமையான கவிதை நூலைப் படைத்தளித்த கவிஞர் சுகந்தி அன்னத்தாய் அவர்களுக்குப் பாராட்டுகள்.




நன்றி:
தமிழணங்கு 
பிப்ரவரி,  2024


#நூல் மதிப்புரை, #தமிழணங்கு, #Themozhi