Monday, July 4, 2022

18 ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றுப் பதிவுகள்

18  ஆம் நூற்றாண்டின்  இந்திய வரலாற்றுப் பதிவுகள்


தன் இந்தியப் பயணம் குறித்து ஓர் இந்தியப் பயணக் குறிப்பு எழுதுவது இந்தியாவில் கால் பதித்த அயல்நாட்டினர் பலரின்  வழக்கமாகவே இருந்தது.  அப்பயண வரலாறுகளின் மூலம் நாம் கடந்த கால இந்தியாவைப் பற்றியும், மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்வு முறை பற்றியும் அயல்நாட்டவர்  பார்வையில் அறிய முடிவது பயனுள்ளதாகவும் இருக்கிறது. வணிக நோக்கிலும்,  சமயம் பரப்பும் நோக்கிலும்  18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களில் பலரும்  தங்கள் வழக்கத்திற்கு முற்றிலும் மாறான பண்பாடு, சமயம், மொழி, வாழும்முறை, பழக்க வழக்கங்கள் கொண்ட இந்தியாவால் ஈர்க்கப்பட்டு தாங்கள் கண்டவற்றை நூலாக எழுதி ஆவணப்படுத்திச் சென்றார்கள். கேப்ரியல் டெல்லன், சார்லஸ் டெல்லன், ஜான் ஹென்றி குரோஸ், பாலினஸ் பார்த்தலோமியோ  (Gabriel Dellon —1649, Charles Dellon —1698, John Henry Grose—1772, Paulinus S. Bartholomaeo—1796) போன்ற பலரும்  'கீழை இந்தியப் பயணம்' (A Voyage to the East Indies) என்ற தலைப்பில் இந்தியப் பயண நூல் எழுதியுள்ளார்கள்.  
 
இந்தியாவிற்குப் பயணித்து, 1776 — 1789 ஆண்டுகளுக்கு  இடைப்பட்ட கால கட்டத்தில் இந்தியாவில் வாழ்ந்த ஆஸ்திரிய நாட்டுச் சமயப்பணியாளரான   'பாலினஸ் பார்த்தலோமியோ' (Paulinus S. Bartholomaeo /Paulinus of St. Bartholomew/ Paolino Da San Bartolomeo) என்பவரும் அவர்களில் ஒருவர். இவர் பெயர் பல்வேறு வகைகளில் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொருவகையாக வெவ்வேறு முறையில் எழுதப்பட்டும் உச்சரிக்கப்பட்டும் வருகிறது. இவர் தமிழகத்தில் இருந்த காலம்  தமிழகத்தில் புதுக்கோட்டையை  இராயரகுநாத தொண்டைமான் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம்.


இவர் ஐரோப்பாவில் முதன்முதலில் வெளியான  சமற்கிருத இலக்கண நூலின் (Sidharubam seu Grammatica Samscrdamica /சித்தரூபம் அல்லது சமற்கிருத இலக்கணம்) ஆசிரியர் என்ற சிறப்பிற்குரியவர். சமற்கிருதம் ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழி என்ற தொடர்பைக் காட்டிய ஆரம்பக் கால  ஆய்வாளர்களில்  ஒருவர் பாலினஸ் பார்த்தலோமியோ.  அத்துடன் இந்தியா, இந்தியாவில் சமயம், பிராமணிய அமைப்பு என்ற பொருண்மைகளில் இலத்தீன் மொழியில் 20க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களையும் எழுதிய இந்தியவியல் ஆய்வாளர் என்பதும் இவரது சிறப்பு.

இந்தியாவின் மலபார் பகுதி என்ற தமிழகப் பகுதிக்கு  மறை பரப்பாளராக அனுப்பப்பட்டார். சென்னை, கொச்சி பகுதிகளில் இவர் பணிபுரிந்ததால் மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளையும் அறிந்து கொண்டார், "பவுலீனுஸ் பாதிரி"  என்று தமிழக, மலையாள மக்கள்  இவரைக் குறிப்பிட்டனர்.  பாலினஸ் பார்த்தலோமியோ தனது பதின்மூன்று ஆண்டுக்கால இந்திய வாழ்வில் கண்டவற்றை ஒரு  நூலாக எழுதியுள்ளார்.  'கீழை இந்தியப் பயண அனுபவங்கள்' என்ற பொருள் படும் வகையில், (Viaggio alle Indie Orientali) என்னும் தலைப்பில் 1796இல் இத்தாலிய மொழியில் வெளியிட்டார். புகழ் பெற்ற இந்த நூல் பிரெஞ்சு, ஜெர்மன் எனப் பல ஐரோப்பிய மொழிகளிலும்  மொழிபெயர்க்கப் பட்டு வெளியிடப்பட்டது.  ஜெர்மன் மொழியில் வெளியான நூலை  வில்லியம்  ஜான்ஸ்டன் (William Johnston) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1800 ஆம் ஆண்டு வெளியிட்டார்.  

இவருக்கு முன்னர் இந்தியாவிற்கு வருகை தந்தவர்கள் வணிகர்கள், கடலோடிகள், போர்வீரர்கள் போன்ற பின்னணியுடன் இருந்தவர்கள்.   கல்வியில், ஆய்வில் ஆளுமை  அற்றவர்கள்.  எனவே அவர்கள் எதிர்கொண்ட ஊர்கள், இடங்கள் பெயர்களைத் தங்கள் காதில் ஒலித்தவண்ணம்  எழுதிச் சென்றார்கள்.  எனவே ஓர் இடத்திற்கு வேறு வேறு பெயர்கள் அறியப்பட்டு குழப்பம் விளைவித்தது. பாலினஸ் பார்த்தலோமியோ  இவற்றைத் திருத்தி வழங்க முயற்சி மேற்கொண்டார்.  கொரமண்டல் என்பது சோழமண்டலம்,  பாண்டிச்சேரி என்பது புதுச்சேரி, (கேப்) காமரின்  என்பது குமரி என்று சரியான உச்சரிப்புகளைத்  தந்து  உதவினார். நூலை  இரண்டு பாகங்களாகப் பிரித்து முதல் பாகத்தில் தமிழகப் பகுதி குறித்த பொதுவான செய்திகளைப் பத்து அத்தியாயங்களாகவும்,   நூலின் இரண்டாம் பாகத்தில் மக்களின் வாழ்வியலைக் குறித்த செய்திகளை 13 அத்தியாயங்களிலும் தந்துள்ளார்.

பாலினஸ் பார்த்தலோமியோ, மாலுமி  பெர்டாட் (Berteaud) செலுத்திய எய்ம்மபில் நானெட் என்ற கப்பலில் ஆறு மாதங்கள் பயணித்து  ஜூலை 26, 1776 இல்  புதுச்சேரியில் கரை இறங்குகிறார்.  அந்த ஆண்டில் ஆங்கிலேயர்களின் கப்பல் படை புதுச்சேரியை குண்டு வீசித் தாக்கி அழித்திருந்தது. பாலினஸ் பார்த்தலோமியோ தங்கவிருந்த தேவாலயம் உட்பட அழிக்கப்பட்டிருந்தது.  அவர்களுக்கு அது எதிரியின் தேவாலயம் என்ற எண்ணம் மட்டுமே, தங்கள் கிறிஸ்துவ  சமய தேவாலயம் என்ற கருத்து இருந்திருக்கவில்லை. ஆகவே அங்கு தங்குவதற்கான போதிய இடம் இல்லாத நிலையில் தமிழர்கள் வாழும் பகுதியில் தங்குகிறார்.  இந்தியர்கள் போல கோவிலையும் வழிப்போக்கர் தங்கும் சத்திரத்தையும் அழிப்பது அறமல்ல என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று குறிப்பிடுகிறார் பாலினஸ் பார்த்தலோமியோ.  அந்நாளில் பிரெஞ்சு புதுச்சேரியின் ஆளுநராக இருந்தவர்  'லா  டி லாரிஸ்டன்' (Marquis Law de Lauriston) என்பவர்.  பாலினஸ் பார்த்தலோமியோ புதுச்சேரியில் ஒன்றரை மாதம் தங்கிவிட்டு  செப்டெம்பர் 8, 1776  தனது பயணத்தைத் தொடர்கிறார்.



அவர் வந்திறங்கிய கால  கட்டத்தில் பத்து பிரெஞ்சு கப்பல்கள் புதுச்சேரியில் நங்கூரமிட்டு இருந்திருக்கிறது.  மது வகைகள், இரும்பு, பிரெஞ்சு துணிவகைகள், துப்பாக்கிகள், பீரங்கிகள் அவற்றில் வந்து இறங்கியிருக்கின்றன. ஆனால் இவை எவையுமே இந்தியர்களுக்குத் தேவையாக  இருந்திருக்கவில்லை.  அவர்களுக்கு உள்ளூர் உடை வகைகள் இருந்திருக்கின்றன.  பிரெஞ்சு கப்பல்களில் வந்த பொருட்களை சென்னை மற்றும் வங்கத்தில் வாழ்ந்த ஆங்கிலேயர்களிடம் விற்பனை செய்திருக்கிறார்கள்.  இவர்களிடம் இருந்து வாங்கப்பட்ட  பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் வைத்தே  ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்துள்ளார்கள்; சொந்தக் காசில் சூடு போட்டுக் கொள்ளும் படலம்!! அத்துடன் இவ்வாறு விற்பனை செய்த வருவாய் இந்தியாவிலேயே தங்கிவிட்டிருக்கிறது.  இந்திய மஸ்லீன், பருத்தி ஆடைகள், காடா துணிகள்,  கைக்குட்டைகள்,  சர்க்கரை, மிளகு, பட்டை, ஏலக்காய்,  முத்துக்கள், மாணிக்கக் கற்கள், ஆண் பெண் அடிமைகள்(பக்கம் 11-12) என வாங்கி தங்கள் நாட்டிற்கு  அனுப்பியிருக்கிறார்கள்.

அக்காலத்துப் புதுச்சேரியில்  ஐரோப்பியர்களும்,  இஸ்லாமியரும், தமிழர்களும் தனித்தனியே வசித்தனர்.  மக்களைப் பொதுவாகக் குறிப்பிடும் பொழுது அவர்கள் தோன்றிய நாட்டின் அடிப்படையில் இந்தியர்கள் என்று குறிப்பிடுகிறார் பாலினஸ் பார்த்தலோமியோ.  சமய அடிப்படையில் குறிப்பிடும் பொழுது உள்ளூர் மக்களை   'இந்துக்கள்' என்று குறிப்பிடவில்லை 'பேகன்'(pagan)  என்று சுட்டுகிறார், அதாவது  பல்வேறு  சமய  நம்பிக்கை வழிபாட்டு முறைகளைக் கொண்டவர் என்று குறிப்பிடுகிறார்.  இதைக்   கிறிஸ்துவ, இஸ்லாமியப் பிரிவில் அடங்காத தமிழர்கள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.  அவர் இந்தியாவிற்கு வந்த 18 நூற்றாண்டின்  இறுதிப்பகுதியானது சைவம் வைணவம் நாட்டார் வழிபாடு போன்ற பல பிரிவினரை இணைக்கும் 'இந்து'  என்ற சொல் பயன்பாட்டிற்கு வராத  ஒரு காலமாக இருந்திருக்கிறது  என்பது அவரது குறிப்பினால் தெளிவாகிறது. தமிழர்களுக்குள் சாதி, இனம், குலம், சமய சண்டைகள் சச்சரவுகள் எழும்பாமல் இருக்கவும், சட்டத்தை மதிக்குமாறு மேற்பார்வை செய்யவும் அவர்களிலேயே ஒருவர் தலைவராகவும் நியமிக்கப்பட்டார், இவரது கடமை மக்களிடம் அமைதி நிலவுமாறு  மேற்பார்வை செய்வது. இந்த வழக்கம் கேரளத்திலும் இருந்திருக்கிறது.

இவ்வாறு பல வேறுபாடுகளைக் கொண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் அவரவர்  வழியில் அமைதியாக வாழும் வழக்கம் இருக்கும் பொழுது எல்லோரையும் "ஒரே  நாடு ஒரே சமயம்" என்று இணைக்க வழியில்லை என்று 18 ஆம் நூற்றாண்டிலேயே சொல்லியுள்ளார் பாலினஸ் பார்த்தலோமியோ!
("இங்குள்ள ஒவ்வொருவரும் அவரவர் வழியில் வாழவும் , அவரவர் நம்பிக்கையைப் பின்பற்றவும் அனுமதிக்கப்படுகிறார்கள் ; அதனால் ஒரு பொது மத அமைப்பில் பல வகுப்புகளும், ஆயிரக்கணக்கான மக்களும் ஒன்றிணைவது சாத்தியமில்லை" / Every one here is allowed to live in his own manner, and to enjoy his own belief; as it is not possible that so many classes and so many thousands of people  should  ever  unite  in  one  common  system  of  religion — Page: 8).  

மேற்காணும் பாலினஸ் பார்த்தலோமியோ எழுதிய வரிகளுக்கு விளக்கக் குறிப்பு  எழுதிய  யோஹன் ரெய்ன்ஹோல்ட் ஃபார்ஸ்டர் (Johann Reinhold Forster); தம் குறிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடல் வரிகள் நமக்கு நினைவிற்கு வரும் வகையில்,  பல நாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள், பல்வேறு பழக்க வழக்கங்களை, வாழ்க்கை முறைகளை, சமயக் கருத்துகளைக்  கொண்ட மக்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால்  பரந்த நோக்கு உள்ளவர்களாகவும் சகிப்புத் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்ற உண்மையை நாம் கவனித்திருக்கலாம்  என்று விளக்கம் தந்துள்ளார்.

புதுச்சேரி நகரின் மேற்கு வாயிலைக் காக்கும் பணியில் இருந்த  இந்தியச் சிப்பாய்கள் எல்லாச் சமய சாதி பின்புலம் கொண்டவர்களாகவும்  இருந்தனர் என்று குறிப்பிடுகிறார். புதுச்சேரி கோட்டையில் 4000 வீரர்கள்  இருந்திருக்கிறார்கள்.  புதுச்சேரியோ அல்லது சென்னையோ கேரளத் துறைமுக நகர்களுடன் ஒப்பிடும் அளவிற்கு வளமை நிறைந்தவை அல்ல என்கிறார் பாலினஸ் பார்த்தலோமியோ. சோழமண்டலத்தில் கடற்கரை அடுத்த சமவெளியில் தென்னை  மரங்களும் வயல்வெளிகளும் கொஞ்சம் தானியம் மூலிகைகள்  என்ற அளவில் மட்டுமே  வளர்வதுடன் வெப்பம் நிறைந்த மணல்வெளியாக இருந்திருக்கிறது.  

அவர் புதுச்சேரியில் தங்கி இருக்கையில் அவரை வியப்பில் ஆழ்த்தியதாகச் சொல்வது, அவரது புத்தக அலமாரியைத் திறந்து ஒரு நூலைப் படிக்க எடுத்த பொழுது  அதன் மேல் கறையான்கள் பல ஊர்ந்து கொண்டிருந்தது என்பதும் ஒன்று.  அவருடைய நூல்களும் சட்டைகளும், அங்கிகளும், காலணிகளும்  கறையான்களால் அரிக்கப்பட்டிருந்தன. ஆனால் மலிவான விலையில் புதுச்சேரியில் ஒரு ரூபாய்க்குத்  தரமான ஒரு பருத்தி சட்டையை அவரால் வாங்க முடிந்திருக்கிறது. அதன் பிறகு அவர் தலை முதல் கால்வரை பருத்தி ஆடைகள் அணியும் வழக்கத்திற்கு மாறுவதற்கு இந்த நிகழ்ச்சி வழி வகுத்திருக்கிறது.   மற்றொருமுறை தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் காதில் பூரான்  சென்றுவிட, அவர் விழித்தெழுந்து வலியால் துடித்து அலற அவர் காதில் கசப்பான மருந்தை ஊற்றி, பூரானை வெளியே எடுத்து மருத்துவம் பார்த்துள்ளார்கள். அந்த மருந்தைத்  தயாரிக்கும் முறையையும் விளக்குகிறார் பாலினஸ் பார்த்தலோமியோ.  

அப்பகுதி மீனவர்களை 'முக்குவர்' என்கிறார்.  தமிழை தமுலிக்  (Tamulic Language) என்று குறிப்பிடுகிறார்.    அவர் தமிழர்கள் பகுதியில் தங்கியிருந்த பொழுது இந்தியர்கள் சிலர் நன்கு பிரெஞ்சு மொழி பேசுவதையும், கிறித்துவ மறை பரப்பாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இலத்தீன் மொழி நன்கு பேசுவதையும் கவனித்துள்ளார். இயல்பாகவே ஐரோப்பிய மொழிகளை நன்கு கற்பவர்களாக இந்தியர்கள் இருப்பதை உணர்ந்து கொள்கிறார்.  அவர்களில் சிலர் சமஸ்கிருதம் பற்றி உயர்வாக அவருக்கு அறிமுகப் படுத்தும் பொழுது அந்த மொழியைக் கற்க இவர் விரும்புகிறார்.  

இந்தியர் சிலர் கிறிஸ்துவமும் வைதீகமும் அடிப்படையில் சில ஒற்றுமையான கூறுகளைக் கொண்டிருப்பதாக எண்ணியிருப்பதையும்,  குறிப்பாகக் கிறிஸ்துவம் சொல்லும்  டிரினிட்டி என்பது பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற வேறு வடிவ விளக்கக் கருத்துதான், அதனால் கிறித்துவச் சமயத்திற்கு மாறத்  தேவையில்லை என்ற எண்ணம் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார் .  இஸ்லாமியர், தமிழர், கிறிஸ்துவர் என இந்திய ஆண்கள் அனைவரும் ஒரே போன்ற பருத்தி ஆடை அணிவதால் அவர்கள் நெற்றியில் உள்ள சமயக்குறியை  வைத்தோ அல்லது மார்பில் அணிந்திருக்கும் அணியின் மூலம் அடையாளம் காண  வேண்டும் என்கிறார் (பக்கம் - 17). இதிலிருந்து அக்கால இஸ்லாமியரிடம் கைலி அணியும் வழக்கம் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.  

இவ்வாறாகப் பல சுவையான தகவல்கள் நிரம்பிய நூலாக, இயற்கை, பருவகால மாற்றங்கள், புவியமைப்பு, அரசியல், சமயம் என 18  ஆம் நூற்றாண்டில்  இந்திய வாழ்வுமுறையை  பாலினஸ் பார்த்தலோமியோ நூலின் மூலம் அறிய முடிக்கிறது.



A Voyage to the East Indies — (Containing an Account of the Manners, Customs, etc of the Natives, with a Geographical Description of the Country)
Author:  Paulinus S. Bartholomaeo
Paulinus S. Bartholomaeo's book Translated by William Johnston, and Illustrated by Johann Reinhold Forster, Publication date 1800
https://archive.org/details/b22037202/mode/2up

நன்றி: தமிழணங்கு
ஜூலை, 2022


#தமிழணங்கு, #Themozhi, #வரலாறு