Sunday, March 24, 2013

பொதுவில் வைப்போம்

 பொதுவில் வைப்போம்



நாம் பிறந்தோம்
நன்கு வளர்ந்தோம்
தவழ்ந்தோம் நடந்தோம்
பள்ளி சென்றோம்
படித்தோம் விளையாடினோம்
இருவர் வாழ்விலும் பேதம் இல்லை
இருவர் வளர்ப்பிலும் பேதம் இல்லை
இனிமையான நாட்கள்தான் அவை
பசுமை நிறைந்த நினைவுகள்

படிப்பில் சிறந்தவள்
எனப் பாராட்டப் பெற்றேன்
பரிசுகள் வாங்கினேன்
விளையாட்டில் சிறந்தவள்
எனப் பாராட்டப் பெற்றேன்
பதக்கங்கள் வாங்கினேன்
ஆடல் பாடல் என எதையும்
விட்டு வைக்கவில்லை நான்
அவற்றிலும் விருதுகள் வாங்கினேன்

திருமணக்காலம் வந்தது
என் மகள் பதக்கங்கள்
வாங்கியவள் என்றார் தந்தை
எவ்வளவு சவரன் தேறும்?
என்றார் உமது தந்தை
என் மகள் கலைகளில்
வல்லவள் என்றார் தாய்
சமையல் கலையை அறிவாளோ?
என்றார் உமது தாய்

உமக்கும் சமையல் தெரியுமா?
கேட்கத் தோன்றவில்லை எனக்கு !
கேட்கவில்லை என் பெற்றோரும் !!
மணந்தோம் மகிழ்ந்தோம்
எதிர்காலத் திட்டமிட்டோம்
பணிக்குச் சென்றேன் நானும்
என் கல்வியறிவு வீணாகவில்லை
வந்தது வருமானம் கணக்கிட்டோம் நாம்
நம் சந்ததியின் எதிர்காலம் சிறக்குமென

மாலைவரை கடும்  உழைப்பு
தீராத சலிப்பு களைப்பு
மேலதிகாரியின் முறைப்பு
வீடு திரும்பியது சோர்வுற்ற உடல்
ஓய்வு விரும்பியது அசதியான மனம்
இருக்கையில் சரிந்து சற்றே
இளைப்பாறச் சொன்னது அறிவு
இரவுணவு சமைக்கவில்லையா?
இரக்கமற்று கேட்டது உமது குரல்

உழைத்த களைப்பு ஏன்
இருவருக்கும் பொதுவாக இல்லை
புரியவில்லை என் மனதுக்கு
பயிலும் படிப்பில் வேறுபாடில்லை
செய்யும் பணியிலும் வேறுபாடில்லை
சமையற்கலை என்ன பெண்களுக்கு மட்டுமே
என்ற பிறந்த வீட்டுச் சீதனமா?





நன்றி:   திண்ணை
மார்ச்  24, 2013

#கவிதை, #திண்ணை,  #பெண்ணியம் , #Themozhi