Wednesday, November 27, 2024

பழமொழிகளும் வார நாட்களும்


நாள், மாதம், ஆண்டு இவற்றுடன் ஒப்பிடுகையில்; காலக்கணக்கிடலில் 'வாரநாட்கள் என்ற கால அலகு' வழக்கத்திற்கு வந்தது மிகவும் பிற்காலம் என்றாலும் அவை குறித்த பழமொழிகளும் பல உள்ளன. பட்டறிவைச் சுருங்கக்  கூறுவனவாகவும், பல தலைமுறைகளுக்குக் கடத்தப்படுபவனவாகவும் பழமொழிகள் அமையும்.  நான்கு தொகுதிகள் கொண்ட 'தமிழ்ப் பழமொழிகள்' என்ற நூலில், கி.வா.ஜகந்நாதன்‌  25,000 பழமொழிகளைத்  தொகுத்துள்ளார். அவற்றிலிருந்து சேகரித்த வாரநாட்கள் குறித்த பழமொழிகள் சில இங்குக் கொடுக்கப் பெற்றுள்ளன.

வாரநாட்களுக்கும் வானியல் கோள்களின் நகர்வுக்கும் எந்த ஒரு தொடர்பு இல்லை என்பதை மிகத் தெளிவாக நாம் அறிகிறோம். இருப்பினும், வானியலை  அடிப்படையாகக் கொண்டு எழுந்த, ஜோதிடம்  என்ற 'பொய் அறிவியல்' (Pseudoscience) வகையின் அடிப்படையில் இவை அமைந்தனவாகவும், அறிவியல் அடிப்படையற்ற மூடநம்பிக்கைகளைச்  சார்ந்தனவாகவும் பல பழமொழிகள் இருப்பதைக் காண முடிகிறது.  


ஞாயிறு :
ஞாயிற்றுக்‌ கிழமை பிறந்தவர்‌ நாய்‌ படாத பாடு படுவர்‌.
ஞாயிற்றுக்‌ கிழமை சென்றால்‌ நாய்‌ படாத பாடு.
ஞாயிற்றுக்கிழமை ருதுவானால்‌ தாய்பாடு படாத பாடுதான்‌.
ஞானிக்கு இல்லை, ஞாயிறும்‌ திங்களும்‌.
நல்ல வேளையிலே ஞாயிற்றுக்‌ கிழமையிலே.
ஞாயிற்றுக்‌ கிழமை நாய்கூட எள்ளுக் காட்டில்‌ நுழையாது.
வெள்ளி ஞாயிறு மேற்கே சூலம்‌.

திங்கள் :
ஞானிக்கு இல்லை, ஞாயிறும்‌ திங்களும்‌.
திங்கள்‌ சனி கிழக்கே சூலம்‌.
திங்கள்‌ துக்கம்‌ திரும்பி வரும்‌.
திங்களில்‌ கேட்பார்‌ திரும்பக்‌ கேட்பார்‌.

செவ்வாய் :
செவ்வாய்‌ புதன்‌ வடக்கே சூலம்‌.
செவ்வாய்‌ வெள்ளி செலவிடாதே.
செவ்வாயோ? வெறுவாயோ?
ஆடிச்‌ செவ்வாய்‌ தேடிக்‌ குளி; அரைத்த மஞ்சளைத்‌ தேய்த்துக்‌ குளி.
ஆடிச்‌ செவ்வாய்‌ நாடிப்‌ பிடித்தால்‌ தேடிய கணவன்‌ ஓடியே வருவான்‌.
ஆதன கோட்டைக்கும்‌ செவ்வாய்க்‌ சிழமையாம்‌.
எட்டுச்‌ செவ்வாய்‌ எண்ணித்‌ தலை முழுகில்‌ தப்பாமல்‌ தலைவலி போம்‌.
கேட்டை, மூட்டை, செவ்வாய்க்‌ கிழமை.

புதன் :
சனியும்‌ புதனும்‌ தங்கும்‌ வழி போகக்‌ கூடாது.
சனியும்‌ புதனும்‌ தன்னை விட்டுப்‌ போகாது.
மறைந்த புதன்‌, நிறைந்த தனம்‌.
செவ்வாய்‌ புதன்‌ வடக்கே சூலம்‌.
பிறந்த நாளும்‌ புதன்‌ கிழமையும்‌.
புதன்‌ கோடி தினம்‌ கோடி.
பொன் ‌ அகப்பட்டாலும்‌ புதன் ‌ அகப்படாது.
பொன்‌ கிடைத்தாலும்‌ புதன்‌ கிடைக்காது.

வியாழன்:
வேதம்‌ பொய்த்தாலும்‌ வியாழன்‌ பொய்க்காது.
தங்கின வியாழன்‌ தன்னோடு மூன்று பேர்‌.
வெள்ளி இருக்க வியாழன்‌ குளித்தாளாம்‌.

வெள்ளி :
அகதி பெறுவது பெண்‌ பிள்ளை; அதுவும்‌ வெள்ளி பூராடம்‌.
கல்லுக்கும்‌ முள்ளுக்கும்‌ அசையாது வெள்ளிக்கிழமைப்‌ பிள்ளையார்‌.
கொள்ளிக்கு எதிர்‌ போனாலும்‌ வெள்ளிக்கு எதிர்‌ போகலாகாது.
செவ்வாய்‌ வெள்ளி செலவிடாதே.
பார்க்கக்‌ கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
வெள்ளிக்கிழமை கொள்ளிக்கு ஆகாது. 
வெள்ளிக்குப்‌ போட்டதும்‌ கொள்ளிக்குப்‌ போட்டதும்‌ சரி.
வெள்ளி ஞாயிறு மேற்கே சூலம்‌.
வேகிற வயிற்றுக்கு (/உடலுக்கு)  வெள்ளி என்ன செவ்வாய்‌ என்ன?

சனி :
கொசுவே, கொசுவே தலை முழுகு; நான்‌ மாட்டேன்‌, சனிக்கிழமை.
சண்டை பிடிக்கிறவனுக்குக்‌ கூடச்‌ சனிக்கிழமை ஆகாது.
சனியும்‌ புதனும்‌ தங்கும்‌ வழி போகக்‌ கூடாது.
சனியும்‌ புதனும்‌ தன்னை விட்டுப்‌ போகாது.
சனிப்‌ பிணம்‌‌ தனிப்‌ போகாது. சனிப்‌ பிணம்‌ துணை தேடும்‌.
திங்கள்‌ சனி கிழக்கே சூலம்‌.

மக்கள் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் சார்பு நிலை காரணமாக, தங்கள் நம்பிக்கைகளை உறுதி செய்யும் தகவல் கிடைத்தால், உடனே தங்களுக்குக் கிடைக்கும் அந்தச் செய்தியையே நம்ப விரும்புகிறார்கள். அதனைப் பற்றி மேலும் ஆராய்ந்து அது உண்மைதானா எனத் தெரிந்து கொள்ளும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றுவதில்லை. மேலும், அதற்கு மாறான தகவல் கிடைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிடும் நிலைப்பாடு (confirmation bias) காரணமாக உண்மையற்ற நம்பிக்கைகள் தொடர்கின்றன.  முன்னோர் மொழி என்று கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றாமல்  ஒவ்வொன்றையும் ஆராயும் மனப்பான்மை கொண்டு ஆராய்ந்து பொய்யான நம்பிக்களைத் தவிர்த்தால், மூடநம்பிக்கைகள் தானே அழிந்துவிடும். 


 நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 260
11/27/2024      பழமொழிகளும் வார நாட்களும்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi 


Wednesday, November 20, 2024

கிழமைகளும் வாரங்களும்


தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் மதுரை எரியுண்ட நாளைக்  குறிப்பிடும் பாடலில், அந்நாள் ஆடி மாதம் வெள்ளிக் கிழமை என்ற செய்தி சொல்லப்படுகிறது.

      ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து

      அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று

      வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண

      உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்

      உரையு முண்டே நிரைதொடி யோயே

இப்பாடலில், ஆடி மாதம் தேய்பிறை எட்டாம் நாளும் கார்த்திகையும் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில் பாண்டியனும்  அழிவான், மதுரையும்  எரிந்து அழிந்து போகும் என்று முன்னரே நிமித்தக் கூற்று ஒன்று உள்ளது  என்று மதுரை நகரத்தின் தெய்வம் கண்ணகியிடம் கூறுகிறது.

ஏழு நாட்கள்  கொண்ட வாரம் என்ற கால அலகிற்கு  வானியல் அடிப்படை கிடையாது, மக்கள் பண்டைய நாட்களில்  அறிந்திருந்த கோள்கள் ஏழும் வாரநாட்களாக  வரிசைப் படுத்தப்பட்டு செயற்கையாக வாரம் என்ற ஒரு கால அலகீடு உருவாக்கப்பட்டது. இது காலத்தை  வசதியான கூறாகக் கணக்கிடப் பயன்பட்டது.  வாரம் என்ற முறை முதலில் சற்றொப்ப 4300 ஆண்டுகளுக்கு முன்னர்  மெசபடோமியா பகுதியில் உருவானது என்றும்,   சுமேரியர்களும் பாபிலோனியர்களும் பயன்படுத்தினர் என்றும்  தெரிகிறது. பிறகு, அவர்களிடம் இருந்து பிற பகுதிகளுக்குப் பரவியது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். யூத மதம், கிறிஸ்துவ மதம் போன்றவற்றில் உள்ள கடவுள் உலகைப் படைத்த கதையிலும் வாரநாட்கள் இடம் பெற்றது. 

பல நூறாண்டுகளாக ரோமானியர்கள் 8 நாட்கள் கொண்ட வாரமும் வைத்திருந்தனர். ஆனால், இன்றைய வழக்கில் இருக்கும் ஞாயிறு  தொடங்கி  சனியில் முடியும் ஏழு நாட்கள் கொண்ட கால அலகு கி.பி.321இல் ரோமானியப் பேரரசர்  கான்ஸ்டன்டைன் (Constantine) காலத்தில் அவரால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு, பிறகு உலகம் முழுவதும் பரவியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் தொல் இலக்கியங்களிலும் தொல்லியல் தடயங்களிலும் வாரநாட்கள் குறிப்புகள் காணப்படுவதில்லை, பிற்காலத்தில் கி.பி.300களுக்குப்  பிறகே அவை கிடைக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

நாள், மாதம், ஆண்டு என்பவை வானியல் அடிப்படையில் அமைபவை.  நாள் என்பது புவி தன்னைத்தானே சுற்றுவதால் ஏற்படும் பகல், இரவு இரண்டையும் கொண்டது.  ஒரு சூரிய உதயத்திலிருந்து மறு சூரிய உதயம் வரை ஒரு நாள் என்கிறோம். மாதம் என்பது நிலவின் வளர்பிறை தேய்பிறை இரண்டையும் கொண்டது. ஒரு அமாவாசை/பௌர்ணமி நாளிலிருந்து அடுத்த அமாவாசை/பௌர்ணமி வரை ஒரு மாதம் என்கிறோம். புவி சூரியனைச் சுற்றுவதால் ஒரு பருவத்தில் தொடங்கி மீண்டும் அதே பருவத்திற்கு வந்து சேரும் ஒரு முழுச் சுற்று ஆண்டு என்று கணக்கிடப் படுகிறது.  ஆனால், வாரம் என்பதற்கோ கிழமை என்பதற்கோ எந்த ஒரு வானியல் அடிப்படையும் கிடையாது, அது எப்பொழுது தோன்றியது, எப்பொழுது வழக்கத்திற்கு வந்தது என்பதும் வியப்பிற்குரியதாகவே  உள்ளது.

வாரம் என்ற சொல்லோ, கிழமை  என்ற சொல்லோ  தமிழுக்குப் புதிய சொற்கள் அல்ல.  தமிழின் தொல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே கிழமை, வாரம் ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன.  ஆனால்,  கிழமை என்பது 'உரிமை' என்ற பொருளிலும், வாரம் என்பது 'இசையின் தொகுப்பின் ஒரு பகுதி' என்ற பொருளிலும் கையாளப்பட்டுள்ளன.

நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் என வகுக்கிறார்  தொல்காப்பியர்.  இன்றும்  நாம் இம்முறையைத்தான் வழக்கில் கொண்டுள்ளோம். எந்த ஒரு நிகழ்ச்சி நடைபெற்றாலும் அது 'எங்கு' (நிலம், எவ்விடத்தில்) என்றும், 'எப்பொழுது' (நேரம், எந்தப்பொழுதில்) என்று குறிப்பிட்டாலே அதில் குறிப்பிடப்படும் தேவையான விவரங்கள் பயன்படும். அது வரலாற்றுச் செய்தியாகவும் மாறும்.  மாறாக, ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சி செய்தார் என்று கூறுகையில் யார், எங்கே, எப்பொழுது போன்ற தகவல்கள் தவிர்க்கப்பட்ட இத்தகைய விவரிப்பு கட்டுக்கதைகள் எழுதத்தான் உதவும். 

காலம் என்பதைக் குறிக்க குறைந்த அளவு மூன்று தகவல்கள் தேவை, அவை நாள், மாதம், ஆண்டு.  இன்றும் நாம் இதைத்தான் வழக்கில் வைத்துள்ளோம்.  எடுத்துக்காட்டாக,  இந்தியா விடுதலை பெற்ற நாள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் என்றால் காலத்தைக் குறிக்கத் தேவையான எங்கே எப்பொழுது என்ற தகவல் நிறைவு பெறுகிறது.  இதில் அந்த நாள் வெள்ளிக்கிழமை என்ற தகவல் அதிகப்படியாக எந்த அளவிலும் உதவுவதில்லை.  ஆண்டு, மாதம், நாள் இவற்றில் ஏதோ ஒன்று குறிப்பிடப் படாத நிலையில், வாரநாள் கொடுக்கப் பட்டிருந்தால் நாளை துல்லியமாக அறிய முயற்சி மேற்கொண்டால் அப்பொழுது வாரநாட்கள் உதவிக்கு வரும்.   நாள், மாதம், ஆண்டு என்பவை காலத்தைக் குறிக்க மிக மிக அடிப்படை அலகுகள் என்ற முக்கியத்துவம் இருக்கையில் பண்டைய தமிழர்கள் வரலாற்றைப் பதிய தொடராண்டு முறையை வழக்கில் கொள்ளாதது எத்தகையதொரு  வரலாற்றுப் பிழை என்பதை உணர முடியும்.

சிலப்பதிகாரம் தவிர்த்து; ஏழாம் நூற்றாண்டில், அரசன் அழைப்பின் பேரில் மதுரைக்குப் பயணம் செல்ல திருஞான சம்பந்தர் முற்படுகையில்  நாள் சரியில்லை என்ற தடை கூறப்படுகிறது.  அப்பொழுது எம்பெருமான் அருளிருக்க அவர் அடியவனை நாளும் கோளும் என்ன செய்துவிடும் என்று சம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடுகிறார்.

      வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்   

            மிகநல்ல வீணை தடவி   

      மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்   

            உளமே புகுந்த அதனால்   

      ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி   

            சனிபாம்பி ரண்டு முடனே   

      ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல   

            அடியா ரவர்க்கு மிகவே.

இப்பாடலில்; உமையம்மையை தன் உடலின் ஒருபாகமாகக் கொண்ட சிவபிரான் என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது  கோள்களும் அடியார்களுக்கும் நன்மையே செய்வனவாம் என்கிறார். ஒன்பது கோள் என்பனவற்றை வரிசைப் படுத்துகையில் வாரநாட்களின்  வரிசையில் அவை அமைந்ததைக் காணமுடிகிறது.


நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 259
11/20/2024      கிழமைகளும் வாரங்களும் 
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi 

Wednesday, November 13, 2024

வானியல் கவனிப்பும் கணிதமும் காலமும்



     செஞ்ஞாயிற்றுச் செலவும்

     அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

     பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

     வளி திரிதரு திசையும்

     வறிது நிலைஇய காயமும், என்றிவை

     சென்றளந்து அறிந்தார் போல, என்றும்

     இனைத்து என்போரும் உளரே

          - புறநானூறு 30

செஞ்ஞாயிற்றின் வான்வழி நகர்வும், அதன் இயக்கமும், வான மண்டிலத்தில் அதைச் சூழ்ந்துள்ள கோள்களின்  இயக்கமும், காற்றின் திசையும், விண்வெளியையும்  குறித்து அவற்றைத் தாமே அங்குச் சென்று அளந்து அறிந்துகொண்டவர் போன்று இவையிவை இத்தகையது என்ற நுண்ணறிவு கொண்டு ஆராய்ந்து கூறுபவரும் உள்ளனர்  என்று புறநானூற்றுப்  பாடல் ஒன்றில்,  சற்றொப்ப  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகிறார்.

பண்டைய நாட்களில் இவ்வாறாகக் கூர்ந்த வானியல்  கவனிப்பும், கோள்களின்  நகர்வுகளை அளந்து ஆராய்ந்து ஆவணப்படுத்தியும் காலத்தைத்  துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர் என்பதை இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. இந்நாட்களின் அறிவியல் தொழில் நுட்பக் கல்வி (STEM education) போல, இதற்கு அடிப்படைத் தேவையாக,  கோள்களின் இயக்கம் குறித்த வானியல் அறிவும் கணிதமும் இன்றி அமையாததாக இருந்துள்ளது. 

இன்றைய நாட்களின் தொழில் நுட்பக் கருவிகளுடன் கோள்கள்  இருக்கும் கோணங்களை அளப்பது  எளிதானது. பெரும்பான்மையும் வானியல் அளவைக்கு  'அறுபாகைமானி' (sextant)  என்ற கருவி கொண்டு அளப்பர். பண்டைய நாட்களிலும் இதற்கான கோணத்தை அளக்கும் கருவிகள் பல  உருவாக்கப்பட்டிருந்தன என்பதைப்  பழைய ஓவியங்களில் இடம்பெறும் கோள வடிவங்களும் சக்கர வடிவங்களும் கொண்ட கருவிகளால் அறிகிறோம். மேலும், நிலையான வானியல் ஆய்வகம் (astronomical observatory) கட்டுமானங்களும் இருந்துள்ளன.

ஆனால், இவையாவும் கைவசம் இல்லாத இடங்களில்  தங்கள் கையையும் விரல்களையும் கொண்டே தோராயமாக அளக்கும் முறையும் உள்ளது.   இன்றும் அந்த முறை வழக்கில்  உள்ளது. தேவையான வகையில் கைவிரல்களை நீட்டியும் மடக்கியும், , , 10°, 15°, 25° என்ற பாகை  கோணங்களை அளக்கும் முறையால் விண்மீன்கள்,  கோள்களுக்கு  இடையில் உள்ள  தொலைவு,  வானில் அவற்றின் இருப்பிடம் போன்றவற்றைக் குறிப்பு  எடுத்துக் கொள்ள  இயலும் (பார்க்க - படம்). தொடுவானம் (horizon) இருப்பிடம் 0° தொடங்கி, அதற்கு எதிர்த்திசை தொடுவானம் 180° என்றும், உச்சி வானம் (zenith) 90° கொண்ட அரைவட்ட வான மண்டில அளவில் கோள்கள், விண்மீன்கள் கண்டறியப்படும்.  இவ்வாறு கண்டறியப்படும் தகவல்களை   வானியல் விளக்கப்படம் (astro  chart) ஒன்றில் குறிப்பது வழக்கம்.


நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 258
11/13/2024      வானியல் கவனிப்பும் கணிதமும் காலமும்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi 




Friday, November 8, 2024

தலைவியின் துயரம்: இலக்​கி​ய ஓவி​யங்கள்

தலைவன் தான் வருவதாகக் குறிப்பிட்ட காலம் கடந்தும் அவன் வரவில்லை என்றால் தலைவி மிகவும் துயரம் அடைவாள்; தன் வருத்தத்தை ஆற்ற முடியாத தலைவி தோழியிடம், தலைவன் இன்னமும் வரவில்லையே என்று கூறி வருந்தும் பாடல்கள் முல்லைத்திணையின் உரிப்பொருள் (இருத்தலும், இருத்தல் நிமித்தமும்) பிரிவில் அடங்கும்.
 
      இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்
      துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
      நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
      நீர்வார் பைம்புதற் கலித்த
      மாரிப் பீரத் தலர்சில கொண்டே
            கோக்குள முற்றனார், குறுந்தொகை - 98
 
[இன்னளாயினள் = இத்தகையவள் ஆனாள்]
 

 
பாடலின் பொருள்:
தோழி! நம் தோட்டத்தில் நீர் ஒழுகி வழிந்தோடியதால் பசுமையாக வளர்ந்துள்ள புதர்களின் மேல் தழைத்துப் படர்ந்திருக்கும் கொடியில் மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றைப் பறித்துச் சென்று தலைவனை நெருங்கி, நீ வாராமையால் உன் நினைவால் தலைவி இவ்வாறு ஆகிவிட்டாள் என்று அம்மலர்களைக் காட்டுபவர் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
 
தலைவனைப் பிரிந்து அவனைப் பாராமல் துயருற்று வருந்தும் தலைவியின் உடல் வெளிர் மஞ்சள் நிறம் அடையும் என்றும், அதைப் பசலை நோய் என்றும் இலக்கியங்கள் கூறுகிறது. பசலை நோயின் அறிகுறிகள் நெற்றியில் எளிதாக வெளிப்படும் என்றும் அது பீர்க்கம்பூவின் நிறத்தை ஒத்திருக்கும் என்பதால் பசலைக்குப் பீர்க்கம் பூவை உவமை கூறுவதும் இலக்கிய வழக்கு.

நன்றி: "சக்தி" பெண்ணிதழ்
நவம்பர் 2024
"தலைவியின் துயரம்‌"
https://archive.org/details/sakthi-november-2024/page/15/mode/2up

#சக்தி, #இலக்​கி​ய ஓவி​யங்கள், #செய்யறிவு, #Themozhi