Wednesday, November 13, 2024

வானியல் கவனிப்பும் கணிதமும் காலமும்



     செஞ்ஞாயிற்றுச் செலவும்

     அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

     பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

     வளி திரிதரு திசையும்

     வறிது நிலைஇய காயமும், என்றிவை

     சென்றளந்து அறிந்தார் போல, என்றும்

     இனைத்து என்போரும் உளரே

          - புறநானூறு 30

செஞ்ஞாயிற்றின் வான்வழி நகர்வும், அதன் இயக்கமும், வான மண்டிலத்தில் அதைச் சூழ்ந்துள்ள கோள்களின்  இயக்கமும், காற்றின் திசையும், விண்வெளியையும்  குறித்து அவற்றைத் தாமே அங்குச் சென்று அளந்து அறிந்துகொண்டவர் போன்று இவையிவை இத்தகையது என்ற நுண்ணறிவு கொண்டு ஆராய்ந்து கூறுபவரும் உள்ளனர்  என்று புறநானூற்றுப்  பாடல் ஒன்றில்,  சற்றொப்ப  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகிறார்.

பண்டைய நாட்களில் இவ்வாறாகக் கூர்ந்த வானியல்  கவனிப்பும், கோள்களின்  நகர்வுகளை அளந்து ஆராய்ந்து ஆவணப்படுத்தியும் காலத்தைத்  துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர் என்பதை இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. இந்நாட்களின் அறிவியல் தொழில் நுட்பக் கல்வி (STEM education) போல, இதற்கு அடிப்படைத் தேவையாக,  கோள்களின் இயக்கம் குறித்த வானியல் அறிவும் கணிதமும் இன்றி அமையாததாக இருந்துள்ளது. 

இன்றைய நாட்களின் தொழில் நுட்பக் கருவிகளுடன் கோள்கள்  இருக்கும் கோணங்களை அளப்பது  எளிதானது. பெரும்பான்மையும் வானியல் அளவைக்கு  'அறுபாகைமானி' (sextant)  என்ற கருவி கொண்டு அளப்பர். பண்டைய நாட்களிலும் இதற்கான கோணத்தை அளக்கும் கருவிகள் பல  உருவாக்கப்பட்டிருந்தன என்பதைப்  பழைய ஓவியங்களில் இடம்பெறும் கோள வடிவங்களும் சக்கர வடிவங்களும் கொண்ட கருவிகளால் அறிகிறோம். மேலும், நிலையான வானியல் ஆய்வகம் (astronomical observatory) கட்டுமானங்களும் இருந்துள்ளன.

ஆனால், இவையாவும் கைவசம் இல்லாத இடங்களில்  தங்கள் கையையும் விரல்களையும் கொண்டே தோராயமாக அளக்கும் முறையும் உள்ளது.   இன்றும் அந்த முறை வழக்கில்  உள்ளது. தேவையான வகையில் கைவிரல்களை நீட்டியும் மடக்கியும், , , 10°, 15°, 25° என்ற பாகை  கோணங்களை அளக்கும் முறையால் விண்மீன்கள்,  கோள்களுக்கு  இடையில் உள்ள  தொலைவு,  வானில் அவற்றின் இருப்பிடம் போன்றவற்றைக் குறிப்பு  எடுத்துக் கொள்ள  இயலும் (பார்க்க - படம்). தொடுவானம் (horizon) இருப்பிடம் 0° தொடங்கி, அதற்கு எதிர்த்திசை தொடுவானம் 180° என்றும், உச்சி வானம் (zenith) 90° கொண்ட அரைவட்ட வான மண்டில அளவில் கோள்கள், விண்மீன்கள் கண்டறியப்படும்.  இவ்வாறு கண்டறியப்படும் தகவல்களை   வானியல் விளக்கப்படம் (astro  chart) ஒன்றில் குறிப்பது வழக்கம்.


நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 258
11/13/2024      வானியல் கவனிப்பும் கணிதமும் காலமும்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi