Wednesday, November 20, 2024

கிழமைகளும் வாரங்களும்


தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் மதுரை எரியுண்ட நாளைக்  குறிப்பிடும் பாடலில், அந்நாள் ஆடி மாதம் வெள்ளிக் கிழமை என்ற செய்தி சொல்லப்படுகிறது.

      ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து

      அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று

      வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண

      உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்

      உரையு முண்டே நிரைதொடி யோயே

இப்பாடலில், ஆடி மாதம் தேய்பிறை எட்டாம் நாளும் கார்த்திகையும் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில் பாண்டியனும்  அழிவான், மதுரையும்  எரிந்து அழிந்து போகும் என்று முன்னரே நிமித்தக் கூற்று ஒன்று உள்ளது  என்று மதுரை நகரத்தின் தெய்வம் கண்ணகியிடம் கூறுகிறது.

ஏழு நாட்கள்  கொண்ட வாரம் என்ற கால அலகிற்கு  வானியல் அடிப்படை கிடையாது, மக்கள் பண்டைய நாட்களில்  அறிந்திருந்த கோள்கள் ஏழும் வாரநாட்களாக  வரிசைப் படுத்தப்பட்டு செயற்கையாக வாரம் என்ற ஒரு கால அலகீடு உருவாக்கப்பட்டது. இது காலத்தை  வசதியான கூறாகக் கணக்கிடப் பயன்பட்டது.  வாரம் என்ற முறை முதலில் சற்றொப்ப 4300 ஆண்டுகளுக்கு முன்னர்  மெசபடோமியா பகுதியில் உருவானது என்றும்,   சுமேரியர்களும் பாபிலோனியர்களும் பயன்படுத்தினர் என்றும்  தெரிகிறது. பிறகு, அவர்களிடம் இருந்து பிற பகுதிகளுக்குப் பரவியது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். யூத மதம், கிறிஸ்துவ மதம் போன்றவற்றில் உள்ள கடவுள் உலகைப் படைத்த கதையிலும் வாரநாட்கள் இடம் பெற்றது. 

பல நூறாண்டுகளாக ரோமானியர்கள் 8 நாட்கள் கொண்ட வாரமும் வைத்திருந்தனர். ஆனால், இன்றைய வழக்கில் இருக்கும் ஞாயிறு  தொடங்கி  சனியில் முடியும் ஏழு நாட்கள் கொண்ட கால அலகு கி.பி.321இல் ரோமானியப் பேரரசர்  கான்ஸ்டன்டைன் (Constantine) காலத்தில் அவரால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு, பிறகு உலகம் முழுவதும் பரவியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் தொல் இலக்கியங்களிலும் தொல்லியல் தடயங்களிலும் வாரநாட்கள் குறிப்புகள் காணப்படுவதில்லை, பிற்காலத்தில் கி.பி.300களுக்குப்  பிறகே அவை கிடைக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

நாள், மாதம், ஆண்டு என்பவை வானியல் அடிப்படையில் அமைபவை.  நாள் என்பது புவி தன்னைத்தானே சுற்றுவதால் ஏற்படும் பகல், இரவு இரண்டையும் கொண்டது.  ஒரு சூரிய உதயத்திலிருந்து மறு சூரிய உதயம் வரை ஒரு நாள் என்கிறோம். மாதம் என்பது நிலவின் வளர்பிறை தேய்பிறை இரண்டையும் கொண்டது. ஒரு அமாவாசை/பௌர்ணமி நாளிலிருந்து அடுத்த அமாவாசை/பௌர்ணமி வரை ஒரு மாதம் என்கிறோம். புவி சூரியனைச் சுற்றுவதால் ஒரு பருவத்தில் தொடங்கி மீண்டும் அதே பருவத்திற்கு வந்து சேரும் ஒரு முழுச் சுற்று ஆண்டு என்று கணக்கிடப் படுகிறது.  ஆனால், வாரம் என்பதற்கோ கிழமை என்பதற்கோ எந்த ஒரு வானியல் அடிப்படையும் கிடையாது, அது எப்பொழுது தோன்றியது, எப்பொழுது வழக்கத்திற்கு வந்தது என்பதும் வியப்பிற்குரியதாகவே  உள்ளது.

வாரம் என்ற சொல்லோ, கிழமை  என்ற சொல்லோ  தமிழுக்குப் புதிய சொற்கள் அல்ல.  தமிழின் தொல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே கிழமை, வாரம் ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன.  ஆனால்,  கிழமை என்பது 'உரிமை' என்ற பொருளிலும், வாரம் என்பது 'இசையின் தொகுப்பின் ஒரு பகுதி' என்ற பொருளிலும் கையாளப்பட்டுள்ளன.

நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் என வகுக்கிறார்  தொல்காப்பியர்.  இன்றும்  நாம் இம்முறையைத்தான் வழக்கில் கொண்டுள்ளோம். எந்த ஒரு நிகழ்ச்சி நடைபெற்றாலும் அது 'எங்கு' (நிலம், எவ்விடத்தில்) என்றும், 'எப்பொழுது' (நேரம், எந்தப்பொழுதில்) என்று குறிப்பிட்டாலே அதில் குறிப்பிடப்படும் தேவையான விவரங்கள் பயன்படும். அது வரலாற்றுச் செய்தியாகவும் மாறும்.  மாறாக, ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சி செய்தார் என்று கூறுகையில் யார், எங்கே, எப்பொழுது போன்ற தகவல்கள் தவிர்க்கப்பட்ட இத்தகைய விவரிப்பு கட்டுக்கதைகள் எழுதத்தான் உதவும். 

காலம் என்பதைக் குறிக்க குறைந்த அளவு மூன்று தகவல்கள் தேவை, அவை நாள், மாதம், ஆண்டு.  இன்றும் நாம் இதைத்தான் வழக்கில் வைத்துள்ளோம்.  எடுத்துக்காட்டாக,  இந்தியா விடுதலை பெற்ற நாள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் என்றால் காலத்தைக் குறிக்கத் தேவையான எங்கே எப்பொழுது என்ற தகவல் நிறைவு பெறுகிறது.  இதில் அந்த நாள் வெள்ளிக்கிழமை என்ற தகவல் அதிகப்படியாக எந்த அளவிலும் உதவுவதில்லை.  ஆண்டு, மாதம், நாள் இவற்றில் ஏதோ ஒன்று குறிப்பிடப் படாத நிலையில், வாரநாள் கொடுக்கப் பட்டிருந்தால் நாளை துல்லியமாக அறிய முயற்சி மேற்கொண்டால் அப்பொழுது வாரநாட்கள் உதவிக்கு வரும்.   நாள், மாதம், ஆண்டு என்பவை காலத்தைக் குறிக்க மிக மிக அடிப்படை அலகுகள் என்ற முக்கியத்துவம் இருக்கையில் பண்டைய தமிழர்கள் வரலாற்றைப் பதிய தொடராண்டு முறையை வழக்கில் கொள்ளாதது எத்தகையதொரு  வரலாற்றுப் பிழை என்பதை உணர முடியும்.

சிலப்பதிகாரம் தவிர்த்து; ஏழாம் நூற்றாண்டில், அரசன் அழைப்பின் பேரில் மதுரைக்குப் பயணம் செல்ல திருஞான சம்பந்தர் முற்படுகையில்  நாள் சரியில்லை என்ற தடை கூறப்படுகிறது.  அப்பொழுது எம்பெருமான் அருளிருக்க அவர் அடியவனை நாளும் கோளும் என்ன செய்துவிடும் என்று சம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடுகிறார்.

      வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்   

            மிகநல்ல வீணை தடவி   

      மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்   

            உளமே புகுந்த அதனால்   

      ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி   

            சனிபாம்பி ரண்டு முடனே   

      ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல   

            அடியா ரவர்க்கு மிகவே.

இப்பாடலில்; உமையம்மையை தன் உடலின் ஒருபாகமாகக் கொண்ட சிவபிரான் என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது  கோள்களும் அடியார்களுக்கும் நன்மையே செய்வனவாம் என்கிறார். ஒன்பது கோள் என்பனவற்றை வரிசைப் படுத்துகையில் வாரநாட்களின்  வரிசையில் அவை அமைந்ததைக் காணமுடிகிறது.


நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 259
11/20/2024      கிழமைகளும் வாரங்களும் 
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi