Wednesday, November 27, 2024

பழமொழிகளும் வார நாட்களும்


நாள், மாதம், ஆண்டு இவற்றுடன் ஒப்பிடுகையில்; காலக்கணக்கிடலில் 'வாரநாட்கள் என்ற கால அலகு' வழக்கத்திற்கு வந்தது மிகவும் பிற்காலம் என்றாலும் அவை குறித்த பழமொழிகளும் பல உள்ளன. பட்டறிவைச் சுருங்கக்  கூறுவனவாகவும், பல தலைமுறைகளுக்குக் கடத்தப்படுபவனவாகவும் பழமொழிகள் அமையும்.  நான்கு தொகுதிகள் கொண்ட 'தமிழ்ப் பழமொழிகள்' என்ற நூலில், கி.வா.ஜகந்நாதன்‌  25,000 பழமொழிகளைத்  தொகுத்துள்ளார். அவற்றிலிருந்து சேகரித்த வாரநாட்கள் குறித்த பழமொழிகள் சில இங்குக் கொடுக்கப் பெற்றுள்ளன.

வாரநாட்களுக்கும் வானியல் கோள்களின் நகர்வுக்கும் எந்த ஒரு தொடர்பு இல்லை என்பதை மிகத் தெளிவாக நாம் அறிகிறோம். இருப்பினும், வானியலை  அடிப்படையாகக் கொண்டு எழுந்த, ஜோதிடம்  என்ற 'பொய் அறிவியல்' (Pseudoscience) வகையின் அடிப்படையில் இவை அமைந்தனவாகவும், அறிவியல் அடிப்படையற்ற மூடநம்பிக்கைகளைச்  சார்ந்தனவாகவும் பல பழமொழிகள் இருப்பதைக் காண முடிகிறது.  


ஞாயிறு :
ஞாயிற்றுக்‌ கிழமை பிறந்தவர்‌ நாய்‌ படாத பாடு படுவர்‌.
ஞாயிற்றுக்‌ கிழமை சென்றால்‌ நாய்‌ படாத பாடு.
ஞாயிற்றுக்கிழமை ருதுவானால்‌ தாய்பாடு படாத பாடுதான்‌.
ஞானிக்கு இல்லை, ஞாயிறும்‌ திங்களும்‌.
நல்ல வேளையிலே ஞாயிற்றுக்‌ கிழமையிலே.
ஞாயிற்றுக்‌ கிழமை நாய்கூட எள்ளுக் காட்டில்‌ நுழையாது.
வெள்ளி ஞாயிறு மேற்கே சூலம்‌.

திங்கள் :
ஞானிக்கு இல்லை, ஞாயிறும்‌ திங்களும்‌.
திங்கள்‌ சனி கிழக்கே சூலம்‌.
திங்கள்‌ துக்கம்‌ திரும்பி வரும்‌.
திங்களில்‌ கேட்பார்‌ திரும்பக்‌ கேட்பார்‌.

செவ்வாய் :
செவ்வாய்‌ புதன்‌ வடக்கே சூலம்‌.
செவ்வாய்‌ வெள்ளி செலவிடாதே.
செவ்வாயோ? வெறுவாயோ?
ஆடிச்‌ செவ்வாய்‌ தேடிக்‌ குளி; அரைத்த மஞ்சளைத்‌ தேய்த்துக்‌ குளி.
ஆடிச்‌ செவ்வாய்‌ நாடிப்‌ பிடித்தால்‌ தேடிய கணவன்‌ ஓடியே வருவான்‌.
ஆதன கோட்டைக்கும்‌ செவ்வாய்க்‌ சிழமையாம்‌.
எட்டுச்‌ செவ்வாய்‌ எண்ணித்‌ தலை முழுகில்‌ தப்பாமல்‌ தலைவலி போம்‌.
கேட்டை, மூட்டை, செவ்வாய்க்‌ கிழமை.

புதன் :
சனியும்‌ புதனும்‌ தங்கும்‌ வழி போகக்‌ கூடாது.
சனியும்‌ புதனும்‌ தன்னை விட்டுப்‌ போகாது.
மறைந்த புதன்‌, நிறைந்த தனம்‌.
செவ்வாய்‌ புதன்‌ வடக்கே சூலம்‌.
பிறந்த நாளும்‌ புதன்‌ கிழமையும்‌.
புதன்‌ கோடி தினம்‌ கோடி.
பொன் ‌ அகப்பட்டாலும்‌ புதன் ‌ அகப்படாது.
பொன்‌ கிடைத்தாலும்‌ புதன்‌ கிடைக்காது.

வியாழன்:
வேதம்‌ பொய்த்தாலும்‌ வியாழன்‌ பொய்க்காது.
தங்கின வியாழன்‌ தன்னோடு மூன்று பேர்‌.
வெள்ளி இருக்க வியாழன்‌ குளித்தாளாம்‌.

வெள்ளி :
அகதி பெறுவது பெண்‌ பிள்ளை; அதுவும்‌ வெள்ளி பூராடம்‌.
கல்லுக்கும்‌ முள்ளுக்கும்‌ அசையாது வெள்ளிக்கிழமைப்‌ பிள்ளையார்‌.
கொள்ளிக்கு எதிர்‌ போனாலும்‌ வெள்ளிக்கு எதிர்‌ போகலாகாது.
செவ்வாய்‌ வெள்ளி செலவிடாதே.
பார்க்கக்‌ கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
வெள்ளிக்கிழமை கொள்ளிக்கு ஆகாது. 
வெள்ளிக்குப்‌ போட்டதும்‌ கொள்ளிக்குப்‌ போட்டதும்‌ சரி.
வெள்ளி ஞாயிறு மேற்கே சூலம்‌.
வேகிற வயிற்றுக்கு (/உடலுக்கு)  வெள்ளி என்ன செவ்வாய்‌ என்ன?

சனி :
கொசுவே, கொசுவே தலை முழுகு; நான்‌ மாட்டேன்‌, சனிக்கிழமை.
சண்டை பிடிக்கிறவனுக்குக்‌ கூடச்‌ சனிக்கிழமை ஆகாது.
சனியும்‌ புதனும்‌ தங்கும்‌ வழி போகக்‌ கூடாது.
சனியும்‌ புதனும்‌ தன்னை விட்டுப்‌ போகாது.
சனிப்‌ பிணம்‌‌ தனிப்‌ போகாது. சனிப்‌ பிணம்‌ துணை தேடும்‌.
திங்கள்‌ சனி கிழக்கே சூலம்‌.

மக்கள் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் சார்பு நிலை காரணமாக, தங்கள் நம்பிக்கைகளை உறுதி செய்யும் தகவல் கிடைத்தால், உடனே தங்களுக்குக் கிடைக்கும் அந்தச் செய்தியையே நம்ப விரும்புகிறார்கள். அதனைப் பற்றி மேலும் ஆராய்ந்து அது உண்மைதானா எனத் தெரிந்து கொள்ளும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றுவதில்லை. மேலும், அதற்கு மாறான தகவல் கிடைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிடும் நிலைப்பாடு (confirmation bias) காரணமாக உண்மையற்ற நம்பிக்கைகள் தொடர்கின்றன.  முன்னோர் மொழி என்று கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றாமல்  ஒவ்வொன்றையும் ஆராயும் மனப்பான்மை கொண்டு ஆராய்ந்து பொய்யான நம்பிக்களைத் தவிர்த்தால், மூடநம்பிக்கைகள் தானே அழிந்துவிடும். 


 நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 260
11/27/2024      பழமொழிகளும் வார நாட்களும்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi