Wednesday, October 23, 2024

ஆன்டிகிதெரா வானியல் கணிப்பொறி



இன்றைய நாளில் உலகம் முழுவதும் பொதுவான நாட்காட்டி  பயனில்  உள்ளது என்பது எந்த அளவு உண்மையோ அந்த அளவு  உலகம் முழுவதுமே தொடக்கத்திலிருந்து மனிதர்களின் காலக்கணக்கு வானியல் நிகழ்வுகள் அடிப்படையில் அமைந்தது என்பதும் ஒரு  வரலாற்று உண்மை.  வானில் உள்ள விண்மீன்கள், கோள்களின் நகர்வுகள் காலத்தைக் கணக்கிட உதவின.  தொழில் நுட்பம் அறிந்திராத அக்காலத்தில் மனிதர்கள் தங்களின் வெற்றுக்கண்களுக்குத் தெரிந்த சூரியன், சந்திரன், செய்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி கோள்களின் இயக்கங்களை அவற்றின் பின்னணியில் தெரிந்த விண்மீன் கூட்டத்துடன் தொடர்புப்படுத்திக் கணக்கிட்டார்கள் என்று எளிதாக நம் புரிதலைச் சொல்லி இன்று கடந்துவிடுகிறோம்.   ஆனால், அது சரியான கருத்து என்று சொல்வதற்கில்லை.

விண்மீன்கள் கோள்களின் இயக்கங்களைக் கவனிக்கும் வானியல் ஆய்விற்கு ஸ்டோன் ஹென்ஞ் (Stonehenge)  போன்ற எளிமையான அமைப்பில் நிலைநிறுத்தி நடப்பட்ட கல்தூண் அமைப்புகள், சூரியக் கடிகாரம் போன்றவை வடிவமைக்கப்பட்ட கற்களால் எழுப்பப்பட்ட  ஜந்தர் மந்தர் (Jantar Mantar)  போன்ற கட்டிடங்கள், பெரிய ஆய்வுக் கூடங்கள் எனப் பல அமைப்புகள்  வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களிலும், பின்னர் வரலாற்றுக் காலங்களிலும் வானவியல் வல்லுநர்களால் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது 'ஆன்டிகிதெரா வானியல் கணிப்பொறி'. 

இந்நாட்களின் கணினி  வழி கணிக்கும் முறைக்கு இணையாக, இன்றைக்கும் 2250 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க வானியலாளர்கள்  ஒரு 'வானியல் கணிப்பொறி' கொண்டு காலக் கணக்கிட்டார்கள் என்பதுதான் உண்மை.  பண்டைய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவை குறித்த நம் கண்ணோட்டத்தை இது முற்றிலும் மாற்றிவிட்டது என்றால் அது மிகைக் கூற்று அல்ல. கிரேக்க கணித, இயற்பியல், வானியல் வல்லுநர் ஆர்க்கிமிடீஸ் (கிமு287—212/211) கால கட்டத்துடன் தொடர்புப் படுத்தியும், அவர் கண்டுபிடிப்புகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுவது ஆன்டிகிதெரா வானியல் கணிப்பொறி.

ஆன்டிகிதெரா வானியல் கணிப்பொறி உலகத்தின் பார்வையிலிருந்து (கி.மு.65 ஆண்டு காலகட்டத்தில்) மறைந்து போய், சற்றொப்ப 2000 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில்(கி.பி.1901) கண்டு பிடிக்கப்பட்டது.  மத்தியத் தரைக்கடலில் உள்ள ஆன்டிகிதெரா(Antikythera) தீவுப் பகுதியில் கடற்பஞ்சு எடுக்க நீரில் மூழ்கியவர்கள், கடலில் சிதைந்த நிலையில் பண்டைய கிரேக்க சரக்குக் கப்பல்  ஒன்றைக் கண்டனர். அப்பகுதியில் செய்த ஆய்வில், மூழ்கிய கப்பலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட பல தொல்பொருள்கள், சிலைகள், பாத்திரங்கள், மண் குடுவைகள், உலோகப் பொருட்கள் என யாவும் ஏதென்ஸின் தேசியத் தொல்பொருள் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்று ஆய்வு செய்யப்பட்டு, காட்சிப் படுத்தப்பட்டது. அவற்றில் கவனத்தைக் கவராத வகையில் கடல் உப்புநீர் அரிப்பில் உருக்குலைந்த வெண்கல உலோகப் பொருள் ஒன்றும் இருந்தது. 1902 இல் அதை ஆய்வு செய்த பொழுது அதில் பல்சக்கரம் (gear) ஒன்று இருப்பது கண்டறியப்பட்டு ஆய்வாளர்களை அது வியப்பில் ஆழ்த்தியது.  பல்சக்கரங்கள் கொண்டு இயங்கும் கருவிகள் சுமார் 1500  ஆண்டுகளுக்குப் பிறகே ஐரோப்பியக் கருவிகளில் இடம் பெறத் தொடங்கியிருந்தன.

மேலும் விரிவாக ஆராய்வதற்காக அது 82 துண்டுகளாக மாற்றப்பட்டு ஆராயப்பட்டது. சற்றொப்ப ஓரடி உயரம் கொண்ட ஒரு செங்கல் போன்ற தோற்றம் கொண்ட சிறு மரப்பேழையில் பொருத்தப்பட்ட, வெண்கலத்தால் ஆன பல பல்சக்கரங்களும் பாகங்களும் கொண்ட ஒரு கருவி வானியல் கணிப்பிற்குப் பயன்பட்டிருக்கக்கூடும் என்று கருதப்பட்டது.  ஆனால் மீண்டும் ஒரு நூற்றாண்டு கடந்தபின்னரே,   முப்பரிமாண எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் மூலம் அதை ஊடுருவிப்  படம் எடுத்து கணினி வழி ஆராய்ந்த பிறகே அது குறித்த பல தகவல்களும் அது இயங்கும் விதமும் கண்டறியப்பட்டது. 

இந்த வானியல் கணிப்பொறியில் 37 பல்சக்கரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து தொடர்ந்து சுழலுமாறு அமைக்கப்பட்டிருந்தது, சக்கரங்களின் பற்கள்(cogs) 1 மிமீ அளவிலும், சக்கரங்கள் அளவிலும் பற்களின் எண்ணிக்கையிலும் மாறுபட்டும் இருந்தன.  கருவி வைத்திருந்த பெட்டியின் முன்புறம் மற்றும் பின்புறப் பலகைகளில்  கிமு 200 காலகட்டத்துக் கிரேக்க எழுத்தில் எழுதப்பட்ட கருவிக்கான பயனர் கையேடும், அதில் கருவியைப் பயன்படுத்தத் தேவையான குறிப்புகளும்  பொறிக்கப் பட்டிருந்தது.  இந்தத் தகவல்களின் அடிப்படையில் வானியல் கணிப்பொறி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  ஆர்வலர்கள் பலரும், குழந்தைகளுக்கான அறிவியல் பொம்மை விளையாட்டுப் பொருள் அளவிலும் இன்று இக்கருவியின் மீட்டுருவாக்க  மாதிரிகள் வடிவெடுத்துள்ளன. கருவி இயங்கும் முறை குறித்த காணொளிகளும் வெளியாகி உள்ளன (ஆன்டிகிதெரா பொறிமுறை /Antikythera mechanism— https://www.youtube.com/watch?v=zu--8qxDlCY)

முன்பக்க முகப்பு ஆண்டு மற்றும் மாதக் கணக்கிடலுக்கு  உதவும் வட்டங்களைக் கொண்டு இருந்தது. அதன் மேல் கடிகார முட்கள் சுழன்று நகர்வது போலவே சூரியன், சந்திரன் மற்றும் ஐந்து கோள்களின் நகர்வைக் காட்டும் நகரும் முட்களைக் கொண்டிருந்தது. சூரியனின் ஓர் ஆண்டு நகர்வைக் குறிக்கும் விளிம்பு வட்டமும், அதற்கடுத்த உட்புற வட்டம் இராசி மண்டலத்தைக் குறிக்க  12 பிரிவாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.  சுழலும் சந்திரன் நிலவின் பிறை நிலைகளைக் குறிக்கும் அமைப்பில் இருந்தது.

கருவியின் பின்பக்கத்தின் மேலே உள்ள சுருள் (spiral) வட்டம்  சந்திரனின் 235 முழுச் சுழல்வுகளைக் குறிக்கும் 19 ஆண்டு மெட்டானிக் சுழற்சியை (Metonic cycle) அறியும் வகையில் அமைக்கப் பட்டிருந்தது. அதன் கீழ் உள்ள மற்றொரு சுருள் வட்டம், 18.2  ஆண்டுகளுக்குச்  சூரிய சந்திர கிரகணங்களை (eclipses) சரோஸ் கிரகணச் சுழற்சி (saros cycle of eclipses) அடிப்படையில் கணிக்க உதவியது. கருவியைச் சுழற்றும் கைப்பிடியை (இது இன்னமும் கிடைக்கவில்லை) சுழற்றி அடுத்து வரும் ஆண்டுகளில் வானில் கோள்கள் இருக்கும் நிலை, கிரகணங்கள் ஏற்படும் நாட்களை அறிய இக்கருவி உதவியுள்ளது. இக்கருவியில் எகிப்திய, பாபிலோனிய காலக் கணக்கு கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப் பட்டுள்ளதை வானியல் கணிப்பொறி அமைப்பு காட்டுகிறது. அத்துடன் பண்டைய ஒலிம்பிக் விளையாட்டு நாட்களையும் இதன் மூலம் கணக்கிட்டார்கள் என்றும் தெரிகிறது. 

மேலும், இது 36-37 பாகை வடக்கு நிலக்கிடைக்கோடு பகுதியில் கட்டமைக்கப்பட்டதாகவும், இப்பொறிமுறையில் செய்யப்பட்ட அனைத்துக் கணக்கீடுகளும் அடிப்படையாகக் கொண்ட ஆரம்ப தேதி கி.மு.204 ஆண்டு மே 12 (அப்பகுதியில் சந்திர கிரகணம் தெரிந்த நாள்) என்றும் கருதப்படுகிறது. பண்டைய கிரேக்கர்களின் மேம்பட்ட பொறியியல் மற்றும் வானியல் அறிவுக்குச் சான்றாக விளங்கும் இக்கருவியின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இதுவே உலகின் முதல் அனலாக் கணினியாகக் கருதப்படுகிறது.

 

 நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 255
10/23/2024      ஆன்டிகிதெரா வானியல் கணிப்பொறி
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi