தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணித்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சட்டம் பயின்றவரான எல்.டி.சாமிக்கண்ணு (லூயிஸ் டாமினிக் சாமிக்கண்ணு பிள்ளை, 1864 - 1925). இவர் வானியலாளராகவும் பெரும் பங்காற்றியுள்ளார். இந்தியப் பஞ்சாங்கத்தை ஆராய்ச்சி செய்து கி.பி. 700-2000 காலகட்டத்து வானியல் அட்டவணைகள் உருவாக்கி 3000 பக்கங்களுக்கு மேல் உள்ள வானியல் குறிப்புகளை 7 தொகுதிகளாக வெளியிட்டார். கணினி இல்லாத சென்ற நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வானியலாளருக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் இவர் உருவாக்கிய வானியல் அட்டவணைகள் (எஃபிமெரிஸ் / ephemeris) என்பது ஓர் அரும்பணியின் வெளிப்பாடு.
பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு செய்து 1922-இல் இவர் வெளியிட்ட 'Indian Ephemeris - AD 700 to AD 2000' நூல்களின் தொகுதி மூலம், இக்கால கட்டத்தில் ஒவ்வொரு நாளுக்கும் உரிய தேதி, கிழமை, மாதம், ஆண்டு போன்ற செய்திகளை அறிய முடியும். இது இந்திய வரலாற்றில் மன்னர்களின் ஆட்சிக் காலங்களை நிர்ணயிக்க தொல்லியல் ஆய்வாளர்களுக்குப் பேருதவியாக இருந்தது.
இவரது
இந்தியப் பஞ்சாங்கம் நூல் முக்கியமான தமிழாய்வு நூலாகும். தமிழ் நூல்களின் காலத்தை அறிவியல்
கோணத்தில் கால ஆராய்ச்சிக்கு
உட்படுத்தினார் எல்.டி.சாமிக்கண்ணு.
இலக்கியங்கள் குறிப்பிடும் கிரகணங்கள்(eclipses), கதிர்திருப்ப
நாட்கள்(solstices), பகலிரவு சம நாட்கள் (equinoxes),
கோள்களின் நிலை (planetary alignments) போன்ற
வானியல் குறிப்புகள் அவை நிகழ்ந்த காலத்தைக் கணிக்க உதவின. கல்வெட்டுக்களில் காணப்படும் வானியல்
குறிப்புகளை ஆராய்ந்து அவற்றின்
காலத்தையும் இவர் அறிவித்துள்ளார். இவர் பன்னிரு ஆழ்வார்களில் சிலர், இரண்டாம் குலோத்துங்கன், பிற்காலப் பாண்டியர்கள்
போன்றோர்களின் காலங்களை வானிலைக் கோள்களின் அடிப்படையில் கணித்துக் கூறியுள்ளார்.
அச்சில் வெளியான கல்வெட்டுகளை ஆய்வு
செய்து பாண்டியர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் கோள்களின் நிலை அடிப்படையில் ஜடாவர்மன் ஸ்ரீவல்லபன் 1291-ல் அரசப் பதவி
ஏற்றான். பாண்டியன் குலசேகரன் ஜூலை 26, 1166-ஆம் தேதி
முடிசூடினான் என்னும் முடிவுகளையும் முன்வைத்தார்.
'இந்திய வரலாற்று ஆய்வுக்கு வானியல் கோட்பாடுகளின் பயன்பாடு' என்பதில் இவர் பங்களிப்பு இன்றியமையாததாக அமைந்தது என்று
பாராட்டப்பட்டுள்ளார். தமிழ்
இலக்கியங்களின் கால ஆராய்ச்சியிலும் இவர்
பங்களிப்பு இன்றியமையாதது.
10/30/2024 எல்.டி.சாமிக்கண்ணுவின் வானியல் குறிப்பு அட்டவணைகள்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi
