Sunday, January 4, 2026

ஆன்மிக வழியைக் கைவிடும் மக்கள்

ஆன்மிக வழியைக் கைவிடும் மக்கள்


உலகின் பல நாடுகளில், குறிப்பாக மேலை நாடுகளான ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் மக்களிடையே சமயச் சார்பு, இறை நம்பிக்கை ஆகியன குறைந்து வரும் காரணத்தால் தேவாலயங்கள் போகும் வழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது.  அத்துடன், உலக அளவில் இறைமறுப்பு /சமயம் சாராதவர் எண்ணிக்கையும்  அதிகரித்து வருகிறது. 

தோராயமாக;  இன்றைய உலகில்  4 பேரில் ஒருவர் கிறித்துவராகவும் (28.8%), ஒருவர் இஸ்லாமியராகவும் (25.6%), ஒருவர் கடவுள்/சமய நம்பிக்கை சாராதவராகவும்(24.2%), மற்றும் ஒருவர் எந்த பிற சமயத்தவராகவோ( இந்து/பௌத்தம்/யூதம்/மற்றும் பிற=21.4%) இருப்பதாக  பியூ ஆய்வு நிறுவனத்தின் (Pew Research Center) அறிக்கை கூறுகிறது.

 


உலகில் உள்ள ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையில் இந்து மதத்தினர் அதிகம் இருப்பதற்கு  ஒரே காரணம் இந்தியாவின் மக்கள்தொகை அதிகம் இருப்பதாலும்,  அவர்களில் 80% மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுவதாலும் மட்டுமே. இந்து சமயத்தை வளர்க்க வேண்டும் என்றால் இந்திய-இந்துக்களின் மக்கள்தொகையை அதிகரித்தால் மட்டும்தான், அவர்களும் இந்து சமயக் கொள்கையைத் தொடர்ந்தால் மட்டும்தான் இயலும். 

உலகின் பல நாடுகளில், குறிப்பாக மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும், தேவாலயங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.  இதற்கு முக்கியமான காரணம் ஆலயங்களுக்கு  வரும் மக்கள்தொகை குறைவது, அதன் தொடர் விளைவாகப் பெரிய வழிபாட்டு இடங்களைப் பராமரிக்கும் செலவும் கட்டுப்படியாகாமல் போவதும்தான்.  சமயம் இறை நம்பிக்கை ஆகியன குறித்து மக்கள் மனப்பாங்கில் ஏற்படும் மாற்றமும், நகரமயமாக்கல் வளர்ச்சியும் ஆலயங்களுக்கு மக்கள் செல்லும் நிலை குறைவதன் மூல காரணங்களாக அமைகின்றன. 

ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி,  இத்தாலி நாடுகளிலும்; அமெரிக்கா, கனடா ஆகிய  வட அமெரிக்க நாடுகளிலும்; ஆஸ்திரேலியாவிலும் மக்கள் வருகையற்ற ஆலயங்கள் முதலில் பராமரிக்க இயலாமையால் மூடப்படுகின்றன. பல ஆண்டுகளாகப்  பயன்பாட்டில் இல்லாத வழிபாட்டு ஆலயங்கள் பின்னர் கட்டிட விற்பனை சந்தையில்  வைக்கப்படுகின்றன (https://www.churchesforsale.com/).  அவற்றை வாங்குபவரின் திட்டப்படி பின்னர் அவை மிகப் பெரிய வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவன கட்டிடங்கள், தங்கும் விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்கள், சிறு தொழிற்சாலைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பண்பாட்டு மையங்கள்  என்ற மாற்றங்களைப் பெறுகின்றன. 
பொது வெளியில் சமய விழாக்கள், வழிபாடுகள் நடத்தப்படுவது  குறைவதும்; இயல்பாகவே ஏற்படும் பிற வாழ்வியல் நடைமுறை மாற்றங்களால் வெளிப்படையாக மத அடையாளங்களை அணிவதை,  பொது வெளியில் மதம் குறித்த உரையாடல்களை மக்கள் கைவிடுவதும்   காலப்போக்கில் சமய சச்சரவால் ஏற்படும் கலவரங்களையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் குறைத்து விடும். மக்கள் அனைவரும் தத்தம் கைப்பேசியில் ஆழ்ந்திருக்கும் போது, நேரில் அருகில் உள்ளவர்களிடையே உரையாடலே இருப்பதில்லை. பிறகு,  சர்ச்சைக்குரிய உரையாடல் ஏது? பின்னர் அதனால் ஏற்படக்கூடிய மனக்கசப்பு, சண்டை சச்சரவுதான் ஏது? இதனால் தொலைநுட்ப வளர்ச்சிக்குத்தான் நாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். 

இன்றைய புள்ளிவிவரங்களின் படி சீனா (1.3 பில்லியன்), அமெரிக்கா (101 மில்லியன்),  ஜப்பான் (73 மில்லியன்) ஆகிய நாடுகளில் சமயம்-இறை சாரா கொள்கை கொண்டவர் எண்ணிக்கை மிகுதி. இந்த நாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதும், அவர்கள் உருவாக்கித் தரும் கண்டுபிடிப்புகளைக் கொண்டு இந்திய ஆன்மிக மக்கள் தங்கள்  மதச் சடங்குகள் வழிபாடுகள்  ஆகியவற்றின் மூலம் மதத்தை வளர்க்கிறார்கள் என்பதுதான் நகை முரண். அண்மையில் அடுக்குமாடிக் குடியிருப்பு புதுமனைப் புகுவிழாவில் வேதியர் மந்திரம் சொல்ல ஒரு தானியங்கு பசு பொம்மை பயன்படுத்தப் பட்டு சடங்குகள் செய்யப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வலம் வந்ததை இங்கு நினைவு கூரலாம் (https://www.youtube.com/shorts/f99bGVFtatM).  இக்கருத்தை அறிஞர் அண்ணாதுரை  சென்ற நூற்றாண்டில் எழுதிய ஆயுத பூஜை கட்டுரையிலேயே சுட்டிக் காட்டி இருப்பார். 

புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிப்பதைவிடக் கண்டுபிடிக்கப்பட்டவற்றை இந்தியர் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுபவர்களாகவே இருக்கும் நிலை மாற வேண்டும் என்றால் இந்திய மக்களிடம் அறிவியல் சிந்தனையும் மனப்பாங்கும் வளர வேண்டும்.  அந்த மானப்பான்மையையும் அரசியலமைப்பு வரையறை கொண்டுதான் இந்தியாவில் வளர்க்க வேண்டிய ஒரு நிலை. அறிவியல் கருத்தரங்குகளில்  ஆன்மிகப் புராணக்கதைகளைப் பேசித்  திரிக்கும் நிலையும் நடைமுறையாக இருக்கிறது. அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற  அறிவியல் அறிஞர் வெ.ராமகிருஷ்ணன் இந்தியா அறிவியல் கருத்தரங்கங்கள் சர்க்கஸ் போல நடைபெறுகின்றன அவற்றில் நான் இனி பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்ததை நாம் கடந்து போக இயலாது. 



 
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் மக்களிடையே சமயச்சார்பு இன்மையும் இறைநம்பிக்கை இன்மையும் அதிகம் இருப்பதை  ஆய்வறிக்கைகள்  காட்டுகின்றன.  பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் மகிழ்ச்சியான நாடுகள் எனத் தொடர்ந்து தரவரிசைப் படுத்துதலில் முன்னிடங்களில் உள்ளன.  இந்நாடுகள்  மதச்சார்பற்றவையாகவும் அதிக அளவில் இறை நம்பிக்கையற்ற மக்கள் வாழும் நாடுகளாகவும் அறியப்படுகின்றன.  இந்நாடுகளில் நிலவும் பொருளாதாரம், மக்களுக்கு ஆதரவான சமூக சூழ்நிலை, தனிமனித உரிமை ஆகியவையும் (Economic prosperity, High social support, Freedom to make life choices) மேம்பட்ட நிலையில் இருப்பவை. பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்நாடுகளின் மக்கள் வாழ்வில் பசி, வறுமை, நோய் குறித்த கவலைகளும் குறைவு.  மனித நேய அடிப்படையில் சமூக ஆதரவுகள் அதிகம் இருப்பதுடன், தனி மனித வாழ்க்கையில் அவர்களின் வாழ்வின் விருப்பத்தைக் கட்டுப்படுத்தும் முன்னேற்றத்தைத் தடுக்கும் சமூகக் கட்டுப்பாடுகளும் குறைவு.  

எங்கு மக்களுக்கு  அடிப்படைத் தேவைகள் நிறைவேறுவதில் சிக்கல் இல்லையோ, எங்குத் தனிமனித உரிமை மதிக்கப் படுகிறதோ அந்தச் சூழலில் அவர்களுக்குப் பொதுவாழ்வில் மனமகிழ்ச்சி ஏற்படுவதும்;  அதன் காரணமாக அம்மக்கள்  தங்களுக்கு இறைமூலமோ  சமயம் மூலமோ  மீட்சி மற்றும் உதவி தேவை என்ற நிலையில்  இல்லாமல் இருப்பதையும் புரிந்து கொள்ளலாம். துன்பம் ஏற்படக்கூடும் என்ற கலக்கமும், மக்களுக்குத் துன்பம் நேர்கையிலேயே கடவுள் குறித்த எண்ணம் உருவாவதன் உளவியல் அடிப்படைக்குச் சான்றாகவும் இதனைக் கருதலாம். "மதம் மக்களின் போதைப்பொருள்" ("religion is the opium of the people" ) என்ற  கார்ல் மார்க்ஸின் கூற்று இதனை விளக்கக்கூடிய ஓர் உண்மையே. சமய போதையில் ஆழ்ந்து மக்கள் கவலைகளை எதிர்கால அச்சத்தை மறக்க முயல்கிறார்கள்.


சான்றாதாரங்கள்: 
How the Global Religious Landscape Changed From 2010 to 2020
https://www.pewresearch.org/religion/2025/06/09/how-the-global-religious-landscape-changed-from-2010-to-2020/
June 9, 2025

List of religious populations
https://en.wikipedia.org/wiki/List_of_religious_populations

Indian Science Congress is a circus, won't attend it: Nobel laureate V Ramakrishnan
https://www.firstpost.com/india/indian-science-congress-is-a-circus-wont-attend-it-nobel-laureate-v-ramakrishnan-2572268.html#google_vignette
January 6, 2016

These Are the World’s Happiest Countries in 2025
https://www.afar.com/magazine/the-worlds-happiest-country-is-all-about-reading-coffee-and-saunas
By Michelle Baran, March 20, 2025
 
2018 data: Across countries, the happiest ones are the least religious
https://whyevolutionistrue.com/2018/03/22/2018-data-across-countries-the-happiest-ones-are-the-least-religious/
March 22, 2018

Are religious people happier, healthier? Our new global study explores this question
https://www.pewresearch.org/short-reads/2019/01/31/are-religious-people-happier-healthier-our-new-global-study-explores-this-question/

நன்றி:
தமிழ் மரபுத் திணை — 39 [ஜனவரி — 2026]
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2026/01/tamil-marabu-thinai-39-january-2026.pdf  





#இறைமறுப்பு, #அறிவியல், #ஆன்மிகம், #திணை, #Themozhi

Saturday, January 3, 2026

வண்டின் சாறும் ஓரியன் விண்மீன் கூட்டமும்

வண்டின் சாறும் ஓரியன் விண்மீன் கூட்டமும்


ஓரியன் என்பது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தில் மிகத் தெளிவாகத் தெரியும் ஒரு முக்கிய விண்மீன் கூட்டமாகும். இது வான நடுக்கோட்டிற்கு  அருகில் அமைந்திருப்பதால், உலகின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து இது தெரியும். எனவே உலகின் பலபகுதிகளிலும் இந்த விண்மீன் கூட்டம் குறித்த கதைகள் பல உள்ளன.  எல்லாமே இந்த விண்மீன் கூட்டத்தை ஒரு போர் வீரனாகவோ, வேடனாகவோ, தெய்வமாகவோ  உருவகப்படுத்துவன.  இரண்டாம் நூற்றாண்டின் வானியலாளர் டாலமியின் குறிப்புகள் முதற்கொண்டு, அமெரிக்க மாயன் மக்கள், கிரேக்கப் புராணங்கள், சுமேரியர்களின் தொன்மங்கள் எனக் காணக்கிடைக்கும் பண்டைய  பதிவுகளிலும் ஓரியன் விண்மீன் கூட்டம் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமேரியர்கள் ஓரியனை,  கில்காமேஷ் ஒரு காளை (டாரஸ்/ரிஷபம்) உடன் சண்டையிடுவதாகக் கற்பனை செய்ததும் பதிவாகி உள்ளது. வானியலில் கிரேக்கர்கள் முதன்மை நிலையில் இருந்ததால் கிரேக்கப் புராண வேட்டைக்காரனான 'ஓரியன்' பெயரால் இது பெயரிடப்பட்டது. இந்தியாவில் இதைச் சிவனின் நடனமாகக்  காண்கிறார்கள்.  கருவானில் வெண்புள்ளிகளாகத் தெரியும் விண்மீன் புள்ளிகளை அவரவர் கற்பனைப்படி இணைத்து வடிவம் கொடுப்பதும் அவற்றுக்குக் கதைகள் சொல்லி விளக்கம் கூறுவதும் மக்களின் கற்பனை வளத்திற்குச் சான்று, கற்பனைக்கு ஏது கட்டுப்பாடு.  






இரவு வானத்தில் ஒளிரும் ஓரியனின் ஒளிமிக்க ஏழு விண்மீன்களில்   நான்கு நட்சத்திரங்கள் - பீட்டல்ஜியூஸ், பெல்லாட்ரிக்ஸ், ரிகல் மற்றும் சைப் (Betelgeuse, Bellatrix, Rigel and Saiph) ஆகியன தோராயமாக  ஒரு பெரிய, செவ்வக வடிவத்தை உருவாக்குகின்றன, அதன் மையத்தில் ஓரியனின் இடைவார் (Orion's Belt) பகுதியில் மூன்று நட்சத்திரங்கள் - அல்னிடக், அல்நிலம் மற்றும் மின்டகா (Alnitak, Alnilam, and Mintaka) உள்ளன. வீரனின் தலையில் மெய்சா (Meissa) எனப்படும் கூடுதல் எட்டாவது விண்மீன் ஒன்றும் உள்ளது.  

இவற்றில் பீட்டல்ஜியூஸ் விண்மீன் ஆல்பா ஓரியோனிஸ் என்றும் அழைக்கப்படும், இந்தியர்களால் ஆருத்ரா என்றும் தமிழில் 'திருவாதிரை' என்றும் அழைக்கப்படும் இந்தப் பெரிய சிவப்பு விண்மீன் ஓரியன் கூட்டத்தில்  இரண்டாவது ஒளிமிக்க விண்மீன். இது புவியிலிருந்து 640 ஒளியாண்டுகளுக்கு அப்பால்  (1 ஒளியாண்டு = 10 லட்சம் கோடி கிமீ) உள்ளது. பீட்டல்ஜியூஸ் என்பது அரேபியா சொல்லான yad al-jauzā' (the Hand of al-Jauzā’ / hand of Orion) ஓரியனின் கையின் தோள் பகுதியில் உள்ளது என்ற பொருளில் கூறப்பட்டது.  இடைக்காலத்தில் y என்பதை எடுத்து எழுதும் பொழுது b என மாற்றியதில் Betelgeuse ஆனது.  இந்த விண்மீன்  பின்னணி கொண்ட திரைப்படம் ஒன்று 1988 இல் உருவாக்கப் பட்டபொழுது எளிய விளம்பர உத்தியாக; Betelgeuse என்பதன் உச்சரிப்பு Beetlejuice, பீட்டல்ஜியூஸ் என்று ஒளிப்பதைக் கருத்தில் கொண்டு மாற்றியதில் வீரனின் கை என்பது 'வண்டின் சாறு' என்று பொருள் தரும் வகையில் எதிர்பாராமல் அமைந்துவிட்டது.  




உலகில் பல பண்பாட்டினர்  ஓரியன் விண்மீன் கூட்டத்தைப் போரிடும் வீரனாகக் கற்பனை செய்திருக்க இந்தியர்கள்  சிவனின் நடனமாகக் கற்பனை செய்துள்ளனர்.  வேதத்தில்  சிவன் குறித்த குறிப்பு  இல்லை என்பதையும், சிவனின் புராணக் கதைகள் பிற்காலத்தில் உருவானவை என்பதையும், அத்துடன் சிவனின் நாட்டியக் கோலம் கொண்ட  உருவங்களும் காலத்தால் பிற்பட்டவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.   பல்லவ அரசரான முதலாம் மகேந்திரரின் (7 ஆம் நூற்றாண்டு) சீயமங்கலம் அவனிபாஜனம் குடைவரையிலேயே இன்று நாம் பரவலாக அறியும் சிவனின் இடக்கால் தூக்கி ஆடும் நடனக் கோலம் முதன்முதலாகச் சிற்பமாகக் காணப்படுகிறது.  

எனவே,  இந்தக் கற்பனை சற்றொப்ப ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆரியப்பட்டர் வராகமிகிரர் காலத்திற்குப் பின்னர் எனவும் கொள்ளலாம், இதில் கிரேக்க வானியலின் தாக்கம் உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.   இந்த ஓரியன் விண்மீன் கூட்டத்திற்குக் கீழே/தெற்கே 'லெபஸ்' விண்மீன் கூட்டம் (Lepus constellation) உள்ளது. லெபஸ் என்பதற்கு இலத்தீன் மொழியில் 'முயல்' என்பது பொருள். இதுவே சிவனின் காலில் மிதிபடும் முயலகன் என்ற அரக்கன்.  முயலகன் அசுரன்  குறித்தும் தொன்மக் கதைகள் புனையப்பட்டன. இருப்பினும் முயலகனாக உருவகித்ததின்  பின்னணி  கிரக்க வானியலின் தாக்கத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. 

சிவன் கையில் தழல் (நெருப்பு) இருப்பது, அவரது அழிக்கும் சக்தி மற்றும் படைக்கும் ஆற்றல் இரண்டையும் குறிக்கிறது என்று கூறப்படுகிறது.  வானின் விண்மீன் கூட்டத்தை சிவனின் நடனமாகக் காண விரும்பியவர்கள் சற்றே கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்து, தழல் வலக்கையில் இருப்பதாகக் காட்டி இருந்தால் அதைச் செந்நிறத்தில் ஒளிரும் திருவாதிரை விண்மீன் எனக் கூறியிருக்கலாம் என்று தோன்றுகிறது.  ரிஷபம் விண்மீன் கூட்டமும் அருகிலேயே இருக்கும் நிலையில் சிவனுக்கு காளையை ஊர்தியாக்கியதையும் மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.  

இந்திய வானியலில் ஒவ்வொரு முழுநிலவு நாளுடனும்  இணைந்து வரும் விண்மீன்கள்  நாளில் விழாக்கள் கொண்டாடப்படுவது பண்டைய நாளிலிருந்து வழமை, குளிர்கால மார்கழித் திங்களின் முழு நிலவுநாளில் திருவாதிரை விண்மீன் இணைந்துவரும் நாள் சிறப்பாகக்  கொண்டாடப் படுவது வழக்கம் (அடுத்த முழுநிலவு நாளில் வருவது தைப்பூச விழா நாள், சித்திரைத் திங்கள்  சித்திரை நாள் என்பதும்  அவ்வாறே) 
---

#Betelgeuse, #Orion, #Lepus, #ஓரியன், #திருவாதிரை, #பீட்டல்ஜியூஸ், #வானியல் 

Wednesday, December 24, 2025

திருக்குறள் வைப்புமுறை

 'திருக்குறள் வைப்புமுறை' 


மக்களுக்குத் திருக்குறளின் பாலுள்ள ஈடுபாட்டினைப் புலப்படுத்தும் வகையில் இந்நாள்வரையிலும்  திருக்குறளுக்கு உரைகள் எழுதப்பட்டு வருகின்றன.  திருக்குறள் நூலுக்கு எழுந்த பழைய உரைகள் பத்தும் எழுதியவர்கள் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் என்று பதின்மரைத் திருக்குறளின் உரையாசிரியர்களாக ஒரு வெண்பா கூறுகின்றது.  திருக்குறள் உரையாசிரியர்களுள் பரிமேலழகர் காலத்தால் பிற்பட்டவர் என்றாலும் அவர் உரையினையே பெரும்பான்மையர் தழுவி குறள் நூல்கள் எழுதத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் எழுதுகையில்   பரிமேலழகர் கையாண்ட அதிகார வரிசைப்படுத்தும் முறையையும், அவற்றில் இருக்கும் குறள்களின் வரிசையையும் மற்றவர் பின்பற்றத் தொடங்கியதில் இன்று அது தர நிலைப்படுத்தும் முறையாகத் தானே அமைந்துவிட்டது.  

வள்ளுவர் என்பது ஆசிரியரின் இயற்பெயர்தான் என்றும் உறுதிப்படுத்தப்படவில்லை, திருக்குறள் என்பதும் பாடலின் இலக்கண அடிப்படையில் சூட்டப்பட்டப் பெயர் என்ற நிலையில், அப்புலவர் எழுதிய 1330 குறளையும் அவர் 133 அதிகாரங்களாகப் பிரித்தார் என்பதை மட்டும் திருக்குறள் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தியச் சமயங்கள் அறிவுறுத்தும் மனிதர் அறியவேண்டிய மெய்ப்பொருள் (புருஷார்த்தம்-தருமம்/அறம், அருத்தம்/பொருள், காமம்/இன்பம், மோட்சம்/வீடு) என்று நான்கு வகைப்படுத்தப்பட்டாலும் வள்ளுவரின் குறளை இதுவரை யாரும் வீடு என்ற பிரிவுக்குள் வகைப்படுத்த முயன்றதாகத்  தெரியவில்லை. வீடு என்பது அறத்தின் பயன் என்பதால் அதை அறத்துப்பாலில்  அடக்கிவிட்டார் வள்ளுவர் என்பது உரைகாரர்கள் கருத்தாக அமைகிறது. ஆதலால், முப்பாலுடன் வள்ளுவரின் பகுப்பு முறை முடிந்தது என்று தெரிகிறது. அது வள்ளுவரின் கொள்கை நிலைப்பாட்டை அறிவுறுத்தும் மிக முக்கியமான குறிப்பு என்பதையும் மறுப்பதற்கு இல்லை. 

இருப்பினும், முப்பால் பிரிவுக்குள் இயல்கள், அதிகாரங்கள் ஆகியனவற்றை வகைப்படுத்துதலை இன்றுவரை பல தமிழ் அறிஞர்கள்  முயன்றுள்ளனர். காமத்துப்பாலை  முதலில் வைக்க வேண்டும் என்று கருதியவர்களில் மு.வரதராசனும், கண்ணதாசனும் குறிப்பிடத்தக்கவர்கள். அவரவர் பார்வையில், அவரவர் முன்வைக்கும் ஏரணப்படி வரிசைப்படுத்தப்படுவது திருக்குறளின் கட்டமைப்பாகவும் உள்ளது என்றாலும், பரிமேலழகர் முறை பொதுமுறையாக நிலைத்துவிட்டது; அதனால் மு.வரதராசனும் அதையே பின்பற்றி தெளிவுரை எழுதினார். எனினும், பழைய உரைகாரர்களில்  காலத்தால் முதன்மையானவர் மணக்குடவர் என்பதால் அவர் முறையைத்தான் நாம் செம்பதிப்பு முறைக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து வைக்கப்பட்டாலும், வழக்கத்திற்கு வந்துவிட்டதை இனி மாற்றுவது கடினம் மட்டுமல்ல தேவையற்றதும் ஆகும்.  

பழைய பத்து உரைகாரர்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்தாலும் அவர்கள் சிலரின் உரைகள் நமக்குக் கிட்டியதில்லை. பரிமேலழகர் உரை போன்றே மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள், பருதியார் ஆகியோர் உரைகளும் தனித்தனியே வெளிவந்துள்ளன. இக்காலத்தில் இந்நூல்கள் பலவற்றை இணையச் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம் (https://archive.org/details/thirukkural_201808/).  அனைத்து உரைகளையும் ஒப்பாய்வு செய்ய உதவும் வகையில் ச. தண்டபாணி தேசிகர் அவர்களின் உரைவளப் பதிப்பும், மேலும் சில உரைக்கொத்து, ஒப்பாய்வு பதிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இயல்பிரித்தல், வகைப்படுத்தலில் உரையாசிரியர்களில் இறைநெறி, சமயநெறி, வாழ்வியல் நெறிகளின் தாக்கம் இருப்பதை  மறுப்பதற்கு இல்லை. இவ்வாறான திருக்குறள் வரிசைப்படுத்தும் முறையை 'திருக்குறள் வைப்புமுறை' என்பர்.  வைப்புமுறை மாறுதல்களுக்கு, அதிகாரங்களை  வரிசைப்படுத்தும் நோக்கத்தை உரைகாரர் விளக்கும் விதத்தில் புரிந்து கொள்ள முடியும். 

பழைய உரைகளில் காலத்தால் முந்திய பத்தாம் நூற்றாண்டு மணக்குடவர்  உரையை, காலத்தால் பிந்திய பதின்மூன்றாம் நூற்றாண்டு பரிமேலழகர் உரையையும் அவற்றின் வைப்புமுறையையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டுள்ளார்கள்.  இவற்றில் இயல்கள் ஒன்றாக இருப்பினும் அதிகாரங்கள்  இயல்களுக்குள் மாறி உள்ளன.   ஓர் எடுத்துக்காட்டுக்காக;  முற்பட்ட மணக்குடவர், பின்வந்த பரிமேலழகர்  ஆகியோரது அறத்துப்பால்  பகுதியின் அதிகார வரிசையை மட்டுமே ஒப்பிடலாம். அறத்துப்பால் அதிகாரங்களில் 1.பாயிரம், 2.இல்லறவியல், 3. துறவறவியல், 4. ஊழியல் ஆகியவற்றில்; முதல் பாயிரம், இறுதி ஊழியல் ஆகியவற்றின் அதிகார வரிசை அமைப்பில் இருவர் வைப்புமுறையும் ஒன்றே, எந்த மாற்றமும் இல்லை. ஊழியியலில் இருப்பது ஒரே அதிகாரம் என்பதால் மாற்றவழியில்லை என்பது வேறு.  

இடையில் உள்ள இல்லறவியலிலும், துறவறவியலிலும் இயல்களில்  உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. இல்லறவியலில் 20 அதிகாரங்களும், துறவறவியலில் 13 அதிகாரங்களும் இருவர் வைப்புமுறையிலும் இருந்தாலும், இவற்றுக்குள் அதிகார வரிசைகளும் இடம் மாறியுள்ளன, இயல்களின் அதிகாரங்களும் வேறுபட்டுள்ளன:  
1. இல்லறவியலின் பொறையுடைமை அதிகாரம் வரிசை மாறிவிட்டது. துறவறவியலில் தவமுடைமை, கூடாவொழுக்கம் அதிகாரங்கள் வரிசை மாறிவிட்டன. 
2. மணக்குடவர் முறையில் இருக்கும் வாய்மையுடைமை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை, புலான்மறுத்தல், கள்ளாமை ஆகிய ஆறு இல்லறவியல் அதிகாரங்களைப் பரிமேலழகர் துறவறவியலுக்கு மாற்றிவிட்டார்.  
3. மணக்குடவர் முறையில் இருக்கும் இனியவைகூறல், அடக்கமுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை ஆகிய ஆறு துறவறவியல் அதிகாரங்களைப் பரிமேலழகர் இல்லறவியலுக்கு மாற்றிவிட்டார். 
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இந்த மாற்றங்கள் காட்டப்பட்டுள்ளன. இயலுக்குள் மாற்றம் பச்சை நிறத்திலும், இயல் கடந்த மாற்றம் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது. இப்பொழுது ஒப்பிட்டுப் படிப்பவருக்கு ஏன் இந்த மாற்றம், காரணம் என்ன என்று பல கேள்விகள் எழும். மாற்றத்திற்குக் காரணம் அவர்கள் சார்ந்த சமயநெறிக்கும் பங்குண்டு.  சமணர் என்று கருதப்படும் மணக்குடவர் கொல்லாமை, புலான்மறுத்தல் என்பவற்றை அனைவருக்கும் பொது என்று கருதுகிறார் என்றும்;  பரிமேலழகர்  இவை இரண்டையும் துறவறவியலுக்கு மாற்றிவிட்டால்  வைதீகக் கோட்பாடுகளுக்கு இசைவாக அமையும் என்றும் கருதி இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு மாற்றத்திற்கும் பின்னணியை  அறியமுயல்வது ஆய்வாளர்களுக்கு மேலும் பல தகவல்களைக் கொடுக்கக் கூடும்.


திருக்குறள் பழைய உரையாசிரியர்கள் முப்பால் பிரிவுகளுக்குள் பல்வேறுவகையில் இயல்கள் பிரிப்பதிலும், அவற்றின் கீழ் அதிகாரங்களை வரிசைப்படுத்துவதிலும் மட்டும் வேறுபடவில்லை, அந்த அதிகாரங்களின் குறள்களுக்கு உரை எழுதிய வைப்புமுறையிலும் (வரிசைப்படுத்திக் கொள்வதிலும்) மாறுபடுகின்றனர். இக்காலத்தில் நாம் கையாளும் பரிமேலழகர் வைப்பு முறையைப் பின்பற்றி அதனுடன் மற்ற உரையாசிரியர்களின் குறள் வைப்புமுறையை ஒப்பிட்டுள்ளார்கள் பல ஆய்வாளர்கள்.  
 

வைப்புமுறை வேறுபாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டாக;  நாணுடைமை அதிகாரத்தின் குறட்பாக்களின் வைப்புமுறையை கிடைக்கும் பழைய உரைகாரர்களான  பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் ஆகிய ஐவரின் உரைகளும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளதைப் படத்தில் காணலாம். இந்த அதிகாரத்தின் குறள்களில் ஒரு குறள்கூட அனைவராலும் அதே வரிசையில் அமைக்கப்படவில்லை என்பதைக் காணமுடிகிறது. மு.சண்முகம் பிள்ளை(1972) எழுதிய 'திருக்குறள் அமைப்பும் முறையும்' என்னும் திருக்குறள் ஆய்வு நூலை சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. 

பரிமேலழகர் - பரிப்பெருமாள் குறள் வைப்புமுறை ஒப்பீடு:
உரையாசிரியர் பரிப்பெருமாள் காலம் 11 ஆம் நூற்றாண்டு, இவருக்கும் முன்னவரான மணக்குடவர் உரையைத் தழுவி இவருடைய உரை எழுதப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கா.ம.வேங்கடராமையா(1988) எழுதிய 'திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரையும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. மணக்குடவரின் திருக்குறள் வைப்புமுறையை அப்படியே பின்பற்றியதோடு மட்டுமின்றி, அவரது உரையையும்  அப்படியே எடுத்து எழுதிவிட்டு மேலும் விளக்கம் எழுதும் முறை இவருடையது. எடுத்துக்காட்டாக; 
     நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
     தன்றே மறப்பது நன்று.

[மணக்குடவர் உரை விளக்கம்] இதன் பொருள்: பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல, பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம் (என்றவாறு). 
[பரிப்பெருமாள் உரை விளக்கம்] இது, தீமை மறக்கவேண்டு மென்று கூறிற்று.
இவர்கள் இருவரும் இக்குறளை 102ஆம் குறளாக வைக்கிறார்கள்; பரிமேலழகர் நூலில் இக்குறள் 108 ஆவது  குறளாக அமைகிறது.  
குறைந்த அளவு வேறுபாடாக, பதினாறு இடங்களில்  பரிப்பெருமாள் மணக்குடவரிடம் இருந்து வேறுபடுகிறார் என்பது ஆய்வாளர்கள் கருத்தாக இருக்கிறது. 


ஓர் ஒப்பீட்டு  ஆய்வாக, 1330 குறள்களின் வைப்புமுறையில் பரிப்பெருமாளுக்கும் பரிமேலழகருக்கும் அதிகாரங்களின் கீழ்  குறள்களின் வரிசைப் படுத்துதலில் எந்த அளவு வேறுபாடு என்று ஆய்வு செய்த பொழுது: வெறும் 22% மட்டுமே இருவர் வரிசையும் ஒத்துப் போனது. பரிமேலழகர் வைப்புமுறைக்கும் பரிப்பெருமாள் வைப்புமுறைக்கும் இடையில் உள்ள வேற்றுமை 78%. ஒரு தோராயமாக ஐந்து குறள்களில் ஒன்றுமட்டுமே அதே வரிசை எண்ணில் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவு வேறுபாடு காணப்படுகிறது. 

மக்கட்பேறு, விருந்தோம்பல் ஆகிய '2' அதிகாரங்களில் மட்டுமே இருவரின் குறள் வரிசைப்படுத்துதல் ஒன்றாக இருக்கிறது;
அன்புடைமை, பொறையுடைமை, ஒப்புரவறிதல், தவம், வாய்மை , அறிவுடைமை, குற்றங்கூறாமை, தெரிந்து செயல்வகை, தெரிந்து தெளிதல், பொச்சாவாமை, கொடுங்கோன்மை, வினைத்திட்பம், மன்னரைச் சேர்ந்தொழுகல், அவை அஞ்சாமை, தீநட்பு, புல்லறிவாண்மை, உட்பகை, மருந்து, பெருமை, நன்றியில் செல்வம், நாணுடைமை, இரவச்சம், அலர் அறிவுறுத்தல், பசப்புறு பருவரல், தனிப்படர் மிகுதி, கனவுநிலை உரைத்தல், அவர்வயின் விதும்பல், புணர்ச்சி விதும்பல், புலவி நுணுக்கம், ஊடலுவகை ஆகிய '30'அதிகாரங்களில் எல்லாக் குறள்களுமே வரிசை மாறியுள்ளன;
இவை தவிர்த்த '101' அதிகாரங்களில் ஆங்காங்கே ஒரு சில குறள்கள் தற்செயலாக அதே வரிசையில் அமைந்துவிடுவதாகத் தெரிகிறது. 



இதற்கான மாதிரி ஒப்பீடு அட்டவணையின் படம்  இணைக்கப்பட்டுள்ளது.  படத்தில் பச்சை நிறம் இருவர் வரிசையிலும் இசைந்து செல்லும் குறள்கள்.  மக்கட்பேறு, விருந்தோம்பல் ஆகிய அதிகாரங்கள் ஒத்திருப்பதையும்; அன்புடைமை அதிகாரத்தில் எல்லாமே மாறி இருப்பதையும்; மற்றவற்றில் ஒரு சில குறள்கள் மட்டுமே ஒத்திருப்பதையும் காணலாம். முழுமையான 1330 குறள்களுக்குமான ஒப்பீட்டு அட்டவணை https://aintinai.blogspot.com/2025/12/kural-couplets-ordering.html இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

     வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
     தீமை இலாத சொலல்.   (291) வாய்மை

     சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
     செய்யாமை மாசற்றார் கோள்.   (311) இன்னா செய்யாமை

என்று அதிகாரத் தலைப்பை வரையறுப்பது போன்ற குறள்களை பரிமேலழகர் அவற்றுக்கான அதிகாரங்களின் முதல் குறளாக மாற்றியது  சிறப்பாக உள்ளது. எனினும், பிற இடங்களில் இதே முறையை அவர் பின்பற்றியதாகவும் தெரியவில்லை. ஆதலால், இதுவும் தற்செயலாக அமைந்துவிட்ட ஓர் அமைப்போ என்று எண்ண வைக்கிறது.  மாற்றத்துக்கான அடிப்படை ஏரணம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. 

இந்த ஒப்பீடு;  பாடல் தொகுப்பாக இருக்கும் தொன்ம இலக்கியங்களின் பாடல் வரிசை அவ்வாறே காலம் காலமாகப் பின்பற்றப்படுகிறது  என்ற எண்ணம் தவறானது என்று காட்டுகிறது. தொகுப்புப் பாடல்களாக இருக்கும் இலக்கியங்களில் பாடல் வரிசைகளில் காலம்தோறும்  மாற்றம் அடைந்திருக்கக் கூடிய வாய்ப்புண்டு  என்ற புரிதலையும்  தருகிறது.

Tuesday, December 9, 2025

எண்ணென்ப சொல்லென்ப

எண்ணென்ப சொல்லென்ப 

திருக்குறளில்  அறம், பொருள், இன்பம் என்று முப்பால் உள்ளது, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் என்ற எண்ணிக்கையில் 133 அதிகாரங்களில் மொத்தம் 1330 குறள்கள்  உள்ளன. ஒரு குறளில் முதல் அடியில் 4 சீர்கள், இரண்டாம் அடியில் 3 சீர்கள் என 7 சீர்கள் கொண்டது ஒரு குறள்  என்ற அடிப்படைத் தகவலைப் பள்ளிச்சிறார் முதற்கொண்டு அனைவரும் அறிவோம். மேலும் அறத்துப்பாலில் 4 இயல்களும், பொருட்பாலில் 3 இயல்களும், இன்பத்துப்பாலில் 2 இயல்களும் என திருக்குறளில் மொத்தம் ஒன்பது இயல்கள் உள்ளன. அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் (380 குறள்கள்), பொருட்பாலில் 70 அதிகாரங்கள் (700 குறள்கள்), இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள்(250 குறள்கள்) என்ற கணக்கும் படித்திருப்போம். குறளுக்கு 2 அடி என்பதால் 1330 குறளுக்கும்  கணக்கிட்டால் குறளில் 2660 அடிகள் என்றும்,  ஒரு குறளுக்கு 7 சீர் என்பதால் 1330 குறளுக்கும்  கணக்கிட்டால் திருக்குறளில் 9,310 சொற்கள் இருக்கலாம் என அடுத்த கட்டமாக ஒரு தோராயமாக மதிப்பிடுவோம்.  

ஆனால், இதற்கும் அடுத்த கட்டமாக, திருக்குறளுக்குத் தொடரடைவு செய்த முனைவர் ப. பாண்டியராஜா, "திருக்குறள் - சொற்கள் - எண்ணிக்கை" என்று தனது ஆய்வுத் தளத்தை விரிவாக்கி ஆராய்ந்து இருக்கிறார் என்பதை அவருடைய தமிழ் தமிழ் இலக்கியத் தொடரடைவு தளத்தில் (http://tamilconcordance.in/TABLE-kuraL.html) உள்ள ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அறியலாம். இனி திருக்குறள் குறித்து அவர் தளம் தரும் புள்ளி விவரங்களில்  ஒரு பார்வை: முனைவர் ப. பாண்டியராஜா திருக்குறளில் 11368 சொற்கள் உள்ளன என்றும்; அவற்றில் மீண்டும் மீண்டும் வராத சொற்களாக 4902 சொற்கள்  உள்ளன எனவும் குறிப்பிடுகிறார். சொற்களைப் பிரித்துக் கணக்கிட்ட  முறையை 'பிரிசொற்கள்' என்பதற்கு எடுத்துக்காட்டாக வாலறிவன் என்பதை வால்_அறிவன் என அவர் கையாண்ட முறையை விளக்குகிறார். இதனால் சொற்களின் எண்ணிக்கை 11368 என்ற அளவை எட்டியுள்ளது. 

அடுத்து, கூட்டுத் தொடரடைவு என்ற முறையில் சங்க இலக்கியப் பாடல்களில் (பத்துப்பாட்டு+எட்டுத்தொகை) உள்ள சொற்களையும், திருக்குறளில்  காணப்படும் சொற்களையும், "சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள், பொதுவல்லாத சொற்கள்"  என்று ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுகிறார். 
1. சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச்சொற்கள்: 
இப்பிரிவில் சங்க இலக்கியத்திலும், திருக்குறளிலும் ஒரே மாதிரியான எழுத்துகளைக் கொண்ட சொற்களைப் பொதுவான சொற்களாக  வகைப்படுத்துகிறார். அதாவது, 'பகவன் முதற்றே உலகு' என்பதில் இடம் பெறுவது போன்றே,  'உலகு காக்கும் உயர் கொள்கை (புறம்-400) என்ற புறப்பாடலிலும் "உலகு" என்ற சொல் இருப்பது  பொதுச்சொல் ஆகும். அஃது, அஃதே என்பன வெவ்வேறான சொற்கள் ஆகும். 

திருக்குறளில் உள்ள 'அஞ்சுக' என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் அஞ்சி, அஞ்சுதும், அஞ்சுவர் போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு.  எனவே, (சங்க இலக்கியத்தில் இல்லாமல்) திருக்குறளில் மட்டும் காணப்படும் சொற்கள் என்ற பிரிவில் குறளில் உள்ள சொற்களை ஒட்டிய சொற்கள் சங்க இலக்கியத்தில் உள்ளனவா என்று தீவிரமாகக் கவனிக்கவேண்டும் என்கிறார்.  திருக்குறளில்  இடம்பெறும் அடிமை, பகவன் ஆகிய சொற்களும் அந்தச் சொற்களை ஒட்டிய சொற்களும் சங்க இலக்கியத்தில் இல்லை என்று எடுத்துக்காட்டி  விளக்குகிறார். சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள் என  2600 சொற்களை இவர் பட்டியலிடுகிறார். 

2. சங்க இலக்கியத்தில் இல்லாமல், திருக்குறளில் மட்டும் காணப்படும் சொற்கள்: 
சங்க இலக்கியத்தில் இடம் பெறாமல் திருக்குறளில்  மட்டுமே இடம் பெறும் சொற்கள் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் மேல் என்றாலும், திருக்குறளில் உள்ள 'அஞ்சுக' என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்றாலும் அஞ்சி, அஞ்சுதும், அஞ்சுவர் போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன எனக் குறிப்பிட்டதை  நினைவில் கொள்க. இப்பிரிவில் 2180 சொற்களை இவர் பட்டியலிடுகிறார். 

மொழியின் வளர்ச்சியில் புதுச்சொற்கள் மொழியில் பயன்பாட்டிற்கு வருவதும் சில வழக்கொழிவதும் இயல்பே. எனவே திருக்குறளில்  மட்டுமே வரும் சொற்கள் எவை என்று பார்வையிடுகையில் ஓர் எழுபது சொற்கள் தேர்வு செய்யப்படு இங்கே கொடுக்கப்படுகிறது. இந்தச் சொல் தேர்வுக்குச் சிறப்பு அடிப்படை என எதுவும் இல்லை என்பதைப் படிப்பவர் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  சொற்களைப் படித்துக் கொண்டே வருகையில், அப்படியா! இது சங்க இலக்கியத்தில்  இல்லையா என்று வியந்த சொற்கள்  இப்பட்டியலில் இடம் பெறுகின்றன.  இப்பட்டியலை வியந்து வியந்து இருமுறை படிக்கப் பரிந்துரை வழங்கப்படுகிறது. இப்பட்டியல் இருவேறு கோணங்களைக் காட்டும். முதலில் சங்க இலக்கியத்தில் இல்லாத திருக்குறள் சொற்களா? என்ற வியப்புடன் படிப்பது. அடுத்து மீண்டும், இன்றும் நம் வழக்கில் இந்தத் திருக்குறள் சொற்கள் உள்ளனவா என்று மற்றொருமுறை படித்து வியப்பது.  

சொல் எழுபது:
சங்க இலக்கியத்தில் இல்லாமல், திருக்குறளில் மட்டும் காணப்படும் 2180 சொற்களில் 70 சொற்கள்:
அகர, அடிமை, அமைச்சு, அறிவது, ஆசாரம், ஆட்சி, இகழ்ச்சி, இதனால், இருட்டு, இல்வாழ்க்கை, 
இழுக்கு, உலகத்தார், ஊருணி, எண்ணம், எனது, எனப்படும், ஒருகால், கடப்பாடு, கடைப்பிடித்து, கயவர், 
கல்வி, கள்ளம், கற்க, குலம், சார்பு, சிலர், செங்கோன்மை, செயற்கை, தலைமக்கள், தள்ளாமை, 
தானம், துப்புரவு, தும்மல், தூக்கம், தூய்மை, தொழும், தோல்வி, நாகரிகம், நுட்பம், நேர்வது, 
பகவன், பயன்படும், பழகுதல், பழங்குடி, பழமை, பாராட்டுதல், பாவம், பாவி, பிற்பகல், பிறந்தார், 
பிறவி, புல்லறிவு, புழுதி, பூசனை, பெருமிதம், மங்கலம், மதிநுட்பம், மாறுபாடு, மானம், முடிவு, 
முற்பகல், மேற்கொள்வது, மேன்மை, வணக்கம், வாணிகம், வியந்து, விழிப்பது, வெல்வது, வெறுப்பு, வேண்டுதல்
மீண்டும் ஒருமுறை படித்து குறளில்  இடம் பெறும்  இன்றும் வழக்கில் உள்ள  சொற்களை அறியவும்.

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 314 - 10.12.2025]


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 


Tuesday, December 2, 2025

'நமது கல்வி முறை'


'நமது கல்வி முறை'





 
"நியாயமான தேர்வு முறை என்பதற்காக எல்லோரும் ஒரே தேர்வை எழுத வேண்டும்: அனைவரும் தயவுசெய்து அந்த மரத்தில் ஏறுங்கள்" என்று கூறும் இந்தக் கருத்துப்படத்தை நாம் நன்கு அறிவோம். இது நமது கல்வி முறையை, அதில் உள்ள  குறைபாட்டை  விமர்சிக்கும் ஒரு கருத்துப்படம். இப்படத்தில் உள்ள கருத்து  அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதாக அறியப்படும், "எல்லோரும் ஒரு மேதைதான். ஆனால், ஒரு மீனை அதன் மரத்தில் ஏறும் திறனை வைத்து நீங்கள் மதிப்பிட்டால், அது தனது வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு  முட்டாள் என்று நம்பியே வாழும்" என்ற கருத்தைத்  தெளிவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கருத்துப்படம்.  உண்மையில் இந்தச் சொற்றொடர் தவறாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியதாகப் பரவலாக அறியப்படும் ஒரு கூற்று. பல பத்தாண்டுகளாகவே கல்வித்துறை சார்ந்த அறிஞர்கள் பலர் சொல்லிவரும்  கருத்துதான் இது என்று இப்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

ஒவ்வொருவருக்கும் 'பொதுவான கல்வி' ஒன்றைக் கற்கக் கிடைக்கும் வாய்ப்பும், கற்கும் சூழ்நிலையும், அதில் அவர் காட்டும் திறமையும், பெறும் தகுதியும் வேறு வேறு என்பது மறுக்க இயலாத உண்மை.  பல பின்புலத்திலிருந்து வருபவர்கள் மாணவர்கள். அவர்கள் பெறும் தேர்ச்சி  மதிப்பெண்களை மட்டும் பயன்படுத்தி ஒரு வேலைக்கான அல்லது உயர்படிப்பிற்கான தகுதியை நிர்ணயித்தால், பல நூறாண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள் மீண்டும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாகவே பின்தங்கிவிடக் கூடிய நிலை தொடரும் என்பது மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் வைக்கும் வாதம். குறிப்பிடப்படும் இந்த நிலை  இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ உரிய சூழல் மட்டும் அல்ல. அமெரிக்கக் கல்விப்புலத்திலும் இந்த வாதம் பல ஆண்டுகளாக உள்ளது என்பதைத்தான் அங்குப் பரவலாக விவாதத்தில் உள்ள இக்கருத்தை  விளக்கும் இப்படம் காண்பிக்கிறது. கல்வித் துறையில் இந்த உருவகம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்களுக்கு இணையத்தேடலில் மேலும் பல செய்திகள் இது குறித்துக் கிடைக்கும்.  

தமிழ்நாட்டிலும் வகுப்புரிமை குறித்த கருத்து தொடங்கப்பட்டு ஒரு நூற்றாண்டிற்கு  மேல் ஆகிவிட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டதும் வகுப்புரிமையை நிலை நாட்டவே என்பதுதான் இந்திய வரலாறு. தமிழகத்தில் தொடங்கிய போராட்டத்தால் ஒன்றிய அரசு அதைக் கவனத்தில் கொண்டு, ஒன்றிய அரசின் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கரும் அறத்தை நிலை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். 

அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்து, அரசமைப்பு விதி 15(4) உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவின்படிதான், இன்றளவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு நாடு முழுவதும், பணியில் கல்வியில் இட ஒதுக்கீடு ஒன்றிய மாநில அரசுகளால் அளிக்கப்படுகிறது. மருத்துவக் கல்வி போன்ற தொழிற் கல்வி நுழைவுத் தேர்வுகள், கல்லூரியில் மாணவர் சேர்ப்பு நடக்கும் காலங்களில் பொதுவான ஒரு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் தேர்வு குறித்த சர்ச்சைகள் எழும்புவது காலங்காலமாகத் தொடரும் ஒரு வழக்கம். 

இந்தச் சர்ச்சைக்கான தீர்வை,  அன்றே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவர் ஒரு குறளில் உணர்த்தியுள்ளார் என்பது பரவலாகப் பேசப்பட்டதில்லை. 

     தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
     பாற்பட்டு ஒழுகப் பெறின்
     [அறத்துப்பால், நடுவு நிலைமை, குறள் - 111]
இக்குறளை நாம் இக்காலத்திற்குப் பொருத்திப் பார்ப்பது இன்றியமையாதது.  இக்குறளுக்குத் தமிழ் அறிஞர்கள் வழங்கிய உரைகள் பின்வருமாறு:

மணக்குடவர்:  நடுவு நிலைமை என்று சொல்லப்படுகின்ற ஒன்று நல்லதே: அவரவர் நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.

பரிமேலழகர் :  தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். 

மு.வரதராசன்: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
 
வ.சுப.மாணிக்கம் : இடந்தோறும் முறையோடு ஒழுக முடியின் நடுவு நிலைமை மிகச் சிறந்த அறமாம்.

"அவரவர் நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்" என்று மணக்குடவர் தெளிவுபடுத்துவதன் அடிப்படையில் படித்தோம் என்றால் இக்குறளின் பொருளை; பகுதியால் பாற்பட்டு நடந்து கொள்வார் எனின் நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஒன்று நல்லதே என்பதை இப்பாடலின் பொருளாகக் கொள்ள முடிகிறது. 'பகுதியால் பாற்பட்டு' என்பது பல வேறு பின்புலம் கொண்ட மக்களைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளலாம். பகுதியான் என்பது பகுதிதோறும் எனப் பொருள்படும் என விளக்குவார் பரிமேலழகர். மக்கட்பகுதி, அவரவர் நிலைமைப் பகுதி, அறப்பகுதி எனவும் உரைகாரர்கள் இதற்குப் பொருள் கூறுவர். 

ஆக, பலபிரிவு மக்களின் தேவை உணர்ந்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும்  நலன் விளையும் வகையில் நீதி வழங்கப்படும் முறையை  'எந்தப் பகுதியினரிடத்தும் நேர்மையாக நடந்து கொள்ளும் அறம் சார்ந்த நடுவு நிலைமை' என்கிறார் வள்ளுவர். 'பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்' என்று கூறிய வள்ளுவர் அறம் எது என்பதில் கொண்ட நிலைப்பாட்டை இக்குறளும் விளக்குகிறது.  

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 313 - 03.12.2025]

#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .

பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .

      பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
      திண்மை உண்டாகப் பெறின் (54)
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதி நிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? என்று இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தருகிறார் மு.வரதராசன்.

கற்பென்பது ஒருத்திக்கு  ஒருவன் என்று வாழும் இல்லற வாழ்வைக் குறிப்பதாகப் பொருள் கூறப்படும்.  ஆனால் ஆணுக்குக் கற்பு  என்ற கட்டுப்பாடு இல்லை என்பது இன்றுவரை நடைமுறை வழக்கு. கைம்பெண் ஆனவள் வேறு ஆணுடன் இல்லறம் தொடரும்  நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், அவளை இறந்த கணவனுடன் சேர்த்து உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் முறை முன்னர்  இருந்தது.  ஆங்கிலேயர் ஆட்சியில் கடுமையான சட்டத்தை அவர்கள் இயற்றும் வரை இந்தியாவின் பல பகுதிகளில்  'சதி' என்ற இந்தக் காட்டுமிராண்டி சடங்கு வழக்கமாகவே இருந்தது.

சென்ற நூற்றாண்டில் பெண்ணுரிமைக்குக்  குரல் கொடுத்த புரட்சியாளர்களான பெரியார், பாரதியார் போன்றோர் பெண்களுக்கு  மட்டும் கற்பை  வலியுறுத்துவதை ஏற்றவர்கள்  இல்லை. கற்பை இருபாலருக்கும் பொதுமைப்  படுத்தினார்கள்.  
      "கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
      கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்"
என்று  முழங்கினார் பாரதி. "சந்திரிகையின் கதை" என்று அவர் எழுதிய புனைகதை மூலம்  விசாலாட்சி என்ற இளம் கைம்பெண் ஒருத்திக்கு மறுமணம் குறித்தும் எழுதி இருப்பார்.

அதற்கும் முன்னர் ஆரியப் பண்பாட்டின் தாக்கமாகப் பெண்கள் கற்பு என்பது குறித்து மூளைச் சலவை செய்யப் பட்டார்கள் என்பதை  இக்கால 'இசட் தலைமுறை' (Generation Z) அறிந்திருக்க மாட்டார்கள். கற்பு என்பதை 'பதிவ்ரதாத்வம்' அல்லது பதிவிரதம்  என்று சாத்திரங்களில் விளக்கினார்கள்.  "பதிவ்ரதாத்வம் - நாரீணாம் - ஏதத் -ஏவ - ஸநாதனம்" என்று மகாபாரதம் அனுசாஸனிகபர்வம் 249ஆவது அத்தியாயம் 12ஆவது சுலோகம் கூறுகிறதாம்.

ஆண்கள் மேலோகம் செல்ல வேண்டுமானால் (உத்தம கதி அடைதல்) அவர்களுடைய ஊனக்கண்ணுக்குத் தெரியாத கடவுளை சாத்திரங்கள் கூறுவது படி  மனதில் உருவகித்துக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளை வணங்க வேண்டும்.  ஆண்கள் கவுளை வழிபடுதல், வேள்வி செய்தல், யக்ஞம், தானம்  என்ற பல செய்தே கடவுள் அருளைப் பெற வேண்டி இருக்கிறது.
 
ஆனால் பெண்களுக்கு இத்தகைய கவலையே இல்லை.  அவர்கள் தங்கள் கண்ணெதிரே காட்சி தரும் கணவனையே தெய்வம் என வழிபாடு செய்து சொர்க்கம் போகலாம்  என  கடவுளின் ஆணையான சாத்திரங்கள் கூறுகின்றனவாம். கணவனைத்  தெய்வமாக மதித்து அவனுக்குப் பணிவிடை செய்தாலே எளிதாகச் சொர்க்கம் போகலாம். அக்கணவன் கேடு கெட்டவனாக இருந்தாலும் கூட கடவுள் அவன் வழியே மனைவிக்கு அருள் தந்து அவளைக்  கடவுள் கடைத்தேற்றுவாராம். அதாவது மற்றவர்களைவிட பதிவ்ரதாஸ்தரீகளே எளிதில்  கடைத்தேறும் பாக்கியம் பெற்றவராகி யிருக்கிறவர்கள் என்று சாத்திரம் பெண்களுக்கு வழி காட்டுவதாகக் கூறப்படுகிறது.

"பெண்டிர்க்குப் பதியே தெய்வம்; வேறு புகலிடம் இல்லை" என மகாபாரதம் அனுசாஸனிகபர்வம் 250ஆவது அத்தியாயம் 25ஆவது சுலோகம் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.  உடலை வருத்தி மிகுந்த துன்பங்களுடன் ஓர் ஆண் அல்லது கணவன் அடையும் பயனை,  கணவனை  வணங்கி பூஜை செய்வதினாலேயே பெண்ணானவள் எளிதில் அடைந்துவிடுவாள்  என்று  அதற்கு அடுத்து வரும் மகாபாரத அனுசாஸனிகபர்வம் பர்வம் 250ஆவது அத்தியாயம் 26ஆவது சுலோகமும் கூறுகிறதாம்!!!

பெண்களுக்கு ஏதோ சிறப்புச் சலுகை அளிப்பது போல ஆசை வார்த்தைகள் எல்லாம் காட்டி,  மனைவியைக் கணவனுக்குக் குற்றேவல்  செய்ய வைத்து ஆண்கள்  எவ்வாறு சுகமாக வாழ்ந்திருக்கிறார்கள், அதற்குச் சாத்திரங்கள் எவ்வாறு உதவுகின்றன என்று சிந்தித்தால் பெண்கள் ஏமாற்றப் பட்ட நிலை கண்டு நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது என்று புரியவில்லை.  



மணமான பெண்கள் கணவனையே தெய்வமாகத் தொழ வேண்டும் பணிவிடை செய்ய வேண்டும் என்பதுதான் பதிவிரதம் அல்லது  கற்பு. இந்நிலை மேன்மை அடையும் பொழுது மனதில் முதிர்ச்சி ஏற்படுகிறது மனம் ஒருமைப் படுகிறது. அப்போது கடவுளின் அருளால்  பெய் என்றால் மழை பெய்யக் கூடிய சக்தி கிடைக்குமாம்.  அதாவது, பெய்யெனப் பெய்யும் மழை. பெரிய யோகிக்கும் கூட பெரிய முயற்சி மூலம்தான் கிட்டும் இந்தச் சக்தி பதிவிரதைக்கு எளிதில் கிட்டிவிடுகிறதாம். அடேயப்பா ?? என்ற வியப்புதான் வருகிறது. ஏமாற்றுவதற்கும் ஓர் எல்லை இல்லையா ?  மனம் கூசாமல்  இதை எல்லாம் சாத்திரம் என்று கூறுபவர்கள் மீது மோசடி  வழக்குதான் போட வேண்டும்.

மாதம் மும்மாரிப் பெய்கிறதா என அக்காலத்துத் தெருக்கூத்து,  நாடகங்களில் அரசர் அமைச்சரைக் கேட்பதாகக் காட்சிகள் வரும். பராசக்தி படத்தில் அது ஓர் எள்ளல் காட்சியாக "மந்திரி நமது- மாநகர் தன்னில்- மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்ற வசனம்  இடம் பெறுவதை நினைவு கூரலாம்.
     "வேதமோதிய வேதியர்க்கோர்மழை,
     நீதிதவறா நெறியினர்க் கோர்மழை,
     காதல்கற்புடை மங்கையர்க்கோர் மழை,
     மாதம் மும்மழை பெய்யெனப் பெய்யுமே"
         (விவேகசிந்தாமணி பாடல்)
என மூன்று மழைகளில் ஒரு மழை பெண்களின் கற்புடன் தொடர்பு படுத்தி இருப்பதைக் காணலாம்.  நாட்டில் வறட்சி என்றால் பெண்களிடம் கற்பில்லை என்று பழி போடக்கூடிய இக்கட்டும் இதனால்  உள்ளது அல்லவா?

மழைபொழிதல் குறித்து சுற்றுச்சூழலியல், அறிவியல் பாடங்களில் அறிந்ததைப் பெண்கள் வாழ்வில்  தொடர்புப்படுத்தி தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
--


கட்டுரைக்கு உதவிய நூல்: ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹித்த திவ்ய ஸ்ரீமுகத்துடன் கூடிய "திருக்குறள் நூற்றெட்டு" என்ற தலைப்புடன் 1950ஆம் ஆண்டு ஶ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்ட நூல்.

நன்றி :
பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .
- முனைவர் தேமொழி  
சக்தி இதழ் [டிசம்பர் 2025]
https://archive.org/details/sakthi-202512
பக்கம்: 76-78


Tuesday, November 25, 2025

வள்ளுவம் உறுதிப்பட உணர்த்தும் கருத்துகள்

வள்ளுவம் உறுதிப்பட உணர்த்தும் கருத்துகள்

பொதுவாக "உறுதிப்பொருள்கள்" நான்கு என்று கூறப்படும். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன ஆகும். ஆனால், திருவள்ளுவர் எவற்றை எல்லாம் மிக "உறுதியான கருத்துக்களாகக்" கூறுகின்றார் என்று அறிய முயல்வது ஆர்வமூட்டும் ஒரு தேடலாக அமையும் என்பதில் ஐயமில்லை. எதையும் உறுதிப்படக் கூறுவதற்கு இலக்கியத்தில் "தேற்ற ஏகாரம்" பயன் கொள்ளப்படும்.
      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு.  
என்ற முதல் குறளிலேயே அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை என்பதை "முதற்றே" என்ற தேற்ற ஏகாரத்தில் முடியும் சொல்லாக அமைத்து உறுதிப்படக் கூறுகிறார். தேற்றப் படுத்தும் ஏகாரம்  அல்லது உறுதிப்படுத்தும் ஏகாரம் கொண்டு 'முதற்றே' என்ற சொல் அமைகிறது.

இந்த "ஏகார இடைச்சொல்" தேற்றம் தவிர்த்து;  வினா, பிரிநிலை, எண், ஈற்றசை  எனும் பொருள்களை உணர்த்தியும் அமையும்.
      “தேற்றம், வினாவே, பிரிநிலை, எண்ணே,
      ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே
என்பது தொல்காப்பிய இடையியல்  நூற்பா.  

‘ஏ’ இடைச் சொல்லுக்குத் தொல்காப்பியர் கூறியுள்ளவற்றோடு ‘இசைநிறை’ என்ற ஒன்றையும் கூட்டி ‘ஏ’ ஆறு பொருளில் வரும் என்று நன்னூலார் இடையியலில் கூறியுள்ளார்.
      “பிரிநிலை வினாஎண் ஈற்றசை தேற்றம்
      இசைநிறை என ஆறு ஏகாரம்மே
ஆக, ஏகார இடைச்சொல் அசைநிலையாகவும் இசைநிறைக்கவும் கூட செய்யுள்களில் இடம் பெறுவதுண்டு. இது ஏகார இடைச்சொல் என்பதன் இலக்கணப்  பின்னணி.
குறளில் ஏகார இடைச்சொல் சற்றொப்ப 90 குறள்களில்  இடம் பெறுகின்றன, அவற்றுள் சில;

      சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
      உழந்தும் உழவே தலை. (1031)  
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது; இதில் 'உழவே தலை' தேற்றமாகக் கூறப்படுகிறது. தேற்றம் என்றால் தெளிவு, உறுதி என்று பொருள். என்று இதில் ஏ தேற்றப் படுத்துகின்றது. ஆகவே இது  தேற்றம்.

      அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
      புறத்த புகழும் இல. (39)
அற வாழ்வில் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன அல்ல, அவை புகழ்  தராது;   இதில் ஏ என்பது பலவழிகளை ஒப்பிட்டு அறவழியைப் பிரித்துச் சுட்டுகிறது. பிரிநிலை என்றால் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துக் காட்டுவது. ஆகவே இது பிரிநிலை.

      மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
      என நான்கே ஏமம் படைக்கு. (766)
வீரம், மானம், நன்னடத்தை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்;  இதில் வீரம், மானம், நன்னடத்தை, நம்பிக்கைக்கு உரியவராக இருத்தல் என எண்ணிச் சொல்கிறது. ஆகவே இது எண்ணுப் பொருள்.  

குறளில் ஏகார இடைச்சொல்  பயன்கொண்டு தேற்றமாகவும் பிரித்து ஒப்பிட்டுக் காட்டும்வகையில் உறுதியாக உணர்த்தப்படும் கருத்துகள் சிலவற்றைப் பின் வரும் குறள்களில் காணலாம்.
தேற்றம்:
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் (282)
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும் (293)
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் (394)
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505)
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள (527)

பிரிநிலை:
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (64)
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை (76)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று (108)

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு (129)
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து (221)
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு (299)

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 312 - 26.11.2025] 


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Sunday, November 23, 2025

அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்—அறிவியல் நூல் அறிமுகம்

அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்அறிவியல் நூல் அறிமுகம்

பேரா. முனைவர் மு. முத்துவேலு, சென்னை

     அறிவியலை ஆய்வுகளை ஆக்கம்சேர் கணிப்பொறியைப் 
     பொறியியலை மருத்துவத்தைப் பொதுமைசேர் சட்டத்தின் 
     நெறியதனைத் தமிழாக்கி நிறைந்துவரும் நூலியற்றி 
     அறிவுசார் மொழிஎன்று அவனிக்குக் காட்டிடுவோம்! 
என்னும் என் கவிதைக்கு ஏற்ப அறிவியல் கருத்துக்களை அருந்தமிழில் எழுதி அறிவியல் தமிழைப் பரப்பி வருகிற அறிஞர் பெருமக்களுள் முனைவர்  தேமொழி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
இந்நூலில் பத்துக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவை உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கிய ஸ்டெப்ஃபெனி கோலக் என்னும் கட்டுரை தொடங்கி முச்சொல் முகவரி என்னும் கட்டுரை வரை உள்ளன. இந்த நூலில் அறிவியல் உலகத்தில் பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்த அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறும் அறிவியல் கருத்துக்கள் பரவுவதற்குப் பாடுபட்ட அறிவியல் அறிஞர்களின் செயல்பாடுகளும், சில அறிவியல் செய்திகளும் அடங்கி உள்ளன.

அறிவியல் அறிஞர் ஒவ்வொருவரைப் பற்றியும் கூறுகையில் நிறைவாக அந்த அறிவியல் அறிஞரின் நினைவாக உலகம் போற்றி வருகிற செயல்பாட்டினை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அந்த வகையில் ஒரு கட்டிடத்திற்குக் காத்தரின் ஜான்சனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதைக் காணும் பொழுது அறிவியலில் பெண்கள் கண்ட முன்னேற்றம் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிடுவது சுட்டிக் காட்டத் தக்கதாகும். அதைப் போலவே டிமிட்ரீ மெண்டலீயா என்னும் ருசிய அறிஞரைப் பற்றிக் குறிப்பிடும் போது இவர் பிறந்த ரஷ்யாவில் இவரைப் போற்றும் வண்ணம் பல பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மெண்டலீயாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், அவர் பெயரில் அறிவியலில் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருவதையும் குறிப்பிடுவது மேனாட்டு உலகம் அறிவியல் அறிஞர்களைப் போற்றிப் பாராட்டுகிற செயல்பாடுகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. 

தொற்றுநோய்ப் பரவலைக் காட்டும் மருத்துவப்புவி வரைபடங்களின் வரலாறு எனும் கட்டுரையில் உலக இயக்கத்தை முடக்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் கொள்ளை நோய் குறித்த செய்தியை முதலில் கவனத்திற்குக் கொண்டு வந்தது கணினியின் செயற்கை நுண்ணறிவு என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டிச் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு பயன்களையும் அதன் செயல்பாடுகளையும் அதனைக் கண்டறிந்த வரலாற்றையும் விரிவாக எடுத்துச் சொல்லுகிறார். இக்கட்டுரை நூலில் மூன்று பக்கங்கள் முதல் 15 பக்கங்கள் வரையிலான கட்டுரைகள் அடங்கியுள்ளன. சென்னைப் பெருநகரில் காலரா நோய் பரவியதற்குப் பின் அதனைத் தடுக்கும் நோக்கில்தான் இலண்டன் மாநகரைப் போலச் சென்னை நகரிலும் கழிவுநீர் வடிகால் வசதி கட்டப்பட்டது என்கிற வரலாற்றுச் செய்தியையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். இது சென்னை நகரின் கழிவுநீர் வடிகால் வசதியின் வரலாற்றைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இன்று அடுத்த ஊரில் நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு புதிய முகவரியைத் தேடிக் கண்டு பிடித்துச் செல்ல நம் கைப்பேசித் திரையில் உலக வரைபடத்தைத் திறந்து நம் இடத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது. இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் தொடக்கமாகக் கடலுக்கு நடுவே செல்லுகிற கப்பலை ஒட்டுகிற மாலுமிகள் தாங்கள் செல்லும் திசையையும் கடலில் தாங்கள் கரையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதையும் கண்டறிவதற்கான அந்த நெடுங்கோட்டுச் சிக்கலுக்கான தீர்வைக்கண்ட கடற்கால மாணி குறித்த கட்டுரை சுவையானதாக அமைந்துள்ளது.

உலக வரைபடங்களை உருவாக்கிப் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அதனுடைய துல்லியம் இன்னும் செம்மைப் படவில்லை. அந்தத் துல்லியத்தை நோக்கித்தான் வரைபடம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலக வரைபட வரலாறு இன்னும் அறிவியல் அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்பதற்குக் கட்டுரை சான்றாக அமைகிறது.

முச்சொல் முகவரி என்ற கட்டுரையும் உலக வரைபடத்தின் வரலாற்றையும் அதன் இன்றைய நிலையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. "அறிவியல் பார்வையை நமக்குள்ளும் பரப்பி நம் அடுத்த தலைமுறைகளுக்கும் கொடுக்க வேண்டிய இன்றியமையாமையைத் தேமொழி தெரியப்படுத்துகிறார்" என்று பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா அவர்கள் கூறியிருப்பது முற்றிலும் பொருத்தம். அறிவியல் கருத்துக்களை எழுதும் பொழுது அதன் மொழிநடையும் சொல் பயன்பாடும் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த வகையில் முனைவர் தேமொழி அவர்கள் எளிய சொற்களில் ஊடகத் தமிழ் நடையில் எல்லோருக்கும் புரிகிற மொழியைப் பயன்படுத்தி எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

அறிவியல் அறிஞர்களின் படங்களையும் அவர்களது கண்டு பிடிப்புகளையும் தேடிக் கண்டெடுத்து நூலிலே இணைத்திருப்பது, தொடர்ந்து கட்டுரைகளைப் படித்து வருபவர்களுக்கு இடையில் சற்று இளைப்பாறுதலையும் சுவையையும் ஊட்டக் கூடியதாக அமைந்துள்ளது. அறிவியல் ஆக்கங்களை எல்லாம் அருந்தமிழில் எழுதிப் பரப்பி வருகிற முனைவர் தேமொழி அவர்களின் அறிவியல் தமிழ்ப் பணி மேலும் சிறக்க அறிவியல் பூங்காவின் நல்வாழ்த்துக்கள்!


நன்றி:
அறிவியல் பூங்கா, மலர்: 17, இதழ்: 68, பக்கம் : 46 

______


நூல் : அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்
ஆசிரியர் : தேமொழி 
வெளியீடு : சந்திரோதயம் பதிப்பகம், மதுரை (+91 70109 97639)
விலை : ரூ.150/-
______


என்னுடைய நூலுக்கு  நூலறிமுகம் கொடுத்துப் பாராட்டி  ஊக்கம் அளித்துள்ள பேராசிரியர் முனைவர் மு. முத்துவேலு அவர்களுக்கு என நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


#Themozhi, #அறிவியல், #அறிவியல்நூல், #அறிவியல்பூங்கா, #நூலறிமுகம், #முனைவர்மு.முத்துவேலு

Wednesday, November 12, 2025

திருக்குறள் நூற்றெட்டு


காஞ்சி மடம் தேர்வு செய்த 108 திருக்குறள்கள் 

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (1)
 
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (2)

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3) 

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)

5. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (6)

6. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (10)

7. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.(11)

8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (18)

9. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். (19)

10. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. (23)

11. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. (24)

12. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. (25)

13. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. (31)

14. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (36)

15. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (37)

16. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. (39)

17. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (41)

18. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (43) 

19. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும். (50) 

20. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். (54)

21. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (55) 

22. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. (57)

23. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. (58) 

24. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். (63) 

25. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.(65)

26. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (72)

27. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். (77)

28. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (82)

29. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.(86) 

30. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். (87)

31. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். (96)

32. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. (107)

33. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். (109)

34. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110) 

35. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (118)

36. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். (120)

37. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121)

38. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து. (126)

39. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (130)

40. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.  (133) 

41. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134)

42. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.  (148)

43. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. (157)

44. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. (164) 

45. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.(173) 

46. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். (183)

47. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. (204)

48.  புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.  (213) 

49. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். (243)

50. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (247)

51. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். (251)

52. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. (259) 

53. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். (263)

54. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். (265)

55. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். (271)

56. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. (322)     

57. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.  (331)
          
58. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. (336)     

59. குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. (338)

60. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். (341)

61. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. (343) 

62. யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும். (346) 

63. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். (349)

64. பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. (351)

65. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. (352) 

66. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (355)

67.  கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (356) 

68. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. (357)

69. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (358)

70. இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். (369)

71. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். (370)

72. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (380)

73. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. (381)

74. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். (388)

75. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. (390) 

76. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (392)

77. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (393)

78. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (398) 

79. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. (409)

80. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். (441)

81. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (479) 

82. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (481)

83. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. (495)

84. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.  (496) 

85.அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். (501)

86. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. (502)

87. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543)

88. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560)

89. ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும். (589)

90. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610) 

91. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (616) 

92. அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். (638)

93. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (656)

94. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. (660) 

95. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. (681)

96. இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். (698)

97. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. (731) 

98. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.  (738)

99. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். (834)

100. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது. (865) 

101. பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று. (871)

102. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். (899) 

103. இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். (906)

104. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.  (920) 

105. தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.  (1073) 

106. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.  (1075)

107. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. (1103)

108. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து. (1323)

இவை தவிர்த்து, கீழ்க்காணும் 
இக்குறள்களும் நூலில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன . . . 

109. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். (280)

110. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (66)

111. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (64)

112. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். (256)

113. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30)



Tuesday, November 11, 2025

குறளுக்கு உரிமை கோரல்

குறளுக்கு உரிமை கோரல்

திருக்குறளின் சிறப்பு, நூலின் ஆசிரியர் யார் என்பதையும், அவர் பற்றிய குறிப்பாக அவருடைய காலம், இடம், சமயம், இனம் என எதுகுறித்தும் எக்குறிப்பையும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடாமல் இருப்பது. வள்ளுவர் என்பவர் தமிழ் அறிந்தவர் என்பதையும் அவர் மக்கள் தம்  வாழ்வில் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பி அவற்றைக் குறள் வெண்பாக்களாக எழுதிவிட்டுச் சென்றார் என்பதை மட்டுமே நாம் உறுதியாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர் நூலின் வழியே கிடைக்கும் குறிப்புகள் மூலம் ஏதேனும் அவர் குறித்துத் தெரிந்து கொள்ள இயலுமா என ஆராய்வது ஆய்வாளர்களின் ஆர்வம்.  ஆனால் அது போன்ற தேடல்களைத் தடை செய்ய இயலாது. வள்ளுவரைத் தங்கள் இனம் என்றும், தங்கள் சமயம் என்றும் என்றும் அடையாளம் காணும் முயற்சிகள் தமிழ் ஆய்வுலகின் தொடர்கதை.  

வள்ளுவர் ஒரு தமிழறிந்த ஆண் புலவர் என்பதையும், அறம் மிக்க வாழ்வை அவர் வலியுறுத்தினார் என்பதையுமே நாம் அவர் குறித்து உறுதியாகக் கூறக் கூடிய கருத்துகள்.
மழை மீதும், உழவு மீதும் பெருமதிப்பு  கொண்டிருந்தார்;
முன்னோர் வணக்கத்தை ஏற்றுக் கொண்டார்;
ஊழ் என்பதன் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்;  
இல்லறத்தைப் போற்றினார் துறவறத்தையும் மதித்தார்;
ஈகைக் குணத்தைப் போற்றினார், பிச்சை எடுப்பதை வெறுத்தார்;
கொல்லாமை, ஊனுண்ணாமை ஆகிய பண்புகளைப்  போற்றினார்;
வாழ்வில் கல்வி, அன்பு, நட்பு, இல்வாழ்க்கை, நல்லொழுக்கம்  ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார்;
பொய், களவு, கள், கொலை, காமம் (முறையற்ற உறவு/கணிகையர் உறவு) ஆகிய ஐந்தையும் தீய ஒழுக்கங்கள் என்றார்;
சினம் கொள்ளுதல், கடுஞ்சொல் கூறல், கேடு செய்தல்,  பற்று கொண்டிருத்தல், சூதாடுதல் ஆகியனவற்றைக் கண்டித்தார்;
முற்பிறவி, மறுபிறவி, ஏழ்பிறப்பு, சொர்க்கம், நரகம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார் என்பதை அவர் கொள்கை  நோக்குகளாக அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றின் மூலம் தெளிவாக அறிய முடியும்.  

வள்ளுவர் தன் சமயத்தவர் என உரிமை  கொண்டாட விரும்புபவர்களுக்கு ஆணித்தரமான குறிப்பு  எதையும் அவர் விட்டுச் செல்லாததுடன், அவர் எவற்றையும் பொதுச் சொல்லால் சொல்லிச் செல்வதே பலர் அவருடைய பாடல் குறிப்புகள் மூலம் தங்கள்  பிரிவில் அவரை அடக்கும் முயற்சிக்கு  வழிகோலிட்டு விட்டது என்பதை மறுப்பதற்கு இல்லை. முதல் குறள் குறிப்பிடும் "ஆதிபகவன்" யார் என்பதிலேயே கேள்விகள் தொடங்கிவிடுகின்றன.  இந்திய நிலப்பரப்பில் தோன்றாத ஆபிரகாமிய சமயங்களும் கூட வள்ளுவரை  உரிமை கொண்டாடும் அளவிற்கு வள்ளுவர்பால் ஆர்வம் கரை புரண்டு ஓடுவது இன்றைய நிலை. இவ்வாறிருக்க, இந்திய மண்ணின் வைதீக சிரமண சமயங்கள் வள்ளுவர் கருத்துக்களின் அடிப்படையில் அவரை உரிமை கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லை. குறள் சொல்லும் கருத்துக்களைச்  சீர் தூக்கிப் பார்த்தால்  அவர் யார் என்ற குறிப்பு கிடைக்கக் கூடும்.

வைதீக சிரமண சமயங்களும்  தமிழ் மண்ணுக்குப் புறச் சமயங்களே என்பதைத் தமிழர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. வள்ளுவர் ஏதோ ஒரு சமயத்தில்  பிறந்திருக்கலாம், வளர்ந்திருக்கலாம் அதன் தாக்கமும் அவருக்கு  இருந்திருக்கலாம். மெய்ப்பொருள் காண விழைந்த அவர் பின்னர் வேறு ஏதோ  ஒரு சமயத்தையும் பின்பற்றியும் இருக்கலாம், அல்லது எந்தச் சமயமுமே எனக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்திருக்கலாம். உலகைப் படைத்தவர் என்று எவரும் இல்லை (1.atheistic) என்றோ, அல்லது படைத்தவர் யார்? அப்படி என ஒருவர் உண்டா இல்லையா என்ற அக்கறை எனக்கில்லை (2.agnostic) என்ற பிரிவுகளின் கீழும் வள்ளுவர் நகர்ந்து இருக்கலாம். இந்திய மண்ணின் சமணம் பௌத்தம் எனப்படும் சிரமண  சமயங்களை  மெய்யியலாளர் முறையே  முதல் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்துவதைக் காண இயலுகிறது.  ஆக, இறுதியில் வள்ளுவரின் கொள்கைகள் மூலம் அவர் வாழ்வின் சமய நிலைப்பாட்டைக் கண்டுணர இயலுமா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.

தனி வாழ்வில் அன்புடைமை, அருளுடைமை, அற வாழ்வு, பிறர்க்குத் தீங்கிழைக்காத வாழ்க்கை,  நன்னெறி பின்பற்றல் ஆகிய அறப்பொருள்  கருத்துக்களைக்  கொண்டோ;  அல்லது  பொது வாழ்வில்  மன்னனின் கடமை, மக்களுக்கு முறை செய்தல், பொருளாதாரக் கொள்கை, வரிவிதித்தல்  போன்ற  புறப்பொருள் கருத்துக்களைக்  கொண்டோ வள்ளுவரை ஒரு சமயத்திற்குள்  அடையாளப் படுத்தலாம் என்ற முயற்சி தெளிவான ஒரு முடிவைத் தராது.  ஏன் எனில், மக்களை  நோக்கிய நற்பண்புகளும், வாழ்க்கை நடைமுறைகளும் உலகின் அனைத்து   மண்ணிலும் வழக்கமாகவே இருக்கும், அவை பொதுவான கருத்துகள்.
     அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
     என்பும் உரியர் பிறர்க்கு. (72)
என்பது உலகம் தழுவிய கோட்பாடு, அனைத்துச் சமயங்களும் தோன்றுகையில் இதை அடிப்படையாகக்  கொண்டே தொடங்கப்பட்டிருக்கும். சமயம் நிறுவனமயமாக்கப் பட்ட பிறகு அதன் கொள்கைகள் மாறிவிடுவதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

     தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
     மெய்வருத்தக் கூலி தரும். (619)

     இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
     கெடுக உலகியற்றி யான். (1062)

     நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
     இல்லெனினும் ஈதலே நன்று. (222)

என்ற  இவை போன்று   கடவுளைப் பொருட்படுத்தாமை, கடவுளையே கண்டிக்கும் முறை, மேலுலகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் கருத்துகள் உலகின் பல சமய நம்பிக்கைகளுக்கு அடிப்படை அல்ல.  இது ஒருபுறமிருக்க,  உலகின் 'அனைத்து' உயிர்களிடமும் அன்பு செலுத்துக, 'புலால் உண்ணுவதைத் தவிருங்கள்' என்று கூறும் சமயங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதைத்தான் வள்ளுவரின் சமயம் எது என்ற தேடலுக்கு முனைவோர் கருத்தில் கொள்ள வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (972), பரந்து கெடுக உலகியற்றியான்  (1062) என்ற கூற்றுகளும்; புலால் மறுத்தல் (251-260) கருத்துகள் யாவும்   வள்ளுவர் யார் என்று அறியும் நோக்கில் முன்னேற வேண்டிய திசை காட்டும் கைகாட்டிகள்.

கர்மவினை, மறுபிறவி, முக்தி, தர்மம் இவை யாவும் இந்திய மண்ணின் சமயங்களில் பொதுவாக உள்ளன. இவற்றுக்குப் பொருள் விளக்கம் தருவதில்தான்  அவற்றிற்கு  இடையே சிற்சில மாறுபாடுகள் உள்ளன. அது போன்றே, சொர்க்கம் நரகம் போன்றவையும் இச்சமயங்களில் உண்டு. இருப்பினும்,  இவற்றுக்கான விளக்கங்களும் வேறுபடும். இந்திரன் லட்சுமி போன்ற கடவுளரும் இச்சமயங்களில் உண்டு. ஆனால், அவர்களை அச்சமயத்தார் அணுகும் நோக்கமும் வேறுபடும். இந்தியச் சமயங்கள் யாவும் மக்களிடம் புழக்கத்தில் இருந்த பல்வேறு நம்பிக்கைகளை, சடங்குகளை, வழிபாட்டு முறைகளை உள்வாங்கிக் கொண்டு தங்களைத் தகவமைத்துக் கொண்டவை  என்பது சமய ஆய்வாளர்கள் கூறும் கருத்து. காலப்போக்கில் அச்சமயங்களின் பரிமாணங்களிலும் மாற்றம் ஏற்பட்டு; மக்களின் தேவையை, விருப்பத்தை உள்வாங்கித் தங்களுடையதாக்கிக் கொண்டு வளர்ந்தவை. 

சொல்லப் போனால், அடிப்படையில் உலகைப் படைத்தவர் பற்றிய கருத்து, கொல்லாமை, புலால் மறுத்தல் கொள்கைகள் மட்டுமே இந்தியச் சமயங்களின் தனித்தன்மையை ஒவ்வொன்றிலும்  வேறுபடுத்திக் காட்டும்.  இவை பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகளே ஆய்வாளர்களுக்கு அவர் யார் எனக் காட்டவும்  கூடும். வள்ளுவர் காலத்தில் கடவுளைப் பற்றிய கருத்திலும் புலால்மறுத்தலிலும் தீவிரமாக இருந்தவை  சிரமண சமயங்களான சமணமும் பௌத்தமும் என்பது வரலாறு. கொல்லாமை கருத்தில் பௌத்த சமயம், வைதீகம்-சமணம்  சமயக் கொள்கைகளுக்கு  இடைப்பட்ட வழியில் பயணித்தது. 

தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி "THIRUKKURAL–An Abridgment of Sastras" (2017) என்ற நூலை வெளியிடுவதற்கு முன்னரே; ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹித்த திவ்ய ஸ்ரீமுகத்துடன் கூடிய "திருக்குறள் நூற்றெட்டு" என்ற நூலை 1950இல் (சங்கத மேற்கோள்களுடன்) ஶ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்டுள்ளது; நூலின் உரையாசிரியர் பெயர் கொடுக்கப்படவில்லை, இது மடத்தின் வெளியீடு.  சுருக்கமாக; திருக்குறள் வேதங்களின் சாரம் என்பதுதான் அந்த நூலின் நிலைப்பாடும். ஏன் 108 திருக்குறள்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது? இந்திய ஆன்மீகத்தில் 108 என்ற எண்ணிற்குத்  தனிச்சிறப்பு உண்டு, வைதீகச் சமயத்திற்கு மட்டுமல்ல சமண புத்த சமயங்களுக்கும் 108 என்ற எண் முக்கியமானதே. ஒவ்வொரு சமயமும் 108 என்பதற்கு ஒவ்வொரு காரணத்தை அடிப்படையாகக் கூறும்.  இந்நூலில் பெரும்பாலும் சனாதன கருத்து சாயல் கொண்ட குறள்கள் பொறுக்கி எடுக்கப்பட்டு  வைதீகச் சமய தொடர்பு காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது "புலால் மறுத்தல்" என்பதற்கு இந்நூல் தரும் விளக்கத்தை மட்டும் காணலாம். 
     அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
     உயிர்செகுத் துண்ணாமை நன்று.   (259)
[அறத்துப்பால், துறவறவியல், புலால் மறுத்தல்]
நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது (மு. வரதராசன் உரை). 
சனாதனத்தின் அடிப்படை செயலான வேள்வி குறித்த இக்குறளை  வைதீகத்துடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளும் பொழுது, கொடுக்கப்படும் விளக்கமே களத்தில் எதிரணிக்குச் சார்பாக விளையாடும் ஆட்டக்காரரின் செயல்பாடு போல அமைகிறது. குறிப்பாகப் பௌத்தச் சமயத்திற்குச் சார்பாக அமைகிறது இந்நூல் தரும் விளக்கம்.  அந்த விளக்கத்தை அவ்வாறே இங்குக்  கொடுப்பது தெளிவுதரும். 

"தமிழ்நாட்டில் பண்டை சங்கநூல்களில் புலால் உண்ணுவது ஆக்ஷேபிக்கப்படாதது மாத்திரமேயன்றி அது போற்றப்பட்டு மிருக்கிறது. பழைய தமிழ்மக்கள் புலாலருந்துவதைச் சிறப்பாகத்தான் கொண்டிருந்தார்கள். வேதங்களிலும் யாகம் முதலியவைகளில் மாம்சம் உபயோகப்படுத்தப்பட்ட தென்பது தெளிவாகத் தெரிகிறது. ஆதலால் திருவள்ளுவர் வைதிகக் கொள்கையினராயிருந்தாலும் முதன் முதலாக புலால் மறுத்தலைப் பிரசாரம் செய்ததற்குக் காரணம் என்னவெனின், அவர்காலத்தில் வடநாட்டிலிருந்து புத்த சமண மதப்ரசாரங்கள் தென்னாட்டில் ஆரம்பிக்கப்பட்டன. அப்போதிருந்த வைதிகமகான்கள் பௌத்தர்களுடைய அஹிம்ஸைக் கொள்கையைத் தங்களுடைய மதத்தில் சேர்த்துக்கொண்டார்கள்.அதனால்தான் இக்காலத்து பிராமணர்கள் புலால் தவிர்த்திருக்கிறார்கள் போலும்.

ஆனால் இவ்விதம் அபிப்பிராயப்படுவது சரியாகத்தோன்றவில்லை. இங்கு அஹிம்ஸாதர்மத்தை உபதேசித்திருப்பது பௌத்தசமயக் கொள்கைகளை அனுசரித்து அன்று, வேதங்களிலும் தர்மசாஸ்திரங்களிலும் உபதேசிக்கப்பட்டிருக்கிற அஹிம்ஸாதர்மத்தை யனுசரித்தே ஆகும். அதெப்படியென்றால், வேதங்களும் தர்மசாஸ்திரங்களும் ஒருவன் கிரகஸ்தாச்ரமத்தை விட்டு ஸன்யாஸாச்ரமத்தை யடையும் போது உலகிவுள்ள எல்லாப்ராணிகளுக்கும் அபயப்ரதான ப்ரதிக்ஞை செய்து அஹிம்ஸா விரதத்தைக் கைகொள்ளும்படி உபதேசிக்கின்றன. பௌத்தமதமோ அம்மதத்தில் சேர்ந்தோர் எல்லாருக்குமே கொல்லாமையை உபதேசிக்கிறது. ஆனால் அந்த உபதேசம் அனுஷ்டானத்தில் விபரீதமாகவே முடிந்திருக்கிறது....    ....    ....  ஆதி புத்த பகவான்*  மரணமடைந்ததே ஒரு சிஷ்யனுடைய வீட்டில் அவனால் பரிமாறப்பட்ட பன்றி மாம்சத்தை அதிகமாகத் தின்றுவிட்டதால் ஏற்பட்ட அதிசாரம் காரணமாகத் தான் என்று புத்தருடைய சரித்திரங்கள் கூறுகின்றன. (Vide Sacred Books of the East Vol XI page 71-73) பிறர் கொன்றதைத் தாம் சாப்பிட்டால் தவறில்லை என்ற கொள்கையை நம் நாயனார் கீழ்வரும் குறளில் பரிஹசித்திருக்கிறார் :-
      தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
      விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். (256) 
(என்ற குறளுக்குப் பொருள் விளக்கம் அளித்துவிட்டு; தொடர்ந்து.....) 
நமது வேதசாஸ்திரங்களோ பொதுவாக எல்லாமக்களுக்கும் பூர்ண அஹிம்ஸாதர்மத்தை உபதேசிக்கவில்லை. நாலாவது ஆச்ரமமாகிய ஸன்யாஸாச்ரமத்திற்கு மாத்திரம் உயிருள்ள ஒரு செடியினுள்ள இலையைக்கூடக் கிள்ளக்கூடாது என பூர்ண அஹிம்ஸாதர்மம் உபதேசிக்கிறது. வர்ணாச்ரமங்களின் படிகளையனுசரித்து அஹிம்ஸா தர்மமும் படிப்படியாக கடுமையாக்கப் பட்டிருக்கிறது....   ["திருக்குறள் நூற்றெட்டு" 1950, பக்கம் 56-57] என்று தொடர்கிறார் உரைகாரர். 
(*முதல் குறள் விளக்கத்தில் 'ஆதிபகவன்' என்பதை கீதையின் கண்ணனுடன் தொடர்புப்படுத்தியவரே இங்குப் புத்தருக்கு  அச்சொல்லைப்  பயன்படுத்துகிறார் !!!!!)

உண்மையில் இது ஒரு மிக நல்ல  வாதம், உரிமை கோரல் வழக்கைத் தெளிவாக்கிவிட்டது.  வைதீகர்கள் வேள்வியில் உயிரினங்களைப்  பலியிட்டனர் என்பது வேதத்தில் பதிவாகி உள்ளது என்றால்; 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு'  என்ற வகையில் உணவுக்கொள்கை வைத்திருக்கும் பௌத்தர்களை வள்ளுவர் கண்டிக்கிறார் என்றால்;   இந்த வாதத்தின் முடிவாகக் கொல்லாமை, புலால் மறுத்தலை அறிவுறுத்தும் திருக்குறளை  சமணக் கொள்கைகளின் தாக்கம் கொண்ட நூல் என்றுதான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.



[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 310, 311 - 12.11.2025, 19.11.2025]

Tuesday, November 4, 2025

திருக்குறள் அந்தாதி

திருக்குறள் அந்தாதி

ஒரு பாடலில் முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி [அந்தம்(முடிவு)+ஆதி(தொடக்கம்)] ஆகும். அந்தாதி வகை இலக்கியங்களின் இலக்கணம்; ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையுமாறு பாடல்களைப் புனைவதைக் குறிக்கும். இவ்வகைப் பாடல்கள் அகரவரிசையில் உள்ள ஆத்திசூடி பாடல்களைப் போல கற்பவருக்கு உதவும் வகையில் எளிதில் நினைவில் தங்கும் பண்பு கொண்டவை.

சங்க நூலான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து தொகுப்பில் உள்ள பத்து பாடல்களில் அந்தாதி அமைப்பைக் காணமுடிகிறது.  முழுவதும் அந்தாதி அமைப்பில் அமைந்த முதல் நூலாகக் கிடைப்பது  காரைக்கால் அம்மையாரின் 'அற்புதத் திருவந்தாதி' ஆகும். ஆத்திசூடி பாடல் முறைக்கு எவ்வாறு ஔவை தொடக்கமோ அவ்வாறு அந்தாதி இலக்கியத்திற்கும் மற்றொரு  அம்மையே தொடக்கம். பின்னர் புகழ்பெற்ற பல அந்தாதி நூல்கள் தோன்றின.

குறளுக்குக் கிடைத்த பழைய உரைநூல்களை ஒப்பிட்டு  ஆராய்ந்தோர் வள்ளுவத்தில் அதிகார வரிசைமுறை, குறள் வரிசைமுறை, அதிகாரப் பெயர்கள் ஆகிய அமைப்புமுறை ஒவ்வொரு உரையாசிரியருக்கும் வேறுபடுகிறது என்பதனால் இன்று நாம் அறியும் திருக்குறள் அமைப்பு முறை திருவள்ளுவர் வடிவமைத்ததல்ல என்று கருதுகின்றனர். உரையாசிரியர்கள் பலரும் அதிகாரங்களை இயல் மாற்றி வகைப்படுத்தியும் அதிகாரத்திற்குள் வரும் குறட்பாக்களை இடம் மாற்றியும் அமைத்து உரை வகுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நம் வழக்கத்தில்  உள்ள திருக்குறளின் அதிகாரங்கள், அவற்றில் குறள் வரிசை வைப்பு முறை பரிமேலழகர் அமைத்தது. இவ்வாறான பரிமேலழகர் வைப்புமுறையில் வள்ளுவர் யாத்த குறள்களுள் ஒரு சிலவும் அந்தாதி  முறையில் தானே அமைந்துள்ளன.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு (20)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு (21)

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் (52)
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை (53)
   
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (357)
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு (358)

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண் (574)
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும் (575)
   
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று (587)
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் (588)

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (706)
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும் (707)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (788)
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை (789)            
     
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு (801)  
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன் (802)

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி (1022)
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் (1023)
   
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல் (696)
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் (697)
   
இவை குறள் வரிசை வைப்பு முறையில் அமைந்தவை. இருப்பினும் நாமும் கூட அந்தாதி முறையில் குறள்களை மேலே காண்பது போல இரண்டிரண்டு குறள்களாகவோ அல்லது கீழுள்ளது போல ஒரு நீண்ட அந்தாதித் தொடராகவோ அமைக்கலாம்.  

      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு (1)

      உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
      கூம்பலும் இல்ல தறிவு (425)

      அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
      என்னுடைய ரேனும் இலர் (430)

      இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
      நிலமென்னும் நல்லாள் நகும் ( 1040)

      நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
      மேற்செனறு இடித்தற் பொருட்டு (784)

      பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
      ஆயும் அறிவி னவர் (914)

இதுபோன்றே; ஆர்.கே. அரங்கசாமி அவர்களால் அந்தாதியாகத் தொகுக்கப்பட்ட "திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் அந்தாதி : மூலமும் உரையும்  (1946)" நூலில் 151 குறட்பாக்கள் அந்தாதி முறையில்  வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு குறள்தேனீ வினாடி வினா போட்டிகள் போல, காலிறுதி அரையிறுதி ஆண்டு நீண்ட விடுமுறை நாட்களில் அவர்களால் இயன்றவரை ஒரு நீண்ட  திருக்குறள் அந்தாதி உருவாக்குவதை வீட்டுப்பாடமாகக்  கொடுத்தால் விளையாட்டு போல அவர்கள் குறள் கற்கும் வாய்ப்பு உண்டு.

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 309 - 05.11.2025]  

-----------------------------------


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi