Wednesday, December 24, 2025

திருக்குறள் வைப்புமுறை

 'திருக்குறள் வைப்புமுறை' 


மக்களுக்குத் திருக்குறளின் பாலுள்ள ஈடுபாட்டினைப் புலப்படுத்தும் வகையில் இந்நாள்வரையிலும்  திருக்குறளுக்கு உரைகள் எழுதப்பட்டு வருகின்றன.  திருக்குறள் நூலுக்கு எழுந்த பழைய உரைகள் பத்தும் எழுதியவர்கள் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் என்று பதின்மரைத் திருக்குறளின் உரையாசிரியர்களாக ஒரு வெண்பா கூறுகின்றது.  திருக்குறள் உரையாசிரியர்களுள் பரிமேலழகர் காலத்தால் பிற்பட்டவர் என்றாலும் அவர் உரையினையே பெரும்பான்மையர் தழுவி குறள் நூல்கள் எழுதத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் எழுதுகையில்   பரிமேலழகர் கையாண்ட அதிகார வரிசைப்படுத்தும் முறையையும், அவற்றில் இருக்கும் குறள்களின் வரிசையையும் மற்றவர் பின்பற்றத் தொடங்கியதில் இன்று அது தர நிலைப்படுத்தும் முறையாகத் தானே அமைந்துவிட்டது.  

வள்ளுவர் என்பது ஆசிரியரின் இயற்பெயர்தான் என்றும் உறுதிப்படுத்தப்படவில்லை, திருக்குறள் என்பதும் பாடலின் இலக்கண அடிப்படையில் சூட்டப்பட்டப் பெயர் என்ற நிலையில், அப்புலவர் எழுதிய 1330 குறளையும் அவர் 133 அதிகாரங்களாகப் பிரித்தார் என்பதை மட்டும் திருக்குறள் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தியச் சமயங்கள் அறிவுறுத்தும் மனிதர் அறியவேண்டிய மெய்ப்பொருள் (புருஷார்த்தம்-தருமம்/அறம், அருத்தம்/பொருள், காமம்/இன்பம், மோட்சம்/வீடு) என்று நான்கு வகைப்படுத்தப்பட்டாலும் வள்ளுவரின் குறளை இதுவரை யாரும் வீடு என்ற பிரிவுக்குள் வகைப்படுத்த முயன்றதாகத்  தெரியவில்லை. வீடு என்பது அறத்தின் பயன் என்பதால் அதை அறத்துப்பாலில்  அடக்கிவிட்டார் வள்ளுவர் என்பது உரைகாரர்கள் கருத்தாக அமைகிறது. ஆதலால், முப்பாலுடன் வள்ளுவரின் பகுப்பு முறை முடிந்தது என்று தெரிகிறது. அது வள்ளுவரின் கொள்கை நிலைப்பாட்டை அறிவுறுத்தும் மிக முக்கியமான குறிப்பு என்பதையும் மறுப்பதற்கு இல்லை. 

இருப்பினும், முப்பால் பிரிவுக்குள் இயல்கள், அதிகாரங்கள் ஆகியனவற்றை வகைப்படுத்துதலை இன்றுவரை பல தமிழ் அறிஞர்கள்  முயன்றுள்ளனர். காமத்துப்பாலை  முதலில் வைக்க வேண்டும் என்று கருதியவர்களில் மு.வரதராசனும், கண்ணதாசனும் குறிப்பிடத்தக்கவர்கள். அவரவர் பார்வையில், அவரவர் முன்வைக்கும் ஏரணப்படி வரிசைப்படுத்தப்படுவது திருக்குறளின் கட்டமைப்பாகவும் உள்ளது என்றாலும், பரிமேலழகர் முறை பொதுமுறையாக நிலைத்துவிட்டது; அதனால் மு.வரதராசனும் அதையே பின்பற்றி தெளிவுரை எழுதினார். எனினும், பழைய உரைகாரர்களில்  காலத்தால் முதன்மையானவர் மணக்குடவர் என்பதால் அவர் முறையைத்தான் நாம் செம்பதிப்பு முறைக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து வைக்கப்பட்டாலும், வழக்கத்திற்கு வந்துவிட்டதை இனி மாற்றுவது கடினம் மட்டுமல்ல தேவையற்றதும் ஆகும்.  

பழைய பத்து உரைகாரர்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்தாலும் அவர்கள் சிலரின் உரைகள் நமக்குக் கிட்டியதில்லை. பரிமேலழகர் உரை போன்றே மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள், பருதியார் ஆகியோர் உரைகளும் தனித்தனியே வெளிவந்துள்ளன. இக்காலத்தில் இந்நூல்கள் பலவற்றை இணையச் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம் (https://archive.org/details/thirukkural_201808/).  அனைத்து உரைகளையும் ஒப்பாய்வு செய்ய உதவும் வகையில் ச. தண்டபாணி தேசிகர் அவர்களின் உரைவளப் பதிப்பும், மேலும் சில உரைக்கொத்து, ஒப்பாய்வு பதிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இயல்பிரித்தல், வகைப்படுத்தலில் உரையாசிரியர்களில் இறைநெறி, சமயநெறி, வாழ்வியல் நெறிகளின் தாக்கம் இருப்பதை  மறுப்பதற்கு இல்லை. இவ்வாறான திருக்குறள் வரிசைப்படுத்தும் முறையை 'திருக்குறள் வைப்புமுறை' என்பர்.  வைப்புமுறை மாறுதல்களுக்கு, அதிகாரங்களை  வரிசைப்படுத்தும் நோக்கத்தை உரைகாரர் விளக்கும் விதத்தில் புரிந்து கொள்ள முடியும். 

பழைய உரைகளில் காலத்தால் முந்திய பத்தாம் நூற்றாண்டு மணக்குடவர்  உரையை, காலத்தால் பிந்திய பதின்மூன்றாம் நூற்றாண்டு பரிமேலழகர் உரையையும் அவற்றின் வைப்புமுறையையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டுள்ளார்கள்.  இவற்றில் இயல்கள் ஒன்றாக இருப்பினும் அதிகாரங்கள்  இயல்களுக்குள் மாறி உள்ளன.   ஓர் எடுத்துக்காட்டுக்காக;  முற்பட்ட மணக்குடவர், பின்வந்த பரிமேலழகர்  ஆகியோரது அறத்துப்பால்  பகுதியின் அதிகார வரிசையை மட்டுமே ஒப்பிடலாம். அறத்துப்பால் அதிகாரங்களில் 1.பாயிரம், 2.இல்லறவியல், 3. துறவறவியல், 4. ஊழியல் ஆகியவற்றில்; முதல் பாயிரம், இறுதி ஊழியல் ஆகியவற்றின் அதிகார வரிசை அமைப்பில் இருவர் வைப்புமுறையும் ஒன்றே, எந்த மாற்றமும் இல்லை. ஊழியியலில் இருப்பது ஒரே அதிகாரம் என்பதால் மாற்றவழியில்லை என்பது வேறு.  

இடையில் உள்ள இல்லறவியலிலும், துறவறவியலிலும் இயல்களில்  உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. இல்லறவியலில் 20 அதிகாரங்களும், துறவறவியலில் 13 அதிகாரங்களும் இருவர் வைப்புமுறையிலும் இருந்தாலும், இவற்றுக்குள் அதிகார வரிசைகளும் இடம் மாறியுள்ளன, இயல்களின் அதிகாரங்களும் வேறுபட்டுள்ளன:  
1. இல்லறவியலின் பொறையுடைமை அதிகாரம் வரிசை மாறிவிட்டது. துறவறவியலில் தவமுடைமை, கூடாவொழுக்கம் அதிகாரங்கள் வரிசை மாறிவிட்டன. 
2. மணக்குடவர் முறையில் இருக்கும் வாய்மையுடைமை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை, புலான்மறுத்தல், கள்ளாமை ஆகிய ஆறு இல்லறவியல் அதிகாரங்களைப் பரிமேலழகர் துறவறவியலுக்கு மாற்றிவிட்டார்.  
3. மணக்குடவர் முறையில் இருக்கும் இனியவைகூறல், அடக்கமுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை ஆகிய ஆறு துறவறவியல் அதிகாரங்களைப் பரிமேலழகர் இல்லறவியலுக்கு மாற்றிவிட்டார். 
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இந்த மாற்றங்கள் காட்டப்பட்டுள்ளன. இயலுக்குள் மாற்றம் பச்சை நிறத்திலும், இயல் கடந்த மாற்றம் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது. இப்பொழுது ஒப்பிட்டுப் படிப்பவருக்கு ஏன் இந்த மாற்றம், காரணம் என்ன என்று பல கேள்விகள் எழும். மாற்றத்திற்குக் காரணம் அவர்கள் சார்ந்த சமயநெறிக்கும் பங்குண்டு.  சமணர் என்று கருதப்படும் மணக்குடவர் கொல்லாமை, புலான்மறுத்தல் என்பவற்றை அனைவருக்கும் பொது என்று கருதுகிறார் என்றும்;  பரிமேலழகர்  இவை இரண்டையும் துறவறவியலுக்கு மாற்றிவிட்டால்  வைதீகக் கோட்பாடுகளுக்கு இசைவாக அமையும் என்றும் கருதி இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு மாற்றத்திற்கும் பின்னணியை  அறியமுயல்வது ஆய்வாளர்களுக்கு மேலும் பல தகவல்களைக் கொடுக்கக் கூடும்.


திருக்குறள் பழைய உரையாசிரியர்கள் முப்பால் பிரிவுகளுக்குள் பல்வேறுவகையில் இயல்கள் பிரிப்பதிலும், அவற்றின் கீழ் அதிகாரங்களை வரிசைப்படுத்துவதிலும் மட்டும் வேறுபடவில்லை, அந்த அதிகாரங்களின் குறள்களுக்கு உரை எழுதிய வைப்புமுறையிலும் (வரிசைப்படுத்திக் கொள்வதிலும்) மாறுபடுகின்றனர். இக்காலத்தில் நாம் கையாளும் பரிமேலழகர் வைப்பு முறையைப் பின்பற்றி அதனுடன் மற்ற உரையாசிரியர்களின் குறள் வைப்புமுறையை ஒப்பிட்டுள்ளார்கள் பல ஆய்வாளர்கள்.  
 

வைப்புமுறை வேறுபாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டாக;  நாணுடைமை அதிகாரத்தின் குறட்பாக்களின் வைப்புமுறையை கிடைக்கும் பழைய உரைகாரர்களான  பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் ஆகிய ஐவரின் உரைகளும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளதைப் படத்தில் காணலாம். இந்த அதிகாரத்தின் குறள்களில் ஒரு குறள்கூட அனைவராலும் அதே வரிசையில் அமைக்கப்படவில்லை என்பதைக் காணமுடிகிறது. மு.சண்முகம் பிள்ளை(1972) எழுதிய 'திருக்குறள் அமைப்பும் முறையும்' என்னும் திருக்குறள் ஆய்வு நூலை சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. 

பரிமேலழகர் - பரிப்பெருமாள் குறள் வைப்புமுறை ஒப்பீடு:
உரையாசிரியர் பரிப்பெருமாள் காலம் 11 ஆம் நூற்றாண்டு, இவருக்கும் முன்னவரான மணக்குடவர் உரையைத் தழுவி இவருடைய உரை எழுதப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கா.ம.வேங்கடராமையா(1988) எழுதிய 'திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரையும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. மணக்குடவரின் திருக்குறள் வைப்புமுறையை அப்படியே பின்பற்றியதோடு மட்டுமின்றி, அவரது உரையையும்  அப்படியே எடுத்து எழுதிவிட்டு மேலும் விளக்கம் எழுதும் முறை இவருடையது. எடுத்துக்காட்டாக; 
     நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
     தன்றே மறப்பது நன்று.

[மணக்குடவர் உரை விளக்கம்] இதன் பொருள்: பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல, பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம் (என்றவாறு). 
[பரிப்பெருமாள் உரை விளக்கம்] இது, தீமை மறக்கவேண்டு மென்று கூறிற்று.
இவர்கள் இருவரும் இக்குறளை 102ஆம் குறளாக வைக்கிறார்கள்; பரிமேலழகர் நூலில் இக்குறள் 108 ஆவது  குறளாக அமைகிறது.  
குறைந்த அளவு வேறுபாடாக, பதினாறு இடங்களில்  பரிப்பெருமாள் மணக்குடவரிடம் இருந்து வேறுபடுகிறார் என்பது ஆய்வாளர்கள் கருத்தாக இருக்கிறது. 


ஓர் ஒப்பீட்டு  ஆய்வாக, 1330 குறள்களின் வைப்புமுறையில் பரிப்பெருமாளுக்கும் பரிமேலழகருக்கும் அதிகாரங்களின் கீழ்  குறள்களின் வரிசைப் படுத்துதலில் எந்த அளவு வேறுபாடு என்று ஆய்வு செய்த பொழுது: வெறும் 22% மட்டுமே இருவர் வரிசையும் ஒத்துப் போனது. பரிமேலழகர் வைப்புமுறைக்கும் பரிப்பெருமாள் வைப்புமுறைக்கும் இடையில் உள்ள வேற்றுமை 78%. ஒரு தோராயமாக ஐந்து குறள்களில் ஒன்றுமட்டுமே அதே வரிசை எண்ணில் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவு வேறுபாடு காணப்படுகிறது. 

மக்கட்பேறு, விருந்தோம்பல் ஆகிய '2' அதிகாரங்களில் மட்டுமே இருவரின் குறள் வரிசைப்படுத்துதல் ஒன்றாக இருக்கிறது;
அன்புடைமை, பொறையுடைமை, ஒப்புரவறிதல், தவம், வாய்மை , அறிவுடைமை, குற்றங்கூறாமை, தெரிந்து செயல்வகை, தெரிந்து தெளிதல், பொச்சாவாமை, கொடுங்கோன்மை, வினைத்திட்பம், மன்னரைச் சேர்ந்தொழுகல், அவை அஞ்சாமை, தீநட்பு, புல்லறிவாண்மை, உட்பகை, மருந்து, பெருமை, நன்றியில் செல்வம், நாணுடைமை, இரவச்சம், அலர் அறிவுறுத்தல், பசப்புறு பருவரல், தனிப்படர் மிகுதி, கனவுநிலை உரைத்தல், அவர்வயின் விதும்பல், புணர்ச்சி விதும்பல், புலவி நுணுக்கம், ஊடலுவகை ஆகிய '30'அதிகாரங்களில் எல்லாக் குறள்களுமே வரிசை மாறியுள்ளன;
இவை தவிர்த்த '101' அதிகாரங்களில் ஆங்காங்கே ஒரு சில குறள்கள் தற்செயலாக அதே வரிசையில் அமைந்துவிடுவதாகத் தெரிகிறது. 



இதற்கான மாதிரி ஒப்பீடு அட்டவணையின் படம்  இணைக்கப்பட்டுள்ளது.  படத்தில் பச்சை நிறம் இருவர் வரிசையிலும் இசைந்து செல்லும் குறள்கள்.  மக்கட்பேறு, விருந்தோம்பல் ஆகிய அதிகாரங்கள் ஒத்திருப்பதையும்; அன்புடைமை அதிகாரத்தில் எல்லாமே மாறி இருப்பதையும்; மற்றவற்றில் ஒரு சில குறள்கள் மட்டுமே ஒத்திருப்பதையும் காணலாம். முழுமையான 1330 குறள்களுக்குமான ஒப்பீட்டு அட்டவணை https://aintinai.blogspot.com/2025/12/kural-couplets-ordering.html இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

     வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
     தீமை இலாத சொலல்.   (291) வாய்மை

     சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
     செய்யாமை மாசற்றார் கோள்.   (311) இன்னா செய்யாமை

என்று அதிகாரத் தலைப்பை வரையறுப்பது போன்ற குறள்களை பரிமேலழகர் அவற்றுக்கான அதிகாரங்களின் முதல் குறளாக மாற்றியது  சிறப்பாக உள்ளது. எனினும், பிற இடங்களில் இதே முறையை அவர் பின்பற்றியதாகவும் தெரியவில்லை. ஆதலால், இதுவும் தற்செயலாக அமைந்துவிட்ட ஓர் அமைப்போ என்று எண்ண வைக்கிறது.  மாற்றத்துக்கான அடிப்படை ஏரணம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. 

இந்த ஒப்பீடு;  பாடல் தொகுப்பாக இருக்கும் தொன்ம இலக்கியங்களின் பாடல் வரிசை அவ்வாறே காலம் காலமாகப் பின்பற்றப்படுகிறது  என்ற எண்ணம் தவறானது என்று காட்டுகிறது. தொகுப்புப் பாடல்களாக இருக்கும் இலக்கியங்களில் பாடல் வரிசைகளில் காலம்தோறும்  மாற்றம் அடைந்திருக்கக் கூடிய வாய்ப்புண்டு  என்ற புரிதலையும்  தருகிறது.

Tuesday, December 9, 2025

எண்ணென்ப சொல்லென்ப

எண்ணென்ப சொல்லென்ப 

திருக்குறளில்  அறம், பொருள், இன்பம் என்று முப்பால் உள்ளது, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் என்ற எண்ணிக்கையில் 133 அதிகாரங்களில் மொத்தம் 1330 குறள்கள்  உள்ளன. ஒரு குறளில் முதல் அடியில் 4 சீர்கள், இரண்டாம் அடியில் 3 சீர்கள் என 7 சீர்கள் கொண்டது ஒரு குறள்  என்ற அடிப்படைத் தகவலைப் பள்ளிச்சிறார் முதற்கொண்டு அனைவரும் அறிவோம். மேலும் அறத்துப்பாலில் 4 இயல்களும், பொருட்பாலில் 3 இயல்களும், இன்பத்துப்பாலில் 2 இயல்களும் என திருக்குறளில் மொத்தம் ஒன்பது இயல்கள் உள்ளன. அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் (380 குறள்கள்), பொருட்பாலில் 70 அதிகாரங்கள் (700 குறள்கள்), இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள்(250 குறள்கள்) என்ற கணக்கும் படித்திருப்போம். குறளுக்கு 2 அடி என்பதால் 1330 குறளுக்கும்  கணக்கிட்டால் குறளில் 2660 அடிகள் என்றும்,  ஒரு குறளுக்கு 7 சீர் என்பதால் 1330 குறளுக்கும்  கணக்கிட்டால் திருக்குறளில் 9,310 சொற்கள் இருக்கலாம் என அடுத்த கட்டமாக ஒரு தோராயமாக மதிப்பிடுவோம்.  

ஆனால், இதற்கும் அடுத்த கட்டமாக, திருக்குறளுக்குத் தொடரடைவு செய்த முனைவர் ப. பாண்டியராஜா, "திருக்குறள் - சொற்கள் - எண்ணிக்கை" என்று தனது ஆய்வுத் தளத்தை விரிவாக்கி ஆராய்ந்து இருக்கிறார் என்பதை அவருடைய தமிழ் தமிழ் இலக்கியத் தொடரடைவு தளத்தில் (http://tamilconcordance.in/TABLE-kuraL.html) உள்ள ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அறியலாம். இனி திருக்குறள் குறித்து அவர் தளம் தரும் புள்ளி விவரங்களில்  ஒரு பார்வை: முனைவர் ப. பாண்டியராஜா திருக்குறளில் 11368 சொற்கள் உள்ளன என்றும்; அவற்றில் மீண்டும் மீண்டும் வராத சொற்களாக 4902 சொற்கள்  உள்ளன எனவும் குறிப்பிடுகிறார். சொற்களைப் பிரித்துக் கணக்கிட்ட  முறையை 'பிரிசொற்கள்' என்பதற்கு எடுத்துக்காட்டாக வாலறிவன் என்பதை வால்_அறிவன் என அவர் கையாண்ட முறையை விளக்குகிறார். இதனால் சொற்களின் எண்ணிக்கை 11368 என்ற அளவை எட்டியுள்ளது. 

அடுத்து, கூட்டுத் தொடரடைவு என்ற முறையில் சங்க இலக்கியப் பாடல்களில் (பத்துப்பாட்டு+எட்டுத்தொகை) உள்ள சொற்களையும், திருக்குறளில்  காணப்படும் சொற்களையும், "சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள், பொதுவல்லாத சொற்கள்"  என்று ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுகிறார். 
1. சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச்சொற்கள்: 
இப்பிரிவில் சங்க இலக்கியத்திலும், திருக்குறளிலும் ஒரே மாதிரியான எழுத்துகளைக் கொண்ட சொற்களைப் பொதுவான சொற்களாக  வகைப்படுத்துகிறார். அதாவது, 'பகவன் முதற்றே உலகு' என்பதில் இடம் பெறுவது போன்றே,  'உலகு காக்கும் உயர் கொள்கை (புறம்-400) என்ற புறப்பாடலிலும் "உலகு" என்ற சொல் இருப்பது  பொதுச்சொல் ஆகும். அஃது, அஃதே என்பன வெவ்வேறான சொற்கள் ஆகும். 

திருக்குறளில் உள்ள 'அஞ்சுக' என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் அஞ்சி, அஞ்சுதும், அஞ்சுவர் போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு.  எனவே, (சங்க இலக்கியத்தில் இல்லாமல்) திருக்குறளில் மட்டும் காணப்படும் சொற்கள் என்ற பிரிவில் குறளில் உள்ள சொற்களை ஒட்டிய சொற்கள் சங்க இலக்கியத்தில் உள்ளனவா என்று தீவிரமாகக் கவனிக்கவேண்டும் என்கிறார்.  திருக்குறளில்  இடம்பெறும் அடிமை, பகவன் ஆகிய சொற்களும் அந்தச் சொற்களை ஒட்டிய சொற்களும் சங்க இலக்கியத்தில் இல்லை என்று எடுத்துக்காட்டி  விளக்குகிறார். சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள் என  2600 சொற்களை இவர் பட்டியலிடுகிறார். 

2. சங்க இலக்கியத்தில் இல்லாமல், திருக்குறளில் மட்டும் காணப்படும் சொற்கள்: 
சங்க இலக்கியத்தில் இடம் பெறாமல் திருக்குறளில்  மட்டுமே இடம் பெறும் சொற்கள் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் மேல் என்றாலும், திருக்குறளில் உள்ள 'அஞ்சுக' என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்றாலும் அஞ்சி, அஞ்சுதும், அஞ்சுவர் போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன எனக் குறிப்பிட்டதை  நினைவில் கொள்க. இப்பிரிவில் 2180 சொற்களை இவர் பட்டியலிடுகிறார். 

மொழியின் வளர்ச்சியில் புதுச்சொற்கள் மொழியில் பயன்பாட்டிற்கு வருவதும் சில வழக்கொழிவதும் இயல்பே. எனவே திருக்குறளில்  மட்டுமே வரும் சொற்கள் எவை என்று பார்வையிடுகையில் ஓர் எழுபது சொற்கள் தேர்வு செய்யப்படு இங்கே கொடுக்கப்படுகிறது. இந்தச் சொல் தேர்வுக்குச் சிறப்பு அடிப்படை என எதுவும் இல்லை என்பதைப் படிப்பவர் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  சொற்களைப் படித்துக் கொண்டே வருகையில், அப்படியா! இது சங்க இலக்கியத்தில்  இல்லையா என்று வியந்த சொற்கள்  இப்பட்டியலில் இடம் பெறுகின்றன.  இப்பட்டியலை வியந்து வியந்து இருமுறை படிக்கப் பரிந்துரை வழங்கப்படுகிறது. இப்பட்டியல் இருவேறு கோணங்களைக் காட்டும். முதலில் சங்க இலக்கியத்தில் இல்லாத திருக்குறள் சொற்களா? என்ற வியப்புடன் படிப்பது. அடுத்து மீண்டும், இன்றும் நம் வழக்கில் இந்தத் திருக்குறள் சொற்கள் உள்ளனவா என்று மற்றொருமுறை படித்து வியப்பது.  

சொல் எழுபது:
சங்க இலக்கியத்தில் இல்லாமல், திருக்குறளில் மட்டும் காணப்படும் 2180 சொற்களில் 70 சொற்கள்:
அகர, அடிமை, அமைச்சு, அறிவது, ஆசாரம், ஆட்சி, இகழ்ச்சி, இதனால், இருட்டு, இல்வாழ்க்கை, 
இழுக்கு, உலகத்தார், ஊருணி, எண்ணம், எனது, எனப்படும், ஒருகால், கடப்பாடு, கடைப்பிடித்து, கயவர், 
கல்வி, கள்ளம், கற்க, குலம், சார்பு, சிலர், செங்கோன்மை, செயற்கை, தலைமக்கள், தள்ளாமை, 
தானம், துப்புரவு, தும்மல், தூக்கம், தூய்மை, தொழும், தோல்வி, நாகரிகம், நுட்பம், நேர்வது, 
பகவன், பயன்படும், பழகுதல், பழங்குடி, பழமை, பாராட்டுதல், பாவம், பாவி, பிற்பகல், பிறந்தார், 
பிறவி, புல்லறிவு, புழுதி, பூசனை, பெருமிதம், மங்கலம், மதிநுட்பம், மாறுபாடு, மானம், முடிவு, 
முற்பகல், மேற்கொள்வது, மேன்மை, வணக்கம், வாணிகம், வியந்து, விழிப்பது, வெல்வது, வெறுப்பு, வேண்டுதல்
மீண்டும் ஒருமுறை படித்து குறளில்  இடம் பெறும்  இன்றும் வழக்கில் உள்ள  சொற்களை அறியவும்.

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 314 - 10.12.2025]


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 


Tuesday, December 2, 2025

'நமது கல்வி முறை'


'நமது கல்வி முறை'





 
"நியாயமான தேர்வு முறை என்பதற்காக எல்லோரும் ஒரே தேர்வை எழுத வேண்டும்: அனைவரும் தயவுசெய்து அந்த மரத்தில் ஏறுங்கள்" என்று கூறும் இந்தக் கருத்துப்படத்தை நாம் நன்கு அறிவோம். இது நமது கல்வி முறையை, அதில் உள்ள  குறைபாட்டை  விமர்சிக்கும் ஒரு கருத்துப்படம். இப்படத்தில் உள்ள கருத்து  அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதாக அறியப்படும், "எல்லோரும் ஒரு மேதைதான். ஆனால், ஒரு மீனை அதன் மரத்தில் ஏறும் திறனை வைத்து நீங்கள் மதிப்பிட்டால், அது தனது வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு  முட்டாள் என்று நம்பியே வாழும்" என்ற கருத்தைத்  தெளிவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கருத்துப்படம்.  உண்மையில் இந்தச் சொற்றொடர் தவறாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியதாகப் பரவலாக அறியப்படும் ஒரு கூற்று. பல பத்தாண்டுகளாகவே கல்வித்துறை சார்ந்த அறிஞர்கள் பலர் சொல்லிவரும்  கருத்துதான் இது என்று இப்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

ஒவ்வொருவருக்கும் 'பொதுவான கல்வி' ஒன்றைக் கற்கக் கிடைக்கும் வாய்ப்பும், கற்கும் சூழ்நிலையும், அதில் அவர் காட்டும் திறமையும், பெறும் தகுதியும் வேறு வேறு என்பது மறுக்க இயலாத உண்மை.  பல பின்புலத்திலிருந்து வருபவர்கள் மாணவர்கள். அவர்கள் பெறும் தேர்ச்சி  மதிப்பெண்களை மட்டும் பயன்படுத்தி ஒரு வேலைக்கான அல்லது உயர்படிப்பிற்கான தகுதியை நிர்ணயித்தால், பல நூறாண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள் மீண்டும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாகவே பின்தங்கிவிடக் கூடிய நிலை தொடரும் என்பது மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் வைக்கும் வாதம். குறிப்பிடப்படும் இந்த நிலை  இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ உரிய சூழல் மட்டும் அல்ல. அமெரிக்கக் கல்விப்புலத்திலும் இந்த வாதம் பல ஆண்டுகளாக உள்ளது என்பதைத்தான் அங்குப் பரவலாக விவாதத்தில் உள்ள இக்கருத்தை  விளக்கும் இப்படம் காண்பிக்கிறது. கல்வித் துறையில் இந்த உருவகம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்களுக்கு இணையத்தேடலில் மேலும் பல செய்திகள் இது குறித்துக் கிடைக்கும்.  

தமிழ்நாட்டிலும் வகுப்புரிமை குறித்த கருத்து தொடங்கப்பட்டு ஒரு நூற்றாண்டிற்கு  மேல் ஆகிவிட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டதும் வகுப்புரிமையை நிலை நாட்டவே என்பதுதான் இந்திய வரலாறு. தமிழகத்தில் தொடங்கிய போராட்டத்தால் ஒன்றிய அரசு அதைக் கவனத்தில் கொண்டு, ஒன்றிய அரசின் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கரும் அறத்தை நிலை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். 

அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்து, அரசமைப்பு விதி 15(4) உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவின்படிதான், இன்றளவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு நாடு முழுவதும், பணியில் கல்வியில் இட ஒதுக்கீடு ஒன்றிய மாநில அரசுகளால் அளிக்கப்படுகிறது. மருத்துவக் கல்வி போன்ற தொழிற் கல்வி நுழைவுத் தேர்வுகள், கல்லூரியில் மாணவர் சேர்ப்பு நடக்கும் காலங்களில் பொதுவான ஒரு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் தேர்வு குறித்த சர்ச்சைகள் எழும்புவது காலங்காலமாகத் தொடரும் ஒரு வழக்கம். 

இந்தச் சர்ச்சைக்கான தீர்வை,  அன்றே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவர் ஒரு குறளில் உணர்த்தியுள்ளார் என்பது பரவலாகப் பேசப்பட்டதில்லை. 

     தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
     பாற்பட்டு ஒழுகப் பெறின்
     [அறத்துப்பால், நடுவு நிலைமை, குறள் - 111]
இக்குறளை நாம் இக்காலத்திற்குப் பொருத்திப் பார்ப்பது இன்றியமையாதது.  இக்குறளுக்குத் தமிழ் அறிஞர்கள் வழங்கிய உரைகள் பின்வருமாறு:

மணக்குடவர்:  நடுவு நிலைமை என்று சொல்லப்படுகின்ற ஒன்று நல்லதே: அவரவர் நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.

பரிமேலழகர் :  தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். 

மு.வரதராசன்: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
 
வ.சுப.மாணிக்கம் : இடந்தோறும் முறையோடு ஒழுக முடியின் நடுவு நிலைமை மிகச் சிறந்த அறமாம்.

"அவரவர் நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்" என்று மணக்குடவர் தெளிவுபடுத்துவதன் அடிப்படையில் படித்தோம் என்றால் இக்குறளின் பொருளை; பகுதியால் பாற்பட்டு நடந்து கொள்வார் எனின் நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஒன்று நல்லதே என்பதை இப்பாடலின் பொருளாகக் கொள்ள முடிகிறது. 'பகுதியால் பாற்பட்டு' என்பது பல வேறு பின்புலம் கொண்ட மக்களைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளலாம். பகுதியான் என்பது பகுதிதோறும் எனப் பொருள்படும் என விளக்குவார் பரிமேலழகர். மக்கட்பகுதி, அவரவர் நிலைமைப் பகுதி, அறப்பகுதி எனவும் உரைகாரர்கள் இதற்குப் பொருள் கூறுவர். 

ஆக, பலபிரிவு மக்களின் தேவை உணர்ந்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும்  நலன் விளையும் வகையில் நீதி வழங்கப்படும் முறையை  'எந்தப் பகுதியினரிடத்தும் நேர்மையாக நடந்து கொள்ளும் அறம் சார்ந்த நடுவு நிலைமை' என்கிறார் வள்ளுவர். 'பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்' என்று கூறிய வள்ளுவர் அறம் எது என்பதில் கொண்ட நிலைப்பாட்டை இக்குறளும் விளக்குகிறது.  

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 313 - 03.12.2025]

#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .

பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .

      பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
      திண்மை உண்டாகப் பெறின் (54)
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதி நிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? என்று இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தருகிறார் மு.வரதராசன்.

கற்பென்பது ஒருத்திக்கு  ஒருவன் என்று வாழும் இல்லற வாழ்வைக் குறிப்பதாகப் பொருள் கூறப்படும்.  ஆனால் ஆணுக்குக் கற்பு  என்ற கட்டுப்பாடு இல்லை என்பது இன்றுவரை நடைமுறை வழக்கு. கைம்பெண் ஆனவள் வேறு ஆணுடன் இல்லறம் தொடரும்  நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், அவளை இறந்த கணவனுடன் சேர்த்து உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் முறை முன்னர்  இருந்தது.  ஆங்கிலேயர் ஆட்சியில் கடுமையான சட்டத்தை அவர்கள் இயற்றும் வரை இந்தியாவின் பல பகுதிகளில்  'சதி' என்ற இந்தக் காட்டுமிராண்டி சடங்கு வழக்கமாகவே இருந்தது.

சென்ற நூற்றாண்டில் பெண்ணுரிமைக்குக்  குரல் கொடுத்த புரட்சியாளர்களான பெரியார், பாரதியார் போன்றோர் பெண்களுக்கு  மட்டும் கற்பை  வலியுறுத்துவதை ஏற்றவர்கள்  இல்லை. கற்பை இருபாலருக்கும் பொதுமைப்  படுத்தினார்கள்.  
      "கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
      கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்"
என்று  முழங்கினார் பாரதி. "சந்திரிகையின் கதை" என்று அவர் எழுதிய புனைகதை மூலம்  விசாலாட்சி என்ற இளம் கைம்பெண் ஒருத்திக்கு மறுமணம் குறித்தும் எழுதி இருப்பார்.

அதற்கும் முன்னர் ஆரியப் பண்பாட்டின் தாக்கமாகப் பெண்கள் கற்பு என்பது குறித்து மூளைச் சலவை செய்யப் பட்டார்கள் என்பதை  இக்கால 'இசட் தலைமுறை' (Generation Z) அறிந்திருக்க மாட்டார்கள். கற்பு என்பதை 'பதிவ்ரதாத்வம்' அல்லது பதிவிரதம்  என்று சாத்திரங்களில் விளக்கினார்கள்.  "பதிவ்ரதாத்வம் - நாரீணாம் - ஏதத் -ஏவ - ஸநாதனம்" என்று மகாபாரதம் அனுசாஸனிகபர்வம் 249ஆவது அத்தியாயம் 12ஆவது சுலோகம் கூறுகிறதாம்.

ஆண்கள் மேலோகம் செல்ல வேண்டுமானால் (உத்தம கதி அடைதல்) அவர்களுடைய ஊனக்கண்ணுக்குத் தெரியாத கடவுளை சாத்திரங்கள் கூறுவது படி  மனதில் உருவகித்துக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளை வணங்க வேண்டும்.  ஆண்கள் கவுளை வழிபடுதல், வேள்வி செய்தல், யக்ஞம், தானம்  என்ற பல செய்தே கடவுள் அருளைப் பெற வேண்டி இருக்கிறது.
 
ஆனால் பெண்களுக்கு இத்தகைய கவலையே இல்லை.  அவர்கள் தங்கள் கண்ணெதிரே காட்சி தரும் கணவனையே தெய்வம் என வழிபாடு செய்து சொர்க்கம் போகலாம்  என  கடவுளின் ஆணையான சாத்திரங்கள் கூறுகின்றனவாம். கணவனைத்  தெய்வமாக மதித்து அவனுக்குப் பணிவிடை செய்தாலே எளிதாகச் சொர்க்கம் போகலாம். அக்கணவன் கேடு கெட்டவனாக இருந்தாலும் கூட கடவுள் அவன் வழியே மனைவிக்கு அருள் தந்து அவளைக்  கடவுள் கடைத்தேற்றுவாராம். அதாவது மற்றவர்களைவிட பதிவ்ரதாஸ்தரீகளே எளிதில்  கடைத்தேறும் பாக்கியம் பெற்றவராகி யிருக்கிறவர்கள் என்று சாத்திரம் பெண்களுக்கு வழி காட்டுவதாகக் கூறப்படுகிறது.

"பெண்டிர்க்குப் பதியே தெய்வம்; வேறு புகலிடம் இல்லை" என மகாபாரதம் அனுசாஸனிகபர்வம் 250ஆவது அத்தியாயம் 25ஆவது சுலோகம் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.  உடலை வருத்தி மிகுந்த துன்பங்களுடன் ஓர் ஆண் அல்லது கணவன் அடையும் பயனை,  கணவனை  வணங்கி பூஜை செய்வதினாலேயே பெண்ணானவள் எளிதில் அடைந்துவிடுவாள்  என்று  அதற்கு அடுத்து வரும் மகாபாரத அனுசாஸனிகபர்வம் பர்வம் 250ஆவது அத்தியாயம் 26ஆவது சுலோகமும் கூறுகிறதாம்!!!

பெண்களுக்கு ஏதோ சிறப்புச் சலுகை அளிப்பது போல ஆசை வார்த்தைகள் எல்லாம் காட்டி,  மனைவியைக் கணவனுக்குக் குற்றேவல்  செய்ய வைத்து ஆண்கள்  எவ்வாறு சுகமாக வாழ்ந்திருக்கிறார்கள், அதற்குச் சாத்திரங்கள் எவ்வாறு உதவுகின்றன என்று சிந்தித்தால் பெண்கள் ஏமாற்றப் பட்ட நிலை கண்டு நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது என்று புரியவில்லை.  



மணமான பெண்கள் கணவனையே தெய்வமாகத் தொழ வேண்டும் பணிவிடை செய்ய வேண்டும் என்பதுதான் பதிவிரதம் அல்லது  கற்பு. இந்நிலை மேன்மை அடையும் பொழுது மனதில் முதிர்ச்சி ஏற்படுகிறது மனம் ஒருமைப் படுகிறது. அப்போது கடவுளின் அருளால்  பெய் என்றால் மழை பெய்யக் கூடிய சக்தி கிடைக்குமாம்.  அதாவது, பெய்யெனப் பெய்யும் மழை. பெரிய யோகிக்கும் கூட பெரிய முயற்சி மூலம்தான் கிட்டும் இந்தச் சக்தி பதிவிரதைக்கு எளிதில் கிட்டிவிடுகிறதாம். அடேயப்பா ?? என்ற வியப்புதான் வருகிறது. ஏமாற்றுவதற்கும் ஓர் எல்லை இல்லையா ?  மனம் கூசாமல்  இதை எல்லாம் சாத்திரம் என்று கூறுபவர்கள் மீது மோசடி  வழக்குதான் போட வேண்டும்.

மாதம் மும்மாரிப் பெய்கிறதா என அக்காலத்துத் தெருக்கூத்து,  நாடகங்களில் அரசர் அமைச்சரைக் கேட்பதாகக் காட்சிகள் வரும். பராசக்தி படத்தில் அது ஓர் எள்ளல் காட்சியாக "மந்திரி நமது- மாநகர் தன்னில்- மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்ற வசனம்  இடம் பெறுவதை நினைவு கூரலாம்.
     "வேதமோதிய வேதியர்க்கோர்மழை,
     நீதிதவறா நெறியினர்க் கோர்மழை,
     காதல்கற்புடை மங்கையர்க்கோர் மழை,
     மாதம் மும்மழை பெய்யெனப் பெய்யுமே"
         (விவேகசிந்தாமணி பாடல்)
என மூன்று மழைகளில் ஒரு மழை பெண்களின் கற்புடன் தொடர்பு படுத்தி இருப்பதைக் காணலாம்.  நாட்டில் வறட்சி என்றால் பெண்களிடம் கற்பில்லை என்று பழி போடக்கூடிய இக்கட்டும் இதனால்  உள்ளது அல்லவா?

மழைபொழிதல் குறித்து சுற்றுச்சூழலியல், அறிவியல் பாடங்களில் அறிந்ததைப் பெண்கள் வாழ்வில்  தொடர்புப்படுத்தி தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
--


கட்டுரைக்கு உதவிய நூல்: ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹித்த திவ்ய ஸ்ரீமுகத்துடன் கூடிய "திருக்குறள் நூற்றெட்டு" என்ற தலைப்புடன் 1950ஆம் ஆண்டு ஶ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்ட நூல்.

நன்றி :
பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .
- முனைவர் தேமொழி  
சக்தி இதழ் [டிசம்பர் 2025]
https://archive.org/details/sakthi-202512
பக்கம்: 76-78