Tuesday, October 28, 2025

கபடி வீரர் தங்க மகள் சென்னை கார்த்திகா

கபடி வீரர் தங்க மகள் சென்னை கார்த்திகா

பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025 (Asian Youth Games 2025)இல் இந்தியாவின் இளையோர் மகளிர் கபடி அணியின் சார்பாகப் பங்கேற்ற சென்னை கார்த்திகா சிறப்பாக விளையாடி இந்தியாவிற்காகத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், வெற்றியைப் பெற்று பதக்கத்தை வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. இறுதிச் சுற்றில் ஈரானை 75–21 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிகண்டது. 


தொடரின் தொடக்கமாக வங்காளதேசத்திற்கு எதிராக 46–18; தாய்லாந்து அணிக்கு எதிராக 70–23; இலங்கை அணிக்கு எதிராக 73–10; ஈரான் அணிக்கு எதிராக 59–26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா, இந்தத் தொடரில் அதிகப் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவும் ஈரானும் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் மீண்டும் விளையாடின. தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி அசைக்க முடியாத ஒரு முன்னிலையை வகித்து,75–21 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா. இந்த ஆட்டத்தில் தனித்துத் தெரியுமாறு திறன் காட்டியவர்களுள் ஒருவர் 17 வயதான சென்னை கார்த்திகா. இதுதான் கார்த்திகா உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பெற்ற முதல் பதக்கமும் கூட. இந்தியாவுக்காக விளையாடி தங்கம் வெல்ல விரும்பிய இவரது கனவு இதனால் நிறைவேறியுள்ளது. இந்திய ஆண்கள் அணியும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஈரானை வென்றதால் கபடியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது. இது இந்திய இளைஞர்களின் விளையாட்டுத் திறன் குறித்த ஒளிமயமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. 

வெற்றிபெற்ற சென்னை கார்த்திகா மிக எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்று இந்தியாவிற்காகப் பதக்கம் வென்று சாதனை செய்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. சென்ற 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதம், பீகார் மாநிலத்தில் நடந்த இந்தியாவிற்கான மகளிர் தேசிய 33வது சப் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் தொடரில், சென்னை கார்த்திகா தமிழ்நாடு அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று பீகார் அணியை 33-32 புள்ளிக் கணக்கில் அப்பொழுது வென்றார். அந்த விளையாட்டுப் போட்டியிலும் இவர் விளையாட்டுத் திறமைக்காக ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணிக்குத் தங்கப்பதக்கம் பெற்றுத் தந்த தங்கமகள் சென்னை கார்த்திகாவிற்குப் பாராட்டு. 


----------------












கபடி வீரர் தங்க மகள் சென்னை கார்த்திகா
முனைவர் தேமொழி
https://archive.org/details/sakthi-nov-25/page/11/mode/2up
நன்றி: சக்தி நவம்பர் 2025 (பக்கம்: 11-12)


#சக்தி, #பெண்ணியம், #Themozhi 

வள்ளுவம் என்ற எடுத்துக்காட்டு களஞ்சியம்

வள்ளுவம் என்ற எடுத்துக்காட்டு களஞ்சியம்


வள்ளுவர் குறளில் வாழ்வியல் நெறிகளை விளக்க பொருத்தமான பல எடுத்துக்காட்டுகளைக் கையாண்டுள்ளார். உலகம் போற்றும்  நன்னெறி இவையிவை, பின்பற்ற வேண்டியவை இவை,  உலகம் ஏற்கும்  ஒழுக்கமுறை, இகழப்படும் நடைமுறை, தவிர்க்க வேண்டியவை, செயல்படுத்த வேண்டியவை எனப் பல பொருள்களை எடுத்துக்காட்டுகள் மூலமே விளக்கியுள்ளார். ஒப்பிட்டுக் காட்டப் பல உவமைகளைக் குறிப்பிட்டுள்ளார். உலகத்தின் இயல்புகளை, மக்களின் பண்புகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த முறையை 'ஏது நடையினும் எடுத்துக் காட்டினும்' என்று தொல்காப்பியம் (மரபியல் நூற்பா 104) குறிப்பிடுகிறது.

இயற்கையில் இருந்தும், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கருவிகள்  எனவும் வள்ளுவரால் எடுத்துக்காட்டுகளாக, உருவகங்களாக  உவமைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.   குழல், யாழ், பறை, பாறை, மலை, குன்று, கல், மழை, நீர், கடல், ஊருணி, ஊற்று, மணற்கேணி, குளம், வெள்ளம், நிலம், நன்னிலம், களர்நிலம், வேலி, தீ, வானம்,  வெயில், நிலவு, மதிமறைப்பு, மேகம், குவளை, அனிச்சம், மலர்கள், தளிர், நெருஞ்சி, பனை, தினை, நிழல், மரம், நச்சு மரம், பழுத்த மரம்,  பட்டமரம், மூங்கில், குன்றிமணி, கரும்பு, கருக்காய், எள், விதை, களை, பயிர், மீன், யானை, குதிரை, எருது, பசு, ஆட்டுக்கடா, புலி, நரி, முதலை, பாம்பு, எலி, புழு, கவரிமா, காக்கை, மயில், கொக்கு, அன்னம், ஆந்தை, ஆமை, வேடன், ஆயன், உழவன், மீனவன், அரசன், அமைச்சர், ஒற்றர், தூதர், படைத்தளபதி, வீரர், பேடி, யானைப்பாகன், தாய், தந்தை, மக்கள்,  மகன்,  தலைவன், தலைவி, செவிலி, தோழி, குழந்தை, புலவர், ஆசிரியர், மாணவர், மருத்துவர், நோயாளி, நல்லவர், தீயவர், செல்வந்தர், வறியவர், வள்ளல், கருமி, பிச்சைக்காரர், கொலையாளி, திருடர், கயவர், விலைமகளிர், தவம், தானம், வேள்வி, துறவி, அந்தணர், பார்ப்பனர், அறவோர், சான்றோர், பாவி, தெய்வம், இறைவன், இந்திரன், தாமரைக்கண்ணான், தேவர், எமன், பேய், அணங்கு, திருமகள், தவ்வை, பிணம், சொர்க்கம், நரகம், பகை, நட்பு, வில், வேல், வாள், காவடி, செங்கோல், ஊன்றுகோல், துலாக்கோல், அளவுகோல், தூண்டில், உரைகல், அரம், ஏர், எரு, அச்சாணி, வண்டி, தேர், சிவிகை, நாவாய், படகு, தெப்பம், தோணி, பளிங்கு, சதுரங்கம், கூத்தாடும் அரங்கு, சூதாட்டக் கழகம், சாக்கடை, வைக்கோல், குடிசை, கூடு, தூண், தாழ்ப்பாள், கதவு, அரண், சிறை,  கோடாரி, கயிறு, பொம்மலாட்ட மரப்பாவை, மண் பொம்மை, மண்கலம், செப்புக்கலம், கைவிளக்கு, தூங்கா விளக்கு, பட்டடை, பாரம், உடை, அன்னத்தூவி, மயிலிறகு, முகபடாம்,  பொன், அணிகலன், முத்து, பவளம், கண், மயிர், நெஞ்சம், உணவு, கொழுப்பு, நெய், தேன் கலந்த பால், கள், உப்பு, நோய், புண், மருந்து, நஞ்சு, மாசு, அமுது, கனி, காய், பிறப்பு, இறப்பு, உறக்கம், மறைமொழி, எழுத்து, நூல், செல்வம், ஊதியம், முதல் என்று அப்பட்டியல் மிக நீண்டது.  இவை நேரடியாகவோ  கொடுக்கப்பட்ட குறிப்பு மூலமோ  அறியக் கூடியவை.

இவ்வாறு வள்ளுவர் எடுத்துக்காட்டும் பொருள்கள் எல்லாம் மக்களின் வாழ்வில் இடம் பெறுபவை, மக்களாலும் நன்கு அறியப்பட்டவை.   எளிமை, தெளிவு, சுருக்கம், ஆழமுடைமை,என்னும் பண்புகள் கொண்டவனாய் உணர்த்தும் பொருளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டுகள் முந்நூற்றைம்பதுக்கும் மேலானவை  திருக்குறளில் இடம் பெறுவதாக 'திருக்குறள் அமைப்பும் முறையும்’ (1972) நூலில் மு. சண்முகம் பிள்ளை கூறுகிறார்.

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 308 - 29.10.2025]


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Wednesday, October 22, 2025

குறள் சொல்லும் துணைவயின் பிரிவு

குறள் சொல்லும் துணைவயின் பிரிவு


திருமணம் முடிந்த தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் கற்பு வாழ்க்கை வாழும் காலத்தில்; தலைவன் தலைவியைத் தனித்திருக்கச் செய்து பிரிந்து செல்லும் பிரிவு ஆறு வகைப்படும், அவை:  1. பரத்தையிற் பிரிவு (பரத்தையுடன் வாழ்தல்), 2. ஓதல் பிரிவு (கல்வி கற்க பிரிதல்), 3. காவல் பிரிவு (பாதுகாத்தல் தொழிலை  முன்னிட்டு பிரிதல்), 4. தூதிற் பிரிவு (தலைவன் தூது செல்லுதல்), 5. துணைவயின் பிரிவு (போரில் துணைபுரிதல்), 6. பொருள்வயின் பிரிவு (பொருளீட்டச் செல்லல்) என்பன. 

குறளில் காமத்துப் பாலில் வள்ளுவர் குறிப்பிடும் பிரிவு 'துணைவயின் பிரிவு' ஆகும். மன்னனுக்குப் பகைவர்களால் இடையூறு நேரும்பொழுது அவனுக்குத் துணைபுரியும் நோக்குடன் தலைவன் போருக்குச் செல்லும் பிரிவு இது. இலக்கண நூல்களின்படி அரசர், வணிகர், வேளாளர் என்னும் மூவருக்கும் துணைவயின் பிரிவு உரியது. இதற்குரிய பிரிவு காலம் ஓர் ஆண்டு ஆகும். அவ்வாறு போரில் துணைபுரிதல் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவன் அச்செயலின் காலம் நீட்டிக்கும் போது தலைவியை நினைந்து புலம்பலாம் என்றும் இலக்கணம் கூறுகிறது (கல்வி கற்கச் செல்லும் பொழுது தலைவன் தலைவியை நினைத்துப் புலம்புதல் கூடாது என்பது நம்பி அகப்பொருள் நூல் வகுக்கும் விதி). 

திருக்குறள் காமத்துப்பால் குறட்பாக்களில் குறிப்பிடப்படும் தலைவன் ஒருவனா அல்லது வெவ்வேறு ஆண்களா? அவ்வாறே குறள்களில் குறிப்பிடப்படும் தலைவி ஒருத்தியைக் குறிக்கிறதா  அல்லது அவர்கள் வெவ்வேறு பெண்களா?  என்பதை  நாம் உறுதியாகக்  கூற இயலாது.  ஆனால், வள்ளுவர் தன் வாழ்வையே வைத்து  அதில் பெற்ற அனுபவங்களை வைத்து குறள்  எழுதியிருக்கலாம், அல்லது தன் சூழலில் நிகழ்ந்தவற்றைக் கவனித்து அதன் அடிப்படையிலும் எழுதியிருக்கலாம். எனவே, அவர் குறிப்பிடும் தலைவன் யார் தலைவி யார் என்பதையும் அறுதியிட்டுக்  கூற இயலாது. 

இருப்பினும், குறள்களின் ஊடே அவர் விவரிக்கும் குறிப்புகளை வைத்து தலைவன் ஓர் உழவன், போர் நிகழும் காலத்தில் வேளாளர்களுக்கு அரசனின் அறிவிப்பு  கிட்டியதும், அரசனுக்கு உதவியாகப் போர்முனைக்குச் சென்ற ஒரு வீரர் என்று புரிந்து கொள்ள எந்த ஒரு  தடையும் இல்லை.  வள்ளுவர் உழவைப் போற்றுபவர். உழவுக்கு என்றே ஓர் அதிகாரத்தையும் ஒதுக்கி உள்ளார். 

மாறாக;  ஓர் அரசன் ஆட்சி செய்யும் முறைகளையும் நாடாளும் முறைகளையும் விரிவாகப் பொருட்பாலின் பல அதிகாரங்களில் வள்ளுவர் விளக்குவதால் திருக்குறளில் ஒரு குறுநில மன்னனின் அரசாளும் அறிவுரைகளும் இடம் பெற்றிருக்கலாம் என்பதையும் மறுக்க வழியில்லை.  

ஆக, தலைவன் ஓர் உழவு செய்யும் வேளாளனாகவோ, அல்லது ஒரு வேந்தனின் கீழ் அவனுக்கு உதவும் பொருட்டு போருக்குச் சென்ற சிற்றரசனாகவோ இருக்க வாய்ப்புண்டு. 



படைச்செருக்கு அதிகாரத்தில்; 
     என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
     முன்நின்று கல்நின் றவர்.   (771)
பகைவர்களே என் தலைவனை (அரசனை) எதிர்த்து நிற்காதீர்கள்; அவனை எதிர்த்தவர்கள் உயிரிழந்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என எச்சரிக்கிறான் ஒரு போர் வீரன். 



     கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
     மெய்வேல் பறியா நகும்.   (774)
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடும் வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ந்து அதனைப் பறித்துப் போரைத் தொடர்கிறான். 

படைச்செருக்கு அதிகாரம் காட்டும் வீரன் அகவாழ்வு எவ்வாறு இருக்கும் என்பதைக் காமத்துப்பால்  குறள்கள்  மூலம் அறியலாம்.  



தலைவனும் தலைவியும் களவு வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது தலைவனின் கூற்றாக; 
     ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
     நண்ணாரும் உட்குமென் பீடு.   (1088)
[காமத்துப்பால்-களவியல்-தகையணங்குறுத்தல்]
என்ற குறளைக் காணலாம்.  பகைவரையும் அஞ்ச வைக்கும் என் வலிமை என் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே  என்று போர் வீரனாகிய தலைவன் வியக்கிறான். 

தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் முடிந்து இல்லறவாழ்வில் மகிழ்ந்திருக்கும் பொழுது அரசனின் ஆணைக்கிணங்க போர்முனைக்குச் செல்கிறான் தலைவன் (தலைவன் தலைவியை நீங்கி வேந்தன் ஆணையாற் பகைமேற் பிரியும் பிரிவைக் கூறும் அகத்துறை). அங்கே தலைவியின் நினைவில் புலம்புகிறான் என்று கற்பியல் குறள் மூலம் அறியலாம்.
     வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
     மாலை அயர்கம் விருந்து.   (1268)
[காமத்துப்பால்-கற்பியல்-அவர்வயின் விதும்பல்] 
அரசன் இப்போரில் வெற்றி பெறட்டும்; பின்னர் நான் இல்லம் திரும்பி என் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக என்று தலைவியுடன் மீண்டும் இல்லறம் தொடர விரும்பும் தலைவன்  கூறுவதாக இக்குறள் அமைகிறது. 



அவன் வரவை எதிர்நோக்கி  இல்லத்தில் காத்திருக்கும் தலைவியின் கூற்றாக; 
     உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
     வரல்நசைஇ இன்னும் உளேன்.   (1263)
[காமத்துப்பால்-கற்பியல்-அவர்வயின் விதும்பல்] 
வெற்றியை விரும்பி ஊக்கத்தையே உறுதுணையாக எண்ணிச் சென்ற என் கணவர், திரும்பி வருவார் என்ற எண்ணத்தினால்தான் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன் என்று  கூறுவதாக அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்) குறள் மூலம் அறிய முடிகிறது. 

தமிழ் இலக்கண நூல்கள் தரும் குறிப்புகளின்படி குறளின் காமத்துப்பால்  தலைவன் போரில் துணைபுரிதல் காரணமாகப் பிரிந்து சென்றவன் என்று முடிவு செய்யலாம்.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 307   -  22.10.2025]
-----------------------------------


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 



Sunday, October 12, 2025

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்

ஆவணியே தமிழ் ஆண்டின் தொடக்கம் என்பதற்கு   மேலும் ஒரு சான்று மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' (பக்கம்: 242) என்ற நூலில் கிடைத்தது.




"அணியியல்" என்பது ஒரு மறைந்து போன ஒரு நூல்; இந்த நூல் தண்டியலங்காரத்திற்கு முற்பட்ட ஒரு பழைய நூல். இந்த அணியியல் நூலிலிருந்து சில சூத்திரங்களை யாப்பருங்கல உரையாசிரியரும் நேமிநாத உரையாசிரியரும் மேற்கோள் காட்டுகின்றனர்.

யாப்பருங்கலம், ஒழிபியலில், 'மாலைமாற்றே' என்னும் சூத்திர உரை மேற்கோள் கொடுக்கும்  பொழுது;

"இனி, இருது ஆவன:
      'காரே கூதிர் முன்பனி பின்பனி
      சீரிள வேனில் வேனி லென்றாங்
      கிருமூ வகைய பருவ மவைதாம்
      ஆவணி முதலா விவ்விரண் டாக
      மேவின திங்க ளெண்ணினர் கொளலே.'
      இந்த இருது வருணனை அணியியலுட் காண்க."
என்ற மேற்கோள் யாப்பருங்கல உரையாசிரியரால் அணியியல் நூலில் இருந்து கொடுக்கப்படுகிறது.

"ஆவணி முதலா விவ்விரண் டாக மேவின திங்க ளெண்ணினர் கொளலே" ; 
இதன் பொருள்:  ஆவணி மாதம் தொடக்கமாக ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு மாதங்களாகக் கணக்கிடப்பட்டது என்று யாப்பருங்கல உரையாசிரியர் குறிப்பிடுகிறார். (11 ஆம் நூற்றாண்டில் யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் என்பவர் இந்நூலின் உரை ஆசிரியர்)

      ஆவணி, புரட்டாசி - கார்காலம்
      ஐப்பசி, கார்த்திகை - கூதிர்காலம்
      மார்கழி, தை - முன்பனிக் காலம்
      மாசி, பங்குனி - பின்பனிக் காலம்
      சித்திரை, வைகாசி - இளவேனிற் காலம்
      ஆனி, ஆடி - முதுவேனிற் காலம்
என ஆவணி  தொடக்கமாகக் கொண்டு காலம் கணக்கிடப்பட்டது. 

பார்க்க:
மறைந்துபோன தமிழ் நூல்கள் - மயிலை சீனி. வேங்கடசாமி
பக்கம்: 242


Saturday, October 11, 2025

சித்தன்னவாசல் குகைக்கோயில் "அரசன் அரசி ஓவியம்"

சித்தன்னவாசல் குகைக்கோயில் "அரசன் அரசி ஓவியம்"


சிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் புதுக்கோட்டைச் சீமையில் உள்ள சித்தன்னவாசலில் குகைக் கோயில் அமைத்துள்ளான். அவன் தமிழ்நாட்டின் எப்பகுதியை யாயவது பிடித்தான் என்பதற்குச் சான்றில்லை. அவன் காலத்தில் தென்னாட்டில் போரே இல்லை. ஆதலின் புதுக்கோட்டை வரையுள்ள சோழநாட்டைச் சிம்ம விஷ்ணுவே வென்று அடிப் படுத்தினவன் ஆவான்.  மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்னவாசல் ஓவியங்கள் இரண்டிலிருந்து கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டில் இருந்த நடனக்கலையை நன்குணரலாம். சித்தன்னவாசல் குகைக்கோயிலின் முகமண்டபமான ஒரு சிறிய தாழ்வாரத்தையும் அதன்பின் சதுரவடிவில் அமைந்துள்ள உள்ளறையையும் கொண்டதே இக் கோவில். இங்குக் காணத்தக்கவை நான்கு ஆகும். அவை: (1) உருவச்சிலைகள். (2) நடனமாதர் ஓவியங்கள், (3) அரசன் அரசி ஓவியங்கள், (4) கூரையிலும் தூண்களிலும் உள்ள ஓவியங்கள் என்பன.  வலப்புறத் தூணின் உட்புறத்தில் ஓர் அரசன் தலையும் அவன் மனைவி தலையும் தீட்டப்பட்டுள்ளன. அரசன் கழுத்தில் மணிமாலைகள் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் இலங்குகின்றன. தலையில் மணி மகுடம் காணப்படுகிறது. பெருந்தன்மையும் பெருந்தோற்றமும் கொண்ட அந்த முகம் ஆதிவராகர் கோவிலில் உள்ள மகேந்திரவர்மன் முகத்தையே பெரிதும் ஒத்துள்ளது. ஆதலின், அவ்வுருவம் மகேந்திரவர்மனதே என்று அறிஞர் முடிவு கொண்டனர். அவனுக்கு அண்மையில் உள்ளது அரசியின் முகம் ஆகும். அந்த அரசியின் கூந்தலும் தலைமீதுதான் அழகுடன் முடியப்பட்டுள்ளது;  என்று இவ்வாறாகத் தமிழ் அறிஞரும் வரலாற்று  ஆய்வாளரும் ஆன டாக்டர். மா. இராசமாணிக்கனார் அவர் எழுதிய "பல்லவர் வரலாறு" நூலில் குறிப்பிடுகிறார். 

ஆய்வுப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்  எழுதிய "மகேந்திரவர்மன்" (1955) என்ற நூலில் இடம் பெற்றுள்ள "ஓவியங்கள்" என்ற கட்டுரையில் சித்தன்னவாசல் குகைக் கோயிலின் "அரசன் அரசி" ஓவியம் குறித்து கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்:   மகேந்திரவர்ம பல்லவன் காலத்துச் சித்திரங்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன.  நற்காலமாக இப்போது கிடைத்திருப்பவை,  காலப்பழமையினால் வண்ணங்கள் மங்கிப்போய் அரைகுறையாக  அழிந்துபட்ட நிலையில் சித்தன்னவாசல் குகைக்கோயிலில்  காணப்படுகிற ஓவியங்களே. சித்தன்னவாசல் குகைக் கோயிலில்,  மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட சமணக்கோயில் ஆகும்.  அங்குக் காணப்படுகிற சுவர் ஓவியங்கள் முக்கியமாக நான்கு.  அவற்றில் முதலாவது, அரசன் அரசி ஆகிய இருவரின் ஓவியங்கள்.  இவை மார்பளவு வரையில் காணப்படுகின்றன. கிரீடங்களுடன் காணப்படும் இவை ஓர் அரசன் அரசியின் ஓவியங்களைக் குறிக்கின்றன.  உண்மையில் இந்த ஓவியம் மகேந்திரவர்மனையும் அவனுடைய பட்டத்தரசியையும் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை; என்கிறார்  மயிலை சீனி வேங்கடசாமி.


செய்யறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட சித்தன்னவாசல் குகைக்கோயில்
"அரசன் அரசி ஓவியம்"



 
சித்தன்னவாசல் குடைவரைக்கோயிலின் ஓவியங்கள் :
சித்தன்னவாசல் குடைவரைக்கோயிலின் ஓவியங்கள் பல்லவர் காலத்து ஓவியம் என்று இதன் கலைப் பண்பின் செழுமையையும் இதில் காணும் பல்லவர் பாணியின் தாக்கத்தினையும் கண்டு அக்கால வரலாற்று  ஆய்வாளர் பலரும் எண்ணி இருந்தனர்.  மகேந்திர பல்லவன் கல்வெட்டுகள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோடு நின்றுவிடுகின்றன என்பதாலும், மகேந்திர வர்மனின் கல்வெட்டு என்று உறுதியாகக் கூறும் கல்வெட்டுகள் காவிரிக்குத் தெற்கே இல்லை என்பதாலும் மகேந்திர வர்மன் ஆட்சியில் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்துச் சித்தன்னவாசல் குடைவரைக் கோயிலை மகேந்திர வர்மன் காலத்தது என்று கருதுவது பொருத்தம் அற்றது என்பது இக்காலத்து வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.  

மேலும்; பாண்டிய மன்னன்  ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆதரவுடன் மதுரை ஆசிரியரான இளங்கௌதமன் என்ற சமண முனிவர்  சித்தன்னவாசல் அறிவர் கோயிலின் அகமண்டபத்தைப் புதுப்பித்து முகமண்டபத்தை எடுத்ததாகக் குடைவரையில் பொறிக்கப் பட்ட பாடல் வடிவில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

      "திருத்திய பெரும்புகழ்த் தைவ தரிசனத்
      தருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்
      அறங்கிளர் நிலைமை இளங்கௌ தமனெனும்
      வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
      அவனேய் பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுத
      லார்கெழு வைவேல் அவநீப சேகரன்
      சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
      என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை  . . . . . . . . .
      பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
      அண்ணல்வாஇ லறிவர் கோஇன்
      முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி . . . . . . . . . . . .
      அழியா வகையாற் கண்டனனே . . . . . . . . . . . .
      சீர்மதிரை ஆசிரியனண்ண லகமண்டகம்
      புதுக்கி ஆங்கறிவர்கோயில் முகமண்டக
      மெடுத்தான் முன்"

சொல் பிரித்து :
      "திருத்திய பெரும் புகழ் தைவ தரிசனத்து 
      அரும் தவ முனிவனை பொருள் செல்வன்
      அறம் கிளர் நிலைமை இளங்கௌதமன் என்னும் 
      வளம் கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
      அவனே பார் முழுதும் ஆண்ட பஞ்சவர் குல 
      முதலார் கெழு வைவேல் அவநீப சேகரன்
      சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
      என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை......   
      பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
      அண்ணல்வாயில்  அலறிவர் கோ இன்
      முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி...... 
      அழியா வகையாற் கண்டனனே...... 
      சீர் மதிரை ஆசிரியன் அண்ணல் அகமண்டகம்
      புதுக்கி ஆங்கு அறிவர் கோயில் முகமண்டகம் 
      எடுத்தான் முன்"

இக்கல்வெட்டுச் செய்தியின் அடிப்படையில்,  சித்தன்னவாசலிலுள்ள ஓவியங்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு மன்னரான அவனி சேகரன் என்ற பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் (கி.பி.815 - கி.பி.860) காலத்தவை என்று கருதப்படுகிறது.  இவை வெண்சுதையின் மீது பொருத்தமான மூலிகை வண்ணங்கள் கொண்டு வரையப் பட்ட பாண்டியர் காலத்து ஓவியங்களாகும். முகமண்டபத்துத் தூணில் எட்டுப் பட்டைக் கொண்ட இடைப்பகுதியில் உட்புறத்தில் கிரீட மகுடத்துடன் அரசனினும் அவனது அரசியும் சமணத் துறவி ஒருவருடன் காட்சியளிக்கின்றனர். இவர்களில் சமணத் துறவி இவ்வோவியங்கள் உருவாவதற்கும் குடைவரை புதுப்பிக்கப் படுவதற்கும்  காரணமாக இருந்த இளங்கௌதமனாக இருக்க வேண்டும் என்றும்,  அரசன் அரசியின் உருவங்கள் சமண முனிவர்க்கு ஆதரவளித்த பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் மற்றும் அவனது தேவியின் உருவங்களாக இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.


அடிக்குறிப்புகள்:
https://www.tamilvu.org/courses/diploma/d061/d0612/html/d0612663.htm
https://tamildigitallibrary.in/Articles/வரலாற்றுச்%20சின்னம்-86-சித்தன்னவாசல்%20குடைவரை-சித்தன்னவாசல்%20மலை

நன்றி: தமிழணங்கு - நவம்பர் 2025 (பக்கம்: 3-6)