Tuesday, September 30, 2025

பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம்

பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம்


கட்டுமானங்களின் தனிச்சிறப்பு என்ற அடிப்படையில் இன்றைய உலகில் பல பாலங்களுக்குப் பற்பல சிறப்புகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதையும் இருக்கும்.  அவ்வாறான சிறப்புப் பெற்ற பாலங்களுள் ஒன்றுதான் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றின்  குறுக்கே கட்டப்பட்டுள்ள  வாட்டர்லூ  பாலம் (Waterloo Bridge).  இதன் சிறப்பு, இப்பாலத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையோர் (70 விழுக்காட்டினர் அல்லது சற்றேறக்குறைய 350 பணியாளர்கள்) பெண்கள் என்பதுதான். எனவே, இது பலகாலம் 'லேடீஸ் பிரிட்ஜ்' (The Ladies Bridge) என்றே அழைக்கப்பட்டு வந்தது.  தேம்ஸ் ஆற்றின் படகோட்டிகளும், பயணிகளும் லேடீஸ் பிரிட்ஜ் என்றே அழைத்தாலும், இது பெண்களால் கட்டப்பட்டப் பாலம் என்ற வாய்மொழிக் கதை மக்களிடையே இருந்தாலும்,  இதற்கு வரலாற்றுச் சான்றுகள் தரப்படாத காரணத்தால் இது ஒரு கட்டுக்கதை என்ற எண்ணமே மக்களிடையே நிலவி வந்தது. அண்மையில் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் இப்பாலத்தின் கட்டுமானப் பணியில் பெண்கள் பங்கேற்றனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.




இந்தப் பாலத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்தப் பாலத்தின் தொடக்கம் 19ஆம் நூற்றாண்டு. லண்டனின் ஸ்ட்ரான்ட் பகுதியில் 'ஸ்ட்ரான்ட் பிரிட்ஜ்' (the Strand Bridge) என்ற பெயரில் 1810–1817 காலகட்டத்தில் போக்குவரத்துப் பயணிகளிடம் பயன்பாட்டிற்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்துடன் இப்பாலம் கட்டப்பட்டது.  ஒன்பது வளைவுகளைக் கொண்டதாக, சற்றொப்ப 2500 அடிகள் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்ட பாலம் இது.   ஆனால் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பொழுது இங்கிலாந்து நாடு ஃபிரெஞ்ச் நாட்டு ஆட்சியாளர் நெப்போலியனை வாட்டர்லூ போரில் 1815ஆம் ஆண்டு வெற்றி பெற்றிருந்தது. எனவே அதைக் கொண்டாடும் இரண்டாம் ஆண்டு விழாக் காலத்தில்,  1817இல் பாலம் திறக்கப்பட்டபொழுது வெற்றியைச் சிறப்புச் செய்யப் பாலத்தின் பெயர் வாட்டர்லூ பிரிட்ஜ் என மாற்றப்பட்டது.  

காலப்போக்கில் ஆற்றின் நீரோட்டத்தால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பாலத்தின் அடிப்பகுதியின் கட்டுமானம் அரிக்கப்பட்டு பாலம்  வலுவிழந்து மறுசீரமைப்பு  செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.  கில்பர்ட் ஸ்காட் (Sir Giles Gilbert Scott) என்பவர் புதிய பாலத்தை வடிவமைத்தார்.  பாலத்தின் கட்டுமானம் தொடங்கிய பொழுது அதன் அருகே இணையாக ஒரு தற்காலிக இரும்புக் கிராதி பாலம் எழுப்பப்பட்டு, வாட்டர்லூ  பாலத்தின் பகுதிகளையே மீண்டும் மறுசுழற்சி செய்யும் திட்டத்துடன் பழைய பாலத்தின் கட்டுமானம் தகர்க்கப்பட்டது.  இந்நேரத்தில்தான் எதிர்பாராத விதமாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த  ஆண்கள் யாவரும் போர்முனைக்கு அழைக்கப் பட்டார்கள்.  ஆனால், கட்டுமானப் பணிகளும் நடக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

வேறுவழியின்றிப் பெண்களைக் கட்டுமானப் பணிக்கு அமர்த்தினார்கள்.  இந்த நிலை உலகம் முழுவதுமே போரில் ஈடுபட்ட நாடுகளின் நிலையாக அக்காலத்தில் இருந்தது.  வழக்கமான போர்க்காலப் பணியாக மருத்துவச் செவிலியர், தொலைபேசி இணைப்பாளர், அலுவலகச் செயலாளர்  போன்ற பணிகளைத் தவிர்த்து ஆண்களின் பணியாகக் கருதப்பட்ட தொழிற்சாலைப் பணியாளர், கட்டுமானப் பணியாளர், ஊர்திகள் இயக்குபவர், விமானம் ஓட்டுபவர் போன்ற புதிய பணிகளில் எல்லாம் பெண்கள் பங்கேற்றனர். அக்காலகட்டத்தில் இங்கிலாந்தில் மட்டும் 25,000 மகளிர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகத் தரவுகள் சொல்கிறது. அதாவது, கட்டுமானப் பணியில் மூன்று விழுக்காட்டினர் அளவில் பெண்கள் பங்கேற்று இருந்தனர்.  இவர்கள் வெல்டிங், கான்கிரீட் கலவை தயாரித்தல் போன்ற வேலைகளையும் செய்தனர்.  இக்காலத்தில் சராசரியாகக் கட்டுமானப் பணியில் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள் ஈடுபடுவதுடன் இதை ஒப்பிட்டால், சென்ற நூற்றாண்டில் கட்டுமானப் பணியில் மகளிர் பங்களிப்பின் தீவிரம் புரியும்.  

பணியில் அமர்த்தப்பட்ட பட்ட பெண்களுக்கு நீண்ட நேர வேலை, கழிப்பிடம் ஓய்வறை போன்ற வசதிகளும் குறைவு. இருப்பினும், ஆண்களைவிடக் குறையான ஊதியம் என்பது மட்டுமல்ல, போர் முடிந்து ஆண்கள் நாடு திரும்பினால் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வீடு திரும்ப வேண்டும் என்ற உண்மையையும் அவர்கள் அறிந்தே இருந்தனர்.  போர் தொடர்ந்தது, ஒரு முறை வாட்டர்லூ பாலமும் நாஜிப் படையின் குண்டு வீச்சிற்கு  உள்ளானது. இருந்தும்  கட்டுமானம் தொடர்ந்தது. தொடர வேண்டியது நாட்டின் கௌரவம், அது  மக்களுக்கு நம்பிக்கை தருதல் போன்றவற்றுடன், அப்பாலம்  போர்க்கால இராணுவத்திற்குத் தேவையானதாகவும் இருந்தது,  பெண்கள்  தொடர்ந்து பணி புரிந்தனர்.  இக்கட்டுமானப் பணி 1937இல் தொடங்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரினால் பணி சற்றே தொய்வடைந்து 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.  ஆனால், அங்குதான் ஒரு கசப்பான திருப்பம்.  



பாலம் மீண்டும் திறக்கப்பட்ட பொழுது விழாவில் பங்கேற்ற இங்கிலாந்தின் துணை முதல்வர் ஹெர்பர்ட் மோரிசன் (Herbert Morrison) அவ்விழாவில் ஆற்றிய உரையில்,  பாலம் உருவானதில் பெண்களின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிடப் படவே இல்லை. ஆண்களுக்குப் பாராட்டு கூறப்பட்டது. அவ்வாறே எங்கும் இப்பாலக் கட்டுமானத்தில் மகளிர் பங்கேற்றதற்கான எந்த ஒரு வரலாற்றுக் குறிப்பும் இடம் பெறவில்லை.  கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனம் பீட்டர் லிண்ட் அண்ட் கம்பெனி  (Peter Lind & Company) அதை மூடிவிட்டு, தங்கள் வர்த்தகத்தையும் முடித்துக் கொண்டு நிறுவனத்தைக் கலைத்தவுடன் அதில் இருந்த ஆவணங்களும்  மறைந்து போயின.  

மக்கள் வழக்கில் மட்டும் காரணம் தெரியாத வகையில் லேடீஸ் பிரிட்ஜ்  என்ற பெயர் உள்ளதைக் கவனித்த வரலாற்று ஆய்வாளர் கிறிஸ்டின் வால் (Christine Wall) அருங்காட்சியகத்தின் (The Archives of The National Science and Media Museum) சேமிப்பில் இருந்த பழைய திரைப்படங்களையும் படங்களையும் தேடிப் பார்த்து,  பாலத்தின் பணியில் ஈடுபாடிருந்த சில பெண்களின் படங்களைக் கண்டெடுத்தார். அதில் பெண்கள் வெல்டிங் வேலை செய்யும் படங்கள் கிடைத்தன. அப்பெண்களில் ஒருவரின் பெயர் 'டாரத்தி' (Dorothy) என்றும் அடையாளம் காணப்பட்டது.  இதனால் லேடீஸ் பிரிட்ஜ்  என்று வாட்டர்லூ  பாலம் அழைக்கப்பட்ட காரணமும், அதன் கட்டுமானப் பணியில் பெண்கள் ஈடுபட்டு இருந்ததும் கட்டுக்கதையல்ல உண்மை என்பது நிறுவப்பட்டது. வரலாற்றில்  மறைந்து போன, மறைக்கப்பட்ட மகளிரின் பங்களிப்பு மீண்டும் வெளிப்பட்டது இப்பாலத்தின் சிறப்பு.

இதன் வரலாற்றுச் சிறப்பிற்கு மதிப்பளிக்க, பாலத்தில் இங்கிலாந்தின் வரலாற்றுச் சின்னம் பொறிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தின் பள்ளி பாடத் திட்டங்களில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதத் துறையில் பெண்களின் பங்களிப்புகள் (STEM-courses) மறைக்கப்படுவதைக் கண்டித்து இங்கிலாந்து பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்த பொழுது,  லேடீஸ் பிரிட்ஜ் பாலத்தில் பதாகைகளுடன் எதிர்ப்பைக் காட்டி அடையாளப்  போராட்டமாக ஊர்வலம் சென்றனர்.  



புதியதாக எழுப்பப்பட்ட வாட்டர்லூ  பாலத்திற்கு  முன்பிருந்த பழைய பாலத்தை 1810  இல் ஜான் ரென்னி (John Rennie) வடிவமைத்திருந்தார். புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியர் கிளாட் மோனெ (claude monet)  1903இல்  அப்பாலத்தை வரைந்த வண்ண ஓவியம் இன்று அனைவராலும் பாராட்டப்படும் ஓவியமாக விளங்குகிறது.  




அதிகாலை மூடுபனியின் இடையே பாலத்தின் தோற்றமானது  கனவுலகில் காணும் பாலம் போல அந்த ஓவியத்தில் தோற்றமளிக்கும்.  அதே பழைய  வாட்டர்லூ  பாலத்தின் அமைப்பின் அடிப்படையில்தான் தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சனா முதலியார் பாலம் கட்டப்பட்டது.


சான்றாதாரங்கள்:
1.  The original Waterloo Bridge
https://www.thehistoryoflondon.co.uk/the-original-waterloo-bridge/

2.  The story behind the iconic 'Ladies' Bridge' in London
https://www.ice.org.uk/news-views-insights/inside-infrastructure/the-story-behind-the-bridge-in-london-known-as-the-ladies-bridge


பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம்
 — முனைவர் தேமொழி
https://archive.org/details/sakthi-october-2025/page/71/mode/2up
நன்றி: சக்தி அக்டோபர் 2025 (பக்கம் :72-77)


#சக்தி, #பாலம், #வாட்டர்லூ, #பெண்ணியம், #Themozhi 

Monday, September 29, 2025

வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்

வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்

முனைவர் மு. முத்துவேலு
முதல் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை

தமிழ் மரபு அறக்கட்டளை என்னும் பன்னாட்டு அமைப்பின் வெள்ளிவிழா சிறப்பு வெளியீடுகளில் ஒன்றாக வெளிவந்துள்ளது "வள்ளுவர் குறள் ஆத்திசூடி முறையில்" என்னும் நூலாகும்.




நூலைத் தொகுத்தவர் பைந்தமிழ் ஆய்வறிஞர் தேமொழி அவர்கள்.  ஆத்திசூடி என்பது தமிழ் அற நூல்கள் மரபில் ஒரு புதிய யாப்பு வடிவத்தில்  அமைந்திருப்பதாகும்.  இது அறக்கருத்துக்களைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உள்ளத்திலும் ஆழமாகப் பதிவு செய்வதற்கு ஏற்ற வடிவமாக அமைந்துள்ளது. எனவே ஆத்திசூடி வடிவத்தை ஔவைக்குப் பின் பாரதியும் அதற்குப் பின்னர் பாரதிதாசனும் இன்னும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பல புலவர் மக்களும் தாங்கள் கூற வந்த கருத்துக்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ற வடிவமான ஆத்திசூடியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஆய்வறிஞர் தேமொழி அவர்கள் திருக்குறளை ஆத்திசூடி முறையில் தொகுத்துள்ளார். தமிழின் நெடுங்கணக்கு அகர வரிசைப்படிச் செய்திகளை வரிசைப்படுத்திக் கூறுகிற ஆத்திசூடி முறையினுக்கு ஏற்ப
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" எனத் தொடங்கும் முதல் குறளில் இவரும் தொடங்கியுள்ளார்.
"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்"  என்னும் அவா அறுத்தல் அதிகாரத்தில் வரும் 363-ஆம் குறளோடு இதனை நிறைவு செய்துள்ளார்.

எழுபது திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அமைத்துள்ளார். இந்த நூலில் கடவுள் வாழ்த்து, கல்வி, காலம் அறிதல், அவா அறுத்தல், புகழ், பெருமை, வாய்மை முதலிய அதிகாரங்களிலிருந்து இரண்டு குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஏனைய 54 அதிகாரங்களிலிருந்து ஒரு குறள் என்ற விதத்தில் தேர்ந்தெடுத்து மொத்தம் எழுவது குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

குறள் குறித்தும் வள்ளுவர் குறித்தும் சில சிறப்புச் செய்திகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். திருக்குறள் பற்றிச் சில ஆராய்ச்சிச் செய்திகளை ஆய்வறிஞர் தொகுத்து வழங்கியிருப்பது மிகுந்த பயன்பாட்டுக்கு உரியதாகும்.

நூலில் ஆத்திசூடி என்பதற்கான இலக்கணத்தை அருமையாக எடுத்துரைப்பதும் மாணவர்களின் நலன் கருதி அமைந்தது எனலாம் அறிவுரைகளை எடுத்துச் சொல்லுகிற பொழுது உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் அமைத்துச் சொல்லுகிறார்.  ஔவையின் ஆத்திசூடியில் இருந்து சில எடுத்துக்காட்டுகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

திருக்குறளில் இருந்து ஆத்திசூடி முறையில் செய்திகளைத் தொகுத்துத் தந்தவர்களைப் பட்டியலிடும்போது முனைவர் சேயோன் அவர்கள் 2001 இல் தொகுத்தளித்த திருவள்ளுவர் ஆத்திசூடியையும் குறிப்பிட்டு இருப்பது ஆய்வாளரின் ஆழ்ந்த புலமையையும் நேர்மையையும் உண்மைத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

அகரவரிசையில் திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அடுக்கித் தருகிற பணியை மட்டும் செய்யாமல் அந்தக் குறள்களுக்கு எளிய முறையில் உரையையும் வழங்கி உள்ளார்.  ஆய்வறிஞர் தேமொழி அவர்களின் எளிய உரைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
      முயற்சித் திருவினை யாக்கும் முயற்றின்மை
      இன்மை புகுத்தி விடும்  (ஆள்வினை உடைமை குறள்- 616)
இந்தக் குறளுக்கு ஆசிரியரின் உரை பின்வருமாறு அமைகிறது. "முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையை வந்து சேரும்"

இரண்டாவதாக, 
      பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
      நன்மை பயக்கும் எனின்  (வாய்மை அதிகாரம் குறள் - 292)
இதற்கான தேமொழியாரின் உரை: பொய்யினால் நல்ல நன்மை ஏற்படக்கூடுமானால் அப்பொய்யையும் மெய்யாக ஏற்கலாம்.

இந்த வகையில் ஒவ்வொரு குறளுக்கும் இனிய எளிய உரை அமைத்திருப்பது சிறப்பாகும்.  இந்த உரைகளைக் காணும் பொழுது தேமொழியார் திருக்குறள் முழுவதற்கும் இது போன்ற எளியதோர் உரையை எழுத வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ஆகும்.

முனைவர் க. சுபாஷிணி  அவர்கள் தம் பதிப்புரையில், "பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எளிய முறையில் சில குறட்பாக்களைப் பிழையின்றிக் கற்றுக் கொள்வதற்கு இது சிறந்த முறை மட்டுமல்ல எளிமையானதும் கூட" என்று கூறியிருப்பது முற்றிலும் பொருத்தம் உடையதாகும்.

ஆய்வறிஞர் தேமொழியார் தம் எளிய உரையின்மூலம் படிப்பவர்களை திருக்குறளுக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.  எல்லோரும் திருக்குறளைக் கற்க இந்நூல் கைவிளக்காகத் துணை செய்யும் என்று நம்புகிறேன்.

வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்
 — முனைவர் மு. முத்துவேலு
நன்றி: தமிழணங்கு - அக்டோபர் 2025 (பக்கம்: 91-93)



#தமிழணங்கு,  #திருக்குறள், #நூலறிமுகம், #முனைவர்.மு.முத்துவேலு, #Themozhi


சமணர்களுக்குரிய தீபாவளி

சமணர்களுக்குரிய தீபாவளி


"தீமையை அழித்து நன்மை வெற்றி கொண்ட நாளை இந்தியர்கள் தீபாவளி பண்டிகையாக விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்" என்ற ஒரு புரிதல் பன்னாட்டு அரங்கில்,  பரவலாக உள்ளது. உண்மையில் தீபாவளி சமணர்களின் பண்டிகை.  தீபாவளி  என்பது வாழ்ந்து மறைந்த சமண தீர்த்தங்கரர் மகாவீரரின் மறைவு நாளையொட்டி அவர் அளித்த அறிவொளியைப் பரப்பும் நாளாகச் சமணர்கள் தொன்று தொட்டுக்  கொண்டாடுகின்றனர் என்ற  'வரலாற்று அடிப்படை'  உள்ளதாக  வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சரவிளக்குகளும், கார்கால மாதமும், முன்னோர் வழிபாடு ஆகிய மூன்றையும்  அடிப்படையாகக்  கொண்டது  இந்த விளக்கேற்றும் பண்டிகை.

வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமண சமயத்தின் 24ஆவது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறு பெற்ற தினத்தை  விளக்கேற்றி வைத்து,  அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை  வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடு நாளாகக் கருதிய நாள்தான்  தீபாவளி நன்னாள்  (சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி)  என்பது இவர்கள் முடிவு.

முற்றும் துறந்த துறவியான தீர்த்தங்கரர் மகாவீரர் அறவுரை ஆற்றிட பல இடங்களுக்கு எழுந்தருளுவார். இதை  ‘ஸ்ரீ விஹாரம்’ என்பர். சமண தீர்த்தங்கரர்கள் முற்றுமுணர்ந்த நிலையை அடைந்த பிறகு அவர்கள் எல்லாவுயிர்களுக்கும் அற வாழ்க்கையைப் பற்றிப் போதிக்கும் இடம் சமவசரணம் எனப்படும். 'சமவசரணம்' என்ற அறவுரை  நிலையங்களில்  மகாவீரர் எழுந்தருளி அறவுரை ஆற்றி மக்களை  வழி  நடத்துவார்.  அதன் மையப்பகுதியில் அரியணை, முக்குடை முதலான சிறப்புகளோடு கூடிய இடத்தில்  இருந்து அறவுரை வழங்குவார்.  மகாவீரர் தன் இறுதி நாளில் (அக்டோபர் 15,   527 பொ.ஆ.மு) பாவாபுரி நகரின் சமவசரணமத்தில் அறவுரை ஆற்றினார்.

தனது  ஆயுள் விரைவில் முடியும் என்று உணர்ந்து அறவுரை நிலையத்தை விட்டு அகன்றார். பாவாபுரியில் மிகவும் அழகான பெரிய தாமரைக் குளம் ஒன்று இருக்கின்றது (அத் தாமரைக் குளம் இன்றும் உள்ளது).  அக்குளத்தின் நடுவில்  உள்ள  அகன்ற கற்பாறையின் மீது நின்ற நிலையில் மகாவீரர் இரு நாட்கள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் (தற்போது அப் பாறையின் மீது ஆலயத்தை உருவாக்கி மகாவீரரின் திருவடிகளை வைத்து  வழிபாடு  நடை பெறுகிறது).  மன்னன் மற்றும்  மக்கள் பகற்பொழுதில்  வந்து வணங்கி வழிபட்டுச் சென்றனர். மகாவீரர் வாழ்க்கையின்  இறுதிநாள் பின்னிரவில் அவருடைய ஆயுள் முடிவுற்ற இடம் பாவாபுரி தாமரைக்குளக்  கற்பாறை.  அவர் அன்று ஆன்ம விடுதலை பெற்று ‘பரிநிர்வாணம்’ என்ற பிறவாநிலையை எய்தினார் என்பது சமண நூல்கள் தரும் செய்தி. மறுநாள் காலையில் மக்கள் வழக்கமாக மகாவீரரை வழிபட வந்தபோது அவர் பரிநிர்வாணம் அடைந்துவிட்டதை அறிந்த மக்கள் எளிதில்  பெற  இயலா ஆன்ம  விடுதலை என்னும்  பிறவாநிலையை  எய்திய மகாவீரர் உலக உயிர்களுக்கு அறிவொளியை வழங்கியதை எண்ணி அவர் நினைவாக அனைவருடைய இல்லங்களிலும் வரிசையாகப் பல விளக்குகளை ஏற்றி மகாவீரரை தம் மனதில் இருத்தி வழிபட்டனர். இதுவே  நாடெங்கும் தீபாவளி விழாவாக இந்நாள்வரை ஒளிர்கிறது.  மகாவீரர் மறைந்தாலும், அவரது ஆன்மிக ஞானம் உலகின் இருளை நீக்கி ஒளியேற்றுகிறது என்பதை விளக்குவதற்காகத் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.  மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு  என்பது சமணம் கூறும் வரலாறு.  ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த  பொ. ஆ. மு. 600 இல்.

 
மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த ஆண்டிலிருந்தே சமணர்களிடம் தீபாவளிப் பண்டிகை ஓர் அறிவொளி நாளாக விளக்கேற்றும் முறை வழக்கத்தில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், 'தீபாவளி' என்ற சொல்  முதன் முதலில்  எழுத்து வடிவில் கிடைப்பது  சமண நூலான ஹரிவம்ச புராணத்தில்தான். சற்றொப்ப 12 நூற்றாண்டுகளுக்கு முன்னர்,  கிபி 783-இல் சமஸ்கிருத மொழியில் சமண சமய திகம்பர ஆச்சாரியர் ஜினசேனர் (Acharya Jinasena)  இயற்றிய நூல் 'ஹரிவம்ச புராணம்'(Harivamsa Purana) ஆகும்.

           ததஸ்துஹ் லோகஹ் ப்ரதிவர்ஷம்-ஆதரத்
           ப்ரஸித்த-தீபலிகய-ஆத்ர பரதே .
           ஸமுத்யதஹ் பூஜயிதும் ஜினேஷ்வரம்
           ஜினேந்த்ர-நிர்வாண விபுதி-பக்திபக்

என்ற வரிகளில்  மகாவீரர் மறைந்த நாளில் பாவாபுரியில்  'திபாலிகாயா' (dipalikaya) என விளக்குகள் ஏற்றப்பட்டதாக ஆச்சாரியர் ஜினசேனர் என்பவர் தான் எழுதிய ஹரிவம்ச புராணம் நூலில் குறிப்பிடுகிறார். இந்த நூலில்தான் சமணர்கள் தீபாவளி  கொண்டாடியதாக 'தீவாளி' அல்லது 'தீபாவளி'  என்ற சொல்  முதன் முதலாக இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி என்ற குறிப்பு முதல் இலக்கியத் தடயமாகச் சமண சமயத்திற்கு எட்டாம் நூற்றாண்டிலேயே கிடைக்கிறது. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது.  வைதீகர் கொண்டாடும் தீபாவளி  பண்டிகைக்குக்  கிடைக்கும் சான்றுகள் மிகப் பிற்காலத்தவை.  அதன் தீபாவளி  கொண்டாடப் படுவதற்கான புரணக்கதைகளும்  இயற்கைக்கு  மாறான புனையப்பட்ட  கதைகள்.

சமண நாட்காட்டியின்படி, தீபாவளி அந்த ஆண்டின் கடைசி நாளாகக் கருதப்படுகிறது. இதற்கு அடுத்த நாள், சமணப் புத்தாண்டு தொடங்குகிறது. (மகாவீரர் ஆண்டு) மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளில், அவரது தலைமை சீடரான கணாதர் கௌதம சுவாமிக்கு, முழு ஞானம் (கேவலஞானம்) கிடைத்ததும் தீபாவளியின்போது நினைவுகூரப்படுகிறது.

பொதுவாக சமணர் எனும் சொல் தமிழ்ச் சமணர்களைக் குறிக்கும். ஜைனம், ஆருகத மதம், அனேகாந்த மதம், ஸ்யாத்வாத மதம், நிகண்ட மதம் எனப் பலவாறாகச்  சமணம் குறிப்பிடப் படுகிறது (சமணமும் தமிழும்,  பக்கம்: 1- , கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி )   தமிழகத்தில் வாழும்   மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.  சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும்  வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும்  தீபாவளி  பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்). பொதுவாக தமிழ்ச் சமணர் அனைவரும் திகம்பர சமணத்தைப் பின்பற்றுபவர்.  

சமணர்களின் தீபாவளி கடைப்பிடிக்கப்படும் முறைகள் வைதீகர்  கொண்டாடும் தீபாவளி  நடைமுறை வழக்கத்திலிருந்து மாறுபட்டது. சமணர்களின் மிக முக்கியமான கொள்கையாக உயிர்களைத் துன்புறுத்தாமை (அகிம்சை) என்பதைக் கடைப்பிடிப்பதன் காரணமாக, பட்டாசுகள் வெடிப்பதால் பல உயிரினங்கள் துன்பத்திற்கு உள்ளாகும் என்பதால் தீபாவளியன்று அவர்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. மகாவீரரின் துறவற வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக சமணர்களில் சிலர் தீபாவளியன்று நோன்பு மேற்கொள்வதுண்டு.

பல சமணர்களில் சிலர் மகாவீரர் முக்தி பெற்ற பீகார் மாநிலத்திலுள்ள பாவாபுரிக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு அங்கு வழிபாடுகளில் பங்கேற்கின்றனர். அடிப்படை நோக்கமாக, மகாவீரரின் ஆன்மிக வெற்றியைக் கொண்டாடும் ஒரு புனிதமான, அமைதியான பண்டிகையாக ஆரவாரமின்றித் தீபாவளியைச் சமணர்கள் கொண்டாடுவர். வெவ்வேறு பகுதியில் வாழும் சமணர்களிடமும், சமண சமயப் பிரிவுகளிடையேயும்,  பண்டிகை  வழக்கங்களில் வெவ்வேறு பாரம்பரிய முறைகளின் காரணமாகச் சிற்சில வேறுபாடுகளும் உண்டு.


சமணக் கோவில்களில் மகாவீரருக்கு, நிர்வாண லட்டு எனப்படும் ஓர் இனிப்பு வகை பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.  இது தமிழ்ச் சமணர்களுக்கு வடக்கிலிருந்து இங்கு வந்தவர்களிடமிருந்து வந்த  புது வரவு.   மகாவீரர் முக்தியடைந்த நாளில் சமணர்கள் ஆலயத்தில் (ஜினாலயம்)   மாவிளக்கேற்றி வழிபாடு இயற்றுவர்.  இதற்கென சிறப்பாகப்  பச்சரிசியைக் கழுவி  பதமாக உலர்த்தி இடித்து அந்த மாவைக்கொண்டு அகல்போன்ற விளக்கைச் செய்து, இதற்கென தனியே நெய்யைச் சேகரித்து வைக்கப்பட்ட தூய நெய்விட்டு விளக்கேற்றுவார். தற்போது மாவிளக்கு மற்றும் நிர்வாண லட்டு ஆகிய இரண்டும் வழிபாட்டில் இடம் பெறுகிறது.

மகாவீரரின் அறிவுரைகளை நினைவுகொள்ளும் விதமாக, வழிபாடுகளிலும், சிறப்புச் சொற்பொழிவுகளிலும் நிகழ்த்தப்படும்.

 
தமிழ்ச் சமணர்கள் தமிழகத்தின் ஜினாலயங்களில் (ஜினர் ஆலயம்) விடியற்காலையில் வரிசையாக  அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவர்.   மகாவீரர் வரலாற்றைப் படிப்பார்கள் (இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் வரலாற்றைக் கூறும் 'ஸ்ரீபுராணம்' எனும் நூலில் உள்ள மகாவீரர் வரலாறு படிக்கப் பெறும்).  இதுமட்டுமின்றி  சித்தபக்தி, பரிநிர்வாண பக்தி  எனும் போற்றிப் பாடல்கள் (தோத்திரங்கள்) ஓதப்படும். பாவாபுரியில் உள்ள தாமரைக் குளம் போன்ற  அமைப்பைச் சிறிய அளவில் அமைத்து அதில்  மகாவீரர் திருவடிகளை வைத்து  சில இடங்களில் வழிபடுவர்.  தமிழ்ச் சமணர்களும்  ஆடவரும்  மகளிரும் விரதம் ஏற்பர்.

மகாவீரர் முக்தி பெற்ற  நிகழ்வு முதன்மையானது என்றாலும், மற்றும் சில சமண சமூகத்தினர் அவருடைய தலைமைச் சீடரான கௌதம சுவாமி, மகாவீரரின் மறைவுக்குப் பின் ஞானம் பெற்றதையும் முக்கியமாகக் கருதுகின்றனர்.  சுவேதாம்பர பிரிவு சமணர்கள், மகாவீரரின் இறுதித் தவத்தை நினைவுகூரும் வகையில், தீபாவளிக்கு முந்தைய மூன்று நாட்கள் நோன்பு இருப்பதுண்டு.


சுவேதாம்பர சமணர் ஆலயங்களில்  "உத்தரத்யாயன சூத்திரம்" போன்ற புனித நூல்களிலிருந்து சில பகுதிகளைப் படிக்கின்றனர்.  சுவேதாம்பர பிரிவு ஜைனர்களால் மகாவீரரின் பிறப்பு வரலாற்றைச் சொல்லும் கல்பசூத்திரம் என்ற புனித நூல் இந்த நாட்களில் வாசிக்கப்படுகிறது. மேலும், தீபாவளிக்குப் பிறகு ஐந்தாவது நாளில், ஞானபஞ்சமி ("அறிவின் ஐந்தாவது") என்ற விழாவைக் கொண்டாடி, கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர்.

குஜராத் மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள பல ஜைன  (சமண) வணிகர்களுக்கு, தீபாவளி நிதி ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இவர்கள் புதிய கணக்குப் புத்தகங்களை வாங்கி, சோப்தா பூஜை எனப்படும் சடங்குடன் தங்கள் வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள். சிலர் சதர்மிக் வாத்சல்யா போன்ற சமூக சமையல் நிகழ்வுகளை நடத்தி, அனைவரும் ஒன்றுகூடி உணவைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

கொடை அளிப்பது, பரிவு ஆகியனவற்றுக்குத் தீபாவளி  நாளில் முக்கியத்துவம் அளிக்கப் படுவதால் சமூக சேவையாக உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது, ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவளிப்பது  (ஆகார தானம்), குழந்தைகளுக்கான கல்விக்கு உதவுவது  (ஞான தானம்), நோயுற்றவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் இலவச மருந்துகள் அளிப்பது (ஔஷத தானம்),  உயிர் வாழும் உயிரினங்களைக் காப்பது மற்றும் ஆபத்தில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது (அபய தானம்) போன்ற சமூக சேவைகளில் ஈடுபடுவதும் உண்டு.   உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கலைப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் சமண சமூகத்தினர் பங்கேற்று, உயிர்களைக் காப்பதற்கான உறுப்பு தானத்தின் தேவையை வலியுறுத்துகிறார்கள். தன்னலமற்ற தொண்டு செய்வதற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் நேரத்தையும், திறன்களையும் தானாக முன்வந்து செலவிடுவது ஒரு சிறந்த அறச் செயலாகக் கருதப்படுகிறது.

இறுதியாக, சமணர்களுக்குத் தீபாவளி என்பது வெளிச்சத்தின் திருவிழா மட்டுமல்ல, ஆன்மாவின் விடுதலைக்கான பாதையை ஒளிரச் செய்யும் ஆன்மிகப் பயணத்தின் ஒரு குறியீடு ஆகும்.  



 இந்தியத் துணைக்கண்டத்தின் சமண சமயத்தில் துவங்கி, இன்று அப்பகுதியில் வாழும் சமணர், இந்துமதத்தின் பல உட்பிரிவினரும், பௌத்தரும், சீக்கியரும் என்று  பற்பல சமயப்பின்னணி கொண்டவரும் குளிர் காலத் துவக்கத்தில் விளக்கேற்றிக் கொண்டாட விரும்பும் ஒரு  பண்டிகையாகத் தீபாவளி சமய எல்லைகளைக் கடந்த விழாவாக மாறிவிட்டிருக்கிறது.  உலகில் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இந்தியர்களின் பலதலைமுறையினரும் கொண்டாட, இன்று  உலகில் பலநாடுகளில் கொண்டாடும் நிலையை எட்டி 'இந்தியப் பண்டிகை என்றால் அது தீபாவளி' என்ற பொதுத்தன்மையையும் அடைந்துவிட்டது.

---------------------------------


""சமணர்களுக்குரிய தீபாவளி""
— முனைவர் தேமொழி
https://archive.org/details/thamizhanangu-october-2025/page/1/mode/2up
நன்றி : தமிழணங்கு - அக்டோபர் 2025  (பக்க: 1-6)


#தமிழணங்கு,  #தீபாவளி, #Themozhi 

Friday, September 26, 2025

பெரியார் படித்த அறிவியல் நூல்

 பெரியார் படித்த அறிவியல் நூல்



பெரியார் ஈ.வெ.ராமசாமி  தனது கட்டிலில் அமர்ந்த வண்ணம், வலது கையில் பிடித்திருக்கும் ஓர் உருப்பெருக்கியின் துணைகொண்டு இடது கையில் உள்ள ஒரு நூலைப் படிக்கும் படம் ஒன்றை இணையப் பயன்பாடு பரவலான இந்நாளில் அறியாதவர் எவரும் இருக்க வாய்ப்பில்லை. அந்தப் படத்தில் இருக்கும் பெரியார்தான் என்னுடைய 'பெரியார் பெருமை பெரிதே' என்ற நூலின் அட்டைப்படத்திலும் சிறிது மாற்றத்துடன் இடம் பெற்றுள்ளார்.  தள்ளாத முதிர்ந்த அந்த வயதில், பார்வைத் தெளிவிற்காக அணிந்திருக்கும் கண்ணாடியும் உதவாத நிலையில், உருப்பெருக்கி ஒன்றின் உதவியுடன் ஆர்வத்துடன் படிக்கிறார்.  

அவர் படிக்கும் அந்த நூல் 1967 இல் வெளியிடப்பட்ட நூல் என்பதால்,  அந்த ஆண்டே பெரியார்  அதை வாங்கிப் படித்தார் என்று வைத்துக் கொண்டாலும் அப்பொழுது அவருக்கு வயது 88. தமது 88-ஆவது வயதிலும், உருப்பெருக்கியின் உதவியுடன் பெரியார் ஆழ்ந்து  படிக்கும் அளவிற்கு அவரது கருத்தைக் கவர்ந்தது ஓர் அறிவியல் நூல் என்பதுதான் வியப்பிலும் வியப்பு !! 

இந்த நூலின் தலைப்பு, "நவீன அமெரிக்க விஞ்ஞானிகள்".    அறிவியல் ஆய்வாளர்கள் குறித்து  நூல்கள் பல எழுதிய 'எட்னா யோஸ்ட்' என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய 'மாடர்ன் அமெரிக்கன்ஸ் இன் சயின்ஸ் அண்ட் இன்வென்ஷன்' (Modern Americans in science and invention - Edna Yost) என்ற நூலை, ”நவீன அமெரிக்க விஞ்ஞானிகள்" என்று தமிழில், தென் இந்திய சயின்ஸ் கிளப்பிற்காக மொழிபெயர்த்தவர் திரு. சி. சீநிவாசன் என்ற மொழிபெயர்ப்பாளர். விஞ்ஞான அறிவு - நூல் பிரிவின் கீழ், 239 பக்கங்கள் கொண்ட இந்த நூலை  1967ஆம் ஆண்டில் ஹிக்கின்பாதம்ஸ் வெளியிட்டது. 




மொழிபெயர்ப்பாளர் திரு. சி. சீநிவாசன், (ஸி.ஸ்ரீநிவாஸன் என்றும் இருவேறுவகையிலும் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டவர்) ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர்.  சுதேசமித்திரனில் ஸி.ஆர்.ஸ்ரீநிவாச அய்யங்கார் ஆசிரியராயிருந்த காலத்தில் அங்குப் பணியாற்றியவர் சி.சீநிவாசன்.  புகழ்பெற்ற பல ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்த பெருமை இவருக்கு உண்டு. வில்லா கேதர் (Death Comes for the Archbishop - Willa Cather);  எர்னஸ்ட் ஹெமிங்வே (For Whom the Bell Tolls -Ernest Hemingway);  ஆலன் பேட்டன் (Cry, the Beloved Country - Alan Paton)  போன்ற புகழ்பெற்ற நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் சி.சீநிவாசன். 

அவர் மொழிபெயர்ப்பில் வெளியான அறிவியல் பொருண்மை கொண்ட நூலைத்தான் நாம் படத்தில் உள்ள நம் பெரியாரின் கையில் காண்கிறோம். 

அறிவியல் நூலின் விவரம்:  
"நவீன அமெரிக்க விஞ்ஞானிகள்"
நூலாசிரியர்: எட்னா யோஸ்ட் 
மொழி பெயர்ப்பு: சி.ஸ்ரீனிவாசன்
பதிப்பு: ஹிக்கின்பாதம்ஸ் -  1967
239 பக்கங்கள் - விஞ்ஞான அறிவு நூல்

நன்றி: Canadian Rationalist - செப்டெம்பர் மாத இதழ் 
பக்கம் : 68-71



கிடைக்குமிடம் : https://www.commonfolks.in/books/d/periyar-perumai-perithe


கட்டுரைக்கு உதவியவை:
[1] சி. சீநிவாசன் என்ற மொழிபெயர்ப்பாளர், கால சுப்பிரமணியம், 2024-04-05, விருட்சம் நாளிதழ். 
https://daily.navinavirutcham.in/?p=21965

[2] தமிழ்நாட்டு நூற்றொகை-தமிழ்-1967. வே. தில்லைநாயகம், நூலகர், கன்னிமாரா பொது நூலகம். சென்னை. பக்கம்-154, 1976. 
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0002372_தமிழ்நாட்டு_நூற்றொகை_-_1967.pdf

[3] MODERN AMERICANS IN SCIENCE AND INVENTION (1941 HB-DJ) Edna Yost
https://www.ebay.com/itm/326574775402

[4] Wikipedia: Edna Yost: https://en.wikipedia.org/wiki/Edna_Yost


Tuesday, September 23, 2025

திருக்குறளின் அணி இலக்கணச் சிறப்பு

திருக்குறளின் அணி இலக்கணச் சிறப்பு


வாழ்வியல் கருத்துக்களை ஏழு சீர்களிலும் இரண்டே அடிகளிலும் சுருங்கக்  கூறும் சிறப்புடையது திருக்குறள்.  ஆழமான கருத்துச் செறிவாலும் பல அணிநயம் கொண்டு இலக்கியச்சுவையுடன் அமைந்திருக்கும் காரணத்தாலும் மேலும் சிறப்பு கொண்டு விளங்குகிறது.  அணி என்பது இலக்கியத்தில் அழகுக்கு அழகுக் கூட்டும் முறையாகக் கருதப்படுகிறது.
     "மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
     ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல்"
என்று  பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் (நன்னூல் 55) பாயிரம் அழகுக்கு அழக்கூட்டுவதைக் குறிப்பிடுகிறது.

அணி என்றால் உவமையணி என்றே தொல்காப்பியம் குறிப்பிட்டாலும், பிற்காலத்தில் அணி இலக்கணம் விரிவடைந்து மேலும் பற்பல அணிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குறளில் சொல்லும் கருத்தை மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டு விளக்கும் முறையில் "உவமையணி" கொண்ட குறள்களாகப் பல குறள்கள் உள்ளன. மேலும்;  எடுத்துக்காட்டு  உவமை அணி, இல்பொருள் உவமை அணி, தொழில் உவமை அணி, உருவக அணி, ஏகதேச உருவக அணி, நிரல்நிறை அணி, பின்வருநிலையணி, வஞ்சப் புகழ்ச்சி அணி, பிறிதுமொழிதல் அணி, வேற்றுமை அணி போன்ற அணிகளும் திருக்குறளில் இடம் பெறுகின்றன. இவையாவும் பள்ளிப்பாடங்களில் இலக்கண வகுப்பில் பயிற்றுவிக்கப்பட்டவையே.

உவமை அணி:
திருக்குறளில் "உவமை" என்ற சொல் வருவது ஒரே ஒரு முறைதான்.
     தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
     மனக்கவலை மாற்றல் அரிது   (குறள் - 7)
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்பவர்கள் மட்டுமே மனக்கவலை நீங்கப் பெறுவார்கள் என்பது இக்குறள் தரும் பொருள்.  இவ்வாறு ஒரே ஒருமுறை  'உவமை' பற்றிப் பேசும் திருக்குறளில்  நூற்றுக்கணக்கான உவமைகள் எடுத்தாளப் பட்டுள்ளன.  திருக்குறளில் காணப்படும் உவமை நயம் குறித்து நூல்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன.

இலக்கண நூல்கள் உவமை அணியே முதன்மை  அணி என்று விளக்குகின்றன. புலவர் ஒருவர் தாம் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை (உவமேயம்) தெளிவாக உணர்த்தும் பொருட்டு, மற்றவர்களும் நன்கு அறிந்த பொருள் ('உவமை' அல்லது 'உவமானம்') ஒன்றின் பண்பு,தொழில், பயன் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுத் தம் பாடலின் கருத்தை விளக்கிக் கூறுவது உவமையணியின் இலக்கணம்.   

ஆக, ஒப்பிடப்படும் பொருள் உவமேயம்; ஒப்பிடப் பயன்படும் பொருள்  உவமை.  உவமை அணியில் நான்கு உறுப்புகள் இருப்பதைக் காணலாம். அவை: 1) உவமை; 2) உவமேயம்;  3) உவமை உருபு; 4) ஒத்த பண்பு.

ஒரு பொருளோடு ஒரு பொருளும்;  ஒரு பொருளோடு பல பொருளும்;  
பல பொருளோடு பல பொருளும்; பல பொருளோடு ஒரு பொருளும் 
என நான்கு வகையாகப் பொருள்கள் ஒப்புமைப்படுத்திக் கூறப்படும்.    பெரும்பாலும் உவமையையும் உவமேயத்தையும்  இணைப்பதற்கு 'போன்ற, போல, ஒப்ப' முதலிய  உவம உருபுகளில் ஒன்று பயன்படுத்தப்படும்.
     போல புரைய ஒப்ப உறழ
     மான கடுப்ப இயைய ஏய்ப்ப
     நேர நிகர அன்ன இன்ன
     என்பவும் பிறவும் உவமத்து உருபே  (நன்னூல் நூற்பா - 367)
என்பது உவம உருபுகள் குறித்து நன்னூல் தரும் இலக்கணம்.  

     நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
     பண்புடை யாளர் தொடர்பு  (783)
பொருள்: நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவது 'போல' பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும். இதில், பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும் என்ற உவமேயம், போல என்ற உவம உருபால், நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தரும் என்ற உவமையுடன் இணைக்கப்பட்டுள்ளது.  

பண்பு, தொழில், பயன் என மூவகை ஒப்புமைகள்:
பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை, தொழில் ஒப்புமை,  பயன் ஒப்புமை ஆகியவற்றின் அடிப்படையில் உவமை அணி வகைப்படுத்தப்படும். இதனால் பண்பு உவமை, தொழில் உவமை, பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும் என விளக்குகிறது தண்டியலங்காரம் நூற்பா.
     பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்
     ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்ந்து
     ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை (தண்டி, நூற்பா. 30)  

1. ஒரு பொருளின் வடிவம், நிறம், சுவை, அளவு ஆகியவை அப்பொருளின் 'பண்பு' எனப்படும்.  இப்பண்புகளின் அடிப்படையில் ஒப்புமைப் படுத்தப்படும் உவமை பண்பு உவமை ஆகும்;  
2. ஒரு பொருளின் 'தொழில்' அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்; 
3. ஒரு பொருளால் கிடைக்கும் 'பயன்' காரணமாக அமையும் உவமை பயன் உவமை எனப்படும்.

     பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
     வாலெயிறு ஊறிய நீர் (1121)
பொருள் : மென்மையான மொழிகளைப் பேசும் இப்பெண்ணின் வெண்மையான பற்களிடையே ஊறிய உமிழ்நீர், பாலும் தேனும் கலந்த சுவை போல் இனிமையானது- தலைவன் கூற்று. இது 'பண்பு உவமையணிக்கு'  ஓர் எடுத்துக்காட்டு.

     அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
     இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார் (691)
பொருள்:  தீக்காய்வார் அகலாது அணுகாது இருப்பதுபோல் அரசர்களைச் சார்ந்திருப்பவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற குறள் 'தொழில் உவமை அணிக்கு' ஓர் எடுத்துக்காட்டு.

     ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
     பேரறி வாளன் திரு (215)
தன்னலமற்ற தொண்டுள்ளம் கொண்டவரின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியை ஒத்ததாகும். இக்குறள் 'பயன் உவமையணிக்கான'  எடுத்துக்காட்டு.

உவமையணியானது 'எடுத்துக்காட்டு உவமையணி' என்றும் 'இல்பொருள் உவமையணி' என்றும் மேலும் இருவகையாகப் பிரிக்கப் படுதலும் உண்டு.  

எடுத்துக்காட்டு உவமையணி:  எடுத்துக்காட்டு உவமை அணி என்பது உவமானத்தையும் உவமேயத்தையும் தனி வாக்கியங்களாக  அமைத்து இது பொருள் இது உவமை என்பது விளக்கப்படுகையில் இடையில் அதுபோல என்னும் உவமஉருபு கொடுக்காமல் ஒப்பிடுவது.
     பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
     கண்ணோட்டம் இல்லாத கண் (573)
பொருள்: பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் என்ன பயன்? அது போலவே இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன்?

இல்பொருள் உவமை அணி: இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது இல்பொருள் உவமை அணி. அதாவது இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும்.
     வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
     புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று (273)
பொருள் : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

மேலும்  சில கருத்தைக் கவரும் அணி வகைகளும் திருக்குறளில் உள்ளன.

பின்வருநிலையணி:
ஒரே சொல் மீண்டும் மீண்டும் ஒரு குறளில் வரும் "பின்வருநிலையணி" என்ற முறையையும் வள்ளுவர் கையாண்டுள்ளார். வாய்விட்டுப் படிக்கும் பொழுது அவற்றின் ஓசைநயம் படிப்பவரைக் கவரும் வகையில் இக்குறள்கள் அமைந்துள்ளன.  பாவலர் உணர்த்த விரும்பும் செய்தியை எளிதாகவும், அழகாகவும், கேட்பவர் மனதில் பதியும்படி சொல்வதற்கு  ஒரேசொல் மீண்டும் மீண்டும் பலமுறை இடம் பெறும் வகையில் "பின்வருநிலையணியில்" செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஒரே சொல் வெவ்வேறு எண்ணிக்கையில் பல குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளன.
     பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
     பற்றுக பற்று விடற்கு.  (350)
என்ற இக்குறளில் 'பற்று' என்ற ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ளது. இக்குறளின்  ஏழு சீர்களில்,  ஆறு  சீர்களில்  பற்று  என்ற சொல் இடம் பெறுகிறது.  பற்றுகளை அகற்றுவதற்காகவே பற்றில்லாதவனைப் பற்றி நிற்க வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.

இது போன்றே, ஒரே சொல் 5 முறை ஐந்து குறட்பாக்களிலும், 4 முறை 22 குறட்பாக்களிலும், 3 முறை 27 குறட்பாக்களிலும் அமைந்துள்ளன என்று திருக்குறள் குறித்துப் பல புள்ளிவிவரங்கள் தரும் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன.

செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ, பொருளோ, சொல்லும் பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்ப்பது 'பின்வரு நிலையணி'. இப் பின்வருநிலையணி மூன்று வகைப்படும்:
1. சொல்லும் பொருளும் பின்வருதல் - சொற்பொருள் பின்வருநிலையணி
2. சொல் மட்டும் தொடர்ந்து வருதல் - சொல் பின்வரு நிலையணி
3. சொற்கள் மாறி, ஆனால் பொருள் ஒன்றாக வருதல் - பொருள் பின்வரு நிலையணி

     எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
     திண்ணியர் ஆகப் பெறின். (666)
எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர் என்பது இக்குறள் சொல்லும் பொருள்.  எண்ணிய என்ற சொல் திரும்பத் திரும்ப வரும் இடங்களில் ஒரே பொருளில் வந்துள்ளமையால்  இக்குறள் 'சொற்பொருள் பின்வரும் நிலையணி' என்ற அணிக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது

     பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
     பொருளல்ல தில்லை பொருள். (751)
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை என்பது இக்குறளின் பொருள். 'பொருள்' என்ற சொல் மட்டும் குறளில் தொடர்ந்து வேறு (மதிப்பு, செல்வம் ஆகிய) பொருள்களில் வருதலால் இக்குறளின் அணி 'சொல் பின்வருநிலை அணி' என்பதாக அமைந்துள்ளது.

     கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
     மாடல்ல மற்றை யவை. (400)
அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. ஒருவருக்கு அதனைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை என்பது இக்குறளின் பொருள்.  இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களும் செல்வத்தையே குறிக்கின்றன. எனவே; சொற்கள் மாறி, ஆனால் பொருள் ஒன்றாக வருதலால் இக்குறளில் 'பொருள் பின்வரு நிலையணி' இடம் பெற்றுள்ளது.

திருக்குறளின் 1330 குறள்களில் சற்றொப்ப நான்கு விழுக்காடு குறட்பாக்கள் 'சொற்பொருள் பின்வருநிலையணியிலும்'  'சொல் பின்வரு நிலையணியிலும்' வள்ளுவரால் இயற்றப்பட்டுள்ளன.  இவையாவும் இலக்கிய ஆர்வலர்களுக்கு அறிவுவிருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பிறிது மொழிதல் அணி:
      நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
      நீங்கின் அதனைப் பிற   (495)
ஆழமான நீரினுள் இருக்கும் வரை நீர்நிலைக்கு வரும் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; ஆனால் நீரிலிருந்து வெளியே வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும் என்பது இக்குறளின் பொருள். 

மக்களின் நல்வாழ்விற்கு வாழ்வியல் நெறிகளை விளக்க முடிவெடுத்த வள்ளுவர் அதை விட்டுவிட்டு ஏன் உயிரியல் ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் மாறினார்? அவருடைய நோக்கத்திற்குத் தொடர்பில்லாமல் முதலை குறித்து ஏன்  பேசுகிறார் என்ற குழப்பம் ஏற்படலாம்.   ஆனால், ஒரு செயல் ஆற்றுவதற்கு ஏற்றதான இடத்தை அறிந்து அதன் பிறகே செயலைத் தொடங்க வேண்டும் என்பதை 'இடனறிதல்' என்ற அதிகாரத்தில் விளக்க முற்படும் வள்ளுவர் 'பிறிது மொழிதல் அணி' என்ற அணியை இக்குறளில் எடுத்தாள்கிறார். கூறக் கருதிய பொருளை உவமையால் குறிப்பாக உணர்த்தியதால் இது பிறிது மொழிதலாகிறது.

ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும்; ஆனால் தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெறுதல் இயலாது என்னும் கருத்து இக்குறள் மூலம் உணர்த்தப்படுகிறது. ஆனால், இந்த உவமேயம் குறளில்  சொல்லப்படவில்லை,  முதலை  உவமை மட்டும் விளக்கப்பட்டுள்ளது. பிறிது மொழிதல் அணியில் உவமை மட்டுமே இடம் பெறும்.  இவ்வாறாகத் தான் கூற விரும்பும் கருத்தை நேரடியாகக் கூறாமல், அதைப் புலப்படுத்தும் வகையில் வேறொரு கருத்தைக் கூறிப் புலப்படுத்துவதை, 
      கருதிய பொருள்தொகுத்து அதுபுலப் படுத்தற்கு
      ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டு என மொழிப
         (தண்டி. நூ. 52)
தண்டியலங்காரம் 'ஒட்டணி' என்று  விவரிக்கிறது. பிறிது மொழிதல் அணிக்கு நுவலா நுவற்சி, சுருங்கச் சொல்லல், தொகைமொழி, உவமப்போலி என்னும் வேறு பெயர்களும் உள்ளன.  அகத்திணைப் பாடலில் இடம்பெறும் பிறிது மொழிதல் அணி 'உள்ளுறை உவமம்' எனப்படுகிறது. எனவே உவமானத்தைக் கூறி விட்டு உவமேயத்தைக் கூறாமல் மறைபொருளாக, குறிப்பாக உணர்த்துதல் பிறிது மொழிதல் அணியாகும். 

வேற்றுமை அணி:
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது 'வேற்றுமையணி' எனப்படும்.
      தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
      நாவினாற் சுட்ட வடு   (129)
தீயினால் சுட்ட புண்ணால் உடலில் வடு உண்டானாலும் உள்ளே ஆறிவிடும்; நாவினால் சுட்ட புண்ணால் உடலின் புறத்தே வடு உண்டாகாவிட்டாலும் உள்ளே ஆறாது.  இக்குறளில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்பட்டு, பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; ஆனால், உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடும் கூறப்படுகிறது. எனவே இது வேற்றுமை அணி ஆகும்.

நிரல்நிறை அணி: 
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது 'நிரல் நிறை அணி' (நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல்) எனப்படும்.
      அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
      பண்பும் பயனும் அது (45)
அன்பும் அறமும் உடையதாக இல்வாழ்க்கை விளங்குமானால், அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும். இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைப்படக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.

வஞ்சப்புகழ்ச்சி அணி:
ஒருவரைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் 'வஞ்சப்புகழ்ச்சியணி' எனப்படும். 'மாறுபடு புகழ்நிலை அணி', 'புகழாப் புகழ்ச்சி அணி' என வஞ்சப்புகழ்ச்சி அணி இருவகைப் படுத்தப் படுகிறது. 
      பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
      பீழை தருவதொன் றில்   (839)
அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பு மிக இனியது; ஏனெனில், அவர்களிடம் இருந்து பிரிய நேர்ந்தால் அப்பிரிவு துன்பம் தருவதில்லை என்பது இக்குறளின் பொருள். இக்குறட்பாவில் அறிவிலார் உறவைப் புகழ்வது போல் பழித்துக் கூறுகிறார் வள்ளுவர். ஆதலால் இக்குறள் வஞ்சப்புகழ்ச்சி அணியின் கீழ் வகைப் படுத்தப்படுகிறது. புகழ்வது போல் பழிக்கும் வஞ்சப்புகழ்ச்சி அணியை  'மாறுபடு புகழ்நிலை அணி'  என தண்டியலங்காரம் கூறுகிறது.

அது போல;  ஒன்றைப் பழித்துக் கூறுவது போன்ற முறையினால் ஒரு பொருளுக்கு மேம்பாடு தோன்றச் சொல்லுவது புகழாப் புகழ்ச்சி அணி.  
      மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
      பலர்காணும் பூவொக்கும் என்று  (1112)
அனைவரையும் பார்ப்பது தாமரை மலர். ஆனால், நெஞ்சே என்னை மட்டும் நோக்கும் என் தலைவியின் கண்கள் மலர்கள் போன்றது என்று நீ மயங்குவது சரியா? என்று நெஞ்சிடம் கூறுவது போல தலைவன் கூறுகிறான். எனினும் தலைவியின் கண்களைப் புகழாமல் புகழ்வதே தலைவனின் நோக்கம்.   ஆதலால்,  பழிப்பது போன்ற முறையில், அதன் மேன்மை தோன்றக் கூறும்  'புகழாப் புகழ்ச்சி அணி' க்கு இக்குறள்  ஓர் எடுத்துக்காட்டாகும்.

உருவக அணி: 
உவமை வேறு உவமேயம் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது 'உருவக அணி'யாகும்.
      இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
      பார்தாக்கப் பக்கு விடும்   (1068) 
பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு, கொடாமை என்னும் பாறை மோதினால் உடைந்துவிடும் என்பது இக்குறளின் பொருள். உருவக அணியில் உவமேயம் முன்னும்  உவமை பின்னுமாக அமைவதுடன், அவையிரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறப்படும். 

ஏகதேச உருவக அணி:
கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி. வடமொழிச் சொல்லான ஏகதேசம் (ஒரு பகுதி எனப்பொருள்படும்) சொல்லால் இது 'ஏகதேச உருவக அணி' எனப் பெயர் பெறுகிறது. 
      சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
      ஏமப் புணையைச் சுடும்  (306) 
சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அஃது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும். சினம் கொள்பவரை விட்டுச் சுற்றத்தார் விலகிவிடுதல் இயல்பாதலால் துன்பப்படும்பொழுது அவர்  உறவின் அரவணைப்பை இழந்துவிடுவார், உறவின் துணை மட்டுமே பாதுகாக்கும் தெப்பமாக உருவாகப்படுத்தப்பட்டுள்ளது.    

பரிவருத்தனை அணி:
பாடலின் கருத்து ஒரு பொருளைக் கொடுத்து, வேறு ஒரு பொருளைக் கைம்மாறாகக் கொள்ளும் செய்தியைக் குறிப்பிடுவது பரிவருத்தனை அணி என்பதற்கு இலக்கணமாகக் கூறப்படுகிறது.   
      சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
      நோயும் பசலையும் தந்து (1183) 
தன் தலைவன் காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு தன்னுடைய அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார் என்று தலைவி கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைகிறது. தலைவன் தலைவிக்குக் கொடுத்தனவும், அவளிடம் இருந்து கொண்டனவும் சமமாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவருத்தனை அணிக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

நிதரிசன அணி:
இயற்கையாக நிகழும் நிகழ்ச்சிகளின் பயன், வேறு ஒரு பொருளுக்கு நன்மையோ, தீமையோ தோன்றுமாறு இருப்பதாகச் சொல்லுவது நிதரிசன அணியின் இலக்கணம் ஆகும்.   
      குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
      மதிக்கண் மறுப்போல் உயர்ந்து  (957) 
மதிக்கப்படும் நற்குடியில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும் என்கிறது இக்குறட்பா.  பெரியவர்களிடமும் குற்றம் உண்டு என்ற இயல்பை, அழகிய நிலவின் களங்கத்துடன் ஒப்பிட்டுக் கூறும் முறை நிதரிசன அணியின் இலக்கணத்தை  ஒட்டி அமைகிறது. 



[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 303   -  24.09.2025]  
[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 304   -  01.10.2025]  
[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 305   -  08.10.2025]
[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 306   -  15.10.2025]


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Tuesday, September 16, 2025

சேரமானின் பண்டையோர் கூற்று

சேரமானின் பண்டையோர் கூற்று 


சேரநாட்டின் முடியுடை வேந்தர்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் என்பவர் 63 நாயன்மார்களுள் ஒருவராக வைத்துப் போற்றப்படுபவர். சைவ நூல்களின் தொகுப்பான 11 ஆம் திருமுறையின் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கயிலாய ஞானவுலா ஆகிய மூன்று நூல்கள் இவரால் இயற்றப்பட்டவையாகும்.  இப்பெருமாக் கோதையாரே கழறிற்றறிவார் என அறியப்படுபவரும் ஆவார். இவர் சுந்தரரின் நண்பராகவும்,  சிவனைத் தொழ அவருடன் திருக்கயிலை சென்றதாகவும் அறியப்படுகிறார். அருணகிரிநாதர் அவருடைய திருப்புகழில் சேரமான் பெருமாள் நாயனாரை "ஆதிஅந்தவுலாவாசு பாடிய சேரர்" என்று குறிப்பிடுவார்.

இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகவும், இறைவனைத் தொழும் உயிர்களை அத்தலைவன் மீது காதல் கொண்ட பெண்களாகவும் "நாயகி-நாயக பாவம்" என்ற அமைப்பில் எழுதப்படும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது "திருக்கயிலாய ஞானவுலா".  உலகைத் தோற்றுவித்து ஆட்டுவிக்கும்  இறைவன்பால் எல்லா உயிரினங்களும் அன்பு கொண்டு திளைத்து இறைவனால் ஆட்கொள்ளப்படுவதைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்டது திருக்கயிலாய ஞானவுலா. 

சேரமான் பெருமாள் நாயனார் தமக்கு முன் வாழ்ந்த திருமுறையாசிரியர்கள் அருளிய பொருளுரைகளை இவ்வுலாவில் பல விடங்களிலும் எடுத்தாண்டுள்ளார். திருநாவுக்கரசர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் வாய்மொழிகளைத் தழுவி அவர் எழுதிய வரிகளைப் போலவே திருவள்ளுவர் குறள்களையும் இவர் எடுத்தாண்டுள்ளார். 
  
திருவுலா செல்லும் சிவபெருமானின் பேரழகைக் கண்டு மயங்கிய பெண்கள் பாடும் பாடல்களாக அமைந்த இந்த நூலின் மூலம் சேரமான் பெருமாள் திருக்குறளால் ஈர்க்கப்பட்டவர் என்பதை அறிய முடிகிறது.

      "கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
      ஒண்டொடி கண்ணே யுளவென்று-பண்டையோர் 
      கட்டுரையை மேம் படுத்தாள்"
[திருக்கைலாய ஞானவுலா: 173-174 கண்ணிகள்]
இதன் பொருள்; நாம் கண்டும், கேட்டும், சுவைத்தும், மோந்தும், தீண்டியும் துய்க்கக் கூடிய ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன என்று மூத்தோர்  சொல்லும் வாய்மொழியை ஒத்த தோற்றத்தினை உடையவள், இறைவனையும் கவரும் தோற்றம் கொண்டவள் எனப் பேரிளம் பெண்ணின் (33 — 40 வயதுடையவள்) இயல்புரைக்கும் பொழுது,

      கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
      ஒண்தொடி கண்ணே உள.   
            [களவியல், புணர்ச்சி மகிழ்தல்: குறள் - 1101]
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன (மு. வரதராசன் உரை).என்ற குறளை எடுத்தாண்டு இருப்பார்.   

வள்ளுவரை பண்டையோர் என்று பெருமிதம் கொள்கிறார் சேரமான் பெருமாள்.  
அவ்வாறே;

      "இல்லாரை யெல்லாரும் எள்குவார் செல்வரை 
      எல்லாருஞ் செய்வர் சிறப்பென்னுஞ் -சொல்லாலே 
      அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் 
      மல்கிய சாந்தொடு பூண்புனைந்து"
            [திருக்கைலாய ஞானவுலா: 136 - 137 கண்ணிகள்]
என்ற வரிகளில்; பொருள் இல்லாத ஏழைகளை எத்தகையோரும் இகழ்வர், செல்வரை எல்லோரும் சிறப்பு செய்வர் என்ற உலக வழக்கை அறிந்திருப்பதனால், இறைவன் தன் மீது மையல் கொள்ள வேண்டும் என்பதற்காக அவள் தன் மிக உயர்ந்த இடையில் மேகலையைச் சுற்றிக் கட்டி, தன் அழகிய மார்பின் மேல் மிக்க மணம் வீசும் சந்தனக் கலவையைப் பூசி மேலும் பல அணிகலன்களை அணிந்து கொண்டாள் என அந்த அரிவையின் (20 — 25 வயதுடையவள் அரிவை) அணிநலன்களைப் புலப்படுத்துகிறார். அவ்வரிகளில்,

      இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
      எல்லாரும் செய்வர் சிறப்பு.
            [கூழியல், பொருள்செயல்வகை:  குறள் - 752]
பொருள் இல்லாதவரை எல்லாரும் இகழ்வார், செல்வரை எல்லாரும் சிறப்பு செய்வர் (மு. வரதராசன் உரை) என்ற குறளையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளமை பொய்யில் புலவர் அருளிய திருக்குறளில் சேரமான் பெருமாள் நாயனார் கொண்ட பேரார்வத்தை இனிது புலப்படுத்துவதாகும் என்பார் வெள்ரைவாரணனார். 

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஏழு பருவத்து மகளிரும் தன்னைக் கண்டு காமுற்று மயங்கும் நிலையில் தலைவனொருவன் உலாப்போவது ஒரு தலைக் காமமாகிய கைக்கிளைத் திணையைச் சார்ந்தது, இக் கைக்கிளைச் செய்திகள் பரத்தையர்க்கு அன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாதவை என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.   

வள்ளுவர் குறிப்பிடும்  தலைவி இல்லறம் மேற்கொண்ட ஒரு குலமகள் என்ற வகையில் இது வேறுபடுகிறது. தலைவியைக் குலமகள் எனக் காட்டும் முகமாகத்தான்  வள்ளுவர் குறள்கள்  அமைந்துள்ளன.  அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பரத்தையர் என்ற பிரிவில் அடங்கும் பொதுமகளிரை "வரைவின் மகளிர்" (வரைவு= திருமணம்; ஓர் ஆணுடன் திருமண உறவு இன்றியும்,  ஒருவனுக்கு ஒருத்தி  என்ற இல்லற வாழ்க்கை மேற்கொள்ளாதவருமான பொதுப்பெண்டிர், பொருள் பெண்டிர்) என்ற அதிகாரத்தின் கீழ் வள்ளுவர் தனியாகக் குறிப்பிடுகிறார். 

பார்வை நூல்:  பன்னிரு திருமுறை வரலாறு (இரண்டாம் பகுதி: 8 - 12 திருமுறைகள்), வித்துவான் க. வெள்ரைவாரணன்.  பக்கம் 603. தமிழாராய்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1969.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 302   -  17.09.2025]  

#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 


Wednesday, September 10, 2025

சிவிகைப் பயணமும் அறவழியும்

சிவிகைப் பயணமும் அறவழியும் 

வள்ளுவர் தன் குறளின் தொடக்கமாக உள்ள 'பாயிரம்' பகுதியின் 4 அதிகாரங்களில்;  முதலில் இறைவணக்கம், வான்மழை போற்றுதல்,  உலகப் பற்றை நீத்தவர் பெருமை ஆகிய கருத்துக்களைக் கூறிவிட்டு அடுத்து அறநெறிப்படி வாழ்வதன் முக்கியத்துவத்தை 'அறன்வலியுறுத்தல்' அதிகாரத்தில் மூலம் எடுத்துரைக்கிறார்.  திருக்குறளின் நோக்கமே அறவாழ்வை, ஒழுக்க நெறிகளை மக்களிடம் கொண்டு செல்வது என்பதால் அறன்வலியுறுத்தல் அதிகாரத்தின் குறள்கள் யாவும் அறவாழ்வின் மேன்மைக்குக் கொடுக்கப்படும் முக்கியமான ஓர் அறிமுக உரையாகக் கொள்ளலாம். இதன் பின்னரே அறத்துப் பாலில் இல்லறவியல்,  துறவறவியல் ஆகிய இயல்கள் அடுத்தடுத்து இடம் பெறுகின்றன. 

அறன்வலியுறுத்தல் அதிகாரத்தின் குறட்பாக்கள்:
31.  அறமானது சிறப்பையும் செல்வத்தையும் அளிப்பதால், அதைவிடச் சிறந்த வேறொரு நன்மையும் உயிர்க்கு இல்லை. 
32.  அறத்தின் மூலம் கிடைக்கும் சிறப்பையும் செல்வத்தையும் விட ஒருவருக்கு மேலான நன்மை இல்லை, அதே சமயம் அறத்தை மறந்து வாழ்வதைக் காட்டிலும் கொடிய கேடு வேறு இல்லை. 
33.  தன்னால் முடிந்த வழிகளில், எல்லா இடங்களிலும் அறச்செயல்களை இடைவிடாமல் செய்ய வேண்டும்.  
34.  மனத்தளவில் குற்றம் இல்லாதிருப்பதே உண்மையான அறமாகும்; இதைத் தவிர்த்த செயல்களும், வார்த்தைகளும் ஆரவாரத் தன்மை கொண்டவை, அவை உண்மையான அறம் ஆகாது. 
35.  பொறாமை, பேராசை, சினம், கடுமையான சொல் ஆகிய இந்த நான்கையும் நீக்கி, குறைவின்றி ஒழுக்கத்தோடு வாழ்வதே அறமாகும்.
36.  எதிர்காலத்தில் செய்யலாம் என்று அறங்களை ஒத்திவைக்காமல், செய்ய வேண்டிய நற்செயல்களை உடனடியாகச் செய்துவிட வேண்டும். அப்போதுதான், உடல் அழிந்துபோகும் நேரத்தில், அந்தச் செயல்களே நமக்கு நிலையான துணையாக அமையும். 
37.  பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. — மு. வரதராசன்
38.  அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும். — சாலமன் பாப்பையா 
39.  மனித வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி என்பது புறப் பொருட்களைச் சார்ந்ததல்ல, மாறாக அது ஒருவரது அறவொழுக்கம் நிறைந்த வாழ்விலிருந்தே வருகிறது. 
40.  தன் வாழ்நாளில் ஒருவர் செய்ய வேண்டியவை அறச் செயல்களாகும்; தவிர்க்க வேண்டியவை பழிகளாகும். 

அறன்வலியுறுத்தல் அதிகாரத்தின் பொருளைச்  சுருக்கமாகச் சொன்னால்; குற்றமில்லாத மனதுடன், மற்றவரை எந்த வழியிலும் வருத்தாமல், பிறருக்கு உதவும் நோக்கத்துடன் நற்செயல்கள் செய்வதுதான் அறவொழுக்கமாகும்  எனப் புரிந்து கொள்ளலாம். 

      இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
      அறவிலை வணிக னாயலன் பிறரும்
      சான்றோர் சென்ற நெறியென
      ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே. (புறநானூறு: 134)
கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஆய் அண்டிரன், அறச் செயல்களைச் செய்தது, மறுமைக்கான நற்பலன் கருதி அல்ல. மாறாக, அதுவே சான்றோர் நெறி என்பதற்காகத்தான் என்கிறது உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எழுதிய பாடல்.  வேள் ஆய் அண்டிரன் ஓர் "அறவிலை வணிகன்" அல்ல என்று அவனைப் பாராட்டுகிறார் புலவர்.   

தன்னல நோக்கோடு அறம் செய்யாமல்  ஈத்துவக்கும் இன்பத்திற்காக, அறம் என்ற நோக்கில் செய்யலாற்றுவது என்பதை வள்ளுவருமே ஈகை  அதிகாராத்தில் 
      நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
      இல்லெனினும் ஈதலே நன்று.   (குறள்  - 222) 
தன்னல நோக்கோடு அறம் செய்யாமல், ஈத்துவக்கும் இன்பத்திற்காக மட்டுமே அறம் செய்வதை வள்ளுவர் 'ஈகை' அதிகாரத்தில் குறிப்பிடுகையில், பிறரிடம் இரந்து வாழ்வதைத் தவிர்த்து விடுக, மேலுலகம் செல்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செய்யாமல் தன்னால் முடிந்தவரை பிறருக்குக் கொடுத்து உதவுவதே உயர்ந்த பண்பு  என்று குறிப்பிடுவார்.  பலன் கருதா நோக்கில் அறம் செய்தல் என்பதை ஓர் அளவுகோலாகக்  கொண்டு அறன் வலியுறுத்தல் குறள்களை ஆராய்ந்தால், நற்செயல் நோக்கம் மட்டுமே என்ற வகையில் ஆறு (32, 33, 34, 35, 39, 40) குறள்களும்; தன்னலப் பயன் கருதி செய்வனவாக மூன்று (31, 36, 38) குறள்களையும் தெளிவாக வகைப்படுத்திவிட முடியும். 

      அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
      பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.   (குறள் - 37)
என்ற குறள் பொருள்மயக்கம்  தரும் குறளாகும், இதற்குப் பொருள் கொள்வோர் பொருள்  கொள்ளும் முறையில் குறளின் கருத்து மாறுபடலாம்.  இது போன்ற சூழ்நிலையில் உரையாளர்கள்  பொதுவாகவே குறளின்  சொல்லுக்குச் சொல் பொருள் சொல்லிக் கடந்துவிடுவதும் வழக்கம். எடுத்துக்காட்டாக; "பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா"  என்று மு. வரதராசன் பொருள் கொள்வதைக் காண முடிகிறது.  




இக்குறளுக்கு இம்மையில் செய்யும் அறச்செயல் மறுமையில் நல்வாழ்வு தரும் என்ற (அறவிலை வணிகம்) பிறவிப்பயன்  கோட்பாட்டின் அடிப்படையில் பொருள்  சொல்லப்படும். முன்னைவினையின் பயன் என்ன என்பதைப் பல்லக்கு சுமப்பவனையும் அதில் பயணிப்பவனையும் பார்த்தாலே தெரியும், பயணிப்பவன் முற்பிறவியில் செய்த நல்வினையால் பல்லக்கில் செல்லும் நிலையில் உள்ளான், அவனைச் சுமப்பவர்கள் அறச்செயல் செய்யாததால் மற்றவரைச் சுமக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்று பொருள் விளக்கம் கொடுக்கப்படுவது வழக்கம்.  இவ்வாறு பொருள் கொண்டால் இது நற்பயன் கருதி அறவழியில் நடக்க வலியுறுத்தும் பிரிவில் இக்குறளை வகைப்படுத்தலாம்.  இது வினைப்பயன் சார்ந்த ஒன்று. மணக்குடவர், பரிதி, காலிங்கர், பரிமேலழகர், ஆகிய அனைத்துத் தொல்லாசிரியர்களும் இந்த வினைக்கோட்பாட்டுக் கருத்துத் தோன்ற உரை எழுதியுள்ளனர்.  இக்காலத் தமிழ் அறிஞர்களுள்ளும் தேவநேயப் பாவாணர், வ.உ.சிதம்பரம், கா.சுப்பிரமணியம் பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம், சுத்தானந்த பாரதியார், சாமி சிதம்பரனார் ஆகியோருக்கும் இக்கருத்து ஏற்புடையதாகவே இருந்துள்ளது.  

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். (குறள் - 1062) என்று இயலாமையில், வறுமையில் உள்ளவருக்காக வருந்தி, பிச்சை எடுத்தாவது ஒருவர் வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், இந்த உலகைப் படைத்த கடவுளும் பிச்சையெடுத்து அலைந்து கெட்டுத் தொலைக என்று கடுமையாகக் கூறும் வள்ளுவரா துன்பத்தில் உழல்வது ஒருவர் செய்த முன்வினைப்பயன் என்பார் என்ற கேள்வியும் எழுகிறது. 

இக்குறளுக்குப் பொருள் சொல்லும்  குன்றக்குடி அடிகளார்; இக்குறள் "சிவிகை ஊர்ந்து செல்வோன் தூக்கிச் செல்வோனிடையில் உள்ள வேறுபாட்டை அறத்தின் பயன் என்று கூறும் பழக்கம் உடைய சமுதாயத்தை மறுத்துக் கூறியது. "உள்ளது மறுத்தல்" என்ற குறிக்கோளுடையது இப்பா. பொறுத்தல் துன்பம் தருவது. அறத்தில் வளர்ந்தவர்கள் மற்றவர் துன்புறுதலை அதுவும் தமக்காகத் துன்புறுதலை ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏற்றுக் கொண்டால் அறம் பிழைத்துப் போய் விடுகிறது என்பார்" [உதவி:குறள்திறன் தளம்]. 

ஆகவே;  அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை என்பதன் பொருள், 
சிவிகை  பொறுத்தானோடு = பல்லக்கைச் சுமப்பவனுக்கும் அவன் உதவியோடு   
ஊர்ந்தான் இடை = அப்பல்லக்கில் பயணிப்பவனுக்கும் இடையில் உள்ள தொடர்பை நோக்கும் பொழுது  
அறத்தாறு இதுவென வேண்டா =  அறவழி இதுதான் என்று எண்ணுதல் வேண்டாம்

அதாவது, பல்லக்கைச் சுமந்து செல்பவர்களையும் அதில் பயணிப்பவரையும் காணும் பொழுது, சொல்லாமலே எது அறவழி என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.  ஒரு சிலரை நோகச் செய்து அவர் வாழ்வில் தங்களை மேம்படுத்திக் கொள்வது அறவழியும் அல்ல அது அறவாழ்வும் அல்ல.  
 
பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்ய விரும்பும் ஆதீனங்கள் உள்ள இக்காலத்தில், அறவோர் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் பல்லக்கில் பயணிப்பது அறம் பிழைபட்ட செயல் என்று உறுதியாக மறுத்துக் கூறியவரும் ஓர் ஆதீனத்தின் தலைவர் என்பது இங்குக் கவனத்திற்கு உரியது.


[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 301   -  10.09.2025]  


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Tuesday, September 2, 2025

குறளின் ஈற்றடிகள்

குறளின் ஈற்றடிகள்

திருக்குறளின் வெண்பாக்கள் ஏழு சீர்களைக் கொண்டு இரண்டே அடிகளில் அமைந்த குறள் வெண்பாக்கள். ஈற்றடி அல்லது இறுதி அடி முச்சீராலும் ஏனையடி நாற்சீராலும் வெண்பா இலக்கணப்படி அமைந்தவை வள்ளுவரின் குறட்பாக்கள்.   “ஈற்றடி முச்சீராகவும், மற்றையடி நாற்சீராகவும் பெற்று, காய்ச்சீர், மாச்சீர், விளச்சீர்களும் இருவகை வெண்டளைகளுங் கொண்டு, மற்றைச் சீரும் தளையும் பெறாமல் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றைப் பெற்று வருவதே வெண்பாவின் பொது இலக்கணமாம்” என்று வரையறுக்கிறது இலக்கண நூல். 

ஈற்றடி ஒன்று கொடுக்கப்பட்டு அதற்கு வெண்பாக்கள் எழுதுவது மரபுப்பாக்கள் புனைவோர் இடையே நடக்கும் ஓர் அறிவார்ந்த போட்டி. 'பாரதி சின்னப்பயல்' என்று கொடுக்கப்பட்ட ஈற்றடிக்குத் தன் பதினைந்தாம் வயதிலேயே வெண்பா புனைந்து அவையோரை வியக்கவைத்தவர் மகாகவி சுப்ரமணிய பாரதி.  

"மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற சொற்றொடர், மனம் போனபடி புனைகதைகள் பல கதைக்கப்படும் இன்றைய இணைய உலகில் இன்று பலருக்கும் அறிவுறுத்தப் படும் சொற்றொடர். இது குறளின் புகழ் பெற்ற ஈற்றடி.  இது போலக் குறளின் பல ஈற்றடிகளே தனித்து நின்று பழமொழி போல ஒரு வாழ்வியல் நெறியையோ,  மாறாத உலக உண்மையையோ உணர்த்திச் செல்லும்.  யாவரும் அறிந்த பல ஈற்றடிகள் இருப்பினும் 'கனி இருப்பக் காய்கவர்ந் தற்று',  'அறனல்ல செய்யாமை நன்று',  'பயனில சொல்லாமை நன்று' போன்ற ஈற்றடிகள் தனித்து நின்றே நன்னெறியைக் குறிப்பிடுவன. 

சில குறட்பாக்களின் ஈற்றடிகளைச் சொன்னாலே குறள் முழுமையையும் சொல்லத் தேவையின்றி நினைவிற்கு வரும் வகையில் புகழ்பெற்ற ஈற்றடிகளும் உள்ளன.  எடுத்துக் காட்டாக,  'நிற்க அதற்குத் தக', 'நாவினால் சுட்ட வடு', 'சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' போன்ற ஈற்றடிகள் அத்தகைய சிறப்பு கொண்ட ஈற்றடிகள்.  

தான் எழுதிய 1330 குறட்பாக்களில் வள்ளுவர் சில ஈற்றடிகளை மீண்டும் மீண்டும் பயன் கொண்டுள்ளார். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 26 குறட்பாக்களின் ஈற்றடிகள் மற்றொரு குறளின்  இறுதி அடியாகவும்  உள்ளது. இணைக்கப்பட்டுள்ள குறள் அட்டவணை அவ்வாறு ஒரே ஈற்றடிகளைக் கொண்டவற்றைப் பட்டியலிட்டுள்ளது.



'ஏதம் பலவுந் தரும்' என்ற ஈற்றடி மூன்று முறை திருக்குறளில் இடம் பெறக் காணலாம்.  இவை தவிர்த்த மற்றவை இரண்டிரண்டு முறைகள் வள்ளுவரால் எடுத்தாளப்பட்டுள்ளன.  ஒரே ஈற்றடிகள் ஒரே அதிகாரத்திலும் இடம் பெற்றுள்ளன. உட்பகை அதிகாரத்தின் 'உட்பகை உற்ற குடி' என்ற ஈற்றடியும்; காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் 'ஏதிலர் என்னும்இவ் வூர்' என்ற ஈற்றடியும்; நடுவு நிலைமை அதிகாரத்தின் 'கோடாமை சான்றோர்க் கணி' என்ற ஈற்றடி போன்றவை ஒரே அதிகாரத்தில் இடம்பிடிக்கும் ஈற்றடிகள். இவ்வாறு ஒரே அதிகாரத்தில் அமையாத ஈற்றடிகளும் உள்ளன.  

சொல்லுக்குச் சொல் மாற்றமின்றி  அமையும் இத்தகைய ஈற்றடிகள் தவிர்த்து,  சற்றேறக் குறைய ஒத்திருக்கும் ஈற்றடிகளைக் கொண்டவையாக மேலும் 9 குறட்பாக்களும் உள்ளன. அவற்றுள் சில: 
'தாழாது உஞற்று பவர்' (620 ) - 'தாழாது உஞற்று பவர்க்கு' (1024); 
'நல்குரவு என்னும் நசை' (1043) -'நல்குவர் என்னும் நசை' (1156); 
'மாசறு காட்சி யவர்'(199) - 'மாசறு காட்சி யவர்க்கு'(352) போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும் 

இவ்வாறு அமையும் ஈற்றடியைக் கொண்ட குறட்பாக்களை ஒப்பிட்டுக் கொடுக்கப்பட்ட ஈற்றடி மூலம் வள்ளுவர் சொல்ல வரும் கருத்து என்ன?  அவர் என்ன வலியுறுத்த விரும்புகிறார்? என்ன நோக்கத்தில் கையாண்டுள்ளார் என்று ஆராய்வது  மேலும் பயனுள்ளவகையில் அமையும்.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 300   -  3.09.2025]




#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi