எண்குணத்தானும் கம்பரும்
திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இடம் பெறும் 9ஆவது குறள்;
"கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"
எண்குணங்களை உடையவன் (அதாவது கடவுள் அல்லது வழிகாட்டியின்) திருவடிகளைப் பணிந்து வணங்காதவர் தலையானது செயல்திறனற்ற மெய், வாய், கண், மூக்கு, செவி முதலானவைபோல் செயலிழந்த ஐம்புலன்களை ஒத்திருக்கும் ஒரு பயனற்ற தலையாக; அதாவது அறிவற்ற தலையாகக் கருதப்படும் என்ற பொருள் வருமாறு தமிழறிஞர் பலர் தெளிவுரை எழுதிச் சென்றுள்ளனர்.
இதில் "எண்குணம்" என்பதற்குப் பொருள் விளக்கம் தருவதில் பல கருத்து மாறுபாடுகளும் உள்ளன.
[1] பெரும்பாலோர் எண்குணம் என்றால் என்ன என்று பொருட்படுத்தாமல் விவரிக்காமல் "எண்குணத்தைக் கொண்டவர்" என்று சொல்லியோ அல்லது சொல்லாமலோ கடந்து விடுவார். மு.கருணாநிதி, மு.வரதராசன், வ.சுப.மாணிக்கம் ஆகியோர் தெளிவுரை தரும் முறை இது.
[2] குறளுக்கு உரை தந்த தொல்லாசிரியர்களான மணக்குடவர், பரிதியார், பரிமேலழகர் ஆகிய மூவரும் எண் = எட்டு என்று பொருள் கொள்வர். எனவே, எண்குணத்தைக் கொண்டவர் என்றால் எட்டு குணங்களைக் கொண்டவர் எனப் பொருள் விளக்கம் தர முற்படுவர். அதனால் அவர்களுக்கு எண்குணங்கள் யாவை என்ற விளக்கம் தரும் கட்டாயமும் ஏற்படுகிறது.
(பரிமேலழகர் உரை: எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது). இருப்பினும், சைவாகமத்தில் சிவனின் குணங்களாகக் காட்டப்படுவது சமண அருகரின் குணங்களே என்று ஆய்வாளர்கள் கூறுவர். இது போன்ற தரவுகள் வள்ளுவரைத் தத்தம் சமயப் பின்புலத்துடன் காணும் முயற்சி எனலாம். பௌத்தம் அருளும் எட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழும் குணமுடையவர் என்று பௌத்தருக்கும் வள்ளுவரை உரிமை கொண்டாட வாய்ப்புள்ளது என்பதை மறுக்க இயலாது.
[3] எண்=எளிய என்ற பொருள் கூறப்படுதலும் உண்டு. இம்முறையில், எண்குணத்தான் என்பது 'எளிமைக் குணமுடையவன்' என்று பொருள் கொள்ளப்படுகிறது. எண்பொருள வாகச் செலச்சொல்லி (குறள் 424) என்ற குறள் விளக்கம் போல, மேலும் சில குறள்களையும் (எண்பதத்தால் ஒரா முறைசெய்யா மன்னவன், எண்பதத்தால் எய்தல் எளிதென்ப) காட்டி, 'எண்' எளிய என்ற இப்பொருள் கொள்ளும் முறைக்கு மேற்கோள் காட்டப்படுகிறது. இம்முறையில், எண்குணத்தான் என்பவன் அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடையவன் இறைவன் என்பது பொருள்.
[4] அன்பர்கள் எண்ணும் அல்லது நினைக்கும் குணங்களையுடையவன் அல்லது அன்பர்கள் எண்ணும் குண வடிவை ஏற்பவன் என்ற பொருளில் எண்குணத்தான் என்பதற்கு எண்குணம் கொண்டவர் என்ற பொருள் விளக்கத்தை முதன் முதலில் தந்தவராக காலிங்கர் அறியப்படுகிறார். சாலமன் பாப்பையாவும், எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே என்றுதான் பொருள் கொள்வார்.
மக்களால் நினைப்பதற்குரிய குணங்களை ஏற்பவர்; அதாவது மாந்தர் எண்ணிய குணம் கொண்டவரே இறைவன். கடவுளுக்கு உருவங்களும் குணங்களும் தருபவர் மனிதர்கள்தாம் என்ற அடிப்படை உண்மையை இவ்விளக்கம் முன் வைக்கிறது. கடவுள் என்பவருக்கு வெறும் எட்டு குணங்கள் மட்டும்தானா என்று ஆழ்ந்து சிந்தித்து வினா எழுப்புபவருக்கு அன்பர்கள் எண்ணும் குணவடிவை ஏற்பவன் எண்குணத்தான் என்ற இந்த விளக்கமே ஏற்புடையதாக இருக்கும். எண்குணத்தான் என்பது எண்ணிய குணத்தை உடைய இறைவன் என்ற பொருள் கொள்வோமெனில், அதே கருத்தைக் கம்பரும் கூறுவதைக் காண முடிகிறது.
"ஒன்றே யென்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கிற் பலவேயாம்
அன்றே யென்னின் அன்றேயாம் ஆமே யென்னின் ஆமேயாம்
இன்றே யென்னின் இன்றேயாம் உளதென் றுரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா"
[யுத்த காண்டம், கடவுள் வாழ்த்து, கம்பராமாயணம்]
இதன் பொருள்: கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்; வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார். அஃதாவது கடவுள் எல்லா உயிர்களையும் இயக்கும் ஒரு தனிப் பெரும் ஆற்றல் என்பதால் ஒன்றே என எண்ணுவோருக்கு ஒன்றாக விளங்குகிறார். பல உயிர்களிலும் உறைந்து உள்ளமையால் பல என எண்ணுவோருக்குப் பலவாகத் திகழ்கிறார். கடவுளுக்கு இன்னின்ன தன்மைகள் இல்லை என்றால் இல்லைதான். மாறாகக் கடவுளிடம் இன்னின்ன தன்மைகள் உள்ளன என்றால் உள்ளனவே. கடவுளே இல்லை என்றாலும் இல்லைதான். கடவுள் உள்ளதாகக் கருதினால் உள்ளவனே. இப்படி எல்லாத் தன்மையாகவும் தோன்றும் கடவுள் நிலை பெரிதே. சிற்றறிவுடைய நம்மால் இறைநிலையை உணர்ந்து பிழைக்கும் வழி யாதோ!
இவ்வாறாக, ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லார்க்குப் பல நாமம் சூட்டி அழைப்பதும் மக்கள் வழக்கம் என்பதைக் கருத்தில் கொண்டு இறைவனை உருவமாகவும் அருவமாகவும் உளதாகவும் இலதாகவும் கற்பிக்கும் பாடல்களுள் ஒன்றாகக் கம்பரின் பாடலும் அமைந்துள்ளது. இப்பாடலில் எண்ணுவோர்க்கு எண்ணும் வகையிலானவர் கடவுள் என்கிறார் கம்பர்.
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 299 - 27.08.2025]
#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi

