Tuesday, July 29, 2025

குறள் யாரை வழிநடத்துகிறது ?

குறள் யாரை வழிநடத்துகிறது ?



பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள் எக்காலத்துக்கும் ஏற்ற அறவுரைக் கருத்துகளைக் கொண்டுள்ளது என்பது குறள் அறிந்த அனைவரது கருத்தாகவும் இருக்கிறது.  குறள் கருத்துகள் யாரை நோக்கிச் சொல்லப் படுகிறது? யாருக்கான அறிவுரைகளாக அவை இருக்கின்றன என்பதை திருக்குறளின் அதிகாரங்களின் தலைப்புகள் மூலமே மேலோட்டமாக   எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

அறத்துப்பாலின் துறவு, தவம், நீத்தார் பெருமை, கூடாவொழுக்கம்  போன்ற அதிகாரங்கள் துறவறம் மேற் கொண்டவர்களை நோக்கி  எழுதப்பட்டது என்றாலும், இவற்றில் சில குறட்பாக் கருத்துகள்  ஏனையோருக்கும் பொருந்துபவை.  

இவ்வாறே,   பொருட்பாலின் செங்கோன்மை, கொடுங்கோன்மை, இறைமாட்சி, ஒற்றாடல், அமைச்சு, தூது, நாடு, அரண், படை மாட்சி, படைச் செருக்கு  போன்றவை  ஆட்சியாளர்களுக்கான அறிவுரைகளாக அமைவதைக்  காணலாம்.  இவற்றிலும்  சில குறள்கள் பொது மக்களுக்கும் பொருந்துபவை.  அதே போல மக்கள் அனைவருக்கும்  என எழுதப்பட்ட மற்ற பிற அதிகாரங்களிலும்  வேந்தன் குறித்த குறிப்புகள் ஆங்காங்கே இருப்பதைக் காண இயலும். சற்றொப்ப நூறு குறள்கள் அரசாட்சி செய்பவருக்கானவை.  

காமத்துப் பால் குறள்கள் அனைத்தும்; அவற்றுடன்  இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், பிறனில் விழையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர் ஆகிய அதிகாரங்கள் இல்லறம் மேற்கொள்பவர்களுக்கானவை. இவற்றில் காமத்துப்பால்  குறள்களை ஆண் கோணத்தில் காதலன் கூற்றாகவும்; பெண் கோணத்தில் காதலியின் கூற்றாகவும் அமைத்து எழுதி இருப்பார் வள்ளுவர்.  இல்வாழ்க்கை அதிகாரத்தில் சில குறள்கள் பொதுவானவை.   மாறாக, வாழ்க்கைத் துணைநலம் மற்றும் வரைவின் மகளிர் அதிகாரங்கள் பெண்களின் பண்புகள் குறித்தவை. பிறனில் விழையாமை மற்றும் பெண்வழிச்சேறல் பெண்களுடன் கொள்ளும் தொடர்பு  குறித்து ஆண்களின் கோணத்தில் ஆண்களுக்குக் கூறும் அறிவுரைகளாக  எழுதப்பட்டவை.  ஆகவே, இந்த அதிகாரங்களின்  குறள்கள் பெண்கள் குறித்து இருந்தாலும் அவை  பெண்களுக்கானவை அல்ல, பெண்களுக்குப் பெருமை சேர்ப்பவை  எனக் கூறவும் இயலாது.  

காமத்துப் பாலின்  களவியல் காதலன் காதலிக்காக ஏங்குவதாக அமைந்திருக்க;  காமத்துப் பாலின்  கற்பியல்  குறள்கள் காதலி பிரிந்து சென்ற தனது காதலனை  நினைத்து வருந்துவதாகவே அமைகின்றன. கற்பியலில்  களவியலை  விட இரண்டு மடங்குக்கும் மேலான எண்ணிக்கையில் அதிகாரங்கள் உள்ளதால் பெண்கோணத்தில்  எழுதப்பட்ட குறள்களும் மிகுதி.  அகப்பொருள் கருத்துகள் கொண்ட காமத்துப்பால் அதிகாரங்கள், புறப் பொருள் கருத்துகள் கொண்ட  அறம், பொருள் அதிகாரங்களிலிருந்து  வேறுபட்டு இருப்பதன் காரணத்தால்  வாழ்க்கை நெறி என்று பள்ளிப் பருவத்து மாணவர்களுக்கு அறிமுகப் படுத்த இயலாதவை.  வயது வந்த பின்னர் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை.  காமத்துப்பால்  தவிர்த்து திருக்குறளில் உள்ள பிற அதிகாரங்கள் யாவும் கல்வி, கேள்வி, நட்பு, பண்பு, செல்வம், ஈகை, உண்மை, ஒழுக்கம், அன்பு, குடும்பம், தலைமை, நீதி போன்று பொதுமையான கருத்துக்களுடன் மக்கள் எவருக்கும் பொருந்துபவை; இவற்றின் கருத்துகள் வாழ்வியல்  நெறிகளாக இளம்பருவத்தினருக்கு அறிமுகப் படுத்தப் பட வேண்டியவை.

குறள்கள் யாரை நோக்கி/யாருக்காக எழுதப் பட்டிருக்கின்றன, ஒரு குறள் ஆணைக்  குறிப்பிடுகிறதா/ஆணுக்கானதா/ஆணின் கூற்றாக உள்ளதா, பெண்ணைக்  குறிப்பிடுகிறதா/பெண்ணுக்கானதா/பெண்ணின் கூற்றாக உள்ளதா,  அல்லது பொதுவாக அமைந்துள்ளதா என்று குறள்களை வகைப்படுத்தி அனைத்துக்  குறள்களையும் ஆய்வு செய்வது குறள் எழுதப்பட்ட காலத்தில் மக்களின் சூழ்நிலையையும்  வாழ்வியல் நிலையையும்  அறிய உதவும். எடுத்துக்காட்டாகக் குறள்களை வகைப்படுத்தும் முறை;

பொது:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.   (பொருட்பால்; தெரிந்து தெளிதல்: குறள் - 504)

ஆண்:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.   (பொருட்பால்; குற்றங்கூறாமை: குறள் - 435)

பெண்:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.   (அறத்துப்பால்; வாழ்க்கைத் துணைநலம்: குறள் - 55)

குறளில் ஓர் ஆய்வு:
பொதுமறை என்று சிறப்பிக்கப்படும் திருக்குறளின் 1330 குறள்களையும்   ஆணைக்  குறிப்பிடுகிறதா, பெண்ணைக்  குறிப்பிடுகிறதா அல்லது பொதுவாக அமைந்துள்ளதா என்று குறள்களை வகைப்படுத்தி ஆராய்ந்ததில்;  


 
◆ எவருக்கும் பொருந்தும் வகையில் எழுதப் பட்ட குறள்கள் 61%;  ஆண்களைக் குறிப்பிட்டு ஆணுக்காக எழுதப் பட்டவை அல்லது ஆணின் கோணத்தில் எழுதப்படவை 25%; பெண்களைக் குறிப்பிட்டு ஆணுக்காக எழுதப் பட்டவையோ அல்லது பெண் கோணத்தில் எழுதப் பட்டவையோ 14%.

◆ தனித்தனியாக முப்பாலுக்கும் இதே வகையில் ஒப்பிடுகையில்; அறத்துப்பால் மற்றும் பொருட்பால் குறள்களில்  இதே விழுக்காடுகளின் நீட்சியைக்  காண இயலவில்லை [("அறம்" — பொது: 74%, ஆண்: 23%, பெண்: 3%);  "பொருள்" — பொது:  76%, ஆண்: 22%, பெண்:  2%)].

◆ இந்த வேறுபாட்டிற்குக் காமத்துப்பால் குறள்கள் யாவும் ஆண்கோணத்திலோ அல்லது பெண்கோணத்திலோ எழுதப்பட்டதனால் மட்டும் அல்ல;  காமத்துப்பாலில் பெண்கோணத்தில் எழுதப்பட்ட குறள்கள் சற்றொப்ப மூன்றில் இரண்டு பங்கு (68%) என்று மிகுதியான அளவில் இருக்கும் நிலைதான் காரணம் ("இன்பம்" — பொது: 0%, ஆண்: 32%, பெண்: 68%).

பெண்கள் தங்கள் காதலனின் பிரிவுத்துயர் உரைப்பதாக அதிக அளவில் எழுதப்படும் நோக்கம் பெண்களின் வாழ்க்கையைக்  குடும்பம் கணவன் என்ற வட்டத்திற்குள் அடக்கும் முயற்சியாகக் கொள்ளலாம்.  இதைப் புரிந்து கொண்டால் புற இலக்கியப் பிரிவில் அடங்கும் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், பிறனில் விழையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர்  என்று முப்பாலின் அறம் பொருள் ஆகிய பால்களில் உள்ள பிற அதிகாரங்களிலும் ஏன் ஆண்களை முதன்மை படுத்தி அவர்கள் பார்வையில் பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.
 
◆ இந்த முக்கியமான வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு; காமத்துப் பாலை தவிர்த்து விட்டு அறம்+பொருள் (1,080) குறள்களை மட்டும் கணக்கில் கொண்டால் ("அறம்-பொருள்" — பொது: 75%, ஆண்: 23%, பெண்: 2%) என்ற அளவில் குறள்கள் உள்ளன. அதாவது, பெண்களுக்கான 'குரலாக' 2% குறள்கள் திருக்குறளில் உள்ளன.  

திருக்குறளின் பெண்கள் பற்றிய குறள்களும்;  கற்பியலில் காதலி தனது காதலன் பிரிந்தான் என்ற பிரிவுத் துயருடன் என் அழகு அழிந்தது, உறக்கம் வரவில்லை, தோள் மெலிந்தது, வளை கழன்றது, பசலை நோய் படர்ந்தது,  கண்ணீர் வற்றியது, நடை தளர்ந்தது,  எனது இத்தகைய நிலைக்குக் காரணமான என் காதலர் ஓர் இரக்கமற்ற கொடியவர் என்று குற்றம் சாட்டியவாறு சலிப்பைத் தரும் வகையில் நெஞ்சே, நிலவே, இரவே என்று ஒவ்வொன்றையும் காதலி அழைத்து அரற்றும் புலம்பல்கள்.

எனவே, வள்ளுவர் காலத்தில் பெண்  குடும்பத்திற்கும் கணவனுக்கும் ஏற்ற வகையில் பணிவிடை செய்பவளாக இருக்க வேண்டும், கொழுநன் தொழுதெழுபவளாக, காதலனை  நினைத்து காதல் ஏக்கம் கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற வட்டத்திற்குள் அவர்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருப்பது தெளிவாகிறது.
 

பொதுவாகக் காண்கையில், மக்களுக்கான வாழ்வியல் நெறிகளை வழங்கும் திருக்குறளில் பெரும்பான்மையான குறள்களை, அதாவது 815 குறள்களை  வள்ளுவர் எவருக்கும் பொருந்தும் வகையில் பொதுநோக்கில் அமைத்து எழுதியுள்ளார் என்பதுவே திருக்குறளின் தனிச் சிறப்பு.


[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 294 & 295 -  23.07.2025 & 30.07.2025]

#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi