Tuesday, July 15, 2025

பள்ளிப்பாடங்களில் திருக்குறள்

பள்ளிப்பாடங்களில் திருக்குறள் 


சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் திருக்குறளின் பெருமை பரவலாக  அறியப்பட தமிழார்வலர்கள் பெரும் முயற்சி எடுத்தனர் என்பது வரலாறு. பள்ளிக் கல்வியில் திருக்குறள் இடம் பெற வேண்டும் என்ற முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டன. விடுதலை பெற்ற இந்தியாவின் தமிழ் நாட்டுப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம்பெறத் தொடங்கியது. மனப்பாடப் பகுதியாகப் பல குறள்கள் மாணவர் அறிவுத்திறனையும், வாழ்வியல் விழுமியங்களையும்  உயர்த்தியது. இன்று வாழும், தமிழகப் பள்ளியில் பயின்ற எவருக்குமே அவர்கள் படித்தவற்றில் ஒரு 25 குறள்களாவது நினைவில் தங்கி இருக்கும் என்று அறுதியிட்டுக் கூறலாம். 

இருப்பினும், இன்றைய சமூகத்தில் இளைஞர்களிடம்  ஒழுக்கம் பற்றிய சிந்தனையும் நன்னடத்தையும் குறைந்து வருவதால் ஒழுக்கமுள்ள சமூகத்தை ஏற்படுத்த 6-ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை திருக்குறளைத் தனிப்பாடமாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனுவை ஏற்றுப்  பள்ளிப் பாடத்திட்டத்தில் திருக்குறளைத் தனிப் பாடமாகச் சேர்க்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஏப்ரல் 26, 2016 அன்று உத்தரவிட்டது.

தார்மீகப் பண்புகளைக் கற்றுக்கொடுப்பதில் திருக்குறளுக்கு நிகரான இலக்கியப் படைப்பு உலகில் இல்லை. எனவே திருக்குறளில் உள்ள காமத்துப்பாலைத் தவிர்த்து அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 108 திருக்குறள் அதிகாரங்களும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டு முதலே பாடத்திட்டத்தில் தேவையான விளக்கத்துடன் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் அரசுக்கு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப் பட்டது. 

இதையடுத்து,  2018 -2019 கல்வியாண்டிலிருந்து  கல்வித்துறை வல்லுநர்களால் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, ஆறாம் வகுப்பு முதல்  12 ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடப் புத்தகங்களில் அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங்களில் (பள்ளி மாணவப் பருவ வயதிற்குப் பொருத்தமற்றவையான அதிகாரங்கள் சில தவிர்க்கப் பட்டு) தேர்ந்தெடுக்கப்பட்ட 275 குறள்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. குறள்கள் தக்க விளக்கத்துடன் இடம்பெறுவது மட்டுமின்றி  தேர்வில், 15 முதல் 20 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையையும்  தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. திருக்குறளின் பெருமையைப் பரப்பும் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.  

தமிழ் நாட்டு அரசின் பள்ளிப் பாடத்தில் 12 வகுப்புகளில்  3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  உள்ள தமிழ்ப் பாடத் திட்டத்தில் திருக்குறள்கள் இடம் பெறுகின்றன. 
தமிழ்நாடு அரசுப்பள்ளிக் கல்வித்துறையின் தமிழ்ப் பாடநூல் 1 முதல் 12 வகுப்புகளுக்கான  (https://archive.org/details/1-12_20220309/)  நூல்களைப் பார்வையிட்டதில்  மூன்றாம்  வகுப்பு முதற் கொண்டே திருக்குறள் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் உள்ளது. 
◆ 3 ஆம் வகுப்பிற்கும் 4 ஆம் வகுப்பிற்கும்,  திருக்குறள் கதைகள்  (5 குறள்களுக்கு - 5 படக் கதைகள்) என்ற அளவில்  அறிமுகப் படுத்தப்படுகிறது. 
◆ 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  "பண்புடைமை" அதிகாரத்திலிருந்து  '5 குறள்கள்' கற்பிக்கப் படுகிறது. 
◆ 6, 7, 8, 9 ஆம் வகுப்புகள் பயிலும்  மாணவர்களுக்கு  30 குறள்கள் தனிப் பாடங்களாகவும், இலக்கியம், இலக்கணம் ஆகியவை கற்பிக்கப் படும் பொழுதும், உரைநடை,  கதைகள் இவற்றிலும்  குறள்கள் ஆங்காங்கே இடம் பெறுகின்றன.(எடுத்துக்காட்டாக அணி  இலக்கணப் பாடங்களிலும், கல்வி குறித்த பாடம், அறிஞர்கள்  கட்டுரைகள் ஆகியவற்றிலும் குறள்கள்  இடம் பெறுவதைக் காண முடிகிறது).   
◆ 10, 11, 12 ஆம் வகுப்புகள் பயிலும்  மாணவர்களுக்கு  40 குறள்கள் தனிப் பாடங்களாகவும், இவற்றுடன் இலக்கியம், இலக்கணம் ஆகியவை கற்பிக்கப் படும் பொழுதும், உரைநடை, கதைகள் இவற்றிலும்  குறள்கள் ஆங்காங்கே இடம் பெறுகின்றன. 
அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகாரங்களில்; பெரும்பாலான அதிகாரங்களில், அதிகாரத்திற்கு  2 குறள்கள் வீதம்  குறள்கள்  இடம் பெறுகின்றது, குறைந்தது  அதிகாரம் ஒன்றிற்கு ஒரு குறள்  என்ற அளவிலாவது  பாடத் திட்டத்தில்  குறள்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  கல்வி, அறிவு உடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, வெகுளாமை, செய்ந்நன்றியறிதல், ஒப்புரவறிதல், வலியறிதல், பொருள் செயல்வகை ஆகிய அதிகாரங்களில், ஒவ்வொரு அதிகாரத்திலும்  பாதி அதிகாரம் அல்லது 5 குறள்கள் பாடத்திட்டத்தில் உள்ளது.  

எனவே, பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு 1330 குறட்பாக்களில் 275 குறள்கள் (20% குறள்கள்) அறிமுகமாகி இருக்கும், அவற்றில் 85 குறள்கள் மனப்பாடப்பகுதி செய்யுள்களாகவும்  அமைந்துள்ளன. இத்துடன் நன்னெறி வகுப்புகளிலும் திருக்குறள் கருத்துகள் எடுத்துச் சொல்லப்பட்டால் மேலும் மாணவர்களை நல்வழிப்படுத்தத் திருக்குறள் உதவும் என்பதில் ஐயமில்லை.  

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 293  -  16.07.2025]


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi