Tuesday, July 29, 2025

குறள் யாரை வழிநடத்துகிறது ?

குறள் யாரை வழிநடத்துகிறது ?



பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள் எக்காலத்துக்கும் ஏற்ற அறவுரைக் கருத்துகளைக் கொண்டுள்ளது என்பது குறள் அறிந்த அனைவரது கருத்தாகவும் இருக்கிறது.  குறள் கருத்துகள் யாரை நோக்கிச் சொல்லப் படுகிறது? யாருக்கான அறிவுரைகளாக அவை இருக்கின்றன என்பதை திருக்குறளின் அதிகாரங்களின் தலைப்புகள் மூலமே மேலோட்டமாக   எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

அறத்துப்பாலின் துறவு, தவம், நீத்தார் பெருமை, கூடாவொழுக்கம்  போன்ற அதிகாரங்கள் துறவறம் மேற் கொண்டவர்களை நோக்கி  எழுதப்பட்டது என்றாலும், இவற்றில் சில குறட்பாக் கருத்துகள்  ஏனையோருக்கும் பொருந்துபவை.  

இவ்வாறே,   பொருட்பாலின் செங்கோன்மை, கொடுங்கோன்மை, இறைமாட்சி, ஒற்றாடல், அமைச்சு, தூது, நாடு, அரண், படை மாட்சி, படைச் செருக்கு  போன்றவை  ஆட்சியாளர்களுக்கான அறிவுரைகளாக அமைவதைக்  காணலாம்.  இவற்றிலும்  சில குறள்கள் பொது மக்களுக்கும் பொருந்துபவை.  அதே போல மக்கள் அனைவருக்கும்  என எழுதப்பட்ட மற்ற பிற அதிகாரங்களிலும்  வேந்தன் குறித்த குறிப்புகள் ஆங்காங்கே இருப்பதைக் காண இயலும். சற்றொப்ப நூறு குறள்கள் அரசாட்சி செய்பவருக்கானவை.  

காமத்துப் பால் குறள்கள் அனைத்தும்; அவற்றுடன்  இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், பிறனில் விழையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர் ஆகிய அதிகாரங்கள் இல்லறம் மேற்கொள்பவர்களுக்கானவை. இவற்றில் காமத்துப்பால்  குறள்களை ஆண் கோணத்தில் காதலன் கூற்றாகவும்; பெண் கோணத்தில் காதலியின் கூற்றாகவும் அமைத்து எழுதி இருப்பார் வள்ளுவர்.  இல்வாழ்க்கை அதிகாரத்தில் சில குறள்கள் பொதுவானவை.   மாறாக, வாழ்க்கைத் துணைநலம் மற்றும் வரைவின் மகளிர் அதிகாரங்கள் பெண்களின் பண்புகள் குறித்தவை. பிறனில் விழையாமை மற்றும் பெண்வழிச்சேறல் பெண்களுடன் கொள்ளும் தொடர்பு  குறித்து ஆண்களின் கோணத்தில் ஆண்களுக்குக் கூறும் அறிவுரைகளாக  எழுதப்பட்டவை.  ஆகவே, இந்த அதிகாரங்களின்  குறள்கள் பெண்கள் குறித்து இருந்தாலும் அவை  பெண்களுக்கானவை அல்ல, பெண்களுக்குப் பெருமை சேர்ப்பவை  எனக் கூறவும் இயலாது.  

காமத்துப் பாலின்  களவியல் காதலன் காதலிக்காக ஏங்குவதாக அமைந்திருக்க;  காமத்துப் பாலின்  கற்பியல்  குறள்கள் காதலி பிரிந்து சென்ற தனது காதலனை  நினைத்து வருந்துவதாகவே அமைகின்றன. கற்பியலில்  களவியலை  விட இரண்டு மடங்குக்கும் மேலான எண்ணிக்கையில் அதிகாரங்கள் உள்ளதால் பெண்கோணத்தில்  எழுதப்பட்ட குறள்களும் மிகுதி.  அகப்பொருள் கருத்துகள் கொண்ட காமத்துப்பால் அதிகாரங்கள், புறப் பொருள் கருத்துகள் கொண்ட  அறம், பொருள் அதிகாரங்களிலிருந்து  வேறுபட்டு இருப்பதன் காரணத்தால்  வாழ்க்கை நெறி என்று பள்ளிப் பருவத்து மாணவர்களுக்கு அறிமுகப் படுத்த இயலாதவை.  வயது வந்த பின்னர் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை.  காமத்துப்பால்  தவிர்த்து திருக்குறளில் உள்ள பிற அதிகாரங்கள் யாவும் கல்வி, கேள்வி, நட்பு, பண்பு, செல்வம், ஈகை, உண்மை, ஒழுக்கம், அன்பு, குடும்பம், தலைமை, நீதி போன்று பொதுமையான கருத்துக்களுடன் மக்கள் எவருக்கும் பொருந்துபவை; இவற்றின் கருத்துகள் வாழ்வியல்  நெறிகளாக இளம்பருவத்தினருக்கு அறிமுகப் படுத்தப் பட வேண்டியவை.

குறள்கள் யாரை நோக்கி/யாருக்காக எழுதப் பட்டிருக்கின்றன, ஒரு குறள் ஆணைக்  குறிப்பிடுகிறதா/ஆணுக்கானதா/ஆணின் கூற்றாக உள்ளதா, பெண்ணைக்  குறிப்பிடுகிறதா/பெண்ணுக்கானதா/பெண்ணின் கூற்றாக உள்ளதா,  அல்லது பொதுவாக அமைந்துள்ளதா என்று குறள்களை வகைப்படுத்தி அனைத்துக்  குறள்களையும் ஆய்வு செய்வது குறள் எழுதப்பட்ட காலத்தில் மக்களின் சூழ்நிலையையும்  வாழ்வியல் நிலையையும்  அறிய உதவும். எடுத்துக்காட்டாகக் குறள்களை வகைப்படுத்தும் முறை;

பொது:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.   (பொருட்பால்; தெரிந்து தெளிதல்: குறள் - 504)

ஆண்:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.   (பொருட்பால்; குற்றங்கூறாமை: குறள் - 435)

பெண்:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.   (அறத்துப்பால்; வாழ்க்கைத் துணைநலம்: குறள் - 55)

குறளில் ஓர் ஆய்வு:
பொதுமறை என்று சிறப்பிக்கப்படும் திருக்குறளின் 1330 குறள்களையும்   ஆணைக்  குறிப்பிடுகிறதா, பெண்ணைக்  குறிப்பிடுகிறதா அல்லது பொதுவாக அமைந்துள்ளதா என்று குறள்களை வகைப்படுத்தி ஆராய்ந்ததில்;  


 
◆ எவருக்கும் பொருந்தும் வகையில் எழுதப் பட்ட குறள்கள் 61%;  ஆண்களைக் குறிப்பிட்டு ஆணுக்காக எழுதப் பட்டவை அல்லது ஆணின் கோணத்தில் எழுதப்படவை 25%; பெண்களைக் குறிப்பிட்டு ஆணுக்காக எழுதப் பட்டவையோ அல்லது பெண் கோணத்தில் எழுதப் பட்டவையோ 14%.

◆ தனித்தனியாக முப்பாலுக்கும் இதே வகையில் ஒப்பிடுகையில்; அறத்துப்பால் மற்றும் பொருட்பால் குறள்களில்  இதே விழுக்காடுகளின் நீட்சியைக்  காண இயலவில்லை [("அறம்" — பொது: 74%, ஆண்: 23%, பெண்: 3%);  "பொருள்" — பொது:  76%, ஆண்: 22%, பெண்:  2%)].

◆ இந்த வேறுபாட்டிற்குக் காமத்துப்பால் குறள்கள் யாவும் ஆண்கோணத்திலோ அல்லது பெண்கோணத்திலோ எழுதப்பட்டதனால் மட்டும் அல்ல;  காமத்துப்பாலில் பெண்கோணத்தில் எழுதப்பட்ட குறள்கள் சற்றொப்ப மூன்றில் இரண்டு பங்கு (68%) என்று மிகுதியான அளவில் இருக்கும் நிலைதான் காரணம் ("இன்பம்" — பொது: 0%, ஆண்: 32%, பெண்: 68%).

பெண்கள் தங்கள் காதலனின் பிரிவுத்துயர் உரைப்பதாக அதிக அளவில் எழுதப்படும் நோக்கம் பெண்களின் வாழ்க்கையைக்  குடும்பம் கணவன் என்ற வட்டத்திற்குள் அடக்கும் முயற்சியாகக் கொள்ளலாம்.  இதைப் புரிந்து கொண்டால் புற இலக்கியப் பிரிவில் அடங்கும் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், பிறனில் விழையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர்  என்று முப்பாலின் அறம் பொருள் ஆகிய பால்களில் உள்ள பிற அதிகாரங்களிலும் ஏன் ஆண்களை முதன்மை படுத்தி அவர்கள் பார்வையில் பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.
 
◆ இந்த முக்கியமான வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு; காமத்துப் பாலை தவிர்த்து விட்டு அறம்+பொருள் (1,080) குறள்களை மட்டும் கணக்கில் கொண்டால் ("அறம்-பொருள்" — பொது: 75%, ஆண்: 23%, பெண்: 2%) என்ற அளவில் குறள்கள் உள்ளன. அதாவது, பெண்களுக்கான 'குரலாக' 2% குறள்கள் திருக்குறளில் உள்ளன.  

திருக்குறளின் பெண்கள் பற்றிய குறள்களும்;  கற்பியலில் காதலி தனது காதலன் பிரிந்தான் என்ற பிரிவுத் துயருடன் என் அழகு அழிந்தது, உறக்கம் வரவில்லை, தோள் மெலிந்தது, வளை கழன்றது, பசலை நோய் படர்ந்தது,  கண்ணீர் வற்றியது, நடை தளர்ந்தது,  எனது இத்தகைய நிலைக்குக் காரணமான என் காதலர் ஓர் இரக்கமற்ற கொடியவர் என்று குற்றம் சாட்டியவாறு சலிப்பைத் தரும் வகையில் நெஞ்சே, நிலவே, இரவே என்று ஒவ்வொன்றையும் காதலி அழைத்து அரற்றும் புலம்பல்கள்.

எனவே, வள்ளுவர் காலத்தில் பெண்  குடும்பத்திற்கும் கணவனுக்கும் ஏற்ற வகையில் பணிவிடை செய்பவளாக இருக்க வேண்டும், கொழுநன் தொழுதெழுபவளாக, காதலனை  நினைத்து காதல் ஏக்கம் கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற வட்டத்திற்குள் அவர்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருப்பது தெளிவாகிறது.
 

பொதுவாகக் காண்கையில், மக்களுக்கான வாழ்வியல் நெறிகளை வழங்கும் திருக்குறளில் பெரும்பான்மையான குறள்களை, அதாவது 815 குறள்களை  வள்ளுவர் எவருக்கும் பொருந்தும் வகையில் பொதுநோக்கில் அமைத்து எழுதியுள்ளார் என்பதுவே திருக்குறளின் தனிச் சிறப்பு.


[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 294 & 295 -  23.07.2025 & 30.07.2025]

#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Tuesday, July 15, 2025

பள்ளிப்பாடங்களில் திருக்குறள்

பள்ளிப்பாடங்களில் திருக்குறள் 


சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் திருக்குறளின் பெருமை பரவலாக  அறியப்பட தமிழார்வலர்கள் பெரும் முயற்சி எடுத்தனர் என்பது வரலாறு. பள்ளிக் கல்வியில் திருக்குறள் இடம் பெற வேண்டும் என்ற முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டன. விடுதலை பெற்ற இந்தியாவின் தமிழ் நாட்டுப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம்பெறத் தொடங்கியது. மனப்பாடப் பகுதியாகப் பல குறள்கள் மாணவர் அறிவுத்திறனையும், வாழ்வியல் விழுமியங்களையும்  உயர்த்தியது. இன்று வாழும், தமிழகப் பள்ளியில் பயின்ற எவருக்குமே அவர்கள் படித்தவற்றில் ஒரு 25 குறள்களாவது நினைவில் தங்கி இருக்கும் என்று அறுதியிட்டுக் கூறலாம். 

இருப்பினும், இன்றைய சமூகத்தில் இளைஞர்களிடம்  ஒழுக்கம் பற்றிய சிந்தனையும் நன்னடத்தையும் குறைந்து வருவதால் ஒழுக்கமுள்ள சமூகத்தை ஏற்படுத்த 6-ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை திருக்குறளைத் தனிப்பாடமாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனுவை ஏற்றுப்  பள்ளிப் பாடத்திட்டத்தில் திருக்குறளைத் தனிப் பாடமாகச் சேர்க்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஏப்ரல் 26, 2016 அன்று உத்தரவிட்டது.

தார்மீகப் பண்புகளைக் கற்றுக்கொடுப்பதில் திருக்குறளுக்கு நிகரான இலக்கியப் படைப்பு உலகில் இல்லை. எனவே திருக்குறளில் உள்ள காமத்துப்பாலைத் தவிர்த்து அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 108 திருக்குறள் அதிகாரங்களும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டு முதலே பாடத்திட்டத்தில் தேவையான விளக்கத்துடன் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் அரசுக்கு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப் பட்டது. 

இதையடுத்து,  2018 -2019 கல்வியாண்டிலிருந்து  கல்வித்துறை வல்லுநர்களால் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, ஆறாம் வகுப்பு முதல்  12 ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடப் புத்தகங்களில் அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங்களில் (பள்ளி மாணவப் பருவ வயதிற்குப் பொருத்தமற்றவையான அதிகாரங்கள் சில தவிர்க்கப் பட்டு) தேர்ந்தெடுக்கப்பட்ட 275 குறள்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. குறள்கள் தக்க விளக்கத்துடன் இடம்பெறுவது மட்டுமின்றி  தேர்வில், 15 முதல் 20 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையையும்  தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. திருக்குறளின் பெருமையைப் பரப்பும் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.  

தமிழ் நாட்டு அரசின் பள்ளிப் பாடத்தில் 12 வகுப்புகளில்  3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  உள்ள தமிழ்ப் பாடத் திட்டத்தில் திருக்குறள்கள் இடம் பெறுகின்றன. 
தமிழ்நாடு அரசுப்பள்ளிக் கல்வித்துறையின் தமிழ்ப் பாடநூல் 1 முதல் 12 வகுப்புகளுக்கான  (https://archive.org/details/1-12_20220309/)  நூல்களைப் பார்வையிட்டதில்  மூன்றாம்  வகுப்பு முதற் கொண்டே திருக்குறள் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் உள்ளது. 
◆ 3 ஆம் வகுப்பிற்கும் 4 ஆம் வகுப்பிற்கும்,  திருக்குறள் கதைகள்  (5 குறள்களுக்கு - 5 படக் கதைகள்) என்ற அளவில்  அறிமுகப் படுத்தப்படுகிறது. 
◆ 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  "பண்புடைமை" அதிகாரத்திலிருந்து  '5 குறள்கள்' கற்பிக்கப் படுகிறது. 
◆ 6, 7, 8, 9 ஆம் வகுப்புகள் பயிலும்  மாணவர்களுக்கு  30 குறள்கள் தனிப் பாடங்களாகவும், இலக்கியம், இலக்கணம் ஆகியவை கற்பிக்கப் படும் பொழுதும், உரைநடை,  கதைகள் இவற்றிலும்  குறள்கள் ஆங்காங்கே இடம் பெறுகின்றன.(எடுத்துக்காட்டாக அணி  இலக்கணப் பாடங்களிலும், கல்வி குறித்த பாடம், அறிஞர்கள்  கட்டுரைகள் ஆகியவற்றிலும் குறள்கள்  இடம் பெறுவதைக் காண முடிகிறது).   
◆ 10, 11, 12 ஆம் வகுப்புகள் பயிலும்  மாணவர்களுக்கு  40 குறள்கள் தனிப் பாடங்களாகவும், இவற்றுடன் இலக்கியம், இலக்கணம் ஆகியவை கற்பிக்கப் படும் பொழுதும், உரைநடை, கதைகள் இவற்றிலும்  குறள்கள் ஆங்காங்கே இடம் பெறுகின்றன. 
அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகாரங்களில்; பெரும்பாலான அதிகாரங்களில், அதிகாரத்திற்கு  2 குறள்கள் வீதம்  குறள்கள்  இடம் பெறுகின்றது, குறைந்தது  அதிகாரம் ஒன்றிற்கு ஒரு குறள்  என்ற அளவிலாவது  பாடத் திட்டத்தில்  குறள்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  கல்வி, அறிவு உடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, வெகுளாமை, செய்ந்நன்றியறிதல், ஒப்புரவறிதல், வலியறிதல், பொருள் செயல்வகை ஆகிய அதிகாரங்களில், ஒவ்வொரு அதிகாரத்திலும்  பாதி அதிகாரம் அல்லது 5 குறள்கள் பாடத்திட்டத்தில் உள்ளது.  

எனவே, பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு 1330 குறட்பாக்களில் 275 குறள்கள் (20% குறள்கள்) அறிமுகமாகி இருக்கும், அவற்றில் 85 குறள்கள் மனப்பாடப்பகுதி செய்யுள்களாகவும்  அமைந்துள்ளன. இத்துடன் நன்னெறி வகுப்புகளிலும் திருக்குறள் கருத்துகள் எடுத்துச் சொல்லப்பட்டால் மேலும் மாணவர்களை நல்வழிப்படுத்தத் திருக்குறள் உதவும் என்பதில் ஐயமில்லை.  

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 293  -  16.07.2025]


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Tuesday, July 1, 2025

யாமறிந்தவரையில் . . .

யாமறிந்தவரையில் . . .


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
      இனிதாவ தெங்கும் காணோம்
என்று தமிழின் சிறப்பின் மீது பெருமிதம் கொண்டு பாடும் பாரதியார், அடுத்த பாடலில்;  

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
      வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை, உண்மை
      வெறும் புகழ்ச்சியில்லை. 
தமிழ்ப் புலவர்கள் பற்றியும் பெருமிதம் கொள்கிறார். 

இவ்வாறு பாரதி போலவே வள்ளுவரும் 'நான் அறிந்தவரையில்', 'எனக்குத் தெரிந்தவற்றில்', என்று 'தான் அறிந்தவரையில்' தன் கருத்துகளாகக்  கூறும் குறள்களும் சில உள்ளன.  குறள் கூறும் 1330  கருத்துகளும் வள்ளுவரின் கருத்துக்களே என்றாலும், வள்ளுவர் இதுபோல தன் கருத்து என்ற கோணத்தில் என்ன கருத்துக்களைக் கூறுகிறார் என்று அறியும் ஆவலும் தோன்றுகிறது.  இது போன்ற ஆய்வுகளுக்கு முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களின் தமிழ் இலக்கியத் தொடரடைவு (Concordance for Tamil Literature - http://tamilconcordance.in/index.html) தளம் மிக உதவியாக இருக்கும்.  திருக்குறளில் 'யாம்' என்ற சொல்  13 குறள்களில் 14 முறை (1140ஆம் குறளில் இருமுறை) வருகிறது. 'யாமும்' என்ற சொல் காதலியின் கூற்றாக உள்ள காமத்துப் பாலின் இரு குறள்களில் வருகிறது. 

வள்ளுவர் அறிந்த வரையில்:
குறிப்பு: அடைப்புக் குறிக்குள்  குறள் எண்ணும், குறளுக்கு மு. வரதராசனார் வழங்கிய விளக்க உரையும் கொடுக்கப்பட்டுள்ளது.  
      பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
      மக்கட்பேறு அல்ல பிற.   (61)
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை. 

      யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
      வாய்மையின் நல்ல பிற.   (300)
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை. 

      மக்களே போல்வர் கயவர் அவரன்ன
      ஒப்பாரி யாங்கண்ட தில்.   (1071)
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை. 

நான் அறிந்தவற்றில் அறிவுள்ள நன்மக்களைப் பெறுவதே சிறந்த பேறு; நான் அறிந்தவற்றில் வாய்மையே பண்புகளில் சிறந்த பண்பு;  நான் அறிந்தவற்றில் கயவர்களும் மக்களைப்போலவே  இருக்கும் ஒப்புமை வியக்கத்தக்கது என்கிறார் வள்ளுவர்.  

வள்ளுவர் என்னும் காதலர்:
கூகுள்  இணையத் தேடலின் முடிவாகக் கிடைக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் (Google search results: About 'N'  results, in 'T' seconds) மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற, பெரும்பாலோர் அறிந்த குறளாக தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற வள்ளுவத்தின் முதல் குறள்.   அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது, இல்வாழ்க்கையின் சிறப்பை வலியுறுத்தும் 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்ற குறள். வாழ்க்கை நெறிகளை வகுத்தளிக்க முடிவெடுத்த வள்ளுவர் அறம், பொருள் ஆகியவற்றுடன் இல்லறத்திற்கு வழிகாட்டும் இன்பம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முப்பாலின் மூன்றாம்  பாலான காமத்துப் பாலில்  250 குறட்பாக்களை அருளியுள்ளார்.  

இவற்றுள் 'யாம்' என்று திருவள்ளுவர் தன்னையே ஒரு காதலராகாக்  குறிப்பிட்டு எழுதிய பாடல்களும் உள்ளன.  அவ்வாறு, 'யாம்' என்று வள்ளுவர் குறிப்பிடுவதைக் கீழ்க்காணும் குறள்கள் மூலம் அறிய முடிகிறது. 
 
      நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
      மென்னீரள் யாம்வீழ் பவள்.   (1111)
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.  

      கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
      திருநுதற்கு இல்லை இடம்.   (1123)
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.

      ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
      நீடுக மன்னோ இரா.   (1329)
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. 

      யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
      யாம்பட்ட தாம்படா ஆறு.   (1140)
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

      கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
      தாம்காட்ட யாம்கண் டது.   (1171) 
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
(குறிப்பு: மேலே இறுதியாகக் கொடுக்கப்பட்ட இரு குறள்களும் [1140, 1171] காதலியின் கூற்றாகப் பெரும்பாலும் பொருள் கூறப்படுகிறது.)

இவை தவிர்த்து; 1150, 1245, 1312 'யாம்' என்று காதலி கூற்றாகவும்; 790, 844 'தான் என்ற எண்ணம்', 'தான் என்னும் செருக்கு' போன்ற பொருள்களிலும் "யாம்" என்ற சொல் திருக்குறளில் இடம் பெறுகிறது.  



[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 291-02.07.2025   &   இதழ்: 292  -  09.07.2025]


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi