வாழ்வியல் நெறிகளின்
களஞ்சியமான திருக்குறள் தமிழ் இலக்கியங்களுள் மிகவும் அதிக மொழிபெயர்ப்புகள் கண்ட
இலக்கியம். ஈரடிகளும் ஏழு சொற்களும் கொண்ட 1,330 குறள் வெண்பா செய்யுள்களில் அறம், பொருள்,
இன்பம் என்ற முப்பால் பகுப்புகளில் தமிழரின் மெய்யியலை வள்ளுவர்
வழங்கியிருக்கிறார். உலகில் பலருக்கும், எக்காலத்திலும் பயன்
தரும் நெறிகளாக இருப்பதாலும், பாடல்களின் கவிநயத்தாலும்
பலராலும் விரும்பப்பட்டுப் பல மொழிகளிலும் திருக்குறள் கருத்துகள் மொழி
பெயர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட எந்த ஒரு சமயக் கோட்பாடுகளையும்
முதன்மைப்படுத்தாத வள்ளுவத்திற்கு மற்ற சமய நூல்கள் போன்ற ஆதரவு பெற்ற பரப்புரை
வாய்ப்புகள் இருந்ததில்லை. கடந்த காலத் தமிழக அரசர்களும் கூட திருக்குறளை
முதன்மைப்படுத்தி தங்களுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டதில்லை.
கற்றோர் தமிழராக
இருந்தாலும்,
அல்லது அவர் அயலாராக இருந்தாலும் குறளின் அறிமுகம் கிட்டிய பிறகு,
குறளின் சிறப்பினால் கவரப்பட்டு குறளை பலகாலம் கடத்தியும்
பிறமொழிகளில் பரப்பியும் வந்துள்ளனர். திருக்குறளின் பரந்துபட்ட வளர்ச்சிக்கு
ஐரோப்பியர்களின் இந்திய வருகையே காரணமாக இருந்தது என்றால் அது மிகைப்படுத்துதல்
இல்லை. சமயம் பரப்ப வந்த ஐரோப்பியக் கிறித்துவச் சமயப் பரப்புரையாளர்களும்,
ஆட்சிப் பொறுப்பேற்ற மற்ற பிற ஐரோப்பியர்களும் சமயம் கடந்த
நோக்குடன் திருக்குறளை அணுகிய பொழுது திருக்குறளால் கவரப்பட்டு அதைப் பலர் அறியச்
செய்யும் முயற்சியில் இறங்கினர். அவர்கள் காலத்தில் அறிமுகமாகியிருந்த அச்சு
இயந்திரங்களும், அச்சு நூல் வடிவில் குறளை வெளியிட வேண்டும்
என்ற ஆர்வமும் 19 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு திருக்குறளைப் பொதுமக்கள்
கவனத்திற்குக் கொண்டு வந்தது.
மொழிபெயர்ப்புகளை
வகைப்படுத்துதல்:
முதன்முதலில் 1812-ம்
ஆண்டு அச்சுக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து அச்சில் உள்ள நூலாகத் திகழ்கிறது
திருக்குறள். அத்துடன்,
உலகின் அதிகமாக, 2025ஆம் ஆண்டின் கணக்கின்படி 62 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய
படைப்புகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. பெரும்பாலும் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை
வகைப்படுத்துகையில் இந்திய மொழிகளில் திருக்குறள், ஐரோப்பிய
மொழிகளில் திருக்குறள், ஆசிய மொழிகளில் திருக்குறள் என்று
வகைப்படுத்துவது வழக்கமாக உள்ளது.
கமில் சுவெலபில் தாம்
மேற்கொண்ட ஆய்வுப்படி,
1975-ம் ஆண்டின் முடிவில் திருக்குறள் 20 மொழிகளுக்குக் குறையாமல்
மொழிபெயர்க்கப்பட்டிருந்ததாகத் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார். 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை தரமணியில்
இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 58
பழங்குடியின மொழிகள் உட்பட 102 மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கிவிட்டதாக
அறிவித்தது. ஆங்கில மொழிபெயர்ப்புகளின்
எண்ணிக்கை தோராயமாக 100க்கும் மேல் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
இந்த 2025
ஆம் ஆண்டின் கணக்குப்படி;
உலக அளவில் 345 முறை 61 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது; நிறைவுசெய்யப்பட்ட மொத்த மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கை 61 (இந்திய மொழிகள்: 29, வெளிநாட்டு மொழிகள்:35)
(ஆய்வு நோக்கில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உலகப் பரவலாக்கலும். ச.பார்த்தசாரதி, பேரவையின் 38 வது தமிழ்விழா மலர், ஜூலை 2025; பக்கம் : 104-105. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை-கேரொலைனா தமிழ்ச்சங்கம்.)
இந்திய மொழிகளில்:
அவாதி, அஸ்ஸாமி,
இந்தி, உருது, ஒரியா,
கரோ, கன்னடம்,
காஷ்மீரி, குஜராத்தி, கொங்கணி,
கொடவா, கொரகா,
சந்தாலி, சமஸ்கிருதம், சௌராஷ்ட்ரா,
டோக்ரி, துளு,
தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி,
படுகா, பிராஹுவி,
போடா, போஜ்பூரி, மணிப்பூரி,
மராத்தி, மலையாளம், மைத்திலி,
வக்ரிபோலி, வங்காளம்
ஆகிய 30 மொழிகளிலும்;
ஐரோப்பிய
மொழிகளில்:
ஆங்கிலம், பிரஞ்சு,
ஜெர்மன், ரஷ்யன், இலத்தீன்,
போலிஷ், செக், டேனிஷ்,
டச்சு, ஃபின்னிஷ், இத்தாலியன்,
நார்வேஜியன், ஸ்வீடிஷ், போர்த்துகீசியம்,
ஸ்பானிஷ், ஹங்கேரியன், கிரேக்கம்
ஆகிய மொழிகளிலும்;
ஆசிய மொழிகளில்:
அரபு, மலாய்,
சீனம், ஃபிஜியன், ஜப்பானியம்,
கொரியன், சிங்களம், பர்மியம்
, தாய், கரோ, இந்தோனேசியம்,
கம்போடியம் ஆகிய
மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.
பிறமொழியில் குறளின்
மொழிபெயர்ப்பு என்றால் இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மலையாள மொழியில்
திருக்குறள் முதலில் 1595 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
மலையாள மொழியில் குறளின் 16 ஆம் நூற்றாண்டு மொழிபெயர்ப்பு நூல் ஓலைச்சுவடியாகக்
கிடைத்திருக்கிறது. இருப்பினும்,
இந்தியமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு 19 ஆம் நூற்றாண்டில்தான்
அதிக எண்ணிக்கையில் வெளியாகத் துவங்கின. இந்திய மொழிகளிலேயே மலையாளத்தில்தான் அதிக
எண்ணிக்கையில் திருக்குறள் 16 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள்
மொழிபெயர்க்கப்பட்ட முதல் ஐரோப்பிய மொழி இலத்தீன் மொழியாகும். திருக்குறளை 1730
ஆம் ஆண்டு இலத்தீனில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர் என்று தமிழர்களால்
அறியப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine
Joseph Beschi, 1680 — 1747) என்ற இத்தாலிய நாட்டுக் கத்தோலிக்க
கிறித்தவ சமயப் பரப்புரையாளர். இவர் குறளின் காமத்துப்பால் பகுதி சமய
பரப்புரையாளர் படிக்க ஏற்றதல்ல என்ற கருத்தைக் கொண்டிருந்ததால், குறளின் அறம், பொருள் பிரிவுகளை மட்டும் மொழி
பெயர்த்துவிட்டு, காமத்துப்பாலைத் தவிர்த்து விட்டார்.
ஐரோப்பிய மொழிகளில்
ஆங்கிலத்தில்தான் திருக்குறள் அதிக முறையாக 100க்கும் மேற்பட்ட முறை மொழி
பெயர்க்கப்பட்டுள்ளது. நதானியேல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி (Nathaniel Edward
Kindersley) என்பவரால் 1794 இல் ஆங்கிலத்தில் முதலில் மொழி
பெயர்க்கப்பட்டது. அவர் ஒரு சில குறள்களை மொழிபெயர்த்துத் தான் எழுதிய
‘ஸ்பெசிமென்ஸ் ஆஃப் இந்து லிட்ரேச்சர்’ (Specimens of Hindoo Literature) என்ற நூலில், ‘எக்ஸ்ட்ராக்ட்ஸ் ஃப்ரம் தி
திருவள்ளுவர் குறள்’ (Extracts from the Teroo-Vaulaver Kuddul, or, The
Ocean of Wisdom) என்ற தலைப்பு கொண்ட அத்தியாயத்தில்
கொடுத்திருந்தார்.
பின்னர், பிரான்சிஸ்
வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis), 1812 ஆம் ஆண்டு தான்
எழுதிய ‘திருக்குறள் ஆன் விர்ச்யூ வித் கமெண்ட்டரி’ (Thirukural on Virtue
(in verse) with Commentary) 120 குறள்களை மொழிபெயர்த்து
வெளியிட்டார். தொடர்ந்து, 1840ஆம் ஆண்டில் வில்லியம் ஹென்றி
ட்ரூ (William Henry Drew) முதல் 630 குறட்பாக்களை
மொழிபெயர்த்து வெளியிட்டார். பின்னர், 1885 ஆம் ஆண்டில் ஜான்
லாசரஸ் (John Lazarus) விடுபட்ட பகுதியை மொழிபெயர்த்ததுடன்,
வில்லியம் ஹென்றி ட்ரூ மொழிபெயர்த்தவற்றையும் மேம்படுத்தி
திருக்குறள் மொழிபெயர்ப்பை முழுமையாக்கினார். சார்லஸ் கோவர்(Charles E.
Gover) 1872 ஆம் ஆண்டில் ஒரு சில குறள்களையும், எட்வர்ட் ஜூவிட் ராபின்சன் (Edward Jewitt Robinson) 1873ஆம் ஆண்டிலும் காமத்துப்பால் தவிர்த்துப் பிற பகுதிகளையும் எனக்
குறளின் முழுமையுறாத ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டனர்.
இவ்வாறு முழுமையற்ற
வகையில் பகுதி மொழிபெயர்ப்புகளாக வெளிவந்து கொண்டிருந்த திருக்குறள்
மொழிபெயர்ப்புகளுக்குப் பிறகு,
முதல் முறையாகத் தனி ஒரு மொழிபெயர்ப்பாளரால் முழுமையாக ஜி.யு. போப்
அவர்களால் 1886ஆம் ஆண்டில் திருக்குறள் ‘எ கலெக்க்ஷன் ஆஃப் தி இங்லீஷ்
டிரான்ஸ்லேஷன் ஆஃப் திருக்குறள்’ (A Collection of the English Translation
of Thirukural) என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜி.யு. போப்
செய்த மொழிபெயர்ப்பு உலக அளவில் திருக்குறளைக் கொண்டு சேர்த்தது. அவருக்குப் பிறகு
பிறகு 30 ஆண்டுகள் கழித்து வ. வே. சு. ஐயர் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பை
வெளியிட்டார். கே. எம். பாலசுப்பிரமணியம், சுத்தானந்த
பாரதியார், ஆ. சக்கிரவர்த்தி, மு. சி.
பூரணலிங்கம் பிள்ளை, சி. இராஜகோபாலசாரி எனப் பலர்
திருக்குறளை அதன் பிறகு முழுமையாகவோ அல்லது பகுதி மொழிபெயர்ப்புகளாகவோ
வெளியிட்டனர்.
இவ்வாறுமுழுமையாகவோ, பகுதி
மொழிபெயர்ப்பாகவோ திருக்குறள் ஆங்கில
மொழிபெயர்ப்புகள் இன்றைய நாள் வரை
நூற்றுக்கும் மேற்பட்ட முறையில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.
அண்மையில் 2021ஆம் ஆண்டு அமெரிக்கத் தமிழ் ஆர்வலர் தாமஸ் ஹிட்டோஷி புருக்ஸ்மா
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவற்றில் சற்றொப்ப 37+
மொழிபெயர்ப்புகள் முழுமையானவை எனக் கருதப்படுகிறது. இதுவரை அறிவித்த திருக்குறள்
மொழிபெயர்ப்புகள் தவிர்த்து மீதம் உள்ள 52 மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டால்
உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளிலும்
மொழிபெயர்க்கப்பட்ட நிலையைத் திருக்குறள் அடையும் என்பது வலைத்தமிழ் தரும்
மதிப்பீடு (திருக்குறள் மொழிபெயர்ப்புகள் முடிந்த பட்டியல் - 2025).
மொழிபெயர்ப்புகள்
குறித்த மதிப்பீடுகள்:
திருக்குறளுக்கு உரை
எழுதுவோரின் பண்பாட்டுப் பின்னணி அவரது உரைகளில் எதிரொலிப்பது போல, மொழிபெயர்ப்பாளர்களின்
பண்பாட்டுப் பின்னணியும் மொழிபெயர்ப்புகளில் எதிரொலிப்பது உண்டு. மொழிபெயர்ப்புகள்
செய்யுள் வடிவிலோ, அல்லது உரைநடையாகவோ அல்லது இரண்டும் கலந்த
வகையிலோ அமைவதும் உண்டு. ஆரம்பக் காலத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் தமிழைத்
தாய்மொழியாகக் கொண்டவர்களால் பிறிதொரு மொழியிலோ, அல்லது அயல்
மொழிக்காரர்கள் தமிழ் கற்றறிந்து தங்கள் மொழியில் மொழி பெயர்ப்பதாகவோ அமைந்து
வந்தது. ஜி.யு. போப் ஆங்கில மொழிபெயர்ப்பிற்குப் பிறகு, ஆங்கிலத்திலிருந்து
பிறமொழிகளுக்கு மொழிபெயர்ப்பது அதிகரித்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில்தான் குறள்
பல தெற்காசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் சில அதுவரை வெளிவந்த
குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தழுவியே செய்யப்பட்டவை ஆகும்.
திருக்குறள் மொழிபெயர்ப்பு
நூல்கள் அனைத்தும் உரை விளக்கங்களாக மட்டுமே உள்ளன என்று 2015ஆம் ஆண்டு டெல்லியின்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “உலக மொழிகளில் திருக்குறள்
மொழிபெயர்ப்புகள்“ என்ற பொருண்மையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட
கட்டுரைகள் கூறுகின்றன. ஜி.யு.போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையாகக்
கொண்டு வெளிவந்துள்ள மொழிபெயர்ப்பு நூல்களைச் சுட்டிக் காட்டியதுடன், இதுவரை
மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்கள் அனைத்தும் மூல நூலுடன் நெருக்கமாக அமைந்துள்ளதே
தவிர, அதில் கவிதை நயம் போன்றவை வெளிப்படவில்லை என்றும்,
திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் உரை விளக்கங்களாக
மட்டுமே கருத முடியும் ஆய்வாளர்கள் கருதியுள்ளார்கள். இக்கட்டுரைகள் நூல்
வடிவிலும் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது.
“கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்”
என்று இடைக்காடரும்
“அணுவைத் துளைத்தேழ்
கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்”
என்று ஒளவையாரும்
திருக்குறளின் பொருள்
பொதிந்த நுண்மையைப் பாராட்டியுள்ளனர். இச்சிறப்பிற்கு ஏழு சீர்களுக்குள் கூறவந்த
அனைத்தையும் அடக்கிவிடும் ஆற்றல் கொண்ட குறள் வெண்பா அமைப்பே காரணம். எனினும்
இச்சிறப்பே பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் பொழுது மொழி நடையின் அழகு
குறையாமல் பாடல் வடிவில் குறளைக் கொண்டு செல்ல சிக்கலாகவும் அமைந்துவிடுவதாகவும்
கருதப்படுகிறது.
‘குறள் ஒரு சீர்மை உடையது.
தெளிவாக உணர்ந்து அறியத்தக்கது. ஒருமைப்பாட்டினைக் கொண்டிருந்த ஒரு நாகரிகத்தைச்
சித்தரித்துக் காட்டும் ஓர் ஒருங்கு இணைந்த ஓவியம்’ என்று திருக்குறளை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி.யு.போப் குறிப்பிடுகிறார். மொழிபெயர்ப்பு
முயற்சிகளில் திருக்குறள் தனது கவிதைச் சிறப்பையும் கவர்ச்சியையும் இழந்துவிடுவதாக
மொழிபெயர்ப்பாளர்களும் தமிழில் திருக்குறள் அறிந்தவர்களும் உணர்கிறார்கள். குறளின்
செய்யுள் அழகையும் பாடலின் கருத்துச் சிறப்பையும் மொழிபெயர்ப்பதைச் சவால்
கொண்டதாகவே சுவெலபில் அவர்களும் குறிப்பிடுகிறார். அத்துடன், குறளை
மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்வதைக் குறித்துக் கூறுகையில், “நடையழகிலோ சொல்வன்மையிலோ எந்த ஒரு மொழிபெயர்ப்பும் திருக்குறளின் தமிழ்
மூலத்திற்கு இணையாக இருக்க இயலாது” திருக்குறள் கூறும் உண்மையான பொருளை எந்த ஒரு
மொழிபெயர்ப்பைக் கொண்டும் அறிய முடியாது என்றும் குறளின் தமிழ் மூலத்தைப்
படிப்பதன் வாயிலாக மட்டுமே வள்ளுவர் கூறிய ஆழ்பொருளை அறிய முடியும் என்றும்
சுவெலபில் கூறுகிறார். இருப்பினும் அண்மைய வெளியீடான தாமஸ் ஹிட்டோஷி புருக்ஸ்மா
திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நடையில் அமைந்திருப்பதாகப் பாராட்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
References:
https://en.wikipedia.org/wiki/Kural
https://en.wikipedia.org/wiki/Tirukkural_translations
https://en.wikipedia.org/wiki/Tirukkural_translations_into_English
https://en.wikipedia.org/wiki/List_of_translators_into_English
https://en.wikipedia.org/wiki/List_of_Tirukkural_translations_by_language
https://www.valaitamil.com/thirukural-translation-completed-2025_21687.html
இற்றைப்படுத்தப்பட்ட
கட்டுரை (2025 ஜூன்)
நன்றி : சிறகு - http://siragu.com/திருக்குறள்-மொழிபெயர்ப்/
அக்டோபர் 15,
2022
#சிறகு, #திருக்குறள், #Themozhi