குறள் தரும் சொற்சுவையும் பொருட்சுவையும்: “யாதெனின். . . யாதெனின். . . “
குறள் தரும் சொற்சுவையும் பொருட்சுவையும்
“யாதெனின். . . யாதெனின். . . “
திருக்குறளில் 11 குறள்கள் "யாதெனின்" என்று கேள்வி எழுப்பி, குறிப்பிட்ட ஒரு கருத்தை "எது என்றால்" என்று விளக்கும் வகையில் அமைகின்றன. இக்கட்டுரையின் குறள்களுக்கு மு. வரதராசனார் எழுதிய விளக்கவுரை எடுத்தாளப்பட்டுள்ளது.
கொல்லாமை என்பதை வலியுறுத்த விரும்பும் வள்ளுவர் அருளல்லாது எது என்றால், அறச்செயல் எது என்றால், நல்லொழுக்கம் எது என்றால் என்று பல்வேறு வகைகளில் கேள்வி எழுப்பி, கொல்லாமை என்பதுதான் நாம் பின்பற்ற வேண்டிய நல்லறம் என்று விளக்குகிறார்.
அருளல்லாது எது என்றால்;
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல். [254]
அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல்; அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
அறச்செயல் எது என்றால்;
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். [321]
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
நல்லொழுக்கம் எது என்றால்;
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. [324]
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
இதே முறையில், மற்ற நல்லொழுக்கங்களான கள்ளாமை, தீங்கு செய்யாமை ஆகியவற்றையும் எது என்ற கேள்வி எழுப்பி பதில் கூறும் முறையில் விளக்குகிறார்.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். [178]
ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். [291]
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
உயிரைக் கொல்லுதல், ஒருவர் பொருளைக் களவாடுதல், தீங்கு செய்தல் இவற்றைத் தவிர்க்கும் நோக்கில் எது என்றால் என்று கேள்வி எழுப்பி விளக்கும் வகையில் இக்குறள்கள் அமைந்திருக்கின்றன.
சிறந்த நட்பு எது என்றால்; நட்பிற்கு இலக்கணமாக அமைவது; மாறுபாடு இல்லாத நெஞ்சத்துடன் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அரவணைத்துச் செல்லும் நிலையும்; நெடுநாள் நட்பின் காரணமாக ஒருவர் உரிமையுடன் நமக்கு ஏற்புடையது அல்லாத ஒரு செயலைச் செய்துவிட்டாலும் நட்பு கருதி அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதுமாகும்.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. [789]
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. [801]
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.
அறியாமை எது என்றால்;
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். [831]
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. [844]
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.
சான்றோர்கள் பண்பு எது என்றால்;
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல். [986]
சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.
வறுமையின் கொடுமை எது என்றால்;
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. [1041]
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
"அரியது கேட்கின் வரிவடி வேலோய்" என்று ஔவையார் பாடல் ஒன்று கேள்விக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதும், தொன்றுதொட்டு அக்காலம் முதல் இக்காலத் திரையிசைப் பாடல்கள் வரை கேள்வி கேட்டு பதில் சொல்லும் வகையிலே அமைந்திருப்பதும் தமிழ் மொழியில் யாவரும் விரும்பும் தனிச்சிறப்பு கொண்ட ஓர் இலக்கியக் கூறு எனலாம்.
நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 288-290
25/6/2025 குறள் தரும் சொற்சுவையும் பொருட்சுவையும்: “யாதெனின். . . யாதெனின். . . “
#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi