Friday, June 27, 2025

Ranking Thirukkural by Web Popularity: Analyzing Google Search Results with Scholarly Rigor

Ranking Thirukkural by Web Popularity: Analyzing Google Search Results with Scholarly Rigor

—Dr. Jothi S. Themozhi 



The Digital Dilemma: Can Search Data Reflect Literary Fame?
In a bold attempt to map the popularity of all 1,330 Thirukkural couplets, one researcher turns to Google—an unconventional yet data-rich platform. The plan? Use Google search result counts to rank each couplet by popularity. 

But this method prompts a deeper, critical question:
What does the “number of results” from a Google search actually measure?
To design a methodologically sound study, researchers must first understand the limitations and nuances of using this digital data source.

Search Strategies: ‘All Results’ vs. ‘Verbatim’
The first major decision is choosing the search method. Google offers two fundamentally different modes:
All Results (Default):
          -Finds synonyms
          -Corrects spelling
          -May omit words
          -Tailors results based on user history and location
          -Example result count: 4,500,000

Verbatim Mode:
          -Searches exact phrase as typed
          -No synonyms or auto-corrections
          -Offers consistent, reproducible results
          -Example result count: 120,000
Choosing ‘Verbatim’ mode and using exact phrases in quotes (e.g., "exact couplet text") is essential for data reliability.

The Myth of Precision: What Google Really Tells Us
Google’s result count, often mistaken for a hard metric, is a broad estimate based on how many web pages it has indexed with the search terms. While appealing for its scale, this number comes with substantial caveats:
Advantages:
          -Easily accessible
          -Reflects global web presence
          -Encourages scalable analysis

Limitations:
          -Highly imprecise estimate
          -Affected by hidden algorithms
          -Varies by user and geography
          -Reflects web presence—not real-world popularity
          -Results fluctuate frequently

Six Hidden Pitfalls in Search-Based Literary Analysis:
1. Estimated, Not Exact
Google clearly warns users that its result counts are only rough approximations—unsuitable as a stand-alone metric in serious research.
2. Algorithmic Influence
Over 200 unseen ranking factors affect search outcomes. A couplet could rank high due to SEO tricks rather than genuine popularity.(SEO stands for Search Engine Optimization)
3. Personalization Bias
Results vary depending on who searches, where, and when. This makes data replication incredibly difficult.
4. Web Presence ≠ Popularity
A widely duplicated couplet might dominate result counts—even if few people actually read or value it.
5. Volatile Data Landscape
Google updates its index continuously. A search at 9 AM may yield very different results than the same search at 4 PM.
6. The Ecological Fallacy
Inferring individual-level insights from aggregate web data can be misleading. Web frequency does not equal cultural significance.

Building a More Credible Research Framework:
Despite its flaws, Google search data can still serve as a component of a larger analytical framework. A few strategic enhancements can boost its credibility:
1. Precision in Search Technique
Use ‘Verbatim’ mode exclusively. Enclose each couplet in double quotes for consistent phrasing and phrase order.
2. Standardize the Research Environment
Combat personalization by using:
          -Incognito browsing
          -VPN to standardize location (A VPN, or Virtual Private Network, creates a secure, encrypted connection over the internet.)
          -Consistent logging of search date and time
3. Embrace the Imperfections
Clearly state in the final paper that data reflects estimated web presence. Collect multiple data points to analyze consistency (average and standard deviation).
4. Triangulate Your Metrics
Combine Google data with:
          -Literary citation frequency (academic papers, news, blogs)
          -Surveys/interviews with Tamil scholars
          -Appearance in school curricula or anthologies
This multipronged strategy offers richer, more reliable conclusions about each couplet’s cultural relevance.

Conclusion: Search Wisely, Analyze Deeply
Google is a powerful but slippery tool for literary analysis. Alone, it risks misrepresentation. With rigor and triangulation, however, it can help shine new light on ancient wisdom like the Thirukkural—revealing how digital footprints mirror enduring textual resonance.

Thanks to : Thamizhanangu-July 2025 - (Pages : 15-18)

"Ranking Thirukkural by Web Popularity: Analyzing Google Search Results with Scholarly Rigor"
— Dr. Jothi S. Themozhi
https://archive.org/details/thamizhanangu-july-2025/page/15/mode/2up


#தமிழணங்கு,  #திருக்குறள், #English,  #Themozhi 

Thursday, June 26, 2025

திருக்குறள் மொழிபெயர்ப்புகள்

வாழ்வியல் நெறிகளின் களஞ்சியமான திருக்குறள் தமிழ் இலக்கியங்களுள் மிகவும் அதிக மொழிபெயர்ப்புகள் கண்ட இலக்கியம். ஈரடிகளும் ஏழு சொற்களும் கொண்ட 1,330 குறள் வெண்பா செய்யுள்களில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் பகுப்புகளில் தமிழரின் மெய்யியலை வள்ளுவர் வழங்கியிருக்கிறார். உலகில் பலருக்கும், எக்காலத்திலும் பயன் தரும் நெறிகளாக இருப்பதாலும், பாடல்களின் கவிநயத்தாலும் பலராலும் விரும்பப்பட்டுப் பல மொழிகளிலும் திருக்குறள் கருத்துகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட எந்த ஒரு சமயக் கோட்பாடுகளையும் முதன்மைப்படுத்தாத வள்ளுவத்திற்கு மற்ற சமய நூல்கள் போன்ற ஆதரவு பெற்ற பரப்புரை வாய்ப்புகள் இருந்ததில்லை. கடந்த காலத் தமிழக அரசர்களும் கூட திருக்குறளை முதன்மைப்படுத்தி தங்களுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டதில்லை.
 
கற்றோர் தமிழராக இருந்தாலும், அல்லது அவர் அயலாராக இருந்தாலும் குறளின் அறிமுகம் கிட்டிய பிறகு, குறளின் சிறப்பினால் கவரப்பட்டு குறளை பலகாலம் கடத்தியும் பிறமொழிகளில் பரப்பியும் வந்துள்ளனர். திருக்குறளின் பரந்துபட்ட வளர்ச்சிக்கு ஐரோப்பியர்களின் இந்திய வருகையே காரணமாக இருந்தது என்றால் அது மிகைப்படுத்துதல் இல்லை. சமயம் பரப்ப வந்த ஐரோப்பியக் கிறித்துவச் சமயப் பரப்புரையாளர்களும், ஆட்சிப் பொறுப்பேற்ற மற்ற பிற ஐரோப்பியர்களும் சமயம் கடந்த நோக்குடன் திருக்குறளை அணுகிய பொழுது திருக்குறளால் கவரப்பட்டு அதைப் பலர் அறியச் செய்யும் முயற்சியில் இறங்கினர். அவர்கள் காலத்தில் அறிமுகமாகியிருந்த அச்சு இயந்திரங்களும், அச்சு நூல் வடிவில் குறளை வெளியிட வேண்டும் என்ற ஆர்வமும் 19 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு திருக்குறளைப் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தது.
 
மொழிபெயர்ப்புகளை வகைப்படுத்துதல்:
முதன்முதலில் 1812-ம் ஆண்டு அச்சுக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து அச்சில் உள்ள நூலாகத் திகழ்கிறது திருக்குறள். அத்துடன், உலகின் அதிகமாக,  2025ஆம் ஆண்டின் கணக்கின்படி 62 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய படைப்புகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. பெரும்பாலும் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை வகைப்படுத்துகையில் இந்திய மொழிகளில் திருக்குறள், ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள், ஆசிய மொழிகளில் திருக்குறள் என்று வகைப்படுத்துவது வழக்கமாக உள்ளது.
 
கமில் சுவெலபில் தாம் மேற்கொண்ட ஆய்வுப்படி, 1975-ம் ஆண்டின் முடிவில் திருக்குறள் 20 மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டிருந்ததாகத் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார்.  2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 58 பழங்குடியின மொழிகள் உட்பட 102 மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கிவிட்டதாக அறிவித்தது. ஆங்கில  மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை தோராயமாக 100க்கும் மேல் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. 

இந்த 2025 ஆம் ஆண்டின் கணக்குப்படி
உலக அளவில் 345 முறை 61 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது; நிறைவுசெய்யப்பட்ட மொத்த மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கை 61 (இந்திய மொழிகள்: 29, வெளிநாட்டு மொழிகள்:35)
(ஆய்வு நோக்கில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உலகப் பரவலாக்கலும்.  ச.பார்த்தசாரதி, பேரவையின் 38 வது தமிழ்விழா மலர், ஜூலை 2025; பக்கம் : 104-105.   வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை-கேரொலைனா தமிழ்ச்சங்கம்.)
 
இந்திய மொழிகளில்:
அவாதி, அஸ்ஸாமி, இந்தி,  உருது, ஒரியா,
கரோ, கன்னடம், காஷ்மீரி, குஜராத்தி, கொங்கணி,
கொடவா, கொரகா, சந்தாலி, சமஸ்கிருதம், சௌராஷ்ட்ரா,
டோக்ரி, துளு, தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி,
படுகா, பிராஹுவி, போடா, போஜ்பூரி, மணிப்பூரி,
மராத்தி,  மலையாளம், மைத்திலி, வக்ரிபோலி, வங்காளம்
ஆகிய 30 மொழிகளிலும்;
 
ஐரோப்பிய மொழிகளில்:
ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ரஷ்யன், இலத்தீன், போலிஷ், செக், டேனிஷ், டச்சு, ஃபின்னிஷ், இத்தாலியன், நார்வேஜியன், ஸ்வீடிஷ், போர்த்துகீசியம், ஸ்பானிஷ், ஹங்கேரியன், கிரேக்கம் ஆகிய மொழிகளிலும்;
 
ஆசிய மொழிகளில்:
அரபு, மலாய், சீனம், ஃபிஜியன், ஜப்பானியம், கொரியன், சிங்களம், பர்மியம் , தாய், கரோ, இந்தோனேசியம், கம்போடியம் ஆகிய  மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.
 
பிறமொழியில் குறளின் மொழிபெயர்ப்பு என்றால் இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மலையாள மொழியில் திருக்குறள் முதலில் 1595 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மலையாள மொழியில் குறளின் 16 ஆம் நூற்றாண்டு மொழிபெயர்ப்பு நூல் ஓலைச்சுவடியாகக் கிடைத்திருக்கிறது. இருப்பினும், இந்தியமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு 19 ஆம் நூற்றாண்டில்தான் அதிக எண்ணிக்கையில் வெளியாகத் துவங்கின. இந்திய மொழிகளிலேயே மலையாளத்தில்தான் அதிக எண்ணிக்கையில் திருக்குறள் 16 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 

 
திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட முதல் ஐரோப்பிய மொழி இலத்தீன் மொழியாகும். திருக்குறளை 1730 ஆம் ஆண்டு இலத்தீனில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர் என்று தமிழர்களால் அறியப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi, 1680 — 1747) என்ற இத்தாலிய நாட்டுக் கத்தோலிக்க கிறித்தவ சமயப் பரப்புரையாளர். இவர் குறளின் காமத்துப்பால் பகுதி சமய பரப்புரையாளர் படிக்க ஏற்றதல்ல என்ற கருத்தைக் கொண்டிருந்ததால், குறளின் அறம், பொருள் பிரிவுகளை மட்டும் மொழி பெயர்த்துவிட்டு, காமத்துப்பாலைத் தவிர்த்து விட்டார்.
 
ஐரோப்பிய மொழிகளில் ஆங்கிலத்தில்தான் திருக்குறள் அதிக முறையாக 100க்கும் மேற்பட்ட முறை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நதானியேல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி (Nathaniel Edward Kindersley) என்பவரால் 1794 இல் ஆங்கிலத்தில் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது. அவர் ஒரு சில குறள்களை மொழிபெயர்த்துத் தான் எழுதிய ‘ஸ்பெசிமென்ஸ் ஆஃப் இந்து லிட்ரேச்சர்’ (Specimens of Hindoo Literature) என்ற நூலில், ‘எக்ஸ்ட்ராக்ட்ஸ் ஃப்ரம் தி திருவள்ளுவர் குறள்’ (Extracts from the Teroo-Vaulaver Kuddul, or, The Ocean of Wisdom) என்ற தலைப்பு கொண்ட அத்தியாயத்தில் கொடுத்திருந்தார்.
 
பின்னர், பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis), 1812 ஆம் ஆண்டு தான் எழுதிய ‘திருக்குறள் ஆன் விர்ச்யூ வித் கமெண்ட்டரி’ (Thirukural on Virtue (in verse) with Commentary) 120 குறள்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். தொடர்ந்து, 1840ஆம் ஆண்டில் வில்லியம் ஹென்றி ட்ரூ (William Henry Drew) முதல் 630 குறட்பாக்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். பின்னர், 1885 ஆம் ஆண்டில் ஜான் லாசரஸ் (John Lazarus) விடுபட்ட பகுதியை மொழிபெயர்த்ததுடன், வில்லியம் ஹென்றி ட்ரூ மொழிபெயர்த்தவற்றையும் மேம்படுத்தி திருக்குறள் மொழிபெயர்ப்பை முழுமையாக்கினார். சார்லஸ் கோவர்(Charles E. Gover) 1872 ஆம் ஆண்டில் ஒரு சில குறள்களையும், எட்வர்ட் ஜூவிட் ராபின்சன் (Edward Jewitt Robinson) 1873ஆம் ஆண்டிலும் காமத்துப்பால் தவிர்த்துப் பிற பகுதிகளையும் எனக் குறளின் முழுமையுறாத ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டனர்.
 
இவ்வாறு முழுமையற்ற வகையில் பகுதி மொழிபெயர்ப்புகளாக வெளிவந்து கொண்டிருந்த திருக்குறள் மொழிபெயர்ப்புகளுக்குப் பிறகு, முதல் முறையாகத் தனி ஒரு மொழிபெயர்ப்பாளரால் முழுமையாக ஜி.யு. போப் அவர்களால் 1886ஆம் ஆண்டில் திருக்குறள் ‘எ கலெக்க்ஷன் ஆஃப் தி இங்லீஷ் டிரான்ஸ்லேஷன் ஆஃப் திருக்குறள்’ (A Collection of the English Translation of Thirukural) என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜி.யு. போப் செய்த மொழிபெயர்ப்பு உலக அளவில் திருக்குறளைக் கொண்டு சேர்த்தது. அவருக்குப் பிறகு பிறகு 30 ஆண்டுகள் கழித்து வ. வே. சு. ஐயர் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். கே. எம். பாலசுப்பிரமணியம், சுத்தானந்த பாரதியார், ஆ. சக்கிரவர்த்தி, மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, சி. இராஜகோபாலசாரி எனப் பலர் திருக்குறளை அதன் பிறகு முழுமையாகவோ அல்லது பகுதி மொழிபெயர்ப்புகளாகவோ வெளியிட்டனர்.
 
இவ்வாறுமுழுமையாகவோ, பகுதி மொழிபெயர்ப்பாகவோ  திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இன்றைய நாள் வரை  நூற்றுக்கும் மேற்பட்ட முறையில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. அண்மையில் 2021ஆம் ஆண்டு அமெரிக்கத் தமிழ் ஆர்வலர் தாமஸ் ஹிட்டோஷி புருக்ஸ்மா திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவற்றில் சற்றொப்ப 37+ மொழிபெயர்ப்புகள் முழுமையானவை எனக் கருதப்படுகிறது. இதுவரை அறிவித்த திருக்குறள் மொழிபெயர்ப்புகள் தவிர்த்து மீதம் உள்ள 52 மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட நிலையைத் திருக்குறள் அடையும் என்பது வலைத்தமிழ் தரும் மதிப்பீடு (திருக்குறள் மொழிபெயர்ப்புகள் முடிந்த பட்டியல் - 2025).
 
மொழிபெயர்ப்புகள் குறித்த மதிப்பீடுகள்:
திருக்குறளுக்கு உரை எழுதுவோரின் பண்பாட்டுப் பின்னணி அவரது உரைகளில் எதிரொலிப்பது போல, மொழிபெயர்ப்பாளர்களின் பண்பாட்டுப் பின்னணியும் மொழிபெயர்ப்புகளில் எதிரொலிப்பது உண்டு. மொழிபெயர்ப்புகள் செய்யுள் வடிவிலோ, அல்லது உரைநடையாகவோ அல்லது இரண்டும் கலந்த வகையிலோ அமைவதும் உண்டு. ஆரம்பக் காலத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் பிறிதொரு மொழியிலோ, அல்லது அயல் மொழிக்காரர்கள் தமிழ் கற்றறிந்து தங்கள் மொழியில் மொழி பெயர்ப்பதாகவோ அமைந்து வந்தது. ஜி.யு. போப் ஆங்கில மொழிபெயர்ப்பிற்குப் பிறகு, ஆங்கிலத்திலிருந்து பிறமொழிகளுக்கு மொழிபெயர்ப்பது அதிகரித்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில்தான் குறள் பல தெற்காசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் சில அதுவரை வெளிவந்த குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தழுவியே செய்யப்பட்டவை ஆகும்.
 
திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் உரை விளக்கங்களாக மட்டுமே உள்ளன என்று 2015ஆம் ஆண்டு டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்“ என்ற பொருண்மையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் கூறுகின்றன. ஜி.யு.போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ள மொழிபெயர்ப்பு நூல்களைச் சுட்டிக் காட்டியதுடன், இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்கள் அனைத்தும் மூல நூலுடன் நெருக்கமாக அமைந்துள்ளதே தவிர, அதில் கவிதை நயம் போன்றவை வெளிப்படவில்லை என்றும், திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் உரை விளக்கங்களாக மட்டுமே கருத முடியும் ஆய்வாளர்கள் கருதியுள்ளார்கள். இக்கட்டுரைகள் நூல் வடிவிலும் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது.
 
 “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்” என்று இடைக்காடரும்
 
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்” என்று ஒளவையாரும்
 
திருக்குறளின் பொருள் பொதிந்த நுண்மையைப் பாராட்டியுள்ளனர். இச்சிறப்பிற்கு ஏழு சீர்களுக்குள் கூறவந்த அனைத்தையும் அடக்கிவிடும் ஆற்றல் கொண்ட குறள் வெண்பா அமைப்பே காரணம். எனினும் இச்சிறப்பே பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் பொழுது மொழி நடையின் அழகு குறையாமல் பாடல் வடிவில் குறளைக் கொண்டு செல்ல சிக்கலாகவும் அமைந்துவிடுவதாகவும் கருதப்படுகிறது.
 
‘குறள் ஒரு சீர்மை உடையது. தெளிவாக உணர்ந்து அறியத்தக்கது. ஒருமைப்பாட்டினைக் கொண்டிருந்த ஒரு நாகரிகத்தைச் சித்தரித்துக் காட்டும் ஓர் ஒருங்கு இணைந்த ஓவியம்’ என்று திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி.யு.போப் குறிப்பிடுகிறார். மொழிபெயர்ப்பு முயற்சிகளில் திருக்குறள் தனது கவிதைச் சிறப்பையும் கவர்ச்சியையும் இழந்துவிடுவதாக மொழிபெயர்ப்பாளர்களும் தமிழில் திருக்குறள் அறிந்தவர்களும் உணர்கிறார்கள். குறளின் செய்யுள் அழகையும் பாடலின் கருத்துச் சிறப்பையும் மொழிபெயர்ப்பதைச் சவால் கொண்டதாகவே சுவெலபில் அவர்களும் குறிப்பிடுகிறார். அத்துடன், குறளை மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்வதைக் குறித்துக் கூறுகையில், “நடையழகிலோ சொல்வன்மையிலோ எந்த ஒரு மொழிபெயர்ப்பும் திருக்குறளின் தமிழ் மூலத்திற்கு இணையாக இருக்க இயலாது” திருக்குறள் கூறும் உண்மையான பொருளை எந்த ஒரு மொழிபெயர்ப்பைக் கொண்டும் அறிய முடியாது என்றும் குறளின் தமிழ் மூலத்தைப் படிப்பதன் வாயிலாக மட்டுமே வள்ளுவர் கூறிய ஆழ்பொருளை அறிய முடியும் என்றும் சுவெலபில் கூறுகிறார். இருப்பினும் அண்மைய வெளியீடான தாமஸ் ஹிட்டோஷி புருக்ஸ்மா திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நடையில் அமைந்திருப்பதாகப்  பாராட்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
References:
https://en.wikipedia.org/wiki/Kural
https://en.wikipedia.org/wiki/Tirukkural_translations
https://en.wikipedia.org/wiki/Tirukkural_translations_into_English
https://en.wikipedia.org/wiki/List_of_translators_into_English
https://en.wikipedia.org/wiki/List_of_Tirukkural_translations_by_language
https://www.valaitamil.com/thirukural-translation-completed-2025_21687.html
 
இற்றைப்படுத்தப்பட்ட கட்டுரை (2025 ஜூன்)

நன்றி : சிறகு - http://siragu.com/திருக்குறள்-மொழிபெயர்ப்/
அக்டோபர்  15, 2022


#சிறகு, #திருக்குறள்,  #Themozhi     

Tuesday, June 24, 2025

குறள் தரும் சொற்சுவையும் பொருட்சுவையும்: “யாதெனின். . . யாதெனின். . . “

குறள் தரும் சொற்சுவையும் பொருட்சுவையும்: “யாதெனின். . .  யாதெனின். . . “

குறள் தரும் சொற்சுவையும் பொருட்சுவையும் 

“யாதெனின். . .  யாதெனின். . . “ 

திருக்குறளில்  11 குறள்கள் "யாதெனின்" என்று கேள்வி எழுப்பி, குறிப்பிட்ட ஒரு கருத்தை "எது என்றால்" என்று விளக்கும் வகையில் அமைகின்றன. இக்கட்டுரையின் குறள்களுக்கு  மு. வரதராசனார் எழுதிய விளக்கவுரை எடுத்தாளப்பட்டுள்ளது. 
 
கொல்லாமை என்பதை வலியுறுத்த விரும்பும் வள்ளுவர் அருளல்லாது எது என்றால், அறச்செயல் எது என்றால், நல்லொழுக்கம் எது என்றால் என்று பல்வேறு வகைகளில் கேள்வி எழுப்பி,  கொல்லாமை என்பதுதான் நாம் பின்பற்ற வேண்டிய நல்லறம் என்று விளக்குகிறார். 
அருளல்லாது எது என்றால்;
     அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
     பொருளல்ல தவ்வூன் தினல்.   [254]
அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல்; அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.  

அறச்செயல் எது என்றால்;
     அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
     பிறவினை எல்லாந் தரும்.   [321]
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.  

நல்லொழுக்கம் எது என்றால்;
     நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
     கொல்லாமை சூழும் நெறி.   [324]
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.  

இதே முறையில், மற்ற நல்லொழுக்கங்களான கள்ளாமை, தீங்கு செய்யாமை ஆகியவற்றையும் எது என்ற கேள்வி எழுப்பி பதில் கூறும்  முறையில் விளக்குகிறார். 
     அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
     வேண்டும் பிறன்கைப் பொருள்.   [178]
ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும். 

     வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
     தீமை இலாத சொலல்.   [291]
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.  

உயிரைக் கொல்லுதல், ஒருவர் பொருளைக் களவாடுதல், தீங்கு செய்தல் இவற்றைத் தவிர்க்கும் நோக்கில் எது என்றால் என்று கேள்வி எழுப்பி  விளக்கும் வகையில் இக்குறள்கள் அமைந்திருக்கின்றன. 

சிறந்த நட்பு எது என்றால்; நட்பிற்கு இலக்கணமாக அமைவது; மாறுபாடு இல்லாத நெஞ்சத்துடன் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அரவணைத்துச் செல்லும்  நிலையும்; நெடுநாள் நட்பின் காரணமாக  ஒருவர் உரிமையுடன் நமக்கு ஏற்புடையது அல்லாத ஒரு செயலைச் செய்துவிட்டாலும் நட்பு கருதி அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதுமாகும்.  
     நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
     ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.   [789]
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.  

     பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
     கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.   [801]
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.  

அறியாமை  எது என்றால்;
     பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
     ஊதியம் போக விடல்.   [831]
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும். 

     வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
     உடையம்யாம் என்னும் செருக்கு.   [844]
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.  

சான்றோர்கள் பண்பு எது என்றால்;
     சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
     துலையல்லார் கண்ணும் கொளல்.   [986]
சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.  

வறுமையின் கொடுமை எது என்றால்;
     இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
     இன்மையே இன்னா தது.   [1041]
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.  

"அரியது கேட்கின் வரிவடி வேலோய்" என்று  ஔவையார் பாடல் ஒன்று கேள்விக்கு  விளக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதும், தொன்றுதொட்டு அக்காலம் முதல் இக்காலத் திரையிசைப் பாடல்கள் வரை கேள்வி கேட்டு பதில் சொல்லும் வகையிலே அமைந்திருப்பதும்  தமிழ் மொழியில் யாவரும் விரும்பும்  தனிச்சிறப்பு கொண்ட ஓர்  இலக்கியக் கூறு எனலாம்.


நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 288-290
25/6/2025      குறள் தரும் சொற்சுவையும் பொருட்சுவையும்: “யாதெனின். . .  யாதெனின். . . “

#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Saturday, June 21, 2025

பெண்ணியப் பார்வையில் கலைஞரின் திருக்குறள் உரை



பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர், மன்னராட்சி காலத்தில் அரசர்களை வழிநடத்த எழுதப்பட்ட திருக்குறள், குடியாட்சி காலத்திலும், இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மக்களின் பிரதிநிதியாக அரசாட்சி செய்பவருக்குப்  பொருந்தி வருவதில்தான் குறளின் சிறப்பு இருக்கிறது.  இருப்பினும் மனைவி, பெண்கள்  இவர்களைக் குறிப்பிடும் வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச்சேரல் அதிகாரங்களில்  உள்ள குறள்கள்  இக்காலத்தில் ஏற்க இயலாவண்ணம் பெண்களுக்கு  மதிப்பு தராமல் அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. பெண்ணியவாதிகள் பலர் இந்த அதிகாரங்களைப் பற்றிய கசப்புணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில்  முதன்மை இடம் பெரியாருக்குத்தான் உள்ளது. வள்ளுவரைக் கேள்விகேட்ட, மறுதலித்த துணிச்சலான எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த பெண்மணி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். இவர் திருக்குறளில் பெண்ணடிமைத்தனம் போதிக்கும் 30 குறள்களையும் நீக்கிவிடவேண்டும் எனப் பேசியவர். பெண்ணியம், சமத்துவம், பகுத்தறிவு எனப் பேசிய எழுத்தாளர்களான பாரதிதாசனும், கலைஞர் மு. கருணாநிதியும்  இக்குறள்களுக்கான  உரைகளைக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க  முனைந்தனர்.  இக்கட்டுரை  வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச்சேரல் ஆகிய அதிகாரங்களின் குறள்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வரான முத்தமிழறிஞர் மு. கருணாநிதி அவர்கள் உரை எழுதிய முறையைக் குறிப்பிட்டு அந்த நன்முயற்சியைப் பாராட்டுகிறது.
 
வாழ்க்கைத் துணைநலம்:
வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் மனைவி குறித்துத்தான் கூறப்படுகிறது என்பதை; 1. மாண்புடையள், 2. மனைமாட்சி இல்லாள், 3. இல்லதென் இல்லவள், 4. பெண்ணின் பெருந்தக்க யாவுள, 5. கொழுநன் தொழுதெழுவாள், 6. சொற்காத்துச் சோர்விலாள், 7. மகளிர் நிறைகாக்கும், 8. பெண்டிர் பெருஞ்சிறப்பு போன்ற முதல் 8 குறள்கள் நேரடியாகக் குறிக்கும். 
 
இருப்பினும்; இறுதி 2 குறள்களும்  (குறள் - 59, 60)  மேலோட்டமாக பெண்ணைக் குறிக்கும்.  ஆனால் இன்றைய உலகில் சமத்துவக்   கருத்தை மதிப்பவர்கள், இவை பொதுவாகக் கணவன் மனைவி இருவருக்குமே பொருந்தும் வகையில் பொருள் கொள்ள விரும்புவார்கள்.  ஓர் ஒப்பீட்டிற்காக வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தின் இறுதி  இரு குறள்களுக்கும்  எழுதப்பட்ட உரைகள் இங்குக் கொடுக்கப்படுகின்றன.
 
      புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
      ஏறுபோல் பீடு நடை.  
      [இல்லறவியல்; வாழ்க்கைத் துணைநலம்; குறள் - 59]
 
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
—மு. வரதராசன்
 
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
—சாலமன் பாப்பையா
 
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.
—மு. கருணாநிதி   
 
இதில் கருணாநிதி  உரைதான்  காலத்திற்குப்  பொருத்தமானது, ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.  நல்ல கணவன் அமையாத  மகளிர் துயர் குறித்து, அவள் எதிர்கொள்ளும் அவமானம் குறித்து வள்ளுவர் ஏன் எழுதவில்லை என்று இப்பொழுது வள்ளுவரைக்  கேட்க வாய்ப்பில்லை.  ஆனால் நாம் அந்த எதிர்பார்ப்பை நடைமுறைக்குக் கொண்டு வரலாம், அதாவது தக்கவாறு பொருள் கூறுவதன் மூலம். அடுத்து;
 
      மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
      நன்கலம் நன்மக்கட் பேறு.  
      [இல்லறவியல்; வாழ்க்கைத் துணைநலம்; குறள் - 60]
 
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
— மு. வரதராசன்
 
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.  
— சாலமன் பாப்பையா
 
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது
— மு. கருணாநிதி
 
இதிலும் கருணாநிதி  உரைதான்  காலத்திற்குப்  பொருத்தமானது, ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.  குடும்பத்தின் பெருமைக்கு அவர்களின் நற்பண்பும், நல்ல மக்கட் செல்வங்களும் அமைவது என்று, குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது.
 
ஆனால் இது வள்ளுவரின் எண்ணம் அல்ல.  இருப்பினும்,  குறளின்  அதிகாரத்தைக்  கணக்கில் கொள்ளாமல், இவற்றைத்  தனிப்பட்ட குறள்கள் என்ற அணுகுமுறையில் பொருள் கொண்டால் இக்காலத்திற்கும் அவை செவ்வனே பொருந்தும்.
 
பெண்வழிச்சேரல்:
பெண்வழிச்சேரல் அதிகாரத்தில்; மனைவிழைவார் (901), இல்லாள்கண் (903), மனையாளை (904), இல்லாளை (905), இல்லாள் (906) என்று குறிப்பிடும் குறட்பாக்களின் மூலமாக 'மனைவி சொல்லைக் கேட்பவன் மடயன்' என்ற கருத்தை வலியுறுத்தித்தான் வள்ளுவர் எழுதியுள்ளார். இதில் எவருக்கும் வள்ளுவர் நோக்கம் குறித்து மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை. இவ்வாறு  5 குறட்பாக்களில் நேரடியாக மனைவி என்றே குறிப்பிட்ட வள்ளுவர்; மற்றும் ஐந்து குறள்களில், பெண்  (902, 907, 908, 909, 910) என்று பொதுவாகக் குறிப்பிட்டுச் செல்கிறார். ஆனால் அவையும் மனைவியைக் குறிக்கும் குறள்கள்தான். பொம்பளை பேச்சைக் கேட்கிறான், பொண்டாட்டி  பேச்சைக் கேட்கிறான் என்று இன்றும் இழிவாகத்தான் மனைவி சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பவரைக் கூறுவது உலக வழக்கம்.
 
இந்த அதிகாரத்திற்கு கருணாநிதி உரையைப் படிக்கும் பொழுது மனைவி சொல்லிற்கு  மதிப்பு தருவதில் அவருக்கு உடன்பாடு இருக்கிறது என்பதைக் காண  இயலும்.  அதனால்,  "பண்பில் குறைபாடு கொண்ட" மனைவி சொல்வதைக் கேட்டு நடப்பது சரியல்ல என்று உரை எழுதுகிறார். எல்லா மனைவிகளும், எல்லாப் பெண்களும் பண்பற்றவர்கள் இல்லையே.  குறைபாடு கொண்ட மனிதர்கள் உலகில் உள்ளார்கள் என்பதுதான் உண்மையும் கூட.  அந்த அடிப்படையில் ஆணவம், அகங்காரம் கொண்டு தன் வாழ்க்கைத் துணையை  மதிக்காமல் நடக்கும் மனைவியின் சொல்லுக்கு அவன் மதிப்புத் தரத் தேவையில்லை என்று பொருள் கூற முற்படுகிறார் என்பது தெளிவு.
 
மனைவி என்ற நேரடியாக வள்ளுவர் குறிப்பிடாத பொழுது, மாறாக பெண் என்று மட்டும் குறிப்பிடும் பொழுது,  அந்தப் பெண்ணை மனைவி என்று கொள்ளத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு, பொதுவாகப் பெண்கள், அதிலும் ஆணவம் அகங்காரம் கொண்ட பெண்கள் மட்டுமே என்ற கோணத்தில் கருணாநிதி உரை எழுதுகிறார்.  இது மீண்டும் மனைவியை இளக்காரமாகக் கருதும் போக்கைத் தவிர்க்கும் மற்றொரு முறை.
 
      அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
      பெண்ஏவல் செய்வார்கண் இல். 
      [நட்பியல்; பெண்வழிச்சேரல்;  குறள்- 909]
அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் 'மனைவியின் ஏவலைச்  செய்வோரிடத்தில்' இல்லை.
—மு. வரதராசன்
 
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் 'மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம்' இருக்கமாட்டா.
—சாலமன் பாப்பையா
 
'ஆணவங்கொண்ட பெண்கள்' இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
—மு. கருணாநிதி
 
பொதுவாக, பகுத்தறிவு, சமத்துவம் என்ற வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்த அதிகாரங்கள் மிக உறுத்தலாக இருக்கும். தங்கள் கொள்கைக்கு மாறுபட்டவையாக அவை இருப்பதை உணர்வார்கள்.   அதனால் வள்ளுவர் மேல் குற்றம் காண்பதைத் தவிர்த்து, காலத்திற்குப் பொருத்தமான விளக்கம் தர முற்படுவார்கள். இலக்கியவாதிகளான கருணாநிதி, பாரதிதாசன் போன்றோர் குறளுக்கு உரை எழுதும் முறையை இந்தப் பிரிவில் அடக்கலாம்.
 
ஒருவர் பெண்ணாகப் பிறந்துவிட்டார் என்பதாலேயே அவர் சிந்தனைக்கு மதிப்பு தரவேண்டாம் என எண்ணுவது எத்தகைய அறமற்ற செயல் என்று மனதில் தோன்றுவதை நேரடியாகச் சொல்ல இலக்கியத்தின் மீது பற்று அற்ற பெரியார் போன்றவராலேயே முடிந்தது.  “வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்து குறள் எழுதியிருந்தால், இக்கருத்துகளைக் கூறியிருக்கமாட்டார்” என்று,  தான் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்' நூலின் 'வள்ளுவமும் கற்பும்' என்ற இரண்டாவது அத்தியாயத்தில் பெரியார் குறிப்பிட்டிருப்பார். பண்டைய தமிழ்ப் பண்பாட்டின்படி 'யார் சொன்னாலும் குற்றம் குற்றமே' என்று பெரியாரால் சொல்ல முடிந்தது. ஆனால், மற்ற எழுத்தாளர்களால் அவ்வாறு நேரடியாக உண்மையைக் குறிப்பிட முடியாமல் போனது. 
 
பெண் சொல்லைக் கேட்கக் கூடாது என்பது காலத்திற்கு ஒவ்வாத கருத்து; இதனைப்  பள்ளியில் முதல் வகுப்பில் ஔவை எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் பாடம் படித்தவர்களால் மறுக்க இயலாது. வள்ளுவர் கருத்திற்கு நேரடியாக உரை எழுதப்பட்டிருந்தாலும் சரி,  காலத்திற்குத் தக்கவாறு  உரை எழுதப்பட்டிருந்தாலும் சரி வள்ளுவரின் அறிவுரையை ஏற்று "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டால், வள்ளுவரின் குறள்களில் சில காலத்திற்கு ஏற்றவை அல்ல என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலாது.
 
வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச் சேரல் அதிகாரங்கள்  - வள்ளுவர் காலத்துக் கருத்துகள் கொண்டவைதான்.  அவற்றில் உள்ள குறள்கள் பல இக்காலத்திற்குப்  பொருந்தாது என்றால் அந்த  உண்மையை நாம் ஏற்க வேண்டும். பிரதமர் இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டார், அக்காலத்தில் அவர் ஆணையை ஏற்று நடக்க வேண்டிய சூழல் அரசுப் பணியாளர்களுக்கு இருந்தது. அத்தகைய சூழலில் பெண்ணின் சொல்லைக் கேட்காதே  என்று  கூறும் குறள்  பொருந்துமா? இந்தியாவிற்கு அந்நாட்களில் பின்னடைவு ஏதும் ஏற்பட்டதா? அவர் காலத்தில்தான் இந்தியச் சட்டவரையறையின்  முகப்புரையில், 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்து திருத்தம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். இதனைக் கருத்தில் கொண்டால் கருணாநிதி உரை ஏற்கத்தக்கது. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியம் ஒன்றிற்குக்  காலத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்வதைக் குறை காண்பதற்கு வழியில்லை. இந்த அதிகாரங்களுக்குக் கலைஞர் கருணாநிதி உரைகள் சிறந்தவை. காலத்திற்கேற்பப் பொருந்துபவை.
 
நன்றி: "கனடியன் ரேஷனலிஸ்ட்" இதழ், ஜூன் 2025


#கனடியன் ரேஷனலிஸ்ட், #திருக்குறள், #கலைஞர், #பெண்ணியம், #Canadian Rationalist,  #Themozhi