Wednesday, January 22, 2025

ஆனந்தரங்கம் பிள்ளை தரும் வானியல் குறிப்புகள்


தமிழ் நாட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தியதில் குறிப்பிடத்தக்க வகையில் பாராட்டப்படுபவர் 18 ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை (1709 -1761) அவர்கள். 1761 ஆண்டின் ஜனவரி 12 ஆம் நாள் அவர் மறைந்தார். சென்னை பெரம்பூரில் பிறந்தவர் ஆனந்தரங்கம்.  புதுவையில் இருந்த அவரது தாய்மாமாவின்  தொடர்பால் புதுச்சேரிக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது.  பன்மொழி அறிவு பெற்றிருந்த ஆனந்தரங்கம், 1747 இல் இருந்து பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்பாளராக (துபாஷி) புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநர் டூப்ளே (French Governor Joseph-François Dupleix) அவர்களிடம் சுமார் 14 ஆண்டுகள் பணிபுரிந்தார்.  அரசு அலுவல்களில் மதிப்புமிக்க வகையில் பங்கு பெற்ற அவர் பல்வேறு தொழில், வணிகங்களில் ஈடுபட்டிருந்த பெருஞ்செல்வந்தராகவும் இருந்தார்.  நுணுக்கமாக நாட்டுநடப்புகளைக் கவனித்த அவரது பங்களிப்பு பிரெஞ்சு அரசிற்கும் தமிழக அரசுகளுக்கும் உதவியாக இருந்தது.  இக்கால கட்டத்தில், அவரது 24 ஆம் வயதிலிருந்து, அவர் மறைந்த 52 ஆம் வயதுவரை, அவர் அறிந்து கொண்ட நாட்டுநடப்புக்  குறிப்புகளைச் சற்றொப்ப கால்நூற்றாண்டுக் கால நிகழ்ச்சிகளை (06.09.1736 முதல் 12.01.1761 வரை)  நாட்குறிப்பாக ஆவணப் படுத்தியும் வந்தார்.


அவற்றைச் சொஸ்த லிகித தினப்படி சேதி குறிப்பு என்று அழைத்தார் ஆனந்தரங்கம். பலமொழிகளை அவர் அறிந்திருந்தாலும் எளிய பேச்சு வழக்குத் தமிழில் அவருடைய குறிப்புகள் உரைநடையில் அமைந்திருந்தன. இன்று தமிழ்நாட்டின் பதினெட்டாம் நூற்றாண்டின் அரசியல், வரலாறு, பண்பாடு மற்றும் சமூகப் பொருளாதார நிலவரங்களை, தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வியலை அறிந்துகொள்ளப் பெரிதும் துணைநிற்பவையாக அவருடைய குறிப்புகள் போற்றப்படுகின்றன. 

நாட்குறிப்பு வேந்தர் எனப் போற்றப்படும் ஆனந்த ரங்கப்பிள்ளை எழுதிய மூலக் குறிப்புகள் பாரீஸ் அருங்காட்சியகத்தில்  உள்ளன. அவை 12 தொகுதிகளாக பிரெஞ்சு  மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன, பின்னர் ஆங்கிலேயர்களும் இக்குறிப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர்.

சோதிடவியலிலும் வான இயலிலும் வல்லவராகவும் ஆனந்தரங்கம் பிள்ளை  இருந்தார். அவர் குறிப்புகளில் இச்செய்திகளும் இடம் பெற்றுள்ளன.  சோதிடக் குறிப்புகளைக் குறிப்பிடும் இடங்களில் கோள்கள் வானில் இருக்கும் நிலை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.  ஒருவரின், பிறப்பு இறப்பு போன்ற செய்திகளைப் பதியும் இடங்களிலும் இக்குறிப்புகள் இடம் பெறுகின்றன.  இவை தவிர்த்து வானியல் சிறப்பு நிகழ்வுகளாகக் கருதப்படும்

(அ) வால்மீன்களின் காட்சி
(ஆ) சூரியகிரகணம்
(இ) சந்திரகிரகணம்

ஆகியவையும் அவரது கீழ்க்காணும் நாட்குறிப்புத்  தொகுதிகளில் இடம் பெறுவதைக் காண முடிகிறது.


(அ)  வால்மீன்களின் காட்சி:

1743 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் நாள் (ருத்ரோத்காரி ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் தேதி,  ஆதிவாரம்‌ நாள்)‌

ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு:  சாயங்காலம்‌ மேற்கே ஒரு நக்ஷத்திரம்‌ வால்முளைத்த  நக்ஷத்திரம்‌ கண்டது அதை  தூமகேது வென்‌று சொன்னார்கள்‌.  இது நல்ல நாளைக்குக்‌ காணாதாம்‌. இதனாலே என்ன காலக்‌கேடோ தெரியாதென்று வெகு சனங்கள்‌ அங்கலாய்த்தார்கள்‌.

வால் மீன் குறிப்பு:

1743 டிசம்பர் 29 நாளில் தோன்றிய வால்மீன்  1744 பிப்ரவரி  11 ஆம் நாள் வரை தொடர்ந்து தெரிந்திருக்கிறது.

(ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - தொகுதி I [பக்கம்: 188, 191])

1744 பிப்ரவரி  11 ஆம் நாளன்று,  மராட்டியர் படை எடுப்பிற்கு அஞ்சி ஆற்காட்டில் வாழும் பொதுமக்கள் ஊருக்குள் ஒருவருமே இல்லாமல் ஊரையே காலி செய்து கொண்டு கோட்டைக்குள் தஞ்சம் தேடி நுழைய முற்படுகையில், நெரிசலில் சிக்கி இருபது முப்பது பேர் கோட்டை வாசலில் இறந்து விடுகிறார்கள்.  இனி என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை.  இது போன்ற வால்மீன் தோன்றுவது விபரீதத்தின் அறிகுறி என்று முற்காலத்தில் பெரியோர்கள் சொல்லுவார்கள். முன்னர் மேற்கே  (1743  டிசம்பர் 29 ஆம் நாள்) தோன்றிய  வால்மீன் நாளும் வளர்ந்துகொண்டே வருகிறது, என்று ஆனந்தரங்கம் குறிப்பிடுகிறார்.

இணைய வழித் தேடல் மூலம் இந்த வால்மீனை 'Great Comet of 1744' என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்று அறிய முடிகிறது.  தொடர்ந்து பல மாதங்கள் தெரிந்த, ஆறு  வால்கள் கொண்ட இந்த வால்மீனை  'கிளிங்கன்பெர்க்-செசோக்ஸ் வால்மீன்' ( C/1743 X1  / Comet  Klinkenberg–Chéseaux) என்றும் அழைத்துள்ளார்கள்.

1748 ஜூன் 5 அன்றும் வால்மீன் காட்சி (C/1748 K1) ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.  ஆனந்தரங்கம் இந்த வால்மீன் காட்சியையும் அரசாட்சி மாற்றம், மன்னரின் மறைவு, இழப்பு போன்றவற்றுடன் இணைத்துக் காண்கிறார்  (ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - தொகுதி V [பக்கம்: 38])


(ஆ) சூரியகிரகணம்:

1746 ஆம் ஆண்டு  மார்ச் 22 (குரோதன ஆண்டு பங்குனி மாதம் 13 ஆம் நாள், செவ்வாய்க்கிழமை)

நாட்குறிப்பு:  சூரிய உதயமான ஐந்து நாழிகைக்குள்ளே சூரியகிரகணம்‌ பிடித்துவிட்டது. இதற்குமுன்‌ பதினைந்தாம்நாள்‌ பருவத்தன்று சந்திரகிரணம்‌.

சூரிய கிரகணம் குறிப்புகள்:

1746 மார்ச் 22 நாளில். . .  (ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - தொகுதி I [பக்கம்: 268])

 

(இ) சந்திரகிரகணம்:

1739 ஜூலை 20 (சித்தார்த்தி ஆண்டு, ஆடி மாதம் 8 -ஆம் நாள்,  திங்கட்கிழமை)

நாட்குறிப்பு:  இந்த நாள் சாயங்காலம் அஸ்தமித்து நாலு நாழிகைக்கு மேல் சந்திர கிரணம் பதினோரு மணிக்கு விட்டுப்போச்சுது.   ஆனால் இந்தக் கிரணம் 9'10" கிரணம் முக்காலே மூணுவீசம்.

சந்திரகிரகணம் குறிப்புகள்:

1739 ஜூலை 20;   1742 நவம்பர் 12; 1746 மார்ச் 07 நாட்களில். . .  (ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - தொகுதி I [பக்கம்: 75, 156, 268])

1749 டிசம்பர் 23  நாளில். . .      (ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - தொகுதி VI [பக்கம்: 282])

ஆனந்த ரங்கப்பிள்ளை தரும் கிரகணக் குறிப்புகள் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வெளியிட்டிருக்கும் வரலாற்றுக்  கிரகணக்  குறிப்புகளுடன் (பார்க்க: https://eclipse.gsfc.nasa.gov/LEcat5/LE1701-1800.html) இசைந்து செல்வதைக் காண முடிகிறது.


நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 268
1/22/2025      ஆனந்தரங்கம் பிள்ளை தரும் வானியல் குறிப்புகள்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi