Wednesday, January 29, 2025

வானியலில் ஏழு சகோதரிகள்

கார்த்திகை விண்மீன் கூட்டம் முழுநிலவுடன் இணைந்து காணப்படும் மாதம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது.  இக்காலத்தில் மழை ஓய்ந்து குளிர்காலம்  தொடங்கும். கார்த்திகைத் திங்களின் இரவில் அழகிய  சரவிளக்குகள் ஏற்றப்பட்டுக் கொண்டாடப்படும் கார்த்திகை விழா குறித்து கரிகால் சோழன் காலத்துச் சங்கப் பாடலும் ஒன்று உண்டு. 

      குறுமுயல் மறுநிறம் கிளர, மதிநிறைந்து,

      'அறுமீன்' சேரும் அகல்இருள் நடுநாள்;

      மறுகுவிளக்கு உறுத்து, மாலை தூக்கிப்,

      பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

      விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!

                  - நக்கீரர், அகநானூறு: 141-8

மழைபெய்தல் முடிந்துவிட்ட வானில் சிறிய முயலின் களங்கம் தெரியுமாறு உள்ள முழுநிலவுடன் 'அறுமீன்' என்னும் கார்த்திகை விண்மீனும் சேரும் இருள் பரவிய நாளில், தெருக்கள் தோறும்  வரிசையாக விளக்குகளை ஏற்றி, மலர் மாலைகளைத் தொங்கவிட்டு அலங்கரிக்கப்பட்ட பழைமையும் வெற்றியும் மிகுந்த நம்முடைய மூதூரில் நடக்கும் எல்லோரும் கொண்டாடும் இந்த விழாவை நம்முடன் கொண்டாடப்  பொருளீட்டச் சென்ற தலைவனும் வந்து சேர்வார் என்ற தோழியிடம் தலைவி மிக நம்பிக்கையோடும், முகமலர்ச்சியோடும் கூறுவதாக நக்கீரரின் இந்த அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.

அங்கி, அறுமீன், அழல் குட்டம், ஆஅல், ஆரல், கார்த்திகை மீன் என்ற பெயர்களிலும் கார்த்திகை விண்மீன் கூட்டம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை முறையே;  அங்கி (பரிபாடல்: 11-7); அறுமீன் (அகநானூறு: 141-8, நற்றிணை:202-9); அழல் குட்டம் (புறநானூறு: 229-1); ஆஅல் (மலைபடுகடாம்: 100); ஆரல் (கலித்தொகை: 64-4, பரிபாடல்: 9-7); கார்த்திகை (பரிபாடல்: 11-1)

      புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல்

      'அங்கி' யுயர்நிற்ப வந்தணன் பங்குவின்

                  - பரிபாடல் 11-7, வையை

புதன் மிதுனத்திலே நிற்க, கார்த்திகை (அங்கி) உச்சமாகி விடிதல் உண்டாக, குரு மீனத்திலே நிற்கும் பொழுது,  என வையையில்  வெள்ளம் வந்த காலத்தைப் பரிபாடலின் வரிகள் குறிப்பிடுகிறது.

      'அறுமீன்' கெழீஇய அறம்செய் திங்கட்

      செல்சுடர் நெடுங்கொடி போலப்

      பல்பூங் கோங்கம் அணிந்த காடே!

                  - நற்றிணை, 202-9

கார்த்திகை விண்மீன் பொருந்தியதும், அறச்செய்வதற்குச் சிறந்த மாதமான கார்த்திகைத் திங்களில், வரிசையாக அமைந்த விளக்குகளின் தொடர் போலக் கோங்க  மலர்கள் வரிசையாக மலர்ந்துள்ள மரங்களைக் கொண்டதால் காடு அழகு பெற்று விளங்குகிறது.

      ஆடுஇயல் 'அழல்குட்டத்து'

      ஆர்இருள் அரைஇரவில்

                  - கூடலூர் கிழார் புறநானூறு: 229

ஒரு பங்குனி மாதத்து முதற் பதினைந்து நாட்களுள், மேட இராசியில் உள்ள நெருப்பு போன்ற நிறமுடைய ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகிய கார்த்திகை என்னும் நட்சத்திரம்.

      அகல் இரு விசும்பின் 'ஆஅல்' போல

      வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை

                  - மலைபடுகடாம் - வரி 100

அகன்ற இருண்ட வானத்தின் கார்த்திகை என்னும் விண்மீன் போல, வெண்மையாக மலர்ந்தன மிக மெல்லிய கொடியை உடைய முசுட்டை.

      விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி

      அரவுக்கண் அணி உறழ் 'ஆரல் மீன்' தகை ஒப்ப,

                  - கலித்தொகை,  64-4

தலைவியின் பின்னலில் விரித்துச் சுற்றிய நுண்ணிய நூலில்  ஈரமான இதழ்களை உடைய பூக்கள்  தொடுக்கப்பட்டுள்ளது.  அதனால் அவளது  சடைப் பின்னல் படமெடுக்கும் பாம்பு போலவும், அதில் தொடுக்கப்பட்டுள்ள மலர்ச்சரம் வானத்தில் தோன்றும் கார்த்திகை மீன் வரிசை போலவும் உள்ளது.

      விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,

      தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி

      மணி மிடற்று அண்ணற்கு, மதி 'ஆரல்' பிறந்தோய்! நீ.

                  - குறும்பூதனார், பரிபாடல்: பாடல் 9

விரிசடை கொண்ட கங்கை நீரைத் தலையில் அணிந்த சலதாரியானவன் சிவன். அவன் நஞ்சைத் தொண்டையில் வைத்திருக்கும் அண்ணல். ஆரல் என்னும் கார்த்திகை மீனிலிருந்து அந்தச் சிவனுக்கு மகனாகப் பிறந்த முருகனே!

      'கார்த்திகை' காதிற் கனமகர குண்டலம்போற்

      சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்

                  - பரிபாடல் 10, மதுரை

விண்மீன்களாகிய  கார்த்திகை மகளிரின் காதிலிடப்பட்டிருக்கும்  பொன்னாலான  மகரக்குழை போன்று சிறந்து விளங்கி, செல்வம் பெருகிப் பொலிந்திருந்தது மதுரை நகரின் புகழ். 

கார்த்திகை  விண்மீன்களைக் குறிப்பிடும் சங்கப் பாடல்கள் பெரும்பாலும் வானில் விண்மீன்களின் நிலையையோ, தோற்றத்தையோ அல்லது அந்த விண்மீன்கள் ஒளிரும் மலர்ச்சரம்  போல இருப்பதாகவோ பெரும்பாலும் குறிப்பிட்டாலும், காலத்தால் பிற்பட்டதாகக் கருதப்படும் பரிபாடல் நூலின் பாடல்வரிகள் கார்த்திகை மகளிர், முருகக்  கடவுள் பிறப்பு  என்று தொன்மக் கதையில் தொடர்புள்ளதாக மாறுவதைக் காண  முடிகிறது.

கார்த்திகை விண்மீன் கூட்டத்தில் ஆறு விண்மீன்கள் என்றே தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது.  இதற்கும் முற்பட்ட காலத்தில் ஏழு விண்மீன்களை வெறும் கண்ணால் பார்க்கக் கூடிய நிலை இருந்து பின்னர் ஒரு விண்மீனின் ஒளி மயங்கிய நிலையில், ஆறுமீன்கள்  கண்களுக்குத் தெளிவாகத் தெரியக் கூடிய கூட்டமாக இந்த விண்மீன் கூட்டம் மாறியுள்ளது.  இந்த விண்மீன் கூட்டம் அதனால் ஏழு சகோதரிகள்   'ப்ளீயட்ஸ்' (Pleiades 𒀯𒀯/Messier 45 /M45) விண்மீன் கூட்டம்   என்றும் அழைக்கப்படுகிறது. 

ஆனால்,  தமிழ் இலக்கியங்களில் அறுமீன் என்று கார்த்திகை விண்மீன்கள் குறிப்பிடப்படுகிறது.  எழுமீன் என்று ஏழு விண்மீன்களைக் கொண்ட 'பெருங்கரடி' அல்லது 'சப்தரிஷி மண்டலம்' (Ursa Major/Big Dipper) விண்மீன் கூட்டம் குறிப்பிடப்பட்டது.  பிற்காலத்தில் ஆறு கார்த்திகை விண்மீன்களும் ஆறு திருக்கார்த்திகைப் பெண்டிர் என்ற தொன்மக் கதையுடன் இணைக்கப்பட்டு சிவனின் மகனாக ஆறுமுகன் என்ற முருகக் கடவுளின் வளர்ப்புத் தாய்மார்களாகச் சித்தரிக்கப்பட்டனர் (முருக ஸ்கந்த இணைப்பு;  பரிபாடலில் முருக வணக்கம்.  தமிழர் பண்பாடும்-தத்துவமும், நா. வானமாமலை, பக்கம் 7-58; 1973 ). 


நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 269

1/29/2025      வானியலில் ஏழு சகோதரிகள்


#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi