Wednesday, January 29, 2025

வானியலில் ஏழு சகோதரிகள்

கார்த்திகை விண்மீன் கூட்டம் முழுநிலவுடன் இணைந்து காணப்படும் மாதம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது.  இக்காலத்தில் மழை ஓய்ந்து குளிர்காலம்  தொடங்கும். கார்த்திகைத் திங்களின் இரவில் அழகிய  சரவிளக்குகள் ஏற்றப்பட்டுக் கொண்டாடப்படும் கார்த்திகை விழா குறித்து கரிகால் சோழன் காலத்துச் சங்கப் பாடலும் ஒன்று உண்டு. 

      குறுமுயல் மறுநிறம் கிளர, மதிநிறைந்து,

      'அறுமீன்' சேரும் அகல்இருள் நடுநாள்;

      மறுகுவிளக்கு உறுத்து, மாலை தூக்கிப்,

      பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

      விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!

                  - நக்கீரர், அகநானூறு: 141-8

மழைபெய்தல் முடிந்துவிட்ட வானில் சிறிய முயலின் களங்கம் தெரியுமாறு உள்ள முழுநிலவுடன் 'அறுமீன்' என்னும் கார்த்திகை விண்மீனும் சேரும் இருள் பரவிய நாளில், தெருக்கள் தோறும்  வரிசையாக விளக்குகளை ஏற்றி, மலர் மாலைகளைத் தொங்கவிட்டு அலங்கரிக்கப்பட்ட பழைமையும் வெற்றியும் மிகுந்த நம்முடைய மூதூரில் நடக்கும் எல்லோரும் கொண்டாடும் இந்த விழாவை நம்முடன் கொண்டாடப்  பொருளீட்டச் சென்ற தலைவனும் வந்து சேர்வார் என்ற தோழியிடம் தலைவி மிக நம்பிக்கையோடும், முகமலர்ச்சியோடும் கூறுவதாக நக்கீரரின் இந்த அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.

அங்கி, அறுமீன், அழல் குட்டம், ஆஅல், ஆரல், கார்த்திகை மீன் என்ற பெயர்களிலும் கார்த்திகை விண்மீன் கூட்டம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை முறையே;  அங்கி (பரிபாடல்: 11-7); அறுமீன் (அகநானூறு: 141-8, நற்றிணை:202-9); அழல் குட்டம் (புறநானூறு: 229-1); ஆஅல் (மலைபடுகடாம்: 100); ஆரல் (கலித்தொகை: 64-4, பரிபாடல்: 9-7); கார்த்திகை (பரிபாடல்: 11-1)

      புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல்

      'அங்கி' யுயர்நிற்ப வந்தணன் பங்குவின்

                  - பரிபாடல் 11-7, வையை

புதன் மிதுனத்திலே நிற்க, கார்த்திகை (அங்கி) உச்சமாகி விடிதல் உண்டாக, குரு மீனத்திலே நிற்கும் பொழுது,  என வையையில்  வெள்ளம் வந்த காலத்தைப் பரிபாடலின் வரிகள் குறிப்பிடுகிறது.

      'அறுமீன்' கெழீஇய அறம்செய் திங்கட்

      செல்சுடர் நெடுங்கொடி போலப்

      பல்பூங் கோங்கம் அணிந்த காடே!

                  - நற்றிணை, 202-9

கார்த்திகை விண்மீன் பொருந்தியதும், அறச்செய்வதற்குச் சிறந்த மாதமான கார்த்திகைத் திங்களில், வரிசையாக அமைந்த விளக்குகளின் தொடர் போலக் கோங்க  மலர்கள் வரிசையாக மலர்ந்துள்ள மரங்களைக் கொண்டதால் காடு அழகு பெற்று விளங்குகிறது.

      ஆடுஇயல் 'அழல்குட்டத்து'

      ஆர்இருள் அரைஇரவில்

                  - கூடலூர் கிழார் புறநானூறு: 229

ஒரு பங்குனி மாதத்து முதற் பதினைந்து நாட்களுள், மேட இராசியில் உள்ள நெருப்பு போன்ற நிறமுடைய ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகிய கார்த்திகை என்னும் நட்சத்திரம்.

      அகல் இரு விசும்பின் 'ஆஅல்' போல

      வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை

                  - மலைபடுகடாம் - வரி 100

அகன்ற இருண்ட வானத்தின் கார்த்திகை என்னும் விண்மீன் போல, வெண்மையாக மலர்ந்தன மிக மெல்லிய கொடியை உடைய முசுட்டை.

      விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி

      அரவுக்கண் அணி உறழ் 'ஆரல் மீன்' தகை ஒப்ப,

                  - கலித்தொகை,  64-4

தலைவியின் பின்னலில் விரித்துச் சுற்றிய நுண்ணிய நூலில்  ஈரமான இதழ்களை உடைய பூக்கள்  தொடுக்கப்பட்டுள்ளது.  அதனால் அவளது  சடைப் பின்னல் படமெடுக்கும் பாம்பு போலவும், அதில் தொடுக்கப்பட்டுள்ள மலர்ச்சரம் வானத்தில் தோன்றும் கார்த்திகை மீன் வரிசை போலவும் உள்ளது.

      விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,

      தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி

      மணி மிடற்று அண்ணற்கு, மதி 'ஆரல்' பிறந்தோய்! நீ.

                  - குறும்பூதனார், பரிபாடல்: பாடல் 9

விரிசடை கொண்ட கங்கை நீரைத் தலையில் அணிந்த சலதாரியானவன் சிவன். அவன் நஞ்சைத் தொண்டையில் வைத்திருக்கும் அண்ணல். ஆரல் என்னும் கார்த்திகை மீனிலிருந்து அந்தச் சிவனுக்கு மகனாகப் பிறந்த முருகனே!

      'கார்த்திகை' காதிற் கனமகர குண்டலம்போற்

      சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்

                  - பரிபாடல் 10, மதுரை

விண்மீன்களாகிய  கார்த்திகை மகளிரின் காதிலிடப்பட்டிருக்கும்  பொன்னாலான  மகரக்குழை போன்று சிறந்து விளங்கி, செல்வம் பெருகிப் பொலிந்திருந்தது மதுரை நகரின் புகழ். 

கார்த்திகை  விண்மீன்களைக் குறிப்பிடும் சங்கப் பாடல்கள் பெரும்பாலும் வானில் விண்மீன்களின் நிலையையோ, தோற்றத்தையோ அல்லது அந்த விண்மீன்கள் ஒளிரும் மலர்ச்சரம்  போல இருப்பதாகவோ பெரும்பாலும் குறிப்பிட்டாலும், காலத்தால் பிற்பட்டதாகக் கருதப்படும் பரிபாடல் நூலின் பாடல்வரிகள் கார்த்திகை மகளிர், முருகக்  கடவுள் பிறப்பு  என்று தொன்மக் கதையில் தொடர்புள்ளதாக மாறுவதைக் காண  முடிகிறது.

கார்த்திகை விண்மீன் கூட்டத்தில் ஆறு விண்மீன்கள் என்றே தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது.  இதற்கும் முற்பட்ட காலத்தில் ஏழு விண்மீன்களை வெறும் கண்ணால் பார்க்கக் கூடிய நிலை இருந்து பின்னர் ஒரு விண்மீனின் ஒளி மயங்கிய நிலையில், ஆறுமீன்கள்  கண்களுக்குத் தெளிவாகத் தெரியக் கூடிய கூட்டமாக இந்த விண்மீன் கூட்டம் மாறியுள்ளது.  இந்த விண்மீன் கூட்டம் அதனால் ஏழு சகோதரிகள்   'ப்ளீயட்ஸ்' (Pleiades 𒀯𒀯/Messier 45 /M45) விண்மீன் கூட்டம்   என்றும் அழைக்கப்படுகிறது. 

ஆனால்,  தமிழ் இலக்கியங்களில் அறுமீன் என்று கார்த்திகை விண்மீன்கள் குறிப்பிடப்படுகிறது.  எழுமீன் என்று ஏழு விண்மீன்களைக் கொண்ட 'பெருங்கரடி' அல்லது 'சப்தரிஷி மண்டலம்' (Ursa Major/Big Dipper) விண்மீன் கூட்டம் குறிப்பிடப்பட்டது.  பிற்காலத்தில் ஆறு கார்த்திகை விண்மீன்களும் ஆறு திருக்கார்த்திகைப் பெண்டிர் என்ற தொன்மக் கதையுடன் இணைக்கப்பட்டு சிவனின் மகனாக ஆறுமுகன் என்ற முருகக் கடவுளின் வளர்ப்புத் தாய்மார்களாகச் சித்தரிக்கப்பட்டனர் (முருக ஸ்கந்த இணைப்பு;  பரிபாடலில் முருக வணக்கம்.  தமிழர் பண்பாடும்-தத்துவமும், நா. வானமாமலை, பக்கம் 7-58; 1973 ). 


நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 269

1/29/2025      வானியலில் ஏழு சகோதரிகள்


#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi 


Wednesday, January 22, 2025

ஆனந்தரங்கம் பிள்ளை தரும் வானியல் குறிப்புகள்


தமிழ் நாட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தியதில் குறிப்பிடத்தக்க வகையில் பாராட்டப்படுபவர் 18 ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை (1709 -1761) அவர்கள். 1761 ஆண்டின் ஜனவரி 12 ஆம் நாள் அவர் மறைந்தார். சென்னை பெரம்பூரில் பிறந்தவர் ஆனந்தரங்கம்.  புதுவையில் இருந்த அவரது தாய்மாமாவின்  தொடர்பால் புதுச்சேரிக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது.  பன்மொழி அறிவு பெற்றிருந்த ஆனந்தரங்கம், 1747 இல் இருந்து பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்பாளராக (துபாஷி) புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநர் டூப்ளே (French Governor Joseph-François Dupleix) அவர்களிடம் சுமார் 14 ஆண்டுகள் பணிபுரிந்தார்.  அரசு அலுவல்களில் மதிப்புமிக்க வகையில் பங்கு பெற்ற அவர் பல்வேறு தொழில், வணிகங்களில் ஈடுபட்டிருந்த பெருஞ்செல்வந்தராகவும் இருந்தார்.  நுணுக்கமாக நாட்டுநடப்புகளைக் கவனித்த அவரது பங்களிப்பு பிரெஞ்சு அரசிற்கும் தமிழக அரசுகளுக்கும் உதவியாக இருந்தது.  இக்கால கட்டத்தில், அவரது 24 ஆம் வயதிலிருந்து, அவர் மறைந்த 52 ஆம் வயதுவரை, அவர் அறிந்து கொண்ட நாட்டுநடப்புக்  குறிப்புகளைச் சற்றொப்ப கால்நூற்றாண்டுக் கால நிகழ்ச்சிகளை (06.09.1736 முதல் 12.01.1761 வரை)  நாட்குறிப்பாக ஆவணப் படுத்தியும் வந்தார்.


அவற்றைச் சொஸ்த லிகித தினப்படி சேதி குறிப்பு என்று அழைத்தார் ஆனந்தரங்கம். பலமொழிகளை அவர் அறிந்திருந்தாலும் எளிய பேச்சு வழக்குத் தமிழில் அவருடைய குறிப்புகள் உரைநடையில் அமைந்திருந்தன. இன்று தமிழ்நாட்டின் பதினெட்டாம் நூற்றாண்டின் அரசியல், வரலாறு, பண்பாடு மற்றும் சமூகப் பொருளாதார நிலவரங்களை, தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வியலை அறிந்துகொள்ளப் பெரிதும் துணைநிற்பவையாக அவருடைய குறிப்புகள் போற்றப்படுகின்றன. 

நாட்குறிப்பு வேந்தர் எனப் போற்றப்படும் ஆனந்த ரங்கப்பிள்ளை எழுதிய மூலக் குறிப்புகள் பாரீஸ் அருங்காட்சியகத்தில்  உள்ளன. அவை 12 தொகுதிகளாக பிரெஞ்சு  மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன, பின்னர் ஆங்கிலேயர்களும் இக்குறிப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர்.

சோதிடவியலிலும் வான இயலிலும் வல்லவராகவும் ஆனந்தரங்கம் பிள்ளை  இருந்தார். அவர் குறிப்புகளில் இச்செய்திகளும் இடம் பெற்றுள்ளன.  சோதிடக் குறிப்புகளைக் குறிப்பிடும் இடங்களில் கோள்கள் வானில் இருக்கும் நிலை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.  ஒருவரின், பிறப்பு இறப்பு போன்ற செய்திகளைப் பதியும் இடங்களிலும் இக்குறிப்புகள் இடம் பெறுகின்றன.  இவை தவிர்த்து வானியல் சிறப்பு நிகழ்வுகளாகக் கருதப்படும்

(அ) வால்மீன்களின் காட்சி
(ஆ) சூரியகிரகணம்
(இ) சந்திரகிரகணம்

ஆகியவையும் அவரது கீழ்க்காணும் நாட்குறிப்புத்  தொகுதிகளில் இடம் பெறுவதைக் காண முடிகிறது.


(அ)  வால்மீன்களின் காட்சி:

1743 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் நாள் (ருத்ரோத்காரி ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் தேதி,  ஆதிவாரம்‌ நாள்)‌

ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு:  சாயங்காலம்‌ மேற்கே ஒரு நக்ஷத்திரம்‌ வால்முளைத்த  நக்ஷத்திரம்‌ கண்டது அதை  தூமகேது வென்‌று சொன்னார்கள்‌.  இது நல்ல நாளைக்குக்‌ காணாதாம்‌. இதனாலே என்ன காலக்‌கேடோ தெரியாதென்று வெகு சனங்கள்‌ அங்கலாய்த்தார்கள்‌.

வால் மீன் குறிப்பு:

1743 டிசம்பர் 29 நாளில் தோன்றிய வால்மீன்  1744 பிப்ரவரி  11 ஆம் நாள் வரை தொடர்ந்து தெரிந்திருக்கிறது.

(ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - தொகுதி I [பக்கம்: 188, 191])

1744 பிப்ரவரி  11 ஆம் நாளன்று,  மராட்டியர் படை எடுப்பிற்கு அஞ்சி ஆற்காட்டில் வாழும் பொதுமக்கள் ஊருக்குள் ஒருவருமே இல்லாமல் ஊரையே காலி செய்து கொண்டு கோட்டைக்குள் தஞ்சம் தேடி நுழைய முற்படுகையில், நெரிசலில் சிக்கி இருபது முப்பது பேர் கோட்டை வாசலில் இறந்து விடுகிறார்கள்.  இனி என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை.  இது போன்ற வால்மீன் தோன்றுவது விபரீதத்தின் அறிகுறி என்று முற்காலத்தில் பெரியோர்கள் சொல்லுவார்கள். முன்னர் மேற்கே  (1743  டிசம்பர் 29 ஆம் நாள்) தோன்றிய  வால்மீன் நாளும் வளர்ந்துகொண்டே வருகிறது, என்று ஆனந்தரங்கம் குறிப்பிடுகிறார்.

இணைய வழித் தேடல் மூலம் இந்த வால்மீனை 'Great Comet of 1744' என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்று அறிய முடிகிறது.  தொடர்ந்து பல மாதங்கள் தெரிந்த, ஆறு  வால்கள் கொண்ட இந்த வால்மீனை  'கிளிங்கன்பெர்க்-செசோக்ஸ் வால்மீன்' ( C/1743 X1  / Comet  Klinkenberg–Chéseaux) என்றும் அழைத்துள்ளார்கள்.

1748 ஜூன் 5 அன்றும் வால்மீன் காட்சி (C/1748 K1) ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.  ஆனந்தரங்கம் இந்த வால்மீன் காட்சியையும் அரசாட்சி மாற்றம், மன்னரின் மறைவு, இழப்பு போன்றவற்றுடன் இணைத்துக் காண்கிறார்  (ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - தொகுதி V [பக்கம்: 38])


(ஆ) சூரியகிரகணம்:

1746 ஆம் ஆண்டு  மார்ச் 22 (குரோதன ஆண்டு பங்குனி மாதம் 13 ஆம் நாள், செவ்வாய்க்கிழமை)

நாட்குறிப்பு:  சூரிய உதயமான ஐந்து நாழிகைக்குள்ளே சூரியகிரகணம்‌ பிடித்துவிட்டது. இதற்குமுன்‌ பதினைந்தாம்நாள்‌ பருவத்தன்று சந்திரகிரணம்‌.

சூரிய கிரகணம் குறிப்புகள்:

1746 மார்ச் 22 நாளில். . .  (ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - தொகுதி I [பக்கம்: 268])

 

(இ) சந்திரகிரகணம்:

1739 ஜூலை 20 (சித்தார்த்தி ஆண்டு, ஆடி மாதம் 8 -ஆம் நாள்,  திங்கட்கிழமை)

நாட்குறிப்பு:  இந்த நாள் சாயங்காலம் அஸ்தமித்து நாலு நாழிகைக்கு மேல் சந்திர கிரணம் பதினோரு மணிக்கு விட்டுப்போச்சுது.   ஆனால் இந்தக் கிரணம் 9'10" கிரணம் முக்காலே மூணுவீசம்.

சந்திரகிரகணம் குறிப்புகள்:

1739 ஜூலை 20;   1742 நவம்பர் 12; 1746 மார்ச் 07 நாட்களில். . .  (ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - தொகுதி I [பக்கம்: 75, 156, 268])

1749 டிசம்பர் 23  நாளில். . .      (ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - தொகுதி VI [பக்கம்: 282])

ஆனந்த ரங்கப்பிள்ளை தரும் கிரகணக் குறிப்புகள் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வெளியிட்டிருக்கும் வரலாற்றுக்  கிரகணக்  குறிப்புகளுடன் (பார்க்க: https://eclipse.gsfc.nasa.gov/LEcat5/LE1701-1800.html) இசைந்து செல்வதைக் காண முடிகிறது.


நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 268
1/22/2025      ஆனந்தரங்கம் பிள்ளை தரும் வானியல் குறிப்புகள்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi 



Wednesday, January 8, 2025

கதிர் நிலவு மறைப்புகளும் சரோஸ் சுழற்சியும்


இயற்கையில் நிகழும்  வானியல் நிகழ்வுகளான கதிர், நிலவு மறைப்புகள் (Solar and lunar eclipses) இன்றைய பொதுவழக்கில் சூரிய, சந்திர கிரகணங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.  சூரியகிரகணச் செய்திகள் குறைந்த அளவிலும் சந்திரகிரகணச் செய்திகள் அதிக அளவிலும் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

சங்க இலக்கியத்தில் சூரியகிரகணச் செய்திக்கு எடுத்துக்காட்டாக  மாறோக்கத்து நப்பசலையார் பாடிய பாடல் ஒன்றைக் காணலாம்.   போரில் சோழவேந்தர்கட்குத் துணை நின்று வெற்றி ஈட்டித் தந்தமையால் “மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்” என்ற பட்டம் பெற்றவன் மலையமான் திருமுடிக்காரியின் வழித்தோன்றல்.  இவனைப் பாராட்டிப் பாடும் பாடலில் (புறநானூறு-174), சோழநாடு கதிரவனை இழந்த உலகம் போல் தன் அரசனை இழந்து வருந்தியது. அப்பொழுது கதிரவனாகிய சோழனை மீட்டு ஒளி பெறச் செய்தவனே எனக் குறிப்பிடுகிறார் புலவர்.

     அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
     சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
     இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
     இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
     அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு

பாரதப் போரில் அசுரர்கள் மறைத்த சூரியனை (சூரியகிரகணம்) மீட்டு வந்த கண்ணன் என்ற தொன்மக்கதையின் கருத்து இப்பாடலில் ஒப்பிடப்படுகிறது.

சந்திரகிரகணச் செய்திக்கு எடுத்துக்காட்டாக நற்றிணைப் பாடல் ஒன்றையும் காணலாம்;

"பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்" (நற்றிணை 128)

என்ற பாடல் பாம்பு கவர்ந்த மதியைப் போல நெற்றியின் ஒளி மறைபடவும் என்று சந்திர கிரகணத்தைக் குறிப்பிடுகிறது. 

சற்றும் அறிவுக்குப் பொருந்தா வகையில் கூறப்படும்  'சந்திரனையும் சூரியனையும் பாம்பு விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது'  என்ற  தொன்மப் புரட்டுகளைக் குறித்து கேள்வி எழுப்புகையில்; கிரகணங்களைப் பாமர மக்கள் புரிந்து கொள்வதற்காகப்  பாம்பு விழுங்கியது, ராகு விழுங்கியது என்று உருவகப் படுத்தப்பட்டது என்ற  விளக்கம் கிடைப்பதும் இன்றுவரை வழக்கம்.  

சந்திரனின் சுற்றுப்பாதையானது சூரியனைச் சுற்றி வரும் புவியின் சுற்றுப்பாதையில் சுமார் 5° சாய்ந்துள்ளது. சூரியன் மற்றும் சந்திரனின் பாதைகள் வான மண்டலத்தில் (celestial sphere) வெட்டும் புள்ளிகளுக்கு நம் பண்டைய  வானியலாளர்கள் ராகு, கேது  என்று பெயரிட்டுள்ளனர். அவை வடக்கு மற்றும் தெற்கு சந்திர முனைகள் (lunar nodes) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை நிழல் கிரகங்கள் என்று கூறப்பட்டு நவக்கிரகத் தொகுப்பில் வைத்து வழிபடப்பட்டாலும் இவை கோள்கள் அல்ல. கிரகணங்கள் ஏற்படுவதன்  காரணம் அறியாத முன்னோர்கள், ராகு கேது நகர்வு, அதனால் ஏற்படும் கிரகணங்களால் கெடுதல் நேரும் என்று அஞ்சியது போல இன்றைய அறிவியல் அறிவொளி வெளிச்சம் பெற்றோர் அஞ்சுவதில்லை.  பார்வை பாதுகாப்புக்குத் தக்க முன்னேற்பாடு  செய்து கொண்டு  சூரியகிரகண வானியல் நிகழ்வுகளைப்  பார்த்து மகிழ்வது இன்றைய நாளில் வழக்கமாகிவிட்டது. 

கதிரவன், நிலவு, புவி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையும் பொழுது  “கிரகணம்” (ஒளி மறைப்பு) ஏற்படும் என்பது இன்றைய நாளில் பள்ளி மாணவரும் நன்கு அறிந்துள்ள அறிவியல் விளக்கம்.  புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது, அப்பொழுது புவியின் பகுதியில் நிலவின் நிழல் விழுந்து இருள்கிறது.  முழு நிலவு காலகட்டத்தில் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் புவி நேர்க்கோட்டில் நகர்கையில், புவியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது, அதனால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.  ஒரு முழுச் சந்திரகிரகணம் ஒரு மணிநேரத்திற்கு மேலும் நீடிக்கக் கூடும்.  ஆனால் ஒரு சூரியகிரகணத்தின் அதிக அளவுக் காலம் 71/2 நிமிடங்கள் மட்டுமே.  நிழல் மறைக்கும் அளவைக் கொண்டு சூரியகிரகணங்களை முழுக்கிரகணம், வளைய கிரகணம் அல்லது பகுதி கிரகணம் (total, annular, partial) என்று வகைப்படுத்துவது வழக்கம்.

இந்தக் கிரகணங்கள் சுழற்சியாக மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஏற்படுவதையும், இக்காரணத்தால் எதிர்காலத்தில் வரவிருக்கும் கிரகணங்களைக் கணிக்க முடிவதையும்  பண்டைய காலத்திலேயே மக்கள் நன்கு அறிந்திருந்தனர்.  சந்திர, சூரிய கிரகணங்கள் மீண்டும் மீண்டும் நிகழும் கிரகணங்கள் சுழற்சி காலகட்டம் 'சரோஸ் சுழற்சி' (Saros cycle) என அழைக்கப்படுகிறது.  இப்பெயர் பிற்காலத்தில் எட்மண்ட் ஹேலியால் 17 ஆம் நூற்றாண்டில் (Edmond Halley in 1686) சூட்டப்பட்ட ஒன்று.  ஆனால்,  பண்டைய மக்கள் இந்தச் சுழற்சியின் கால அளவை அறிந்திருந்தனர், எதிர்காலத்தில் நிகழவிருக்கும் கிரகணங்களைக் கணித்திருந்தனர் என்பதற்குத்  தொல்லியல் சான்றுகள் உள்ளன.  சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்னர் பண்டைய சுமேரியர்கள் அறிந்திருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.  கிரேக்கர்கள் கிரகணங்களைக் கணிப்பதற்கு "ஆன்டிகிதெரா வானியல் கணிப்பொறி" (Antikythera Mechanism)என்ற கணிப்பொறியை கி.மு.150இல்  பயன்படுத்தினர். 

ஒரு சரோஸ் சுழற்சியின் போது, பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஏறக்குறைய ஒரே மாதிரியான நிலைக்குத்  திரும்புகின்றன, அப்பொழுது ஒரே மாதிரியான கிரகணம் ஏற்படும்.  தோராயமாக ஒரே போன்ற நிலைக்குப் புவி, சூரியன், சந்திரன் திரும்பி, ஒரே போன்ற கிரகணம் ஏற்படும் சரோஸ் சுழற்சியின் இடைவெளியின் காலம் சுமார்  6,585.3 நாட்கள் (அல்லது 18 ஆண்டுகள், 11 நாட்கள் மற்றும் 8 மணிநேரம் ஆகும்). எடுத்துக் காட்டாக; ஜூன் 30, 1973 அன்று நிகழ்ந்த சூரியகிரகணம் போலவே ஜூலை 11, 1991 அன்று நிகழ்ந்த சூரியகிரகணமும் அமைந்தது.  ஒரு சரோஸ் சுழற்சியின் கால இடைவெளி 70 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகணங்களைக் கொண்டிருக்கும். பெரும்பாலான ஆண்டுகளில் இரு சந்திரகிரகணங்கள் ஏற்படும்; மற்றும் சில ஆண்டுகளில் ஒன்று அல்லது மூன்று அல்லது கிரகணங்கள் எதுவும் நிகழாமலும் போகலாம்.   நிலையாக ஒரே இடத்தில் இருக்கும் ஒருவர் ஒரு சரோஸ் சுழற்சி காலகட்டத்தில்  அப்பகுதியில் 19 அல்லது 20 சந்திரகிரகணங்களைக் காண முடியும். 


 நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 266
1/8/2025      கதிர் நிலவு மறைப்புகளும் சரோஸ் சுழற்சியும்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi