Wednesday, December 18, 2024

புலவர் தந்த வானியல் குறிப்பு


பண்டைய தமிழர் விண்மீன்களைத் தெளிவாக இனம் பிரித்து நாள்மீன் (நாண்மீன்), கோள்மீன் (கோண்மீன்) என்றும் வகைப்படுத்திப் பதிவு செய்துள்ளனர். வானத்து  நாண்மீன்கள் சூரியன் போல தன்னொளி கொண்டும்,  கோண்மீன்கள் எதிரொளி கொண்டும் மின்னுபவை.

 
     'நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
     நாண்மீன் விராய கோண்மீன் போல'

என்று கூறும் பட்டினப்பாலை பாடல் (வரிகள் 67-68) இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

வானியலில், இவ்வாறான கோள்கள் மற்றும் விண்மீன்களின் நிலைகளைப் படங்களில் குறிப்பது 'வானளவையியல்' (Astrometry) என்றழைக்கப்படுகிறது. படங்களில் குறிக்கப்படுவது போலச் சங்கப் பாடல் ஒன்றும்  கோள்கள் மற்றும் விண்மீன்களின் நிலைகளைப் பாடலில் குறிப்பிடுகிறது.

 
     'விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
     எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
     தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
     உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
     வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
     புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
     அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
     இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
     வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
     மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
     பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
     மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
     எதிர் வரவு மாரி இயைக' என இவ் ஆற்றால்
     புரை கெழு சையம் பொழி மழை தாழ,
     நெரிதரூஉம் வையைப் புனல்.

[மழை பொழிய நீர் பெருகி வையையில் வந்தடைந்தது புதுப்புனல்;  பரிபாடல் 11: வையை,  பாடியவர் : புலவர் நல்லந்துவனார்]

விண்ணில் உள்ள 3 வீதிகளிலும், ஒவ்வொரு வீதியிலும் 9  விண்மீன்கள் அமைவதாகப் பகுத்து, அவை  12 இராசிகளும் கொண்ட வான மண்டிலத்தில் அமைவதாகப் பரிபாடல் குறிப்பிடுகிறது.   புலவர் நல்லந்துவனார் பாடலைப் படிப்பவருக்குத்  தாம் கண்ட  வான மண்டிலத்தின்  கோள்களின் இருப்பைக்  கீழ்வருமாறு  காட்சிப் படுத்துகிறார்:  இடபத்தில் வெள்ளி; மேடத்தில் செவ்வாய்;  மிதுனத்தில் புதன்; கடகத்தில் சூரியன்;  மீனத்தில் குரு; மகரத்தில் சனி-சந்திரன்-ராகு; என்று பாடல் வரிகளில் நேரடியாகக் குறிப்புகள்  கிடைக்கிறது. வானியல் அல்லது சோதிட அடிப்படை கற்றவர்களால்  புலவர் சொல்லாத, காலம் மற்றும் வானியல் பற்றி மேலும் சில குறிப்புகளையும் புரிந்து கொள்ள முடியும்.

அவை;  சூரியன் கடகத்தில் இருக்கும் நிலையால் அது ஆடி (ஜூலை) மாதத்தில் ஒரு நாள். சூரியனுக்கு நேர் எதிர் நிலையில் மகரத்தில் சந்திரன் இருப்பதால் அன்று முழு நிலவு நாள்; அத்துடன் இராகுவும் மகரத்தில்  இருப்பதால் அதற்கு நேர் எதிர் நிலையில் கடகத்தில் சூரியனுடன் கேதுவும் இருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட ஓர் அமைப்பு முழுநிலவு நாளில் இருந்தால் அன்று  நிலவு மறைப்பு நாள் அல்லது சந்திர கிரகண நாளும் கூட.  இத்தகைய நாளில் பொதிகை அமைந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பெருமழை பொழிய, வையையில் புதுப்புனல்  வந்ததாகப் பாடலின் மூலம் அறிய முடிகிறது.

 

இவ்வாறு காலக்குறிப்பு கொடுக்கக் கூடிய தரவுகள் இருக்கையில், அந்நாளின் வானியல் அமைப்பை மீள் உருவாக்கம் செய்து குறிப்பிடப்பட்ட நாளை அறிவது வானியல் அறிஞர்களின் வழக்கம்.  தொல்லியல் தடயம் இது போன்ற ஒரு குறிப்பைக் கொண்டிருந்தால்,  தொல்லியல் ஆய்வாளர்கள் வானியல் அறிஞர் உதவியுடன் காலக்குறிப்பை இணைத்து தங்கள் தடயத்தின் வரலாற்றுக்காலம்  குறித்தும் அதன் பொருள் என்ன என்றும் விளக்கம் தருவார்கள்.   

ஒருவர் பிறக்கும் நேரத்தில், வானில் விண்மீன்கள்  அல்லது கோள்கள் இருக்கும் நிலையினை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் ஆயுள், இயல்புகள், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கணிப்பது சோதிடமாகும்.  ஆனால் பரிபாடலின் குறிப்பு அத்தகைய பலன் சொல்லும் நோக்கம் கொண்டதல்ல.  இந்த நாளில் ஓர் ஆழிப்பேரலை தமிழகத்தைத் தாக்கியது என்று ஒரு நாளைக்  குறிப்பிடுவது போல, தென்மேற்குப் பருவ மழை இவ்வாறாக இக்குறிப்பிட்ட நாளில் பொழிந்து, வையையில் புதுப்புனல் வந்தது என்பதை மட்டுமே பாடல் அறியத் தருகிறது. 

தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் வானியலாளருக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் வானியல் அட்டவணைகள் உருவாக்கிய எல்.டி.சாமிக்கண்ணு இப்பாடலில் நாள்குறிப்பு மிகத் தெளிவாகப்  பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், அவ்வாறு சிறந்த முறையில் செய்யப்பட்ட  ஒரு சில பழந்தமிழ்ப்  பாடல்களில் இதுவும் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான பஞ்சாங்கக் கணக்கிடுவோர் இப்பாடல் குறிப்பிடுவது எந்த நாள் என்று கணிக்க இயலவில்லை, இப்பாடலின் குறிப்பில் பிழை இருக்கக் கூடும் என்று கூறுவதுண்டு. வானியல் கணிதத்தின் அடிப்படையில்  எல்.டி.சாமிக்கண்ணு இப்பாடலில் குறிப்பிடப்படும் நாள் கி. பி. 634 ஆண்டின் ஆடித்திங்கள் நாள் என்று குறிப்பிடுகிறார். ஆனால், பேராசிரியர் சீனிவாச ஐயங்கார் போன்ற சிலர் இக்கணிப்பை ஏற்கவில்லை.

இப்பாடல் குறிப்பிடப்படும் ஆடித் திங்கள் பருவமழை போலவே, 2024ஆம்  ஆண்டின் ஜூலை மாதத்திலும் (ஜூலை 30, 2024) அதே தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிக அளவில் பெய்த மழையால் வயநாட்டின் புத்துமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் அதிக அளவில் உயிரிழப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 



 நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 263
12/18/2024      புலவர் தந்த வானியல் குறிப்பு
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi