புவிக்கு 3 வகைச் சுழற்சிகள் உள்ளது. தன்னைத்தானே 23.5 பாகையில் சாய்மானச் சுற்றாகச் சுழல்வதை நாளாகவும்; கதிரவனை நீள்வட்டப் பாதையில் சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர்வதை ஓர் ஆண்டாகவும் கணக்கிடுகிறோம். மூன்றாவதாகப் புவியின் அச்சு சுழல்வதை ‘அச்சுத்திசை மாறுமியக்கம்’ (precessional motion) என்கிறோம். புவி தன் அச்சில் 23.5 பாகை சாய்மானச் சுற்றாகத் தன்னைத்தானே சுழல்கையில், அது சாய்வாகச் சுழலும் பம்பரம் போலத் தள்ளாடிச் சுற்றும். கதிரவன் நிலவு ஈர்ப்புவிசைகளுக்குப் புவி ஆட்பட்டு அதன் நிலநடுக்கோட்டுப் பகுதி பருத்துள்ளது, அது புவியின் சுழற்சியின்மேல் ஏற்படுத்தும் தாக்கம்தான் இந்த அச்சுத்திசை நகர்வுக்குக் காரணமாகும்.
இரவில்
புவியின் வடக்குத் துருவம் துருவ விண்மீனை
(Polaris)
நோக்கி இருக்கும். ஆனால் இந்த அமைப்பு நிலையானது அல்ல. முன்னர் கிமு
12,000 ஆண்டுகள் காலவாக்கில் அபிஜித் (Vega) வடதுருவ
விண்மீனாக இருந்தது. அச்சுத்திசை மாறும்
நகர்வினால் காலப் போக்கில் கிபி 13,727ஆம் ஆண்டில் அபிஜித் மீண்டும் வடதுருவ விண்மீனாக மாறும். அந்த
அளவிற்குப் புவியின் அச்சு சிறிது சிறிதாக
விலகிச் செல்லும் இயல்பு கொண்டது.
அதாவது புவியின் அச்சு தன்
சுழற்சியில் 72 ஆண்டுகளுக்கு ஒரு பாகை விலகும்.
இவ்வாறு புவியின் அச்சு ஒரு முழுவட்டச் சுழற்சிக்கு எடுத்துக் கொள்ளும் காலம் சுமாராக 26,000 (25,772) ஆண்டுகள். மிகவும் மெதுவான நகர்வு என்பதால் இதை நம்மால் உணர முடியாது. இந்த நகர்வின் காரணமாக வான மண்டலத்தில் (celestial sphere) நாம் காணும் விண்மீன்களின் இருப்பிடம் மாற்றம் கொண்டு தெரியும். தொடர்ந்து வானில் கோள்களின் விண்மீன்களின் நகர்வுகளை ஆவணப்படுத்தி, பல ஆண்டுகளுக்கான தரவுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தாலே இதைக் கண்டு கொள்ள முடியும். அவ்வாறு ஆய்வு செய்து இந்தப் புவி அச்சு விலகலை முதலில் அறிவித்தவர் கிமு 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வானியலாளர் ஹிப்பர்கஸ் (Hipparchus, 190–120 BC).
அச்சுத்திசை மாறுமியக்கம் காரணமாகப் புவியின் பருவ ஆண்டிற்கும் (tropical year), விண்மீன் அடிப்படை ஆண்டுக் கணக்கிற்கும் (sidereal year) இடையே சுமார் 20.5 நிமிடங்கள் (1,224.5 வினாடிகள்) வேறுபாடு உண்டு. பருவ ஆண்டின் காலஅளவு குறைவாக இருப்பதால் காலக்கணிப்பில் பருவநிலை முந்திவிடுகிறது. இது பருவகால முந்துநிலைக்கு (precession of the equinoxes) காரணமாக அமைகிறது.
இன்றைக்கு 60 அகவைக்கும் மேல் இருப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும் பொங்கல் பண்டிகை நாள் தள்ளிப் போகிறது என்பது. அவர்கள் யாவரும் தங்கள் இளவயதில் ஜனவரி 14 அன்று தைப் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள். இப்பொழுது சில ஆண்டுகள் ஜனவரி 15 தைப் பொங்கல் நாளாக இருக்கிறது. இதற்குக் காரணம் காலக்கணக்குப் பிழை என்று வானியல் அறிஞர்கள் சொல்லுவார்கள். பஞ்சாங்கக் கணிப்பும் மெய்யான வானவியல் இயக்கமும் வேறுபட்டு நிற்கிறது. அச்சுத்திசை மாறுமியக்க வானியல் மாற்றத்தைப் பஞ்சாங்கம் கணிக்கத் தவறிவிட்டது என்பதைச் சொன்னால் சோதிடர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
இந்தியாவில் காலக்கணக்கைச் சீர் செய்யும் முயற்சி மேற்கொள்ளப் படவே இல்லையா என்ற கேள்விக்கு, முன்னர் செய்யப்பட்டுள்ளது. அசுவினி பரணி என்று வரிசை தொடங்கும் 27 நாள் விண்மீன்களில் அசுவினி வரிசையில் முதல் விண்மீன் என எடுத்துக் கொள்ளப்பட்டது கிபி ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் தான். அதற்கும் முன்னர் கார்த்திகை முதல் விண்மீனாக இருந்தது. அச்சுத்திசை மாறுமியக்கம் காரணமாக மேஷ ராசியில் கதிரவன் நுழையும் நாளில் உள்ள விண்மீன் அசுவினியாக மாறிவிட்டதை உணர்ந்து அதை நாள்மீன் கணக்கில் முதல் விண்மீன் எனக் கணக்கு வரிசை மாற்றிக் கொள்ளப்பட்டது.
இந்த
மாற்றத்தைத் தமிழ் இலக்கியமான மணிமேகலை
காப்பியத்தின் (11.பாத்திரம் பெற்ற காதை, வரிகள் 40-45)
பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தகவல் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்
புத்தர் பிறந்ததும் ஞானம் பெற்றதும் வைகாசித் திங்கள் விசாக நட்சத்திரத்தில்; வைகாசி முழுநிலவு நாளில். மணிமேகலை கதைப்படி, மணிமேகலை அமுத சுரபி பெற்றதும் அந்நாளில்தான், அவளுக்கும் முன்னர் அமுத சுரபியை வைத்திருந்த ஆபுத்திரன் மறுபிறவி எடுத்ததாகக் கூறப்பட்டதும் வைகாசி மாதத்து விசாக நாளில்தான். ஆக, புத்தக மதத்தில் சிறப்பான நாளாகக் கருதப்படுவது வைகாசி விசாகா நாள்.
இப்பாடலில் இரண்டு இடங்களில் 'மீனத்து இடைநிலை மீனம்' என்று வருகிறது. அதாவது
விசாகா நட்சத்திரத்தை, 27 நட்சத்திரங்களுள் நடுவில் 14 ஆவதாக உள்ள நட்சத்திரம் என்கிறது
பாடல். ஆனால், இன்றைய
நாளில் சித்திரைதான் 14 ஆவது நட்சத்திரம் (அசுவினியில் தொடங்கி ரேவதியில்
முடித்தல்). மாறாக, கார்த்திகை
நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாக எண்ணத் தொடங்கி பரணியில் முடித்தாலே பாடல்
சொல்வது போல விசாகம் நடுவில் உள்ள 14 ஆவது
நட்சத்திரமாக அமையும். 'மீனத்து இடைநிலை மீனம்' என்பது விசாக நட்சத்திரத்தையே குறிப்பதாக
உ.வே.சா. கூறுவார். மணிமேகலை எழுதப்பட்ட காலத்தில் கார்த்திகை நட்சத்திரம்
மேஷ ராசியின் தொடக்கமாக வழக்கத்தில் இருந்த காலம் என்பது தெரிகிறது. வராகமிகிரர் (கி.பி. 505 – 587) காலத்தில்
அவரால் வானியல் மாற்றம் கணக்கில் கொள்ளப்பட்டு புதியமுறை நடைமுறைக்கு வந்தது.
(இலக்கியத்தில் சோதிடம், முனைவர் தி .மகாலட்சுமி,1996).அந்த அடிப்படையில் மணிமேகலை நூலின் காலத்தைக் கி.பி.6ஆம்
நூற்றாண்டுக்கு முந்தையது என்பார். ஆனால்
இதன் பிறகு காலக்கணக்கைச் சீர் செய்யும் முறை பிற்காலத்தில்
கைவிடப்பட்டுள்ளது.
10/9/2024 அச்சுத்திசை மாறுமியக்கம்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi