சிலப்பதிகாரம் குறித்த கால ஆராய்ச்சி தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலத்தை நிர்ணயிப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ளது. மூவேந்தர்களும் குறிப்பிடப்படும் இலக்கியம் சிலப்பதிகாரம். சோழ பாண்டிய சேர நாடுகளையும், அவற்றின் வேந்தர்களையும் நூலின் ஆசிரியர் இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் சேரன் செங்குட்டுவனும்; அவன் இளவலும் நூலின் ஆசிரியருமான இளங்கோ அடிகளும் சோழன் கரிகால் பெருவளத்தானின் கொள்ளுப் பேரர்கள். (இவர்கள் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணந்த அவர்கள் தாய் நற்சோணை, கரிகால் வளவனின் மகன் மணக்கிள்ளியின் மகள்). கரிகால் வளவனின் காலம் முதல் நூற்றாண்டு என்றும்; கோவலனின் இறப்பிற்குக் காரணமான பாண்டியன் நெடுஞ்செழியன், கண்ணகிக்கு வஞ்சிமாநகரத்தில் பத்தினிக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்த சேரன் செங்குட்டுவன், அவ்விழாவுக்கு வருகை தந்த ‘கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்’ (முதலாம் கஜபாகுவின் ஆட்சிக் காலம் கி.பி 114-136, என்பது இலங்கையின் மகாவம்சம் தரும் தகவல்), சேரர்கள் நட்பு பாராட்டிய தக்காணப் பகுதியை ஆண்ட சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) யாவரும் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் என்பதையும் தமிழ் இலக்கிய வரலாறுகள் நூல்கள் மூலம் அறியமுடியும் (1. பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர் & 2. பண்டைத் தமிழக வரலாறு களப்பிரர் துளு நாடு —மயிலை சீனி. வேங்கடசாமி).
தமிழ் இலக்கியங்களின் காலத்தை, அந்தந்த இலக்கியத்தில் பொதிந்துள்ள வானியல் குறிப்புகளான அகச்சான்றுகள் மூலம் நிர்ணயிக்க முற்பட்டவர் எல்.டி.சாமிக்கண்ணு (1864-1925). தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணித்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் எல்.டி.சாமிக்கண்ணு வானியலாளராகவும் பெரும் பங்காற்றியுள்ளார். இந்தியப் பஞ்சாங்கத்தை ஆராய்ச்சி செய்து கி.பி. 700-2000 காலகட்டத்து வானியல் அட்டவணைகள் உருவாக்கி 3000 பக்கங்களுக்கு மேல் உள்ள வானியல் குறிப்புகளை 7 தொகுதிகளாக வெளியிட்டார். கணினி இல்லாத சென்ற நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வானியலாளருக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் இவர் உருவாக்கிய வானியல் அட்டவணைகள் (எஃபிமெரிஸ் / ephemeris) என்பது ஓர் அரும்பணியின் வெளிப்பாடு. இவர் உருவாக்கிய பஞ்சாங்க அட்டவணைகள், தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் கல்வெட்டு செப்பேடுகளில் குறிப்பிடப்படும் காலத்தை நிர்ணயிக்கப் பெரிதும் உதவின.
(1) பரிபாடல்; (2) சிலப்பதிகாரம்; (3) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, கொற்கைக்கிழான் நற்கொற்றன் என்பவருக்கு வழங்கிய கொடை பற்றிய வேள்விக்குடிச் செப்பேடு; (4) சீவக சிந்தாமணி ஆகிய இந்த நான்கு மட்டுமே தமிழ் கால ஆராய்ச்சிக்கு உதவும் நாள்குறிப்பு தருபவை என்கிறார் எல்.டி.சாமிக்கண்ணு. ஒவ்வொரு இலக்கியமும் அதில் பொதிந்துள்ள தரவுகளின் சான்றுகளின் அடிப்படையில் தனித்தனியாகக் கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது அவர் கொள்கை. இவர் தன் ஆய்வுகளின் முடிவாக; மூன்று தமிழ்ச் சங்கங்களைக் கூறும் இறையனார் அகப்பொருள் உரை தரும் செய்திகள் ஒரு புனைவு, ஆழ்வார்களின் பிறப்பு நட்சத்திரங்கள் போன்ற குறிப்புகள் பிற்காலத்தில் புனையப்பட்டவை, தொல்காப்பியத்தின் காலம் ஆறாம் நூற்றாண்டு, பரிபாடலின் காலம் ஏழாம் நூற்றாண்டு, சிலப்பதிகாரம் கூறும் காலம் எட்டாம் நூற்றாண்டு என்ற கருத்துகளை முன் வைத்துள்ளார். பெரும்பாலும் பிற்காலத்தில் எழுதுபவர், முற்காலத்தில் நடந்த நிகழ்வுகளுக்கான நாட்குறிப்பை தாங்கள் வாழும் சமகாலத்துப் பஞ்சாங்கத்தில் இருந்து எடுத்தாள்வார்கள் என்பதும் இவர் கருத்து.
எல். டி.
சாமிக்கண்ணு அவர்களின் கோணத்தில்; பின்வரும் காரணங்களால் நூலின்
காலவரையறை செய்ய சிலப்பதிகாரம் மிக நல்ல வாய்ப்பு அளிக்கிறது. (1) நூல் தரும்
செய்தி சரியான தேதிக் குறிப்பு ஒன்றை அளிக்கிறது; (2)
அக்குறிப்பும் இன்றைய நாளில் நாம் பயன் கொள்ளும் நாள், கிழமை,
நட்சத்திரம் என்ற அதே முறையில் கொடுக்கப்பட்டுள்ளது; (3) மூல குறிப்பிடும் நாளைத் தெளிவுபடுத்திக் கொள்வதன் மூலம் சங்ககாலத்தை
வரையறுக்க முடியும் என்ற காரணங்களால் இலக்கியங்களின் காலவரையறை செய்ய
சிலப்பதிகாரம் பெருமளவில் உதவும் நூல் என்று அவர் கருதுகிறார்.
நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 276
3/19/2025 வானியல் குறிப்புகள் மூலம் சிலப்பதிகாரக் காலக்கணிப்பு
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi