Wednesday, March 26, 2025

மதுரை தீக்கிரையான நாள்

எல். டி. சாமிக்கண்ணு அவர்களின்  கருத்துப்படி, சிலப்பதிகாரக் காப்பியம் முற்காலத் தகவல்களைக் கொண்டு பிற்காலத்தில் எழுதப்பட்ட ஓர் இலக்கியம் (கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' போல).  அவ்வாறு எழுதிய புலவர் சேரன் செங்குட்டுவனின்  தம்பி இளங்கோவடிகளின் பெயரைப் புனைபெயராகக் கொண்டு எழுதிய முறை  ஒரு சிறந்த கற்பனை என்கிறார் (An Indian Ephemeries A.D. 700 to A.D. 1799, Vol. I, Part I. L. D. Swamikannu Pillai, Appendix (iii) Notes on the chronology of early Tamil literature Pages 459-470, 1922).  இவர் நூலில் உள்ள சிலப்பதிகாரக் காலக்கணிப்பு கட்டுரை, திருச்சி, செயிண்ட் ஜோசப் கல்லூரியின் இதழில் வெளியான இவருடைய கட்டுரையின் சுருக்கம்.  எல். டி. சாமிக்கண்ணு தன்னுடைய சிலப்பதிகாரக் கால ஆய்வைச் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் உரையின் மீது கட்டமைக்கிறார். அடியார்க்கு நல்லார் 12 ஆம் நூற்றாண்டினர்.  எனவே; இவரின் நாள் கணிப்புகள் இளங்கோ இயற்றிய காப்பிய வரிகளில் கொடுக்கப்படும் தகவலுக்கு, பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட  விளக்கவுரையின் அடிப்படையிலானது  என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கீழ்க்காணும் 2 பாடலுக்கான விளக்கவுரையின் வானியல் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரம் நூலின் மீதான காலக் கணிப்பு அமைகிறது:

1.    வான் கண் விழியா வைகறை யாமத்து

     மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க

     கார் இருள் நின்ற கடை நாள் கங்குல்

           [சிலப்பதிகாரம், 10-வது நாடுகாண்காதை, வரி 1-3]

[பொருள்:  உலகிற்குச் சிறந்த கண்ணாகிய ஞாயிறு தோன்றாத வைகறையாகிய யாமத்தில்,   விண்மீன் விளங்கும் வானத்தினின்றும் வெள்ளிய திங்கள் நீங்கிற்றாககரிய இருள் இறுதிக்கண் நின்ற இராப்பொழுதில்; — ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை]

 

2.   ஆடி திங்கள் பேர் இருள் பக்கத்து

     அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று

     வெள்ளி வாரத்து ஒள் எரி உண்ண       

     உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும்

     உரையும் உண்டே நிரை தொடியோயே

           [சிலப்பதிகாரம், 23-வது கட்டுரைகாதை, வரி 133-137]

[பொருள்:  ஆடித்திங்களின் தேய்பிறை எட்டாம் நாளான கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று, ஒளிரும் தீயினால் எரிந்து அழிந்து, புகழ் மிக்க மதுரை நகரத்தோடே அதன்  அரசனுக்கும் அழிவு நேரும் என்னும் ஒரு  கூற்றும் உண்டு;— ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை]

அடியார்க்கு நல்லார் வழங்கிய உரையின்படி; பூம்புகாரில் சித்திரை 28 ஆம் நாள் முழுநிலவு அன்று சித்திரை விண்மீன் கூடிய நாளில் இந்திர விழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது, 28 நாட்கள் விழா நடைபெற்ற பின்னர் வைகாசி 28 அன்று  கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுறுகிறது.  இந்த வைகாசி முழுநிலவிற்கு முதல்நாள், வைகறையில் நிலவு மறைந்து, கதிரவன் தோன்றாத பொழுதில் கண்ணகியும் கோவலனும் பூம்புகாரிலிருந்து மதுரைக்குக் கிளம்புகிறார்கள்.

கானல் வரி பாடலின் விளைவாக ஏற்பட்ட ஊடலினால் மாதவியும் கோவலனும்  பிரிய நேர்ந்த நாள் செவ்வாய்க்கிழமையன்று  கேட்டை நட்சத்திர நாள், இந்த அமைப்பு நட்பிற்கு உறவிற்கு கேடு விளைவிக்கும் என்பது மக்களிடம் வழக்கத்தில் இருந்த ஒரு நம்பிக்கையின் அடிப்படை.  'செவ்வாயும் கேட்டையும் சேர்ந்தார்போல்' என்ற வழக்கு இன்றும் மக்களிடம் வழக்கில் உள்ளது என்கிறார் எல். டி. சாமிக்கண்ணு.  (இது எப்படிச்  சரியாக இருக்கக் கூடும்!!!  பிரிந்த கணவனும் மனைவியும் அந்த நாளில்தான் மீண்டும் இணைகிறார்கள். எனவே அந்த நாள் மோசமான நாளாக இருக்க வாய்ப்பில்லை அன்றோ!!)

இன்றைய நாள்காட்டி கணக்கடலில் 756ஆம் ஆண்டு மே 17 செவ்வாய்க்கிழமை பொழுது விடியும் முன்னர் பூம்புகாரிலிருந்து கண்ணகியும் கோவலனும் கிளம்புகிறார்கள்; அதே ஆண்டின் ஜூலை 20 ஆம் நாள் கவுந்தியின்  துணையோடு மதுரையை அடைகிறார்கள் (பயணக் காலம் 64 நாட்கள் அல்லது 2 மாதங்கள்!);


பொதுவாகச் சித்திரை மாதத்திற்கு 31 நாட்கள்.  அடியார்க்கு நல்லார் உரை தரும் குறிப்பின்படி அந்த ஆண்டு சித்திரைக்கு 30 நாட்கள் மட்டுமே. எனவே 30 நாட்கள் கொண்ட சித்திரை எந்த ஆண்டுகளில் இருந்திருக்கலாம் என்ற ஆராய முற்படுகிறார் எல். டி. சாமிக்கண்ணு.  அவர் தேடலில், அடியார்க்கு  நல்லார் உரை எழுதிய காலம் வரை  15 ஆண்டுகளில்  சித்திரைத் திங்கள் 30 நாட்கள் கொண்டவையாகக் கிடைக்கின்றன.  இவற்றில், வானியல் கணிப்பின்படி பூம்புகாரிலிருந்து கண்ணகியும் கோவலனும் கிளம்பியதாக அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் நாள், கிழமை, நட்சத்திரம் எல்லாம் பொருந்தி வரும் நாள் வைகாசி 29 / மே 17, 756 என்பதும்; அதே போலப் பொருந்தி வரும்  மதுரை தீக்கிரையான ஆடி வெள்ளிக்கிழமை நாளானதுஜூலை 23, 756 என்பதும் எல். டி. சாமிக்கண்ணுவின் கணிப்பின் முடிவு.  

நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 277
3/26/2025      மதுரை தீக்கிரையான நாள் 

#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi 


Wednesday, March 19, 2025

வானியல் குறிப்புகள் மூலம் சிலப்பதிகாரக் காலக்கணிப்பு

சிலப்பதிகாரம் குறித்த கால ஆராய்ச்சி தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலத்தை நிர்ணயிப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ளது.  மூவேந்தர்களும் குறிப்பிடப்படும் இலக்கியம் சிலப்பதிகாரம்.  சோழ பாண்டிய சேர நாடுகளையும், அவற்றின் வேந்தர்களையும் நூலின் ஆசிரியர் இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.

சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் சேரன் செங்குட்டுவனும்; அவன் இளவலும் நூலின் ஆசிரியருமான  இளங்கோ அடிகளும் சோழன் கரிகால் பெருவளத்தானின் கொள்ளுப் பேரர்கள். (இவர்கள் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை  மணந்த அவர்கள் தாய் நற்சோணை, கரிகால் வளவனின் மகன் மணக்கிள்ளியின் மகள்).  கரிகால் வளவனின் காலம் முதல் நூற்றாண்டு என்றும்;  கோவலனின் இறப்பிற்குக் காரணமான பாண்டியன் நெடுஞ்செழியன், கண்ணகிக்கு வஞ்சிமாநகரத்தில் பத்தினிக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்த சேரன் செங்குட்டுவன், அவ்விழாவுக்கு  வருகை தந்த ‘கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்’ (முதலாம் கஜபாகுவின் ஆட்சிக் காலம் கி.பி 114-136, என்பது இலங்கையின் மகாவம்சம் தரும் தகவல்), சேரர்கள் நட்பு பாராட்டிய தக்காணப் பகுதியை ஆண்ட சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) யாவரும் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் என்பதையும் தமிழ் இலக்கிய வரலாறுகள் நூல்கள் மூலம் அறியமுடியும் (1. பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர் & 2. பண்டைத் தமிழக வரலாறு களப்பிரர் துளு நாடு —மயிலை சீனி. வேங்கடசாமி). 

தமிழ் இலக்கியங்களின் காலத்தை, அந்தந்த இலக்கியத்தில் பொதிந்துள்ள வானியல் குறிப்புகளான அகச்சான்றுகள் மூலம் நிர்ணயிக்க முற்பட்டவர் எல்.டி.சாமிக்கண்ணு (1864-1925).  தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணித்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் எல்.டி.சாமிக்கண்ணு வானியலாளராகவும் பெரும் பங்காற்றியுள்ளார். இந்தியப் பஞ்சாங்கத்தை ஆராய்ச்சி செய்து கி.பி. 700-2000 காலகட்டத்து வானியல் அட்டவணைகள் உருவாக்கி 3000 பக்கங்களுக்கு மேல் உள்ள வானியல் குறிப்புகளை 7 தொகுதிகளாக வெளியிட்டார்.  கணினி இல்லாத சென்ற நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வானியலாளருக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் இவர் உருவாக்கிய வானியல் அட்டவணைகள் (எஃபிமெரிஸ் / ephemeris) என்பது  ஓர் அரும்பணியின் வெளிப்பாடு. இவர் உருவாக்கிய பஞ்சாங்க அட்டவணைகள், தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் கல்வெட்டு செப்பேடுகளில் குறிப்பிடப்படும் காலத்தை நிர்ணயிக்கப் பெரிதும் உதவின.

(1) பரிபாடல்;  (2) சிலப்பதிகாரம்; (3) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, கொற்கைக்கிழான் நற்கொற்றன் என்பவருக்கு வழங்கிய கொடை பற்றிய வேள்விக்குடிச் செப்பேடு; (4) சீவக சிந்தாமணி ஆகிய இந்த நான்கு மட்டுமே தமிழ் கால ஆராய்ச்சிக்கு உதவும் நாள்குறிப்பு தருபவை என்கிறார் எல்.டி.சாமிக்கண்ணு. ஒவ்வொரு இலக்கியமும் அதில் பொதிந்துள்ள தரவுகளின் சான்றுகளின் அடிப்படையில் தனித்தனியாகக் கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது அவர் கொள்கை. இவர் தன் ஆய்வுகளின் முடிவாக;  மூன்று தமிழ்ச் சங்கங்களைக் கூறும் இறையனார் அகப்பொருள் உரை தரும் செய்திகள் ஒரு புனைவு, ஆழ்வார்களின் பிறப்பு நட்சத்திரங்கள் போன்ற குறிப்புகள் பிற்காலத்தில் புனையப்பட்டவை,  தொல்காப்பியத்தின் காலம் ஆறாம் நூற்றாண்டு, பரிபாடலின் காலம் ஏழாம் நூற்றாண்டு, சிலப்பதிகாரம் கூறும் காலம் எட்டாம் நூற்றாண்டு என்ற கருத்துகளை  முன் வைத்துள்ளார். பெரும்பாலும் பிற்காலத்தில் எழுதுபவர், முற்காலத்தில் நடந்த நிகழ்வுகளுக்கான நாட்குறிப்பை தாங்கள் வாழும் சமகாலத்துப் பஞ்சாங்கத்தில் இருந்து எடுத்தாள்வார்கள் என்பதும் இவர் கருத்து.

எல். டி. சாமிக்கண்ணு அவர்களின் கோணத்தில்; பின்வரும் காரணங்களால் நூலின் காலவரையறை செய்ய சிலப்பதிகாரம் மிக நல்ல வாய்ப்பு அளிக்கிறது. (1) நூல் தரும் செய்தி சரியான தேதிக் குறிப்பு ஒன்றை அளிக்கிறது; (2) அக்குறிப்பும் இன்றைய நாளில் நாம் பயன் கொள்ளும் நாள், கிழமை, நட்சத்திரம் என்ற அதே முறையில் கொடுக்கப்பட்டுள்ளது; (3) மூல குறிப்பிடும் நாளைத் தெளிவுபடுத்திக் கொள்வதன் மூலம் சங்ககாலத்தை வரையறுக்க முடியும் என்ற காரணங்களால் இலக்கியங்களின் காலவரையறை செய்ய சிலப்பதிகாரம் பெருமளவில் உதவும் நூல் என்று அவர் கருதுகிறார்.


நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 276

3/19/2025      வானியல் குறிப்புகள் மூலம் சிலப்பதிகாரக் காலக்கணிப்பு


#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi 



Wednesday, March 12, 2025

எண்நாள் திங்கள் அனைய தெண்ணீர்ச் சிறுகுளம்

      அறையும் பொறையும் மணந்த தலைய

      ‘எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்

      தெண்ணீர்ச் சிறுகுளம்’ கீள்வது மாதோ

      கூர்வேல் குவைஇய மொய்ம்பின்

      தேர்வண் பாரி தண்பறம்பு நாடே!

            [புறநானூறு 118 - கபிலர்]         

தேர் வண்மையால் சிறந்தவன் வள்ளல் பாரி! மூவேந்தரின் சூழ்ச்சியான படையெடுப்பால் அவன் நாடு வெல்லப்பட்டது, அவனும் கொல்லப்பட்டான். அச்சூழ்நிலையில்; எட்டாம் நாளின் பிறை நிலவு போல (சற்றொப்ப அறைவட்ட வடிவில்) வளைந்த கரையையும், தெளிந்த நீரையும் கொண்ட சிறு குளம் அழிவது போல, பாரியின் நாடும் இனி அவனுடைய மேலாண்மை இன்றி அழிந்துவிடுமோ எனப் பாரியின் மறைவிற்குப் பிறகு பறம்பு நாட்டின் நிலையைக் கண்டு இரங்கிக் கையறு நிலையில் கலக்கமுடன் பாடுகிறார் கபிலர்.

ஆற்றின் நீரோட்டப் பாதை நிலையானது அல்ல,  தொடர்ந்து ஆறு தன் பாதையைப் பற்பலக் காரணங்களால் மாற்றிக் கொண்டேதான் இருக்கும்.  ஆற்று நீரின் பாதை மாறுவதால் தனித்து விடப்படும்  வளைவான நன்னீர் ஏரி (அல்லது குளம்) தமிழில் 'குதிரைக் குளம்பு' ஏரி (Oxbow lake) அல்லது குளம் என அழைக்கப்படும். ஆங்கிலத்தில் நுகத்தடியில் (yoke) பூட்டப்படும் மாட்டின் கழுத்து வளைவான 'ஆக்ஸ்பவ்' (Oxbow) போன்ற வடிவத்தைக் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் ஆக்ஸ்பவ் ஏரி எனப் பெயர் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் குதிரையின் லாடம் (Horseshoe) போன்ற அமைப்பில் இருப்பதால் 'குதிரைக் குளம்பு' ஏரி அல்லது குளம் என்று அழைக்கப்படுகிறது.  'குருட்டு ஆறு' என்றும் குறிக்கப்படுவதுண்டு. கபிலர் எட்டாம் நாள் பிறை நிலா வடிவம் எனக் குறிப்பிட்டது போல,  இந்த நீர்நிலைகள் வடிவத்தில் பிறை நிலா போன்றவை, வளைந்த கரையைக் கொண்டவை.  

 

 

ஆற்றுநீர் மலைச்சரிவில் இறங்கி சமவெளியில் ஓடத் தொடங்கிய பின்னரே பற்பல காரணங்களால், ஆற்றின் வெளிப்பக்கக் கரையின் வளைவின் வேகமான நீரோட்டத்தால்  "அரிப்பு"(erosion) ஏற்படுவதாலும், உட்குழிந்த வளைவுப் பகுதியில் நீரின் வேகம் குறைந்து வண்டல் “படிவதாலும்" (sediment) ஆற்றின் வளைவுகள் (Meanders) மாறிக் கொண்டே இருக்கின்றன.  அவ்வாறு வளைந்த "U" வளைவின் இரு நுனிகள் வண்டல் படிவதால் அவற்றின் இடையே உள்ள இடைவெளி குறைந்து, அவை ஒன்றை ஒன்று நெருங்கும் பொழுது, நீரோட்டம் வளைவான வழியைக் கைவிட்டு  நேராக ஓடிவிடுகிறது. கைவிடப்பட்ட வளைந்த ஆற்றுப் பாதை காலப்போக்கில் மறைந்துவிடுகிறது (பார்க்க விளக்கப் படம், காணொளி: https://www.youtube.com/watch?v=wi0fT3TCIGs).  இது உயர்நிலைப்பள்ளியில் புவியியல்/சமூகவியலில் வகுப்பில் நாம் அறிந்து கொண்ட அறிவியல் பாடம்தான். 

   

இந்தக் குதிரைக் குளம்பு நீர் நிலைகள் மனித முயற்சியால் தோன்றுவன அல்ல; ஆற்றின் போக்கால் இயற்கையாக உருவாவது.  அது போலவே,  நீர் நிலைக்கான நீர்வரத்தும்  மனித முயற்சியின்றி  இயற்கையால் நிறுத்தப்பட்டக் காரணத்தால், காலப்போக்கில், நீர்நிலையில் வண்டல் போன்றவை படிந்து இயற்கையாகவே நீர் அளவு வற்றி சதுப்பு நிலமாகவும், நாளடைவில்  நீர்நிலை வறண்டு மறைந்தும் விடும் (https://eros.usgs.gov/earthshots/oxbow-lake).  இவ்வாறு பிறை வடிவ நீர்நிலைகள், அவை இருக்கும் இடத்தைப் பொருத்து சில பத்தாண்டுகளிலிருந்து சில நூறாண்டுகளில் மறைந்துவிடும்.  கோடையில் நீர்வரத்து இல்லாத தமிழ்நாடு போன்ற இடங்களில் இந்த நீர்நிலைகள் மறைந்துவிடச் சில பத்தாண்டுகளே போதுமானதாக இருக்கும்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகம் பாடல் ஒன்றும் நீர்வரத்து நின்று போனால்  குளம் அழியும் என்பதைக் குறிப்பிடுவதைக் காணலாம்; 

      வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்

      தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்

      கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்

      நல்குரவு சேரப்பட் டார்.

             [திரிகடுகம் 84 – நல்லாதனார்]

நீர் வரும்வழி நன்றாக அமைந்திராத குளமும்; தன் வயிறு நிரம்பும்படி தாய்ப்பாலை உண்ணாத குழந்தையும்; நன்முறையில் கல்வி கற்காதவரும் ஆகிய இம்மூவரும் வறுமையில் வாடுபவராகவே கொள்ளத்தக்கவர் என்பது நல்லாதனார் இயற்றிய இத்திரிகடுகப் பாடலின் பொருள். 

இவ்வாறு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்ட நீர்நிலைகளின் எதிர்காலம் அழிவுதான் என்பதை கபிலர் நேரிடையாகக் கவனித்து அறிந்திருக்கக் கூடும். அதனால் "எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத் தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ" என்று கலங்கி இருக்கலாம்.


 நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 275

3/12/2025      எண்நாள் திங்கள் அனைய தெண்ணீர்ச் சிறுகுளம்

#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi