Wednesday, February 12, 2025

ஆறு கார்த்திகைப் பெண்டிர்

      விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,

      தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி

      மணி மிடற்று அண்ணற்கு, மதி 'ஆரல்' பிறந்தோய்! நீ.

                  - குறும்பூதனார், பரிபாடல்: பாடல் 9

விரிசடை கொண்ட கங்கை நீரைத் தலையில் அணிந்த சலதாரியானவன் சிவன். அவன் நஞ்சைத் தொண்டையில் வைத்திருக்கும் அண்ணல். ஆரல் என்னும் கார்த்திகை மீனிலிருந்து அந்தச் சிவனுக்கு மகனாகப் பிறந்த முருகனே! என்று குறிப்பிடுகிறது பரிபாடல்.

தமிழ்க் கடவுள் முருகனின் தோற்றத்துடன் கார்த்திகைப் பெண்கள்  இணைக்கப்பட்டதால் அது  குறித்தும் விரிவாகக் காண வேண்டிய தேவை உண்டு. இக்கதையிலும் முருகனின் பெற்றோர் யார் என்பதில்  மாறுபட்ட கோணங்களைத் தரும் மாறுபாடுகள் உண்டு, சமஸ்கிருதமயமாக்கப்பட்ட முருகனின் புனைவின்படி; சப்தரிஷி (bigdipper) என்னும் 7 முனிவர்கள்  7 சகோதரிகளை மணந்தார்கள். இவர்களில் முக்கியமானவர் வசிஷ்டர்-அருந்ததி இணையர் (stars: Mizar and Alcor).   இந்த 7 முனிவர்களும் யாகம் செய்ய நெருப்பு  உருவாக்க அந்த வேள்விக்கு அக்னி வருகின்றுகிறான். அக்னி ரிக் வேதத்தின் முதன்மையான கடவுளர்களில் ஒருவன், ரிக் வேதத்தின் முதல் பாடலே அக்னி பற்றிய பாடல்தான்.  அக்னிக்கு அங்கிருந்த முனிவர்களின் மனைவியர் மீது காதல் ஏற்படுகிறது. அவர்கள் அவனைப் பொருட்படுத்தவும் இல்லை. அவர்களை  அடைவது இயலாத காரியம் என்று உணர்ந்து, வருந்தி அக்னி விலகிச்  சென்றுவிட்டான்.

அவன் மீது சுவாகா(Svāhā) என்பவள் ஆசைப்பட்டாள், அக்னியின்  மனமோ முனிவர்களின் மனைவியர்  மீது இருந்தது. எனவே, சுவாகா தன் தவவலிமையால் ஒவ்வொரு முனிவர் மனைவி போன்ற உருவம் எடுத்து அக்னியைக் கூடினாள். இப்பெண்டிரில்  அருந்ததி  தன் கணவர் வசிஷ்டர் மீது கற்பு  நிறைந்த காதல் கொண்டவள். எனவே அருந்ததி  உருவை மட்டும் சுவாகாவால் எடுக்க இயலவில்லை.   சுவாகா ஏற்ற ஆறு பெண்கள் உருவங்களுடன் அக்னி இணைந்ததால் குழந்தை கார்த்திகேயன் பிறந்தான். 

கார்த்திகேயன் தங்கள் மனைவியரின் குழந்தை என்பதை அறிந்து சினம்  கொண்ட 6 முனிவர்களும் தங்கள் மனைவியரை விரட்டி விட்டனர். அவர்கள் தனியே சென்று கார்த்திகைப் பெண்களாக மாறினார்கள் (Pleiades star cluster).  அருந்ததி மட்டும் வசிஷ்டருடன் தங்கிவிட்டாள்.  இந்த அருந்ததி விண்மீன் பெருங்கரடி விண்மீன் கூட்டத்திலேயே  தங்கிவிட்டதற்கு அவளுடைய கற்பு நிறைந்த காதல் காரணம். சுவாகா தான் என்றும் அக்னியுடன் இணைபிரியாமல்  இருக்க வேண்டும் என்று தன் மகன் கார்த்திகேயனிடம் அருள் வேண்ட  அவன் நெருப்பில் ஆகுதி செய்யும் எவரும் சுவாகா என்று அவள் பெயர் சொல்லியே இனி செய்வார்கள், அவள் இணைபிரியாமல் இருக்கலாம் என்று அருள் தந்தான். 

இந்தக் கதை பின்னர் வேறு வடிவம் எடுத்துள்ளது. அக்னி ருத்திரன், சிவன் என்றெல்லாம் மாற்றப்பட்டான் (அக்னி >> ருத்திரன் >> சிவன்).  சுவாகா தட்சனின் மகள் என்றும் கூறப்பட்டாள்(சுவாகா >> தாட்சியாயினி >>உமா/பார்வதி).  சிவனின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து வந்த தீப்பொறிகளின் வெப்பம் தாங்காது அவற்றைக் கங்கையில் விட, ஆறு  கார்த்திகைப் பெண்கள் அவற்றை எடுத்து ஆறு குழந்தைகளாக வளர்க்க, பார்வதி அப்பிள்ளைகளை ஒருங்கிணைத்து  ஆறுமுகனாக்கி வேல்  கொடுத்து சூரபத்மனை  அழிக்க, தேவர்களைக் காக்க அனுப்பி வைத்தாள்  என்பது கந்தபுராணக்  கதை.  இந்த இருவேறு கதைகளும் மகாபாரதத்திலேயே முற்பகுதியிலும் பிற்பகுதியிலுமாக உள்ளது. 

உலகின் எப்பகுதியிலிருந்தும் தெளிவாகத் தெரியும் விண்மீன்கள் இவை என்பதால், உலகின் பல பகுதிகளிலும் பற்பல பண்பாட்டிலும் ஏழு விண்மீன்கள் பற்றிய கதைகள்  உண்டு. பெரும்பாலும் ஏழு பெண்களாகவும், குறிப்பாக அவர்கள் சகோதரிகளாகவும், அவர்களில் ஒருவர் ஏதோ ஒரு காரணம் குறிப்பிட்டு மறைந்துவிட்டதாகவும் கதைகளும் உண்டு. பிற ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய, இந்தோனேசிய, ஜப்பான் (Subaru Stars) அமெரிக்க, ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் பண்பாடுகளின்  தொன்மக் கதைகளிலும்  கூட இந்த அடிப்படை ஒற்றுமை உள்ளது.

ஓரியான் பெண்களைத் துரத்துவது போன்றே ஓர் ஆண்  கொடுக்கும் தொல்லையால் இப்பெண்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விளக்கமும் உண்டு.  வரலாற்றுக்கு முற்பட்ட மாந்தவியல் சிந்தனைகளின் தொகுதியாக இத்தொன்மங்கள் அமையும்.  உலகம் முழுவதுமே உள்ள கதைகளின் ஒற்றுமை வானியலாளர்களையும் மானிடவியலாளர்களை வியக்க வைக்கிறது.

இயற்கை வழிபாடுகளை மேற்கொண்டிருந்த தொல்மாந்தாரால் (Pagan) இயற்கையையொட்டிப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. பிற்காலத்தில் நிறுவனமாக்கப்பட்டச் சமயங்களினால், புழக்கத்தில் இருந்த பண்டிகைகள் உள்வாங்கப்பட்டுப் புனையப்பட்ட சமயத் தொன்மங்களுடன் இணைக்கப்பட்டன என்பது மானுடவியலாளர் கூற்றாக உள்ளது.

இவ்வாறுதான் இயற்கையை ஒட்டிய சூரியனின் வடதிசைச் செலவு பண்டிகை கிறிஸ்துவின் பிறப்பு நாளாக  மாற்றம் பெற்றது  என்பதும் மானிடவியல் அடிப்படையில் வைக்கப்படும் கருத்தாகும்.  ஆரம்பக்காலச் சங்க இலக்கியப் பாடல்களில்  கார்த்திகை குறித்து இல்லாத புராணக் கதை பிற்காலத்துப் பரிபாடலில் காணப்படுவதை, இதே அடிப்படையில்  (பொங்கல் போல) இயற்கையை ஒட்டி தமிழர்  கொண்டாடிய கார்த்திகை விளக்குகள் பண்டிகை,  பின்னர் ஊடுருவிய வைதீக  சமயத்தின் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட முருகன் பிறப்புடன் இணைந்ததாகவும் கொள்ளலாம்.

தொன்மங்களில் எந்த அளவு இயற்கையில் நடக்கவே இயலாத, அறிவியலுக்கு முரணான கருத்துகள் உள்ளன என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கையில் வியப்பு மேலிடும். அத்துடன் தங்கள் கருத்தைத் திணிக்க எவ்வாறு புராணக் கதைகள் எடுத்தாளப்பட்டன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  ஒப்பீட்டுக்காக; கிரேக்கத் தொன்மத்தில் மறைந்துவிட்ட விண்மீன் விளக்கத்திற்கு எழுவரில் ஒருத்தி  மனிதனை மணந்த  காரணத்தால் மண்ணில் தங்கிவிட்டாள் என்று கூறப்படுகிறது. வைதீகக் கதையில் பெண்களின் கற்பு ஒழுக்கம் என்பது வலிந்து திணிக்கப்படுகிறது.  முருகன் பிறப்பு  கதையில் மனதார எந்த ஒரு குற்றமும் செய்யாத ஆறு பெண்கள், அவர்கள் செய்யாத குற்றத்திற்காக, கணவன் மீது உண்மையான பக்தி இல்லை என்று விரட்டப்படுகிறார்கள். கற்பில் சிறந்த காதல் கொண்ட அருந்ததி  கணவருடன் தங்கியதாகக்  கூறப்பட்டு, இன்றுவரை திருமண நாளில் அவளை எடுத்துக்காட்டாகக் காட்டி  அம்மி மிதித்து (பகல் பொழுதில்!) அருந்ததி பார்க்குமாறு இக்காலப் பெண்களிடம் கூறப்படுகிறது.

இன்றைய அறிவியல் தரும் விளக்கங்கள் கொடுக்கும் அடிப்படையில் புராணக் கதைகளின் அடிப்படைக் காரணத்தைக் கவனமாக ஆராய வேண்டும். எப்பொழுதும்  கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் தன் கருத்தை விருப்பத்தை மக்களிடம் கொண்டு செல்வது நூலிழையாக இருக்கும். கதைகளின் வழியாக வாழ்வியல் விழுமியங்கள் விதைக்கப் பட்டன என்ற வாதம் வைக்கப்படும்.  ஆனால், படிப்பவற்றையும், கேட்பனவற்றையும், பார்க்கும் காட்சிகளையும் சீர்தூக்கி ஆராய்ந்து யாரின் நலனுக்காக ஒவ்வொரு கதையும் உருவாகிறது, பாதிக்கப்படுபவர் உண்டா, ஆதாயம் அடைபவர் எவர், அடக்குமுறை உள்ளதா என்றெல்லாம் ஆராய்ந்து உண்மையைப் புரிந்துகொள்வதும், மெய்ப்பொருள் காண்பதும் கற்றவர் கடமை.


 நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 271

2/12/2025      ஆறு கார்த்திகைப் பெண்டிர் 


#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi