Wednesday, January 1, 2025

சுமேரிய வானியல் வட்டு



வரலாற்றில் வானியல் குறிப்பு கொண்ட வரைபடங்கள் ஒரு புதுமை அல்ல.  பண்டைய மக்களால் பலநூறாண்டுகளாகப்  பற்பல வகையில், பல முறைகளில் வானியல் குறிப்புகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது,  களிமண்ணால் ஆன, மிகப் பழமையானதும் வானியல் குறிப்புகள் கொண்டதுமான  சுமேரிய வானியல் வட்டு. 'பிளானிஸ்பியர்' (Planisphere) என்று குறிப்பிடப்படும் இக் களிமண் வானியல் வட்டில் மெசபடோமியாவிற்கு மேலே உள்ள வான் வரைபடத்தின் விண்மீன்களையும் கோள்களையும் விளக்கும் விதமாக அமைந்துள்ளது. 

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈராக்கின் நினிவே (Nineveh) யில், அசிரியப்  பகுதியில், கி.மு. 650 ஆம் ஆண்டு அஷுர்பானிபால் அரசரின் அழிவுற்ற நிலத்தடி நூலகத்திலிருந்து  (Ashurbanipal library) இவ்வானியல் வட்டு 'சர் ஆஸ்டன் ஹென்றி லேயர்ட்' (Sir Austen Henry Layard) என்ற பிரித்தானியத் தொல்லியல் ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால் இது ஓர் அசிரிய வானியல் குறிப்பு வட்டு (Astronomical disc) என்று நீண்ட காலமாகக் கருதப்பட்டது.  ஆனால் கணினி துணைகொண்டு செய்த ஆய்வுகள் இதில் உள்ள குறிப்புகளை  கி.மு.3300  காலத்து மெசபடோமியா பகுதியின் வானியல் குறிப்புகளுடன் பொருத்தியது. எனவே, இது காலத்தில் முற்பட்ட சுமேரிய வான்வட்டு என்பது தெரிய வந்தது. தற்பொழுது இத்தொல்பொருள் பிரிட்டிஷ் அருங்காட்சியக சேகரிப்பில் (சேகரிப்பு எண் K8538)ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இது தோராயமாக 5 அங்குலங்கள் விட்டமும் 1.2 அங்குலத் தடிமனும் கொண்டது.

இவ் வான்வட்டின் விளிம்பில் கோண அளவுகள் குறிக்கப்பட்டு, பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, விண்மீன் குறிப்புகளைக் கொண்டிருந்தது. வட்டின் பாதிப் பகுதியில் கோள்களின் விண்மீன்களின் நிலையையும் மேகமூட்டத்தால் மறைக்கப்பட்ட பகுதியையும் காட்டுகிறது. மற்றொரு பகுதி புவிக்கு அருகில் சுற்றும் சிறுகோள் அல்லது விண்பொருள் ஒன்றின் நகர்வையும்  பதிவு செய்துள்ளது.    "வானத்திலிருந்து நெருங்கி வரும் ஒரு வெள்ளைக் கல் கிண்ணம்" என்ற குறிப்பும் வட்டில் இருந்தது.  வட்டின் தரவுகளின் அடிப்படையில் இக்கல்லின் விட்டம் ஒரு  கி.மீ. அளவாக இருந்திருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. இந்த விண்கல் நகரும் பாதையும் வட்டில் துல்லியமாகக் கொடுக்கப் பட்டிருந்தது.  இவ்வான்வட்டின் பின்புறத்தில் குறிப்புகள் இல்லை.  கெடுவாய்ப்பாக, தோராயமாக 40% செய்திகள் கிடைக்கப்படவில்லை.   நினிவே அழிந்த காலத்திற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.  150 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வட்டு சொல்லும் தகவல் குறித்த விவாதம் நடந்து வருகிறது.  இந்த வான்வட்டில், பண்டைய சுமேரியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ள விண்கல் தாக்கம் (Asteroid Impact) ஒன்றைப் பற்றிய  வானியல் குறிப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் சிலர் கருதுகிறார்கள். சுமேரியர்கள் சிறந்த வானியல் வல்லுநர்களாக விளங்கியமைக்கு சான்று தரும் வானியல் வட்டாக இது விளங்குகிறது.

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் (ஜூலியன் நாட்காட்டியில், கி.மு. 3123, ஜூன் 29  அன்று அதிகாலையில்) சுமேரிய வானியலாளர் பதிவுசெய்த இவ்வானியல் குறிப்பை,  ஆஸ்திரியாவின் கோஃபெல்ஸ் பகுதியைத் தாக்கிய விண்கல் (Köfels'Impact Event') பற்றிய குறிப்பு என்கிறது ஓர் ஆய்வின் முடிவு.  ஆல்ப்ஸ் மலைகளுக்கிடையே ஐந்து கிலோமீட்டர் விட்டம் கொண்ட பகுதி பாதிக்கப்பட்டு விண்கல் பாதிப்பால் அப்பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.   இது குறித்து 2008 ஆம் ஆண்டில், ஆலன் பாண்ட்,  மார்க் ஹெம்ப்செல் (Alan Bond and Mark Hempsell) என்ற இரு ஆய்வாளர்கள் 'சுமேரியர் ஆவணப்படுத்தியுள்ள, கோஃபெல்ஸ் எதிர்கொண்ட விண்கல் தாக்கம்' ('A Sumerian Observation of the Köfels'Impact Event') என்ற ஆய்வு நூலை வெளியிட்டனர். இந்த ஆய்வின் முடிவை நிலவியல்  ஆய்வாளர்கள் சிலர் ஏற்கவில்லை.

 
 நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 265
1/1/2025      சுமேரிய வானியல் வட்டு
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi