நல்லந்துவனார்
எழுதிய பரிபாடலில் 'பொதிகை முனிவனின்' பெயர்கொண்ட "அகத்தியன்" என்னும் விண்மீன்
குறிப்பிடப்படுகிறது. அகத்திய விண்மீன்
தன் உயர்ந்த இடத்தைக் கடந்து மிதுன ராசியைச் சேர, விரிந்த
கதிர்களையுடைய வேனிற்காலம் எதிர்கொள்ளும் கார்காலத்தில் மழை பெய்க . . . ' என்று இப்பாடலுக்கு உரையாசிரியர்கள் விளக்கம் தருகிறார்கள்.
"பொதியில் முனிவன் புரை வரை கீறி
மிதுனம் அடைய விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக"
[பரிபாடல்: 11 - வையை; நல்லந்துவனார்]
அகத்தியன் (star - Canopus) என்ற விண்மீனை, பொதிகை மலையில் வாழ்ந்தாகக் குறிப்பிடப்படும் அகத்தியனுடன் தொடர்பு படுத்திக் கூறும் தமிழின் சங்க இலக்கியங்களில் இடம் பெறும் குறிப்பு இது ஒன்றேயாகும்.
கனோபஸ் (Canopus) என்னும் அகத்திய விண்மீன் புவியின் தென் திசையின் மிகத் தொலைவில் உள்ள விண்மீன் என்பதால் புவியின் தென்கோளத்தில் உள்ளவர்களால்தான் காண இயலும். குறிப்பாக நிலநடுக்கோட்டிலிருந்து 37°18' பாகைக்கும் வடக்கே உள்ள பகுதியில் (Northern Hemisphere’s 37th parallel north) வாழ்பவர்களால் அகத்திய விண்மீனைக் காண இயலாது. கிரேக்கத்திலும் ரோமிலும் உள்ளவர்களால் வானில் கனோபஸ் விண்மீனைக் காண இயலாது, ஆனால் அவர்களுக்கும் தெற்கே உள்ள எகிப்தியர்களால் காண இயலும். பண்டைய ரோம் நாட்டு எழுத்தாளர் மூத்த பிளினி (Pliny the Elder) இந்தியக் கடலின் தென்பகுதி மக்களுக்கு இரவில் கடல் பயணத்தில் வழிகாட்ட உதவும் விண்மீன் என கனோபஸ் விண்மீனைக் குறிப்பிடுகிறார்.
அகத்தியர் தென்பகுதிக்கு வந்த புராணக் கதைக்கும் இதற்கும் தொடர்பு இருக்கக் கூடும். ஆரிய ரிக் வேதத்தில் கூறப்படும் 7 முனிவர்களில் (சப்த ரிஷிகள்) அகத்தியர் ஒருவர் அல்ல. ஸ்டெப்பி புல்வெளி ஆரியர்கள் தென் பகுதி நோக்கி புலம் பெயர்ந்து வந்த பிறகே தென் திசையின் ஒளிமிக்க விண்மீனை அறிந்திருக்க வேண்டும், ரிக் வேதத்தில் பாடல்கள் எழுதிய மற்றொரு முனிவரான அகத்தியர் என்பவரைச் சிறப்பிக்க அந்த விண்மீனுக்கு அகத்தியர் பெயரைச் சூட்டி இருக்க வாய்ப்புண்டு. அகத்தியர் தென்திசைக்குரியவர் என்ற புராணப் புனைவுகளும் அதன் அடிப்படையில் தோன்றியிருக்க வேண்டும்.
ஒரு விண்மீன் தெளிவாக வானில் தெரியும் என்றால் அது குறித்த பண்டைய தொன்மக் கதைகளும் உருவாகி இருக்கும். சீனர்கள் கனோபஸ் விண்மீனை 'தென் துருவத்தின் முதிய மனிதன்' (Old Man of the South Pole) என்று குறிப்பிடுவார்கள். அறிவியல் படி அகத்தியருக்கும் தென்திசைக்கும் உள்ள தொடர்பு இதுவே.
குறிப்பு: நிலநடுக்கோட்டிலிருந்து 37°18' பாகைக்கும் வடக்கே உள்ள பகுதிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. கோடைக்காலம் தவிர்த்து, இப்பகுதியிலும் அதற்கு வடக்கிலும் சூரியக் கதிர்கள் விழும் கோணமும் அளவும் மாறுபடும். இப்பகுதிகளில் ஓசோன் மண்டலத்தைக் கடந்து ஊடுருவி வரும் UVB புற ஊதாக் கதிர்களின் அளவும் மிகக் குறைவு. இதனால் வைட்டமின் D குறைபாடு ஏற்படும் என்பதால், அதை நிவர்த்தி செய்ய இப்பகுதியில் வாழ்பவர்கள் உடலில் இயற்கையாக மரபணு மாற்றங்கள் நிகழ்ந்து, 'மெலானின் நிறமி' (Melanin pigment) அளவில் மாற்றம் ஏற்பட்டுத் தோல் நிறம் வெளிரும் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்தது. கோட்பாட்டின்படி, வெளிறிய தோல் சூரியனின் புற ஊதா கதிர்வீச்சை அதிகமாக உறிஞ்சுகிறது, இது வைட்டமின் டி உற்பத்திக்கு தேவைப்படுகிறது, எனவே சூரிய ஒளி குறைவாக உள்ள பகுதிகளில் பரிணாம வளர்ச்சியை வழங்குகிறது.
கனோபஸ்
விண்மீன் சூரிய மண்டலத்திலிருந்து 310 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனை விடவும் ஒளி மிக்கது, அளவிலும் மிகப் பெரியது. நாம் காணும் வானில் இரண்டாவது ஒளிமிக்க விண்மீன்
இதுவே (ஒளிர்வதில் முதல் இடத்தில் இருப்பது 'சிரியஸ்'
எனப்படும் விண்மீன் (Sirius); சிரியஸ்
புவிக்கு மிக அருகில், 8 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதால்
கனோபஸ் விண்மீனைவிட ஒளிமிக்கதாகத் தெரிகிறது.)